இரண்டாம் நாள் காலை 6:30 மணிக்கே ஊருக்குள் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு 7:30 மணிக்குள் கிளம்பி விட வேண்டும் என்பது திட்டம். இரவில் சிலர் தூக்கத்தில் பேசியபடி இருந்தனர். குறட்டை ஒலியும் கூட. எல்லோருக்கும் அவற்றை மீறி நல்ல தூக்கம். காலை 5 மணிக்கே எழுந்து நான், லைலா, அர்ச்சனா குளித்து தயாராகி விட்டோம். பிற நால்வரும் தயாராவதற்குள், அர்ச்சனாவின் பையில் இருக்கும் எடையை பகிர்ந்துக்கொள்ள, ஒவ்வொரு பொருளாக வெளியில் எடுத்தோம். உள்ளே ஒரு சந்தைக்கடை இருந்தது. சுய-கவனிப்பு பராமரிப்பு (Self care routine) பொருட்கள் ஒவ்வொன்றும் 150 கிராம் என்ற கணக்கிட்டால் கூட கிலோ கணக்கில் இருக்கும். அரை டஜன் கைக்குட்டைகள், துணி துவைக்கும் ப்ரஷ், வேஸ்லின் சிறிய பேக் மற்றும் பெரிய பேக், ரஃப் யூஸ் துணிகள், இன்ன பிற. இதில் தேவையற்றதை நீக்கலாம் என்றால் எல்லாமும் வேண்டும் என்கிறாள். லைலா comfort bottle வைத்திருந்தாள். இது எல்லாம் சாம்பிள் பேக் வாங்கி கொள்ளலாம் எடை குறையும் என்றால், "இதுலா கண்டிப்பா வேணும்" என்கிறாள். அனு ஒரு இளஞ்சிவப்பு நிற மென் தலையணையைத் தூக்கி வந்திருந்தாள். "அக்கா, என்கிட்ட இருக்க எத வேணும்னாலும் தூக்கிப் போடுங்க, இது இல்லாம நா வர மாட்டேன்". இதை எல்லாமுமா தூக்கிக்கொண்டு நடக்க போகிறீர்கள் என்றால், இதெல்லாம் அவசியத்தேவை என்றார்கள். எப்படியோ அர்ச்சனாவின் பொருட்கள் சிலவற்றை தின்பண்டங்களுடன் ஒரு பையில் போட்டுக்கொண்டு, மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டோம்.
ஊருக்குள் பிரச்சாரம் செய்ய சென்றோம். சிபி ஒரு அக்காவிடம் பேசுவதை உடன் நின்று கேட்டோம். இரு குழுவாக செல்லலாம் என்று தனியே சென்றோம். நான், அர்ச்சனா, லைலா முதலில் சென்ற வீட்டில் ஒரு பாட்டி வந்தார்கள்.
"நாங்க ஓட்டுக்கு காசு வாங்க கூடாதுன்னு சொல்ல வந்திருக்கோம்"
"ஆ?"
திரும்பவும் சொன்னோம்
"வீட்ல வேற யாராச்சும் இருக்காங்களா"
ஒரு அம்மா வந்தார்கள். அவரிடம் நடைப்பயணம் குறித்து சொன்னோம். அவர் சரி சரி என்று தலையாட்டினார்.
