பதினான்காம் நாள்
முந்தைய நாள் இரவே நாங்கள் திட்டமிட்டதை விட கூடுதலாக நடந்து விட்டதால் இன்று நடக்க வேண்டிய தொலைவு குறைவாகவே இருந்தது. கால்வலி அதிகமாக இருந்ததாலும் இன்று குறைவான தொலைவே நடக்க வேண்டும் என்பதாலும் மிகவும் நிதானமாக கிட்டதட்ட 10 மணி வாக்கில் தான் கிளம்பினோம். சிதம்பரம் அவர்களின் குடும்பத்தினர் பெரும்பாலும் இந்த வீட்டில் இருக்க மாட்டார்களாம். அவருடைய மாமியார் மட்டுமே இந்த வீட்டில் இருப்பதாகவும் இவர்கள் எல்லாம் எங்களுக்காக இங்கு வந்ததாகவும் சொன்னார்கள். அவர்கள் குடும்பத்தில் அனைவருடைய பேச்சிலும் ஒரு நிதானம் இருந்தது. எங்களுடைய முதுகுப் பையை இங்கேயே வைத்து விட்டு செல்லுமாறும் நாங்கள் இரவு தங்க வேண்டிய இடத்திற்கு ஒரு ஆட்டோவில் அந்த பைகளை வைத்து அனுப்பி விடுவதாகவும் சொன்னார்கள்.
சிதம்பரம் குடும்பத்தினருடன்
நாங்கள் கிளம்பும் முன்னர் அனுவிற்கு தபால் நிலையத்தில் ஒரு கணக்கு தொடங்க வேண்டி இருந்தது. அவளுடைய கல்லூரியில் இருந்து உடனடியாக தபால் நிலையத்தில் ஒரு கணக்கு தொடங்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்களாம். அதனால் நாங்கள் இரு குழுவாக பிரிந்து அனுவும், கௌதமும் தபால் நிலையம் சென்று கணக்கு தொடங்கி விட்டு வந்து எங்களுடன் இணைந்து கொள்வதாக சொல்லி வேறு திசையிலும் மற்றவர்கள் அனைவரும் ஆலங்குடி என்னும் ஊரை நோக்கியும் நடக்கத் தொடங்கினோம். நாங்கள் முதலில் இன்று இரவு தங்குவதற்காக திட்டமிட்ட இடம் மேலப்பட்டி ரசியமங்கலம் என்னும் ஊர். நாராயணன் விசாரித்து அதற்கு அருகில் ஆலங்குடி என்னும் ஊரில் ஒருவரிடம் பேசி இன்னொருவர் எண் வாங்கி இருந்தார். இன்று ஆலங்குடிக்கு மொத்தம் 19 கிலோமீட்டர் நடக்க வேண்டும். மேலப்பட்டி ரசியமங்கலம் சென்றாலும் அதே தொலைவு தான். ஆனால் நாளை நடக்கும் தொலைவு அங்கு தங்கினால் இரண்டு கிலோமீட்டர் குறையும். நாராயணன் எனக்கு அளித்த எண்ணிற்கு அழைத்து பேசிய போது அவர் கோவையில் இருப்பதாகவும் ஆனால் நண்பர்கள், குடும்பம் எல்லாம் ஆலங்குடியில் தான் இருப்பதாகவும் அங்கு இரவு தங்குமிடமும் உணவும் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சொல்லி இருந்தார். அவர் அவ்வாறு சொல்லியதால் ஆலங்குடியில் தங்க முடிவெடுத்தோம்.
