பத்தாம் நாள்
பயணங்களில் நண்பர்களை தேர்ந்தெடுப்பது அந்த பயணத்தை செழுமையாக்குவதில் மிக முக்கியமான பங்கு. எனக்கு தற்போது இருக்கும் நண்பர்களில் சிறந்தவர்கள் தான் என்னுடன் இந்த பயணத்திற்கு வந்துள்ளார்கள். ஆனாலும் அவர்கள் இன்னொருவர்கள். வேறு ரசனை கொண்டவர்கள். வேறு பார்வை கொண்டவர்கள். வேறு எல்லைகள் கொண்டவர்கள். என்னுடன் முரண்கள் கொண்டவர்கள். எவ்வளவு குறைவான முரண்களை கொண்டுள்ளோமோ அவ்வளவு இணக்கமானவர் என்று சொல்லிக் கொள்ளலாம். அப்படி இந்த குழுவில் எனக்கு இணக்கமானவன் கௌதம். பெரும்பாலும் இந்த பயணம் முழுக்க நாங்கள் தனித்தனியாகவே நடந்து வந்தோம். ஆனால் ஒன்றாக இருந்த பொழுதுகளில் வெடித்து சிரித்துக் கொண்டும், சில நேரங்களில் ஆழமான எதாவது ஒன்றை பற்றி பேசிக் கொண்டும் இருப்போம். அனைவருமே எனக்கு நெருக்கமானவர்கள், அன்பிற்குரியவர்கள், மகிழ்ச்சிக்குரியவர்கள். அனைவரிடத்திலும் மகிழ்வாகத்தான் இருப்பேன். ஆனால் கௌதம், நான் அவதானிக்காத சிலவற்றை அவதானித்து சொல்லிவிடுவான். கூர்மையான அவதானிப்புகள் அவனிடம் உள்ளன. புதியதை தேடி செல்லும் எண்ணமும் ஆர்வமும் அவனுக்கு இருக்கும். நிலப்பரப்புகளை உன்னிப்பாக கவனிப்பான். சில இடங்களில் என்னைவிட மேம்பட்டவனாகவும் அவன் தெரிந்துள்ளான். ஒருமுறை சென்னை நாங்கள் சென்ற போது பைக் ஓட்டுபவர்கள் ஒருவர் கூட தலைக்கவசம் அணியாமல் இருக்கவில்லை என்பதை அவன் சொன்ன பிறகே நான் கவனித்தேன். அவனிடம் இருந்து சிலவற்றை நான் கற்றுக் கொள்ளவும் நினைத்துள்ளேன். மற்றவர்களிடம் இருந்தும் அது போல் அரிதாக சில நேரங்களில் நினைத்துள்ளேன். நான் வளர்வதற்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்களில் ஒருவன் கௌதம். அவனுக்கும் நான் அவ்வாறே இருக்க நினைக்கிறேன்.
ஜனவரி 20 காலை ராஜாக்காப்பட்டியில் இருந்து புதர் என்னும் ஊரில் தங்குவதற்காக புறப்பட்டோம். கூகுள் மேப்பில் புதர் என்று தான் இருந்தது. புதர் என்ற ஊரே கேட்பதற்கு புதிதாக இருந்தது. அந்த ஊரை பற்றி விசாரித்தாலும் யாருக்கும் தெரியவில்லை. அதனால் அந்த ஊரைத் தாண்டி மணக்காட்டூர் என்னும் ஊரில் தங்குவதாக முடிவெடுத்தோம். முந்தைய நாள் இரவு எங்களை தங்க வைத்த குமார் அந்த ஊரிலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக சொன்னார். என் அக்காவுடைய தோழியின் அப்பாவும் அந்த ஊரில் தங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக சொன்னார். அதனால் நம்பிக்கையுடனேயே புறப்பட்டோம்.
