பதினொன்றாம் நாள்

பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து காலை எழுந்து கிளம்பியவுடன் மீண்டும் அந்த ஐம்பது மீட்டரை நடந்து தலைவர் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து நாங்கள் யார், எதற்கு வந்துள்ளோம் என்றெல்லாம் சொன்னோம். அவர் முகத்தின் எந்த சதையும் ஒரு அசைவையும் ஏற்படுத்தாமல் கண் கீழே குவிந்து திறன் பேசியை பார்த்துக் கொண்டு இருந்தது. அவர் வெறுமனே தலையை மட்டும் அசைத்து, "ம்" என்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டு இருந்தார். நாங்கள் சொல்வதை பாதியில் நிறுத்திவிட்டு நன்றியை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம். 
சிவராஜ் அண்ணா சொல்லி வடிவமைத்து அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை சிவகுரு நாதரின் தம்பி பாலு பேருந்தில் வைத்து அனுப்பி அதை உமையாள் அவர்களின் கணவர் தேனப்பன் திண்டுக்கல் சென்று பெற்றுக் கொண்டு வந்து நேற்று இரவு எங்களிடம் கொடுத்திருந்தார். அவற்றை தீர்த்தாக வேண்டும் என்று வெறிகொண்டு அங்கிருந்து மக்களுக்கு கொடுத்துக் கடந்து சென்றோம். இரவு கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திக் கொண்டு இருந்த சாலையும் அதன் இரண்டு புறமும் விரிந்து சூழ்ந்திருந்த மரங்களும் காலை நடக்கும் போது ரம்யமான ஒன்றாக தெரிந்தது. இயற்கை எங்களை வரவேற்பது போல் இருந்தது. ஒருதுளி வெயில் கூட எங்கள் மேல் விழாமல் அரவணைத்துக் கொண்டது. அத்தனை கிளைகளும் கரங்களாக மாறி மேலே தூக்கி விரித்து அணைத்துக் கொள்ள சொன்னது. உண்மையில் அவள் ஒரு அன்னை. 

அங்கிருந்து வெகு சுலபமாக, விரைவாக மணக்காட்டூர் வந்து விட்டோம். ஆறு கிமீ நடந்த உணர்வே இல்லை. இயற்கையின் மடியில் தவழ்ந்து உருண்டு வந்து சேர்ந்து விட்டோம். அங்கு வந்ததும் முதல் வேலையாக நானும் கௌதமும் ஒரு பிளாஸ்டிக் பேட்டையும், பந்தையும் வாங்கினோம். முந்தைய நாள் மழையில் காலணிகளுக்குள் தண்ணீர் புகுந்து ஈர சாக்ஸில் நடக்க வேண்டியிருந்ததால் இன்று அனைவரும் பாதுகாப்பிற்கு ஆளுக்கு ஒரு சோடி செருப்பு வாங்கி பையில் சேர்த்துக் கொண்டோம். 
அங்கிருந்து மீண்டும் கிராமச்சாலை வழியாக செல்லத் தொடங்கினோம். செழுமையும் வறட்சியும் மாறி மாறி தென்பட்டது. ஒரு கிராமத்தில் கோவில் நோம்பி. பல தூரங்களுக்கு மைக் செட்டுகள் கட்டி பாட்டு சத்தம் பறந்து கொண்டிருந்தது. கடும் ஒலி. இரண்டு செவிடர்கள் பேசிக் கொள்வது போல் தான் மற்றவரிடம் பேச வேண்டும். ஒரு வீட்டில் கூட்டாக குடும்பங்கள் கூடி வெளியில் அமர்ந்திருந்தனர். அங்கு சென்று பேசலாம் என்று நானும் இன்னொரு தோழியும் சென்றோம். அவர்கள் நம்பமுடியாமல் திகைத்து நின்றார்கள். ஆச்சரியத்துடன் மகிழ்ந்தார்கள். பிறகு தண்ணீர் அளித்துவிட்டு செல்லும் வழியில் கோவில் திருவிழா அன்னதானம் கொடுக்கிறார்கள் சாப்பிட்டுவிட்டு செல்லும் படி சொன்னார்கள். அப்போது என்னுடன் இருந்த தோழி தக்காளி சாப்பாடாக இருந்தால் அவ்வளவாக சரிவராது நடப்பது சிரமம் என்பது போல் சொன்னாள். சரி பரவாயில்லை என்று முன்னால் சென்ற நண்பர்களுக்கு அழைத்து அன்னதானம் கொடுக்கிறார்களாம் பார்த்துக் கொண்டே செல்லுங்கள் என்றேன். 

