ஒன்பதாம் நாள்
ஜனவரி 19 அதிகாலையில் இருந்தே மழை வந்து கொண்டிருந்தது. நான் ஐந்து மணிக்கு மேல் தான் தூங்கவே தொடங்கினேன். ஆறு, ஆறரை மணிக்கு எழுந்து விட்டேன். மழையில் நனைந்து கொண்டே நானும் கௌதமும் காந்தி கிராமம் வந்ததற்கு ஏதாவது ஒன்றை செய்தாக வேண்டும் என்பதற்காக அங்கு வெட்டிப் போட்டிருந்த செடிகளை எடுத்து போட்டோம்.
எட்டு மணி வரைக்கும் மழை நின்ற பாடில்லை. சரி வேறு வழியில்லை என்று ஏற்கனவே வாங்கி கொண்டு வந்திருந்த மழை கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டு புறப்பட்டோம். இத்தனை நாளாக இதையும் சேர்த்து சுமக்க வேண்டியுள்ளது மழையெல்லாம் வராது எங்காவது கொடுத்துவிடலாம் என்று திட்டிக் கொண்டும் முனகிக் கொண்டும் வந்த கூட்டம் அமைதியாக எடுத்து மாட்டிக் கொண்டது. பயணம் கிளம்பும் முன்னர் அர்ச்சனாவை ஏமாற்றிக் கொடுத்த மழைக்கோட்டு இப்போது பார்க்க என்னுடையதை விட நன்றாக இருந்ததால் மீண்டும் ஏமாற்றி வாங்கிக் கொண்டேன்.
பாட்டியை பார்த்து ஆசிப் பெற்று செல்லலாம் என்று கிளம்பி பாட்டியின் அறைக்கு சென்றோம். எங்களை பார்த்தவுடன் எங்களிடம் வந்து "மூன்றரை மணிக்கே எழுந்து விட்டேன். நீங்கள் நேரமாக கிளம்பி விடுவீர்கள் என்று சொன்னதும் இப்போது கிளம்பி விடுவீர்களோ என்று யோசித்துக் கொண்டே படுத்திருந்தேன். என்னை பார்க்காமல் போய் விடுவீர்களோ என்று எனக்கு தூக்கமே வரவில்லை" என்று சொன்னார். எனக்கு ஒருகணம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "அப்படி எல்லாம் போக மாட்டோம் பாட்டி. உங்களை பார்த்துவிட்டு தான் செல்வோம்" என்றேன். மீண்டும் அவருடன் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். நேரம் ஆகிவிட்டது கிளம்பலாம் என்று சொல்லும் போது சத்தியா அக்காவிடம் வினோபா அவர்களின் புத்தகத்தை எடுத்து வரும் படி பாட்டி சொன்னார். அவர்களுக்கு நேரமாகிவிட்டது கிளம்பட்டும் என்று சத்தியா அக்கா சொன்னார். பாட்டி இதை மட்டும் பார்த்துவிட்டு போகட்டும் என்றார். அந்த புத்தகத்தை எடுத்து வந்து வினோபா அவர்களின் புகைப்படங்களை காட்டினார். வினோபா கன்னியாகுமரி வந்திருந்த போது அவருடன் இளம் கிருஷ்ணம்மாள் இருந்த படமும் ஒன்று இருந்தது.
அதன்பிறகு வள்ளலார் புகைப்படத்தின் முன் விளக்கேற்றி அருட்பெருஞ்ஜோதி சொல்லி பிரார்த்தனை செய்தோம். எங்கள் அனைவருக்கும் பாட்டி விபூதி வைத்துவிட்டார். அவரை மீண்டும் பிடித்து வந்து நாற்காலியில் அமரச் சொன்னோம். அவர் உடனே "அதெல்லா வேண்டாம். உக்காந்தா எப்படி கெலம்பறது" என்றார். முந்தைய நாள் இரவே எங்களுடன் வந்துவிடுவதாக சொல்லிக் கொண்டு இருந்தார். வாசல் வரை வந்து நாங்கள் கிளம்பும் வரை நின்று வழியனுப்பி விட்டு தான் கிளம்பினார்.
