450 கிமீ நடைபயணம் - 9
கடும் குளிர். காலை எழுவதற்கு மிகுந்த சிரமத்துடன் ஒருவழியாக எழுந்தோம். வனத்திற்கு அருகில் இருப்பதால் இந்த குளிர் இருக்கலாம். எழுந்து தயாராகி சிட்டிலிங் நோக்கி நடக்கத் தொடங்கினோம். இன்று மதிய உணவும் ஓய்வும் இல்லை என்பதால் காலை தும்பலில் சாப்பிட்டுவிட்டு தேவையான திண்பண்டங்களை எடுத்துக் கொண்டு நடந்தோம். வனத்தை விரைவாக கடக்க வேண்டும் என்று தும்பலில் குறைவாகவே பிரச்சாரம் செய்தோம். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட இங்கு ஆதரவு அதிகமாகவே இருந்தது. மலை அருகில் உள்ள கிராமம் என்பதால் இங்கு வாக்குக்கு பணம் பெற கூடாது என்று சொன்னால் எதிர்ப்பு அதிகமாக இருக்கும் என்று நினைத்தேன். கொஞ்ச நேரத்தில் வனப்பகுதிக்குள் நுழைந்து விட்டோம். இரண்டு புறமும் மரங்கள். இரண்டு எல்லைகளிலும் மலைகள். விட்டு விட்டு கிடக்கும் நிழல்களின் ஊடாக நடந்து சென்றோம். சாலை ஓரங்களில் இருக்கும் வரண்ட சேற்று மண்களில் காட்டெருமைகளின் குளம்படி அச்சுகள் இருந்தன. அதைக்காட்டி அர்ச்சனாவையும் லைலா பானுவையும் பயமுறுத்திக் கொண்டு நடந்து சென்றோம். குடை போல் மூங்கில் சூழ்ந்து நின்று கொண்டிருந்தது. ஒரு பிரிவின் அருக...