பாட்டி எங்கள் தோள்களை தடவியபடி, "பொங்கலுக்கே ஒன்னும் குடுக்கள கண்ணு"
"அது வேற பாட்டி"
"காபி சாப்புட்ரீயலா"
"வேண்டாம் பாட்டி"
சிறப்பு என்று நினைத்துக்கொண்டு அடுத்த வீட்டிற்கு சென்றோம். அங்கே ஒரு அக்கா துணி துவைத்து கொண்டிருந்தார். அவர் எங்களைப் பார்த்து "சீக்கிரம் சொல்லுங்க வேலைக்கு நேரமாச்சு", என்றார். லைலா அவருக்கு விளக்கி சொன்னாள். "சரியா சொல்றீங்க. யார் கேக்குக்குறாங்க. அந்த பேப்பர அங்க வச்சிட்டு போங்க மணியாச்சு" என்றார். "காசு கொடுக்கிறவங்களுக்கும் சொல்லு" என்று முகம் கொடுக்காமல் கேட்டார். "ஆமா, அவங்ககிட்டயும் தான் சொல்றோம்" என்று நாங்கள் பெருந்தலையூர் குறித்தும் வேகமாக சொன்னோம். அவர் யோசிக்கத் தொடங்கினார். அவர் படித்தவர் போலவும், தலைமை பொறுப்பு வகிப்பவர் போலவும் இருந்தார். நாங்கள் நகர்ந்ததும் "நில்லுங்க, டீ சாப்டு போவீங்க உள்ள வாங்க" என்றார். "இல்லை, நாங்கள் வெயிலுக்கு முன் நடக்க துவங்க வேண்டும்" என்று சொன்னோம். "ஏன் தயங்குறீங்க, வாங்க" குரலில் கொஞ்சம் அதட்டல் இருந்தது. "இல்ல அக்கா, நன்றி, எங்களுக்கு நேரம் ஆகிறது, வருகிறோம்" என்று சொல்லி கிளம்பினோம். அவருக்கு இச்செயலில் நம்பிக்கை வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்து அடுத்து வீடுகளுக்கு சென்றோம். பலர் சரி சரி என்றார்கள். திரும்பி அந்த தெருக்களின் வழி வரும்போது, சில வீடுகளில் எங்கள் கோரிக்கை ஒரு விவாதமாக எழுந்ததை கேட்க முடிந்தது.
நாங்கள் அந்த ஊரில் இருந்து புறப்பட்டோம். அந்த ஊரின் பெயர் பச்சாம்பாளையம் அல்ல பெரிய குயிலி என்று பின்னர் தான் தெரியும். ஊர் மக்கள் மற்றும் கூகிள் மாறி மாறி வழி சொல்ல, செஞ்சேரி என்ற கிராமம் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
வழி எங்கும் இரு பக்கமும் காற்றாலைகள். அவை ஒவ்வொன்றும் ஒரு திசை நோக்கி பொருத்தப்பட்டு இருந்தன. சில காற்றாலைகள் அமைதியாக நிற்க சில மட்டும் சுற்றி கொண்டு இருந்தது. தூரத்தில் கேட்க நீரின் மெல்லிய சலசலப்பு போன்ற ஒலியும், காற்றின் ஓ என்ற ஓசையும் சேர்ந்து ஒலித்தது. பெரும்பகுதி காலியான புல் மற்றும் முள் செடிகள் படர்ந்த நிலமும் சோளம், தக்காளி, முள்ளங்கிப் பயிர்களும் இருந்தன. ஒரு பெரிய கல் குவாரி பார்த்தோம். அங்கு தான் அந்த லாரிகள் வந்து சென்று கொண்டு இருந்தன. சிறிய சாலையில் இருபக்கமும் மஞ்சள் பூச்செடிகள். புகைப்படம் எடுத்தபடி நடந்தோம். எதிர் வெயில். காலை உணவு சாப்பிட ஊர்கள் கடைகள் அந்த வழியில் இல்லை.
அனுவுடன் பேசிக்கொண்டு வந்தேன்.
