பதினைந்தாம் நாள்
காலை 8 மணிக்கு ஆலங்குடியில் இருந்து பயணம் தொடங்கியது. மேஜர் கோகுல் பெங்களூரில் இருந்து சரியாக நாங்கள் கிளம்பும் நேரத்திற்கு வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். வெயில் நடையில் இருந்து தாக்குப்பிடிப்பதற்கு முழுக்கை வெள்ளை பனியன், தலைக்கு ஒரு கைக்குட்டை, கால் வலிக்கு எண்ணை என்று பல முன்னேற்பாடுகளுடன் தான் வந்திருந்தார். ஆலங்குடியிலேயே காலை உணவு. அங்கிருந்து கிளம்பி மடத்திக்காடு என்னும் ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
கோகுல் எங்களுடன் நடக்க வந்தவர் போலவே தெரியவில்லை எங்கோ முன்னால் நடந்து சென்று கொண்டு இருந்தார். ஒரு பெட்டிக் கடையில் திண்பண்டங்களையும் தண்ணீர் புட்டிகளையும் வாங்கிக் கொண்டு எங்கோ சென்று கொண்டிருந்தவரை நோக்கி நாங்களும் வேகத்தை கூட்டிச் சென்றோம். மண்டையை பிளக்கும் வெயில். முகத்தில் தீ பற்ற வைத்தது போல் எரிந்து கொண்டு இருந்தது. இத்தனை நாட்களில் கடுமையான வெயில் இன்று தான். உடலில் இருந்த ஒவ்வொரு துளி ஆவியையும் சூரியன் உறிஞ்சிக் கொண்டு இருந்தது. நான் துண்டை முகம் முழுவதும் சுற்றி மூடிக் கொண்டு அதன் சிறு துளைகள் வழியாக பார்த்துக் கொண்டு சென்றேன். சபரீஷ் ஒரு கருப்பு கண்ணாடி வைத்திருந்தான். அதை வாங்கி கண்ணில் மாட்டினால் கண்ணை கொண்டு போய் ஐஸ்ஸில் வைப்பது போல் குளுகுளுவென்று இருந்தது. பொடுசு அதை பிடுங்கி மாட்டிக் கொண்டாள்.
கோகுல் முன்னால் சென்று ஒரு கோவிலில் அன்னதானம் போடுகிறார்கள் வாருங்கள் இங்கேயே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றார். நாங்கள் ஆவலாக முன்னால் சென்று கொண்டிருந்தோம். அங்கு சென்றதும் இனிமேல் தான் சமையல் என்று சொல்லி விட்டனர். வேறு என்ன செய்வது, மீண்டும் முன்னோக்கி நடக்க வேண்டியது தான். புதுக்கோட்டை மாவட்டதில் நடக்கும் போது சாலையின் இரண்டு புறமும் ஏராளமான பேனர்கள். ஒரே திருமணத்திற்கு வெவ்வேறு நபர்கள் ராட்சச அளவில் பதினைத்திற்கும் மேல் பேனர்கள் வைத்து இருந்தனர். மணமக்கள் வீட்டார் எங்கள் வீட்டு திருமணம் என்று ஒரு பேனர், அதில்லாமல் உறவினர்கள், நண்பர்கள் என்று ஒவ்வொருவரும் நண்பன் வீட்டு திருமணம், மச்சான் வீட்டு திருமணம், சகல வீட்டு திருமணம், மச்சினிச்சி வீட்டு திருமணம் என்று ஆளுக்கு ஒரு பேனர் வைத்து இருந்தனர். ஒரே மணமகன், மணமகளை வழியெங்கும் இரண்டு கிலோமீட்டர் பார்த்துக் கொண்டே சென்றோம். பெரும்பாலான பேனர்களில் மணமக்கள் சிறிதாகவும் பேனர் அடித்தவர்கள் புகைப்படம் பெரிதாகவும் இருந்தது. அதிலும் அவர்கள் போடும் வசனம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒரு இடத்தில் திருமண விழாவிற்கு மாற்றாக “பெண் பரிசளிப்பு விழா” என்று போட்டிருந்தார்கள். இன்னும் ஏராளமான சொற்றொடர்கள். பேனர் வடிவமும் செவ்வகம், சதுரம், வட்டம், அறுங்கோணம், நாற்கரம் என்று பல்வேறு வடிவங்களில் இருந்தது. இரு புறமும் பேனர்கள் முளைத்த காட்டின் வழி செல்வது போல் தோன்றியது.