நாராயணன் அவர்களும், அவரின் மகன் ராமும் இன்றும் முழு நாள் எங்களுடன் நடக்க போகிறார்கள். நாங்கள் புதுக்கோட்டை நகரம் முழுக்க செல்லும் வழியில் கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் நோட்டீஸ் வழங்கிக் கொண்டே சென்றோம். ஒரு டீக்கடையில் லைலாபானு நோட்டீஸ் கொடுக்கும் போது ஒருவர் ஏதேதோ கேள்விகளை அவளிடம் வீசிக்கொண்டு இருந்தார். நான் அருகில் சென்று முதலில் எதுவும் பேசாமல் அவள் என்ன பதில் சொல்கிறாள் என்று பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். அவர் “எங்க கிட்ட ஏன் கொடுக்கறீங்க? போய் பணம் கொடுக்கிறவன் கிட்ட சொல்லிக் கொடுங்க” என்று சொன்னார். அப்போது தான் நான் பேசினேன். “அவங்க கிட்டயும் சொல்லத் தான் போறோ. இதுக்கு முன்னாடி சொல்லியும் இருக்கோம். ரெண்டு மொனைல இருந்துமே மாற்றம் நடக்கணும். நீங்க வாங்கறத நிருந்துங்க அவங்களும் கொடுக்கறத நிறுத்துவாங்க” என்று சொன்னேன். நான் பேசத் தொடங்கிய போதே ஆங்காங்கு நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு இருந்த நண்பர்கள் எல்லோரும் அங்கு வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டனர். ஒரு சிறு கூட்டம் உருவாகி விட்டது. அவர் உடனே “சட்டத்த போய் மாத்துங்க. கேஸ் போடுங்க. பணம் கொடுக்கறவன ஜெயில்ல போடுங்க. வாங்கறவனையும் போடுங்க” என்று ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார். அதை முழுவதும் பொறுமையாக கேட்டு முடித்து விட்டு நான் பதில் சொல்லத் தொடங்கினேன். நான் பேசத் தொடங்கியவுடன் முதல் வரியிலேயே ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு நான் சொல்ல வருவதை கேட்காமல் என்னை பாதியிலேயே நிறுத்தி மீண்டும் ஒரு உரையை நிகழ்த்தினார். அதையும் கேட்டுவிட்டு நான் பேசத் தொடங்கினால் அப்போதும் என்னை இரண்டாவது வரியிலேயே நிறுத்தி அவர் பேசத் தொடங்கி விட்டார். என்னால் அதற்கு மேல் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கடும் எரிச்சல் அடைந்து விட்டேன். நான் சொல்வதை நீங்கள் கேட்கத் தயாராக இல்லை உங்களிடம் என்னால் பேச முடியாது என்று சொல்லி விட்டேன். அதன் பிறகு நாராயணன், அவரிடம் இன்னும் கொஞ்சம் பணிவான தொனியில் சிறு விளக்கம் கொடுத்தபின் மீண்டும் நடக்கத் தொடங்கினோம். அவர் என்னிடம் மக்கள் என்ன பேசினாலும் எவ்வளவு பேசினாலும் முழுவதும் பேச விடுவோம். அப்போது தான் அவர்களை பற்றி இன்னும் அதிகமாக நமக்கு தெரியவரும் என்று சொன்னார். ஏற்கனவே பதினான்கு நாட்கள் அவ்வாறு பலர் பேசுவதை கேட்டுள்ளோம் என்று முதலில் மனதில் தோன்றியது. அடுத்த கணமே ஒருவேளை எனக்கு இன்னும் பொறுமை போதவில்லையோ என்று தோன்றத் தொடங்கியது. நானும் அவர்களைப் போலவே எந்திரம் போல நான் சொல்ல வருவதை மட்டும் சொல்லிவிட்டு, அவர்கள் சொல்லுவதை முழு கவனத்துடன் கேட்கவில்லையோ என்று தோன்றியது. அது மிகவும் கடினமான ஒன்று தான். எல்லோரும் பேசுவதை அப்படி கேட்கவே முடியாது. பெரும்பாலான நேரங்களில் அது ஒரு வதையாகத் தான் இருக்கும். நம் நேரத்தையும் கவனத்தையும் கணிசமாக செலவழிக்க வேண்டும். ஆனால் அதை செய்யத் தானே வந்துள்ளோம், மக்களிடம் உரையாடுவது தானே நான் செய்ய வேண்டியது என்று தோன்றியது. இனிமேல் இயன்றவரை அவர்கள் சொல்வதை முழுவதும் கேட்க முயலவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
ராம்.
