பதிமூன்றாம் நாள் – 2
மதியம் நாங்கள் ஓய்வெடுக்க ஒதுங்கிய கோவிலில் எங்களை பார்ப்பதற்காக ஒவ்வொரு கார்களாக வந்து ஒரு படையே திரண்டு விட்டது. முதலில் சுனில் கிருஷ்ணன் அவர்களின் கார் வந்தது. அதில் சுனில் கிருஷ்ணன், அவருடைய மனைவி மானசா, இரு குழந்தைகள் சுதீர் சந்திரன் மற்றும் சபர்மதி, மற்றும் கணேஷ் அவர்கள் ஆகியோர் இருந்தனர். அடுத்ததாக எங்கள் முதுகுப் பைகளை ஏற்றிச் சென்ற நாராயணன் அவர்களின் கார். அதில் தான் எங்களுக்கான மதிய உணவும் உள்ளது. மூன்றாவதாக உமையாள் அவர்களின் காரில் அவரும் தேனப்பன் அவர்களும் வந்தனர். ஒரு குட்டி மாநாடு போல் ஆகிவிட்டது. கடும் பசி அனைவருக்கும். இது எங்கள் காலை உணவிற்காக கட்டி எடுத்து வந்தது. காலை காரையூரில் சிலம்பரசன் அவர்களின் வீட்டில் உணவு ஏற்பாடு செய்து விட்டதால் இது அப்படியே மதிய உணவாகி விட்டது. கருப்பு கவுனி அரிசி என்று கருப்பும் அல்லாமல் நீலமும் அல்லாமல் மைய்யமாக ஒரு நிறமான அடர் வொய்லெட் நிறத்தில் ஒன்று வைத்தார்கள். அது ஒரு இனிப்பு. உண்மையில் அபாரமாக இருந்தது. அனுவிற்கு மட்டும் அவ்வளவாக பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
சுதீர் ஒரு காரின் மேல் தளத்தில் ஏறி அமர்ந்து கொண்டு எங்களை கேள்விகளாக கேட்டு துளைத்துக் கொண்டு இருந்தான். நடந்து போவதற்கு பதில் வண்டியில் வேதாரண்யம் செல்ல வேண்டியது தானே என்று முதலில் கேட்டான். அது பொதுவாக அனைவரும் கேட்கக் கூடிய கேள்வி தான். அனு அவனை அழைத்து தனியாக அதற்கான பதிலை சொன்னாள். அடுத்து என்ன என்னவோ கேள்வி எல்லாம் கேட்கத் தொடங்கினான். காந்தி போல் முடி இல்லாமல் இருக்காமல் ஏன் முடி வைத்துள்ளீர்கள் என்று ஒரு கேள்வி. காந்தி போல் உடை அணியாமல் செல்ல வேண்டியது தானே என்று ஒரு கேள்வி. கடைசியாக உங்களுக்கு எல்லாம் ஏன் காந்தி என்று பெயர் இல்லை என்றே ஒரு கேள்வி. இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மைய்யமாக சிரித்து வைத்தோம். ஆனால் அவன் பதில் கேட்டு நச்சரிக்காமல் எளிதில் அடுத்த கேள்விக்கு நகர்ந்து விடுகிறான். அது வரையில் கொஞ்சம் ஆறுதல்.
மானசா அவர்களுக்கு இன்று பிறந்த நாள். எங்களுக்கு மதிய உணவு பிரியாணி வர வேண்டியது தவறி விட்டது. ஆனால் பலவகையான சாக்லேட்கள் அளித்தனர். உமையாள் எங்களுக்கு கருப்பட்டி அல்வா கொண்டு வந்திருந்தார். சுவையான மதியம். சாப்பிட்டு முடித்த பின் சுனில் அவர்கள் எங்களிடம் பயணம் குறித்த அனுபவங்களை கேட்டுக் கொண்டு இருந்தார். அவருடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். பிறகு சுதிரை எங்களுடன் கிரிக்கெட் விளையாடும் படி சொன்னார். அவன் ஏதோ கிரிக்கெட் பயிற்சிக்கு எல்லாம் சென்று கொண்டு இருக்கிறானாம். உங்களுக்கு சின்ன பசங்களிடம் தோற்பது எல்லாம் பழகி இருக்கும் என்று சுனில் அவர்கள் கிண்டலடித்தார். வெகுண்டெழுந்து பிளாஸ்டிக் பந்தையும் மட்டையையும் கையில் எடுத்தோம். சபர்மதி, சுதீருக்கு பந்து வீசினாள். வெகு தூரம் ஓடிச் சென்று வீசுவாள். அது நடுவில் விழும் நாங்கள் எடுத்து மீண்டும் வீசுவோம். ஆனால் அந்த மழலை விளையாட்டு மாபெரும் உள்ளக் கிளர்ச்சியை கொடுக்கக் கூடியது. சபர்மதி குட்டி பொம்மை போல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருந்தாள். அபாரமான அழகு. பேரழகான சிரிப்பு. ஓவியத்திற்கு உயிர் வந்தது போல் இருந்தது.
