பதிமூன்றாம் நாள் - 1
முந்தைய நாள் செருப்பு போட்டு நடந்து கடும் கால்வலியில் விடிந்ததே தெரியவில்லை. ஏதேதோ கோணங்களில் திருக்கிக் கிடந்தோம். கைகளை கண்டபடி மடக்கி வைத்து படுத்து எழும் போது இடது கை மாபெரும் வலியை அளித்துக் கொண்டு இருந்தது. இன்று காலையில் இருந்து எங்களுக்கு உணவு வழங்குவதில் பெரும் போட்டியே இருந்தது. காலை உணவு காரைகுடியை சேர்ந்த நாராயணன் எடுத்து வருவதாக சொல்லி இருந்தார். மதிய உணவு சுனீல் கிருஷ்ணன் கொண்டுவருவதாக சொல்லி இருந்தார். இரவு உணவு புதுக்கோட்டையில் சிதம்பரம் அவர்களின் வீட்டில். இடையில் உமையாள் மற்றும் தேனப்பன் ஆகியோரும் வந்து எங்களுடன் சேருவதாக இருந்தனர். அவர்களை உணவு கொண்டு வந்து விட வேண்டாம் என்று கையை கட்டிப் போட்டிருந்தோம். இவ்வளவு திட்டமிட்டு தயாராகி கீழே இறங்கி வந்தால் சிலம்பரசன் அவர்களின் வீட்டில் எங்களுக்கு கடையில் இருந்து உணவுப் பொட்டலங்களை வாங்கி வந்து குவித்திருந்தனர். இத்தனைக்கும் உணவு வேண்டாம் என்று இரவே படித்து படித்து சொல்லிவிட்டு தான் உறங்க சென்றோம். ஒரே உணவுத் தொல்லை. நான் எடை குறைந்து வீடு திரும்புவேன் என்று ஆவலாக எதிர் பார்த்துக் கொண்டு இருந்த என்னுடைய அம்மாவிற்கு பெரும் ஏமாற்றம் காத்துக் கொண்டு இருந்தது. இப்படியே போனால் தினம் ஒரு கிலோ கூடி விடுவேன் போல் தெரிகிறது. காலை உணவு கொண்டு வருவதாக சொல்லி இருந்த நாராயணன் அவர்களை அதை மதிய உணவாக வைத்துக் கொள்கிறோம் என்றும், மதிய உணவு கொண்டு வருவதாக சொல்லி இருந்த சுனில் கிருஷ்ணன் அவர்களிடம் வேண்டாம் என்றும் சொல்லி விட்டோம். இவர்கள் வாங்கி வைத்த பொட்டலத்தை திறக்க திறக்க தோசையும், இட்லியும், வடையும் வந்து கொண்டே இருந்தது. ஒரு மனிதன் ஆயுளுக்கும் சாப்பிடும் அளவுக்கு உணவை ஒரு வேளை உண்ண முடியுமா..
ஒருவழியாக அவ்வளவு உணவில் கால்வாசியை உண்டு விட்டு, நகர சிரமப்பட்டு எழுந்து கிளம்பினோம். அங்கிருந்து மீண்டும் வந்த வழியிலேயே ஒன்றரை கிலோ மீட்டர் சென்ற பிறகு புதுக்கோட்டை நோக்கிய சாலையில் இணைந்தோம். ஈரோட்டில் இருந்த அத்தனை நோட்டீஸ்களையும் இனி இறுதி நாள் தான் வருவார்கள் என்று தெரிந்து மொத்தமாக நேற்று கிருஷ்ணன் கொண்டு வந்து கொடுத்திருந்தார். அதை தீர்க்க வேண்டும். உமையாள் வேறு ஒரு பண்டல் கொண்டு வருகிறார். சபரீஷ், கண்ணில் படும் ஒருவரையும் விடாமல் அனைவரிடமும் துண்டு பிரசுரங்களை நீட்டிக் கொண்டு இருந்தான். ஒரு காவல் அதிகாரி பைக்கில் அமர்ந்து செல்பேசியில் பேசிக் கொண்டு இருந்தார். அவர் முகத்திற்கு முன்னால் கொண்டு போய் ஒரு நோட்டீஸை நீடிக்கொண்டு இருந்தான். அவர் அதை பொருட்படுத்தாமல் மிகத் தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தார். அவர் அலைபேசியை வைக்கும் வரை அவர் முகத்தின் முன் அந்த நோட்டிஸை நீட்டி ஆட்டிக் கொண்டே இருந்தான். நாங்கள் நழுவி முன்னால் சென்று விட்டோம். இறுதியாக அவன் கொடுத்து விட்டு தான் வந்தான். சரி வா போவோம் என்று நகர்ந்தால் இரண்டடி நடந்ததும் முன்னால் வந்த காவல் அலுவலகத்திற்குள் சென்றுவிட்டான். அங்கிருந்த அதிகாரிகள் அதை பெற்றுக் கொண்டனர்.
