முதல் நாள் நடை - சரண்யா


நடைப்பயணம் ஒவ்வொரு நாளையும் குறித்து தொடர்ச்சியாக munai.in வலைப்பதிவில் சிபி பதிவேற்றி வருகிறார். என்னதான் ஒரே பயணமாக ஒன்றாக நடந்தாலும், ஒவ்வொருவருக்கும் அந்த பயணம் அளிப்பது வேறு தான். அதனால் தான் எல்லோரையும் எழுதும்படி வலியுறுத்தியும் வருகிறேன். 
நெடுநாட்கள் நீண்ட தூர நடைப்பயணம் குறித்த ஆசை இருந்தது. 2018 இல் Forrest Gump திரைப்படம் பார்த்தது முதல். அதுவே, இந்த பயணத்தில் நான் கலந்து கொண்டதன் நோக்கம்,  திறந்த வானின் கீழ் வெகு நேரம் இருக்கும் வாய்ப்பும், அது அகத்திற்கு என்ன அளிக்கும் என்பது தான். அறம் கல்வி மாணவர்கள் மீது பெரும் மதிப்பு உண்டு. பெருந்தலையூரில் அவர்கள் வாக்குக்கு கை நீட்டாதீர்கள் என்ற கோரிக்கையை முன் வைத்து வெற்றி கண்டதின் அனுபவம் குறித்து பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதை தலைமை ஏற்று நடத்திய அனு ஶ்ரீ இந்த பயணத்தில் இணைந்திருக்கிறார்.
நடைப்பயணம் முழுதாக செல்வதா பாதி செல்வதா என்று எல்லா சாத்தியக்கூறுகளையும் அலசி ஆராய்ந்து கடைசியில் சனிக்கிழமை முதல் ஐந்து நாள் பொங்கல் விடுமுறையில் செல்லலாம் என்ற முடிவு எடுத்திருந்தேன். வீட்டில் நடைப்பயணம் என்று சொன்னால் எதுவும் சொல்லி இருக்க மாட்டார்கள். ஆனால் எனக்கு யோசனையாக இருந்தது. கல்லூரி மாணவர்களுடன் கோயம்பத்தூர் சுற்றி உள்ள பகுதிகளில் இருப்பேன் என்று மட்டும் சொன்னேன். நான் கல்லூரி படித்த காலத்தில் எங்கள் வீட்டில் வாக்குக்கு எந்த கட்சிக்கு வாக்கு அளிக்கிறார்களோ அந்த கட்சியிடம் காசு வாங்கி இருக்கிறார்கள். அது குறித்து வீட்டில் எந்த பேச்சும் எழாது. எனக்கும் தம்பிக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், எங்கள் வரிசை குடியிருப்பில் பிறர் சொல்லி எனக்குத் தெரியும். "அம்மா கூட இந்த கட்சி கிட்ட வாங்குனாங்க சரண்யா" . ஏமாற்றமாக இருந்தாலும், தெரிந்தது போல எங்கள் வீட்டில் நான் காட்டிக்கொள்ளவும் இல்லை. அதனால் இப்போது நான் இந்த கோரிக்கையை முன் வைப்பது  ஒரு குற்ற உணர்ச்சியாகவே இருந்தது. அதுவே உறுத்திக் கொண்டும் இருந்தது.

வீட்டிற்க்கு அழைத்து,
"அம்மா, நான் இவ்வாறு பிரச்சாரம் செய்யும் கல்லூரி மாணவர்களுடன் காந்தி சென்ற வழியில் பிரச்சாரம் செய்ய போகிறேன். வாக்குக்கு எப்போதும் காசு வங்கி விடாதே . எனக்கு தெரியாமல் கூட செய்து விடாதே" என்றேன்
"ஏ, நான் அதல்லா எப்பயோ ஏறக்கட்டியாச்சு. அஞ்சி வருஷம் மேல ஆச்சி. தேர்தல் முடிஞ்சி இது அதின்னு கேள்வி கேட்டா காசு வாங்கிட்டு தான ஓட்டு போட்டீங்கன்னு சொல்றானுங்க, நான் அதோட வாங்கரது இல்ல"  என்றார்கள். 

எனக்கு கொஞ்சம் எடை குறைந்தது போல இருந்தது.

அம்மா மேலும் ஒரு கேள்வி கேட்டார். "இப்படி பிரச்சாரம் செய்தால் யாரும் ஏதாவது செய்ய மாட்டாங்களா" 

"அதெல்லாம் ஒன்னும் செய்ய மாட்டாங்க, அப்புறம் பேசுறேன்" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டேன். 