சுதீரே தான் ஆடிக் கொண்டு இருந்தான். பாவப்பட்டு எங்கள் கையில் கொஞ்ச நேரம் அந்த பிளாஸ்டிக் மட்டையை கொடுத்தான். கிளம்புவதற்கு முன்பு அங்கிருந்த ஒரு மரத்தில் ஏறி கொஞ்ச நேரம் அமர்ந்திருக்கலாம் என்று கௌதம் சொன்னான். நானும் அவனும் மேலே எறினோம். சபர்மதியும் மேலே வருகிறேன் என்று சொன்னாள். அவளை ஏற்றி என் மடி மீது கொஞ்ச நேரம் அமர வைத்திருந்தேன். கைக்கு அடக்கமான குழந்தை.
அங்கிருந்து கிளம்பி நடக்கத் தொடங்கியவுடன் சுதீர் எங்களுடன் நடந்து வருவதாக அடம் பிடித்து கொஞ்ச தூரம் நடந்து வந்தான். கணேஷ் அவர்களும் கொஞ்ச தூரம் நடந்து வந்தார். உமையாளும் எங்களுடன் நடந்து வந்தார். தேனப்பன் ஒரு கிலோ மீட்டருக்கு முன்னால் சென்று வண்டியை நிறுத்தி காத்திருப்பார். நாங்கள் அவரை கடந்ததும் மீண்டும் அதே போல் ஒரு ஒரு கிலோ மீட்டராக நகர்த்தி நகர்த்தி புதுக்கோட்டை வரை வந்தார். நாராயணன் வந்த கார் எங்கள் பைகளை கொண்டு சென்று இரவு நாங்கள் தங்கும் இடத்தில் வைத்து விட்டு சென்று விட்டனர். ஆனால் அவரும், ராமும் எங்களுடன் புதுக்கோட்டை வரை நடந்து வந்தனர். ராம் நாளையும் எங்களுடன் விடுப்பு எடுத்துக் கொண்டு உடன் நடக்க அவனுடைய அப்பாவிடம் பேசி ஏற்பாடு செய்து விட்டான். “இங்க தா பா அந்த எடம் இருக்கு போய்ட்டு வந்தரலாம்” என்று தன்னுடைய அப்பாவிடம் சொல்லுவான். பதிலுக்கு அவர் “வீட்டு பக்கத்துல தா உன்னோட ஸ்கூல் இருக்கு டெய்லி போறியா டா நீ” என்று பதிலுக்கு கேட்பார். “எத்தன லீவு தாண்டா போடுவ?” என்று நாங்கள் அவனிடம் கேட்டால் அவன் எப்போதும் சொல்லும் ஒரு பதில் “இப்போ நா எட்டாவது படிக்கற இன்னும் நாலு வருஷம் மட்டும் லீவ் போட்டா போதும்” என்பது. ஒரு கிலோமீட்டர் தாண்டியவுடன் சுதீர் மற்றும் கணேஷ் அவர்களை சுனில் சார் வந்து அழைத்துக் கொண்டு ஊர் திரும்பி விட்டார்.
