நடைபயணம் - தொடக்கம்


சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு முதல்முறை கிருஷ்ணன் அவர்கள் எங்கள் குழுவில் இந்த நடை பயணம் குறித்து ஒரு செய்தி அனுப்பியிருந்தார். பார்த்தவுடன் சிரித்துவிட்டேன். அம்மாவிடம் காட்டினேன், அம்மாவும் சிரித்து விட்டாள். அந்த கணம், அந்த சிரிப்பு ஒரு இயலாமையின் சிரிப்பென்று எனக்கு பட்டது. அந்த தருணமே என்ன நடந்தாலும் இந்த நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று உறுதி செய்துவிட்டேன். உடனடியாக நண்பர்களுக்கு அழைத்து பேசினேன். யாருமே வராவிட்டாலும் நானும் கௌதமும் செல்வதாக முடிவெடுத்தோம். உடனடியாக ஒரு தேதியை குறித்தோம். கௌதம் ஒருமாதிரி சந்தேகமாக பேசத் தொடங்கினான். சரி என்ன ஆனாலும் தனியாகவாவது சென்றுவிட முடிவெடுத்தேன். பெண்கள் வருவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் திடீரென்று ஒரொருவராக இணையத் தொடங்கினர். இரண்டு பெண்கள் வர ஒப்புக்கொண்ட போது கிருஷ்ணன் அவர்கள் அடைந்த பூரிப்பை நேரில் பார்த்தவுடன் இன்னும் தீவிரமாக இந்த பயணம் மனதில் இடம் கொண்டது. 

ஒருமுறை காரில் வரும் போது கிருஷ்ணன் அவர்களிடம் "இந்த 400 கி.மீ முழுவதும் ஒருவர் நடந்து பூர்த்தி செய்தால் ஏற்படும் சாத்தியமான நன்மை என்ன?" என்று கேட்டேன். 

இந்த பயணம் ஒருவரின் உள்ளார்ந்த வலிமையை வலுப்படுத்தும். அனைவரின் வாழ்விலுமே இன்னல்கள், துயர்கள் அனைத்து எதிர்மறை நிகழ்வுகளும் ஏற்படும். ஆனால் அவற்றில் இருந்து எவ்வளவு சீக்கிரம் ஒருவர் வெளியே வருகிறார் என்பதை பொறுத்தே அவரின் உளவலிமை தெரிய வரும். இந்த பயணம் பல நேரங்களில் இந்த உளவலிமையை சோதிக்கும். நடக்க முடியாமல் போகலாம், காயம் ஏற்படலாம், மக்களிடம் ஆதரவு கிடைக்காமல் போகலாம், உணவு கிடைக்காமல் போகலாம், இன்னும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இதை அத்தனையையும் கடந்து இறுதியில் ஒருவர் முடிக்கும் போது அவருடைய ஆளுமை பெரிதளவில் மாறியிருக்கும். பலமடங்கு மேம்பாட்டிருப்பார். 

இந்த பயணத்தின் மூலம் ஈட்டிக் கொள்ளும் இன்னொன்று வாழ்க்கை அனுபவம். இந்த பயணத்தில் நடக்கும் சம்பவங்கள், நிகழ்வுகள் ஒரு பெரும் வாழ்க்கை அனுபவத்தை அளிக்கும். சாதாரணமாக ஒருவர் தினமும் அலுவலகத்திற்கோ கல்லூரிக்கோ சென்று வந்தால் 8 வருடங்களில் அவர் என்ன வாழ்க்கை அனுபவத்தை ஈட்டியிருப்பாரோ அதை இந்த 20 நாட்கள் அளித்துவிடும். வெவ்வேறு நிலப்பரப்பு வெவ்வேறு கலாச்சாரங்கள் வெவ்வேறு மனிதர்களை நடந்து கடப்பது ஒரு மாபெரும் அனுபவம். 

இன்னொன்று புலனனுபவம். இந்த பயணத்தில் கண், காது போன்ற புலன்கள் ஒவ்வொரு நாளும் துலக்கம் அடையும். ஒவ்வொரு நாளும் புலன்கள் கூர்மையடைந்து கொண்டே வரும். சாதாரணமாக ஒருவர் கேட்பதை விட கூடுதலாக ஒன்றை கேட்போம். கூடுதலாக ஒன்றை பார்ப்போம். அது ஒரு படிமமாக மனதில் படியும். மிக அரிதான அனுபவங்கள் பல இந்த 20 நாட்களில் நடக்கலாம். என்றார். 

இது மேலும் மேலும் பயணம் குறித்த ஆர்வத்தை கூட்டிக் கொண்டே‌‌ சென்றது. இவற்றையெல்லாம் அப்படியே மற்ற நண்பர்களிடம் சொல்லி பயணத்திற்கு ஆள் சேர்க்கும் பணியில் குதித்தேன். இறுதியாக இப்போது இரண்டு ஆண்கள் நான்கு பெண்கள் முழுவதுமாக இந்த பயணத்தில் பங்கேற்கிறோம். முதல் ஐந்து நாட்கள் மட்டும் சரண்யா இந்த பயணத்தில் பங்கேற்கிறார். இன்று ஒரு பெருமித புன்னகையுடன் பயணத்தை தொடங்க உள்ளோம். 

