விருதாளர் சுபா நேர்காணல்

சுபா  2017 ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக பதிவி ஏற்று எட்டு வருடங்களில் இது வரை நான்கு கிராமங்களில் பணி செய்து உள்ளார். தற்போது அத்தானி அருகில் அம்மாபாளையம் என்னும் கிராமத்தில் பணி செய்கிறார். கோபி அருகில் இவருடைய வீடு உள்ளது. இவர் வீட்டில் இவரும், இவருடைய கணவர் இருவரும் வருமானம் ஈட்டக் கூடிய நபராக உள்ளனர். இவருடன் இவரின் பாட்டி, அம்மா, அக்கா ஆகியோர் உள்ளனர். அக்காவும் வேலைக்கு செல்கிறார். கணவர் கடல் சார்ந்த பணியில் இருப்பதால் பெரும்பாலும் வெளியூரில் தான் இருப்பார். இவர் பாரதிதாசன் கல்லூரியில் இளங்கலை படிப்பு முடித்துள்ளார். பணியில் சேர்ந்து எட்டு வருடங்களில் ஒரு முறை கூட லஞ்சம் பெறாமல் நேர்மையாக பணி செய்து வருகிறார். அவர் எந்த தருணத்தில் நேர்மையாக இருப்பது என்று முடிவு எடுத்தார், அதில் அவர் கண்ட சிக்கல்கள் என்ன, அவருடைய முன்னுதாரணம் யார் யார் என்பது குறித்து இந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

 

அம்மாபாளையம் VAO, சுபா அவர்களை சந்தித்த போது 

1.    1. நேர்மையாக இருப்பவர்களின் பெரும் அகத் தடை என்பது என்ன?அகத்தடை என்று எதுவும் இல்லை. நாம் ஒரு முடிவு எடுத்த பின் அதில் இருந்து பிறழாமல் இருக்க முடியும் என்று தான் நம்புகிறேன்.

2.    2. நேர்மையாக இருப்பவர்களின் பெரும் புறத் தடை என்பது என்ன

     பணி சூழலில் பணியாளர்களுடன் ஏதேனும் கலந்துரையாடல் இருந்தால் புறக்கணிக்கப்படுவோம். நேர்மையாக இருப்பதால் ஒரு சில பொதுமக்கள் எங்களை அணுகவோ ஆலோசனை கேட்டகவோ தயங்குவார்கள். இதைத் தவிர வேறு புறத்தடை இல்லை.

3.    3. நேர்மையாளர்கள் குடும்பத்தில், உறவினர்கள் மத்தியில் பெறும் மதிப்பு அல்லது அவமதிப்பு

என்னுடைய அப்பாவும் அரசு பணியில் இருந்து நேர்மையாக பணி செய்தார். அவர் பணியில் இருக்கும் போது இறந்ததால் தான் எனக்கு இந்த வேலை கிடைத்தது. அதனால் குடும்பத்தில் நான் நேர்மையாக இருப்பதை மதிக்கத்தான் செய்கிறார்கள். என்னை போல் அடுத்து புதிதாக வரும் இளைஞர்களும் லஞ்சம் வாங்காமல் இருப்பதற்கு நான் ஒரு முன்னுதாரணமாக இருப்பேன் என்று ஊக்குவிக்கிறார்கள். என்னுடைய கணவர் அவ்வப்போது விளையாட்டாக நான் அவருக்கு தெரியாமல் மறைமுகமாக லஞ்சம் வாங்குவதாக சொல்லி பேசுவார். நான் உண்மையிலேயே லஞ்சம் வாங்குவதில்லையா என்ற சந்தேகம் அவருக்கு இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. மற்றபடி அவமதிப்பு ஒன்றும் எதிர்கொண்டது இல்லை.

      4.  நேர்மையாளர்கள் பொதுமக்கள் மத்தியில் பெறும் மதிப்பு அல்லது அவமதிப்பு 

பெரும்பாலும் மதிக்கத்தான் செய்கிறார்கள். நேர்மையாக இருப்பதால் மக்கள் விரும்பி தான் வருகிறார்கள். ஒரு சிலர் மட்டும் நாங்கள் பணம் வாங்க மாட்டோம் என்று சொல்லும் போது குறைவாக இருப்பதால் தான் வாங்க மறுக்கிறோம் அதிகமாக கொடுத்தால் வாங்குவோம் என்று நினைத்து விடுகிறார்கள். அவர்களுக்கான செயல் நிறைவேறாத போது பிறரிடம் நம்மை பற்றி சொல்வது நடக்கிறது. ஆனால் நேரடியான அவமதிப்பு இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

     5.  உங்களுக்கு கடும் பண நெருக்கடி சூழல் இருந்து அப்போதும் லஞ்சம் வேண்டாம் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளதா? அதை எப்படி கையாண்டீர்கள்?