ஒரு கடையில் தண்ணீர் வாங்க நின்றோம். அர்ச்சனா டீ வேண்டும் என்று தவித்துக் கொண்டு இருந்தாள். அது டீக்கடை இல்லை. ஆனால், அவர்கள் வீட்டில் வைத்துக் கொண்டு வந்து கொடுத்தனர். தண்ணீருக்கும் பணம் பெற்றுக் கொள்ளவில்லை. திண்டுக்கல் வந்ததில் இருந்து கொங்கு மாவட்டங்களில் நான் கவனிக்காத ஒன்று இங்கு பெட்டிக் கடைகள் மிக அதிகம். எங்கள் ஊர்களில் என்னுடைய சிறு வயதில் சில பெட்டிக் கடைகளை பார்த்துள்ளேன். இப்போது ஒன்று கூட கண்ணில் படுவதில்லை. ஆனால் இங்கு ஏராளமாக உள்ளது. மிட்டாய்கள், திண்பண்டங்கள் கொண்ட குடுவைகளுடன் அளவாக ஒருவர் அமர்வதற்கு ஏற்றார் போன்ற கடைகள். மரத்தால் ஆன பலகைகளால் சுவர் போன்ற அமைப்பு. மூன்றடி உயரத்தில் ஒரு பலகை அதன் மேல் அந்த குடுவைகளை வைத்து ஒருவர் அமர்ந்திருப்பார். பெரும்பாலான பெட்டி கடைகளின் வடிவம் இவ்வாறே இருக்கும். வசதிக்கு ஏற்றார் போல் வேறு வடிவங்களும் உண்டு. அங்கு நடக்கத் துவங்கி நிற்காமல் ஒரே நடை தான். நானும் கௌதமும் முன்னால் சென்று பழுதான இரண்டு டிராக்டர்களும் பைக்குளும் நிறுத்தப்பட்டிருந்த ஒரு புளி மரத்தடியில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தோம். பின்னால் வந்த பெண்கள் கூட்டம் அந்த இடத்தை நிராகரித்துவிட்டு வேறு இடம் நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டனர். இந்த இடத்தை கண்டுபிடிக்கவே நாங்கள் வெகுதூரம் நடந்து வந்தோம். வேறு இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று எண்ணிக்கொண்டு இவர்களிடம் சொன்னால் எதாவது சொல்லுவாள்கள் என்று அமைதியாக நடக்கத் தொடங்கிவிட்டோம். அனு ஒரு மின்வாரியத் துறை அலுவலகத்திற்குள் சென்று பேசி அங்கு ஓய்வெடுக்க ஏற்பாடு செய்துவிட்டாள். உள்ளே சென்று படுத்து கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து மீண்டும் மாலை நடக்கத் தொடங்கினோம்.
திருமலைக்கேனி என்னும் ஊர் வழியாகத்தான் மணக்காட்டூர் செல்ல வேண்டும். அந்த ஊர் ஒரு மலைக்குன்றின் மேல் உள்ளது. அந்த மலையை ஏறிக் கடந்து மறுபுறம் செல்ல வேண்டும். ஆனால் அது கடுமையான மலையேற்றம் என்று சொல்ல முடியாது. எளிதான ஒன்று தான். ஆனால், அர்ச்சனாவின் முகம் வாடிப்போய் தொங்கிப்போய் நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்போது தான் உணர்ந்தேன் அவளுக்கு தட்டைக் கால் இருப்பதால் மலையேற்றம் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியது.