அதன்பின் அங்கிருந்து நாங்கள் மீண்டும் சிறு சிறு குழுக்களாக பிரிந்து நடக்கத் தொடங்கினோம். நானும் அர்ச்சனாவும் ஒன்றாக நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு கிழவர் எங்களை அழைத்து எதற்காக செல்கிறீர்கள் என்று கேட்டார். அவர் ஒரு பெரும் சிரிப்பை ஏந்தி நின்றிருந்தார். “ஓட்டுக்கு பணம் வாங்காதீங்கனு ஊரு ஊரா சொல்லீட்டு கோயம்புத்தூருல இருந்து நடந்து வறோம்” என்று சொல்லி முடிக்கும் முன்னரே “நான் வாங்குவே” என்று சொல்லி வெடித்து சிரித்தார். நான் எதுவும் சொல்லாமல் சில கணங்கள் அவரை வெறுமனே பார்த்துக் கொண்டு நின்றேன். மிகவும் வினோதமான நபர். குள்ளமாக ஒல்லியான உடல். சிறு கூனுடன் நின்றிருந்தார். அவரை விட பெரிய உடைகளையும் கழுத்தில் ருத்திராட்ச மாலையையும் அணிந்திருந்தார். அவருக்கு பின்னால் நடை பாதை அமைக்கப்பட்ட ஒரு குளம். குனிந்து பார்த்தால் எங்கள் இருவருக்கும் இடையில் உள்ள இடத்தில் சின்னதாக மூன்று கற்கள் கூட்டப்பட்டு ஒரு கரண்டியில் குழம்பு கொதித்துக் கொண்டு இருந்தது. நாங்கள் அவரின் சமைலறைக்குள் நின்றிருந்தோம் என்று அப்போது தான் தெரிந்தது. அளவாக ஒரு வேளைக்கு ஒரு கரண்டி அளவே குழம்பு வைத்துக் கொண்டு இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அவர் ஏதேதோ சொல்லிக் கொண்டு இருந்தார். அவருடன் கொஞ்ச நேரம் நின்று வெறுமனே பேசிக் கொண்டு இருந்தேன். ஐந்து நிமிடத்தில் அவரிடம் பேசிவிட்டு கிளம்பி விட்டேன். ஆனால் இப்போது யோசித்து பார்த்தாலும் இந்த ஒட்டுமொத்த நடை பயணத்தில் நான் கண்ட மிகுந்த மகிழ்ச்சிகரமான நபர் என்று யோசித்தால் அவர் முகம் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. அவரை பார்த்ததாலே நானும் மகிழ்வடைந்து விட்டேன்.
அங்கிருந்து புதுக்கோட்டை நகர எல்லையை தாண்டி இரண்டு புறமும் வனம் போன்ற ஒரு சாலையில் நடந்து கொண்டிருந்தோம். ஒரு கட்டதிற்கு மேல் அந்த வனம் முழுவதுமே யூக்களிப்டஸ் மரங்களின் திரலாக மாறியது. நேர்த்தியான வரிசையில் மரங்கள் வளர்ந்திருந்தது. ஒரே நேர்கோட்டில் மரங்கள். ஒரே நேர்கோட்டு இடைவெளி. ஒரு மாவட்டத் தலைநகரைத் தாண்டி ஒரு இரண்டு கிலோமீட்டர் வந்ததுமே முற்றிலும் யாருமற்ற சாலையில் தைல மரங்களுக்கு நடுவில் நடந்து செல்வோம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த தைலக் காடு முடிவிலியாக சென்று கொண்டிருப்பதாக தோன்றியது. எங்களுக்கு பின்னால் தபால் நிலையம் சென்று கணக்கு துவங்கி விட்டு கிளம்பியவர்களும் தைலக் காட்டிற்குள் தான் நடந்து கொண்டிருந்தார்கள், அவர்களுக்கு முன்னால் சில கிலோமீட்டர்கள் தாண்டி நாங்களும் அதே தைலக் காட்டில் தான் நடந்து கொண்டு இருந்தோம். இன்னும் பல கிலோமீட்டர் இதே போல் நடக்க வேண்டியிருப்பதாக தோன்றியது. அவர்கள் இந்த காட்டை எதிர்பாராமல் தண்ணீர் புட்டிகள் வாங்கத் தவறி தாகத்தில் தவித்துக் கொண்டு இருந்தனர். எங்களிடமும் சிறிதளவே தண்ணீர் இருந்தது. அவர்களுக்காக ஒரு இடத்தில் காத்திருந்து அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தோம். அத்துடன் கையில் இருந்த தண்ணீர் முழுவதும் முடிந்து விட்டது. வெயிலில் இருந்து ஒதுங்குவதற்கு கூட அங்கு ஒரு இடமும் இல்லை. இரண்டு புறமும் லட்சக் கணக்கில் மரங்கள் இருந்தாலும் எதற்கு அடியிலும் நிழலுக்காக ஒதுங்க முடியாது.