பெருந்தலையூர் கிராமத்தில் அவள் ஏழு மாதம் தங்கிய அனுபவங்கள் குறித்து சொல்லிக்கொண்டு வந்தாள். "முன்பெல்லாம் இருள் என்றால் பயம். இரவில் கழிவறை பயன்படுத்த வேண்டும் என்றால் கூட ஒருவரின் துணை வேண்டும். தம்பி உடன் வருவான். ஆனால் பெருந்தலையூரில் தனியாக இருக்க வேண்டி வந்தது. நண்பர்கள் அவ்வப்போது உடன் இருந்தனர். ஊரை சுத்தம் செய்வோம். முட்கள் வெட்டி சுடுகாடு சுத்தம் செய்வோம். பிரச்சாரம் செய்வோம். ஆற்றில் விளையாடப்போவோம். அந்த ப்ராஜக்ட்க்குப்பின் நான் தைரியமாக மாறி விட்டேன். இப்போது தனியாக எந்த ஊரிலும் எந்த நேரத்திலும் இருக்க முடியும்", என்று சொல்லி வந்தாள்.
பனப்பட்டி என்ற ஊரை அடைந்ததும், ஒரு அரச மரத்துடன் பிள்ளையார் இளைப்பாறிக் கொண்டு இருந்தார். அவர் அருகில் கொஞ்சம் சாய்ந்தோம். அங்கே தொழிற்சாலை வருவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பச்சை நிற எழுத்துக்கள் கொண்ட காகிதங்கள் மேல் கல் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த ஊரில் தான் நாங்கள் உணவு உண்ண முடியும். அடுத்து வடவள்ளி வரை வேறு கிராமங்கள் இல்லை. யாரிடம் கேட்டாலும் அவர்கள் வெளியூர் என்றார்கள். அத்தனை தொலைவு வந்து இந்த கிராமத்தில் வேலை செய்கிறார்களா என்று நினைத்தேன். ஒரு கடைக்காரர் மட்டும் ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுத்தார். அங்கு ஒரு கடையில் சாப்பிட்டுவிட்டு வடவள்ளி என்ற ஊர் நோக்கி சென்றோம். எதிரில் வந்தவர், எங்களை நிறுத்தி விசாரித்து விட்டு ஏதாவது வாங்கி கொள்ளும்படி சொன்னார். தண்ணியாவது வாங்கி கொள்ளுங்கள் என்றார். குழுவில் இருந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் எந்த கல்லூரிகளில் படிக்கிறார்கள் என்று கேட்டுத்தெரிந்து கொண்டார். தன் மகனும் சட்டம் படித்தவர் என்றார்.
வடவள்ளி வரை செல்லும் வழியில் கௌதம் ஒரு விளையாட்டு சொன்னான். ஒருவர் மனதில் ஒன்றை நினைத்துக்கொண்டு முதல் க்ளூ கொடுக்க வேண்டும். மற்றவர் ஆம் இல்லை போன்ற கேள்விகள் கேட்டு அதைக் கண்டுப்பிடிக்க வேண்டும். சுவாரஸ்யமாக இருந்தது. கண்ணில் படும் விஷயத்தை தாண்டி ஒன்றை நினைப்பதே சவாலாக இருந்தது. திரும்ப திரும்ப காற்றாலைகள் தான் நினைவில் வந்தன.
வழி எங்கும் கோழி பண்ணைகள், காளான் பண்ணைகள், காற்றாலைகள், அடர் நிறங்களுடன் பச்சை கீரைகள் மற்றும் செங்கீரைத் தோட்டங்கள்.
கொஞ்ச தூரத்திற்கு பின் எதிரில் டி.வி.எஸ் 50 இல் வந்தவரிடம் வழி கேட்டோம், "அட இந்த வளவு திரும்பினா வடவள்ளி தானுங்க" என்று சொல்லிவிட்டு எதிர் திசை நோக்கிச்சென்றார். பல வளைவுகள் தாண்டி சென்றோம். போனவர் திரும்பி வந்து, "அட இப்பத்தான் இங்க வந்துர்கீங்களா, நா போய் மளிக சாமானே வாங்கி வந்துப்போட்டென் போங்க, அந்த வளவு தானுங்க" என்று சொல்லி விட்டு சென்றார். மீண்டும் சில வளைவுகள் தாண்டி சென்றோம்.
