அறப்போர் ஜெயராம் நேர்காணல்
ஜெயராம் 1981 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி சென்னையில் கீதா மற்றும் வெங்கடேசன் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு மூத்த சகோதரனும் உள்ளார். வில்லிவாக்கம் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் பள்ளிக் கல்வியும், சென்னை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் இளங்கலை எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பும் படித்து முடித்துவிட்டு அமெரிக்காவில் ஓஹையோ நகரில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் அதே பிரிவில் MS முடித்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் அனுஷா. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சுமார் கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் அறப்போர் இயக்கம் என்னும் ஒரு அமைப்பைத் தொடங்கி ஊழலுக்கு எதிராக தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டு இருக்கிறார். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களை ஆதாரத்துடன் வெளியில் கொண்டு வருகிறார். அதன் விளைவாக பல்வேறு வழக்குகளையும், சிறை அனுபவங்களையும் எதிர்கொண்டு உள்ளார். ஒரு நேர்மையான சமூகம் அமைவதற்கு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கும் இவரின் செயல்பாடுகள், வழக்குகள், பாதித்த ஆளுமை என்று மிக விரிவாக இந்த பேட்டியில் சொல்லியுள்ளார். முனை இளைஞர் இயக்கம் நடத்தவிருக்கும் “நேர் வழி விருது விழா 2024” இல் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
1. ஒரு அரசு அலுவலகத்தில் ஒருவர் நேர்மையாக இருந்து ஓய்வு பெறுகிறார், இன்னொருவர் நேர்மையாக இருப்பது மட்டுமல்லாது ஊழல் வாதிகளை காண்பித்துக் கொடுக்கிறார். இருவருக்கும் உள்ள வேறுபாடு என்ன ? யார் உயர்ந்தவர் ?
ஒருவர் நேர்மையாக இருக்கிறார் ஆனால் மற்றவர் ஊழல் செய்வது பற்றி தனக்கு கவலை இல்லை, என்னால் இந்த நாட்டை திருத்த முடியாது என்று சொன்னார் என்றால் அவருடைய பார்வை ஒரு குறுகிய பார்வையாக உள்ளது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அவர் ஒரு அரசுத் துறையில் வேலை பார்க்கிறார், மக்களுக்காக சேவை செய்கிறார் என்னும் போது அவர் மட்டும் நேர்மையாக இல்லாமல் அந்த துறையே நேர்மையாக செயல்பட்டால் மட்டும் தான் அதன் சேவை மக்களை சென்றடையும் என்னும் புரிதலோடு செயல்படுபவர்கள் மட்டும் தான் அந்த துறையை மாற்றக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அந்த விதத்தில் பார்க்கும் போது தான் பணிபுரியும் துறையில் நடக்கிற ஊழல்களை கேள்வி எழுப்புகிற, தட்டிக் கேட்கிற ஒருவர் தான் நிச்சயமாக உயர்ந்தவராக இருக்க முடியும்.
2. கல்லூரிக் காலத்தில் ஊழலுக்கு எதிராக பேசும் மாணவர் எவ்வாறு லஞ்சம் வாங்க துவங்குகிறார் ?
ஒருவர் இருபதுகளில் கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு பெரிய பண நெருக்கடியோ பணம் ஈட்ட வேண்டிய தேவையோ இருக்காது. அப்போது பெரும்பாலும் அவர்கள் ஏதேனும் ஒரு லட்சியத்தை பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஒருக்கட்டதில் குடும்பம், பணி என்றெல்லாம் வரும் போது அதே நிலைப்பாட்டில் அவர் இருப்பதற்கு அதிகப்படியான மன வலிமை தேவைப்படுகிறது. அவர்களுடைய மனவலிமை ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவ்வாறான ஒவ்வொரு சோதனையிலும் அவர் வெல்ல வேண்டியுள்ளது. கல்லூரிக் காலங்களில் இருந்த நிலைப்பாட்டோடு இறுதி வரை இருப்பது ஒரு சிலரே. உதாரணமாக எனக்கு தெரிந்த ஒருவர் மின் வாரியத்தில் பணியில் சேர்கிறார். அவர் பணிக்கு செல்லும் முதல் நாள் அவர் கேட்காமலே அவருடைய சட்டைபையில் பணத்தை கொண்டு வந்து திணிக்கிறார்கள். இது மாதிரியான தருணங்கள் பல வரும் அப்போது வலிமையற்றவர்கள் எளிதில் வீழ்ந்து விடுவார்கள்.
புதிதாக பணியில் சேர்ந்த ஒருவருக்கு இந்த கோப்பிற்கு இவ்வளவு என்று வாங்கி பெட்டியில் போட்ட பிறகு தான் அது அடுத்த கட்டதிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அங்கு சாரணமாக அவ்வாறு நடப்பதை அவர் கண்ணால் பார்க்கும் போது இதுவும் நடைமுறையில் ஒரு அங்கம் என்று நினைத்து விடுகிறார். மீண்டும் அது புரியவந்து அதில் இருந்து வெளியில் வர நினைப்பதற்குள் அவரே அதற்கு பழகி இருப்பார்.
கூட்டு அழுத்தமும் ஒரு காரணம். தன்னை சுற்றியுள்ள அனைவருமே வாங்கும் போது தாங்களும் வாங்க வேண்டும் என்று மாறிவிடுகிறார்கள். மேலோட்டமான புரிதலோடு லஞ்சம் தவறு, அது ஒரு பாவம் என்று மட்டும் கருதுபவர்கள் தன்னை சுற்றி அனைவரும் வாங்கும் போது எல்லோரும் தான் வாங்குகிறார்கள் அவர்களுக்கு ஒரு பாவமும் வரவில்லையே நானும் வாங்கினால் என்ன என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறார்கள். லஞ்சம் வாங்குவதில் உள்ள அறசிக்கல் என்ன அது நாட்டை எப்படி பாதிக்கிறது என்பது மாதிரியான பரந்துபட்ட புரிதலும் அறநிலைப்பாட்டோடு அறிவுத் தெளிவும் இருந்தால் ஒழிய நேர்மையான ஒருவராக நீடிப்பது கடினம்.
3. ஒருவர் முழு வாழ்வையும் அறிவுத் தெளிவுடன் உறுதியுடன் அமைத்துக் கொண்டால் தான் லஞ்சம் வாங்காமல் இருக்க இயலுமா? பணியில் நேர்மை என்பதை மட்டும் பயிற்சி மூலம் அடைய முடியாதா ?
வெறுமனே பணியில் நேர்மை என்பது மட்டும் நோக்கமாக இருந்தால் அதை நீண்ட நாட்களுக்கு தொடர இயலாது. ஒரு அப்பா அம்மா குழந்தையை நேர்மையாக இருக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கலாம். அவர்களுக்கு அந்த புரிதலும் இருக்கலாம். ஆனால் அதே தெளிவு இல்லாமல் அவர்களின் மகனோ மகளோ இருந்தால் குறைந்த நாட்களுக்கு மேல் அந்த நிலைப்பாட்டில் நீடிப்பது சிரமம். தான் நேர்மையாக இருப்பதன் அவசியம் என்ன, மனித சமூகம் எது மாதிரியான ஒரு சமூகமாக இருக்க வேண்டும், அறநிலைப்பாட்டுடன் இருக்க வேண்டிய கட்டாயம் என்ன என்கிற தெளிவு இல்லையென்றால் புறஉலகில் இருந்து வருகிற அழுத்ததை அவர்கள் எதிர்கொள்வது கடினம்.