அவ்வாறான சூழல் வரும் சமயங்களில் நண்பர்களிடம் கடன் வாங்குவது, அலுவலகத்தில் கடன் பெறுவது போன்றவற்றை மேற்கொள்வோம். எந்த சூழலிலும் லஞ்சம் பெறக் கூடாது என்பதில் தீர்க்கமாக உள்ளேன். நெருக்கடியான சூழல் எப்போது வேண்டுமானால் வரலாம். அதை வேறுவழியில் தான் கடக்க வேண்டும். ஒருமுறை லஞ்சம் பெற்று விட்டால் அதை நிறுத்துவது கடினம்.

      6.  நேர்மையாளர்கள் சக ஊழியர்கள் மத்தியில் பெறும் மதிப்பு அல்லது அவமதிப்பு

சக ஊழியர்களிடம் இருந்தும் அவமதிப்பு வந்ததில்லை. முதலில் அவர்களால் நம்ப இயலவில்லை. உண்மையிலேயே நீ வாங்குவது இல்லையா? அவர்கள் கொடுத்தாலும் வாங்குவது இல்லையா என்று சந்தேகத்துடன் தான் கேட்பார்கள். பின்னர் அதில் தெளிவடைந்ததும் உன்னுடைய அலுவலக தேவைகளுக்காவது வாங்கிக் கொள்ளலாமே என்று ]சொல்வார்கள். அதன் பிறகு இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்க போகிறாய் என்று தான் பார்க்கிறோம் என்று சொல்வார்கள். அவர்களால் முடியாத ஒன்றை நாங்கள் செய்வதாக தான் நினைப்பார்கள். மற்றபடி அவமதிப்பு ஒன்றும் இல்லை.  


      7. உயர் அதிகாரிகளால் வரும் அழுத்தம் அதைக் கையாளுதல்

மேலதிகாரிகளுக்கு எங்களை பற்றி தெரியும், அதனால் ஏதாவது பணி இருந்தால் இதை பாருங்கள் உங்களால் செய்ய இயலுமா இயலாதா என்று மட்டும் சொல்லுங்கள் என்று தான் கேட்பார்கள். மற்றபடி இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும் என்று மேல் இடத்தில் இருந்து ஒரு முறை கூட அழுத்தமோ கட்டாயப்படுத்தியதோ இல்லை.  

      8. இப்படி இருப்பது என எப்போது முடிவெடுத்தீர்கள்

பணியில் சேரும் முன்பே முடிவெடுத்து விட்டேன். என்னுடைய உறவினர்கள் நிறைய பேர் ஆவணங்கள் வாங்க சென்று பணம் தராததால் வேண்டுமென்றே அவர்களை அலையவிடுவதை கேள்விப்பட்டுள்ளேன். அது போல இன்னொருவர் அலையக் கூடாது என்பதற்காக பணம் பெறக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

     9. உங்களைப் போல பதவியில் உள்ள ஆனால் நேர்மையற்ற இன்னொருவரிடம் இதுபோன்ற பேட்டி எடுத்தால் என்ன நியாயம் சொல்லுவார்கள்?

குடும்ப சூழ்நிலையை சொல்லலாம். பெரும்பாலும் அலுவலகத்திற்கு நம்முடைய கையில் இருந்து செலவு செய்ய வேண்டி இருக்கும். உதாரணமாக ஒரு அனாதை பிணம் இருந்தால் நாங்களும் காவல் துறையும் சேர்ந்து பணம் போட்டு தான் அடக்கம் செய்ய வேண்டும். இது இல்லாமல் அலுவலகத்திற்கு ஜெராக்ஸ் எடுப்பது, வெளியில் செல்வது போன்று மாதம் குறைந்தது 1000 ரூபாய் கையில் இருந்து செலவு செய்ய வேண்டும், அதைக் கூட அவர்கள் காரணமாக சொல்லலாம்.

     10. ஒருவர் நேர்மையற்ற ஊழியராக இருந்து நேர்மையாளராக மாறுவதும், நேர்மையாளராக இருந்து பின்னர் நேர்மையற்றவராக மாறுவதும் எப்படி நடக்கிறது, உதாரணம் தர முடியுமா?

லஞ்சம் வாங்கிக் கொண்டு இருந்தவருக்கு அதனால் ஏதாவது பிரச்சனை வந்திருக்கலாம் அல்லது மனம் திருந்தி வாங்காமல் இருக்கலாம் இந்த இரண்டு காரணம் தவிர வாங்கிக்கொண்டு இருந்தவர் நிறுத்த வாய்ப்பில்லை. ஆனால் அப்படி நிறுத்திய ஒருவரை நான் இதுவரை கேள்விப்பட்டது இல்லை. வாங்காமல் இருந்து வாங்கியவர்களை கேள்விப்பட்டு உள்ளேன். அதற்கு காரணமாக அவர்கள் சொல்லுவது குடும்ப சூழல் தான். அப்படி எனக்கு முன்பு பணியில் சேர்ந்து நான் பணியாற்றிய ஊரில் பணியாற்றிய ஒரு VAO அவ்வாறு முதலில் வாங்காமல் இருந்து பின்னர் வாங்கியதாக அந்த ஊர் மக்கள் சொல்லி கேட்டுள்ளேன்.

