விருதாளர் ஸ்ரீதரன் நேர்காணல்
ஸ்ரீதரன் 2017 ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக பதிவி ஏற்று எட்டு வருடங்களில் இது வரை மூன்று கிராமங்களில் பணி செய்து உள்ளார். இந்த எட்டு ஆண்டுகளுமே லஞ்சம் வாங்கமால் நேர்மையாக பணி செய்து உள்ளார். தற்போது அத்தானி அருகில் சவண்டப்பூர் என்னும் கிராமத்தில் பணி செய்கிறார். இவர் பாரதிதாசன் கல்லூரியில் இளங்கலை படிப்பு முடித்துள்ளார். இப்போது கவந்தப்பாடி அருகில் உள்ள இவருடைய வீட்டில் இவர், இவருடைய மனைவி, தாய், தங்கை ஆகியோர் ஒன்றாக உள்ளனர். இவர் வீட்டில் இவரும், இவருடைய மனைவி இருவரும் வருமானம் ஈட்டுகின்றனர். இவர் நேர்மையாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்த தருணம், அதில் அவர் கண்ட சிக்கல்கள், அதன் மூலம் அவருக்கு கிடைத்த மதிப்பு ஆகியவற்றை குறித்து இந்த நேர்காணலில் கூறுகிறார்.
1. நேர்மையாக
இருப்பவர்களின் பெரும் அகத் தடை என்பது என்ன?
நம் வருமானத்திற்கு மேல் ஆசைப்பட்டு தேவையற்ற எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டால் தான் அகத்தடைக்கள் உருவாகும். நம்முடைய சம்பளத்திற்குள் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, தேவைகளை சுருக்கிக் கொள்ளும் பட்சத்தில் பெரிய அகத்தடைகள் ஒன்றும் இல்லை.
2. நேர்மையாக இருப்பவர்களின்
பெரும் புறத் தடை என்பது என்ன?
நேர்மையாக இருப்பவர்களுக்கு வெளியில் இருந்து தடை ஒன்றும் வராது. ஒரு சில நேரங்களில் பொதுமக்களே, இன்னொருவர் பணத்தை வாங்கிக்கொண்டு இந்த பணியை செய்து கொடுக்கிறார் நீங்களும் இதை செய்து கொடுங்கள் என்று நிர்பந்தப்படுத்த முயல்வார்கள். முடியாது என்று சொல்லிவிட்டால் விலகி விடுவார்கள். உதாரணத்திற்கு, ஒருவர் ஒரு ஏக்கர் வைத்திருந்து அதில் 50 சென்டை விற்றிருப்பார். ஆனால் அரசிடம் இருந்து ஒரு ஏக்கருக்கான மானியம் பெறுவதற்காக நம்மிடம் வந்து ஒரு ஏக்கர் இருப்பது போல சான்று கேட்பார். சிலர் வாரிசை மறைத்து வாரிசு சான்று கேட்பார்கள். பெரும்பாலும் பெண் வாரிசுகளை மறைப்பார்கள். சில அலுவலர்கள் ஆவணங்களை பார்க்காமல் அவ்வாறு போட்டுக் கொடுத்து விடுவார்கள். அதை வந்து நம்மிடம் காட்டி இதே போல் செய்து தருமாறு கேட்பார்கள். அதை நாம் செய்ய மாட்டோம் என்று சொல்லி புரியவைத்தால் முதலில் எதிர்ப்பார்கள் ஆனால் போக போக ஒரு நட்புறவு உருவாகிவிடும்.