ஒரு டீக்கடையை பார்த்து அனுவும், சௌமியாவும் அமர்ந்ததும் அர்ச்சனா கொண்டாட்ட மனநிலையில் திளைக்கத் தொடங்கிவிட்டாள். அப்போது தான் சிரிப்பு மீண்டெழுந்து வந்தது. அதைத் தாண்டி செங்குறிச்சி என்னும் ஊரையும் தாண்டி குடகிப்பட்டி என்னும் ஊர் இருந்தது. அங்கிருந்து மணக்காட்டூர் ஆறு கிலோமீட்டர். மணி ஆறரை ஆகிவிட்டது. அப்போதே சூரியன் மறைந்து இருளத் தொடங்கிவிட்டது. இரண்டு புறமும் மலைத் தொடர்கள் நீண்டு சென்று கொண்டிருந்தது. அதன் மத்தியில் உள்ள சமதளப் பகுதிகளின் நடுவே ஒரு சாலை சென்றது. அந்த மலைத் தொடர் அடுக்கடுக்காக தெரிந்தது. இரண்டு புறமும் நீண்டு கிடக்கும் மாபெரும் மலைகளின் நடுவே ஒரு கருஞ்சாலை நீண்டு வளைந்து சென்று கொண்டிருந்தது. அந்த சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர் திசையில் இருந்து ஸ்கூட்டரில் வந்த ஒரு பெண்மணி, நின்று கொண்டிருந்த ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்தார். எங்களை பார்த்ததும் அழைத்து விசாரித்தார். நாங்கள் நடந்து வரும் போது ஏற்கனவே வேறு ஊரில் இதற்கு முன் பார்த்துள்ளார். அப்போது கேட்காமல் இப்போது கேட்டார். கோவையில் இருந்து பத்து நாளாக நடந்து வருகிறோம் என்று சொன்னோம். பெரும் வியப்புக்குள்ளானார். பெண்களை அவர்கள் வீட்டில் அனுமதித்தது குறித்து மேலும் வியப்பு அவருக்கு. சாப்பாடு, தங்குமிடம் எப்படி கிடைக்கும். நான் சும்மா பேச்சுக்கு "உங்கள மாதிரி யாராவது சோறு போட்டு தங்க வெச்சா தங்கிக்க வேண்டியது தான்" என்று சொன்னேன். அவர் உடனே கையில் இருந்த நாற்பது ரூபாயை எடுத்து எங்கள் கையில் திணித்து விட்டார். இருந்த போதும் அவருக்கு எங்களின் பிரச்சாரத்தின் மேல் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் அருகில் இருந்த நபர் இதை பெரிய ஒன்றாக கருதி பேசினார். அவர் இருக்கும் இல்லத் தோட்டத்தில் தங்கிக் கொள்ளும் படியும் சொன்னார். வேண்டாம் இன்னும் செல்ல வேண்டும் என்றோம். இந்த தோட்டம் எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது இல்லையென்றால் உங்களுடனேயே நடந்து வந்துவிடுவேன் என்று சொன்னார். நான் உடனே நீங்கள் விரும்பினால் ஒரு கிலோமீட்டர் கூட நடக்கலாம், வருகிறீர்களா என்று கேட்டேன். அவரின் குரல் சற்றே குறைந்தது.
பின்னர் அங்கிருந்து முன்னோக்கி நடக்கத் தொடங்கினோம். ஒரு ஐம்பது அடி நடந்ததும் சிலர் மிகுந்த பயத்திற்குள்ளாகி விட்டார்கள். இரண்டு புறமும் மலையுள்ளது, மரங்கள் சூழ்ந்து சாலை அடர்த்தியாக உள்ளது, இருட்டும் வேறு ஆகிவிட்டது. இதற்கு மேல் நடந்தால் எதாவது ஆகிவிடும் என்று பெரும் அச்சத்திற்குள்ளாகி விட்டார்கள். இங்கேயே தங்கி விடலாம் என்றார்கள். எனக்கும் அவர்கள் அச்சம் புரிந்தது. இதற்கு மேல் நடக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம்.
அனைவரையும் அதே இடத்தில் நிற்க சொல்லிவிட்டு நானும் லைலா பானுவும் மீண்டும் திரும்ப சென்று எங்களை தோட்டத்து வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என்று சொன்னவரிடம் பேசினோம். இருட்டாகிவிட்டது இதற்கு மேல் செல்வது ஆபத்தாக இருக்கும் என்று தோன்றுகிறது இன்று ஒருநாள் உங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளலாமா என்று கேட்டோம்.