காலையுணவை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பைப்பாஸ் ரோட்டில் நடந்து கொண்டிருந்தோம். கௌதம் ஒரு இடத்தில் நிறுத்தி ஒரு வழி ஊருக்குள் செல்கிறது, ஒரு வழி நேராக பைப்பாஸில் செல்கிறது. நாம் ஊருக்குள் பூந்து போவோம், நெடுஞ்சாலையில் சென்றால் சலிப்பூட்டும் என்றான். அனைவரும் ஒப்புக் கொண்டோம். ஒரு கடையில் டீ குடிக்கும் போது ஒரு வயதானவர் வந்து எங்களுக்கு ஆளுக்கு ஒரு வடை வாங்கிக் கொடுத்தார். எங்களால் அதை துளி கூட சாப்பிட முடியவில்லை. ஆனால், வேறு வழியின்றி அவரின் அன்பிற்காக வாங்கி பையில் வைத்துக் கொண்டோம். வீட்டு மனைகள் இருக்கும் சந்து ஒன்றிற்குள் வழி காட்டியது. பயணத்தின் முதல் நாள் நினைவிற்கு வந்தது. வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தேன். பிறகு அனைவரும் சென்றதால் உடன் சென்றுவிட்டேன். மீண்டும் அதே கதை தான். அதே போன்ற முட்டுச் சந்து. இராஜாக்காப்பட்டி செல்ல வேண்டும் என்று சொன்னால் எவருக்குமே அப்படி ஒரு ஊர் இருப்பதே தெரியவில்லை. சிலர் வெவ்வேறு இராஜாக்காப்பட்டிகளை போட்டு குழப்பிக் கொண்டு எங்களையும் குழப்பினர்.
நாங்களே கூகுள் மேப்பில் பார்த்து குத்து மதிப்பாக சென்று கொண்டிருக்கிறோம். புதுக்கோட்டை போவதற்கு இராஜாக்காப்பட்டி வழி செல்ல வேண்டும் என்று மட்டும் தான் எங்களுக்கு தெரியும். சிலர் எங்களிடம் "எந்த இராஜாக்காப்பட்டி? நத்தம் ரோட்டுல இருக்கறதா? திண்டுக்கல் பக்கத்துல இருக்கறதா? திண்டுக்கல் தாண்டி ஒன்னு இருக்குமே அதுவா? ஏன் இது மாதிரி சின்ன ஊருல தங்கறீங்க? யாரு இந்த ஊரெல்ல தேர்ந்தெடுத்தது? வேற ஊரே உங்களுக்கு கெடைக்கலயா? எந்த ஊருக்கு பக்கத்துல இருக்கு? அதுக்கு பக்கத்துல பெரிய டவுன் எது?" என்று சரமாரி கேள்விகளை வீசிக் கொண்டிருந்தனர். இத்தனை எல்லாம் தெரிந்தால் நான் ஏன் உங்களிடம் வழி கேட்கப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.
ஒன்னு ரெண்டு பேரைத் தவிர அப்படி ஒரு ஊர் இருப்பது பெரும்பாலும் யாருக்குமே தெரியவில்லை. ஆனால் எப்படியோ சரியான வழியை பிடித்துவிட்டோம். அந்த வழி முழுக்கவே கிறித்தவர்கள் குடியிருப்புகள் தான். ஏராளமான தேவாலயங்கள் இருந்தன. அத்தனை தேவாலயங்களை அருகருகில் நான் பார்த்ததே இல்லை.
செல்லும் வழியில் ஒரு மகளீர் குழு கூட்டம் போட்டு சீட்டி படித்துக் கொண்டு இருந்தனர். நமக்கு ஒரு கூட்டம் கிடைத்துவிட்டது. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். துண்டு பிரசுரங்களை அனு மற்றும் அர்ச்சனா பின்னால் வெகு தொலைவில் கொண்டு வந்து கொண்டு இருந்தனர். சரி அவர்கள் வந்தவுடன் அதைக் கொடுத்து பேசுவோம் என்று அவர்களுக்காக காத்திருந்தோம். அவர்கள் வந்து சேரும் வரை எதுவும் பேசாமல் இவர்களை பார்த்துக் கொண்டு இருந்தோம். யாரு இவர்கள் என்று அவர்களும் யோசித்துக் கொண்டு எங்களை பார்த்திருந்திருக்கலாம். பத்து நிமிடங்கள் கழித்து வந்தார்கள்.