நீண்ட தைல காட்டில்..
ஒருகட்டதில் நானும் சௌமியாவும் விளையாடத் தொடங்கி நான் அவளை ஏதோ கேலி செய்து அவள் என்னை அடிக்க துரத்தினாள். நான் அவள் கையில் சிக்காமல் இருக்க முன்னால் வேகமாக ஓடினேன். என்னை துரத்திக் கொண்டு அவளும் ஓடி வந்தாள். ஒரு கட்டதில் மூச்சு வாங்கி நின்று விட்டாள். நானும் ஓடுவதை நிறுத்தி விட்டு நடக்கத் தொடங்கி விட்டேன். சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் போது சும்மா பின்னால் திரும்பி பார்த்தால் பூனை போல் மெதுவாக அவள் ஓடி அருகில் வந்திருப்பாள். பிறகு நானும் ஓட்டம் எடுப்பேன். இப்படியே மற்றவர்களை தாண்டி வெகு தூரம் முன்னால் வந்து விட்டோம். நாங்கள் இருவரும் தான் நேற்று இரவு அசைய முடியாமல் கடும் வலியில் சோறு கூட வேண்டாம் என்று சொன்னோம் என்று இப்போது நினைத்துக் கொண்டேன். ஒரு நட்பார்ந்த சூழல் ஒருவருக்கு எந்த அளவிற்கு ஊக்கத்தை அளித்து விட முடியும் என்றும் நினைத்துக் கொண்டேன். அலைபேசி அடித்ததால் அதை எடுத்து பேசும் நேரத்தில் அவள் என்னை பிடித்து அடித்து விட்டாள்.
அங்கிருந்து இன்னும் சில கிலோமீட்டர்கள் தாண்டி ஒரு கடை இருந்தது. நானும் கௌதமும் தண்ணீர் வாங்க சென்றோம். மற்றவர்கள் வந்து போண்டா பஜ்ஜி வாங்கத் தொடங்கி விட்டனர். இன்னும் சிலர் சிக்கன் சில்லி வாங்கி நான் கடையில் அசைவம் சாப்பிட மாட்டேன் என்பதால் என்னிடம் காட்டி காட்டி வெறுப்பேற்றிக் கொண்டு இருந்தனர். அது வரை பத்திரமாக வைத்திருந்து நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த பிளாஸ்டிக் பந்தை அந்த கடையில் நான் தவறவிட்டு விட்டேன். அனு தன்னுடைய தொப்பியை அதே கடையில் தவற விட்டு விட்டாள். அங்கிருந்து நடந்து செல்லும் வழியில் ஒரு தள்ளு வண்டிக் கடை சாலையில் சென்று கொண்டிருந்தது. பெண்கள் கம்மல், கிளிப் என்று பார்த்துக் கொண்டு இருந்தார்கள். நானும் கௌதமும் இந்த பெண்களே இப்படித் தான் என்று வசைந்து கொண்டு இருந்தோம். பார்த்தால் அதே தள்ளு வண்டிக் கடையில் சில விளையாட்டுப் பொருட்களை கட்டி தொங்கவிட்டிருந்தார். நாங்கள் துப்பாக்கி வாங்கலாமா என்று பேசிக் கொண்டு இருந்தோம். ஆளுக்கு ஒரு துப்பாக்கி வாங்கினால் இரு அணியாக பிரிந்து மாறி மாறி சுட்டு விளையாடலாம் என்று திட்டமிட்டோம். இப்போது பெண்கள் எங்களை வீணாக செலவழிக்கிறோம் என்று திட்டத் தொடங்கி விட்டனர். இரண்டு துப்பாக்கியில் இருந்து ஒன்று போதும் என்று குறைத்துக் கொண்டோம். பெண்கள் திட்டிற்கு மனம் மாறி கௌதம் அதுவும் வேண்டாம் என்றான். நான் வாங்கலாம் என்று ஒற்றைக்காலில் நின்றேன். பிறகு என்னையும் மனம் மாறச் செய்து விட்டனர். சரி வேண்டாம் வாருங்கள் என்று சோகமாக சொன்னவுடன் சௌமியா சரி வா வாங்கி தருகிறேன் என்று அவளே காசு போட்டு எங்களுக்கு அந்த துப்பாக்கியை வாங்கிக் கொடுத்தாள்.