3. நேர்மையாளர்கள்
குடும்பத்தில், உறவினர்கள்
மத்தியில் பெறும் மதிப்பு அல்லது அவமதிப்பு
இரண்டுமே நடக்கும். குடும்பங்கள், நண்பர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பு இருக்கிறது. என்னுடைய மனைவி, தங்கை ஆகியோர் மிகுந்த பெருமை கொள்கின்றனர். ஆனால் உறவினர் சிலருக்கு சின்ன சின்ன காழ்ப்புகள் இருக்கும். நம்மை பற்றி சிலர் பெருமையாக சொல்லும் போது பெரும்பாலும் “அவன் பொழைக்கத் தெரியாதவன்” என்பது தான் அவர்களுடைய பதிலாக இருக்கும். நம் உறவினர்களில் ஒருவரே அரசுப் பணியில் இருந்து ஐந்து வருடங்களில் அடையக் கூடிய வளர்ச்சியை நாம் அடைய முடியாது. ஆனால் பரவாயில்லை அவர்கள் சொல்லிவிட்டு போகட்டும் நாம் இப்படியே இருப்போம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான். ஒரு சில குடும்பங்களில் கணவரோ, மனைவியோ அதிகப்படியான பொருளாதார ஆசைகளுடன் இருந்தாலும் ஒருவர் நேர்மையாக இருப்பதில் பிரச்சனை வரும். எனக்கு அந்த சிக்கல் இல்லை.
4. நேர்மையாளர்கள்
பொதுமக்கள் மத்தியில் பெறும் மதிப்பு அல்லது அவமதிப்பு
நூறு சதவீதம் மதிப்பு மட்டும் தான் இருக்கும். பொதுமக்களுக்கு நேர்மையாக பணி செய்யக் கூடிய ஒருவர் வந்தால் அவர்களுக்கு வரப்பரசாதம் தான். இதுவரை 8 வருடங்களில் மூன்று கிராமங்களில் நான் பணி செய்துள்ளேன். அனைத்து இடத்திலுமே என்னுடைய பெயரை சொன்னால் நல்ல மதிப்பு மட்டும் தான் இருக்கிறது.
5. உங்களுக்கு
கடும் பண நெருக்கடி சூழல் இருந்து அப்போதும் லஞ்சம் வேண்டாம் என்று சொல்லும் நிலை
ஏற்பட்டது உள்ளதா?
அதை எப்படி கையாண்டீர்கள்?
கண்டிப்பாக அது போல் பொருளாதார நெருக்கடிகள் வரும். எதிர்பாராத செலவுகள் வரும். அது மாதிரி எந்த நிலை வந்தாலும் நான் கொண்டுள்ள கொள்கையில் இருந்து மாறக்கூடாது என்று தீர்மானமாக உள்ளேன். என்னுடைய மனசாட்சி என்னை கேள்வி கேட்கும் படி ஒரு நாளும் நடந்து கொள்ள மாட்டேன்.
6. நேர்மையாளர்கள்
சக ஊழியர்கள் மத்தியில் பெறும் மதிப்பு அல்லது அவமதிப்பு
பெரும்பாலும் நம்மை மதிக்கக்கூடிய, ஊக்குவிக்கக் கூடிய நபர்கள் தான் இருப்பார்கள். நம்மை முன்னுதாரணமாக கருதக்கூடிய நபர்களும் உள்ளார்கள். உன்னைப் போல் இருந்துவிட்டால் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை, எதற்கும் துணிவுடன் செயல்படலாம் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு சிலர் நம் மீது உள்ள பொறாமையாளும், நம்மை போட்டியாக கருதியும் ஏளனமாக பேசுவார்கள். ஏற்கனவே சொன்னது போல இவன் பொழைக்கத் தெரியாதவன் என்றும், இவன் எதற்கு எடுத்தாலும் ரூல்ஸ் பேசுவான் என்றும் சொல்லி நம்மை மட்டம் தட்டுவார்கள். ஆனால் அவர்கள் மிகக் குறைவானவர்களே. அவர்களையும் நாம் சகித்துக் கொண்டு தான் செயல்பட வேண்டியுள்ளது.