அவர் ஒருகணம் யோசித்தார். பிறகு இது அவருடைய வீடு இல்லை ஓனர் என்ன சொல்வார் என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு அவருக்கு அழைத்தார். இவரின் அழைபேசி அந்தப்பக்கம் பேசுபவர் என்ன பேசுகிறார் என்று ஐந்தாறு அடி தள்ளி நிற்கும் போது கூட வெளியில் தெளிவாக கேட்டது. மிக உறுதியாக இந்த இடம் நாம் தங்குவதற்கு கிடைத்து விடும் என்று நம்பிக் கொண்டு இருந்தேன். ஆனால் அவர் சொன்ன முதல் வார்த்தையே, "இல்ல இல்ல வேண்டா அலோ பண்ணாதீங்க" என்று தான். எங்கள் வயது கேட்டார். பெண்கள் நான்கு பேர் ஆண்கள் இருவர் கல்லூரி மாணவர்கள் தான் இளம் வயதினர் என்று அவர் சொன்னதும் அவர் "அதெல்லா அலோவே பண்ணக் கூடாது. பின்னாடி எதாச்சு கேசாயிரும், உங்க பேரு தான் மொதல்ல அடிபடும்" என்றார். நீங்கள் வேண்டுமானால் அவர்களிடம் ஒருமுறை பேசிப் பாருங்கள் கொடுக்கிறேன் என்று சொல்லி என்னிடம் கொடுக்க வந்தார். அவர் உடனே "அதெல்லா ஒன்னு வேண்டாங்க நீங்களே சொல்லி அனுப்பீருங்க, அவங்கள அனுப்பி விடுங்க மொத" என்றார். உடனே நாங்கள் சேரி பரவாயில்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அவரிடம் சொன்னோம். அவர் மிகவும் வருத்தப்பட்டார். அவரை பார்த்தால் உண்மையாகவே தங்க வைக்க நினைத்த நபர் போல் தான் தோன்றியது. கிளம்பும் போது அவர் அக்கறையாக இருட்டில் பார்த்து போங்க காட்டெருமை எறங்குனாலும் எறங்கும் என்று சொல்லி மேலும் பயத்தை கிளப்பி விட்டார்.
முன்னால் நின்றவர்களிடம் சென்று வீடு கிடைக்காததை மட்டும் சொன்னோம். கொஞ்ச தூரம் சென்றவுடன் மீண்டும் வேறு ஒரு வீட்டில் வேறு சிலர் சென்று கேட்பதாக சொல்லிச் சென்றார்கள். அது பாதுகாப்பு சுவர் கொண்ட கொஞ்சம் சிறிய வீடு தான். அங்கு ஒரு வயதானவரும் அவருடைய மனைவியும் தான் இருந்தார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் சென்று கேட்டதும் அவர்கள் தங்கவைக்க இடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இவர்கள் உடனடியாக வெளியே இந்த வாசலில் கூட படுத்துக் கொள்கிறோம் என்று சொல்லியுள்ளார்கள். அந்த வயதானவர் அதெல்லாம் வேண்டாம் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் நிழற்குடையில் சென்று படுங்கள் அங்கு மின்விளக்கெல்லாம் கூட இருக்கும் மிகவும் பாதுகாப்பான இடம் என்றார். இவர்கள் எதுவும் பேசாமல் வந்துவிட்டார்கள்.