      11. அரசூழியர் அமைப்புகள் நேர்மையற்றவர்களை எவ்வாறு அணுகுகிறது?

சாதாரணமாக தினசரி பார்க்கும் போது பெரிய வேறுபாடுகளை காட்டுவது இல்லை. ஆனால் ஏதேனும் பிரச்சனையோ சிக்கலோ ஏற்படும் நேரங்களில் லஞ்சம் வாங்கக் கூடியவர்களுக்கு உதவ மிகவும் தயங்குவார்கள். அவர்களுக்கு சிக்கல் வந்துவிடுமோ என்று யோசிப்பார்கள். இதே லஞ்சம் வாங்காதவராக இருந்தால் பெரிதாக யோசிக்காமல் இவர் செய்தால் சரியாக தான் இருக்கும் என்று உடனடியாக உதவுவார்கள்.

      12. நீங்கள் இவ்வாறு முடிவெடுக்க காரணமான சம்பவம், தருணம்

நேரடியான தருணம் அப்படி ஒன்றும் இல்லை. ஆனால் சிலர் இறப்பு சான்றிதலுக்கு கூட லஞ்சம் பெறுகிறார்கள். இறந்து போன நபரின் பேரை சொல்லி கூட லஞ்சம் பெறுவது ஏற்றுக் கொள்வதாக இல்லை. ஒருவர் என்னிடம் ஒருமுறை இதற்கு முன் இதற்காக கொடுத்து உள்ளோம் நீங்களும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தார். முன்பே வாங்கக் கூடாது என்று முடிவு எடுத்து இருந்தாலும் இன்னும் தீவிரமாக அந்த நிலையில் நிற்பதற்கு அந்த தருணம் காரணமாக இருந்தது என்று சொல்லலாம்.

      13. உங்கள் முன்னோடி அல்லது முன்னுதாரணம் என கருதும் நபர்கள்

பணியில் சேர்வதற்கு முன்பு என்னுடைய அப்பா முன்னுதாரணமாக இருந்தார். அவரும் லஞ்சம் வாங்காத அரசூழியர். இப்போது என்னை நானே முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கிறேன். இதே நிலையில் இறுதி வரை நின்று விட வேண்டும் என்று நினைக்கிறேன்.


      14. முதல் முறை லஞ்சம் வேண்டாம் என்று சொல்லும் போது உங்கள் உளநிலை எவ்வாறு இருந்தது?

முதல் முறை மக்களை சமாளிப்பது தான் கடினமாக இருந்தது. தெரியாத ஒருவரிடம் சொல்லி புரியவைத்து வாங்காமல் இருப்பது கொஞ்சம் சிரமமான ஒன்றாக இருந்தது. அவ்வாறு சொல்லி வாங்காமல் இருந்த போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. மக்கள் நம்மை வேறு விதமாக பார்ப்பது ஒரு வித ஆனந்தத்தை அளித்தது.

      15. நேர்மையாக இருப்பதால் நீங்கள் அடைந்தது என்ன? 

தன்னிறைவாகவும், கர்வமாகவும் உள்ளது. தேவையான நேரங்களில் மற்றவர்களிடம் இருந்து எளிதில் உதவி கிடைத்து விடுகிறது.

      16. கையூட்டு கொடுக்காமல் ஒருவரால் இருக்க இயலுமா ? நீங்கள் கையூட்டு கொடுக்க வேண்டிய தருணம் வந்ததா ? என்ன செய்தீர்கள் ? 

கையூட்டு கொடுக்காமல் ஒருவரால் இருக்க முடியும் என்று தான் சொல்வேன். எனக்கு கையூட்டு கொடுக்க வேண்டிய நிலை இதுவரை வந்தது இல்லை. சிறுவயதில் இருந்து எதுவாக இருந்தாலும் அப்பாவே செய்து கொடுத்து விடுவார். தனியாக சென்று ஒன்றிற்காக நான் நின்றதில்லை. அதனால் அப்படி ஒரு தருணம் எனக்கு ஏற்பட்டது இல்லை.

      17.    லஞ்சம் பெறக் கூடிய அதிகாரிகளுக்கு சில நேரங்களில் மரியாதை கிடைக்கும் போது உங்கள் உளநிலை எவ்வாறு இருக்கும்?

அவர்களுக்கு கிடைக்aகும் சில சலுகைகள் எங்களுக்கு கிடைக்காத போது கொஞ்சம் கசப்பாக இருக்கும். உதாரணமாக அவர்களுக்கு விடுப்பு எளிதில் கிடைக்கும் எங்களுக்கு விடுப்பு வழங்க மறுப்பார்கள், அப்போது சில வாக்குவாதங்கள் எல்லாம் நடக்கும். அதன் பிறகு எங்களுக்குள் நாங்கள் மாறி மாறி பணியை பகிர்ந்து செய்து கொள்வோம். 


பேட்டி கண்டவர்: சிபி, முனை இளைஞர் இயக்கம்.

Popular posts from this blog

400 கி.மீ நடைபயணம்

அறப்போர் ஜெயராம் நேர்காணல்

ஏழாம் நாள்