4. அதிகாரத்தின் மேல் மட்டத்தில் உள்ளவர் லட்சக் கணக்கில் செய்யும் ஊழலுக்கும் கடை நிலை ஊழியர் ஆயிரக் கணக்கில் செய்யும் ஊழலுக்கும் உள்ள வேறுபாடு என்ன, எவ்வகை பாதிப்புகளை இவை ஏற்படுத்துகிறது ?
இருவர் செய்யும் ஊழலுமே பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் மேல் மட்டதில் இருப்பவர் செய்யும் ஊழல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக ஒரு ரேஷன் கடையில் ஊழல் செய்கிறார்கள் என்றால், அதனால் அந்த கடையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அங்கு பொருள் வாங்குபவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஆனால் மேல் மட்டதில் ஒட்டுமொத்தமாக ரேஷன் பொருட்கள் கொள்முதலிலேயே ஊழல் நடந்தால் நேர்மையாக பொருட்கள் வழங்கும் கடைக்கும் அந்த பொருட்கள் சென்று சேராது. இன்னும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள். அரசு மருத்துவமனைகளில் சக்கர நாற்காலி தள்ளும் கடைநிலை ஊழியர் நோயாளிகளிடம் ஐம்பது நூறு என்று கேட்கிறார். இதனால் நலிவடைந்த மக்கள் பாதிப்படைகிறார்கள். சில நேரங்களில் உரிய நேரத்தில் மருத்துவம் கிடைக்காமல் கூட போக நேரிடுகிறது. ஆனால் அந்த மக்களுக்கு சரியான மாத்திரைகள் கிடைக்காமல் போவதற்கு மேல்மட்டதில் இருப்பவர்கள் செய்யும் ஊழல் காரணமாக உள்ளது. மேல்மட்டதில் செய்யப்படும் ஊழலால் அரசு மருத்துவமனையில் உள்ள பரிசோதனை எந்திரம் சரியாக செயல்படாமல் போனால் மக்களின் நிலை என்னாகும்? சிலர் தனியார் மருத்துவமனைக்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் இரண்டுமே பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கீழ்மட்டத்தில் செய்யும் ஊழல் நேரடியாக கண்ணுக்கு தெரிகிறது. மேல்மட்டதில் செய்யப்படும் ஊழல் அவ்வாறு நேரடியாக கண்ணுக்கு தெரிவதில்லை ஆனால் அது தான் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
5. இந்தியன், ரமணா போன்ற சினிமாக்கள் எவ்வகை தாக்கத்தை ஏற்படுத்துகிறது ?
கண்டிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தான் நினைக்கிறேன். ஊழல், லஞ்சம் போன்றவை சமூகக்கத்தில் ஏற்படுத்தும் பிரச்சனையை ஒரு கலை வடிவில் பார்க்கும் போது அது அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த தாக்கம் நீண்ட நாட்களுக்கு நீடிப்பது இல்லை. அது மிகவும் தற்காலிகமானது. அது நேர்மையாக, ஊழலுக்கு எதிராக இருக்க வேண்டும் என்று நினைத்து செயல்படும் சிலருக்கு ஒரு தொடக்கமாக இருக்கலாம். அவர்கள் தொடர்ந்து இதில் ஈடுபட்டு செயல்பட தொடங்கும் போது தான் இது தனி நபரால் செய்யக் கூடியது அல்ல என்பதை புரிந்து கொள்வார்கள். முதலில் இதையெல்லாம் ஒரு கதாநாயகனால் மாற்றி விட முடியும் என்று நினைப்பார்கள் அந்த கதாநாயகன் தான் தான் என்றும் நினைப்பார்கள். இது சமூகத்தில் நிகழ வேண்டிய மாற்றம், ஜனநாயக அடிப்படையில் மக்கள் பங்கெடுப்பில் தான் இது சாத்தியம் என்னும் புரிதல் அவர்களுக்கு வருவது பின்நாட்களில் தான்.
6. ஊழல் செய்யும் வேட்பாளருக்கு மக்கள் தொடர்ந்து வாக்களிக்க என்ன காரணம்?
இது நம்முடைய சமூகத்தின் தார்மீகத்தையே கேள்வி கேட்கக் கூடிய ஒன்றாகத் தான் நான் பார்க்கிறேன். பெரும்பாலான மக்கள் சொல்வது யார் தான் சார் நல்லவன். யார் தான் ஊழல் பண்ணல. இன்னொருவனுக்கு ஓட்டு போட்டாலும் அவனும் அதே தான் செய்யப் போகிறான் என்று சொல்வதை பார்க்கிறோம். அதே தொகுதியில் நேர்மையானவரும் இருப்பார். அவருக்கு ஓட்டு போட்டால் என்னுடைய ஓட்டு வீணக்கிவிடும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஒரு ஊழல்வாதிக்கு ஓட்டு போட்டாலும் அவர்கள் ஓட்டு வீணாகத் தான் போகிறது என்று அவர்களுக்கு எட்டுவதில்லை. பல ஊர்களில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு அந்த பதவி ஏலத்தில் விடப்படுகிறது. ஏலத்தில் விடுவது என்றால் யார் அந்த ஊரின் கோவிலுக்கு அதிக பணம் கொடுக்கிறார்களோ, அல்லது அந்த ஊரின் வேறு ஏதாவது ஒன்றுக்கு செலவு செய்கிறார்களோ அவர்களை வெற்றி பெற வைப்பதும் நடக்கிறது. பதவிக்கு வருவதற்காக இவ்வளவு செலவு செய்யும் ஒருவன் பதவிக்கு வந்தால் எவ்வளவு கொள்ளை அடிப்பான் என்பது தெரிய வேண்டாமா? இது மாதிரியான நேரங்களில் மக்கள் அறத்தை விட்டு வெகு தூரம் தள்ளி சென்று விடுகிறார்கள். பெரும்பான நேரங்களில் அவர்கள் சமரசம் செய்து கொண்டு ஊழலின் பக்கம் நின்று விடுகிறார்கள். மக்கள் எவ்வாறு உள்ளார்களோ ஆள்பவர்களும் அவ்வாறு தான் இருப்பார்கள். ஆட்சியாளர்கள் மாற வேண்டும் என்றால் மக்களும் அறிவுத் தெளிவுடன் இருப்பது அவசியம்.
7. குடும்பம் ஊழலை ஆதரிக்கிறதா ? தனது மகனோ அல்லது தந்தையோ லஞ்சம் வாங்குபவர் என்பதை அறிந்த குடும்ப உறுப்பினர் அதை அவமானம் என உணர்கிறாரா?
பொதுப்படையாக அனைத்துக் குடும்பங்களையும் அவ்வாறு சொல்லிவிட முடியாது. உதாரணமாக நாங்கள் சந்தித்த வழக்கிலேயே ஒருவரை ஊழல்வாதி என்று அடையாள படுத்துகிறோம். அவருடைய துறையில் அனைவருக்குமே அவர் ஊழல் செய்வது தெரிகிறது. அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் நாங்கள் வழங்குகிறோம். அவருடைய பதவி மாற்றப்படுகிறது. ஆனால் அவருடைய குடும்பம் இதை எதையுமே ஏற்க மறுக்கிறார்கள். அவர் ஊழல் செய்திருக்க மாட்டார் என்று அவர்கள் நம்ப விரும்புகிறார்கள். இதன் மூலம் ஊழல் செய்யக் கூடாத ஒன்று அதை தன் குடும்பத்தினர் செய்திருக்க மாட்டார் என்று தான் அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் இன்னும் சில குடும்பங்களில் குடும்பத்திற்கு தெரிந்தே தான் அந்த அதிகாரி லஞ்சம் வாங்குகிறார். அவரின் குடும்பம் அதை ஆதரிக்கிறது. அவர்களும் அறமில்லாமல் அரசு பணி என்றாலே அதிக லஞ்சம் அடித்தாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெரும்பாலான குடும்பங்களில் குடும்பத்தினரும் அதில் ஒரு அங்கமாகத் தான் இருக்கிறார்கள். அவர்களே யாரு தான் வாங்கவில்லை என்று சொல்லுவார்கள். முதலில் தெரியாமல் இருந்து பின்னர் தெரிய வந்தால் கூட அதை ஏற்றுக் கொண்டு அதற்கு பழகி விடுகிறார்கள். ஒரு சில குடும்பங்களில் லஞ்சம் வாங்குவதை கடுமையாக எதிர்க்க கூடியவர்களும் உள்ளார்கள். ஆனால் அவர்கள் அரிதானவர்களே.
