ஏழாம் நாள்
நல்ல தூக்கம். ஜனவரி 17 காலை தாமதமாக எழுத்து பொறுமையாக கிளம்பினோம். அம்மாவும் எங்களுடன் சேர்ந்து நடப்பதாக சொன்னாள். முதலில் இருந்தே அம்மாவிற்கு கடும் கால்வலி உள்ளது. அதனால் நான் நடக்க வேண்டாம் என்று சொன்னேன். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வந்தே தீர்வேன் என்று அடம் பிடித்து சண்டையிட்டு கூட வந்து பத்து கிலோமீட்டர் நடந்தாள்.
அக்கா, நண்பர்கள் ஊர் எல்லை வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள். வழியில் மாமா ஒருவர் வந்து அம்மாவிடம் பேசினார். அப்போது எங்கள் நடைபயணம் குறித்து அம்மா சொன்னார். "அத்தெல்லா எவன் திருந்துவான். கொடுத்து பழக்கீட்டாங்க. சம்பாதிச்ச காசவா கொடுக்கறா, கொள்ளையடிச்சது தானனு வாங்கிகறோ. அதுலென்ன இருக்கு என்றார்."
"அவங்க கொள்ளையடிச்ச பணத்த தான கொடுக்கறாங்க?" என்று கேட்டேன்.
"ஆமா" என்றார்.
"கொள்ளயடிப்பது சரியா தப்பா?"
"தப்பு"
"கொள்ளௌயடிச்ச பணம் சரியான பணமா? தப்பான பணமா?"
"தப்பான பணம்"
"தப்பான பணத்த வெச்சிருந்தா பாவமா இல்லையா?"
"பாவம் தா"
"தப்பான பணத்த வாங்கறது சரியா தப்பா?"
"தப்பு தா"
"தப்பான பணத்த வாங்குனா அந்த பாவம் உங்களுக்கு வருமா வராதா?" என்று கேட்டேன்.
"அதெல்லா ஒன்னுங்கெடையாது" என்று தொடங்கி மீண்டும் முதலில் இருந்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாத கதைகளை பேசத் தொடங்கினார். அவர் செய்வதை சரி என்று நிரூபிக்க மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டார்.
இறுதியாக "நீங்க ஓட்டுக்கு பணம் வாங்கறது தப்புன்னு ஒத்துப்பீங்களா மாட்டீங்களா? பணம் வாங்காம இருப்பீங்களா மாட்டீங்களா?" என்று கேட்டேன். அப்படியெல்லாம் முடியாது. நம்ம கிட்ட இருந்து எடுத்தது தான திருப்பி கொடுக்கறா. நம்ம வாங்கிக்க தா வேணும் என்று சொல்ல தொடங்கி ஏதேதோ சொன்னார். என்னால் அதற்கு மேல் பொறுமையாக அவரிடம் பேச முடியவில்லை. என்ன கடும் ஏழ்மை இருந்தாலும் ஓட்டுக்கு பணம் வாங்கறது தப்பு தான். அப்படி வாங்கறவரு ஒரு படி கீழானவர் தான். அவர் செய்வது இழிவான செயல் தான். கீழான ஒருவர் கிட்ட இதுக்கு மேல பேச முடியாது. அவருக்கு என் கிட்ட இருந்து ஒரு மரியாதையும் கிடையாது. வா மா போலாம் என்று சொல்லி அம்மாவை அழைத்து வந்துவிட்டேன்.