தொங்கிய தலையுடன் பெரும் பயத்துடன் எதுவும் பேசாமல் முன்னால் நடக்கத் தொடங்கிவிட்டனர். புதர் என்று நாங்கள் நினைத்துக் கொண்டு இருந்த ஊரின் பெயர் புதூர். கூகுள் மேப் மீண்டும் ஏமாற்றி விட்டது. அந்த ஊரில் ஒரு பள்ளிக் கூடம் உள்ளது, அங்கு தங்கிக் கொள்ளலாம் என்று முதலில் கேட்ட இடத்தில் சொன்னார்கள். அதற்கு இன்னும் இரண்டு கிலோமீட்டர் உள்ளது. வேறு வழியில்லை என்று அதை நோக்கி நடக்கத் தொடங்கினர். இங்கு தான் கொஞ்சம் வீடுகள் உள்ளது வேறு வீட்டில் மீண்டும் முயற்சித்து பார்க்கலாம் என்று நினைத்து இவர்களை நிற்க சொல்லிவிட்டு நான் உள்ளே சென்று பேசினேன். அவரும் இன்னும் இரண்டு மூன்று பேர் வருவார்கள் இடம் போதாது என்று சொல்லிவிட்டார். ஊர் தலைவரிடம் பேச முடியுமா என்று கேட்டேன். அவரிடம் அழைப்பு எண் இருந்தது. ஆனால் அழைப்பதற்கு பெரிதும் தயங்கினார். எதற்கு என்றே தெரியவில்லை. அழைப்பு எண் கொடுங்கள் நான் பேசுகிறேன் என்றும் கேட்டுப் பார்த்தேன். யார் கொடுத்தார்கள் என்று கேட்பார் அதனால் வேண்டாம் என்று சொன்னார். பிறகு கடும் உள போராட்டத்திற்கு பின் அவருக்கு அழைத்து பேசினார். அவர் தெளிவாக ஒன்றும் சொல்லாமல் கோவையில் இருந்து நடந்து வருகிறார்கள், தங்க இடம் கேட்கிறார்கள் என்று மட்டுமே சொன்னார். என்னிடம் கொடுத்து பேச சொன்னார். நான் சொல்லத் தொடங்கும் முன்னரே பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது அதன் வாசலில் உள்ள திண்ணையில் படுத்துக் கொள்ளும்படி சொன்னார். இரண்டு ஆண்கள் நான்கு பெண்கள் என்று சொன்னேன். பெண்கள் இருப்பது தெரிந்தவுடன், அலுவலகத்தை திறந்து கொடுக்கச் சொல்கிறேன் உள்ளே சென்று படுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். ஏன் வந்துள்ளோம், எதற்கு வந்துள்ளோம், நாங்கள் யார் என்று எதுவுமே கேட்கவில்லை.
தலைவருக்கு அழைத்து கொடுத்த நபரின் பெயர் விக்னேஷ். அவரிடம் இருந்து பஞ்சாயத்து அலுவலகம் செல்லும் வழியை கேட்டு பெற்றுவிட்டு அதை நோக்கி நடக்கத் தொடங்கினோம். ஒரு அரைக் கிலோமீட்டரில் அந்த இடம் வந்துவிட்டது. குமார் என்பவர் எங்களுக்காக அந்த அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். தலைவர் இன்னொருவருக்கு அழைத்து, அவர் இவருக்கு அழைத்து நாங்கள் சென்று சேரும் முன்னரே தூய்மை பணிகளை தொடங்கி இருந்தனர். தண்ணீர் வசதி இல்லாததால் எங்களுக்காக ஒரு டிரம்மில் குடம் குடமாக தண்ணீரை சுமந்து வந்து ஊற்றிக் கொடுத்தார். உமையாள் தம்பதி இரவுணவுடன் அங்கும் வந்துவிட்டனர்.
