450 கிமீ நடைபயணம் - 6

இன்று 4:30 மணிக்கே அனைவரும் எழுந்து கிளம்பத் தொடங்கினாலும் நாங்கள் தங்கிய மகாலில் ஒரேயொரு கழிவறையே இருந்ததால் நடக்கத் தொடங்க 6:50 மணி ஆகிவிட்டது. அம்மா காலை 6:30 மணிக்கு கிளம்பி திண்டுக்கல் சென்றார். காலை 9 மணிக்குள் ஐந்தாறு கிலோமீட்டர்கள் தான் நடந்திருந்தோம். நல்லோர் வட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் சிவலீலா ஜோதி என்பவர் எங்களை பார்க்க வந்தார். நானும் தீபியும் முன்னால் சென்று கொண்டிருந்தோம். அவர் வந்தவுடன் வண்டியை நிறுத்திவிட்டு தீபியை அணைத்து முத்தமிட்டார். பெரும் களிப்பில் எங்களை காண வந்திருந்தார். அவருடைய கணவர், நண்பர் ஆகியோரையும் அழைத்து வந்திருந்தார். 
அவருடைய வண்டியை எடுத்து வரும்படி நண்பரிடம் சொல்லிவிட்டு எங்களுடன் நடக்கத் தொடங்கிவிட்டார். ஒவ்வொருவரை பற்றியும் விசாரித்துக் கொண்டு வந்தார். கொஞ்ச நேரம் நடந்த பின் எங்களை முன்னால் அம்மன் மெஸ் என்கிற கடைக்கு வரும்படி சொல்லிவிட்டு அவர் மீண்டும் வண்டியில் சென்றுவிட்டார். 
ஒரு அரைக் கிலோமீட்டர் நடந்தவுடன் நல்லோர் வட்டத்தை சேர்ந்த காந்திமதி என்பவர் எங்களை பார்க்க வந்தார். எங்களுடன் நடக்க வேண்டும் என்று அவர் வந்த ஸ்கூட்டியை தள்ளிக் கொண்டே எங்களுடன் நடந்து வந்தார். ஆண்டலங்கூர் கேட் என்னும் இடத்தில் எங்களுக்கு நல்லோர் வட்டத்தை சேர்ந்த நண்பர்கள் காலை உணவு ஏற்பாடு செய்திருந்தனர். சிவலீலாவதி அவர்களுடைய கணவர் தான் எங்களுக்கு அங்கு பரிமாறினார். இந்த பயணத்தில் இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 
அங்கு சாப்பிட்டு முடித்து கிளம்பும் போது காந்திமதி அவர்கள் ஆயிரம் ரூபாயை கொடுத்து எங்களை வைத்துக் கொள்ளும்படி சொன்னார். நாங்கள் வேண்டாம் என்று பலமுறை சொல்லியும் கேட்காமல் கடையில் 500 ரூபாயை என்னுடைய கையில் திணித்து விட்டார். நான் வெளியே வந்தபின்னர் மீண்டும் இன்னொரு 500 ரூபாயை அனுஸ்ரீ கையில் திணிக்க பார்த்தார். அவள் பெற மறுத்து சொல்லிவிட்டாள். 
அந்தக் கடையில் இருந்து ஒரு 100 மீட்டர் நடந்து வந்த உடன் ஒருவர் வண்டியில் வந்து எங்களை மறித்து பேசினார். அவர் நியூஸ் தமிழ் செய்தியாளர் என்றும் எங்களை பேட்டி எடுக்க வேண்டும் என்றும் சொன்னார். அனு, கௌதம், நான் மூவரும் பேசினோம். கொஞ்ச தூரம் நடக்க வைத்து காணொளி பதிவு செய்தார். கைரேகை துணியையும் படம் பிடித்துக் கொண்டார். 
இதற்கு முன் இது போல் பத்து முறை பதிவு செய்து ஒரு முறை கூட பெரிதாக காணொளி செய்தி வந்தது இல்லை. இந்த முறை வருமா என்று கேட்டேன். கட்டாயம் வரவைப்பதாக சொன்னார். அவரிடம் விடைபெற்று கொஞ்ச தூரம் சென்றவுடன் இன்னொரு செய்தியாளர் இவர் சொல்லி வந்திருந்தார். ஏற்கனவே எடுத்த காணொளிகள் போதவில்லை என்று மீண்டும் வந்து இவர் சிலவற்றை எடுத்தார். இறுதியாக அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் போடுவதற்கு ஒரு காணொளி எடுத்துக் கொண்டார். 
கொஞ்ச தூரத்தில் ராசிபுரம் நகரத்திற்கும் வந்துவிட்டோம். அனைவரும் கடும் களைப்படைந்து விட்டதால் பெரிதாக அங்கு எதுவும் பிரச்சாரம் செய்யாமல் ஒரு சிலரிடம் மட்டும் பேசினோம். சேந்தமங்கலம் பிரிவில் ஒரு முருகன் கோவில் இருக்கும் அங்கு ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று வழியில் பார்த்த சிலர் சொல்லியிருந்தனர். ராசிபுரம் தாண்டிய உடன் சேலம் வெண்முரசு வாசகர் வட்ட நண்பர் பிரேமலதா தன்னுடைய மகனுடன் வந்து எங்களுடன் இணைந்து சில கிலோமீட்டர்கள் நடந்தார். சேந்தமங்கலம் பிரிவு வந்தும் அந்த முருகன் கோவிலை கண்டுபிடிக்க முடியவில்லை. அது வேறு திசையில் ஒரு கிலோமீட்டர் நடந்தால் வரும் என்று சொன்னார்கள். ஆகவே மீண்டும் நாமகிரிப்பேட்டை நோக்கி நடந்து சென்று ஒரு சமூதாயக் கூடத்தில் அனுமதி கேட்டு அங்கு ஓய்வெடுத்தோம். பிரேமலதா எங்களுக்கு இரவுணவு தயார் செய்வதற்காக கிளம்பிவிட்டார். 
