முன்னேற்பாடுகள் - கௌதம்
முனை இளைஞர் அமைப்பிலிருந்து "நேர்மையாக வாக்களித்தல்"
என்னும் விழுமியத்தை முன்வைத்து கோவை முதல் வேதாரண்யம் வரை 400 கிலோமீட்டர் நடைபயணத்தை 11.01.2025 அன்று தொடங்கியுள்ளோம். அதில் பங்கேற்கும் ஐந்து மாணவர்கள் முதல் மூன்று நாட்கள் தங்கும் பச்சாபாளையம், செஞ்சேரி மற்றும் பேட்டை காளி பாளையம் ஆகிய ஊர்களில் முன்னேற்பாடுகள் செய்ய நான், அஜய் மற்றும் இலக்கியா மூவரும் 05.01.2025 அன்று சென்றிருந்தோம்.
முந்தைய நாள் இரவுதான் பயணம் முடிவானது. மூன்று ஊர்களும் 15 கிலோமீட்டர் இடைவெளியில் நேர்கோட்டில் இருந்தன. திருப்பூரிலிருந்து பல்லடம் சென்ற பிறகுதான் மூன்று ஊர்களுக்கும் பெரிதாக பேருந்து தொடர்பு இல்லை எனத் தெரிந்தது. பல்லடத்திலிருந்து செஞ்சேரிக்கு மட்டுமே பேருந்து இருந்தது. செஞ்சேரி சென்றுவிட்டோம். அங்கிருந்த கோவிலில் ஒருநாள் இரவு தங்க இயலுமா எனக் கேட்டோம். தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள் என்றனர்.
"எத்தனை பேர் வர்றாங்க?"
" ஒரு பையன் நாலு பொண்ணுங்க"
"அப்படீன்னா நம்ம ஊட்லயே தங்கிக்கலா"
என செல்வராஜ் அவர்கள் கூறியவுடன் பிற இடங்களிலும் தங்குமிடம் அமைவது எளிது எனப்பட்டது. அவ்வாறே பயணம் தொடங்கும் முன்பே 11 இடங்களில் தங்குமிடங்கள் அமைந்துவிட்டது.
அடுத்ததாக பச்சாபாளையம் செல்ல வழி கேட்டோம், ஆட்டோவில் மட்டுமே செல்ல இயலும் எனக் கூறிவிட்டனர். 18 கிலோமீட்டர் 700 ரூபாய் ஆட்டோவில்! சரி பேட்டைகாளி பாளையம் செல்லலாம் என்றால் அங்கு வரை பேருந்து வசதியில்லை. அருகில் ஜல்லிப்பட்டி சென்றால் பேட்டை காளி பாளையம் அருகே செல்ல வாய்ப்புள்ளது என்றனர். திரும்பி வர பஸ் இருக்குமா எனத் தெரியாது.
சரி வீடு திரும்பி விடலாம் என அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஜல்லிப்பட்டி பேருந்து எதிரில் வந்தது, சரி போய்த்தான் பார்ப்போம் என்று ஏறி விட்டோம். கூகுள் மேப்பில் பார்க்கும் போது செஞ்சேரி அருகே மலை ஒன்று இருந்தது. நேரமிருந்தால் சென்று பார்க்கலாம் என்றிருந்தோம். பேருந்தும் அது வழியாக செல்ல எப்படியோ மலையை பார்த்துவிட்டோம்!
நாங்கள் ஜல்லிப்பட்டி செல்வதற்குள் பேட்டை காளி பாளையம் வழியாக செல்லும் பேருந்து சென்றுவிட்டது. அங்கிருந்து பெரியபட்டி சென்றால் ஒரு வாய்ப்பு உள்ளது எனக் கூறினர். பெரியபட்டியும் சென்றுவிட்டோம். பெரிய பட்டியலிலிருந்து பேட்டை காளி பாளையம் 13 கிலோமீட்டர்.
பெரியபட்டி பேருந்து நிறுத்தத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆள் ஒருவர் பீடி குடித்தவாறு அமர்ந்திருந்தார். அவரிடம் பேட்டை காளி பாளையம் செல்ல இந்நேரம் பேருந்து உள்ளதா எனக் கேட்டோம்.