அங்கிருந்து நகர்ந்து யாருமற்ற ஒரு மண் சாலையில் சென்றோம். கொஞ்ச தூரம் சென்றவுடன் உண்மையிலேயே யாருமற்ற ஒரு தேசத்தில் இருப்பது போல் தோன்றியது. ஒரு உயிரினத்தையும் பார்க்க முடியவில்லை. அந்த மண் சாலை நீண்டு கொண்டே சென்றது. கௌதமும் சௌமியாவும் வழி பார்த்துக் கொண்டு முன்னால் சென்றார்கள். நாங்கள் பேசிக் கொண்டே பின்னால் வந்து கொண்டு இருந்தோம். நாராயணன் நாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் வந்து விட்டதாகவும் எங்களை பார்க்க முடியவில்லை எங்கு உள்ளோம் என்றும் கேட்டார். நாங்கள் இருக்கும் லொகேஷனை அவருக்கு அனுப்பினோம். அவர் அதை பார்த்து விட்டு அதற்கு அருகில் தான் உள்ளேன் ஆனால் உங்களை காண முடியவில்லை, ஏதோ புதருக்குள் பூந்து வரும்படி காட்டுகிறது. யாரிடமாவது கேட்டு வெளியே வந்து விடுங்கள் என்றார். யாரிடம் கேட்பது. எங்களை தவிர ஒருவர் கூட இங்கு இல்லை. யூக்களிப்டஸ் மரம் போல் தோன்றக் கூடிய சன்னமான நீண்ட மரங்கள் மட்டுமே வானைத் தொட்டு நின்று கொண்டு இருந்தது. சபரீஷ் அதை கட்டுமானத்திற்கு மூங்கிலுக்கு பதிலாக முட்டிகளாக பயன்படுத்தும் மரங்கள் என்றான்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த மரங்களின் தோட்டமும், முட்புதர்களும், பிஸ்கட் நிற மணலும், பள்ளமும் மேடுமான நிலப்பரப்பும், ஆங்காங்கே ஒன்று இரண்டு குளங்களும் தவிர அங்கு ஒன்றுமே இல்லை. அர்ச்சனா ஒரு பீதியடைந்த குரலில் “இப்போது நாம் தொலைந்து விட்டோமா?” என்று கேட்டாள். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. அடக்கிக் கொண்டு ஆம் என்று சொன்னேன். முன்னால் சென்ற கௌதமும் சௌமியாவும் நாம் சென்று கொண்டிருக்கும் மண்தடம், சாலையை சென்று அடையவில்லை வேறு எங்கோ வளைந்து செல்கிறது மீண்டும் வந்த வழியில் செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். நான் வாங்கிப் பார்த்த போது எனக்கும் அவ்வாறே தோன்றியது. நாங்கள் நிற்கும் இடத்திற்கு மிக அருகில் சாலை உள்ளது. வண்டி சத்தங்கள் கேட்கிறது. ஆனால் சாலைக்கும் எங்களுக்கும் நடுவே உள்ள ஒரு பெரிய பள்ளத்தை கடந்து செல்ல வேண்டி இருந்தது. ஆனால் அதை கடப்பதற்கு வழி ஒன்றும் இல்லை. முட்புதர்களும் மரங்களும் மண்டி கிடந்தது. சபரீஷ் அந்த வழியில் எப்படியாவது சென்று விடலாம் என்று சொன்னான். பெண்கள் இருப்பதால் நான் வேண்டாம் என்று