அதன் பிறகு தான் நினைவு வந்தது, போன
பஞ்சாயத்து தேர்தலின் போது, நான் வீட்டில் இருந்தேன். என் தோழியின் அம்மா பணம் குடுக்க வந்தார். அம்மா "நாங்க வாங்குறது இல்ல" என்று சொன்னார். "ஏங்க்கா, இந்த காலத்தில... " என்று அவர் சொல்ல
"இல்லமா நாங்க வாங்குறது இல்ல" என்று மறுத்தார்.

என் தனிப்பட்ட எண்ணம் இவ்வாறு தான் இருந்தது. நாம் வாங்க வேண்டாம் என்ற முடிவைத்தான் நாம் எடுக்க முடியும். பிறரின் முடிவை நாம் ஒன்றும் செய்ய முடியாது. யார் கொடுத்தாலும் யார் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளட்டும். ஆனால், ஓட்டு போடும்போது அவர்கள் தேர்ந்து எடுப்பவர்களுக்கு போடலாம் தானே. அப்படி தொடர்ந்து செய்தால் கொடுப்பவர்களே கொடுப்பதை நிறுத்தி இருக்க வேண்டும். இத்தனை காலம் பிசகாமல் இது தொடர்ந்து நடக்கிறது என்றால், வாங்கிய பணத்திற்கு தான் ஓட்டு போடுகிறீர்களா? இது என்ன வகை நேர்மை என்று எனக்குப் புரிந்தது இல்லை.

எங்கள் வீட்டின் கதை குறித்து பின்னர் சிபியிடம் சொன்ன போது, இவ்வாறு மாறினால் சரி தான், நல்லதும் கூட, ஆனால், தனக்கு ஒரு பிரச்சனை என்று மாறுவதை விட வாக்குக்கு காசு வாங்குவது கீழ்மையான செயல் என்று மாறுவது மேலான விழுமியம். அதுவே முதன்மைப்படுத்த வேண்டும் என்று சொன்னான். அதற்கு மேல் பேச்செழவில்லை.
11.1.2025  அன்று காலை 5 மணிக்கு கிளம்பி மதியம் 2 மணிக்கு கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இறங்கினேன். போத்தனூர் வரை நடக்க முடியாது. உக்கடம் வரை நடக்கலாம் என்று நடந்தே சென்றேன். ஒரு பயிற்சிக்காக. ஊமை வெயில் தான். ஆனால் தலையில் எண்ணெய் இல்லாமல் தலை வலி வந்துவிட்டது. முதுகில் பளு தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. இந்த உடல் உபாதைகளையும் பையையும் கணக்கில் கொள்ளாமல் அவசர முடிவா என நானே சந்தேகித்து விட்டேன். உக்கடத்தில் இருந்து போத்தனூர் வரை ஒரு பேருந்தில் சென்று காந்தி நினைவகம் சென்று சேர்ந்தேன். நரேன் வந்திருந்தார். அவரிடம் பேசிவிட்டு அருங்காட்சியகம் உள்ளே சென்றேன். காந்தி வாழ்வு குறித்து படித்த போது, இது எல்லாம் எவ்வாறு சாத்தியப்பட்டது என்று வியப்பாகத் தான் தோன்றியது. 

அதன் பின் நரேன் உடன் விஷ்ணுபுரம் விழாவில் அரங்கேற்றப்பட்ட நாடகம் குறித்து பேசி கொண்டு இருந்தேன்.

அப்போது வேலவன் அவர்களின் மாணவி என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.

"நீங்கள் இப்படி ஓட்டுக்கு காசு வாங்க கூடாதுன்னு நடக்கப்போரீங்கள்ள உங்களுக்கு பயமாக இல்லையா" 

"எந்த மாறி பயம் சொல்றீங்க"

"யாராச்சும் எதுவும் செஞ்சா என்ன செய்வீங்க"

"அந்த பயம் இல்ல, மீறி ஏதாச்சும் நடந்தா ஃபேஸ் பண்ணிக்க வேண்டியது தா"

அந்த மாணவி, என் வழ வழ பதிலுக்கு திருப்தி அடைந்தது போல தெரியவில்லை.

நரேன், "இந்தியாவில் அஹிம்சை முறையில் செய்யப்படும் எந்த போராட்டத்திற்கும் இடம் உண்டு. இங்கு எவரும் அஹிம்சை முறையில் எதையும் செய்யலாம். யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்" என்றார். 