சாலையில் சுட்டு விளையாடிக் கொண்டு சென்றோம். நினைத்த அளவு தோட்டா செல்லவில்லை. ஐந்தடிக்குள் தொப்பென்று விழுந்து விட்டது. நல்ல வேளை இரண்டு துப்பாக்கி வாங்க வில்லை என்று நினைத்துக் கொண்டோம். அங்கிருந்து சில கிலோமீட்டர்கள் சென்றதும் நிலப்பரப்பு மாறத்தொடங்கியது. தைலத் தோட்டங்களை கடந்து இரண்டு புறமும் பச்சை பசேல் என்று வயல்கள். தஞ்சையை நெருங்கிக் கொண்டு உள்ளோம் என்று சொல்லிக் கொண்டோம். ஒரு இடத்தில் சாலையின் இரண்டு புறமும் புலியமரங்கள் நிழல் தந்து கொண்டு நின்றிருந்தன. சரி இதற்கு மேல் இது மாதிரி நல்ல இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. நாம் இந்த மரத்தின் நிழலிலேயே ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். சாலையோர நிழலில் அன்று ஒரு மதியத்தை கழித்தோம். அப்போது தான் போண்டா, பஜ்ஜி, சில்லி என்று சாப்பிட்டு வந்ததால் யாருக்கும் பசியும் இருக்காது என்று நினைத்து ஜம்மென்று நானும் படுத்துவிட்டேன். ஒரு நான்கு மணி வாக்கில் அர்ச்சனாவின் குரல் மெல்ல கேட்கத் தொடங்கியது. பசிக்கிறது என்றாள். 4:30 மணிக்கு மீண்டும் நடக்கத் தொடங்கி ஐந்து மணி வாக்கில் ஒரு ஊரை அடைந்தோம். அங்கு ஒரு விரைவு உணவகத்தில் அனைவரும் சிக்கென் ரைஸ் சாப்பிட்டனர். நான் பேக்கரியில் காபி குடித்துக் கொண்டு ஆலங்குடியில் தங்குமிடம் ஏற்பாடு செய்து தருவதாக சொன்னவருக்கு அழைத்து இன்னும் ஐந்து கிலோமீட்டர் தான் உள்ளது அதிகபட்சம் ஒன்றரை மணி நேரத்தில் வந்து விடுவோம் என்று சொன்னேன். அவர் நான் யார் என்பதையே மறந்துவிட்டார். என்னிடம் தங்குமிடம் ஏற்பாடு செய்து தருவதாக சொன்னதையும் மறந்து விட்டார். பணியில் இருந்ததில் மறந்து விட்டேன், இப்போது அழைத்து பேசி ஏற்பாடு செய்து விடுகிறேன் என்றார். நான் சரி என்று சொல்லிவிட்டு நண்பர்கள் சாப்பிட்டு முடித்து கிளம்பியவுடன் செல்லும் வழியெங்கும் வேறு தங்குமிடம் ஏற்பாடு செய்வது குறித்தும் யோசித்துக் கொண்டு சென்றோம். சபரீஷ் எல்லோரையும் அழைத்து ஒன்றாக நடக்கச் சொல்லி காந்தியின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான வரலாறையும் அவர் முன்னெடுத்த திட்டங்களையும் வரிசைப்படி விளக்கிக் கொண்டு வந்தான். காந்திக்கு முன் இந்தியா எவ்வாறு இருந்தது. அப்போது இருந்த அறிவுஜீவிகள் எது மாதிரியான செயல்களை மேற்கொண்டனர், காந்தி வந்து எப்படி அதை ஒரு மக்கள் போராட்டமாக மாற்றினார் என்று சொல்லிக் கொண்டு வந்தான்.