8. ஊழல் செய்து பிடிபட்டவரை மரியாதைக் குறைவாகவும், சாமர்த்தியமாக பிடிபடாமல் ஊழல் செய்வோரை மரியாதையுடனும் இந்த சமூகம் பார்க்கிறதா ?
ஆமாம். சமூகம் அவ்வாறு தான் பார்க்கிறது. ஒரு 2000 ரூபாய் ஊழல் செய்தவரை அசிங்கப்படுத்தி முகத்தை மூடி அழைத்து செல்கிறார்கள். அதுவும் அவமான படவேண்டிய ஒன்று தான். ஆனால் லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் ஊழல் செய்த ஒரு அரசு அதிகாரியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். அவர்கள் நேரடியாக மக்களிடம் பணம் கேட்பதில்லை. பெரிய நிறுவனங்களிடம் கேட்கிறார்கள். மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள். பல்வேறு பெயர்களில் பெறுகிறார்கள். அவ்வளவையும் செய்துவிட்டு வெளியில் சுத்தமான ஒருவராக தன்னுடைய முகத்தை காட்டிக் கொள்கிறார்கள். அரசு அதிகாரிகள் மட்டும் அல்ல அரசியல்வாதிகளும் அவ்வாறு தான். ஆனால் இந்த சமூகம் அவர்களை மதிப்புடன் தான் நடத்துகிறது.
9. ஒருவர் பணியில் சேர்ந்ததில் இருந்து லஞ்சம் பெறாமல் இருக்கிறார், இன்னொருவர் முதலில் லஞ்சம் பெற்றுக்கொண்டு இருந்து பின்னர் மனம் திருந்தி பெறாமல் இருக்கிறார். இருவரில் யாரை முன்னுதாரனமானவராக இப்போது பணியில் இருப்பவருக்கு சொல்லுவீர்கள்? ஏன்?
இது மிகவும் கடினமான தேர்வு. முதலில் சொன்ன பணியில் சேர்ந்ததில் இருந்து லஞ்சம் வாங்காமல் இருக்கும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் முதலில் வாங்கிக் கொண்டு இருந்து பின்னர் மனம் திருந்தி வாங்குவதை நிறுத்தி விட்டார் என்று ஒருவரை இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. தலைகீழாக முதலில் வாங்காமல் இருந்தார் இப்போது வாங்குகிறார் என்று வேண்டுமானால் கேள்விப்பட்டுள்ளோம். அந்த விதத்தில் அது மிகவும் கடினமான மிகவும் அரிதான ஒன்று. அப்படி ஒருவர் மனம் திருந்தி லஞ்சம் வாங்காமல் இருந்தார் என்றால் நிச்சயமாக அவர் போற்றத்தக்க நபர் தான். ஆனால் அதே நேரத்தில் பணியில் சேர்ந்ததில் இருந்து வாழ்நாள் முழுவதும் மன வலிமையோடு ஒருவர் லஞ்சம் வாங்காமல் இருக்கும் போது இவரை விட அவர் மேலானவர் என்று சொல்லிவிட முடியாது. இங்கு இருவருமே உயர்வானவர்கள் என்று தான் கருத வேண்டும்.
10. அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதில் பொது மக்களின் பங்கு எந்த அளவிற்கு இருக்கிறது? பொது மக்கள் எதோ ஒரு வகையில் அதை ஆதரிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
மக்களின் ஆதரவு ஓரளவிற்கு இருக்கத் தான் செய்கிறது. ஆனால் பல நேரங்களில் கட்டாயத்தின் பேரில் தான் மக்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள். லஞ்சம் கொடுத்தால் தான் உனக்கு வாரிசு சான்றிதழ் கிடைக்கும், சாதி சான்றிதழ் கிடைக்கும் என்று கட்டாயப்படுத்தும் போது கொடுக்க விருப்பம் இல்லை ஆனால் வேறு வழியில்லை என்னும் போது தான் அவர்கள் கொடுக்க நேரிடுகிறது. அது தான் பெரும்பான்மையாகவும் இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் நான் விதிகளின் படி செயல்பட முடியாது, விதிகளை மீற வேண்டும் என்பதற்காகவும், என்னால் அந்த பணி நடந்து முடியும் வரை காத்திருக்க முடியாது, சீக்கிரமாக நடக்க வேண்டும் என்பதற்காகவும் தானாகவே லஞ்சம் கொடுக்கிறார்கள். என்னதான் இதுபோல் சிலர் லஞ்சத்தை ஆதரித்தாலும் அவர்கள் சிறுபான்மை என்று தான் நம்புகிறேன்.
11. ஒரு லட்சிய சமூகம் எது மாதிரி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ஒரு சமூகம் லட்சிய சமூகமாக இருப்பதற்கு அந்த மக்கள் அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் அறத்துடன் இருக்க வேண்டும் என்றும் மனதளவில் உணரவேண்டும். நம்முடைய அரசியல் சாசனத்தில் நீதி, சமத்துவம் பற்றி எல்லாம் இருக்கிறது. இன்று அதை ஒரு கனவாக வைத்துத் தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். அது வெறும் காகிதத்தில் மட்டும் இல்லாமல் எப்போது மக்கள் அனைவரின் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தி இவன் அந்த சாதி, இவன் இந்த மதம், இவன் இந்த ஆளு என்றெல்லாம் எண்ணாமல் மனதளவில் அனைவரும் சமம் என்று உணர்ந்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பாராட்டும் நிலை வருகிறதோ அப்போது தான் ஒரு லட்சிய சமூகம் உருவாகும் என்று நினைக்கிறேன்.
12. நீங்கள் செயற்களத்தில் சந்தித்த சிக்கல்கள் மற்றும் அழுத்தங்கள் என்ன? உங்கள் மீது உள்ள வழக்குகள் குறித்து சொல்ல இயலுமா?
