பதினாறாம் நாள்
எங்கள் உடைகள் அனைத்தும் உமையாளிடம் உள்ளது. நேற்று முன்தினம் துவைப்பதற்காக வாங்கி சென்றது நேற்று மாலை ஈரம் காயாததால் கொண்டு வர இயலவில்லை. இன்று காலை கொண்டு வருவதாக சொல்லி இருந்தார்கள். எட்டு மணி வாக்கில் வந்து சேர்ந்தார்கள். எங்களுக்காக அதிகாலையா நள்ளிரவா என்று தெரியாத வேளை இரண்டு மணிக்கு எழுந்து உணவு சமைத்து எடுத்துக் கொண்டு நாலரை மணிக்கு கிளம்பி கிட்டதட்ட மூன்று மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்து வந்து சேர்ந்திருந்தார்கள். தற்செயலாக எங்களை பற்றி அறிந்து ஒரு வேளை உணவு கொடுக்க வந்தவர்கள் இன்று எங்களுடன் நீங்கா உறவாக மாறிவிட்டிருந்தார்கள். எங்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் மிக அணுக்கமாக தெரிந்து வைத்திருந்தார்கள். எப்போதும் அனு மற்றும் சௌமியாவிற்கு நெய் கலக்காத உணவு தனியாக செய்து கொண்டு வருவார்கள்.
வண்டி வந்ததும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை இறக்கி வைக்க நான் சென்றேன். கதவை திறந்து இறங்கி என்னை பார்த்த முதல் கணம் என் முகம் சரியில்லை என்று உமையாள் கண்டு விட்டார். ஒரு கணம் கூட தாமதிக்காமல் “ஏ ஒரு மாதிரி இருக்க என்ன ஆச்சு” என்று கேட்டார். நான் “ஒன்றும் இல்லை” என்று முகத்தை எப்போதும் போல் வைக்க முயன்றவாறே சொன்னேன். “அதெல்லா கெடையாது ஏதோ இருக்கு பாத்தாலே தெரியுது. சொல்லு என்னனு” என்றார். நான் சிரித்து மழுப்பிக் கொண்டு இருந்தேன். ஆனால் எதுவும் அவரிடத்தில் பழிக்கவில்லை.
உள்ளே சென்று எங்கள் அனைவருக்கும் உணவு பரிமாரத் தொடங்கினார். பேரமைதியாக அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். “என்னாச்சு ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க.. உம்முனே இருக்கீங்க. எப்பவும் எப்படி சிரிச்சி கேலி பண்ணீட்டு இருப்பீங்க, அத பாக்கறதுக்கு தான இவ்வளோ தூரோ நாங்க வரோ, நீங்க மூஞ்சிய இப்படி வெச்சிட்டு இருந்தா எப்படி” என்று கேட்டார். நாங்கள் அனைவரும் ஒருவித நமிட்டுச் சிரிப்பை உதிர்த்து அவருடன் சகஜமாக பேச முயன்று கொண்டு இருந்தோம்.
பிறகு கிளம்பி நான், கௌதம், சபரீஷ் ஆகிய ஆடவர் மூவரும் திருச்சிற்றம்பலம் கோவில் அருகில் உள்ள ஒரு பெரும் குளத்தில் குளிக்கச் சென்றோம். சபரீஷ் நீச்சல் தெரிந்தவன் மிக நேர்த்தியாக முன்னும் புறமும் பல கோணங்களில் குளத்தை சுற்றிக் கொண்டு இருந்தான். எங்கள் இருவருக்கும் அரைகுறை நீச்சல் தான் தெரியும் என்பதால் படியில் நின்றே உடலை நனைத்துக் கொண்டு இருந்தோம். ஒரு கட்டத்தில் உள்ளே ஒரு முறை நீந்தி பார்த்திடலாம் என்று நான் தாவி கொஞ்ச தூரம் சென்று விட்டேன். நான் ஓரளவு நீச்சல் அடிப்பேன், என்ன ஒன்று மூச்சு வாங்கினால் மட்டும் அப்படியே உள்ளே சென்று விடுவேன். மூச்சு வாங்காத அளவிற்கு நீந்தி திரும்பி விடலாம் என்று உள்ளே சென்று அதே போல் திரும்பி விட்டேன். பிரமாதமான காலை பொழுது. முன்பின் அறிமுகம் இல்லாத ஊரில் காலையில் எழுந்து ஒரு குளத்தில் குளித்து கிளம்புவது அபூர்வமான தருணம். பெரும் வாழ்வு என்று நினைத்துக் கொண்டேன். நேரம் போனதே தெரியாமல் வெகு நேரம் தண்ணீரில் கிடந்தோம். அந்த மண்டபத்தை விட்டு கிளம்புவதற்கே பத்து மணி ஆகிவிட்டது.