ஒரு வழியாக வடவள்ளி ஊரை வந்தடைந்தோம். குளுக்கோஸ் பாக்கெட்டுகளை வாயில் கொட்டிக்கொண்டு நடந்தோம். வரும் வழியில் இருந்த வீட்டில் கேட்டு கழிவறை உபயோகித்துக் கொண்டோம். அந்த வீட்டில் இருந்தவர்கள் நாங்கள் யார் என்ன என்பதில் பெரிய அக்கறை காட்டிக்கொள்ளவில்லை. கொஞ்ச தூரம் நடந்ததும் ஒரு தேநீர் கடையைக் கடக்கும் போது,
"ஆரூ சாமி இப்படி போரியவ, முன்னால ரெண்டு பேரு போனாவ", என்று ஒரு அம்மா கேட்டார். அவர் வெளியில் அமர்ந்தபடி சாப்பிட்டு கொண்டிருந்தார். இது குறித்து சிபி வலைப்பூவில் அவர் பேசிய அதே நடையில் எழுதி இருக்கிறான். அவர் நடைப்பயணம் குறித்து சொன்ன போது எங்களை நம்பவில்லை.
"அக்காம், போத்தனூர் ல இருந்து நடந்தே வாராங்ககலாம்" என்று சொல்லி சிரித்தார்.
உண்மையாத்தான் சொல்றோம் என்று
நோட்டீஸ் அளித்ததும் பார்த்து படித்து ஆமா போத்தனூர் போட்டிருக்கு. உள்ள வாங்க டீ சாப்டுவீங்க வாங்க
ஓலை குடிசையால் ஆனா கடை. ஒரு பெஞ்ச் சில நாற்காலிகள். அதனுள்ளே ஒரு படுக்கும் அறை. பைகளை ஆளுக்கு ஒரு திசையில் வீசி விட்டு அமர்ந்தோம். நல்ல பசிக்கு சுட சுட போண்டாக்களும் டீயும் அளித்தார்.
"உங்க கூட ஃபோட்டோ எடுத்துக்களாமா?"
"நெனச்சேன் நீங்க கேப்பியண்ணு" என்று சிரித்து கொண்டே வந்து எங்களுடன் நின்றார்.
அங்கிருந்து சாலையில் ஒரு சிறிய வளைவு. கொஞ்சம் முன்னால் சென்றதும் ஒரு கோவில் அருகில் அனு மற்றும் சௌமியா அமர்ந்து இருந்தனர். அங்கிருந்தவரிடம் நாங்கள் அந்தந்த ஊர் மக்களிடம் தான் கேட்டு சாப்பிடுகிறோம் தங்குகிறோம் என்று சொன்னோம். ஒருவர் எங்களுக்கே சாப்பாடு இல்ல என்றார். அங்கிருந்த மற்றவர்கள் நாங்கள் தங்க கோவில் கதவை திறக்க சென்றனர். இவர் ஆர்வம் காட்டவில்லை. நிறைய பேர் வந்து எங்களுக்கு உடல் வலி நீங்க வைத்தியம் சொன்னார்கள்.
