ஆறாம்‌ நாள்

நெடுஞ்சாலையில் நடப்பது பெரும் சலிப்பூட்டுவது. தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக அந்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம். ஜனவரி 16 காலை நான் வலைப்பூ எழுதியதால் நடக்க தாமதமாகிவிட்டது. எனக்காக கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு மற்றவர்கள் எட்டு மணிக்கு கிளம்பி விட்டனர். நானும் சௌமியாவும் ஒன்பது மணிக்கு நடக்கத் தொடங்கினோம்.


எங்களுக்கு முன் ஒரு குடிகாரர் வெள்ளைக்கோட்டை தாண்டி தாண்டி சாலைக்குள் நடந்து வந்து கொண்டிருந்தார். பேருந்துகளும் கார்களும் அவரை அடித்து விடும் போல் இருந்தது. அவர் அருகில் உரசும் படி வண்டி வரும் பொழுது எல்லாம் சௌமியா பயந்து காதை பொத்திக் கொண்டாள். 

ஒரு கட்டத்திற்கு மேல் கண் முன்னே இறந்துவிடுவாரோ என்று பயந்து அவரிம் சென்று ஓரமாக நடக்கும் படி சொல்லி கை காட்டினேன். அவர் நகர்ந்து ஓரத்திற்கு வரும் வரை திரும்ப திரும்ப சொல்லி ஓரமாக வந்த பின் அவரை முந்தி சென்றுவிட்டோம். கொஞ்ச தூரம் சென்றபின் திரும்பிப் பார்த்தால் மீண்டும் அதே போல் வெள்ளைக் கோட்டை தாண்டி வந்துவிட்டார். நாங்கள் வேகமாக முன்னால் சென்றுவிட்டோம். 
படம்:  மோகன் தனிஷ்க்

நானும் சௌமியாவும் ஓரமாக நடந்து வந்து கொண்டிருக்கும் போது ஒரு அரசுப் பேருந்து என்னை உரசிவிடும் போல் இருந்தது. அருகில் ஒரு வண்டியும் வரவில்லை எதற்காக அவ்வளவு ஓரம் வந்தார் என்றே தெரியவில்லை. எங்களை தாண்டி வெள்ளைக் கோட்டையும் தாண்டி ஒன்றரைக் கடையாக சாய்ந்து மிக ஓரத்தில் மிக வேகமாக சென்றார். ஒரு கணம் உயிரே போனது போல் தான் இருந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும் இன்னொரு குடிகாரர் வந்து வழியை மறித்தார். வண்டியை நெடுஞ்சாலை நடுவே நிறுத்திவிட்டு வந்து எங்களிடம் பேசினார். "ஓரமா நிறுத்துங்க அப்பறம் பேசலாம்" என்று சொன்னேன். "அதெல்லா நா பாத்துக்கற எவன் என்ன பண்ணிப் போடுவா, நீ வா" என்றார். பயந்து கொண்டே பேசினேன். எங்களை நிற்க வைத்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார்.நோட்டீஸை கையில் பிடிக்கப் சொல்லி ஒரு புகைப்படத்தை எடுத்தார். அழைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு அவருக்கு டீஜிபி எல்லாம் தெரியும் எதாவது பிரச்சினை என்றால் சொல்லுங்கள் பார்த்துக் கொள்கிறேன் என்றார். எதிரே வந்த பேருந்து இன்னொரு காரை மிக வேகமாக முந்தி வந்தது. அவரின் பைக்கை அடித்துவிடும் போல் வந்தது. ஒரு கணம் மூச்சே நின்றது. இரண்டு அங்குல இடைவெளியில் தப்பித்தது. வண்டியை எடுங்கள் என்று கத்தலாக சொன்னேன். கியரில் நிறுத்திய வண்டியை கிளச்சை பிடிக்காமல் தள்ளி நடு ரோட்டில் போதையில் விழுந்திருப்பார். எப்படியோ சமாளித்து ஓரம் வந்து வண்டியை எடுத்துச் சென்றார். காலை எழுந்ததில் இருந்து ஒரே அபாயகரமான நடையாக இருந்தது. 