சபரீஷ் நேற்று இரவு செய்த 400 கிமீ நடைபயண தட்டியை கையில் பிடித்துக் கொண்டு நடக்கும் போது சாலையில் செல்லும் அனைவருமே எங்களை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். பலபேர் வந்து விசாரித்தார்கள். பயண திட்டமிடலிலேயே இது போன்ற தட்டி ஒன்றை செய்து கொண்டு செல்வதை பற்றி விவாதித்து பிறகு அதிக எடைகளை தூக்கி நடப்பது சிரமம் என்று அந்த திட்டத்தை கைவிட்டோம். ஆனால் இப்போது எங்கள் முதுகு பைகளை காரில் வருபவர்கள் பெரும்பாலான நேரங்களில் வாங்கிக் கொள்வதால் இதை தூக்கி செல்வது ஒன்றும் சிரமமாக தெரியவில்லை.
அனுவும் சௌமியாவும் ஒருவரிடம் நோட்டீஸ் கொடுத்து இந்த நடைபயணம் குறித்து விளக்கியவுடன் அவர் பயங்கரமாக கிளர்ச்சி அடைந்து எங்களுக்கு இன்று இரவு ஒரு மைக் ஸ்பீக்கர் எல்லாம் வைத்து தருகிறேன் பேசுங்கள் என்றார். நல்ல வாய்ப்பு தான் ஆனால் அன்று இரவு வரை அங்கு இருக்க இயலாததால் நீங்களே எங்கள் சார்பில் இதெல்லாம் பேசுங்கள் என்று அவருக்கு நோட்டீஸை கொடுத்து சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் வந்துவிட்டனர்.
அங்கிருந்து சென்று கொண்டிருக்கும் போது துறவிக் காடு என்னும் ஊரில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு ஒரு கிராம சபா கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அங்கு சென்று பேசலாமா என்று நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் ஒப்புக்கொண்டவுடன் அருகில் சென்று அப்போது பேசிக்கொண்டு இருந்தவர் பேசி முடிக்கும் வரை காத்திருக்கலாம் என்று அமைதியாக நின்றிருந்தோம். அவர் முடிப்பது போல தெரியவில்லை என்று ஒரு திண்டில் நோட்டீஸ்கள் சிலவற்றை வைத்து அருகில் இருந்தவரிடம் சொல்லிவிட்டு கிளம்பத் தயாராகும் போது பேசிக்கொண்டு இருந்தவர் நிறுத்தி என்ன என்று கேட்டார். அப்போது அவர் அருகில் சென்று எங்கள் நடைபயணத்தின் நோக்கத்தை குறித்து இந்த மக்களிடம் ஒரு ஐந்து நிமிடம் பேசலாமா என்று கேட்டோம். அவர் உடனே சம்மதம் தெரிவித்து விட்டார். எங்கள் அமைப்பு பற்றியும் இந்த நடைபயணம் குறித்தும் ஒரு முழு சித்திரத்தை கொடுக்கும் படி ஐந்து நிமிடம் நான் பேசினேன். அந்த கூட்டதை ஒருங்கிணைத்து பேசிக்கொண்டு இருந்தவரும் நாங்கள் பேசியதன் தொடர்ச்சியாக ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள், வாங்கினால் நாம் நம் உரிமையை தைரியமாக கேட்க முடியாது என்று விளக்கி ஒரு உரையை நிகழ்த்தினார். அது முடிந்ததும் சரி நாங்கள் கிளம்புகிறோம் இன்னும் வெகு தூரம் நடக்க வேண்டி உள்ளது என்று சொல்லிவிட்டு கிளம்ப முற்பட்டோம்.