7. உயர்
அதிகாரிகளால் வரும் அழுத்தம் அதைக் கையாளுதல்
ஒருபோதும் மேல் அதிகாரிகள் நேர்மையான ஊழியர்களுக்கு அழுத்தம் தருவதே கிடையாது. நான் பணியில் சேர்ந்த 8 வருடத்தில் ஒருமுறை கூட என்னை ஒன்றை செய்தே ஆகிய வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதே இல்லை. நம்மை சில இடங்களில் மரியாதை தான் செய்கிறார்கள். நாம் அங்கிருந்து சென்ற பிறகு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. ஆனால், நாம் அந்த இடத்தில் இருக்கும் வரை நம்மிடம் அந்த வேலையை செய்யச் சொல்வது இல்லை.
8. இப்படி
இருப்பது என எப்போது முடிவெடுத்தீர்கள்
சிறுவயதில் பள்ளி முடிக்கும் முன்னரே அரசுப் பணிக்குத் தான் செல்ல வேண்டும் என்றும் நேர்மையாக மக்களுக்காக பணி செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்துவிட்டேன்.
9. உங்களைப் போல
பதவியில் உள்ள ஆனால் நேர்மையற்ற இன்னொருவரிடம் இதுபோன்ற பேட்டி எடுத்தால் என்ன
நியாயம் சொல்லுவார்கள்
அவரின் குடும்ப சூழலை காரணமாக சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் அலுவலகச் செலவுகள் ஜெராக்ஸ், போக்குவரத்து போன்று மாதம் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை நம்முடைய கையில் இருந்து செலவு செய்ய வேண்டும். அதையும் காரணமாக சொல்லி லஞ்சம் வாங்குவதாக சொல்லுவார்.
10. ஒருவர்
நேர்மையற்ற ஊழியராக இருந்து நேர்மையாளராக மாறுவதும், நேர்மையாளராக
இருந்து பின்னர் நேர்மையற்றவராக மாறுவதும் எப்படி நடக்கிறது, உதாரணம் தர
முடியுமா
நேர்மையற்றவராக இருந்து நேர்மையாக மாறுவதற்கு அவர் வாங்கிய லஞ்சத்தால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அதன் பிறகு வாங்குவதை நிறுத்தி இருக்கலாம். நான் கேள்விப்பட்ட வகையில் ஒருவர் முதலில் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்று பணி செய்து கொடுத்து பின்னர் அந்த பயனாளியை நேரில் பார்க்கும் போது அவர்களின் நிலையை அறிந்து இனிமேல் வாங்கக் கூடாது என்று முடிவெடுத்தவரும் இருக்கிறார். இறப்புச் சான்றிதலிற்கு உட்பட லஞ்சம் பெற்றுக் கொண்டு இருந்த ஒருவர் அதன் தவறை உணர்ந்து லஞ்சம் வாங்குவதை நிறுத்தியவரையும் நான் பார்த்துள்ளேன்.
கூட இருக்கும் சக ஊழியர்கள், உறவினர்கள் தொடர்ந்து ஏளனப்படுத்திக் கொண்டே இருக்கும் போதும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அதிகப்படியான பொருளாதார ஆசைகளுடன் அதை இவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கும் போதும் அவ்வாறு பணம் வாங்க தொடங்கி விடுகிறார்கள்.
11. அரசூழியர்
அமைப்புகள் நேர்மையற்றவர்களை எவ்வாறு அணுகுகிறது
லஞ்சம் வாங்க கூடிய நபர் அங்கு மதிப்பு குறைவாகத்தான் பார்க்கப் படுகிறார். அதுவே அந்த ஊழல்வாதிக்கு அதிகாரம் இருக்கும் பட்சத்தில் அவரை சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.