அங்கிருந்து சென்று கொஞ்ச நேரத்தில் எனக்கு அழைத்து அம்பிளிக்கை கணேஷ் பேசுகிறேன், எதாவது பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள் என்றார். சரி சரி என்று சொல்லி வைத்தேன்.
தேனப்பன், உமையாளுடன்
படம்: மோகன் தனிஷ்க்

உமையாள் காலை உணவும் எடுத்து வந்து விட்டார். கேரட் ஊத்தப்பம், நெய் சேர்த்த வெண் பொங்கல். அப்படியே தொண்டையில் வழுக்கிக் கொண்டு சென்றது. சுவையான உணவு. மீண்டும் மதிய உணவும் கொண்டு வருவதாக சொல்லி எங்கள் முதுகுப் பைகளை பெற்றுச் சென்றார். 

மீண்டும் இரு குழுக்களாக நடக்கத்தொடங்கி நானும் அனுவும் பின்னால் சென்றோம். மற்றவர்கள் அனைவரும் முன்னால் சென்றார்கள். செல்லும் வழி எல்லாம் மைக் செட்டுகள், பாட்டு, விளையாட்டுப் போட்டி. ஒரு இடத்தில் உரியடிக்கும் போட்டி நடந்து கொண்டிருந்தது. காதை கிழிக்கும் பாட்டுச் சத்தம், கமென்றி. நானும் போய் விளையாடட்டுமா என்று கேட்டேன். அனு உத்தரவு கொடுத்த பிறகு துள்ளிக் குதித்து உள்ளே சென்றேன். 

என்னுடைய அம்மா ஊர் திண்டுக்கல் மாவட்டம் தான். திண்டுக்கல் கிராமங்களில் எனக்கு சொன்னவுடன் நியாபகம் வருவது ஒரு பெரிய அரச மரம், அதன் அடியில் ஒரு சதுர வடிவ தின்னை, அதில் சில பெருசுகள் அமர்ந்து ஆடுபுலி ஆட்டம், தாயக்கரம் ஆடி பொழுதை கழித்துக் கொண்டு இருக்கும் காட்சி. எந்த கிராமத்திலும் இதை பார்த்துவிடலாம் என்று நினைக்கிறேன். பார்த்தாலே ஆஹா இங்கு தூங்கினால் எப்படியிருக்கும் என்று தோன்றும். அங்கிருக்கும் வயதானவர்களை பார்த்தால் செய்வதற்கு எதுவும் இல்லாதவர்கள் என்றும் சோம்பலானவர்கள் என்றும் தெரிந்துவிடும். ஆனால் மகிழ்ச்சியான இடமும் கூட. குழந்தைகள், சிறுவர்களும் அங்கு தான் கூடுவார்கள். கோலி, பம்பரம் எல்லாம் விளையாடிக் கொண்டு இருப்பார்கள். அதை மூத்தோர் பார்த்து கேலி செய்து கொண்டு, சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். இன்றும் அவ்வாறு ஒரு காட்சி தான். அதை பார்த்ததுமே என்னவென்று சொல்ல முடியாத உணர்வு. நானும் முயற்சிக்கிறேன் ஆனால் சொல்ல முடியவில்லை.‌ எதுவுமே மனதில் ஓடவில்லை ஆனால் அந்த கணம் அந்த இடத்தை பார்த்ததும் அப்படியே உறைந்து நின்றுவிட்டேன். அதன்பின் அங்கிருந்த ஒருவரிடம் சென்று‌ நாங்கள் உரியடிக்கலாமா என்று கேட்டேன். அதெல்லாம் அடிக்கலாம் வாங்க என்றார்.