அப்போது பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி எழுந்து ஒரு நூறு ரூபாயை எங்கள் செலவிற்கு வைத்துக் கொள்ளும் படி சொல்லி ஒருவரிடம் கொடுத்து முன்னால் அனுப்பினார். அந்த பணம் ஒவ்வொரு கையாக மாறி முன்னால் வர வர தொகை கூடிக்கொண்டே சென்றது. சில பாட்டிகள் பத்து ரூபாய், ஐந்து ரூபாய் எல்லாம் கூட எங்களுக்காக கொடுத்தனர். இறுதியாக வந்த தொகையுடன் அங்கு பேசிக்கொண்டு இருந்தவர் ஒரு 500 ரூபாய் சேர்த்து மொத்தம் 1100 ரூபாய் அந்த ஊர் மக்கள் சேர்ந்து எங்களுக்கு கொடுத்தனர். அன்றைய தினம் இது ஒரு மாபெரும் வெற்றியாக எங்களுக்கு இருந்தது.
உமையாள் அன்று பெரும்பாலும் எங்களுடன் நடந்து வந்து கொண்டு இருந்தார். தேனப்பன் எப்பவும் போல முன்னால் சென்று நின்று கொண்டு நாங்கள் அவரை கடந்த உடன் கிளம்பி மீண்டும் செல்வார். மதிய உணவிற்கு பட்டுக்கோட்டையில் உணவு வாங்கி வர தேனப்பன் சென்று இருந்தார். அதற்குள் முன்னால் சென்றிருந்த சபரீஷ், லைலா, அர்ச்சனா ஆகியோர் ஒரு மண்டபத்தில் நோட்டீஸ் கொடுத்தோம் இங்கேயே சாப்பிட்டுக் கொள்ள சொன்னார்கள் இங்கு வாருங்கள் என்று அழைத்து சொன்னார்கள். எங்களில் பாதி பேர் மண்டபத்தில் சாப்பிடுவதாகவும் பாதி பேர் அவர்கள் கடையில் வாங்கி வருவதை சாப்பிடுவதாகவும் முடிவு செய்தோம். மண்டபத்திற்கு உள்ளே சென்றதும் ஒருவர் பந்தி முடியப் போகிறது சீக்கிரம் வாருங்கள் என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றார். நாங்கள் மஞ்சள் நிறமென அழுக்கு படிந்த பனியன், புழுதி படிந்த கால்சட்டை, கையில் 400 கிமீ நடைபயண தட்டி, கழுத்தில் ஒரு துண்டு, தலையில் அழுக்கு தொப்பி என்று திருமணத்திற்கு வருவதற்கு சம்மந்தமே இல்லாத தோற்றத்தில் உள்ளே சென்றோம். உள்ளே அனைவரும் புதிய உடைகளை அணிந்து அபாரமான முக அலங்காரங்களையும் செய்திருந்தனர். நாங்கள் அதையெல்லாம் எதுவும் பொருட்படுத்திக் கொள்ளாமல் அவசரகதியில் சென்று பந்தியில் அமர்ந்தோம். எதிர்த்த இலையை பார்த்தால் அனைத்தும் அசைவம். அடடா.. இப்படி ஒரு யோகமா என்று நினைத்து அமர்ந்திருந்தோம். எல்லாவற்றிலும் கடைசி மீதம் எங்களுக்கு கிடைத்தது.
எங்களுக்கு உணவு பரிமாறிய இளைஞர்கள் எங்களை ஒரு வித ஏளனப் பார்வையுடன் பார்த்தது சாப்பிட தொடங்கிய சில கணங்களிலேயே எங்கள் அனைவருக்கும் தெரிந்தது. ஏதோ நாங்கள் யாசகம் கேட்டு வந்தவர்கள் போல் பார்த்தார்கள். ஆனால் எங்கள் ஒவ்வொருவரின் உள்ளும் இயல்பாகவே ஒரு பெரும் செயல் புரிந்து கொண்டிருக்கிறோம் என்னும் பிரஞ்ஞையும் அதற்கே உண்டான நிமிர்வும் இருந்தது. அவர்கள் எங்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியாமல் போனார்கள். மேலும் சிறியவர்களாக தெரிந்தார்கள். சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு பின்பக்கம் செல்லும் வழி இருந்தும் வேண்டுமென்றே அதில் செல்லாமல் வந்த வழியாகவே நடு மண்டபத்தின் வழியாக வந்து மேடையில் இருந்த மணமக்களை ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு திரும்பினோம்.