அதன் பின் ஓய்வு எடுத்ததும் மலையில் கோவிலுக்குள் விளையாட வந்த மூன்று சிறுவர்கள் ஒரு அணியில், நாங்கள் நான்கு பெரியவர்கள் இன்னோரு அணியில் என்று கிரிக்கட் ஆடினோம். அவர்கள் சொன்ன விதிகளும் எங்கள் அணி ஏற்றுக்கொண்ட விதிகளும் புரியவே இல்லை. பந்து வந்தால் அடிக்க வேண்டும் என்ற ஒரே ரூல் தான் எனக்கு. ஒருமுறை நான் அடித்த பந்து மரத்தில் பட்டு நின்றது. அது ஃபோர் தான் என்று அவர்களிடம் முறையிட்டு ஸ்கோர் ஏற்றிக் கொண்டோம். அடுத்த பந்தில் அவுட் ஆகி விட்டேன். சிபி கொஞ்சம் ஸ்கோர் ஏத்தினான். போதவில்லை. கௌதம் எங்களுக்கு ஆடுகிறானா அவர்களுக்கு ஆடினானா என்று சந்தேகிக்கும் வகையில் வைட் பந்துகள் போட்டான். கிளம்பலாம், நேற்று போல தாமதம் ஆகி விடும் என்று சொன்னால், இருங்க போலாம் என்று சொல்லி, நான்கு ஓவர்கள் கொண்ட மூன்று ஆட்டங்கள் ஆடி, மூன்று முறையும் தோற்றோம். ஒரு வழியாக கிளம்பினோம்.
இந்த முறை வழி எல்லாம் தென்னந் தோப்புகள். வட மாநிலத்தவர் அதிகம்பேர் பணியாளர்களாக இருந்தனர். நாங்கள் நடை வேகத்தில் மூன்று குழுவாக பிருந்திருந்தோம். ஒரு கடைக்கார அக்கா எங்களிடம், "இந்த நேரத்தில் எங்கு செல்கிறீர்கள்"
நாங்கள் விவரித்து சொன்னோம்.
"சரி சரி இருக்கட்டும், வட மாநிலத்தவர் அதிகம் உலவும் பகுதி சீக்கிரம் செஞ்சேரி சென்று விடுங்கள். இரண்டு கி.மீ தொலைவில் ஒரு ஒயின் ஷாப் இருக்கு, ஞாயிற்று கிழமை வேறு", நாங்கள் தலையாட்டிக்கொண்டு நடந்தோம். எங்கள் குழுவை முன்னால் பார்ப்பவர்கள், எங்களிடம் எதுவும் கேட்காமல் யோசித்துக்கொண்டே சென்று பின்னால் வருபர்வகளிடம் கேள்விகள் கேட்டனர். அதனால் அனுவும் சிபியும் வர நேரம் எடுத்தது. அவர்கள் வந்த பின்னர் ஒன்றாக சென்றோம். மீண்டும் நடைவேகத்தில் முன்னும் பின்னும் நடக்க தொடங்கினோம்.
வழியில் ஒரு கடையில் ஒரு அக்காவிடம் அனு ஓட்டுக்கு காசு வாங்க கூடாது என்று சொல்லிக்கொண்டு இருந்தாள். அந்த அக்கா அதற்கு பெரிய ஈடுபாடு காட்டவில்லை. அருகில் இருந்த அண்ணா, "அதெப்படி சும்மா ஓட்டுக்கு காசு குடுக்ரது தப்புன்னா அப்போ அரசாங்கம் பெண்கள் சும்மா இருக்க ஏன் பணம் கொடுக்குது. அதுவும் வாங்க கூடாதுன்னு சொல்லிட்டு போங்க". இதற்கும் அந்த அக்கா அலட்சியமாக இருந்தார். "சும்மா எது குடுத்தாலும் தப்பு. பெண்களுக்கு அரசாங்கம் தர காசு வேணாம்னு சொல்லுங்க பாப்போம்" என்றார். அவர் சாமர்த்தியமாக பேசி எங்களிடம் இருந்து வார்த்தையை வாங்குவது போல, அங்கிருக்கும் அக்காவிற்கு எதையோ உணர்த்தும் பாவனையில் பேசினார்.
"இது ஏன் தப்பு" என்று கேட்டுவிட்டேன். என் கேள்வியை எனக்குள் நான் தொகுத்துக் கொள்ளவில்லை
"சும்மா எது குடுத்தாலும் தப்பு. ஓட்டுக்கு வாங்க கூடதுன்னா சும்மா இருக்கிற இவங்களும் வாங்க கூடாது" என்றார்
"அக்கா, இதுலாம் கேட்கக்கூடாது. நாம் வந்த விஷயத்தை மட்டும் பேசுவோம், ஓட்டுக்கு காசு வாங்காதீங்க அண்ணா" என்று சொல்லிவிட்டு அனு என்னை நகர்த்திக் கொண்டு சென்றாள்.