400 கிமீ நடை என்பது தீவிரமான ஒரு பயணம். தீவிரமான ஒன்றை முன் வைத்து சென்று கொண்டு இருக்கிறோம். ஆனால் பயணம் முழுக்கவே பெரும்பாலும் நகைச்சுவைகள் நிரம்பியதாகவே இருக்கும். சிரிப்பொலி தான் எங்களை அவ்வளவு தூரம் அழைத்து சென்ற ஒரு காரணி. சரண்யா கூட நாங்கள் விளையாட்டுத்தனமாக இருப்பது குறித்து சொல்லி இருந்தார். அப்படி ஒன்றை சொல்ல வேண்டும் என்றால், இந்த பயணத்தில் எங்களுடன் வருவது அனைவரும் பெண்கள். நானும் கௌதமும் மட்டும் தான் ஆண்கள் என்பதால் எங்கள் இருவரில் யாருக்காவது ஒண்ணுக்கு வந்தால் சொல்வதற்கு எங்களுக்குள் ஒரு கோட் வேர்ட் வைத்திருந்தோம். “கிளைமேட் நல்லா இருக்குல டா” என்று சொன்னால் இன்னொருவன் புரிந்து கொண்டு அப்படியே மெதுவாக பின்னால் செல்ல வேண்டும் என்பது எங்களுக்குள்ளான விதி. கௌதம் ஒரு முறை என்னிடம்
“கிளைமேட் நல்லா இருக்குல டா” என்றான்.
நான் அதை பெரிதாக கவனிக்காமல் சுற்றி பார்த்து விட்டு “ஆமா டா” என்றேன்.
அவன் கொஞ்சம் பல்லை கடித்தாவாறு “கிளைமேட் நல்லா இருக்கு டா” என்று “நல்லாவை” ஒரு அழுத்தத்துடன் சொன்னான்.
நான் மீண்டும் “அட ஆமா டா” என்றேன்.
அவன் மீண்டும் “டேய்.. கிளைமேட் நல்லா இருக்கு டா டேய்” என்று மேலும் இறுக்கமாக பல்லை கடித்துக் கொண்டு கத்தலாக சொன்னான்.
அப்போது தான் எனக்கு புரிந்தது. சிரித்து விட்டேன். “அட ஓ!.. அந்த கிளைமேட்டா.. தெளிவா சொல்ல வேண்டியது தான டா” என்றேன்.
“அத தான டா ரொம்ப நேரமா சொல்லிட்டு இருக்கேன்” என்றான்.
“சரி சரி வா இன்னும் கொஞ்ச தூரம் போய் எதாச்சு எடம் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு நான் பாட்டுக்கு முன்னால் சென்றேன். அவன் அமைதியாக கொஞ்ச தூரம் வந்தான். அதற்குள் சில அடிகள் பின்னால் வந்து கொண்டிருந்த பெண்கள் எங்களோடு வந்து ஒட்டிக் கொண்டு ஏதோ பேசத் தொடங்கி இருந்தனர்.
அவன் பார்க்கும் வரை பார்த்து விட்டு ஒன்றும் பொறுக்க முடியாமல் என்னிடம் “கிளைமேட் ரொம்ப அவசரமா நல்லா இருக்கு டா” என்றான். என்னால் சிரிப்பை நிறுத்தவே முடியவில்லை. சாலையிலேயே உட்கார்ந்து சிரிக்கத் தொடங்கி விட்டேன். உலகத்தில் எந்த கிளைமேட்டும் ரொம்ப அவசரமாக நன்றாக இருக்காது என்றே நினைக்கிறேன். அந்த ஒரு நாள் முழுக்க நடப்பதற்கு அந்த ஒரு தருணம் போதும். ஆனால் அது மாதிரி ஒரு நாளில் பல நடக்கும்.