அந்த சமயத்தில் விக்னேஷ் வண்டியை எடுத்துக் கொண்டு அங்கு வந்துவிட்டார். தலைவர் வீடு அருகில் தான் உள்ளது வாருங்கள் சென்று ஒரு நன்றி சொல்லிவிட்டு வந்துவிடலாம் என்றார். நானும், கௌதமும் மட்டும் சென்றோம். அவர் வண்டியில் ஏறச் சொன்னார். நான் எதைப்பற்றியுமே யோசிக்கவில்லை. சரியான நேரத்தில் உதவி செய்த ஒருவருக்கு நன்றி சொல்லியாக வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணமாக இருந்தது. ஏறி அமர்ந்து விட்டேன். கௌதமும் என் பின்னால் ஏறிவிட்டான். அவர் நாங்கள் ஏறி அமர்ந்தவுடன் "நா ஓப்பனா சொல்ற லைட்டு சாப்டு தா வந்துருக்கற. ஆனா ஸ்டெடியா ஓட்டுவ ஒன்னும் பயப்பட வேண்டாம். போய் ஒரு நன்றி திரும்பி வந்தறலாம்" என்றார். நான் அப்போதே இறங்கி விடலாம் என்று நினைத்தேன் ஆனால் இறங்கவில்லை. அங்கிருந்து வெறும் ஐம்பது அடியில் தலைவர் வீடு. அங்கு சென்றால் அவர் வீட்டில் இல்லை. நோட்டீஸை கதவில் சொறுகி வைத்துவிட்டு திரும்பவும் அவருடன் வண்டியில் ஏறி அலுவலகம் வந்து விட்டோம். வந்த பிறகு அவர் பேசுவதை கேட்க முடியவில்லை என்று சொல்வதைக் காட்டிலும் சகிக்க முடியவில்லை. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு, ஏதேதோ உளறிக் கொண்டு இருந்தார். பெரும் போராட்டத்திற்கு பின்னர். தப்பித்து வந்தேன். கொஞ்ச நேரம் கழித்து கௌதம் என்னை அழைத்து தவறு செய்விட்டோம் என்று சொன்னான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன என்று கேட்டேன். வண்டியில் ஏறி விட்டோம் என்றான். அப்போதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் சகஜமாக வண்டியில் ஏறுவதையே நினைத்துக் கொண்டேன். பின்னர் மீண்டும் சொன்ன போது தான் எனக்கு உணர்ந்தது. அச்சச்சோ என்றேன்.
பல இடங்களில் கடும் தேவை இருக்கும் போது கூட வண்டியில் ஏறக்கூடாது என்று மிகத் தீவிரமாக சொல்லியுள்ளேன். ஆனால் அந்த தருணம் அது ஒரு துளி கூட நியாகம் இல்லை. கௌதமிற்கும் நியாபகம் இல்லை. அவனுக்கும் அனு சொல்லியே நினைவு வந்துள்ளது. அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் மட்டுமே மனதில் இருந்த ஒரே விசை. அது நடந்தாலே ஒரு நிமிடத்தில் செல்லும் தொலைவு. கொஞ்சம் குற்றவுணர்வு ஏற்பட்டாலும் நன்றி சொல்வதற்கே அதை அறியாமல் செய்துவிட்டோம் என்று சொல்லி என்னையே தேற்றிக் கொண்டேன்.
சிபி
மேலும்..
I have read some articles that you have written previously but this travelogue is in a different league. In my comment on your days journey, I commented that this has the potential to be literature. Now I do think it is & better readers than me have commented that this has the quality to become a book. Congrats!
ReplyDeleteதங்குவதற்கு இடம் தர மறுப்பதைப் பெரிதாக எண்ணி வருந்த வேண்டா. இளம்பெண்கள், இளைஞர்கள் ஒன்றாகச் செல்லும்போது இந்தச் சிக்கல் வரத்தான் செய்யும். நடைப்பயணத்தில் பங்கேற்காத இரு நண்பர்கள் முன்னே சென்று தங்குமிடத்தை உறுதி செய்ய வேண்டும். மாலை ஐந்து மணிக்கு முன்னதாகத் தங்குமிடத்தைக் கண்டு உறுதி செய்க. ஒருவேளை உணவு இல்லாவிடினும் தவறில்லை. ஆனால் பெண்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடம் அவசியம் தேவை. திட்டமிடுக.
ReplyDeleteஇத்தனை சிக்கல்களிலும் வலைப்பூவில் கட்டுரை எழுதுவதை மனதாரப் பாராட்டுகிறேன்.
Congrats guys....it's is very interesting to read your experience And I am getting lively feeling
ReplyDeleteஉங்கள் முயற்சி பற்றி அறிந்ததும் எனக்கு மிக மகிழ்ச்சி யாக இருந்தது.ஏனென்றால் , ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்ற கொள்கையை பல தேர்தல்களில் கடைபிடித்து வருபவன் நான்.ஆகவேமகிழ்சியாக இருந்தது.வாழ்த்துக்கள் இளைஞர், இளைஞிகளே.
ReplyDelete