நாம் ஒரு நேர்மையான சமூகம் அமைய வேண்டும் என்று போராடுகிறோம். ஊழலுக்கு எதிராக இருக்க வேண்டும் என்பது காகிதத்தில் அரசுடைய கொள்கையாக உள்ளது. ஊழலுக்கு எதிராக ஒருவர் செயல்பட்டால் அவரை அரசுக்கு சார்பானவர் என்று பார்க்க வேண்டும். ஆனால் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் லஞ்சம் பெறுபவர்களாக இருப்பதால் அப்படியே தலைகீழாக நம்மை அரசுக்கு எதிராக செயல்படும் ஒருவராக பார்க்கிறார்கள். அவர்கள் எங்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அழுத்தங்களை அளிக்கிறார்கள். உதாரணமாக சாலை போடுவதில் நடந்த முறைகேடுகளை கேள்வி எழுப்பி அதற்கு எதிராக ஒரு வழக்கு போடுகிறோம். நாங்கள் கொடுத்தது ஒரு வழக்கு. ஆனால், அதற்கு பதிலாக எங்களுக்கு கிடைத்தது பதினெட்டு மானநஷ்ட வழக்கு. வரிசையாக ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு கோடி என்று பதினெட்டு கோடி கேட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் நாங்கள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் எதை சொல்வதாக இருந்தாலும் சும்மா சொல்லிவிடக் கூடாது, ஒரு குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்பு பலமாதங்கள் ஆய்வு செய்து மிகத் தெளிவான ஆதாரங்களுடன் தான் சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
அவர்கள் இவ்வாறு வழக்குகள் போடுவதன் மூலம் எதிர்பார்ப்பது நாங்கள் அவர்களை பற்றி பேசக் கூடாது என்பது. மக்களுக்காக வேலை செய்பவர்கள் குறித்து மக்கள் கேள்வி கேட்காவிட்டால் வேறு யார் கேட்பது. இவர்கள் செய்வது அடிப்படையில் பேச்சுரிமை, கருத்துரிமையை கட்டுப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. நாங்கள் யாருடைய தனி வாழ்க்கையையோ, ஆதாரமில்லாமலோ சொல்லவில்லை. யார் யாருக்கு இதில் பங்கு உள்ளது, யாருக்கு என்ன அளவு உள்ளது என்று தெளிவான ஆதாரம் இருக்கும் போது எங்களால் தைரியமாக எதிர்கொள்ள முடிந்தது. பெரும்பாலானவர்கள் எங்களிடம் உள்ள ஆதாரங்களை கண்டு வழக்கு விசாரனைக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களே திரும்பப்பெற்றுக் கொண்டு சென்றுவிட்டனர். மொத்தமாக எங்கள் மேல் இருபத்தியொரு மானநஷ்ட வழக்குகள் போடப்பட்டது அதில் பதினேழு வழக்குகளை அந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பு அவர்களே திரும்பப் பெற்றுக் கொண்டனர். இன்னும் நான்கு வழக்குகள் மட்டும் நிலுவையில் உள்ளது.
ஆனால் அந்த காலகட்டம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. பதினெட்டு வழக்குகள் ஒரே சமயத்தில் எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான சூழல். அவற்றை எதிர்கொள்வதற்கான பொருளாதார வலிமை எங்களிடம் இல்லை. அவர்கள் அந்த ஒவ்வொரு வழக்குகளையும் நடத்துவதற்கு வக்கீல்கள் வைக்க இயலும் அதற்கு செலவு செய்ய இயலும். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. ஆனால் அந்த காலகட்டதில் நாங்கள் ஒன்றை கண்டறிந்தோம். எல்லா துறைகளிலும் நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். வக்கீல்களிலும் அவ்வாறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்காக வந்து எங்கள் வழக்குகளை எடுத்து அதற்காக பலமணி நேரம் செலவு செய்து நடத்தினார்கள். தன்னார்வளர்கள் நிறைய பேர் வந்தார்கள். வக்கீல்கள் இலவசமாக வரும் போது முழு நேரமும் இதில் செலவு செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அதனால் நாங்கள் இரவு முழுக்க வழக்குகளை வரைவு செய்து விடிய விடிய அந்த ஆவணங்களை தைத்து உள்ளோம். நாங்கள் செய்து முடித்ததை வக்கீலுக்கு அனுப்பி அதில் அவர் சட்ட ரீதியான சில மாற்றங்களை செய்து வழக்கு நடத்துவார். ஒரு பக்கம் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இது போன்ற தன்னார்வளர்கள் வருவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்திருந்தது.
ஒருக்கட்டதில் அந்த வழக்கில் நாங்கள் வாதாடி எங்கள் மேல் தவறில்லை நாங்கள் பேசலாம் என்று முடிவான பிறகு புதிதாக பதிமூன்று குற்ற வழக்கு பதிவு செய்யப்படுகிறது. உதாரணமாக, ஒரு மண்டபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து ஒரு பயிற்சி வகுப்பு நடத்துவதாக இருந்தோம். அப்போது ஒரு காவல் அதிகாரி வந்து அந்த மண்டபத்தின் உரிமையாளரிடம் அந்த வகுப்பை நடத்தக் கூடாது என்று கடிதம் கொடுத்து நிறுத்தினார். அதன் பின்னர் நாங்கள் இது போல ஒரு பயிற்சி வகுப்பு நடத்துவதாக சொல்லி நடத்தாமல் மக்களை ஏமாற்றி விட்டோம் என்று அதே காவல் அதிகாரி எங்கள் மேல் வழக்கு தொடுத்தார். இத்தனைக்கும் அது ஒரு இலவச நிகழ்வு தான். இது போல எங்கள் மேல் வந்த பதிமூன்று குற்ற வழக்குகளையும் நீதிமன்றத்தில் வாதாடி முறியடித்தோம்.
ஆனால் ஏற்கனவே சொன்னது போல ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தோம். நாம் சொல்லக் கூடியது உண்மையாகவும், நம்முடைய செயல்பாடு அகிம்சை வழியிலும் இருந்தால் நாம் எதைக் கண்டும் பயப்பட வேண்டியதில்லை. நாங்கள் ஊழல் செய்வோரின் மன மாற்றத்தை நோக்கியும் தான் செயல்படுக்கிறோம். நாங்கள் உண்மையாக இருப்பதால் நாங்கள் சொல்வதை மற்றவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு துறைக்குள்ளும் ஊழலுக்கு எதிரானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எங்களுக்கு வரும் அழுத்தங்களை அவர்களும் ஏற்கிறார்கள்.
13. சிறை அனுபவம்
குறித்து
இரண்டு முறை சிறைக்கு சென்றுள்ளோம். ஒரு முறை ஒரு நேர்மையான அதிகாரி லஞ்சம் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். அதை அளிக்க இயலாத நிலையில் வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்கிறார். அப்போது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், மந்திரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி முதலமைச்சர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதில் கைது செய்து சிறைக்கு அனுப்பப்பட்டோம்.
இன்னொரு முறை 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் போயஸ் கார்டன் முதல் திருவான்மியூர் வரையிலான சாலை முழுக்க இரண்டடிக்கு ஒன்றாக பெரிய பெரிய பேனர் வைத்திருந்தனர். சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கே வழி இல்லாமல், பல பேர்களின் வீடுகளின் முன்பு வாசல்களில் அவர்கள் வெளியில் வர இயலாத வண்ணம் பேனர் வைத்திருந்தனர். அந்த அளவிற்கு பேனர் கலாச்சாரம் உச்சத்தில் இருந்தது. நாங்கள் காவல் நிலையம் சென்று புகாரளித்து இதையெல்லாம் அகற்றும் படி கேட்டோம். அப்போது அங்கிருந்த ஒரு காவல் அதிகாரி “எங்களாளலாம் அகற்ற முடியாதுங்க உங்களால முடிஞ்சா நீங்க போய் பண்ணுங்க” என்று சொன்னார். சரினு அடுத்த நாள் நாங்க ஒரு மூன்று பேர் சென்று அவற்றை அகற்றினோம். பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பேனர்களை நீக்கியதற்காக எங்கள் மேல் பொது சொத்தை சேதமடைய செய்தல் என்ற பெயரில் வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டோம். ஆனால் எனக்கு சிறையில் இருந்ததில் பெரிய வருத்தம் ஒன்றும் இல்லை. அங்கு எனக்கு புதிய கற்றல்கள் தான் சிலது இருந்தது. நாங்கள் உள்ளே சென்றவுடன் ஒரு கான்ஸ்டபிள் ஓடிவந்து நான் செய்ய முடியாததை நீங்கள் செய்துள்ளீர்கள் என்று சொல்லி எங்களை கட்டிப்பிடித்தார். உள்ளே ஒரு மருத்துவர் எங்களை சந்தித்து நீங்கள் உள்ளிருப்பதால் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் வெளியில் நீங்கள் செய்தது தீவிரமான ஒன்றாக மாறியுள்ளது என்று அவர் சொன்னார். அப்போது கலைஞர் எதிர் கட்சித் தலைவராக இருந்தார். அவர் இனிமேல் அந்த கட்சியில் இருந்து பேனர்கள் எதுவும் வைக்கப்படக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டார். ஜெயலலிதா அதுபோல் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை, ஆனால் போயஸ் கார்டனில் எப்போதுமே நிரந்தரமாக இருக்கும் ஒரு மிகப்பெரிய பேனர் நீக்கப் படுகிறது. மீண்டும் அவர் ஆட்சிக்கு வரும்போது அவரின் பதவியேற்பு விழாவிற்கு ஒருவர் கூட பேனர் வைக்கக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தார். அவர் இறக்கும் வரை பேனர் வைப்பது என்பது கிட்டதட்ட முற்றிலுமே இல்லாமல் போனது.