நாங்கள் சென்றது ஒரு திருப்பங்களே அற்ற நீள் சாலை. முன்னும் பின்னும் எங்கு திரும்பினாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சாலை நீண்டு சென்று கொண்டே இருந்தது. எதிரில் இருந்து இரண்டு இளைஞர்கள் ஒரு வண்டயில் வந்து எங்கள் அருகில் நிறுத்தி விசாரித்தனர். அருகில் ஒரு வேளாண்மை கல்லூரி இருந்தது. அதற்கு வந்தவர்களா என்று கேட்டார். நாங்கள் கோவையில் இருந்து நடந்து வருவதையும் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்ற கொள்கையை முன்வைத்து நடந்து வருவதையும் சொல்லி ஒரு நோட்டீஸை அவருக்கு வழங்கினோம். அவர் பெரும் அதிர்ச்சி அடைந்து விட்டார். இப்படி வருவது சாத்தியமே இல்லை என்று நினைத்தார். நாங்கள் ஒரு பெரிய காரியத்தை முன்னெடுக்கிறோம் என்று உணர்ந்து ஒரு பத்து நிமிடம் பித்து நிலையில் இருந்தார். “நான் உங்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும், தண்ணீர் உள்ளதா?” என்று கேட்டு விட்டு நாங்கள் இருக்கிறது என்று சொல்லும் முன்னரே “இங்கயே இருங்க. நா போயி தண்ணீ வாங்கிட்டு வந்தற்ற” என்று மூச்சு வாங்க சொல்லிவிட்டு உடனடியாக வண்டியை திருப்பிக் கொண்டு சென்று விட்டார். நாங்கள் மெல்ல நடக்கத் தொடங்கி விட்டோம். அவர் மீண்டும் வேகமாக வந்து எங்கள் அருகில் வண்டியை நிறுத்தி “இரண்டு மூன்று இடத்தில் கேட்டு பார்த்தேன் எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்று இரண்டு பெரிய பண்டல் முழுக்க பிஸ்கட் வாங்கி வந்திருந்தார். ஏகப்பட்ட பிஸ்கட் இருந்தது. வேண்டாம் இதை தூக்கி செல்வது சிரமம் என்று சொல்லி பார்த்தோம். அவர் விட்ட பாடு இல்லை. போற வழியில் ஆளுக்கு ரெண்டு சாப்பிட்டால் தீர்ந்து விடும் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி கையில் திணித்து விட்டார். மூச்சு வாங்கிய படி விரைவாகத் தான் பேசிக்கொண்டு இருந்தார். நீங்கள் செல்லும் வழியில் நண்பர்கள் சிலரிடம் சொல்லியுள்ளேன் வந்து பார்ப்பார்கள் என்று சொன்னார். எங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். வண்டியை கிட்டத்தட்ட நடு ரோட்டில் நிறுத்தி விட்டு எங்களுடன் பேசினார். சில கணங்கள் அவர் தன்னிலை மறந்து கிடந்தார். எங்களை விட்டு பிரியும் போது சுமாராக தேறிவிட்டிருந்தார்
அவர் எங்களை விட்டு பிரிந்த கொஞ்ச நேரத்திலேயே அந்தி சாயத் தொடங்கி விட்டது. அன்றைய தினத்தின் கடைசி ஒளியில் நடந்து கொண்டிருந்தோம். மேற்கே சூரியன் மேகக் குவியலுக்கு பின்னால் ஒரு ஓவியம் போல் மங்கி மயங்கி தன் கதிர்களை அளித்துக் கொண்டு இருந்தது. எல்லோரும் முன்னால் செல்ல நான் மட்டும் ஒரே இடத்தில் நின்று அந்த காட்சி மறையும் வரை பார்த்துக் கொண்டு இருந்தேன். ஆதவன் தன் வடிவத்தை முழுவதுமாக இழந்து பிரஷில் ஆரஞ்சு நிறத்தை முக்கி வடக்கும் தெற்கும் நான்கு முறை இழுத்தது போல் ஒரு போதமுற்ற நிலையில் இருந்தது. அது தன் இறுதி ஜீவனை கசிந்து கொண்டிருந்த தருணத்தில் எங்கள் வழியில் இருந்த மாபெரும் அரச மரத்தில் பல்லாயிரம் பறவைகள் கூடி உள்ளம் அதிரும் படி ஒலி எழுப்பிக் கொண்டு இருந்தது. அண்ணாந்து மேலே கொஞ்ச நேரம் பார்த்து நின்றேன். ஒரு குட்டி குரங்கு தாவியது. இந்த வாழ்க்கை எவ்வளவு இனிது என்று நினைத்துக் கொண்டேன்.
நான்கு கிமீ மேல் நடந்த பிறகு திறன்பேசியில் பார்த்தால் புதுக்கோட்டைக்கு இன்னும் 8 கிலோமீட்டர் என்று காட்டியது. மேலும் இரண்டு கிலோமீட்டர் நடந்த பின்னர் ரோட்டில் புதுக்கோட்டைக்கு 11 கிமீ என்று ஒரு போர்டு போட்டிருந்தது. சேரி தவறாக போட்டிருப்பார்கள் என்று நினைத்து கண்டு கொள்ளாமல் நடந்து கொண்டு இருந்தோம். ஆனால் பின்னால் தான் அது சரியாக தான் இருக்குமோ என்று தோன்றியது.