இந்த பயணம் தொடங்கியதில் இருந்து மதியம் பெரிதாக நான் தூங்கவில்லை. ஆனால் இன்று தாள முடியாத தூக்கம் வந்து அழுத்தியது. சுமார் ஒன்றரை மணிநேரம் ஆழ்ந்து தூங்கினேன். நான் எழுந்து கொள்ளும் போது உமையாள் தேனப்பன் ஆகியோர் எங்களை பார்ப்பதற்காக மதுரையில் இருந்து வந்திருந்தனர். மதிய உணவும் அவர்கள் தான் வாங்கி வந்திருந்தனர். யாராவது ஒருவர் உதவி வேண்டுமா என்று கேட்டால் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லி வந்தவர்கள் உமையாள் அவர்களிடம் பல்வேறு பொருட்களை வாங்கி வரும்படி பட்டியல் அனுப்பி வாங்கி வரச் செய்தனர். மதிய ஓய்வின் போது விஷ்ணுபுரம் நண்பர் கிருஷ்ணா வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். மதிய ஓய்விற்கு பின் மாலை சுமார் 5 மணி வாக்கில் தான் நடக்கத் தொடங்கினோம். உமையாளும் கொஞ்ச தூரம் எங்களுடன் நடந்து வந்தார். 
சென்ற நடைபயணம் முடிந்து ஓராண்டு முடிந்து இந்த நடைபயணம் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் மனதில் இந்த இடைப்பட்ட ஒரு வருடம் மறைந்து அந்த பயணத்தின் தொடர்ச்சியாக செல்வதாகவே தோன்றுகிறது. அனைத்தும் ஒன்றென, ஒரு பயணம் என உணர்கிறேன். அதனாலேயே பல்வேறு உளச்சிக்கல்களையும் எதிர்கொள்கிறேன். சென்ற பயணத்தில் முதல் 15 நாட்கள் நாங்கள் அனைவரும் மிக நெருக்கமாக பல்வேறு கேலிகளையும் கிண்டல்களையும் செய்து ஒரு களிப்பில் திளைத்துக் கொண்டு இருந்தோம். கடைசி ஐந்து நாட்கள் முன்பு நான் விளையாட்டாக சொன்ன வார்த்தையாலும், பயணக்கட்டுரைகளில் நடந்ததை அப்படியே எழுதியதாலும், சீண்டும் படியான கேலிகளை எழுதியதாலும், என்னுடைய உள்ளார்ந்த எண்ணங்களை உணர்வுகளை எழுதியதாலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டேன். சிலரை இது மிகவும் காயப்படுத்தியது. கிட்டத்தட்ட நட்பே முறியும் அளவிற்கு சென்று மீண்டது. 
அதனால் இம்முறை இந்த பயணத்தில் என்னை அறியாமலே இவை அனைத்தையும் தவிர்த்து வந்துள்ளேன். சிலவற்றை மிக கவனமாகவும் தவிர்த்து உள்ளேன். ஒவ்வொரு வார்த்தையை சொல்லும் போதும் கவனமாக உள்ளேன். சென்ற முறை எனக்கு ஏதேனும் சங்கடம் இருந்தால், மற்றவர்கள் செய்வது பிடிக்காமல் இருந்தால், கோவம் ஏற்பட்டால் அவ்வப்போது வெளிபடுத்தினேன். இந்த முறை அப்படி பல்வேறு முறை கடும் கோவம் ஏற்பட்டும் எந்த வார்த்தையையும் சொல்லிவிடக் கூடாது என்று அந்த இடத்தில் இருந்து அகன்று விடுகிறேன். அல்லது உள்ளேயே அவற்றை அழுத்தி வைத்துக் கொள்கிறேன். இது ஒரு கட்டத்தில் மனதை பித்து நிலைக்கு எடுத்து செல்கிறது. அனைவரிடமும் ஒரு விலக்கம் உருவாகிறது. யாருமற்றவன் என்று தோன்று வைக்கிறது. தனியனாக உணர்கிறேன். 
ஒரு வருடத்திற்கு முன்னர் மிக உரிமையுடன் இருந்தவரிடம் அளவுடன் இருக்க வேண்டிய சூழல். ஒரு வருடத்திற்கு முன்னர் எல்லாவற்றையும் பகிரும் மிக நெருங்கிய நண்பராக பல மணி நேரங்கள் பேசிக் கொண்டு இருந்தவர் கொஞ்ச நாள் பேசாமல் இருந்ததில் உறவு தேய்ந்து இன்று யாரோ போல் பேசிக்கொள்ளும் நிலை. இந்த தயக்கங்கள் எல்லாம் சேர்த்தும் மாபெரும் தனிமைக்கு தள்ளியது. யாராவது விளையாட்டுக்காக