" இப்ப அங்க போக பஸ் இல்லயே, எதுக்கு? "
"ஊர்த் தலைவர பாக்கனும்"
"சரி வாங்க என் வீடு பக்கம் தா போலாம்"
அவரிடம் ஒரு பைக் மட்டுமே இருந்தது. வீட்டில் கார் உள்ளதாகவும் அங்கு சென்று காரை எடுத்துக்கொண்டு செல்லலாம் என்றார். ஒருவேலை கார் டிரைவராக இருக்கலாம் என நினைத்தேன்.
"வாடகை எவ்ளோ னா ?"
"நா வாடகைக்கெல்லா கார் ஒட்றதில்ல முடுஞ்ஞத குடுங்க இல்லைனா வேணாம், பைக்ல மூனு பேர் போலாம் வேணா இன்னொர்த்தருக்கு ஆட்டோ ஏற்பாடு பண்றேன்"
அதிகம் செலவாகும் என்று அஜயை வீட்டிற்கு செல்லுமாறு கூறிவிட்டு நானும் இலக்கியாவும் அவருடன் பைக்கில் கிளம்பினோம். பெரியபட்டியில் என்ன வேலை என்றேன்
"இன்னைக்கு நாயித்துக்கெழம அதா சரக்கடிக்க வந்த, வாராவாரம் வருவ"
அதன் பிறகே என் மூக்கு பிராந்தியின் வாசனையை நுகரத்தொடங்கியது. இலக்கியா அப்போதே சிலருக்கு லைவ் லொகேஷனை அனுப்பத் தொடங்கியிருந்தாள். என் சிந்தனையும் எங்கெங்கோ சென்று வந்துகொண்டிருந்தது.
"எதுக்கு தலைவர பாக்கனும் ?
(நடைபயணம் குறித்து விளக்கினேன்)
"சேரி சேரி ரொம்ப நல்லது"
குடித்திருந்தாலும் நேர்த்தியாக பைக் ஓட்டினார். அவர் வீடு அருகில் வந்ததும்
"வீட்ல யாராவது கேட்டா என்னோட பிரெண்ட்கு தெருஞ்சவங்கன்னு சொல்லுங்க" என்றார்.
சந்தேகம் இன்னும் தீவிரமானது. இலக்கியா சற்று பயந்து விட்டாள். ஒரு சிறிய மாடி வீடு முன் பைக்கை நிறுத்தினார். முன்னால் கார் ஒன்று நின்றது. சாவியை எடுத்து வருவதாக உள்ளே சென்றார். இலக்கியாவிடம் "அப்படி யார் வந்து கேட்டாலு உண்மையவே சொல்லீர்லா" எனக் கூறிவிட்டேன்.
சாவியை எடுத்துக்கொண்டு வந்தார். உள்ளிருந்து ஒரு பெண்மணியும் வெளியே வந்தார்.
"யார் இவங்கொ ரெண்டு பேரு ?"
"எதோ அமைப்புலருந்து வர்றாங்க, தலைவர பாக்கணுமாமா அதா போய்ட்டு வரோம்"
மீண்டும் குழப்பம்! எங்களுடன் அவர் வீட்டிலிருந்த இரு சிறுவர்களையும் காரில் ஏற்றிக் கொண்டார். பேட்டை காளி பாளையம் நோக்கி சென்றோம். அவர் வீட்டிலிருந்து பேட்டை காளி பாளையம் பக்கம் எனக் கூறியிருந்தார். கூகுள் மேப்பில் பார்த்தால் இன்னும் 8 கிலோமீட்டர்.
"எனக்கு தெரிஞ்ச ஆள் ஒருத்தர் அங்க இருக்காறு அவரு தங்கறக்கு ஹெல்ப் பண்ண வாய்ப்பிருக்கு போர வழிதா , அப்படியே பாத்துட்டு போலாமா ?"
சரி என்றேன்.
கார் செல்ல முடியாத மண் ரோட்டில் ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார். ஆனால் அந்த வீட்டிலிருந்தவருக்கு இவரை அடையாளம் தெரியவில்லை.
"நா சதீஸ் ஓட ஒருக்கா இங்க வந்துருக்க"
அவரும் நியாபகபடுத்திக்கொண்டார். நடைபயணத்திற்காக தங்க இடம் ஏற்பாடு செய்ய வந்துள்ளோம் என்றேன்.
"தலைவர கேளுங்க அதெல்லாம் அருமையா பண்ணிகுடுத்ருவாரு"
சரி என்றபடி தலைவர் வீட்டிற்கு புறப்பட்டோம். தலைவர் வீட்டில் இல்லை அவர் மனைவியிடம் பேசிவிட்டு கைபேசி எண் வாங்கிவிட்டு கிளம்பி விட்டோம்.