"ம்ம்" என்றாள் 
  
அடுத்த கேள்வியாக, "நீங்கள் ஏன் நடந்து சென்று ஓட்டுக்கு காசு வாங்காதீங்கன்னு சொல்கிறீர்கள், பஸ் ல அந்தந்த ஊருக்கு போலாம் ல" 

"நடந்து செல்வதன் மூலம் நாம் மக்களையும் அந்த நிலப்பகுதிகளையும் நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். பேருந்தில் செல்லும் போது வேகமாக கடந்து செல்லும் நில காட்சிகளை நாம் அந்த அளவு உள் வாங்கி இருக்க மாட்டோம். நடந்து செல்லும்போது கூடுதலாகவே அறிவோம். மக்களின் எதிர்வினைகள் குறித்த நம் அனுமானங்கள் உடைந்து உண்மை நிலவரம் புரியும் " என்றேன்.

"ம்ம்" என்றாள் 

அவள் அந்த பதில்களில் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை. எனக்கும் என் பதிலில் திருப்தி இல்லை.
நான் இந்த குழுவில் ஒரு observer ஆகத்தான் சென்றேன். இவர்களிடம் கேட்கவே நான் சில கேள்விகள் வைத்திருந்தேன். ஆனால், பதில் சொல்லும் நிலையில் நான் இருப்பேன் என்று நினைக்கவில்லை. 

நான் நரேனிடம், "எனக்கு இந்த பயணம் குறித்து எந்த ஊகமும் இல்லை, எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கும், மக்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள், இதன் பயன் என்ன என்று யோசிக்க கூடவில்லை. இவர்களுடன் செல்ல வேண்டும் என்ற உந்துதல் தான் இருந்தது" என்று சொன்னேன்.  ஆனால், 5 நாள் பயணத்தில் எனக்கு சில பதில்கள் திரண்டு வந்திருந்தன. 

மாலை 4:30 மணி அளவில் சிபி நடைப்பயணம் குறித்த ஒரு அறிமுகம் வழங்கிய பின்னர் கண்ணன் தண்டபாணி அவர்கள் காந்தியின் நடைப்பயணங்கள் குறித்தும் அவர்கள் யோகேஷ் என்ற நடைப்பயணியுடன் நடந்த அனுபவங்கள் குறித்தும் ஒரு சிற்றுரை ஆற்றினார். அதன் பின் நாங்கள் நடக்க துவங்கினோம். எங்களுடன் மாணவர்களும் பிறரும் கொஞ்ச தூரம் உடன் வந்தனர். லைலா பானு மாற்றும் அர்ச்சனாவின் அம்மாவும் வந்திருந்தனர். அவர்கள் விடைபெற முடியாமலும் தவிப்பை வெளிக்காட்டி கொள்ளாமலும், "சரி பத்திரம், பாத்து" என்று சொல்லியபடி கூடவே வந்தனர். அவர்கள் எப்படி ஒத்துக்கொண்டார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. கண்ணன் தண்டபாணி அவர்களின் குடும்பமும் எங்களுடன் நடக்கத் தொடங்கினர்.