என்னுடன் வந்த மற்ற நண்பர்களை அழைத்து, இந்த ஊரில் நமக்கு கடும் நிராகரிப்பு உள்ளது. இங்கு தான் நாம் தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சொன்னேன். எப்போதும் இருப்பதை விட இன்று தீவிரமாகவே பிரச்சாரம் செய்தோம். சௌமியாவும், கௌதமும் ஒரு கடைக்கு சென்று பேசியுள்ளனர். அவர் எந்த பதிலும் பேசவில்லை. இவர்கள் பேச பேச வெறுமனே மண்டையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்துள்ளார். இவர்கள் வழங்கிய துண்டு பிரசுரத்தை வாங்க மறுத்துவிட்டார். அவர்கள் இருவரும் பெரும் ஏமாற்றத்துடன் வந்து எங்களிடம் சொன்னார்கள். அடுத்து இன்னொருவரின் வீட்டின் முன் நின்று பிரச்சாரம் செய்தோம். அது மிக ஏழ்மையான வீடு தான். ஆனால் நாங்கள் பிரச்சாரம் செய்யும் போது தான் தெரிந்தது அவர் தான் பணம் வழங்குபவர் என்று.
"ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க" என்று சொன்னதற்கு, "நாங்கள் தான் கொடுப்போம்" என்று சொன்னார். "அப்போ கொடுக்காதீங்க" என்று சொன்னோம். "நம்ம ஒரு பொறுப்புல இருந்தா அவங்க சொல்றத பண்ணி தான ஆகனும்" என்றார்.
ஒருவர் பல்லாயிரம் பேரிடம் இருந்து கொள்ளையடித்து பாவத்தை சேர்த்து வைத்துள்ளார். அதில் ஒரு பங்கை பிரித்து வழங்குகிறார். நீங்களும் அதில் ஒரு பங்காக உள்ளீர்கள். ஒரு பெரும் பாவத்தை நீங்களும் சுமக்க வேண்டியிருக்கும். இவ்வளவு நாள் நீங்கள் இதை உணராமல் கூட செய்திருக்கலாம். ஆனால் இன்று உங்களிடம் நாங்கள் இதை சொல்லிவிட்டோம். பாவம் செய்கிறோம் என்று உங்களுக்கு தெரிந்துவிட்டது. இனிமேல் உங்களால் நிம்மதியாக தூங்க முடியுமா? இனிமேல் இதை நீங்கள் செய்யாமல் இருந்தால் மட்டுமே நீங்கள் தூங்க முடியும் என்று சொன்னேன். சரி இவ்வளவு தூரம் நீங்கள் நடந்து வந்து சொல்கிறீர்கள். உங்களுக்காக இன்றில் இருந்து நான் இந்த வேலையை செய்ய மாட்டேன். வேறு யாராவதிடம் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிடுகிறேன் என்றார். மீண்டும் பழைய உத்வேகம் வந்துவிட்டது. பெரும் உள கிளர்ச்சி. இது அந்த நாளை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டது.
அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றவுடன் சிவராஜ் அண்ணா வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார். ஒருபோதும் குன்றாத சிரிப்புடன் இருப்பார். அவர் இணைந்ததில் இருந்து வெடிச்சிரிப்பு தான் எங்களை வழிநடத்தி சென்றது.
நண்பர் ஒருவர் எங்கள் வீட்டில் இருந்து காலை உணவு கொண்டு வருவதாக சொல்லி புளி சாதம் கட்டி கொண்டு வந்தார். பைப்பாஸ் ரோட்டில் எங்களை வெகுநேரம் தேடி ஒருவழியாக 12:15 மணி வாக்கில் கண்டிறிந்தார். உமையாள் அவர்கள் மதிய சோறு கொண்டு வருவதாக சொல்லியிருந்தார். அதை சாயங்கால சோறாக கொண்டு வரச் சொல்லிவிட்டோம். மோகன் தனிஷ்க் வந்து புகைப்படங்கள் எடுத்தார். சிவராஜ் அண்ணா பறந்து பறந்து பிரச்சாரம் செய்தார். நாங்கள் ஒரு வாரத்தில் தீர்த்த துண்டு பிரசுரங்களை ஒரு மணி நேரத்தில் தீர்த்திருப்பார். பழனி பாதசாரிகள், கடைக்காரர்கள் ஒருவரை விடவில்லை. அது கூட பரவாயில்லை பைப்பாஸில் எதிர் திசையில் செல்லும் வண்டிகளை கை காட்டி நிறுத்தி ஓடிச் சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து பேசினார். அவர் ஒரு மாபெரும் ஆளுமை.
அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, அவருடைய பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு செய்தியாக இருக்க வேண்டும் என்றார். அவருடைய இறப்பு காந்தியுடைய இறப்பு போல் இருக்க வேண்டும் என்றார். அவ்வளவு மனிதர்களை சம்பாதிக்க வேண்டும் என்றார். அவ்வளவு பேரை ஏற்கனவே சம்பாதித்து உள்ளார்.
நடந்து செல்லும் போது ஒரு இடத்தில் ஒரு பழைய கோவில் இருந்தது. அவர் பாட்டுக்கு சாலையை கடந்து அதற்குள் சென்றுவிட்டார். நாங்களும் சென்றோம். வெளியிருந்து பார்த்தால் ஏதோ சர்ச் போன்று தெரிந்தது ஆனால் அது சர்ச் அல்ல என்று நினைக்கிறேன். ஏதோ பழைய மடம் போல் இருந்தது. அங்கிருந்து மீண்டும் சாலையை கடந்து ஒரு கோவிலுக்குள் சென்றார். நாங்களும் சென்றோம். அங்கு ஒரு பூசாரி இருந்தார். அவரிடம் சிவராஜ் அண்ணா சென்று பேசினார். நாங்கள் தனியாக அமர்ந்து ஒருவரை மாற்றி ஒருவர் காலை அழுத்திக் கொண்டு இருந்தோம். அவரிடம் பேசி அவர் பெயர், அழைப்பு எண், முகவரி எல்லாம் சிவராஜ் அண்ணா வாங்கிக் கொண்டு இருந்தார்.
வெளியே வந்த பின் சொன்னார். அவர் வினோபாவுடன் நடந்தவராம். நேருவுடன் பழகியவர். 1949 இல் பிறந்துள்ளார். ஆனால், இளம் துறவி என்று அவரை அறிமுகம் செய்து கொண்டாராம். முன்னர் பார்த்த அந்த பழைய மடம் சுதந்திரத்திற்கு முன் கட்டியதாம். இவர் எங்கெங்கோ அழைந்து திரிந்துவிட்டு கடந்த ஏழு வருடமாகத் தான் இந்த கோவிலில் உள்ளாராம். சிவராஜ் அண்ணா கண்களுக்கு மட்டும் எப்படி இது போன்ற மனிதர்கள் தெரிகிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் யாருமே அவரை கண்டுகொள்ளவே இல்லை. சாதாரண சாமியாராகவே பார்த்தோம். ஆனால் இவர் கண்ணுக்கு மட்டும் எப்படியோ அது தெரிந்துள்ளது. அவரின் ஆன்மா அதை கண்டறிந்து விடுகிறது. அதைத் தான் அவர் வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கே தெரியாமல் கூட அவருடைய ஆன்மா அவ்வாறு மனிதர்களை தேடி அழைந்து கண்டுபிடித்து விடுகிறது. கைகளை கட்டி குறுகலாக எப்போதும் மாபெரும் பணிவுடன் இருப்பார். ஆனால் அவருடைய உள்ளம் ஆழியை போல் பெரியது. உளம் விரிந்து கனிந்து இருப்பார். மனிதர்களை சந்தித்து சந்தித்து துளி துளி ஜோதியாக சேர்த்து இன்று ஒரு பெரும் அக்னியை தன் உள்ளத்தில் சேர்த்து வைத்துள்ளார். அது எப்போதும் கொழுந்துவிட்டு எறிந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து சிறு கங்கை நான் எடுத்துக் கொள்கிறேன். அதை ஊதிப் பெருக்கிக் கொள்ள நினைக்கிறேன்.