 "நீங்களெல்லாம் பெரிய ஆளு எங்க கிட்டலாம் சொல்லுவீங்களா?"

"சாரிங்க நான் பண்ணது தப்பு தாங்க மன்னிச்சுருங்க" 

என்று சொல்வதே என்னை ஒரு பெரும் மந்தைக்கு வெளியே நிற்கும் செம்மறி ஆடாக உணர வைக்கிறது. இது சாதாரணமாக விளையாட்டிற்கு சொல்வது, இதில் ஒரு பொருளும் இல்லை என்று மிக நன்றாக எனக்கு தெரியும். ஆனால் இந்த உணர்வு நிலையை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. 
உமையாள் தேனப்பனுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்தவுடன் இந்த தனிமை சூழ்ந்து நான் தனியாக முன்னர் நடக்கத் தொடங்கிவிட்டேன். என்ன ஆயிற்று என்று ஒன்றிரண்டு பேர் கேட்டாலும் என்னால் எதுவும் பேச முடியவில்லை. நேரே சென்று கொண்டே இருந்தேன். ஒரு ஊரைக் கடக்கும் போது பொங்கல் பண்டிகைக்கு ஒலிப்பெருக்கியில் பாடல் இரைந்து கொண்டிருந்தது. அந்த சத்தம் என்னை பித்தாக்குவது போல் உணர்ந்தேன். உடனடியாக ஏதேதோ எண்ணங்கள் என்னை ஆட்கொண்டது. கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை ஓங்கி சாலையில் வீசி எறிந்து உடைக்க வேண்டும் போல் இருந்தது. தொண்டை கிழிய "ஆ.." வென்று கத்தத் தோன்றியது. கல்லை எடுத்து அங்கிருந்த குழாய் ஒலிப்பெருக்கி மேல் எறிந்து உடைக்க வேண்டும் போல் இருந்தது. ஏன் எனக்குள் இத்தனை வன்முறை பீறிட்டு எழுந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை. மேலே சொன்னவை தான் காரணம் என்று நினைக்கிறேன். கையில் இருந்த தண்ணீர் புட்டியை கசக்கி பிழந்து கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தேன். 
அடுத்த கணம் ஏதேனும் செய்துவிடுவேனோ என்ற அச்சம் உடலை நடுங்க வைத்தது. இந்த பக்க சாலையில் இருந்து எதிர் சாலைக்கு பாட்டிலை தூக்கி எறிய தோன்றி கையை உயர்த்திய பின் திடீரென வண்டி வருவதை கற்பனை செய்து கையை கீழே இறக்கிக் கொண்டேன். உள்ளே அழுத்தி வைக்கும் எண்ணங்கள் எல்லாம் திடீரென வெடித்து சிதறி யாரையேனும் பெரிய அளவில் காயப்படுத்தி விடுமோ என்ற அச்சம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது யோசித்துப் பார்த்தால் இந்த கட்டுரையை தவிர அனைத்து கட்டுரைகளிலும் புறக்காட்சி, வெளியே நடந்த சம்பவங்களை மட்டுமே எழுதியுள்ளேன். உடன் நடப்பவர்களை பற்றி கூட பெரிதாக எழுதவில்லை. ஆனால் இது திட்டமிடப் படவில்லை. ஏனோ எனக்கு தெரியாமலே அவ்வாறு எழுதிவிட்டேன் என்று தோன்றுகிறது. 
ஒரு பேக்கரியில் டீ குடிக்க ஒதுங்கினோம். அப்போதும் நான் தனியாகவே அமர்ந்திருந்தேன். அனு தான் வந்து என்னிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள். அவளிடம் பேசிய பிறகே மீண்டும் பழைய மனநிலைக்கு திரும்பினேன். அடிக்கடி இது போல் பெரும் உச்சங்களுக்கும் வீழ்ச்சிகளுக்கும் சென்று மீள்கிறேன். 