வழியில் எங்களைப் பார்த்த ஒருவர், பேருந்தில் செல்ல வேண்டியது தானே என்று பேருந்து நிறுத்தத்திற்கு வழி சொல்ல ஆரம்பித்துவிட்டார். நாங்கள் நடந்து தான் போறோம் என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டோம். "நாம எதுக்கு நடக்குரோம்னு சொல்லலையே" என்று கொஞ்சம் தள்ளி யோசித்து சிரித்து கொண்டோம். "வழியில் கேட்பவர்களிடமும் சொல்லுங்கள்" என்று கண்ணன் தண்டபாணி சொன்னார். அதன் பின் ஒரு பேக்கரிக்கு சென்றோம். நாங்கள் வாங்கிய பப்ஸ் ஊசிப்போகும் தொடக்க நிலையில் இருந்தது. அந்த கடைக்காரரிடம் சொன்னோம், இதை விட்டுவிடுங்கள் வேறு வாங்கி கொள்ளுங்கள் என்றார்.  கண்ணன் அவர்களின் மனைவி எங்களின் உடல் நலனின் முக்கியத்துவம் குறித்தும் 400 கி.மீ நடைப்பயணம் குறித்தும் அந்த அண்ணனிடம் சொன்னார். அவர் ஆச்சரியமாக எங்களை நோக்கினார். நாங்கள் அளித்த காகிதத்தைப் பார்த்துவிட்டு "எங்க ஊர் பேர் லா போட்டிருக்கு, என்ன கா சொல்றீங்க, நடந்தேவா போறீங்க", நாங்கள் பதில் அளிப்பதற்குள் அங்கு வேலை பார்க்கும் பிறரிடம் காகிதத்தை காண்பித்து பேசிக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்த பின்னர் நான் அவரின் ஊர் குறித்த விவரங்கள் வாங்கவும் அவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளவும் கடைக்குள் சென்றேன். பல வாடிக்கையாளர்களின் கணக்கை வேகமாக வாய் கணக்கிட்டபடி என்னுடன் பேசினார். "அக்கா, ரொம்ப நல்ல காரியம், கான்ஃபிடென்டா பண்ணுங்க, அண்ணன் கிட்ட நம்பர் குடுத்திர்க்கேன், எதாச்சுனா கூப்பிடுங்க" என்றார். நான் விடைபெற்றுக்கொண்டு நகர்ந்தேன். "அக்கா, ஒரு நிமிஷம்" என்று சொல்லி ஆறு பிஸ்கட் பேக்குகளை அளித்தார். இந்த நடைப்பயணத்தில் தேவைக்கு அதிகமாக எதையும் பெறக்கூடாது என்ற நிபந்தனை இருந்ததால் நான் சிபியிடம் சென்று அவற்றை நாம் பெற்றுக்கொள்ளலாமா என்று கேட்டுவிட்டு பையில் வைத்துக்கொண்டேன்.
போகும் வழியில் சிபியிடம் பேசிக் கொண்டு சென்றேன். 

"இந்த பயணம் குறித்த எண்ணம் முதலில் எப்படி வந்தது?"

நேர் வழி விருது விழா முடிந்த பின்னர் கிருஷ்ணன் சார் அழைத்து இப்படி ஒரு நடைப்பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்றார். செய்து பார்க்கலாம் என்றே தோன்றியது.
 
சரி நடைப்பயணத்தால் என்ன பயன் என்று நீ நினைக்கிறாய். 
"இந்தியாவில் நடைப்பயநகள் புதிது அல்ல.  மக்களிடம் ஒரு வாகனத்தில் சென்று சொல்வதை விட நடந்து சென்று ஒரு விழுமியத்தை முன் வைப்பது மேலும் வளு சேர்க்கும். நம்பிக்கை வரும். அதற்காக நம் அர்ப்பணிப்பை காட்டும். இது தனிப்பட்ட வகையில் அகம் சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்." 

மேலும் அறம் கல்வி இயக்கம் குறித்துப் பேசியபடி சென்றோம். குழுவில் இருக்கும் பெண்களிடம் எப்படி அவர்கள் வீட்டில் இந்த நடைபயணத்திற்கு ஒப்புக்கொண்டார்கள் என்று கேட்டேன். 



அனு தன் அப்பாவிடம் முதலிலேயே சொல்லிவிட்டு இருக்கிறாள். அம்மாவிடம் வெகு சமீபத்தில் தான் சொல்லி இருக்கிறாள்.

அர்ச்சனா வீட்டில் அறம் கல்வி குறித்து நல்ல அபிப்பிராயம் இருப்பதால்,  சம்மதித்து விட்டார்கள். ஆனால், அவளுடைய தட்டை கால்களுடன் எப்படி நடப்பாள் என்று யோசித்தார்கள் என்று சொன்னாள்.

சௌமியா என்னும் சூறாவளி எல்லோருக்கும் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்ததால் அறிமுகம் கூட செய்து கொள்ள முடியவில்லை. 

எனக்கு கால் பாதங்கள் வலிக்க தொடங்கி இருந்தன.

நெடுஞ்சாலை வழி செல்வதில் எனக்கு பயம் இருந்தது. சிலர் சாலையின் வெள்ளை கோட்டிற்கு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று மாறி மாறி சென்றனர். ஓரமாக வாருங்கள் என்று சொல்லியபடியே சென்றேன். அந்த பதற்றத்தில் இருந்து வெளி வர முயன்றேன். வாகனங்கள் வளைவுகளில் கூட வேகமாக சென்றன. கையில் ஒரு டார்ச் லைட் வைத்து கொள்ளலாம் என்று பேசியவாரு சென்றோம்.