12. நீங்கள்
இவ்வாறு முடிவெடுக்க காரணமான சம்பவம்,
தருணம்
ஒரு குறிப்பிட்ட சம்பவம் இல்லை. சிறுவயதில் சாதிச் சான்றிதல், வருமான சான்றிதல் வாங்க செல்லும் போது கீழ்மட்டதில் இருந்து லஞ்சம் கேட்பார்கள். ஒரு வாரம், பத்து நாட்களுக்கு மேல் அலையவேண்டி இருக்கும். நான் அரசு பள்ளியில் படிக்கும் போது சக மாணவர்களின் ஏழ்மையை பார்த்து நாம் அரசு அலுவலர் ஆனால் இது போல ஏழை மக்களுக்காக நேர்மையாக செயல்பட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
13. உங்கள்
முன்னோடி அல்லது முன்னுதாரணம் என கருதும் நபர்கள்
எனக்கு முன்னோடி என்று விவேகானந்தர் அவர்களை சொல்வேன். துணிந்து நில், எதிலும் வென்று காட்ட வேண்டும், நேர்மையாக இருக்க வேண்டும் என்று அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். என்னுடைய அப்பாவே பணி சார்ந்து எனக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தார். 25 வருடங்கள் கிராம உதவியாளராக இருந்து நேர்மையாக பணி செய்துள்ளார்.
14. முதல் முறை
லஞ்சம் வேண்டாம் என்று சொல்லும் போது உங்கள் உளநிலை எவ்வாறு இருந்தது?
நான் பணியில் சேர்வதற்கு முன்பே லஞ்சம் வாங்கக் கூடாது என்ற உறுதியுடன் தான் வந்தேன். முதல் முறை ஒருவர் வந்து வழக்கமாக கொடுப்பது தான் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போது நான் வாங்க மாட்டேன் இனிமேல் இந்த நிலை மாறும் என்று சொன்னேன். சொல்லும்போது எல்லையற்ற மகிழ்ச்சியாக இருந்தது. மிகுந்த பெருமையுணர்வு இருந்தது. நான் நேர்மையாக இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தான் நான் அதை பார்க்கிறேன்.
15. நேர்மையாக
இருப்பதால் நீங்கள் அடைந்தது என்ன?
பொதுமக்களிடம் இருந்து ஒரு நன்மதிப்பை பெற்றுள்ளேன். நான் தன்னிறைவுடன் இருக்கிறேன். இதை விட என்ன வேண்டும்.
16. கையூட்டு
கொடுக்காமல் ஒருவரால் இருக்க இயலுமா?
நீங்கள் கையூட்டு கொடுக்க வேண்டிய தருணம் வந்ததா ? என்ன
செய்தீர்கள் ?
கண்டிப்பாக ஒருவரால் கையூட்டு கொடுக்காமல் இருக்க முடியும். எனக்கு பல சூழல்கள் அவ்வாறு வந்துள்ளது. வீடு கட்டும் போது மின் வாரியத்திற்கு செல்லும் போதெல்லாம் நம்மை கண்டுகொள்ள கூட மாட்டார்கள். அவர்கள் பாட்டிற்கு ஏதோ ஒன்றை செய்து கொண்டு இருப்பார்கள். நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது என்னுடைய பிறப்பு சான்றிதலுக்கு பதிவில்லா சான்று பெறப் போகும் போது அங்கு இது போல் எதிர்கொண்டேன். ஆனால் நாம் கொண்ட கொள்கையில் பிடிப்புடன் இருந்தால் எங்கும் லஞ்சம் கொடுக்காமல் இருக்க முடியும். ஆனால் நமக்கு வர வேண்டிய சேவைகள் தாமதம் ஆகும்.
17. உங்களுக்கு
புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளதா?
உங்களை பாதித்த புத்தகம் எது?
இறையன்பு எழுதிய வையத்தலைமை கொள் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். அது மிகவும் பிடித்திருக்கிறது. தன்னம்பிக்கை சார்ந்து உள்ளது. கோபிநாத் எழுதிய பிளீஸ் இந்த புக்க வாங்காதீங்க பிடிந்திருந்தது. வேறு பெரிய அளவில் புத்தகங்கள் வாசித்தது இல்லை.
பேட்டி கண்டவர்: சிபி, முனை இளைஞர் இயக்கம்.