தன்னையே பெரிய வடிவமாக பார்த்து மகிழும் நிலையில் இருந்து மக்கள் அதை எப்படி தவறாக பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து அதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்கிறார்கள். அந்த வகையில் அந்த சிறை அனுபவம் ஒரு நல்லது விஷயம் நடப்பதற்கு காரணமாகவும் இருந்தது என்றே பார்க்கிறேன்.
இது இல்லாமல் சிறைக்குள் குளிப்பது, கழிவறை செல்வது, சாப்பிடுவது போன்ற சிக்கல் இருந்தது. ஆனால் அங்கு உள்ளவர்களின் மற்ற பிரச்சனைகளை பார்க்கும் போது அது பெரிய ஒன்றாக தோன்றவில்லை. ஒரு சிலர் சிறு சண்டைகளில் ஈடுபட்டு உள்ளே வந்திருப்பார்கள். அவர்களுக்கு பெரிய அறிதலோ வெளியில் எடுப்பதற்கு வக்கீலோ இல்லை என்று தெரிய வந்தால் அவர்கள் மேல் நிலுவையில் உள்ள வேறு சில வழக்குகளையும் போடுவது நடந்தது. சிறைக்குள்ளேயே உள்ள வேறு சிலர் இவர்களிடம் பேசி நீங்கள் வெளியில் சென்றால் எப்படியும் உங்கள் மேல் வேறு சில வழக்குகளை போட்டு உள்ளே கொண்டு வந்து விடுவார்கள். அதற்கு பதிலாக வெளியில் சென்று நாங்கள் சொல்லும் இந்த பணியை செய்து கொடுத்தால் பணம் தருகிறோம் என்று பேசி ஆள் எடுப்பது போன்ற செயல்களும் நடந்தது. அப்போது நாங்கள் அவர்களிடம் இதுபோல் செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள் வெளியில் சில நேர்மையான நல்ல வக்கீல்கள் உள்ளார்கள். அவர்கள் உதவுவார்கள், அவர்களை சென்று பாருங்கள் என்று சிலரிடம் சொல்லி புரியவைப்பது போன்ற செயல்களையும் உள்ளே செய்தோம். ஆகவே சிறை எனக்கு ஒரு புதிய அனுபவத்தை அளித்த இடம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த இரண்டு வழக்குகளுமே இப்போது முடிந்துவிட்டது.
14. இது போல் தொடர் பணியில் ஈடுபட்டிருக்கும் போது உங்களுக்கு எப்போவாவது சலிப்பு ஏற்பட்டது உள்ளதா?
சலிப்பு ஏற்படும். ஆனால் அது தற்காலிகமானது தான். இந்த பணிகளை செய்யத் தொடங்குவதற்கு முன்பே இதில் உடனடி விளைவுகள் ஏற்படாது என்று எனக்கு தெரியும். அதை எதிர்பார்த்து நான் உள்ளே வரவில்லை. இது நீண்ட காலம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டிய பணி, நம்முடைய ஆயுட்காலத்தில் இதை செய்து முடிக்க முடியாது, நமக்குப் பின் நம் அடுத்த தலைமுறையினர் வந்து இதை தொடர்வார்கள் என்ற தெளிவோடு தான் உள்ளே வந்தோம். பத்து செயல்களில் ஈடுபட்டால் அதில் இரண்டு அல்லது மூன்றில் தான் வெற்றி கிடைக்கும் மீதி 7 செயல்கள் தோல்வி தான் அடையும் என்றும் எங்களுக்கு முன்னரே தெரியும். ஆகவே அந்த தோல்விகள் எங்களை ஆழ்ந்த துயரிலோ, சலிப்பிலோ ஆழ்த்துவது இல்லை. அந்த சமயத்தில் அது இருக்கும். அதிகபட்சம் ஒரு நாள் நீடிக்கும். ஆனால் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பது முக்கியம். அதன் பிறகு எங்களுக்கு கிடைக்கும் சிறு வெற்றிகள் கூட தொடர்ந்து செயல்படுவதற்கான மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். உதாரணமாக, இருளர் மக்களின் பட்டாவிற்காக போராடி அவர்களுக்கு அது கிடைக்கும் போது, ஒரு ஊழல்வாதிக்கு எதிராக தொடர்ந்து போராடிக்கொண்டு இருந்து இறுதியாக அவர் மீது FIR போடப்படும் போது, ஒரு துறையில் விடப்படும் டெண்டர்களில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே போட்டியிட்டுக் கொண்டு இருந்த இடத்தில் இன்று யார் வேண்டுமாலும் போட்டியிட்டு சந்தை மதிப்பிற்கு கொள்முதல் செய்ய கூடிய நிலையை ஏற்படுத்தியது போன்ற வெற்றிகள் தொடர்ந்து பணியாற்றுவதற்கு தனி உத்வேகத்தை அளிக்கிறது. ஆகவே இங்கு சலிப்பு மிகவும் குறைவானது தற்காலிகமானது தான்.
15. உங்கள் அமைப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
இந்த அமைப்பின் தன்னார்வலர்களாக பதிவு செய்துள்ளவர்கள் மொத்தம் 16,000 பேர் இருப்பார்கள். ஆனால் அதில் குறிப்பிட்ட இடைவெளியில் ஏதேனும் பங்காற்றுபவர்கள் சில நூறு பேர் இருப்பார்கள். ஒரு வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் அல்லது தினமும் சில மணி நேரம் என்று தொடர்ந்து ஏதேனும் சில பணிகளில் ஈடுபடக் கூடியவர்கள் ஒரு நாற்பதில் இருந்து ஐம்பது பேர் இருப்பார்கள். அமைப்பின் முக்கிய குழுவினர் சுமார் 20 பேர். அதில் முழுநேர பணியாளர்களாக அலுவலகத்தில் 7 பேர் உள்ளார்கள்.
16. உங்கள் அமைப்பில்
உள்ள உறுப்பினர்கள் அனைவரும் லஞ்சம் அளிக்க கூடாது என்ற உறுதி எடுத்து அதன் படி
செயல்படுகிறார்களா? அதில் உள்ள சிரமம் என்ன?
17. நீங்கள் இது மாதிரியான செயல்களை மேற்கொள்வதற்கு உங்களுக்கு தனிப்பட்ட முறையில் முன்மாதிரி ஆளுமை உள்ளார்களா? உங்கள் அமைப்பிற்கு முன்மாதிரி அமைப்பு ஏதேனும் உள்ளதா?
முன்மாதிரி ஆளுமை என்றால் காந்தியை சொல்ல முடியும். அவரிடம் இருந்து தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டுக் கொண்டே இருப்பதை தான் எடுத்துக் கொள்ள நினைக்கிறேன். முன்மாதிரி அமைப்பு என்றால் அருணா ராய் அவர்களின் MKSS என்ற அமைப்பு. தொடர்ந்து முப்பது நாற்பது ஆண்டுகளாக போராடி தகவல் அறியும் உரிமை சட்டதை கொண்டுவந்து உள்ளார்கள்.