ஆலங்குடியை நெருங்கி விட்டோம். இருட்டி விட்டது. மணி ஏழு ஆகி இருந்தது. சில காவல்துறையினர் சாலையில் வண்டிகளை மறித்து விசாரித்துக் கொண்டு இருந்தனர். அதில் இரு பெண் காவலர்களும் இருந்தனர். எங்களையும் விசாரித்தனர். நாங்கள் எங்கள் நோக்கத்தை பற்றியும் இந்த நடைபயணம் குறித்தும் சொன்னோம். அதில் ஒரு அதிகாரி எங்களை இதற்கு முன்பே வேறு இடத்தில் பார்த்தவர். எங்கள் நோட்டீஸும் அவரிடம் இருந்தது. எங்கள் பெயர், முகவரி போன்ற விபரங்களை பெற்றுக் கொண்டனர். நாங்கள் இந்த ஊரில் தங்கப் போகிறோம், ஆனால் இடம் ஏற்பாடு ஆகவில்லை என்று சொன்னோம். அவர்களிடத்தில் இருந்து ஏதாவது உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை. போய் விசாரித்து பாருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டனர். மீண்டும் நான் அலைபேசியில் பேசியவருக்கே அழைத்து அவர் யாரிடமாவது கேட்டாரா? இடம் உள்ளதா என்று கேட்டேன். அப்போதும் அவர் யாரிடமும் கேட்கவில்லை. நாங்கள் ஆலங்குடி வந்து விட்டோம், எங்களுடன் நான்கு பெண்கள் உள்ளனர் கொஞ்சம் கேட்டு பார்த்து சொல்லுங்களேன் என்று கேட்டுப் பார்த்தேன். கொஞ்ச நேரம் அந்த ஊரில் காத்திருந்தோம். அந்த காத்திருப்பிற்கு பின் அவருக்கு மீண்டும் அழைத்து ஏதாவது ஏற்பாடு ஆனதா என்று கேட்டேன். அப்போதும் அவர் அதைக் குறித்து ஒருவரிடம் கூட பேசவில்லை. ஒவ்வொரு முறை அழைத்து வைத்த உடனேவும் நாங்க இங்கு வந்துள்ளதை மறந்து அவர் செயல்களை செய்யத் தொடங்கி விடுகிறார். மீண்டும் இறுதியாக ஒரு முறை பெண்கள் இருக்கிறார்கள் கொஞ்சம் விசாரித்து சொல்லுங்கள் என்று கேட்டேன். முடியாது என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை. ஒவ்வொரு முறை பேசும் போதும் செய்து விடலாம் என்றும் பல்வேறு வழிகளில் முயன்று கொண்டு இருப்பது போலவுமே பேசினார். அவர் முதலே முடியாது என்று சொல்லி இருந்தால் இந்த ஊருக்கே நாங்கள் வர வேண்டியது இல்லை. இங்கு வந்ததால் நாளை நடக்கப் போகும் கிலோமீட்டர் அதிகமானது தான் மிச்சம். அழைப்பை தூண்டிக்கும் முன்னரே இது தான் கடைசி அழைப்பு என்று நினைத்துக் கொண்டேன். பேசிவிட்டு திருப்பி அழைப்பதாக சொன்னவர் அதன் பின் மீண்டும் எங்களை முற்றிலுமாக மறந்து விட்டார். அங்கு உள்ள நபர்களிடம் விசாரிப்போம் என்று இரு குழுக்களாக பிரிந்து இரவு தங்க இடம் வேண்டும் என்று கேட்கத் தொடங்கினோம். ஒரு பெரிய மண்டபம் போன்ற வீடு இருந்தது அந்த வீட்டுக் காரருக்கு 10 திருமண மண்டபங்கள் இருக்கிறது அவரிடம் கேட்டால் இடம் கிடைக்கும் என்று சிலர் சொன்னார்கள்.