இந்த பயணம் குறித்து ஜெயமோகன்.இன் இணையதளத்தில் வந்த பிறகு பலர் அழைத்து பேசினர். 50,000 வரை நன்கொடைகள் வந்துள்ளது. அனைவரும் இதை முக்கிய நிகழ்வாக நினைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முனை அமைப்பினர் சிலர் நாங்கள் தங்கும் ஊர்கள் சிலவற்றிற்கு முன்னரே சென்று சில தொடர்புகளை பெற்று வந்தனர். நாங்கள் செல்லும் கிராமங்கள் பெரும்பாலும் நகரத்திற்கு வெளியே இருப்பதால் போக்குவரத்து வசதிகள் பெரியளவில் இல்லை. இரண்டாம் நாள் நாங்கள் தங்கவுள்ள செஞ்சேரி கிராமத்திற்கு பேருந்து உள்ளது. முதல் மற்றும் மூன்றாம் நாள் தங்கும் ஊர்களுக்கு பேருந்து இல்லை. அப்போது வேறு வழியில்லாமல் கௌதம், இலக்கியா, அஜய் ஆகிய மூவரும் செஞ்சேரியில் இருந்து பெரிய பட்டி என்னும் ஊருக்கு வந்து மூன்றாம் நாள் இரவு தங்கும் பேட்டகாளி பாளையம் எப்படி செல்வது என்று விசாரித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அருகில் பீடி குடித்துக் கொண்டு இருந்த ஒருவர் இவர்கள் அருகில் வந்து "எங்க போகணும்" என்று கேட்டுள்ளார். 

"பேட்டக்காளி பாளையம்"

"சேரி ரெண்டு பேரு வாங்க பைக்ல போலாம்" என்று சொல்லியுள்ளார். உடனே அஜயை பேருந்தில் வீடு திரும்ப சொல்லிவிட்டு கௌதமும், இலக்கியாவும் அவருடன் பைக்கில் ஏறி சென்றுள்ளனர். அங்கிருந்து அவரின் வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்று வீட்டிலிருந்து காரில் பேட்டைக்காளி பாளையம் அழைத்து சென்றுள்ளார். இலக்கியா இந்த திடீர் வரவேற்பை நம்ப முடியாமல் எனக்கு அவளுடைய லைவ் லொகேஷன் அனுப்பி எதாவது பிரச்சினை என்றால் காப்பாற்றுமாறு சொல்லியிருந்தாள். அவர் அந்த ஊரிற்கு இவர்களை அழைத்து சென்று இவர்கள் அங்குள்ளவர்களிடம் பேசிவிட்டு வரும் வரை காத்திருந்து மீண்டும் காரில் இவர்கள் முதலில் நின்றுருந்த பேருந்து நிறுத்தத்திற்கே அழைத்து வந்து விட்டுவிட்டு அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். கிளம்பும் முன்பு இருவருக்கும் பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுத்துள்ளார். இவர்கள் பணம் கொடுக்க முயற்சித்து அவர் பெற மறுத்துவிட்டார். அதனால் இலக்கியா அவருக்காக 150 ரூபாய்க்கு இனிப்புகள் வாங்கி பரிசளித்து உள்ளார். பயணம் தொடங்குவதற்கு முன்னரே இது போன்ற வரவேற்புகள் எங்களுக்கு ஒரு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. 

அவர்களிடம் இருந்து அழைப்புகளை பெற்று பேட்டைக்காளி பாளையம் தலைவரிடம் எங்கள் வருகை குறித்து மூன்று நாட்களுக்கு முன்பு பேசியிருந்தேன். நேற்று வண்டியில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அவர் எனக்கு அழைத்து பயண ஏற்பாடுகள் எந்த அளவில் உள்ளது? நாளை எத்தனை மணிக்கு கிளம்புகிறீர்கள்? மற்ற ஊர்களில் தங்குமிடம் கிடைத்து விட்டதா என்று விசாரித்தார். மூன்றாம் நாள் செஞ்சேரியில் இருந்து கிளம்பி வரும் வழியில் காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்து விட்டீர்களா? இல்லையென்றால் சொல்லுங்கள் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து நான் உணவு அளித்து விட்டு வருகிறேன் என்றார். ஒரு கணம் இது உண்மைதானா என்று ஆச்சர்யத்தில் எதுவும் பேசாமல் நின்றுவிட்டேன். தமிழகம் எங்களை கைவிடாது என்று மேலும் மேலும் நம்பிக்கை வலு பெற்றுக் கொண்டே செல்கிறது. 

இன்னும் சில மணி நேரங்களில் எங்கள் பயணம் தொடங்க உள்ளது. கண்ணன் தண்டபாணி, கருப்பையா காந்தி இந்த பயணத்தை தொடங்கி வைக்கப் போகிறார்கள். 15 பள்ளி மாணவர்கள் வருகிறார்கள். இன்னும் பல நண்பர்கள் வருகிறார். குறைந்தது 30 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சியின் குறுகுறுப்பு பற்றிக் கொண்டுள்ளது. 


சிபி,

முனை

இளைஞர் இயக்கம், 




Comments

Popular posts from this blog

400 கி.மீ நடைபயணம்

ஏழாம் நாள்

அறப்போர் ஜெயராம் நேர்காணல்