எட்டாம் நாள்

நேற்று 28 கிமீ நடந்து வந்த களைப்பு, இன்று ஓய்வுநாள் போன்றவை சேர்ந்து காலை அனைவரும் தாமதமாகவே எழுந்தோம். பாட்டி எங்களுக்காக நேரமாகவே எழுந்து காத்திருப்பதாக சொன்னார்கள். எழுந்து குளித்து கிளம்பி நானும், கௌதமும் நாங்கள் போன முறை வந்த போது வைத்த மரங்களை சென்று பார்த்தோம். அங்கிருந்து நாங்கள் வரும் போது சரியாக பாட்டி படிகளில் இறங்கிக் கொண்டு இருந்தார். லைலா பானுவும், மஞ்சரி அக்காவும் கையை பிடித்திருந்தனர்.
செருப்பு போட்டுக் கொள்ளும் படி அனைவரும் சொன்னோம். வேண்டாம். இவ்வளவு பேர் செருப்பில்லாம இருக்கும் போது நான் மட்டும் போட்றதா எனக்கு வேண்டாம் என்று அவர் தீர்க்கமாக அதை மறுத்துவிட்டார். பிரார்த்தனைக்காக ஜெகந்நாதன் அவர்களின் சமாதிக்கு சென்றோம். வழியில் சிறு சிறு கற்கள், மரப்பட்டைகள் எல்லாம் இருந்தது. அவர் அவற்றை மிதித்து விடுவாரோ, வலிக்குமோ என்று மிகுந்த பயமாக இருந்தது. சிலவற்றை மிதித்து உடல் சிலிர்த்தார். அது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. 


பாட்டி அங்கு வந்து அமர்ந்ததில் இருந்து அவரின் காலின் அருகிலேயே அமர்ந்திருந்தேன். பாட்டியை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவரை பார்க்கும் போது உள்ளுக்குள் ஏதோ செய்தது. ஏதோ ஒன்றை உணர்ந்தேன். இது ஒரு அரிய தருணம் என்பது தெரியும். அதைத் தாண்டி ஆன்மிகமாக ஏதோ ஒன்றை உள்ளம் பற்றிக் கொண்டது. இந்த ஒருநாள் முழுக்கவே அப்படித் தான். 

அருட்பெருஞ்ஜோதி பாடலை பாட்டி பாடினார். கைகளை கூப்பி கண்களை மூடினேன். எதற்கென்று தெரியாமல் கண்களில் நீர் வந்தது. துடைக்க துடைக்க மீண்டும் வந்தது. அந்த நடுக்கக் குரல் நம்மை ஏதோ செய்து விடுகிறது. அவரின் அருகாமை நமக்கு ஒன்றை அளித்து விடுகிறது. அவரை பார்த்து வியந்து கொண்டே இருக்கிறோம். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி உள்ளம் ஒன்றை அடைகிறது. அந்த உணர்வை என்னால் விளக்கவே முடியவில்லை. சொல்ல முடியாதது ஒரு பெரும் தவிப்பை அளிக்கிறது. இனி அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு இது போன்ற மனிதர்களை தேடி தேடி சந்திப்பதையே வாழ்க்கையாக்கிக் கொள்ளலாமா என்று கூட யோசித்தேன். 
பிரார்த்தனை முடிந்து எங்களோடு பாட்டி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தார். பெரும்பாலும் போன முறை நாங்கள் சந்தித்த போது சொன்ன கதை தான். சத்தியா அக்காவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, அவரை கலைமகள் பள்ளியில் சேர்த்தது போன்று. அங்கங்கு சில புதிய தகவல்கள், சம்பவங்களை சொன்னார். ஆனால் எனக்கு திரும்ப திரும்ப ஒன்றை கேட்பதில் துளி கூட சலிப்பு இல்லை.‌ வெறுமனே அவரிடம் பேசிக்கொண்டு இருந்தால் போதும். அவர் பேசுவதை மட்டும் நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டேன். அவராகவே தொடர்ந்து பேசுவதால் கேள்வி எதுவும் நான் கேட்கவில்லை.