சொன்னேன். நாங்கள் பேசிக் கொண்டு இருந்த சமயத்திலே அனைவரும் வந்த வழி நோக்கி திரும்பி நடந்து சென்று விட்டிருந்தனர். சரி எல்லோரும் ஒன்றாக போகலாம் வாருங்கள் என்று சபரீஷ் மற்றும் அனுவிடம் சொல்லி விட்டு நானும் அர்ச்சனாவை மேலும் பயப்படுத்திக் கொண்டு திரும்பி நடக்க தொடங்கி விட்டேன். கொஞ்ச தூரம் சென்றபின் தான் சபரீஷ் மற்றும் அனுவின் குரலை நான் வெகுநேரமாக கேட்கவில்லையே என்று ஒரு கணம் மனதில் உதித்தது. திரும்பி பார்த்தால் அவர்களை காணவில்லை. சபரீஷிற்கு அழைத்தேன். அவனுடைய திறன்பேசி அர்ச்சனாவின் பையிற்குள் கிடந்தது. திரும்ப அனுவிற்கு அழைத்தேன். சபரீஷ் எடுத்தான். “எங்கு சென்றீர்கள்? ஏன் எங்களுடன் வரவில்லை? எல்லோரும் ஒன்றாக செல்லலாம் என்று சொன்னேனே ஏன் தனியாக சென்றீர்கள்? எப்படி உங்களை மீண்டும் கண்டுபிடிப்பது?” என்று கேள்வி மழையை பொழிந்தேன். அவன் நிதானமாக “நாங்கள் சாலையை அடைந்து விட்டோம்” என்றான். நிஜமாகவா என்று கேட்டேன். “ஆம் சாலை இங்கு மிக அருகில் தான் உள்ளது. வண்டி சத்தம் மிக நன்றாக கேட்கிறது. நாங்கள் சாலையை நெருங்கி விட்டோம்” என்று சொன்னான்.
கௌதமிடம் சொன்னேன். அவன் அதெல்லாம் போகவே முடியாது இங்கு பார் என்று மீண்டும் திறன்பேசியை எடுத்து காட்டினான். சரி இப்போது நாம் எப்படி செல்வது என்று கேட்டேன். இவ்வாறு தான் என்று திறன்பேசியில் அது நேர்கோடாக காட்டும் ஒரு வழியை காட்டினான். அது இதற்கு முன்பு இருந்த வழியை காட்டிலும் மோசமாக மிக நீண்ட அகலமான பள்ளம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சாலை தெரியவில்லை. சத்தமும் கேட்கவில்லை. கருவேல முட்கள் நிறைந்த பள்ளத்தில் கணுக்கால் அளவிற்கு அதில் தண்ணீர் வேறு ஓடிக் கொண்டு இருந்தது. நான் மெதுவாக அவனை திரும்பி பார்த்தேன். அவனும் மெதுவாக தலையை குணிந்தான். மீண்டும் சபரீஷிற்கு அழைத்தேன். எங்கு உள்ளீர்கள் நாங்களும் அந்த வழியிலேயே வருகிறோம் என்று சொன்னேன். அவன் உடனே “வேண்டாம் இது கடினமான பாதை நீங்கள் சென்ற வழியாகவே வாருங்கள்” என்றான். “சரி சாலையை அடைந்தீர்களா இல்லையா” என்று மீண்டும் கேட்டேன். அடைந்து விடுவோம் என்றான். அது சரி அவர்களும் இன்னும் சாலையை சென்று சேராமல் தான் சுற்றிக் கொண்டு உள்ளார்கள் போல என்று இவர்களிடம் சொல்லி விட்டு அங்கு இருந்த ஒரு