துண்டு பிரசுரங்களுடன் அவர்களை நோக்கி படையெடுத்தோம். மூன்று பேர் மட்டுமே எங்களை ஏறெடுத்து பார்த்தனர். மற்றவர்கள் அவர்கள் பாட்டுக்கு சீட்டு பண நாயத்தை பேசிக்கொண்டு இருந்தனர். இவர்கள் மூவரும் நாங்கள் பேசுவதை முழுவதுமாக கேட்டு முடிக்கும் முன்னரே, "அரசியல்வாதி, கட்சிக் காரனெல்லாம் அவ்வளோ பணத்த கொள்ளையடிச்சு வெச்சிருக்கறா அவன கேக்காம எதுக்கு எங்கள வந்து கேக்கறீங்க" என்றார். அதற்கு நான் பதில் சொல்ல தொடங்கினேன். அதையும் கேட்காமல் மீண்டும் அவர் பேசத் தொடங்கினார். என்னுடன் வந்த நண்பர்கள் பதில் சொல்ல தொடங்கிவிட்டனர். அவர்கள் தரப்பில் இன்னொருவர் பேசத் தொடங்கினார். அவர்கள், நாங்கள் என்று மாற்றி மாற்றி பேசி அது வாக்குவாதமாக மாறிவிட்டது. ஒரு கட்டத்தில் பணம் வாங்குவது தவறே இல்லை நீங்களும் எங்களை போல் மாறுங்கள் என்று எங்களிடம் சொல்லத் தொடங்கிவிட்டனர். சரி இதற்கு மேல் இருந்தால் வேலையாகாது என்று தெரித்து ஓடிவந்துவிட்டோம்.
கொஞ்ச தூரம் சென்றவுடன் என்னுடைய அக்கா, அவளுடைய தோழி, தோழியுடைய அப்பா ஆகியோர் வண்டியில் வந்து எங்களை சந்தித்தனர். அக்கா எங்களுடன் நடந்து வந்தாள். அங்கிருந்து மீண்டும் அதே நெடுஞ்சாலையில் சென்று சேர்ந்தோம். உமையாள் மற்றும் தேனப்பனும் உணவுடன் வந்துவிட்டனர். அங்கிருந்து ஒரு மண்டபத்தில் ஓய்வெடுத்து உணவு உண்பதற்காக சென்று சேர்ந்தோம். சரியாக மண்டபத்தை அடைந்ததும் கடும் மழை பொழிந்து தீர்த்தது. மழை நீரிலேயே கைகளையும், தட்டையும் கழுவிக்கொண்டு, மழை நின்றவுடன் கிளம்பி விட்டோம்.
கிளம்பி சென்று சில தூரத்தில் மீண்டும் மழை வரத் தொடங்கிவிட்டது. மழைக் கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டோம். இரண்டு புறமும் மரங்கள் சூழ்ந்து அந்த குறுகிய, போக்குவரத்துகள் அற்ற ஊர் சாலையை குடை போல் மூடியிருந்தது. அந்தி வேளை, அந்த மரங்களின் ஊடாக இளமையான ஒளி ஊடுறுவி வந்து கொண்டிருந்தது. மழைச் சாரல்களில் அந்த ஒளி பட்டுத் தெரித்துக் கொண்டிருந்தது. சுற்றி ஒவ்வொரு நிறத்தின் அடர்த்தியும் கூடியிருந்தது. சிகப்பு மேலும் சிகப்பாக, மஞ்சள் மேலும் மஞ்சளாக, பச்சை மேலும் பச்சையாக, இயற்கை மேலும் இயற்கையாக.
எங்களிடம் ஒரே ஒரு தண்ணீர் புட்டி மட்டுமே இருந்தது. அதில் அரைவாசி தண்ணீர் வந்த உடன் நானும் கௌதமும் அதை தூக்கி வீசி விளையாடலாம் என்று முடிவெடுத்தோம். மழையில் நனைந்து கொண்டே விளையாடுவது ஒரு அலாதியான அனுபவம். அனு குறுக்கே வந்து வந்து எங்களிடம் இருந்து அதை பிடுங்க முயற்சித்துக் கொண்டு இருந்தாள். இரண்டு மூன்று முறை கீழே விழுந்து மூடி உடைந்து விட்டது. அதன் பிறகு அதில் விளையாட முடியவில்லை. உடலையும், துணியையும் எப்படியோ மழைக் கோட்டு காப்பாற்றி விட்டது. ஆனால், காலனிகளுக்குள் தண்ணீர் சென்று உள்ளே ஆறு போல் உலாவிக் கொண்டு இருந்தது. ஈரக் காலணிகளை அணிந்து கால்கள் ஊறிப்போய் மரத்துப் போய்விட்டது. அவ்வப்போது அவற்றை கழற்றி சாக்ஸை பிழிந்து மீண்டும் மாட்டிக் கொண்டோம்.
அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றவுடன் அனுவும், அர்ச்சனாவும் வழக்கம் போல் பின்தங்கி விட்டனர். அப்போது அனு எனக்கு அழைத்து நிற்க சொன்னாள். கொஞ்சம் முன்னாடி அமர்வதற்கு ஒரு இடம் இருந்தது அங்கு சென்று காத்திருக்கலாம் என்று மெதுவாக கொஞ்சம் முன்னால் நடந்தோம். அதற்குள் அனு வந்து நடக்காமல் நிற்க முடியாதா என்று கத்தத் தொடங்கினாள். "இரண்டு குடிகாரர்கள் வண்டியில் வந்து எங்களிடம் விசாரித்தனர். நம் நடைபயணத்தை பற்றி சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினோம். கொஞ்ச தூரம் எங்கள் பின் நடந்து வந்தனர். நாங்கள் பயந்து போய் வேகமாக நடந்து வந்து விட்டோம். நிற்க சொன்னால் நிற்க மாட்டாயா" என்று கேட்டாள். வெறுமனே நிற்க சொன்னால் ஓய்வெடுக்க தான் சொல்கிறாய் என்று நினைத்து உக்காருவதற்கான இடத்தை தேடி வந்தோம் என்று சொன்னேன்.
அங்கிருந்து சென்று குமாரபாளையம் என்னும் ஊரில் ஒரு டீக்கடையில் டீ குடிக்கும் போது அந்த கடைக்கார பாட்டி எங்களுக்கு ஒரு பிளாஸ்டிக் பந்தை இலவசமாக கொடுத்தார். சின்ன குழந்தை போல் நானும் கௌதமும் குஷியாகிவிட்டோம். அங்கிருந்து இராஜாக்காப்பட்டி சென்று சேர்ந்தோம். அங்கு குமார் என்பவர் எங்களுக்கு உதவி செய்தார். ஒரு மண்டபத்தில் அன்று இரவு தங்கினோம். அது பயன்பாட்டில் இல்லாத, பராமரிப்பற்ற மண்டபம். உள்ளே கழிவறை வசதி, தண்ணீர் வசதி என்று எதுவுமே இல்லை. ஒரு கழிவறைக்குள் சென்றால் ஒரு கடுமையான வீச்சம் முகத்தில் அரைந்தது. அது கிழிவறை நாற்றம் இல்லை. ஏதோ பிணம் கிடப்பது போல் இருந்தது. மூக்கை அடைத்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தேன். கழிவறை செல்வதற்கு, குளிப்பதற்கு பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் குமார் ஏற்பாடு செய்து கொடுத்தார். பெண்கள் எல்லாம் அந்த வீட்டிற்கு சென்று குளித்தனர். இரவு 11 மணி வரை எங்களுக்காக தூங்காமல் அவர்கள் காத்திருந்தனர். உமையாள் தம்மதி இரவுணவுடன் வந்துவிட்டனர்.
அக்காவும் எங்களுடனே தூங்கிவிட்டாள். இன்றைய தங்குமிடம் கடைசி நேரம் வரை கிடைக்குமா கிடைக்காதா என்று நினைத்து கடைசியில் கிடைத்தது. இந்த ஊரில் உள்ள கடையின் அழைப்பு எண்ணை கூகுளில் இருந்து எடுத்து அவருக்கு கூப்பிட்டு பேசி என்னென்னவோ செய்து இறுதியாக கிடைத்தது. நாளைக்கும் தங்குமிடம் உறுதியாகவில்லை. உறுதியாகுமா என்றும் தெரியவில்லை.
சிபி
மேலும்.