கொஞ்ச நேரம் பேசிவிட்டு சாப்பிட சென்றோம். நாங்கள் அங்கும் இங்கும் சும்மா சுற்றிக் கொண்டு இருந்தோம். பாட்டி எங்களை சாப்பிட சொன்னார். பாட்டிக்கு பசிப்பது எனக்கு புரிந்தது. நீங்கள் சாப்பிடுங்கள் பாட்டி என்றேன். "நா மட்டும் எப்புடி சாப்பட்றது எல்லாரு வரட்டும்" என்றார். எல்லோரும் அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டோம். எல்லோரும் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். நான் மட்டும் பாட்டியின் அருகில், அவர் பாதத்தின் அருகில் கீழே அமர்ந்திருந்தேன். இன்றைய பொழுதும், உணவும் ஆசிர்வதிக்கப்பட்டது. 
சாப்பிட்டு முடித்த பின் பேராசிரியர், பழனிதுரை அவர்கள் எங்களிடம் பேசினார். பாட்டியை வீட்டின் அறையில் அமர வைத்துவிட்டு அவருடன் பேசுவதற்கு மஞ்சரி அக்காவை விட்டுவிட்டு நாங்கள் ஜெகந்நாதன் அவர்களின் சமாதிக்கு வந்தோம். பாட்டி அங்கு தானும் வருவதாக அடம் பிடித்து வந்துவிட்டார். பழனிதுரை தனிமனிதனுக்கும் முழு மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன, ஏன் முழு மனிதனாக இருக்க வேண்டும், அறிவிற்கும் ஞானத்திற்குமான வேறுபாடு, மூலம் நமக்கு சொல்லும் வினை அதனால் வரும் விளைவு போன்றவற்றை குறிபிட்டு பேசினார். எங்களிடம் பெரிதாக கேள்விகள் எழவில்லை. கால்களை மடக்கி கீழே அமர முடியவில்லை. கொஞ்ச நேரத்திற்கு பின் கடும் வலி எழுந்தது. சில இடங்கள் மரத்துப்போகத் தொடங்கியது. கால்களை நீட்டி, மடக்கி பார்த்தேன். ஒன்றும் கேட்கவில்லை. கொஞ்ச நேரத்திற்கு பின் அவர் பேசுவதை கவனிப்பது சிரமமாக இருந்தது. அவர் நன்றாக தான் பேசினார், என்னால் ஒரு இடத்தில் அமர்ந்து அதை கவனிக்க முடியல்லை.
என்னால் கட்டுப்படுத்த முடியாத தூக்கம் வந்தது. அனைவரும் சென்று மதியவுணவு சாப்பிட்டார்கள். இன்று நடக்காததால் எனக்கு பசிக்கவில்லை. தூங்குவதற்காக அறைக்கு சென்றேன். தூக்கம் உச்சநிலையில் இருக்கும் போது, என்னுடைய இமைகள் என் கட்டுப்பாட்டை இழந்து தவிக்கும் போது என்னுடைய அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறார்களாம். இப்போது தான் இவர்கள் வர வேண்டுமா என்றிருந்தது. வேறு வழியும் இல்லை. அவர்கள் ஆட்டோ சத்தம் கேட்டதும் தூக்கத்தில் நடப்பவனாய் எழுந்து வெளியில் சென்றேன். 
என்னுடைய அம்மா, பெரியம்மா, அம்மாச்சி, அக்கா, அக்காவின் குழந்தை எல்லோரும் வந்திருந்தனர். இவர்கள் எல்லாம் வருவார்கள் என்று நான் எதிர் பார்த்திருக்கவில்லை. என்னை பார்த்ததும் மாபெரும் முக மலர்ச்சியுடன் என்னை நோக்கி வந்தனர். "அம்மாச்சி எல்லாம் ஏன் தூக்கிப் போட்டு வந்தீங்க பாவம்" என்றேன். "அது தா இங்க வரனு சொன்னதும் ஆளுக்கு முன்னாடி கெளம்பி வந்துருச்சு" என்றார்கள். எனக்கு ஒட்டுமொத்த களைப்பும் நீங்கி விட்டது. அவர்களை பாட்டியை பார்க்க அழைத்துச் சென்றேன். பாட்டி உள்ளே உறங்க சென்றவர் எங்களை பார்த்ததும் திரும்பி வந்து விட்டார். வந்து என்னுடைய அம்மாச்சியை கட்டி அணைத்துக் கொண்டார். கைகளை பிடித்து கண்களில் ஒத்திக் கொண்டார். அதன் பின் நாற்காலியில் அமர்ந்து அம்மாச்சியின் தோளில் கை போட்டவாறு பேசத் தொடங்கி விட்டார். பேசிக்கொண்டிருக்கும் போது என்னுடைய அம்மா என்னுடைய அம்மாச்சிக்கு 80 வயது என்று சொன்னார். அதற்கு பாட்டி தனக்கு 100 வயது என்று சொன்னார். அவர் கண்ணுக்கு என்னுடைய அம்மாச்சி சின்ன பெண்ணாக தெரிந்திருப்பார் என்று நினைக்கிறேன். 