குளத்தின் படியில் அனைவரும் அமர்ந்தோம். என்னை குளத்தில் தள்ளி விட்டு விடுவேன் என்று அர்ச்சனா எனக்கு மாபெரும் பயத்தை உண்டாக்கிக் கொண்டு இருந்தாள். நான் அவளை பார்த்து வெடித்து சிரித்துக் கொண்டு இருந்தேன். அவளை அர்ச்சனா என்று கூப்பிடவே எனக்கு இப்போதெல்லாம் வாய் வருவது இல்லை. அவளை அன்போடு அனைவரும் “பொடுசு” என்று தான் அழைப்போம். நான் தான் விளையாட்டாக அந்த பெயரை வைத்து அனைவரும் இப்போது கூப்பிட ஆரம்பித்து விட்டோம். ஆனால் அவளுக்கு அந்த பெயரை வைத்தது யார் என்று எங்களுக்குள் பெரும் சண்டையே உள்ளது. அனுவும் கௌதமும் அவர்கள் தான் வைத்தனர் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். அவளை அப்படியே கூப்பிட்டு பழகி அர்ச்சனா என்றால் வேறு யாரோ போல் சில நேரங்களில் தோன்றுகிறது.
நாராயணன் வெகு நேரமாக எங்களை சாலையில் நாங்கள் வருவோம் வருவோம் என்று தேடிக் காத்திருந்தார். அவ்வளவு நேர காத்திருப்பிற்கு பின் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தின் வழியாக ஒருவர் டிராக்டர் ஒட்டிக் கொண்டு வந்தார். அவரை துரத்திச் சென்று பிடித்து வழி கேட்டோம். அவர் “அந்த பக்கமா கிழக்க போனால் ஒரு மரம் வரும் அந்த மரத்தை தாண்டினால் சாலை வந்து விடும்” என்று அங்கிருந்த ஒரு மரத்தையும் காட்டினார். நன்றி சொல்லிவிட்டு திரும்பும் போது தான் தெரிந்தது முன்னால் சென்ற இருவருக்கும் இவர் தான் வழி சொல்லி அனுப்பி இருக்கிறார். மீண்டும் அவர்களுக்கு அழைத்தேன் சாலையில் கால் வைத்து விட்டதாகவும் எங்களுக்காக ஒரு இடத்தில் அமர்ந்து காத்திருப்பதாகவும் சொன்னார்கள். நாராயணன் அவர்களையும் பார்த்து விட்டார்களாம். டிராக்டர் காரர் நீங்கள் ஏன் இங்கு சுற்றுகிறீர்கள் அவர்களோடு சென்றிருந்தால் பக்கம் தானே என்று சபரீஷ் சென்ற வழியை கை காட்டினார். மீண்டும் மெதுவாக கௌதம் பக்கம் தலையை திருப்பினேன். அவன் மேலும் மெதுவாக தலையை கீழே தொங்கப்போட்டான். அவர் சொன்னது போல் அந்த மரத்திற்கு செல்வதற்கு ஒரு மண் தடம் சற்று வளைந்து செல்வது போல் தோன்றியது. அந்த தடத்தை பின் தொடர்ந்து சென்றால் அது எங்கேயோ சம்மந்தம் இல்லாத ஒரு இடத்திற்கு சென்று முடிந்து விட்டது. மீண்டும் வந்த வழியிலேயே வந்து மண்டையை பீய்த்துக் கொண்டு நின்றோம். சற்று குனிந்து பார்த்தால் அங்கு இருந்த பள்ளத்தில் இறங்கி ஏறுவதற்கு