அழகாக துவங்கிய கடினமான நாள். படங்கள் வழக்கத்துக்கு மேல் சிறப்பு ஆனால் அனுபவம் அப்படியல்ல. இத்தனை நாட்களில் தரமற்ற தங்கும் இடம் என்பது இன்று தான் வகித்தது என்பதில் இருந்தே தமிழகம் மாணவர்களை நன்றாகவே பேணி உள்ளதை அறிய முடிகிறது. எதிர் பிரச்சாரம், அலைகழிப்பு ஆகியவை ஒரு நீண்ட பயணத்தின் இன்றியமையாமை. இவை அசல் நேரடி அனுபவம் என்பதாலேயே இதற்கு ஒரு மதிப்பு உள்ளது.
ReplyDeleteஇயற்கை மேலும் இயற்கையாதல் பகுதி ஒரு கவிதை போல உள்ளது.
வினோபாவே உடன் ஒரு படம், டாஸ்மாக் குடிமகன் அச்சுறுத்தல் எல்லாமே கூர்மையான குறு சித்தரிப்புகள். பல நாட்களை சேர்த்து நிகழ்ந்த ஒருநாள் இது. "வாழ்க்கை" என எண்ணிக் கொண்டேன். ஒரு லட்சியவாத வாழ்வில் இந்த சேகரங்கள் நம்மை விவேகம் மிக்கவராக ஆக்கும். ஒரு புத்தகமாக வரத் தக்க தரமான எழுத்து.
"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"
ReplyDelete"கிட்டாதாயின் வெட்டென மற"
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்".
படித்ததும் ; அறைநூற்றாண்டு வாழ் அனுபவத்தில் கற்றதும்; இன்று காலை உங்களின் இப் பதிவையும் ; ஆசானின் "கல்லூரிகளை ஏன் தவிர்க்கிறேன்?"
(https://www.jeyamohan.in/210923/ ) பதிவையும் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து வாசித்ததில், எனக்கும் எதோ சொல்ல இருக்கிறதென்று மனதில் தோன்றினாலும், புத்திக்கு முழுதாய் வசப்படவில்லை.
சற்றே நேரம் எடுத்து, நிதானமாய் என்னுள்ளத்தாழத்தில் எந்த கருத்து கருவை மனம் கிளரி எதோ சொல்ல விழைகிறது என்று அதன் போக்கில் பின் சென்று, புரிந்ததை சொல்ல முயற்சித்திருக்கிறேன்.
அம் மகளிர் குழுவின்னுடனான உங்களின் சந்திப்பு சிலச் சிந்தனையை தூண்டியது. வாக்கு வாதத்தை ஆரம்பிப்பவர் அல்லது வாக்கு வாதம் நிகழும் ஓரிடத்தில், நிச்சயமாக குறைந்தபட்சம் ஒரு தரப்பு நியாமற்ற கருத்தோ அல்லது செயலோ உடைய அடித்தளத்திலிருந்தால் மட்டுமே வாக்கு வாதம் நிகழ முடியும்.
இம் மகளிர் குழுவின் நிலையென்பது, தங்கள் தரப்பை "நியாயப்படுத்தல்" (White List) செய்வதற்கான முயற்சி.
(ஏற்கனவே "Normalise" செய்வது குறித்தும் ஆசான் எழுதியுள்ளார்) பெரும்பான்மையோரை தன் பக்கம் வைத்து கொள்வதால், ஒரு வகையான நியாயப்படுத்தல் முறை.
மக்களாட்சி தேர்தல் முறை என்பதே, மக்கள் தொகையில் 30% - 35% ஓட்டு வாங்கியவரே
(அதாவது, 50% மக்கள் தொகைக்கு மேல் நிராகரிக்கப் பட்டவரே) மக்கள் பிரதிநிதியாகிறார்.
So, சிறுபான்மை மக்களின் ஆதரவு மட்டுமே பெற முடிந்த, ஆனால், வெற்றி வேட்பாளர் என்ற முரண்பட்ட அமைப்பில், எதிர்ப்பார்ப்பும் ஏமாற்றமும், உளச் சோர்வும் அடையாமல்,
'என் கடன் பணி செய்து கிடப்பதே'
என்ற திருநாவுக்கரசு
பெருமானின் ஞானப் பக்குவம் உங்களனைவருக்கும் தனிப் பெருங் கருணையருளால் சித்திக்க பிரார்த்திகிறேன்.