அங்கிருந்து மேலும் கொஞ்ச தூரம் சென்று பட்டுக்கோட்டைக்கு சில கிலோமீட்டர்கள் முன் இருந்த ஒரு ஆஞ்சிநேயர் கோவிலின் பின்புறம் மதிய ஓய்விற்கு ஒதுங்கினோம். அங்கு வரிசையாக அனைவரும் படுத்து தூங்கத் தொடங்கினோம். உமையாள் மனவளக்கலை ஆசிரியர் என்பதால் நாங்கள் தூங்குவதற்காக “உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்.. அமைதி.. அமைதி.. அமைதி.. “ என்று மென்மையான குரலில் சொல்லி மெது மெதுவாக கண்களில் தூக்கத்தை கொண்டு வந்தார். நான் நன்றாக தூங்கி விட்டேன். ஒரு வினாடி போல் தான் இருந்தது அதற்குள் ஒரு மணி நேரம் ஓடிவிட்டது. உமையாள் எங்கள் முகத்தில் ஈ மொய்க்காத படி விசிறி விட்டுக்கொண்டே இருந்தார் என்று எழுந்த பின் கௌதம் சொல்லித் தான் எனக்கு தெரிந்தது.
எங்களை முழுவதுமாக அவர்கள் தங்கள் குழந்தைகளாகவே ஏற்றுக் கொண்டு இருந்தனர். தலைக்கு மாட்டும் ரப்பர் பாண்ட், கிளிப் ஆகியவற்றை வாங்கி வந்து பெண்களுக்கு கொடுத்துவிட்டு “எனக்கு பொண்ணு பொறந்தா இப்படி எல்லாம் வாங்கி குடுக்கணும்னு ரொம்ப ஆசை இப்போ தான் முடியுது” என்று சொன்னார். அவர்கள் இருவருமே எங்கள் கால்களை பிடித்து விடுவதற்கு தயக்கமே கொள்ளாமல் இருந்தார்கள். நாங்கள் தான் ஒவ்வொரு முறையும் எங்கள் கால்களை கொடுக்க தயங்கிக் கொண்டு இருந்தோம்.
பிறகு அங்கிருந்து எங்களுக்கு முன்னால் சென்று நாங்கள் தங்கவிருக்கும் இடத்தில் முதுகுப் பைகளை வைத்து விட்டு கிளம்புவதாக சொல்லிவிட்டு கிளம்பினார்கள். நாங்கள் பட்டுக்கோட்டையை கடக்கும் போது தென்னவன் என்று ஒரு பத்திரிக்கையாளர் வந்து வழியை மறித்து விசாரித்தார். வேறு எங்கேயோ இருந்து எங்களுடைய நோட்டீஸ் அவர் கைக்கு கிடைத்து அதை பார்த்து ஒருவரிடம் லிப்ட் கேட்டு வந்து எங்களை சந்தித்தார். எங்களை பட்டுக்கோட்டையிலேயே தங்கிக்கொள்ளும்படி கேட்டார். நாங்கள் துவரங்குறிச்சி சென்றாக வேண்டும் இல்லையென்றால் நாளை நடப்பது சிரமம். அங்கு ஏற்பாடுகள் ஆகிவிட்டது என்று சொல்லி விடைபெறுவதாக சொன்னோம். டீ குடிக்கும் படி சொன்னார். நாங்கள் செல்ல தாமதமாகிவிடும் ஒரு நூறு ரூபாய் கொடுங்கள் செல்லும் வழியில் குடித்துக் கொள்கிறோம் என்று சொல்லி கேட்டவுடன் எங்கள் கையில் இருநூறு ரூபாய்யை கொடுத்து விட்டு நாளை வந்து எங்களை பேட்டி காண்பதாக சொன்னார். அவர் நாளை வருவதற்குள் நாங்கள் அவரின் எல்லையை தாண்டிவிடாதவாறு மெதுவாக நடக்கும் படி கேட்டுக் கொண்டார்.