ஒரு ஒட்டறையடி பாதை இருந்தது. அது நேராக அந்த மரத்தை நோக்கி செல்வது போல் தோன்றியது. ஆஹா! வழியை கண்டு பிடித்து விட்டோம். ஆனால் ஒரே ஒரு சிக்கல் தான். ஒரு நான்கைந்து அடி அகலம் உள்ள சின்ன பள்ளத்தில் இறங்கி மீண்டும் ஏறி பெரிய பள்ளத்தில் இறங்கி அந்த மரம் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். அந்த சின்ன பள்ளத்தில் காணுக்காலுக்கு மேல் வரை தண்ணீர் சென்று கொண்டு இருந்தது. அதில் மீன்கள் எல்லாம் கூட நீந்திக் கொண்டு இருந்தது. எவ்வளவு தூரம் தாண்டி குதித்தாலும் ஒரு காலை தண்ணீரில் வைக்காமல் தாண்டவே முடியாது. அர்ச்சனாவெல்லாம் இன்னும் இரண்டு முறை சேர்த்தி வைக்க வேண்டும். நான் ஷூவை கழற்றி கையில் வைத்துக் கொண்டு சென்று விடலாம் என்று சொன்னேன். சிலர் செருப்பு மாட்டிக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆனால், கௌதம் அதையெல்லாம் எதுவும் கேட்கும் மனநிலையில் இல்லை. “ஏன் டா டேய் இந்த குழிய தாண்டறதுக்கு ஷூவ கழட்டனுமா இப்போ பார்” என்று சொல்லி ஒரு பெரும் கல்லை எடுத்து அந்த கையில் வைத்துக் கொண்டு “இது மேல கால வெச்சு ஈசியா போய்ரலாம்” என்றவாறே அந்த கல்லை நடுக்குழியில் போட்டான். தொப்பென்று விழுந்து அந்த கல் முழுவதுமே தண்ணீரில் மூழ்கி விட்டது. அப்போதும் அவன் முயற்சியை கை விடுவதாக இல்லை. “ஒண்ணும் இல்ல காய்ஸ்.. ஈசி தான். நான் போற மாதிரி என்ன அப்படியே ஃபாலோ பண்ணி வந்துருங்க” என்று சொல்லி முன்னால் பாய்ந்தான். முதலில் அருகில் இருந்த கல்லில் சரியாக காலை வைத்து, அடுத்து நடு பள்ளத்தில் போட்ட கல்லில் காலை வைப்பதாக சொல்லி தொப்பென்று தண்ணீரில் விட்டு குழியில் இருந்த தண்ணீரை படு வேகமாக வானில் தெறிக்க விட்டான்.
அவனின் ஒற்றைக் காலிற்குள் தண்ணீர் சென்று ஷூ விற்குள் ஒரு ஆறு போல் கிழக்கும் மேற்கும் தண்ணீர் உலாவிக் கொண்டு இருந்தது. நாங்கள் வெடித்து சிரித்து கண்களில் இருந்து தண்ணீர் தெரித்துக் கொண்டு இருந்தது. யாராலும் நிலையாக நிற்கவே முடியவில்லை. அந்த மாபெரும் சிரிப்பின் எழுச்சியை அடக்க முடியாமல் சில நிமிடங்கள் திணறிப் போய்விட்டோம். பொடுசுக்கு பொடுசு என்று கூப்பிடுவதற்கு பழி வாங்க ஒன்று கிடைத்து விட்டது. அன்று நாள் முழுவதும் ஓயாமல் “ஒண்ணு இல்ல காய்ஸ்” என்று திரும்ப திரும்ப சொல்லி சிரித்துக் கொண்டே இருந்தாள்.