18. நீங்கள் ஊழல்வாதிகளை வேவு பார்த்து ரகசியங்களை காத்து வெளியீடுகிறீர்கள். அதே போல் எதிர் தரப்பினர் உங்கள் அமைப்பிற்குள் இருந்து உங்களை யாராவது வேவு பார்க்கும் சம்பவங்கள் நடந்துள்ளதா?
நிறைய நடந்துள்ளது. காவல்துறையே உளவுத்துறை மூலம் வேவுபார்க்க முயன்றுள்ளனர். அமைப்பிற்குள் தன்னார்வளர்கள் போல் சிலரும் அவ்வாறு வந்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் கொஞ்ச நாட்களில் அவர்களாகவே விலகி சென்றுவிடுவார்கள். சில பேரை நாங்களும் கண்டறிந்து அவர்களிடமே சொல்லியுள்ளோம். இதுபோல் நீங்கள் இந்த கட்சியில் இருந்து வேவுபார்க்க தான் வந்துள்ளீர்கள் என்று எங்களுக்கு நன்றாக தெரிகிறது, நீங்கள் இன்னும் எவ்வளவு நாட்கள் வந்தாலும் ஒன்றும் கிடைக்கப் போவது இல்லை. வருவதென்றால் வாருங்கள் நாங்கள் உங்களை ஒன்றும் தடுக்கப் போவதில்லை என்று சொன்னால் அடுத்த நாளில் இருந்து அவர்களே நின்று விடுவார்கள். இங்கு பெரும்பாலும் அனைத்துமே வெளிப்படைத் தன்மையுடன் நாங்கள் செயல்படுவதால் அது ஒன்றும் பெரிய பிரச்சனையாக இல்லை. அதே போல் அவர்கள் வந்த உடனேயே அவர்களுக்கு வேலைகளை தான் ஒப்படைப்போம். அந்த வேலைகளை செய்ய தயங்கியே பெரும்பாலும் நின்று விடுவார்கள்.
நாங்கள் யார் மீது புகார் அளிக்கப் போகிறோம், அவர்களுக்கு எதிராக என்ன ஆதாரங்களை சேகரித்து உள்ளோம் போன்ற தகவல்கள் எல்லாம் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அந்த இடத்திற்கு அவர்கள் வருவது கடினம். ஆரம்ப கட்ட பணிகள் எல்லாம் செய்து நீண்ட நாட்கள் அமைப்பில் இருந்து எங்கள் நம்பிக்கையை பெற்றால் மட்டும் தான் இந்த மாதிரியான பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவோம். அந்த இடம் வரைக்கும் இவர்களால் தாக்குப்பிடித்து வர இயலாது.
19. நீங்கள் நீண்ட காலமாக இந்த அமைப்பில் செயல்பட்டு வருகிறீர்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் அமைப்பு உறுப்பினர்களுக்குள் ஏதாவது சண்டைகள் வந்து பிளவு ஏற்பட்டு உள்ளதா? யாராவது முக்கியமான பொறுப்பில் இருந்தவர் அவ்வாறு நீங்கி சென்றுள்ளாரா? இதுமாதிரியான சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
முக்கிய குழுவில் இருந்த இரண்டு மூன்று பேர் விலகி சென்று இப்போது வேறு பணிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சண்டை, பிளவு போன்று ஏற்பட்டது கிடையாது. அவர்களுடைய நோக்கம் வேறு ஒன்றாக இருக்கும் அதனால் விலகி சென்றார்கள். உதாரணமாக, நாங்கள் ஒவ்வொரு மாதமும் நேரில் சந்தித்து அடுத்து என்ன பணிகள் செய்யப் போகிறோம் என்று கலந்துரையாடும் போது ஒரு சிலர் விவசாய பிரச்சனை குறித்து செயல்படலாம் என்று சொல்வார்கள், சிலர் மீனவர் பிரச்சனை குறித்து செயல்படலாம் என்று சொல்வார்கள். சமூகத்தில் பல பிரச்சனைகள் இருக்கத் தான் செய்கிறது, ஆனால் ஒரு அமைப்பிற்கு ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருக்க வேண்டும் அதை நோக்கித்தான் செயல்பட வேண்டும். அவர்கள் இவ்வாறு சொல்லும் போது அதை பெரும்பாலான உறுப்பினர்கள் ஏற்காத போது அவர்களிடம் இதை இங்கு செய்ய முடியாது உங்களுக்கு இதை செய்வதில் தான் ஆர்வம் என்றால் நீங்கள் வேறு ஒரு அமைப்பை தொடங்கி அதில் செயல்படுங்கள் என்று சொல்லி நாங்களே கூட அவர்களை அனுப்பி வைத்து உள்ளோம். அவர்கள் வெளியில் சென்று அந்த தளத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டும் உள்ளார்கள். இன்று வரை அவர்களுடன் சண்டையோ கசப்போ இல்லை. தொடர்ந்து பேசிக்கொண்டு தான் உள்ளோம். அவர்கள் நடத்தும் நிகழ்வில் நாங்கள் கலந்து கொள்கிறோம். நாங்கள் நடத்தும் நிகழ்வில் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். இது ஆரோக்கியமாகத் தான் உள்ளது. ஒரு சமூகத்திற்கு இது போல பல தளங்களில் செயல்படும் பல அமைப்புகள் இருப்பது நல்லது.
ஒரு அமைப்பின் தொடக்கத்தில் முக்கிய குழு உறுப்பினராக இருந்த சிலர் இவ்வாறு விலகி கொஞ்ச நாட்களில் வேறு சிலர் அந்த இடத்திற்கு வருவார்கள். ஆனால் அந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும் போது அந்த முக்கிய குழு உறுப்பினார்களுக்கும் ஒரு ஒருமித்த கருத்து உருவாகும். புதிதாக வருபவர்களும் அந்த அமைப்பின் நோக்கத்திற்கு ஒத்த கருத்துள்ளவர்கள் தான் வருவார்கள். உதாரணத்திற்கு, எங்கள் அமைப்பிலேயே கூட ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த வாக்குவாதம் இன்று கிடையாது. இப்போது அனைவருமே ஊழலுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வருகிறார்கள். அதில் எப்படி செயல்படலாம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். இப்போது மீனவர் பிரச்சனையை கையில் எடுக்கலாம் என்று ஒருவர் இந்த அமைப்பிற்குள் வருவது கிடையாது. அவ்வாறு வாக்குவாதம் ஏற்படும் நேரங்களில் தேவையற்ற வார்த்தைகளை விட்டுவிடாமல் இருந்தாலே சண்டையில்லாமல் ஒரு நல்ல உறவில் தொடர இயலும். எங்களுடைய சந்திப்புகளில் எப்போதுமே வட்டமாக அமர்ந்து ஒருவர் பின் ஒருவராக வரிசை படி தான் பேச வேண்டும். ஒருவருக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் அவருக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருந்து தான் பதில் சொல்ல வேண்டும். அதற்குள் அவரின் கோபம் தணிந்து அவருடைய எதிர் கருத்தை மட்டுமே முன்வைப்பார். இதனால் சண்டை வராமல் தடுக்க முடிகிறது. அதே போல் ஒருபோதும் முக்கியமான விஷயங்களை இணைய கூட்டங்களில் பேசுவது இல்லை. நேரில் சந்தித்து தான் பேச வேண்டும். அப்போது பெரிய அளவில் சீற்றம் இருக்காது. இதெல்லாம் புதிதாக தொடங்கப்படும் அமைப்பு பின்பற்றினால் தேவையற்ற சண்டைகளை குறைக்க இயலும்.