அங்கிருந்து மீண்டும் ஒரு ஏழு எட்டு கிலோமீட்டர் நடக்க வேண்டி இருந்தது. ஏற்கனவே இருட்டி ஏழு மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது. நேற்று காலையில் இருந்து என்னுடன் பேசாமல் இருந்தவர்கள் இன்றும் பேசவில்லை. என்னாலும் சென்று பேச முடியவில்லை. என்ன பேசுவதென்று தெரியவில்லை. எனக்கு சில அடி முன்னால் அவர் சென்று கொண்டு இருந்தார். மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நேராக அழைத்து கேட்பதற்கு பெரும் சங்கட்டமாக இருந்தது. மனதிற்குள் அவர் பெயரை பல முறை உச்சரித்து பார்த்துக் கொண்டு இருந்தேன். அவரை அழைப்பதற்கே மாபெரும் முன்னேற்பாடு எனக்கு தேவைபட்டது. தயங்கி தயங்கி சத்தமில்லாமல் அவரை அழைத்துக் கொண்டு இருந்தேன். ஒரு கணம் சத்தமாகவே அழைத்து விட்டேன். அவர் அந்த ஒரு கணம் என்னை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் நடக்கத் தொடங்கி விட்டார். பிறகு நான் வேகமாக நடந்து அவருடன் சென்று சேர்ந்து “நான் அப்படி எழுதியிருக்க கூடாது தான். ஆனால் ஏன் அப்படி எழுதினேன் என்று எனக்கே தெரியவில்லை. உன்னை காயப்படுத்தும் எண்ணத்தில் அப்படி எழுதவில்லை. அதை பெரிய விசியமாகவே நினைக்காமல் நடந்ததை எழுத வேண்டும் என்று மட்டும் தான் நினைத்து எழுதினேன். சில வரிகள் உன்னை சீண்ட வேண்டும் என்பதற்காக மட்டுமே எழுதினேன். வெளி ஆட்கள் படிக்கும் போது நீ அவர்களுக்கு வேறு விதமாக தெரிந்து விடுவாய் என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. கௌதம் சொல்லிய பிறகு தான் அதற்கு இப்படி ஒரு வாய்ப்பிருக்கிறது என்றே எனக்கு தெரிந்தது. தெரிந்தவுடன் அந்த கட்டுரையை முழுவதுமாகவே மாற்றிவிட்டேன். என்னை மன்னித்து விடு” என்று கேட்டேன்.
“எல்லா செயலுக்கும் மன்னிப்பு தீர்வாகி விடாது சிபி. நீ எழுதியதை மாற்ற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நீ செய்ததற்கு மகிழ்ச்சி. அதை விட நேற்று முன்தினம் வேண்டுமென்றே எனக்கு கேட்க வேண்டும் என்று கௌதமிடம் சத்தமாக பேசி நீ என்னை கேலி செய்யும் போது ஒரு வார்த்தை சொன்னாய். அது தான் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதனால் தான் நான் உன்னுடன் பேசாமல் இருந்தேன். என்னுடைய பெற்றோர் கூட அப்படி சொல்லியதில்லை. அந்த கணத்தில் எங்கோ இருந்த சிபி கீழே வந்து விட்டான்” என்றார். நான் சொன்னதாக அவர் சொல்லும் வரியை நான் சொன்னதாக முற்றிலும் எனக்கு நினைவில்லை. நான் அப்படி சொல்லவில்லை என்று சொன்னேன். இல்லை நீ சொன்னாய் என்று அவர் திரும்ப சொன்னார். கௌதமிடம் சென்று “நான் இவ்வாறு சொன்னதாக சொல்கிறார் உன்னிடம் தானே சத்தமாக சொல்லி வந்தேன். எனக்கு அப்படி சொன்னதாக சுத்தமாக நினைவில்லை உன்னிடம் அவ்வாறு நான் சொன்னேனா?” என்று கேட்டேன். நான் அவ்வாறு சொல்லவில்லை என்று தான் அவனும் சொன்னான். மற்ற நண்பர்களிடமும் கேட்டேன் அவர்களும் நான் அவ்வாறு சொன்ன மாதிரி இல்லை என்று தான் சொன்னார்கள். ஆனால் அவர், “சொன்ன நீ மறந்துவிடலாம் காயப்பட்ட எனக்கு மறக்காது. சொல்லாத ஒன்றை சொல்லியதாக பொய் சொல்ல வேண்டிய தேவை எனக்கு இல்லை” என்று சொன்னார். உண்மை தான். நான் சொல்லாத ஒன்றை சொல்லியதாக சொல்ல வேண்டிய தேவை அவருக்கு இல்லை தான். உண்மையில் சொல்லி தான் இருப்பேனோ என்று தோன்றியது. அப்படியே சொல்லி இருந்தாலும் எந்த உள்நோக்கமும் இல்லாமல் நண்பர்களுக்குள் கேலி செய்யும் போது சொல்லும் சாதாரண வரியாகவே சொல்லியிருப்பேன். அது அவ்வளவு கடினமான வார்த்தை என்றும் எனக்கு தோன்றவில்லை. ஆனால் எந்த தருணத்தில் எந்த வார்த்தை வலிமை பெரும், எப்படி அர்த்தப்படும், யாரை காயப்படுத்தும் என்று நம்மால் சொல்லிவிட முடியாது. உண்மையில் அது அவரை வெகுவாக காயப்படுத்தி இருந்தது. மனதிற்குள் மீண்டும் மீண்டும் மன்னிப்பு தான் கேட்டுக் கொண்டு இருந்தேன். ஆனால் அதற்கு பின் அவரிடம் நான் பேசவில்லை. யாருடனும் பேசவில்லை.