நீண்ட அவ்வீட்டின் கதவு முன் நின்று உள்ளே இருந்தவரை நானும் சபரீசும் அழைத்தோம். அந்த வீட்டில் பணி புரியும் ஒரு வேலைக்காரர் வந்தார். உரிமையாளர் இங்கு இல்லை, 8 மணிக்கு மேல் தான் வருவார் என்றார். சரி வேறு யாராவது வீட்டில் இருந்தால் பேசுகிறோம் என்று கேட்டதற்கு மற்றவர்களிடம் எல்லாம் பேச முடியாது என்று சொல்லி விட்டார். சரி உரிமையாளர் அலைபேசி எண் கொடுங்கள் நான் பேசிப் பார்க்கிறேன் என்று கேட்டதற்கு தன்னிடம் அலைபேசியே இல்லை என்று சொன்னார். ஏனோ அவர் பயத்தில் கூனிக் குறுகி அங்கு பிழைத்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. நாயை வெளியே அழைத்து வந்து நடை பழகிக் கொண்டு இருந்தார். கோவில், தேவாலயம் ஆகிய இடங்களில் தங்க வாய்ப்புள்ளது அங்கு சென்று பாருங்கள் என்று சிலர் சொன்னதால் அங்கு செல்ல முற்பட்டோம். அதற்குள் அனுவின் குழுவினர் பேசிக் கொண்டிருந்த நபர் ஒரு வீட்டில் எங்களை தங்க வைக்க ஒப்புக் கொண்டு விட்டார். பெண்கள் அவர் வீட்டிலும் ஆண்கள் தங்குவதற்கு இன்னொரு வீடும் அவர் நண்பரிடம் கேட்டு விசாரித்துக் கொண்டு இருந்தார். அந்த 10 மண்டபங்களின் உரிமையாளர் அந்த இடைப்பட்ட நேரத்தில் வந்து விட்டார். ஒரு கடைக்காரர் அவர் தான் போய் பேசுங்கள் என்றார். கதவை தாண்டி உள்ளே சென்று விட்டால் இந்த வாயிற்காவலனிடம் மீண்டும் வாதிட்டு உள்ளே செல்வதெல்லாம் சிரமம் என்று அவர் உள்ளே செல்வதற்குள் நாங்கள் ஓடிச் சென்று அவரை மடக்கி விட்டோம். அவர் எங்களை பற்றி விசாரித்து விட்டு ஒரு மண்டபம் தர ஒப்புக்கொண்டு அந்த மண்டபத்தின் காவலரிடமும் பேசிவிட்டார். அதனால் அனுவின் குழுவினருக்கு அழைத்து இங்கு வர சொல்லி விட்டோம். அவர்கள் இங்கு வந்த பின்னர் தான் அவர்கள் பேசிய நபரிடமும் இடம் தயாராகி விட்டது என்று எங்களுக்கு தெரிந்தது.
இது எல்லாமும் அரைமணி நேரத்திற்குள் நடந்து முடிந்து விட்டது. அரைமணி நேரத்தில் மூன்று இடம் ஏற்பாடு ஆகி விட்டது. தேர்வின் அடிப்படையில் மண்டபத்திற்கு சென்றோம். அங்கு சென்று பார்த்தால் அது பல காலமாக பூட்டி வைக்கப் பட்டு தூசியால் மூடப்பட்ட மண்டபம். எங்குமே கை வைக்க முடியாது. எந்த சுவரிலும் சாய முடியாது. எந்த இடத்திலும் அமர முடியாது. முழுக்கவே தூசி படிந்து ஒரு படலம் போல் இருந்தது. திருமண மேடையில் படுத்துக் கொள்ள சொன்னார்கள்.