எப்போது உரியடிக்க சென்றாலும் மனதில் ஒரு வாக்கியம் தோன்றும். "எங்கயோ இருந்து வந்தான் டா ஒருத்த வெள்ள சட்டைய போட்டுட்டு. நாங்கல்லாம் எவ்வளோ நேரமா முயற்சி பன்றோம் ஒருத்தனாலயும் அத தொட கூட முடியல. அவன் சரியா கோடு கிழிச்ச‌ மாதிரி ஒரே போடு போட்ட பாரு பானை தெரிச்சிருச்சி. பயங்கரமான ஆளு டா அவன்" அப்படினு யாரோ ஒருவர் சொல்ர மாதிரி ஒவ்வொரு முறை உரியடிக்க செல்லும் போதும் காதில் கேட்கும். இன்றும் அவ்வாறு தான் கேட்டது. முன்னாடியே பெருமிதத்தோடு தான் சென்று பந்தாவாக நின்றேன். அவர்கள் கண்ணை கட்டி வேறு எங்கோ திருப்பி விட்டு விட்டார்கள். நல்ல வேளை டிச்சில் விழுவதற்கு முன் பிடித்துவிட்டார்கள். அந்த வகையில் வெற்றி என்று எண்ணிக் கொள்ள வேண்டியது தான். 

அடுத்ததாக ஒரு‌ பெரியவர் கண்ணைக் கட்டிக் கொண்டு கோதாவில் இருக்கினார். "பொட்டு வைச்ச தங்கக் குடம்" பாட்டு போட்டார்கள். குத்தாட்டம் போட்டபடியே பானையை நோக்கி நடந்தார். அவருடன் இன்னொரு பெரியவரும் சேர்ந்து கொண்டார். விழாக்களை மகிழ்ச்சியூட்டவது கொண்டாட்டமாக மாற்றுவது எப்போதும் வயதானவர்களும், குடிகாரர்களும் தான். 

அங்கிருந்து சென்று கொண்டிருக்கும் போது எதிரில் என்னுடைய அண்ணா, அண்ணி, பாப்பா எல்லாம் வண்டியில் வந்தார்கள்.‌ பொங்கல் கொண்டாட வந்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார்கள். அப்போது எங்களை பார்த்து பேசிவிட்டு சென்றார்கள்.‌ உமையாள் எங்கள் முதுகுப்பையை பெற்றுச் சென்றுவிட்டதால் எளிதில் நடக்க முடிந்தது. உடலும் நடைக்கு பழகி விட்டது மதிய ஓய்வு பெரிதாக தேவைப்பட வில்லை. 