மணி இரவு எட்டரை இருக்கும். நண்பர் விஜயபாரதி மூலம் அறிமுகமான சிவஞ்ஞானம் அவர்களால் தான் தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள துவரங்குறிச்சியில் எங்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு ஆகி இருந்தது. அவர் அந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் இரண்டு கிலோமீட்டர் முன்பே வந்து எங்களை வரவேற்பதற்காக காத்திருந்தார். அங்கிருந்து எங்களுடன் அவர்களும் நடந்து வந்தனர். அவர்களுடன் தேனப்பன் அவர்களும் இருந்தார். “நீங்கள் ஊருக்கு செல்வதாக சொன்னீர்களே செல்லவில்லையா?” என்று கேட்டோம். இல்லை நீங்கள் வந்தபின் செல்லலாம் என்று இருந்துவிட்டோம் உமையாள் நீங்கள் தங்கப்போகும் வீட்டில் உள்ளார் என்றார். கொஞ்ச தூரம் சென்றவுடன் ஒரு டீ கடைக்கு அழைத்து சென்றனர். உமையாள் அங்கு அமர்ந்திருந்தார். மீண்டும் என்னை பார்த்தவுடன் “ஏன் ஒரு மாதிரியாகவே இருக்கிறாய் என்ன பிரச்சனை ?” என்று கேட்டார். நான் மீண்டும் சமாளித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அவர் விட்ட பாடில்லை. பலர் வந்து என்னிடம் பேசினர். பல கேள்விகள் கேட்டுக் கொண்டு இருந்தனர். என்னால் எதுவும் பேச முடியவில்லை. ஆனால் வேறு வழியில்லை என்று அனைவரிடமும் உணர்ச்சியற்ற முகத்தை வரவைத்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தேன். மண்டைக்குள் பல கேள்விகள் உருண்டோடிக் கொண்டே இருந்தது. உடல் பாட்டுக்கு நடந்து கொண்டிருக்க பிரஞ்ஞை முழுவதுமே எங்கோ இருந்தது. வீடு சென்று சேர்ந்தும் அப்படி தான் இருந்தேன். சாப்பிடவும் தோன்றவில்லை. ஆனால் கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தனர்.
ஒரு மூளைக்கு சென்று யாருடனும் பேச மனமின்றி அமர்ந்திருந்தேன். ஆனால் அந்த ஊர் இளைஞர்கள் என்னுடன் வந்து வந்து பேசிக்கொண்டு இருந்தனர். கொஞ்ச நேரம் அவர்களுடனும் பேசினேன். உமையாள், தேனப்பன் அன்றிரவு 10 மணி வாக்கில் கிளம்பி அடுத்த நாள் அதிகாலை 4:30 மணிக்கு வீடு சேர்ந்து உள்ளனர். ஈரோட்டில் இருந்து மோகன்ராஜ் வந்து அன்று இரவு எங்களுடன் சேர்ந்திருந்தார். 11 மணி வாக்கில் படுத்து எனக்கு தூக்கமே வரவில்லை. ஒன்று, இரண்டு மணி வரை விழித்துக் கொண்டு மண்டைக்குள் பல எண்ணங்கள் எல்லா திசைகளிலும் ஓடிக்கொண்டு இருக்க படுத்திருந்தேன். ஒரு நட்பு முற்றிலுமாக முறிந்து விட்டதோ என்று தோன்றியது. மேலும் மேலும் அந்த இரவு என்னை போட்டு அழுத்திக் கொண்டு இருந்தது.
சிபி
மேலும்..
Comments
Post a Comment