தூய்மையாக்க பணிகள்
சரி என்ன ஆகிவிட போகிறது நம்முடைய மழைக் கோட்டை விரித்து படுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் பெண்கள் அந்த மேடையை கூட்டி பெருக்கி தண்ணீர் ஊற்றி கழுவ தொடங்கி விட்டனர். நானும் கௌதமும் அந்த இடைவெளியில் மதியம் வாங்கிய துப்பாக்கியை வைத்து ஒருவர் மாற்றி ஒருவர் சுட்டு விளையாடிக் கொண்டு இருந்தோம். ஆலங்குடியை சேர்ந்த சபரி என்பவர் எங்களை பார்க்க வந்திருந்தார். ஒரு 25 அல்லது 26 வயதுடையவர். நாராயணன் ஏற்கனவே அவரிடம் பேசியுள்ளார். அவர் எங்கள் அனைவரையும் அழைத்து ஏதோ பேசப் போவதாக சொன்னார். அறிவுரையாக இருக்குமோ என்று கொஞ்சம் நெளிந்து கொண்டே வந்து அமர்ந்தோம். ஒருவர் தள்ளி இருந்தால் கூட வந்து கவனிக்கும் படி கூப்பிட்டு பேசத் தொடங்கினார். அவருடைய தாத்தாவைப் பற்றி பெருமையாக பேசத் தொடங்கினார். முதலில் என்ன டா இது என்பது போல் அமர்ந்திருந்தாலும் அவர் தாத்தா செய்த பணி பெரும் வியப்பை அளிக்கும் படி இருந்தது. அவர் தாத்தா 515 கணேசன். “108” ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே, 515 என்கிற எண்ணில் ஐம்பது வருடங்களுக்கு முன்னரே அவசர உதவிக்காக ஒரு அம்பாசிட்டர் காரை வாங்கி ஒட்டத் தொடங்கி உள்ளார். பிரசவத்திற்கு இலவசமாக ஓட்டுவது என்பது இவர் தான் தொடங்கியது என்றும், ஆம்புலன்ஸ் வருவதற்கு காரணமே இவர் தொடங்கிய முன்னெடுப்பு தான் என்றும் சொல்கிறார்கள்.
515 கணேசன்
பிறகு இணையத்தில் அவரை பற்றி தேடிப் பார்த்தால் ஏகப்பட்ட நேர்காணல்கள் உள்ளது. இரண்டாயிரத்திற்கு மேலான பிரவத்திற்கு இலவசமாக ஓட்டி உள்ளார். இரண்டாயிரத்து ஐநூறுக்கு மேலான விபத்தில் பாதிக்கப் பட்டவர்களை ஏற்றிச் சென்று காப்பாற்றியுள்ளார். பல்லாயிரம் பிணங்களை ஏற்றிச் சென்று அடைக்கம் செய்து உள்ளார். அவருடைய நேர்காணல் ஒன்றை காணும் போது அதில் அவர் சொல்லியதாவது “பிரசவத்திற்கு இலவசம் என்று வண்டியில் ஒட்டி இருந்தேன். சில இளவெட்டு பயல்கள் விளையாட்டுக்காக “பிர” வை நீக்கி விட்டு சவத்திற்கு இலவசம் என்று அதை மாற்றி விட்டனர். அன்று முதல் சரி சவத்திற்கும் இலவசமாகவே ஓட்டுவோமே என்று முடிவெடுத்து விட்டேன்” என்கிறார். பல அனாதை பிணங்களை வண்டியில் ஏற்றிச் சென்று அடக்கம் செய்துள்ளார். இப்போது வைத்திருப்பாது 37 ஆவது கார் என்கிறார். இந்த காரை நடிகர் லாரன்ஸ் வாங்கிக் கொடுத்து உள்ளார். இன்னமும் 75 வயது வாக்கிலும் வண்டி ஒட்டிக் கொண்டு உள்ளார். அவருடைய மகளான சபரியுடைய தாயும் எங்களை பார்க்க வந்திருந்தார். உமையாள் தேனப்பன் தம்பதி நேற்று இரவு புதுக்கோட்டையில் சிதம்பரம் அவர்கள் வீட்டில் தங்கி விட்டு அதிகாலை ஐந்து மணி வாக்கில் கிளம்பி காரைக்குடி ஒரு வேலையாக சென்று விட்டு மீண்டும் வீடே திரும்பாமல் எங்களை பார்க்க இங்கு வந்து விட்டனர். ஒரு பேக்கரியவே காலி செய்து எங்களுக்கு தின்பண்டம் வாங்கி வந்திருந்தனர். புதுக்கோட்டையில் இருந்து எங்கள் முதுகுப்பைகள் ஆட்டோவில் வந்து இறங்கி விட்டது.
ஒன்பது மணி வாக்கில் நாராயணன், ராம் உட்பட அனைவரும் கிளம்பிய பின்னர் நாங்கள் ஒரு சிறு நடை சென்று ஒரு காபி குடித்து வந்தோம். அன்று ஒரு நீண்ட இரவு.
சிபி
மேலும்...
Comments
Post a Comment