"சேரி உங்கள கொண்டேய் மானுர்பாளையம் ல விட்ற அங்கிருந்து பெரிய பட்டி போனீங்கன்னா திருப்பூர்க்கு நெறய பஸ் இருக்கு"
மானுர்பாளையம் சென்று கேட்டால் 5 நிமிடம் முன்னர்தான் பேருந்து சென்றது என்றனர்.
" அஞ்சு நிமிஷம்தான புடுச்சரலாம்"
"பரவால்லனா நாங்க அடுத்த பஸ்ஸுக்கு போய்க்ரோ"
"இருங்க"
பேருந்தை பிடிக்க வேகமாக காரை இயக்கினார். ஒரு ஸ்கூட்டி மீது மோதியிருப்பார், நூலிழையில் தப்பினோம். பேருந்தை மட்டும் பார்க்கவே முடியவில்லை. செல்லும்போதே மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டேன், பெயர் கேட்கவில்லை 'ஆண்டவர்' என சேமித்துக்கொண்டேன். இறுதியாக பேருந்தை பார்த்து விட்டோம் ஆனால் பெரிய பட்டியே வந்துவிட்டது!
"ஒரு 200 ரூபா குடுத்ருங்க" என இலக்கியா கூறினாள்.
காரில் இருந்து இருவரும் இறங்கினோம்.
"ரொம்ப நன்றி னா"
"சேரி பா , பாத்து போய்ட்டு வாங்க"
"அண்ணா அமௌன்ட் னா "
"தம்பி என்னப்பா, அதெல்லா வேணா"
"இல்லண்ணா இவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கீங்க"
"போய்ட்டு வாங்க, வேற எதாவது ஹெல்ப் னா கூப்டுங்க"
"சேரி னா, ஜி பே ல நம்பர் இருக்குல்ல"
"என்கிட்ட ஜி பே வே இல்ல போ" என சிரித்துக்கொண்டே காரை திருப்பினார். ரோட்டோரத்தில் பஞ்சு மிட்டாய் சைக்கிள் நின்றது. கூட வந்த இரு சிறுவர்களுக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக்கொண்டிருந்தார். எங்களையும் அழைத்து இரண்டு பஞ்சு மிட்டாய் வாங்கிக்கொடுத்தார்.
இலக்கியா அருகில் இருந்த கடையில் சில திண்பண்டங்களை வாங்கி இரு சிறுவர்களுக்கும் கொடுத்தாள்.
"சேரி னா 14 ஆந்தேதி நடந்து வரவங்க இங்க வருவாங்க ஆனா நா வரமாட்ட , அவங்க வந்தா உங்ளுக்கு கூப்ட சொல்ற"
சரி என டாட்டா காட்டி விட்டு கிளம்பிவிட்டார். நாங்களும் பஸ் எறி வீடு திரும்பி விட்டோம்.
இப்போது 400 கிலோமீட்டர் நடைபயணத்தில் நானும் இணைந்து நடந்து வருகிறேன். இன்றுதான் பேட்டை காளி பாளையம் வழியாக நடந்து தாராபுரம் செல்கிறோம் . பலமுறை அவருக்கு அழைத்தேன் , எடுக்கவில்லை. பார்க்கவும் முடியவில்லை.
கடைசியாக அழைத்து விட்டு கைபேசியைப் பார்த்தேன்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இல்லை!
- கௌதம்
14.01.2025
அன்பார்ந்த கெளதம்,
ReplyDeleteநீங்கள் அந்த பீடி ஆசாமியிடமிருந்து தப்பித்தது உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம். மது அருந்தியிருந்தாலும் நேர்த்தியாக பைக் ஓட்டினார் என நற்சான்று தருகிறீர்!
செய்தக்க அல்ல செயக்கெடும் என்று வள்ளுவர் சொல்வதை இனிமேல் கவனத்தில் கொள்க.
😆😄 தம்பி கௌதம், "ஆண்டவர்" ன்னு save செய்தல்ல, அதான் மறுக்கா வரலையோ😀
ReplyDelete18 , 19 & 20 மூன்று நாட்களும் சீராய் சென்றிருக்கும் என்ற நம்பிக்கையோடும், உங்கள்🩷 பயணத்தில் கரைகளாய் இறையிருக்க வேண்டி🙏
ReplyDeleteஉறங்க செல்கிறேன்