நாங்கள் நடந்து வரும் வழியில் ஒத்திக்கு வீடு கிடைக்கும் என்று இருந்தது. அதைப்பற்றி ரோட்டில் சென்ற ஒருவரை பிடித்து அனு விசாரித்தாள். வாடகைக்கு தங்குபவர் மொத்தமாக இரண்டு லட்சமோ, மூன்று லட்சமோ ஒரு தொகையை உரிமையாளருக்கு முன்னரே கொடுத்துவிட்டு வீடு காலி செய்யும் போது திருப்பி அளித்துவிடுவது தான் ஒத்திக்கு விடுவது. இதற்கு மாதம் மாதம் வாடகை தர தேவையில்லை. முதலில் வரும் பெரிய தொகையை உரிமையாளர் வட்டிக்கு விடுவது, கடன் அடைப்பது போன்றவற்றை செய்து கொள்வார். அவர் அதை சொல்லி முடித்தபின் எங்கள் பிரச்சாரத்தை அவரிடம் சொன்னோம். அப்போது அவர் "நானும் வாங்கக் கூடாதுனு தா நெனைக்கிறே. ஒரு கோடி ரூவா போட்டு வீடு கட்டிருக்கற. இந்த ஆயிரம், இரெண்டாயிரத்த வாங்கி என்ன பண்ண போற. அது தப்பான காசுனு எனக்கும் தெரியுது. கொடுக்க வரவ கிட்டயும் ஒன்னு ரெண்டு மொறை சொல்லியும் பாத்த. இந்த காச கொடுத்து ஏன்‌ என்ன அசிங்க படுத்தரீங்கனு கேட்டுட்ட. ஆனா நம்ம பணம்‌ வாங்கலனா அவனுக்கு ஓட்டு போட மாட்டோம்னு நெனச்சுக்கறா. வீட்டுக்கு வந்து எல்லாரையும் அவமானப் படுத்தறாங்க, வீட்டு முன்னாடி வந்து சத்தம் போட்டு சண்ட போட்றாங்க, ஆளு சேத்து அடிக்க கூட வர்றாங்க. வீட்டு முன்னாடி பணத்த வீசீட்டு போய்யற்றா. அப்பறோ என்ன பண்றது அத எடுத்து யாருக்கச்சு தொடுத்துறுவ" என்றார். 
அதைக்கேட்டு எங்களுக்கு பெரும் ஆச்சர்யம். இது நாங்கள் முற்றிலும் எதிர்பார்த்திராத பிரச்சினை. உண்மையில் இப்படி உள்ளதா, இல்லை சும்மா சொல்கிறாரா என்று நினைத்தோம். ஆனால் அனுவுடைய கல்லூரி நண்பரும் திருவண்ணாமலையில் இதே பிரச்சினை உள்ளது என்று சொல்லியுள்ளதாக இப்போது சொன்னாள். 

அங்கிருந்து நாங்கள் சுமார் ஏழெட்டு கிலோமீட்டர் நடந்து வந்த பின்னர் இன்னொரு இடத்தில் ஒரு ரோட்டோர கடையில் இருவரிடம் பேசினோம். அவர்களும் அவ்வாறு தான் சொன்னார்கள். எங்களிடம் பேசவே பயந்தனர். எங்களிடம் பேசுவதை யாராவது பார்த்தால் வந்து கடையில் பிரச்சினை செய்வார்கள் என்று சொன்னார்கள். பணம் வாங்கவில்லை என்றால் வீட்டிற்கு வந்து சண்டை போடுவார்கள் என்று தான் அவர்களும் சொன்னார்கள். முற்றிலும் சம்பந்தம் அல்லாத வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு இடத்தில் ஒன்றையே சொல்லும் போது அது பொய்யாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது என்று வெளியே யாருக்குமே தெரியாமல் இருக்கிறது. என்னுடைய அம்மாவின் ஊர் திண்டுக்கல் மாவட்டம் தான். இப்படி உண்மையாகவே நடக்கிறதா என்று அம்மாவிடம் கேட்டேன். என்னுடைய பெரியம்மா பகாநத்தம் என்னும் ஊரில் உள்ளார். அவர் பணம் வாங்க மறுத்தால் அவரிடம் சண்டைக்கு வருவதாக சொன்னாராம். அவர் அரசு பள்ளியில் சத்துணவில் பணி செய்கிறார். அந்த பணியில் இருந்து அவரை தூக்கி விடுவேன் என்று மிரட்டுவது போன்றவை நடந்துள்ளதாக சொன்னார். அப்படியெல்லாம் ஒருவரால் செய்துவிட முடியாது என்று தான் நினைக்கிறேன். ஆனால் ஒரு சாமானியரிம் நான்கு கட்சிக்காரர்கள் வந்து இவ்வாறு மிரட்டினால் அவர் பயந்து விடுவது இயல்பு தான். அவ்வாறு பலர் பயந்து இருக்க வாய்ப்புள்ளது. 
திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் வந்ததுமே ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களை எதிர் கொண்டோம். அங்கெல்லாம் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொன்னால் அதை ஏற்கக் கூடியவர்கள் பத்துக்கு எட்டு பேர் இருப்பார்கள். "அதெல்லாம் நம்ம சொன்ன எவன் கேட்பான், ஒருத்தனும் திருந்த மாட்டான், நீங்க என்ன சொன்னாலும் ஒன்னும் மாறாது, பணம் வாங்கி பழகீட்டாங்க இனிமேல் மாத்த முடியாது" இது போன்ற நிராகரிப்புகள் அந்த மாவட்டங்களில் மிகக் குறைவு. பெரியளவு ஆதரவு இருந்தது. ஆனால் திண்டுக்கல்லில் இதுபோன்ற வார்த்தைகள் தான் பத்துக்கு ஒன்பது பேர் சொல்கின்றனர். ஓட்டுக்கு பணம் வாங்குவது தவறு என்று ஒரு எண்ணமே இங்கு கிடையாது. 
நாங்கள் செல்லும் வழிக்கு எதிரில் ஆயிரக்கணக்கில் பழனி பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர். ஏராளமான பக்தர்கள். அங்கெல்லாம் நாங்கள் 400 கிமீ நடந்து வருகிறோம் என்று மக்களிடம் சொன்னால் அதற்கு ஒரு மரியாதையும் இல்லை. மிக சாதாரணமாக பார்த்தனர். அது ஒரு சின்ன ஏமாற்றத்தை அளித்தது. 