அங்கிருந்து மீண்டும் நடந்து சென்றோம். இனிப்பு இட்லி கடை ஆயா, பெட்டிக் கடை ஆயா, சைக்கிள் ஓட்டும் சிறுவன் அனைவரிடமும் பணிவுடன் எங்கள் பிரச்சாரத்தை பற்றி சொன்னார். அவர் தான் பிரச்சாரம் செய்தார். நாங்கள் உடன் சென்றோம்.
பின்மதிய நேரத்தில் கோவிலா சமாதியா என்று தெரியாத ஒரு இடத்தில் ஓய்வெடுக்க அமர்ந்தோம். உமையாள், தேனப்பன் தம்பதியினர் சைவ பிரியாணி, உருளைக்கிழங்கு பொறியல், சர்க்கரைப் பொங்கல் என்று மீண்டும் விருந்துடன் வந்தனர். நெய் பிடிக்காத அனு, சௌமியாவிற்கு தனியாக நெய் சேர்க்காமல் பொங்கல். எங்கள் துணியை துவைக்கும் பணி இருந்ததால் பக்கத்து வீட்டு தோழி தான் எங்களுக்கு உணவு சமைத்து கொடுத்துள்ளார்.
அங்கிருந்து கொஞ்ச தூரம் உமையாள் எங்களுடன் நடந்து வந்தார். அவர்கள் இருவரும் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தவர்கள் தான். ஆனால் அவர்களை பார்த்தால் காதல் தழும்பிக் கொண்டிருக்கும். மாபெரும் சிரிப்பை எப்போதும் அவர்கள் முகங்கள் ஏந்தி நின்று கொண்டிருக்கும். உமையாளை நினைத்தால் அவர் சிரிப்பு மட்டுமே என்னுடைய கண்களில் தோன்றுகிறது. மகிழ்ச்சியான மனிதர்களை பார்க்கும் போதெல்லாம் நம்முள்ளும் மகிழ்ச்சி பெருகி ஓடுகிறது. அவர்களுடைய மகன் அருணாசலம். சௌமியாவிடம், "அவன் எங்களுக்கு எப்படியோ அதற்கு துளியும் குறைவில்லாமல் நீங்களும் எங்களுக்கு அப்படி தான்" என்று சொல்லியுள்ளனர். அவர்கள் இந்த பயணத்தில் எங்களுக்கு கிடைத்த ஒரு பெரும் கொடை.
மீண்டும் அங்கிருந்து பத்து கிலோமீட்டர் காந்தி கிராமத்திற்கு. இன்று தான் இதுவரை நடந்ததில் அதிக தூரம். 28 கிமீ. இன்று தான் மிகக்குறைவான ஓய்வும் கூட. வலிகள் பெரிதளவில் நீங்கி விட்டது. முதுகுப்பையும் உமையாள் பெற்று சென்றுவிட்டதால் நடப்பது எளிதாக இருந்தது. வழியில் ஒரு கடையில் இரண்டு பேர் எங்களை ஒருமாதிரி வினோதமாக பார்த்தனர். அவர்களிடம் நானும் அனுவும் சென்று இந்த நடைபயணம் குறித்து சொன்னோம். அவர்கள் பூரிப்படைந்து எங்களுக்கு எதையாவது ஒன்று கொடுத்தே ஆக வேண்டும் என்று நினைத்தனர். வேறு வழியில்லாமல் இரண்டு 10 ரூபாய் ஜூஸ் பாட்டில்களை வாங்கிக் கொண்டோம். அது எங்கள் இருவருக்குமே பிடிக்காத ஜூஸ். பிடித்திருந்தாலும் குடிக்க வயிற்றில் இடம் இல்லை. அவர்களின் அன்பிற்காக மட்டுமே பெற்றுக் கொண்டோம். அங்கிருந்து நேராக மோகன் தனிஷ்க் அவர்களின் வீட்டிற்கு சென்றோம். மஞ்சரி அக்காவும் வந்திருந்தார். மோகன் அவர்களின் குழந்தை நித்திலாயுடன் மஞ்சரி அக்கா விளையாடிக் கொண்டு இருந்தார். வாயை குவித்து வைத்து அழுத்தி விளையாடினார். அது என் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவுகூறச் செய்தது. மகிழ்வான தருணம் தான். அவர்களை அப்படி பார்ப்பது நெகிழ்ச்சியூட்டும் தருணமாக இருந்தது. உளம் சிரித்தது.