நாங்கள் அனைவரும் பார்த்து கற்ற பாடத்தினால் காலனியை கழற்றி கையில் வைத்துக் கொண்டு அந்த குழியை கடந்தோம். ஒரே பயம் சிரிப்பு தாங்காமல் தடுக்கி தண்ணீரில் விழுந்து விடுவோமோ என்பது மட்டும் தான். பிறகு அவனுக்கும் வேறு வழி என்ன, கழற்றி கையில் வைத்துக் கொண்டான். இன்னொரு தண்ணீர் தேக்கத்தையும் நாங்கள் தாண்ட வேண்டி இருந்தது. அது பதினைந்து அடிக்கு பக்கம் அகலமாக தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. நான் முன்னால் சென்றேன். பொடுசு “ஒண்ணு இல்ல காய்ஸ்” என்று சொல்லிக் கொண்டே பின்னால் நடந்து வந்தாள். மணல் பரப்பில் நிசப்தமாக அந்த சிறு ஓடை சென்று கொண்டிருந்தது. அனைவரும் வெறுங்காலில் அந்த நீரோட்டதுடன் அந்த மணலில் நடப்பதற்கு நன்றாகவே இருந்தது. அந்த நீரோட்டதை தாண்டியவுடன் அவர் சொன்ன மரம் வந்து விட்டது.
அந்த மரத்தை தாண்டியவுடன் ஒரு நடுவயது பெண் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தார். அதன் பிறகு தான் மனித நடமாட்டதை கண்ணில் காண்கிறோம். அங்கிருந்து சாலையில் சென்று சேர்ந்தோம். அதே சாலையில் ஒண்ணு ஒன்றரை கிமீ நடந்து சென்றோம். வயலில் தேங்கி நிற்கும் சிறு தண்ணீர் குட்டையில் கூட மாடுகளையும் டிராக்டர்களையும் கழுவி விட்டுக் கொண்டும், குளித்துக் கொண்டும் சிலர் இருந்தனர். ஒருவர் வயலுக்குள் இருந்து எங்களை பார்த்து சத்தமிட்டு நிறுத்தினார். யார்? என்ன? என்று விசாரித்தார். எங்கள் நோக்கத்தையும், தூரத்தையும் சொன்னோம். அவர் கொஞ்சம் ஏளனமாக என்ன கொஞ்ச கொஞ்ச தூரம் வண்டில போய் எறங்கி நடந்து போறதா என்றார். இல்லை முழுவதுமாக 400 கிமீ நடந்தே தான் செல்கிறோம், வண்டி ஏற மாட்டோம் என்றோம். அவர் அப்படியே அதிர்ச்சியில் சில கணங்கள் எதுவும் பேசாமல் நின்றிருந்தார். பிறகு அதை நம்ப மறுத்து சும்மா கதை எல்லாம் பேசாதிங்க அது எப்படி அவ்வளவு தூரம் நடந்தே போக முடியும் என்று அந்த ஆச்சரியம் அப்படியே முகத்தில் தேங்கிய நிலையில் கேட்டார். “அப்படி போக முடியும். நாங்க அப்படி தான் போறோம். இன்னைக்கு பதிமூன்றாவது நாள் கோயம்புத்தூரில் இருந்து நடந்து வந்துள்ளோம்” என்று சொன்னோம். அவர் மீண்டும் அசையாமல் இருந்தார். பிறகு “நேற்று இரவு எங்கு தங்கினீர்கள்?” என்று கேட்டார். காரையூரில் தங்கினோம் என்று சொன்னேன். அவர் உடனே “காரையூரில் இருந்து இந்த வழியாக ஏன் வந்தீர்கள். அப்படியே நேராக போனால் ஒரு இடத்தில் வழி இருக்கும் ரோட்டில் போய் அந்த வழி சேர்ந்திருக்கும். இது கொஞ்சம் சுற்று” என்று குறுகிய பாதை என்று சபரீஷ் மற்றும் அனு சென்ற பாதையை கை காட்டினார். நான் மீண்டும் கௌதமின் பக்கம் மெதுவாக தலையை திருப்பினேன். அவனும் பழையபடி தலையை மிக மெதுவாக தரையை நோக்கி கொண்டு சென்றான். நான் அவரை பார்த்து “ஆமா ஆமா அந்த வழியா தா எங்க ஆளுங்க ரெண்டு பேரு முன்னால போய் வெயிட் பண்டறாங்க. நாங்க அவங்க கிட்ட போய் சேந்துருவோம். இங்க கொஞ்சம் நோட்டீஸ் வெச்சிட்டு போறோம்” என்று சொல்லி சிலவற்றை சாலை ஓரத்தில் வைத்து கல்லை வைத்து விட்டு வந்தோம்.