20. சில அமைப்புகள் நேர்மறையாக ஆக்கப்பூர்வ செயல்களை மட்டும் முன்னெடுத்து செய்கின்றனர். எங்களைப் போல. சில அமைப்புகள் எதிர்ப்பு முறையில் தவறுகளை எதிர்த்து செயல்படுகிறார்கள் உங்களைப் போல். இரண்டில் எது மேலானது என்று நினைக்கிறீர்கள்? நாங்களும் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு வர வேண்டுமா?
ஒரு அமைப்பு இரண்டு தளங்களிலுமே செயல்படுவது அவசியம் என்று தான் நினைக்கிறேன். எங்களுடைய அமைப்பே வெறும் எதிர்மறையாக மட்டுமே செயல்படுவதில்லை. பல செயல்கள் நேர்மறையாகவும் செய்துள்ளோம். உதாரணத்திற்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். அரசாங்கத்திடம் சென்று பேசி திட்டங்களில் மாற்றம் ஏற்படுத்துவது, மக்கள் பிரச்சனையை தீர்ப்பது போன்று அரசுடன் இணைந்தும் பல செயல்களை செய்துள்ளோம். அதிமுக ஆட்சியில் நிலக்கரி ஊழலை வெளியில் கொண்டுவந்த பின்னர் கனிமவள அமைச்சராக இருந்த தங்கமணி அவர்களையே சென்று பார்த்து இதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பேசினோம். அப்போது அவர் “என்னை திட்டவும் செய்கிறீர்கள் என்னை வந்து பார்க்கவும் செய்கிறீர்கள்” என்று சொன்னார். அப்போது நான் அவரிடம் இது ஜனநாயகத்தில் மிக முக்கியமானது என்று சொன்னேன். நாம் தான் வாக்களித்து அவர்களை தேர்ந்தெடுத்து உள்ளோம். நம்முடைய வரியை தான் சம்பளமாக பெறுகிறார்கள். ஆகவே, மக்கள் தம்முடைய பிரச்சனைகளை அவர்களுடன் சென்று பேசுவது முக்கியமானது. அதே சமயம் பெரிய அளவிலான தவறுகள் நடக்கும் போது அதை எந்த சமரசமும் இல்லமால் கேள்வி எழுப்புவதும் மிக முக்கியமானது. ஒரு அநீதி நடந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது தான் அந்த அநீதியை நிறுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆக்கப் பூர்வமான செயல்பாடுகள் மட்டுமே செய்தால் அந்த அநீதிகளை நிறுத்தி விட முடியாது. எதிர்ப்பு செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு தனி தைரியமும் தேவைப்படுகிறது. அதனால், எதிர்த்து கேள்வி கேட்பது தான் ஆக்கப்பூர்வ செயலை விட முக்கியமானது என்று நினைக்கிறேன்.
21. நீங்கள் சமூகப் பணிக்கு வர வேண்டும் என்று நினைத்த தருணம் எது?
அமெரிக்காவில் படித்துக் கொண்டு இருக்கும் போது இங்கு நடந்த போபால் விஷவாயு தாக்குதல் குறித்து பேசுவதற்கு இருவர் வந்தார்கள். அவர்களின் அமர்வில் நான் பங்கேற்றேன். அப்போது தான் அந்த சம்பவம் நடந்து இருபது வருடங்கள் கழித்தும் அங்கு நீடிக்கும் பாதிப்புகள் பற்றி தெரிய வந்தது. போபால் விஷவாயு தாக்குதல் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம், புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால், இருபது வருடங்கள் கழித்தும் அந்த பாதிப்புகள் உள்ளது, தாய்ப் பாலில் விஷம், தண்ணீரில் விஷம் என்று அந்த ஊர் மீளவே இல்லை என்பது அப்போது தெரிய வரும் போது இதுவரை இதை கூட நாம் தெரிந்து கொள்ள வில்லையே, மிகவும் சுயநலமாக இருந்து விட்டோமே என்ற குற்றவுணர்வு ஏற்பட்டது. அதன் பிறகு தான் சமூக நிகழ்வுகளை தேடி படிப்பது, அங்குள்ள தன்னார்வலர்களை தேடிச் சென்று பார்ப்பது போன்றவற்றை செய்தோம். அதன் பின் நாங்கள் அங்கேயே ஒரு அமைப்பில் இணைந்து செயல்பட்டு அங்குள்ள தன்னார்வலர்களையும் இங்குள்ள விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்று வெவ்வேறு துறைகளில் பணிபுரிகிற தன்னார்வலர்களையும் ஒருங்கிணைத்து இங்கு உள்ளவர்களுக்கு தேவையான நிதி உதவி, ஆராய்ச்சிக்கான உதவி போன்றவற்றை செய்தோம். அங்கு கல்வி முடித்த பிறகு இரண்டு வருடங்கள் அங்கேயே கலிபோர்னியாவில் ஒரு பணியில் இருந்தேன். அதன் பின் இந்தியா வந்த பிறகும் வேலையில் சேர்ந்து 10 மாதங்கள் கழித்து இதை தொடர வேண்டும் என்பதற்காக 2007, 2008 காலங்களில் இங்கு பல்வேறு பணிகளை தொடங்கினோம்.
22. நீங்கள் இப்படி ஒரு அமைப்பை துவங்க ஒரு குறிப்பிட்ட தருணம் உள்ளதா?
2007 ஆம் ஆண்டு சமூகப் பணிகள் செய்ய வந்த பிறகு அதிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரைக்கும் நீங்கள் சொன்ன ஆக்கப் பூர்வமான பணிகளை தான் செய்தேன். அரசு பள்ளி மாணவர்களுக்கு எளிதாக வாசிக்க சொல்லிக் கொடுப்பது, கணக்குப் போட சொல்லிக் கொடுப்பது போன்றவையும், விவசாயிகளுடன் இணைந்து அவர்களுக்கு அதிக மகசூல் கிடைப்பதற்கு, சரியான விலை கிடைப்பதற்கு விவசாயத்தில் புதிதாக என்ன கொண்டு வரலாம் என்பது போன்ற பணிகளையும் செய்து வந்தோம். இதற்கு “மகசூல்” என்ற பெயரில் ஒரு அமைப்பு கூட வைத்து செயல்பட்டுக் கொண்டு இருந்தோம். இரண்டிலுமே யாருக்காக அந்த பணிகளை செய்தோமோ அவர்களின் வாழ்க்கை மாறுவதை கண்கூடாகவே பார்க்க முடிந்தது. அதில் சந்தேகமே கிடையாது. ஆனால், அதில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக நாங்கள் பார்த்தது இங்கு பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் செயல்களை நாங்கள் மேற்கொள்ளும் போது முதன்மை கல்வி அதிகாரிகள் பெரும்பாலும் யாருக்கு எங்கு பணி மாற்றம் செய்தால் அதிக பணம் வரும் என்பதில் தான் தங்கள் சிந்தனைகளை செலுத்திக் கொண்டு இருந்தார்கள். அதே போல் விவசாயத்தில் பட்டியல் இன மக்களுக்கு வர வேண்டிய மானியங்களை வேறு ஒருவர் இவர்கள் பெயரில் எடுத்துக் கொள்கிறார். இது போன்ற ஊழல்களை கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை. அப்போது தமிழநாட்டில் யாராவது இது போன்ற ஊழலை கேள்வி கேட்கக் கூடியவர்கள் இருக்கிறார்களா என்று தேடிக் கூட பார்த்தேன். அப்படி யாரும் இல்லை. ஆனால், அப்படி கேள்வி கேட்க யாராவது இருக்க வேண்டும் என்று தோன்றியது. அரசு மக்களுக்காக செலவு செய்யும் பணத்தில் இவர்கள் செய்யும் ஊழலை கேள்வி கேட்பதன் மூலம் இன்னும் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்று நினைத்தேன். எதிர்த்து கேட்பதில் உள்ள பயம் தான் யாரும் கேட்காமல் இருப்பதற்கு காரணம் என்று எனக்கு தோன்றியது. அந்த பயத்தை போக்குவதற்கான வழிகளை யோசிக்கும் போது நாம் தனி நபராக இருக்கும் போது நம்மை மிரட்டி ஒடுக்கி விடலாம். ஆனால் ஒரு குழுவாக இருந்தால் அப்படி செய்து விட முடியாது என்று நினைத்து தான் அறப்போர் இயக்கம் என்று ஒரு அமைப்பை மக்கள் இயக்கமாக தொடங்கினோம். 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த அமைப்பை தொடங்கினோம். இப்போது கிட்டதட்ட 10 வருடங்கள் ஆகப் போகிறது. இந்த அமைப்பை தொடங்கும் போது 15 பேர் கொண்ட குழுவாக தொடங்கினோம் இன்று பல்லாயிரம் பேராக வளர்ந்துள்ளது.