ஒரு பெட்ரோல் பங்க் வளைவில் ஒரு தெரு வழியாக சென்றால் 600 மீட்டர் குறைவு என்று கூகுளில் காண்பித்ததால் அந்த வழி செல்லலாம் என்று சிபியும் கௌதமும் முடிவு எடுத்தனர். கண்ணன் தண்டபாணி வேண்டாம் என்று தான் சொன்னார். பின்னர் எல்லோரும் செல்லலாம் என்ற முடிவு எடுத்தோம். 

அங்கே காலி வீட்டு மனைகளும் சில வீடுகளும் இருந்தன.
கொஞ்ச தூரம் சென்றதும்,  நாய்கள் சுற்றி வளைத்துக்கொண்டன. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. "நின்ற இடத்தில் அசையாமல் நில்லுங்கள். I'm your friend என்று சொல்லுங்கள்" என்று கண்ணன் தண்டபாணி அவர்களின் மனைவி சொன்னார். அதில் ஒரு நாய் வந்து மோப்பம் பிடித்து நக்கி விட்டு சென்றது. இன்னொன்று வந்து கால் சந்துகளில் முன்னும் பின்னும் சென்று சுற்றி வந்தது. அந்த சோதனைகள் முடிந்ததும் வழி விட்டன. குரைப்பதை நிறுத்தவே இல்லை. எங்கெங்கோ நாய்கள் சத்தம். யாரோ என் கையைப் பிடித்திருந்தார்கள். கண்ணன் தண்டபாணி அவர்களின் மனைவி எங்களிடம், "இந்த பயணத்தில் உங்களுக்கு நாய் பயம் விட்டுப்போகும். இன்னும் நிறைய பயங்கள் இல்லாமல் ஆகும்" என்றார். "எனக்கு சாலையில் செல்லும்போது இப்படி செல் அப்படி செல் என்று தொடர்ச்சியாக சொன்னால் எரிச்சல் வரும். அதையே நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன். இதில் இருந்து வெளி வர வேண்டும்", என்றேன். இந்த பயணத்தில் அதையும் விட்டுவிட வாய்ப்பிருக்கிறது என்றார். அப்படியே நடந்து சென்று வலது பக்கம் திரும்பினால் இருளுக்குள் ஒரு நீண்ட வெள்ளை வாயிற் கதவு. "டேய் சிபி" என்று முனக ஆரம்பித்தோம். உள்ளே இருந்து வந்தவரிடம் "இந்த பக்கம் போக வழி இருக்கா?", என்று கேட்டோம் . "உள்ளே போகலாம் வெளியில் செல்ல முடியாது. புதர்களும் நாய்களும் இருக்கும்" என்றார். "யார் நீங்க இந்த நேரத்தில இருட்ல இங்க எப்படி வந்தீங்க" என்று கேட்டார். நடைப்பயணம் குறித்து சொன்னதும், ஆச்சர்யமாக பார்த்தார். உள்ளே சென்று ஒரு சோலார் டார்ச் லைட் கொண்டு வந்து அளித்தார். நாங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்கிறோம் என்று கேட்டறிந்து கொண்டார். அது புது டார்ச் லைட் ஆம். முந்தைய நாள் தான் வாங்கி இருக்கிறார். அவர் பெயர் செல்ல முத்து, சோலார் தொடர்பான தொழில் என்று சொன்னார். அங்கிருந்து வெளியேற அவரே தலைகீழ் 'ப' வடிவில் ஒரு வழி சொன்னார். "இனி சுற்றுப்பாதையில் செல்ல வேண்டாம், மேலும் டார்ச் லைட் வைக்க இடம் இல்லை" என்று சிபியை கேலி செய்து சிரித்துக்கொண்டே நடந்தோம். 

கண்ணன் தண்டபாணி அவர்களின் மனைவி ஒரு மொட்டை பனை மரத்தைக் காட்டினார். "ஐ மொட்டை பனை மரம்" என்று கையில் இருந்த டார்ச் லைட்டை மரத்தின் மேல் நுனியில் அடித்துவிட்டேன். வெகு தூரத்திற்கு நல்ல வெளிச்சம். சட்டென்று, அவர் என் கையை கீழ் இருக்கினார். பறவைகள் கூடாக பயன்படுத்தும் என்றார். உடனே, க்ரீச்சொலிகள் அங்கிருந்து எழுந்தன. புள்ளி ஆந்தைகள் இருக்கின்றன என்றார். எதிர் திசையில் இருந்தும் அவ்வொலி வந்தது. பின்னர், பறவையியல் குறித்தும் வானியல் குறித்தும் பேசிய படி நடந்து சாலையை அடைந்தோம். 