ஒரு இடத்தில் கருப்பு நிற தண்ணீர் தொட்டியில் முகம் கழுவச் சென்றேன். அங்கு ஒரு பச்சை நிற பட்டாம்பூச்சி அங்கும் இங்கும் தவ்விக் கொண்டிருந்தது. மின்னும் நிறம். வேகமாக பறக்காமல் ஒரே இடத்தில் மாறி மாறி அமர்ந்து கொண்டிருந்தது. அதைப் பிடிப்பதற்காக நானும் தாவித் தாவி குதித்து முயன்று பார்த்தேன். ஒன்றும் கை வரவில்லை. பச்சை நிற ஜிகுனா தடவிய மெல்லிய தட்டை மேலெழுந்து மேலெழுந்து விழுவது போல் இருந்தது. 
அங்கிருந்து நண்பர்கள் காத்திருந்த இடத்திற்கு சென்று சேர்ந்து விட்டேன். அதில் இருவர் ஒரு மணிக்கு  அழைபேசியில் ஒருவருடன் பேச வேண்டியிருந்தது. அதனால் அவர்கள் கொஞ்சம் முன்னால் செல்வதாக சொல்லி சென்றார்கள். அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் உணவு வாங்கி வருவதாக சொல்லி அந்த கோவிலுக்கு சென்றோம். அங்கு சென்று பார்த்தால் கறி விருந்து படைத்துக் கொண்டு இருந்தார்கள். கோழிக்கறி வருவல், ஆட்டுக்கறி குழம்பு என்று கனமான மதிய உணவு. அங்கிருந்து அவர்களுக்கும் வாங்கிச் சென்றோம். ஒரு தென்னைமரத் தோப்பில் அமர்ந்து அவர்கள் அதை சாப்பிட்டதும் அங்கேயே அனைவரும் ஓய்வெடுத்தோம். தென்னை ஓலைகளை மெத்தையாக்கி குளும் காற்றில் படுத்ததில் பெரும் அசதி வந்து படர்ந்து கொண்டது. நல்ல தூக்கம். எழுந்தவுடன் நானும் கௌதமும் கொஞ்ச நேரம் நேற்று வாங்கிய பிளாஸ்டிக் பேட் மற்றும் பந்தை வைத்து கிரிக்கெட் விளையாடினோம். அதன் பின் மீண்டும் ஒரு நெடுஞ்சாலை பயணம். 

என்னுடன் இரண்டு தோழிகள், எங்களுக்கு முன்னால் ஒரு கிமீ தள்ளி இரண்டு நண்பர்கள், எங்களுக்கு பின்னால் ஒரு கிமீ தள்ளி ஒரு தோழி என்று பெரும் பிரிவுகள் குழையாமல் நடந்து சென்று இறுதியாக ஒரு பேக்கரியில் ஒன்று சேர்ந்தோம். சென்னையை சேர்ந்த நண்பர் ஆய்வாளர் செந்தில் அவர்கள் மணப்பாறையில் உள்ள ஒரு ஆய்வாளருக்கு அழைத்து நாங்கள் வருவதை தெரிவித்து, அவர் மூலம் நாங்கள் தங்கவிருக்கும் திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி என்னும் ஊரில் உள்ள காவல் துறையினரிடம் பேசி ஒரு மண்டபத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அவருடைய இன்னொரு நண்பரான திருச்சியை சேர்ந்த கேசவன் எங்களை பார்க்க அங்கிருந்து வந்து கொண்டிருந்தார். 

ஒரு நல்ல சௌகரியமான மண்டபம் தான். கேசவனுடன் மணப்பாறையை சேர்ந்த குமரேசன் என்பவரும் வந்திருந்தார். நாங்கள் அடுத்தாக தங்கவிருக்கும் இடங்கள் குறித்து கேசவன் விசாரித்தார். நாளை தங்கும் ஊர் காரையூர். அதைக் கேட்டதும் அவருடைய நண்பர் ஒருவர் அங்கு இருக்கிறார் அவருடைய வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி அவருக்கு அழைத்து உடனடியாக பேசி நாளைய தங்குமிடத்தை உறுதி செய்துவிட்டார். அவருடைய நண்பரின் பெயர் சிலம்பரசன். சிலம்பரசனின் அம்மா விருந்தினர்களை உபசரிப்பதில் கில்லாடி. ஒரு வேளை சாப்பிடுவதற்கு இலையை போட்டுவிட்டு மூன்று வேளைக்கான சோற்றைக் கொட்டி உண்ண சொல்லுவாராம். இவர் எப்போது சென்றாலும் இப்போது தான் சாப்பிட்டுவிட்டு வந்தேன் என்று தான் சொல்லுவாராம். 

இன்றைய இரவுணவும் உமையாள் தம்பதி கொண்டு வந்துவிட்டனர். அதில் அவர்கள் செய்து கொண்டுவந்த இடியாப்பமும் அதை தொட்டு கொள்வதற்கு நாட்டு சர்க்கரை போட்ட தேங்காய் பாலும் சுவையின் உச்சம். அபாரமான உணவு. அடடா!.. என்ற வார்த்தையை மட்டும் பத்திருபது முறை சொல்லியிருப்பேன். 
400 கிமீ முடிவில் இவர்களால் 4 கிலோ கூடித் தான் இருபேன் போல் தெரிகிறது. இந்த பயணத்தில் இன்று இன்னொரு நல்ல சொகுசான நாள்.

சிபி

மேலும்..

Comments

  1. இது பணம் வாங்காது ஓட்டு போட்ட எனக்கு இதைப் படிக்க மகிழ்ச்சி யாக உள்ளது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

400 கி.மீ நடைபயணம்

அறப்போர் ஜெயராம் நேர்காணல்

ஏழாம் நாள்