அடுத்து திருவாரூரில் அவர் செய்யப் போகும் பணி குறித்து சொன்னார். குளிர் குறைந்ததும் உடனடியாக அங்கு சென்று கையெழுத்துப் போட வேண்டும் என்று சொன்னார். என்னுடைய பெரியம்மாவை பார்த்து "நா என்ன வேல செய்யற தெரியுமா?" என்று கேட்டார். அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. அவரே "உனக்கெல்லாம் நெலம் கொடுக்கற வேல" என்றார். பெரியம்மா அவருக்கு தெரியாமல் "எனக்கு நெலம் இல்லனு தெரிஞ்சிருச்சு பாரு இவங்களுக்கு" என்று சொன்னார். சிரித்துக் கொண்டேன்.
பாட்டி, என்னுடைய அக்காவின் குழந்தையை பிடித்து கொஞ்சி முத்தமிட்டார். ஒரு வயது கூட ஆகாத, எதுவும் அறியாத குழந்தை, நூறு வயதான, இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து மக்களுக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலம் பெற்று தந்த முதியவர் இரண்டு பேரையும் ஒரே காட்சியில் பார்ப்பது ஒரு முழு வாழ்க்கையை காட்டி சென்றது. 

இன்னமும் தொடர் பணிகள் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறார். அவருக்குள் அந்த அருட்பெருஞ்ஜோதி அணைவதே இல்லை. 

கொஞ்ச நேரத்தில் பாட்டி மீண்டும் உறங்கச் சென்றுவிட்டார். சங்கர் காந்தி கிராமம் வந்திருந்தான். வெகு நாட்கள் கழித்து அவனை பார்த்தேன். எவ்வளவு கேட்டும் எங்களுடன் வர மறுத்து மீண்டும் ஊர் திரும்பிவிட்டான். நான் சென்று கொஞ்ச நேரம் தூங்கிவிட்டேன். 
எழுந்து மாலை மீண்டும் பாட்டி இருக்கும் இடத்திற்கு சென்றேன். பாட்டியின் மகன் பூமிக்குமார் வீடியோ காலில் எங்களிடம் பேசினார். எங்கள் நடை பயணம் குறித்து, இதற்கு முன் நாங்கள் செய்த பணி குறித்தெல்லாம் அவரிடம் பேசினோம். அருட்பெருஞ்ஜோதி சொல்லி பிரார்த்தனை செய்து அழைப்பை துண்டித்தோம். பாட்டியுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றோம். 

நடக்கவில்லை என்பதாலும், மதியமே தூங்கிவிட்டேன் என்பதாலும் இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. அந்த இடமும் என்னை ஏதோ ஒருவகையில் தூங்கவிடாமல் செய்ததாக உணர்ந்தேன். ஐந்து மணிக்கு வைத்திருந்த அலாரத்தை நாலேமுக்கால் மணிக்கு அணைத்துவிட்டு கண்களை மூடினேன். அப்போதும் தூக்கம் வரவில்லை. அதிகபட்சம் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேன். பாட்டி எங்களிடம் பேசிக் கொண்டு இருந்த போது ஒன்று சொன்னார். "அடுத்த மாதம் இங்கு ஒரு விழா உள்ளது அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்ய வேண்டும், அடுத்த வாரம் திருவாரூர் சென்று செய்ய சில பணிகள் உள்ளது. தனியாக செய்ய முடியவில்லை. இந்த வேலையெல்லாம் செய்ய ஆளில்லை என்று நினைத்து கவலைப் பட்டுக் கொண்டு இருந்தேன். அப்படி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே நீங்கள் வந்து விட்டீர்கள். இனிமேல் எனக்கு கவலை இல்லை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள்" என்றார். அதுவும் என்னை தூங்கவிடாமல் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். 

சிபி.

படங்கள்: மோகன் தனிஷ்க் 

மேலும்..

Comments

  1. என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வில் ஒன்று கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களைச் சந்தித்தது.