அங்கிருந்து ஒரு முக்கால் கிலோ மீட்டர் சென்று முன்னால் சென்ற நண்பர்களை சேர்ந்தோம். அவர்களுடன் காரைக்குடியை சேர்ந்த நாராயணன் அவர்களும் அவருடைய மகன் ராம் சிதம்பரம் மற்றும் குடும்பத்தினரும் இருந்தனர். கிட்டத் தட்ட கால் மணி நேரம் முன்பே அங்கு வந்து விட்டனர். நாங்கள் அவர்களை சென்று சேர்வதற்குள் அவர்கள் ஒரு குட்டி தூக்கமே போட்டு எழுந்திருக்கலாம். ராம் சில கடலை மிட்டாய்களை கொடுத்தான். அங்கிருந்து புதுக்கோட்டைக்கு ஒரே வழி தான். எங்களுடைய சுமைகளை வாங்கி நாராயணன் தங்கள் காரில் போட்டு விட்டார். நடக்கத் தொடங்கிய பின் அவரும் ராமும் எங்களுடன் இணைந்து நடக்கத் தொடங்கினர். ராம் எட்டாம் வகுப்பு படிக்கிறான். பறவைகள் மேல் ஆர்வம் கொண்டவன். வெள்ளிமலை பறவை பார்த்தல் முகாமில் கலந்து கொண்டுள்ளான். அவன் பெரும் உற்சாகத்துடன் ஓட்டமும் நடையுமாக பறவைகளை இனம் கண்டு கொண்டே உடன் வந்தான்.
ஒரு இடத்தில் பள்ளி மாணவர்கள் பெரும் திரளாக நின்று இருந்தனர். அவர்களுக்கு நோட்டீஸ்களை கொடுத்து விளக்கினோம். நேற்று செருப்பு போட்டு நடந்ததால் இன்று எல்லோருக்கும் கடும் கால் வலி இருந்தது. அனுவுடைய ஷூ நேற்று பாரி அண்ணாவின் காரில் போட்டது காரிலேயே ஈரோடு சென்று விட்டது. அதனால் அவள் இன்றும் செருப்பு போட்டு நடக்க வேண்டி இருந்தது. கால் முழுவதும் பல இடங்களில் கொப்பலங்கள் புதிது புதிதாக புடைத்துக் கொண்டு இருந்தது. அவளுக்கு செருப்பு போட்டு அந்த கொப்பலங்கள் எல்லாம் மேலும் அழுத்திக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு காலிலும் ஐந்தாறு பேண்டேஜ்கள் பல கோணங்களில் ஓட்டப்பட்டு இருந்தது. அவளால் நடக்கவே முடியவில்லை. கடும் சிரமத்துடன் தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து நடந்து வந்தாள். எல்லோரும் அவளுக்கு முன்பு ஒன்றரை கிலோ மீட்டர் இடைவெளியில் சென்று கொண்டு இருந்தனர். ஒரு கட்டதில் நான் அவளுடன் இணைந்து நடந்து வந்தேன். இடுப்பிற்கு கீழ் முழுவதுமாகவே துன்புற்றுக் கொண்டு இருந்தாள். ஒரு இடத்தில் எங்களுக்காக அனைவரும் காத்திருந்தனர். அங்கு சென்று கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தோம். மீண்டும் நடக்கத் தொடங்கி ஒரு கோவிலை பார்த்தவுடன் மதிய ஓய்விற்கு சரியான இடம் என்று தேர்வு செய்து சாய்ந்து விட்டோம்.
சிபி
மேலும்..
Comments
Post a Comment