கண்ணன் தண்டபாணி அவர்களின் குடும்பத்தினர் எங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டனர். மகிழ் மலர் மேலும் கொஞ்ச தூரம் நடக்கலாம் என்றாள். ஆனால், நாங்கள் தங்க இருக்கும் ஊரில் திரும்பி வர இரவு பேருந்து வசதி இல்லாததால் அவர்கள் கிளம்பினர்.

அதற்குள் பச்சாம்பளையம் கிராமத்தில் இருந்து எங்களைத் தேடி வந்து விட்டனர். "வெவரமா கேட்டு வாரதில்லையா தம்பி, வேவரமாட்டு வாரோனும்" என்று சொல்லிவிட்டு, அடுத்து வழி தவறாமல் இருக்க அங்கங்கே அடையாளங்களை சொன்னார். சில இடங்களில் காத்திருந்து மேலும் வழி சொன்னார். அந்த வழியில் செல்ல செல்ல நல்ல இருட்டு. லாரிகள் தான் அதிகப்படி சென்றன. கொஞ்ச தூரம் சென்றதும் லாரி வரத்து குறைந்தது. சாலை நடுவில் கொஞ்ச தூரம் நடந்தோம். மின் விளக்குகள் இல்லை. 
 நல்ல இருட்டு. நிலா வெளிச்சம் . பின் பக்கம் இரு பக்கமும் அடர்த்தி அற்ற மரங்கள். இது போல அது போல இருந்தது என்று சொல்ல முடியவில்லை. இதுவரை நான் காணாத காட்சி. மிகவும் உற்சாகமாக இருந்தேன். லைலா மற்றும் அர்ச்சனா அமானுஷ்ய கதைகளை சொல்ல ஆரம்பித்தனர். கொஞ்சம் திகில் ஊட்டியது. அப்படியே, திசை திருப்பி அறம் கல்வியில் அவர்கள் வாசிப்பு போட்டியில் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் குறித்து பேசத்தொங்கிவிட்டோம். 
பச்சாம்பாளையம் சென்றதும் ஒரு கோவிலில் தங்கினோம். சென்றவுடன் அந்த மரத்தடியில் கை கால்களை நீட்டி வளைத்து Stretching செய்துவிட்டேன். சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் பேசியபடி இருந்தனர். நான் சிபிக்கும் ஒரு பெரியவருக்கும் இடையில் சென்று அமர்ந்தேன். "நீங்க சொல்றது சரி தம்பி ஆனா... " என்று பேசத்தொடங்கினார். சிபி அமைதியாக இருந்தான். நான் பதில் அளித்தேன். அவர் மீண்டும் "சரி தான், ஆனா... " என்றார். என்ன பேசினோம் என்று எனக்கு தெளிவாக நினைவில் இல்லை. ஆனால் திரும்ப திரும்ப பேசிய விஷயத்தில் தான் நின்றது. சிபி அமைதியாக இருந்தான். கடைசியாக, "அது சரி, நீங்க கொஞ்ச பேர் இப்படி வந்துருக்கீங்க இல்ல, அது மாறி ஒரு நூறு பேராவது நடந்தா தானே  இதுலா மாறும்", என்றார். "சரி, நீங்க வேணும்னா எங்க கூட நடங்க" என்று சொல்லி எழுந்தேன். அவரும் அருகில் இருந்த அம்மாவும் சிரித்து விட்டனர். நாங்கள் தூங்கச் சென்றோம்.  சிபி சிரித்துக்கொண்டே என்னிடம், "அட என்னத்துக்கு கா அவர்கிட்ட பேசிட்டு இருக்கீங்க, அவர் தண்ணியப்போட்டு பேசிட்டு இருக்கார்" என்றான். எனக்கு அவர் குடி போதையில் இருந்தது தெரியவில்லை. திண்ணையில் அமர்ந்து திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை மெல்லும் பல்லு போகாத கிழவர் போல் இருந்தார். இருவரிடமும் பேசிப் பயன் இல்லை. நாங்கள் அறைக்குள் சென்று, தூங்குவதற்காக சுவர் ஓர இடத்தைப் பிடிக்க போட்டிபோட்டுக்கொண்டோம்.

சரண்யா 

மேலும்..

Comments

Popular posts from this blog

400 கி.மீ நடைபயணம்

அறப்போர் ஜெயராம் நேர்காணல்

ஏழாம் நாள்