    என் நண்பர்கள் 400 கி.மீ. நடைபயணம் மேற்கொண்டுள்ளதால் அவர்கள் வந்து சேர்வதற்கு முன்பாகவே நான் காந்தி கிராமத்தை அடைந்துவிட்டேன். இருள் ஆரம்பித்துக் கொண்டிருந்த வேளை. சாலை முழுவதும் பேரமைதி, ரயில் போகும்போது மட்டும் அமைதி‌ குலைகிறது.சுத்தமான சாலை.முதல்முறை தனியாக சென்றதால் வீடு தெரியவில்லை.பயமும் தயக்கமும் இரண்டு கால்கள் ஆகின. சிவராஜ் அண்ணாவிற்கு அழைத்து கேட்டு கேட்டுச் சென்று கொண்டிருந்தேன். வீட்டின் வாசலை கண்டறிந்தேன்.எட்டிப்‌பார்த்தேன் 6 மணி ஆகியும் மின்சார விளக்குகளை போடாமல் வைத்துள்ளார்களே! என்று எண்ணினேன். உள்ளே சென்றேன், சில அறைகள் கொண்ட பழைய கட்டிடம் போல் தெரிந்தது. அங்கு ஒளி இல்லை, சற்று உள்ளே மங்கிய மின்சார விளக்கு எரிந்து கொண்டிருந்தது அதை நோக்கி நடந்தேன். ஒரு பெரிய மரத்தடியில் கார் ஒன்று நிருத்தப்பட்டிருந்தது. அது ஒரு விசாலமான ஹால் இரண்டு புறமும் அறைகள். நான் வாசலில் வந்து நின்றேன். கூட்டிப் பெருக்கி சின்ன கோலம் போடப்பட்டிருந்தது. வாசற்படிகளின் இரண்டு புறமும் வைக்கப்பட்டிருந்த செடிகள் என்னை வரவேற்றன. ஒளியை இருள் இன்னும் முழுமையாக விழுங்கவில்லை கால்வாசி விட்டு வைத்திருந்தது.
    ஹாலின் இரண்டு புறமும் இருந்த அகன்ற தூண்கள்.வலது புற தூணில் வினோபா வின் பெரிய படம் இடது புறம் காந்தி அவற்றுக்கு முன் நான் கண்டது நடு ஹாலில் ஒரு நாற்காலியில் பெரிய வள்ளலார் படம், ஜோதி ஏற்றப்பட்டிருந்தது. மெல்லிய ஊதுபத்தி வாசனை. ஐந்து நிமிடம் அகத்திலும் புறத்திலும் பெரிய நிசப்தம்.அதை திறந்திருந்த ஒரு அறையிலிருந்து வந்த குக்கர் விசில் சத்தம் கலைத்துவிட்டது.
    அன்று இரவு என் 5 மணி நேர பயண நோக்கம் ஈடேரவில்லை, பாட்டியை பார்க்க முடியவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்துவிட்டேன்‌.
    காலை தயாராகி ஹாலுக்குச் சென்றைன் நேற்றிரவை விட பனியின் ஒளியில் மிளிர்ந்து கொண்டிருந்த காலைப்பொழுதில் அந்த இடம் இன்னும் அழகாக இருந்தது. பாட்டி அறையில் இருந்தார். நானும் என் நண்பர்களும் காய்கறிகள் நறுக்கி கொண்டிருந்தோம்.திடீரென்று கனத்த முதிய குரல் கேட்டது, பாட்டி பின்னாடி நின்று கொண்டிருந்தார் திடுக்கிட்டு மூவரும் எழுந்தோம், கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை சுற்றிய பாதங்களை தொட்டு வணங்கினேன்.
    பூசணிக்காய் நறுக்கி கொண்டிருந்தோம் நல்ல விதைகளை எடுத்து வைக்கச் சொன்னார், பக்கத்தில் இருந்த காட்டில் விதைப்பதற்கு. வயது வேறுபாடு இன்றி வருபவர்களை "வாங்க வாங்க" என்று அழைத்தார்."நூறு வயது நெருங்கி விட்டது நான் இன்னும் இருக்கிறேன் என்றால் எனக்கு இன்னும் பணிகள் உள்ளன அதனால் தான் இறைவன் இன்னும் என்னை வைத்திருக்கிறார்" என்றார். நான் மெய் சிலிர்த்தேன் நூறு அகவையிலும் தலராத நம்பிக்கையும் பெரும் ஊக்கமும் கொண்ட சிறந்த பெண்மணி.
    என் பயணத்தின் நோக்கம் முடிந்தது. ஆன்மாவின் நோக்கம் தொடங்கியது.



    ... அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை...

    ReplyDelete
  2. அன்பார்ந்த சிபி,
    வாழ்க நலமுடன். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் போன்ற மாமனிதர்களைச் சந்திக்கும் போது மகத்தான உணர்வுகள் எல்லோருக்கும் வந்துவிடாது. அதற்கு உரிய Receiver இருந்தால்தான் அதை உணரமுடியும். அந்த Receiver உங்களிடத்தில் உள்ளது என நினைக்கிறேன். கட்டுரை மிகச் சிறப்பாக வந்துள்ளது. பயணம் முடிந்தபின், சில மாதங்களில் நூலாக வெளிக்கொணர முயல்க.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

400 கி.மீ நடைபயணம்

ஏழாம் நாள்

அறப்போர் ஜெயராம் நேர்காணல்