23. நீங்கள் பெற்றுள்ள உயர் கல்விக்கு உங்களுக்கு அதிக சம்பளத்திற்கு நிறைய
வேலைகள் கிடைத்திருக்கும். ஆனால் வேண்டுமென்றே சமூக பணி செய்ய வேண்டும் என்பதற்காக
குறைந்த சம்பளத்திற்கு ஒரு பணியை செய்கிறீர்களா?
என் வாழ்வாதாரத்திற்கு பகுதி நேரமாக தனியார் மையங்களில், கல்லூரி மாணவர்களுக்கு CA foundation கணக்கு மற்றும் புள்ளியியல் வகுப்பு எடுத்து வருகிறேன். என்னுடைய 90% நேரம் அறப்போர் தன்னார்வ வேலைகளில் தான் செலவிடுகிறேன். ஆம் என் சம்பளம் பல மடங்கு குறைந்துள்ளது ஆனால் நான் இதற்கு முன்பு செய்த அனைத்து வேலைகளை விட தற்பொழுது அறப்போரில் செய்யும் வேலை அர்த்தமுள்ளதாக தெரிகிறது
24. உங்கள் அமைப்பின் கொள்கைகள், செயல்பாடுகள் எல்லாம் எழுத்து வடிவில் வைத்துள்ளீர்களா?
கொள்கைகள் எழுத்து வடிவில் உள்ளது. அது அறப்போர் இயக்கத்தின் தளத்திலேயே உள்ளது. செயல்பாடுகள் குறித்து கூட்டம் போட்டு பேசி அதன் சாரத்தை சில குறிப்புகளாக வைத்திருப்போம். நீண்ட, தெளிவான எழுத்து வடிவமாக வைத்திருக்கவில்லை.
25. உங்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளதா? உங்களை பாதித்த புத்தகம் எது?
கல்லூரி காலத்திற்கு பின் தான் புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு சமூக பிரச்சனை சார்ந்து, செயல்பாடுகள் சார்ந்து நிறைய புத்தகங்கள் வாசித்து இருக்கிறேன். என்னை பாதித்த புத்தகம் என்று காந்தியின் சத்தியசோதனை புத்தகத்தை சொல்ல முடியும். அமர்த்தியா சென் மற்றும் ஜான் டிரேஸ் ஆகியோர் எழுதிய தொகுக்கப்பட்ட புத்தகங்கள் ஆகியவை மிக முக்கியமானதாக உள்ளது.
26. வெளிநாடுகளில் உள்ள ஊழல் எதிர்ப்பு அமைப்புக்கள் பற்றி நீங்கள் எந்த அளவில் தெரிந்து வைத்துள்ளீர்கள்? அவர்களின் செயல்பாடுகளை கவனித்து வருகிறீர்களா? அவர்களிடமிருந்து நீங்கள் ஏதேனும் கற்றுக் கொண்டு உள்ளீர்களா?
வெளிநாடுகளில் உள்ள அமைப்புகளுடன் பெரிய தொடர்பில்லை. வெளி மாநிலங்களுடன் தொடர்புள்ளது. கவனித்து வருகிறோம். உதாரணத்திற்கு அருணா ராய், நிகில் டே அவர்களின் MKSS அமைப்பு, அஞ்சலி பரத்வாஜ் ஆகியோரின் குழு, பிரஷாந்த் பூஷண் போன்று இந்தியாவிற்குள் ஊழலுக்கு எதிராக செயல்படக் கூடிய பல பேருடன் உரையாடலில் உள்ளோம். அவர்கள் என்ன செய்கிறார்கள், நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் போன்ற பகிர்வுகளும் நடந்து கொண்டு தான் உள்ளது.
27. தமிழகத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தின் செயல்பாடு எந்த அளவில் உள்ளது?
லோக் ஆயுக்தாவின் சரடே அது தன்னிச்சையான விசாரணை
அமைப்பாக செயல்பட வேண்டும் என்பது தான். ஒரு இயக்கம் தன்னிச்சையாக செயல்பட
வேண்டும் என்றால் அதற்கு மூன்று விதமான தன்னிச்சை தன்மை தேவை. நிதியில்
தன்னிச்சைத் தன்மை, நியமனத்தில் தன்னிச்சை தன்மை, செயல்பாடுகளில் தன்னிச்சைத்
தன்மை. இந்த மூன்றுமே இல்லாததால் தான் இங்கு லஞ்ச ஒழிப்பு துறை மிக மோசமாக உள்ளது.
அதே போல் லோக் ஆயுக்தா என்று இங்கு ஒன்றை அமைத்தார்கள். முன்னாள் கர்நாடக லோக்
ஆயுக்தா நீதிபதியாக இருந்த சந்தோஷ் ஹெக்டே, பிரஷாந்த் சென், மூத்த வழக்கறிஞர்
சுரேஷ் ஆகியோரை வைத்து நாங்கள் ஒரு மாதிரி லோக் ஆயுக்தா பில் கூட தயார் செய்து
தமிழக அரசாங்கத்திற்கு அளித்தோம். ஆனால் அவர்கள் மிக மோசமான அமைப்பை தான் கொண்டு
வந்து உள்ளார்கள். அதிகாரமற்ற அமைப்பாகத் தான் அந்த அமைப்பை வைத்துள்ளார்கள். அதை
சீரமைக்க வேண்டும் என்று கூட திமுக ஆட்சிக்கு வரும் போது ஊழல் எதிர்ப்பு
வெளிப்பாடு (anti-corruption
manifest) என்று ஒன்றை தயாரித்து அவர்களுக்கு அளித்து இந்த இந்த
மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கேட்டோம். அதுவும் இன்று வரை சீரமைக்கப்படவில்லை.
இப்போது ஒரு அமைச்சர் மீது வழக்கு இருந்தால் அதை விசாரித்து அந்த அமைச்சர்
உள்ளிட்டோர் அடங்கிய குழுவிற்கே அதை சமர்ப்பிக்க வேண்டும் என்பது போல் தான் லோக்
ஆயுக்தா சட்டங்கள் உள்ளது.
பேட்டி கண்டவர்: சிபி, முனை இளைஞர் இயக்கம்.
1. அறப்போர் அமைப்பினர் பேனர்களை அகற்றும் காணொளி: https://youtu.be/0FqDxMe0JH0?feature=shared
2. அறப்போர் youtube பக்கம்: https://www.youtube.com/@Arappor
3. அறப்போர் தளம் : https://arappor.org/
Comments
Post a Comment