எங்கள் இருவருக்குள் விவாதம் தொடர்ந்தது. முதலில் நான் ஏன் அப்படி கேட்டேன் என்று எனக்கு நானே தெளிவு படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது.
அரசாங்கம் இலவசமாக கொடுக்கும் திட்டங்கள் எல்லாமும் நமக்கு நன்மை பயப்பவை அல்ல என்று அனு விளக்க ஆரம்பித்தாள் .
ஒரு அரசாங்க திட்டத்தை நன்மை தீமை குறித்துப் பேச எனக்கு போதுமான துறை சார்ந்த அறிவு இருக்கவில்லை. ஆனால், என்னை தூண்டியது, "சும்மா இருக்கிறார்கள்" என்பது தான். அந்த நபருக்கு அரசாங்க சலுகை வேண்டாம் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. எவ்வளவோ இலவச திட்டங்கள் வருகின்றன. இந்த திட்டம் மட்டும் தான் உறுத்துகிரதா? இவர்கள் கேட்டால் நம் பெண்கள் அந்த தொகையை இவர்களிடம் அளிப்பதில்லை. அது தான் இவரின் பிரச்சனை.
அணு அது எப்படி அவ்வளவு திட்டவட்டமாக சொல்ல முடியும் என்று மறுத்தாள்.
அவர் மற்ற சலுகைகள் குறித்து பேசவில்லை. சொல் ஜாலம் மூலம் வார்த்தையைப் பிடுங்கும் உத்வேகத்தில் இருந்தார். அந்த அக்கா முகத்தில் அவர் மீது எந்த மதிப்பும் இல்லை.
இது குறித்து எங்கள் குழுவிடம் சொன்ன போது, சௌமியா பெண்கள் சார்ந்து பேசத்தொடங்கினாள். சிபி, "அரசாங்கத் திட்டத்தின் வழி பணம் பெறுவது சட்டப்பூர்வமாக நிகழ்வது. ஓட்டுக்கு பணம் பெறுவது சட்டத்திற்கு புறம்பானது" என்று சொன்னான். எல்லோரும் ஏற்றுக்கொண்டோம்.
அதன் பின் மீண்டும் ஒரு விளையாட்டை விளையாடத் தொடங்கினோம். What if you get this என்ற வகை கேள்வி பதில்கள். சுமாராக இருந்தது. ஊர் வந்து சேர்ந்தோம். "இப்படியே தெக்க போங்க பால்காரர் வீடு வரும்" என்றனர். இங்கே எல்லோரும் திசைகள் சொல்லித்தான் வழி சொல்கிறார்கள். எனக்கு வலம் இடம் என்று வழி சொல்லித்தான் பழக்கம். அதுவே சமயத்தில் குழம்பும். தெற்கு என்றால், முதலில் கிழக்கு மேற்கு எது என்று கண்டுப்பிடிக்க வேண்டும். பின்னர் வடக்கு தெற்கு. சற்று பெரிய வேலை. குழுவைப் பின் தொடர்ந்தேன்.
செஞ்செரியில் நாங்கள் தங்க இருக்கும் வீட்டை அடைந்ததும், முற்றத்தில் அமர்ந்தோம். முதுகு எலும்பு ஒவ்வொன்றாக தளர்ந்தது. தோல் பட்டை இறுகி இருந்தது. முதலில் யார் குளிப்பது என்று வரிசைப்படுத்திக் கொண்டோம். அணு தொடங்கி கடைசியில் கௌதம். அவர்கள் வீட்டில் இருந்த குளியல் அறையில் ஒரு அண்டாவை உள்ளே வைத்து தொட்டி கட்டி இருந்தனர். அதற்கு ஒரு மூடி உண்டு. வெளியில் ஒரு வட்ட வடிவ வழியில் நெருப்பு வைத்தால் உள்ளே வெந்நீர் தயாராகிறது. இந்த வகையில் இப்போது தான் பார்த்தேன்.
பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த வீட்டம்மா, "நாங்க காசு வாங்கிரது இல்லிங்க, இவர் கிட்ட கொடுத்து தாங்க குடுக்க சொல்லுவாங்க ஆனா வீட்டுக்கு கொண்டு வர மாட்டாருங்க, நா கூட சொல்வெனுங்க ஆனா கொண்டு வர மாட்டாருங்க" என்று சொல்லிக் கொண்டு இருந்தார். எல்லோரும் அமைதியாக இருந்தோம். "பணம் கொடுக்ரதும் தப்பு தான்" என்றேன். "நாங்க வாங்கிறது இல்லைங்க" என்றார். சரி சார் என்று சொல்லி சாப்பிட தொடங்கியாச்சு. ஆனால், அவர் மறுநாள் வரை என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அவர் உண்மையில் அப்படி இருந்தாரா எனக்கு அப்படி தோன்றியதா என்று தெரியவில்லை. ஆனால், நான் கொஞ்சம் இடம் பொருள் பார்த்து பேச வேண்டும் என்று தோன்றியது. பின்னர், நான் இப்படியே இருந்து கொள்கிறேன் என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன்.
அந்த வீட்டின் அம்மா உணவில் உப்பு சரியாக இல்லை என்றும் பொறுத்துக் கொள்ளும்படியும் திரும்பத் திரும்ப சொன்னார். சாப்பிட்டு முடித்ததும் கூட சமையல் குறித்து பேசினார். அவர் பேசும்போது அவரை கவனிப்பதை துண்டிக்க முடியவில்லை. அவர் நிறுத்துவது போலவும் தெரியவில்லை. "அக்கா இந்த பக்கம் திரும்புங்க" என்ற குரல்கள் வந்தன. இவருக்கு பேச ஆள் இருக்கவில்லை போல, ஆள் கிடைத்ததும் ஓயாமல் பேசுகிறார் என்ற எண்ணம் வந்தது. "அரிசியும் பருப்பும் " என்ற கொங்கு பக்கம் மட்டுமே செய்யும் உணவு அளித்தார். உடன் நார்த்தங்காய் ஊறுகாய். நன்றாக இருந்தது.
சௌமியா தோள்பட்டைளுக்கு மசாஜ் செய்வதாக சொல்லி கழுத்தையும் தோளையும் கிள்ளி வைத்தாள். அவள் பேசும்போது "எம்பட உம்பட" என்ற சொற்களை அழுத்தும் அழுத்தில் சொற்களில் உள்ள ' ட ' க்கள் உடைந்து விடும் போலிருக்கும். அதே அழுத்தத்தை என் எலும்புகளில் கொடுத்தாள். நன்றாகத் தான் இருந்தது. இன்ஸ்டாகிராமில் அவள் படம் பிடித்த நிலவை பதிவேற்ற, "எக்கா, 90s கிட் ஒரு நிலா பாட்டு சொல்லு". நான் சொன்ன எந்த பாட்டும் அவள் மன நிலையுடன் ஒத்திசையவில்லை. இசை ஞானியின் பாடல்கள் கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கடைசியில் சொன்னதில் இருந்து ஒரு பாட்டு போட்டாள், குக்கூ படம், "ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்". வீட்டின் முன் காற்றில் உரசும் தென்னை ஓலைகளின் ஓசையும், நிலா வெளிச்சமும் நிறைந்து இருந்தது.
- சரண்யா
மேலும்..
Comments
Post a Comment