நாங்கள் வருகிறோம் என்று தெரிந்து கிருஷ்ணம்மாள் பாட்டி எங்களுக்காக தூங்காமல் ரொம்ப நேரம் காத்திருந்துள்ளார். தாமதமானதால் தூங்க சென்றுவிட்டார். சத்யா அக்கா எங்களை வரவேற்க ரோட்டிற்கு வந்து காத்திருந்துள்ளார். அறக்கல்வி மாணவி ஸ்ரீ வித்யா முன்னரே வந்திருந்தார். அங்கிருந்து சத்யா அக்கா காந்தி கிராமம் அழைத்துச் சென்றார். முதலில் காந்தி கிராமத்தை உருவாக்கிய இராமச்சந்திரன் அவர்களின் சமாதிக்கு சென்று வணங்கினோம். ஜனவரி 17, இன்று தான் அவரின் நினைவு தினம். அதன் பின் ஊழியரகம் சென்றோம். அங்கும் உமையாள், தேனப்பன் வந்துவிட்டனர். சென்றவுடன் கைகால் கழுவி விட்டு சாப்பிட்டோம். உமையாளும் உணவு கொண்டு வந்திருந்தார். அந்த இடத்திற்கு வந்ததுமே சொல்லத் தெரியாத உணர்வு. பெரிய பெரிய மனிதர்தள் வந்து தங்கிய இடம். பெரிய மனிதர்கள் சேர்ந்து கட்டிய இடம். பெரிய மனிதர்கள் மறைந்து சமாதியான இடம். அந்த மண் அத்தனை வரலாறையும், புனிதத்தையும் ஏந்தி இருக்கிறது. இன்னமும் அங்கு அப்படி ஒரு பெரும் சக்தி, உன்னத ஆத்மா உலாவிக் கொண்டு இருக்கிறது. அந்த மண்ணில், அந்த இடத்தில், அவர்கள் கட்டிய அறையில் நாங்கள் உறங்கப் போகிறோம். ஒவ்வொரு கல்லில் இருந்தும் அவர்கள் எங்களோடு உரையாடுவார்கள். இந்த தருணம் ஆசீர்வதிக்கப்பட்டது.
சிபி
படங்கள்: மோகன் தனிஷ்க்
மேலும்..
அன்பார்ந்த சிபி,
ReplyDeleteஉங்கள் நடைப்பயணம் குறித்து நீங்கள் எழுதும் தொடர் விறுவிறுப்பாகச் செல்கிறது. முகம் தெரியாதவர்களுடன் உரையாடி அவர்களை அறவழியில் செலுத்தும் உங்கள் குழுவினரின் முயற்சி உண்மையில் பாராட்டத் தக்கது.
இப்போது நீங்கள் முன்னெடுக்கும் நடைப்பயணம் காந்தியின் தண்டி யாத்திரையை நினைவுகூரச் செய்கிறது.
உங்களுக்கும், குழுவினருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
"சிவராஜ் அண்ணா"; திருமதி.உமையாள் ; திரு.தேனப்பன் எல்லோரும் முதுகெலும்பாய் ; கண்களாய் ; கால்களாய் இருக்க, 400 சற்றே இலகுவாகும் பிள்ளைகளே.
ReplyDeleteமனதின் பரப்பளவாய் வளர்க.