அதன்பிறகு நானும் அனுவும் தான் ஒன்றாக நடந்தோம். என்னுடைய இந்த மனநிலை குறித்து யாரிடமாவது பேச வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே தோன்றி பல்வேறு தயக்கங்களால் பேசாமல் இருந்தேன். இன்று ஏனோ ஒரு உந்துதலில் அருவியும் இவற்றை எல்லாம் சொன்னேன். பல்வேறு எண்ணங்களை அழுத்தி வைக்க வேண்டாம் கோபம் வந்தால் வெளிப்படுத்திவிடு என்றாள். மையமாக தலையாட்டி வைத்தேன். 
நாங்கள் நாமகிரிப்பேட்டையை நெருங்கும் போது இரண்டு சிபிசிஐடி போலிஸ் வந்து எங்களிடம் பேசினார்கள். எங்களை குறித்த தகவல்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்கள். அவர்களுடைய எல்லை முடியும் வரை எந்த உதவி வேண்டுமானாலும் கேட்க சொன்னார்கள். அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் இரவு தங்குமிடத்தை சென்று சேர்ந்தோம். அந்த போலிஸ் அங்கும் வந்து இன்னும் கூடுதல் தகவல்களை பெற்றுக் கொண்டு சென்னை வரை அனைத்து போலிஸ் சிபிசிஐடி களுக்கும் அனுப்பி எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக சொன்னார். 
இரவு 9:30 மணிக்கு பிரேமலதா செய்து கொடுத்த இரவுணவை பிரகாஷ் எடுத்து வந்து அளித்தார். நாங்கள் தங்குமிடம் வரும் வரை கிருஷ்ணா உடன் வந்துவிட்டு திரும்ப காலை வருவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். ஒவ்வொரு நாளும் எங்களுக்கான ஆதரவு கூடிக்கொண்டே செல்வதாக உணர்ந்தேன். தங்குமிடம் சற்று சிரமத்திற்குரியதாகவே இருந்தது. மீண்டும் ஒரு நீண்ட நாள். 

மேலும்..

சிபி

(எங்கள் பயணம் குறித்தோ அல்லது ஏதேனும் தகவல் தேவைப்பட்டோ எங்களுக்கு அழைக்க விரும்பினால் கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். 

கௌதம்: 63748 79199
அனு: 9025165842
சௌமியா: 99657 04414
அர்ச்சனா: 96007 05171
லைலா பானு: 98944 64092)

Comments

  1. உடன் பயணித்த அனுபவம்
    நல்ல நோக்கம் இந்த சிறு வயதிலிருந்தே

    ReplyDelete
  2. "ஒரு வருடத்திற்கு முன்னர் மிக உரிமையுடன் இருந்தவரிடம் அளவுடன் இருக்க வேண்டிய சூழல். ஒரு வருடத்திற்கு முன்னர் எல்லாவற்றையும் பகிரும் மிக நெருங்கிய நண்பராக பல மணி நேரங்கள் பேசிக் கொண்டு இருந்தவர் கொஞ்ச நாள் பேசாமல் இருந்ததில் உறவு தேய்ந்து இன்று யாரோ போல் பேசிக்கொள்ளும் நிலை. இந்த தயக்கங்கள் எல்லாம் சேர்த்தும் மாபெரும் தனிமைக்கு தள்ளியது."

    இந்த மன நிலை அனைவருக்கும் சில நேரங்களில் நடக்கத்தான் செய்கிறது. நாம் நம்மை பற்றி அனைத்தும் அறிந்ததாக நினைக்கும் சிலர், சில நேரங்களில் எதோ சில காரணங்களினால் நம்மிடம் இருந்து வெகு தொலைவு சென்று நம்மை வேறு ஒருவராக நடத்துவது போல் நமக்கு தெரியும். தனிமை கூட சில நேரங்களில் சிறந்ததே. தோழமையும், தனிமையும் அனைத்தும் கடந்து போகும். அனைத்தையும் கடந்து செல்வோம்.

    ReplyDelete
  3. மிக சிறந்த எழுத்து. நடைபயணம் உடல் வலிமையை மட்டுமல்ல, உங்கள் அக வலிமயையும் நட்பையும் பரிசோதிக்கரித்து.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

450 கிமீ நடைபயணம் - 2

450 கிமீ நடைபயணம் - 1