மதிய உணவிற்கு ஒரு கோவில் அருகில் ஒரு வீட்டின் முன் ஓய்வெடுக்க அமர்ந்தோம். அங்கு இருந்த ஒரு பெண் எங்களை தீவிரமாக எடுத்துக் கொண்டார். எதாவது வேண்டுமா, வேண்டுமா என்று நச்சத் தொடங்கினார். ஆனால் உமையாள் எங்களுக்கு மதிய உணவும் எடுத்து வந்துவிட்டார். காளான் பிரியாணி, தயிர் சாதம், அத்திபழ ஊறுகாய், பால்கோவா, கேரட் அல்வா, சிப்ஸ் என்று ஒரு விருந்து தான் அது. மீண்டும் இரவு வருவதாக சொல்லி பையை அவர்களே எடுத்துச் சென்றுவிட்டனர். 

ஒரு பெரும் திரள். பல்லாயிரம் பேர் எதிர் திசை நோக்கி நடந்து சென்றனர். அவர்களுக்கு நடுவில் பூந்து பூந்து சென்றோம். இன்று என்னுடைய அம்மா ஊரில், பாட்டி வீட்டில் தான் நாங்கள் தங்க உள்ளோம். என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் எங்களுக்கு முன்பு அங்கு வந்திருந்தனர். எங்களுக்காக கோழிக்கறி வருவல் செய்து கொடுத்தார்கள். அபாரமான உணவு. உமையாளும் அவருடைய கணவர் தேனப்பனும் வீட்டிற்கு வந்தார்கள். ஒன்பதரை மணி வரை நாங்கள் அனைவரும் குளிக்கும் வரை காத்திருந்து எங்கள் அனைவரின் உடையையும் துவைத்துக் கொண்டு வருவதாக சொல்லி பெற்றுச் சென்றுவிட்டனர். அம்மா பெரும் முக மலர்ச்சியுடன் இருந்தாள். எங்கள் ஒவ்வொருவரை குறித்தும் ஒரு மாபெரும் பெருமிதம் அவள் கண்களில் இருந்தது. சௌமியா மற்றும் அனுவை பார்த்ததும் கட்டி அனைத்து முத்தமிட்டாள். ஒரு வாரத்திற்கு பின் அம்மாவை இறுகக் கட்டி பிடித்து தூங்கினேன். 

சிபி

மேலும்..

Comments

  1. உங்களனைவருக்கும் நன்றி சொல்வதை விட வேறு எதுவும் எனக்கு பெரிதென தோன்றவில்லை இன்று.
    உங்களகம் நீங்கள் செல் வழியெல்லாம் வளர்க.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

400 கி.மீ நடைபயணம்

ஏழாம் நாள்

அறப்போர் ஜெயராம் நேர்காணல்