நாங்கள் மதியம் ஓய்வெடுத்த இடத்தில் இருந்தே புதுக்கோட்டைக்கு 12 கிலோமீட்டர் தான் காட்டியது. அதை கணக்கிட்டு தான் நடக்கத் தொடங்கினோம். அதன் படி பார்த்தால் 7:30 மணிக்கு நாங்கள் சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் 8 மணி ஆகியும் இன்னும் போய் சேராமல் நடந்து கொண்டே தான் இருந்தோம். எங்களுக்கு இரவு தங்க இடமளித்த சிதம்பரம் அவர்களுக்கு அழைத்து வீட்டின் லொகேஷன் அனுப்ப சொல்லி பார்த்தால் இன்னும் 6 கிலோமீட்டர் உள்ளது என்று காட்டியது. அதை எங்கள் யாராலும் நம்ப முடியவில்லை, முதலில் என்னுடைய போனில் போட்டு பார்த்து அப்படி வந்ததனால் என்னுடைய போனில் ஏதேனும் பிரச்சனையாக இருக்கும் வேறு யாராவது போனில் போட்டு பாருங்கள் என்று குழுவில் பகிர்ந்தேன். ஒவ்வொருவராக போட்டு பார்த்து அனைவருக்கும் அதே கணக்கு காட்டியதில் உண்மையில் துவண்டு விட்டோம். ஒருவழியாக ஒரு போனில் அரைக் கிலோமீட்டர் குறைவாக காட்டியது. அதை பார்த்து நடக்க தொடங்கினோம்.
நேற்று செருப்பு போட்டு நடந்ததால் முதலே கடும் கால் வலி இருந்த சமயத்தில் இன்று திட்டமிட்டதை விட கூடுதலாக நடக்க வேண்டியதாக போனது மிகுந்த சிரமத்தை கொடுத்தது. காலை தான் ஒரு யாருமற்ற மண் தடத்தில் வழி தெரியாமல் சுற்றி வெளியே வந்திருந்தோம். என்னுடைய ஷூவில் கால் வைப்பதற்கு உள்ளே இருக்கும் இன்ஷோல் (insole) பதிமூன்று நாட்களில் எடையை தாங்கி தாங்கி தேய்ந்து போய் இடது கால் கட்டை விரலுக்கு கீழே ஒரு குழி ஆகி இருந்தது. அதில் பாதம் உரசி உரசி எரியத் தொடங்கியது. இவ்வளவு நாட்கள் விரல்களிலும் பின்னங்காலிலும் ஏற்பட்டிருந்த கொப்பலங்களை எப்படியோ தாங்கி நடந்து கொண்டு இருந்தோம். இன்று எனக்கு பாதத்தின் அடியில் உரசி கொப்பலம் வந்துவிட்டது. அதையும் வைத்துக் கொண்டு திட்டமிட்டதை தாண்டி ஆறு கிலோமீட்டர் நடப்பது என்பது பெரும் வதையாக மாறிவிட்டிருந்தது.
துளி கூட எங்கள் யாராலும் நடக்க முடியவில்லை. ஆனால் வேறு வழியும் இல்லை திட்டமிட்ட இடத்தை அடைந்தே ஆக வேண்டும். தேய்த்து தேய்த்து அடியடியாக நடந்து சென்று கொண்டிருந்தோம். சிதம்பரம் அவர்களின் வீட்டை அடையும் போது உடலில் இருந்த ஒட்டுமொத்த ஆவியும் வெளியேறியதைப் போல் இருந்தது. ஒன்றுமே செய்ய முடியவில்லை. மேல் மாடியில் எங்கள் அறை. அந்த கடும் கால் வலியுடன் முற்றிலும் சோர்ந்த உடலுடன் அந்த படிகளை ஏறுவதை நினைத்தால் இப்போது கூட வலிக்கிறது. எனக்கு சாப்பாடே வேண்டாம் நான் அப்படியே படுத்து தூங்குகிறேன் என்று சொல்லி சாய்ந்து விட்டேன். சௌமியாவும் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி விட்டாள். என்னை விட அவளுக்கு கூடுதல் வலி இருந்தது போல் தெரிந்தாள். இனிப்பு பணியாரம், சப்பாத்தி என்றெல்லாம் உச்சரிப்பதை காதில் கேட்டவுடன் எழுந்து அமர்ந்து கொண்டு அருகில் இருந்தவர்களுக்கு கேட்கும்படி “ஹம்.. சப்படலாம்னு தா தோணுது.. இங்க இருந்து கீழ போய் சாப்படனும்னு நெனச்சா தா பயமா இருக்கு. யாராவது மேல கொண்டு வந்து கொடுத்தா நல்லா இருக்கும். நமக்கு யாரு அப்படீலா கொண்டு வந்து கொடுக்க போறாங்க” என்று சில வசனங்களை உதிர்த்தேன். லைலா பெரிய மனது வைத்து தட்டில் பணியாரங்களை அடுக்கி கொண்டு வந்து மேலே கொடுத்தாள். சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் முகத்தை ஒரு மாதிரி சோகமாக வைத்துக் கொண்டு “இன்னொரு இனிப்பு பணியாரம் இருந்த நல்லா தா இருக்கும்.. ஹம் யாரு கொண்டு வருவா” என்று பாவமாக சொன்னேன். அனு எனக்காக தட்டை வாங்கி சென்று இனிப்பு பணியாரம் வாங்கி வந்தாள். என்ன இனிமையான நண்பர்கள்.. சௌமியாவை சாப்பிட சொன்னதற்கு அவள் மறுத்து விட்டாள். அவளும் என்னை போல் தான் பிகு பண்ணுகிறாள் என்று நினைத்து நிஜமாகவே வேண்டாமா என்று கேட்டு சீண்டிக் கொண்டு இருந்தேன். “நா வேணா ஊட்டி விடட்டா” என்று கூட கேட்டுப் பார்த்தேன். வேண்டாம் என்று மறுத்து விட்டாள். உண்மையாகவே என்னை விட அதிக வலி தான் போலிருக்கிறது.
பித்து நிலையர் கொடுத்த பிஸ்கட்களுடன்..
நான் சாப்பிட்டு முடித்து இனி தட்டை கீழே கொண்டு போய் வைக்க சொன்னால் அடி தான் விழும் என்று தெரிந்து கொண்டு நானே எழுந்து கீழே சென்றேன். படியை பார்த்ததும் கால் வலி அதிகரித்து விட்டது. மூச்சை இருக்கிக் கொண்டு இறங்கி தட்டை வைத்து கை கழுவி விட்டு மேலே வரும் வழியில் உமையாள் மற்றும் தேனப்பன் ஆகியோர் எங்கள் காலணிகள் அனைத்தையும் எடுத்து சென்று அருகில் உள்ள செருப்பு கடைகளில் இன்ஷோல் (insole) வாங்கி வந்திருந்தனர். அனுவின் ஷூ தவறி விட்டதால் மதியம் சுனில் சார் ஒரு ஷூ வாங்கி வந்திருந்தார். ஆனால் அதுவும் அவளை நடக்க விடாமல் தான் செய்து கொண்டிருந்தது. கொப்பலங்கள் உரசிக் கொண்டு இருந்தது. அதனால் உமையாளும் தேனப்பனும் அவளிற்கு வேறு புதிய ஷூ வாங்கி வந்திருந்தனர். அன்று இரவு 11 மணிக்கு அங்கு அலைந்து எங்களுக்காக இதை செய்து கொண்டு இருந்தனர். நான் அதை போட்டு பார்த்து சரியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு தட்டுத் தடுமாறி எப்படியோ மேலே சென்று சாய்ந்து விட்டேன். உமையாள் மற்றும் தேனப்பன் ஆகியோர் இதற்கு பிறகு திண்டுக்கல் சென்றால் மிகவும் தாமதம் ஆகிவிடும் என்று சொல்லி சிதம்பரம் குடும்பத்தினர் புதுக்கோட்டையில் நாங்கள் தங்கி இருந்த வீட்டிலேயே அவர்களையும் இருக்க வைத்து விட்டனர். இது போன்ற மனிதர்கள் இல்லாவிட்டால் இந்த 400 கிலோமீட்டர் நடப்பது இன்னும் எவ்வளவு சிரமம் என்று நினைத்துக் கொண்டேன்.
சிபி
மேலும்..
Comments
Post a Comment