ஒரு ஊரில் சந்தை போல் சின்ன சின்ன கடைகள் இருந்தன. கட்டிலின் மேல் பொருட்கள் வைத்து சிலர் விற்றுக் கொண்டு இருந்தனர். அதில் உண்டிவில் இருந்ததை பார்த்தவுடன் நானும் கௌதமும் நின்றுவிட்டோம். அடுத்த விளையாட்டுப் பொருளுக்கு தயாராகிவிட்டோம். மற்ற நண்பர்கள் எங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது போல் இருந்தார்கள். கோகுல் அருகில் வந்து அவரும் ஒன்றை கையில் எடுத்து பார்த்து விட்டு இரண்டு கொடுங்கள் என்று வாங்கி ஒன்றை எங்களுக்கு அளித்து விட்டு அவர் ஒன்றை வைத்துக் கொண்டார். ஆஹா.. என்னா மனுஷன் என்று வடிவேலின் வசனம் எங்கள் இரண்டு பேர் மனதிலும் மிக சத்தமாக ஒலித்துக் கொண்டு இருந்தது.
வெள்ளிமலை பறவைகள் பார்த்தல் முகாமிற்கு இது போல் ஒரு உண்டிவில் வாங்கி கொடுக்க வேண்டும், யாராவது பறவை அங்க இருக்கு பாருனு சொல்லும் போது தெரில தெரில என்று சொல்லிக்கொண்டே இருந்தால் இதில் அடித்து எடுத்து கையில் கொடுத்து விட வேண்டும். கையில் வைத்து நன்றாக பார் என்று சொல்லிவிடலாம். அதே போல் பறந்து கொண்டு இருக்கும் போதும் மரத்திற்குள் இருக்கும் போதும் சிறகை பார், அலகை பார், காலை பார் என்றெல்லாம் சொன்னால் பெரிதாக ஒன்றும் தெரிவதில்லை. கையில் இருந்தால் எளிதாக பார்க்க இயலும். நாம் உண்டிவில்லும் கையுமாக சென்று வகுப்பெடுக்க உதவலாம் என்று கௌதமும் நானும் பேசி சிரித்துக் கொண்டு வந்தோம்.
ஒரு இடத்தில் நின்று எனக்கும் அவனிற்கும் குறிபார்த்து தூரத்தில் இருக்கும் மரத்தை அடிக்கும் போட்டி வைத்தோம். இரண்டு பேருமே அடிக்கவில்லை ஆனால் அவனின் குறி பார்க்கும் விதம் என்னை விட மேம்பட்டதாக இருந்தது. அடிக்கடி வேட்டைக்கு செல்வான் போலிருக்கு. அங்கிருந்து சென்று ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் முன்னோக்கி நடந்தோம். கோகுலும் சபரீஸும் முன்னால் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை ஒரு டீ கடையில் இருந்தவர் நிறுத்தி விசாரித்து உள்ளார். இவர்கள் நாங்கள் எங்கிருந்து நடந்து வருகிறோம் என்ன நோக்கம் என்று முழுவதுமாக சொல்லி உள்ளார்கள். அவர் உடனே நீங்கள் என்ன கட்சி என்று கேட்டு இருக்கிறார். இவர்கள் நாங்கள் கட்சியெல்லாம் இல்லை, ஒரு மாணவர் அமைப்பாக தொடங்கி நடந்து வருகிறோம் என்று விளக்கி உள்ளனர். அவர் அதை எதுவும் காதில் போட்டுக் கொள்ளாமல் கட்சி இல்லனா அப்போ நீங்க RSS அமைப்பா தான் இருப்பீங்க என்றார். இவர்கள் விளக்க முயற்சித்து தோற்று திரும்பிவிட்டனர். அந்த டீ கடையில் சபரீஷ் வைதிருந்த அந்த குளுகுளு கண்ணாடியும் தொலைந்து விட்டதாம்.
300 கிமீ பூர்த்தி அடைந்த இடம்
முந்நூறு கிலோமீட்டர் கடக்கப் போகிறோம் என்ற உற்சாகத்தில் ஒவ்வொரு கிலோமீட்டராக ஆவலுடன் பார்த்துக் கொண்டே சென்றேன். சரியாக ஒரு நிழற்குடையை அடைவதற்கும் முந்நூறு கிலோமீட்டரை நடந்து பூர்த்தி செய்வதற்கும் சரியாக இருந்தது. அங்கேயே கொஞ்ச நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தோம். எல்லோரும் அங்கு அமர்ந்திருக்கும் போது நானும் கௌதமும் மட்டும் சற்று தள்ளி தனியாக ஒரு இடத்திற்கு சென்றோம். காலையில் இருந்து ஒன்றிரண்டு நண்பர்கள் என்னுடன் பேசாமல் தனியாக இருப்பது போல் இருந்தது. அப்போதே என்ன காரணம் என்று கௌதமிடம் கேட்டேன் அவனிற்கும் தெரியவில்லை. புகைபடம் எடுக்கும் போது எல்லாம் தன்னுடைய முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். எதற்கு இந்த விலகல் என்று ஒன்றும் புரியவில்லை. பிறகு அவர்களுடன் கௌதம் சேர்ந்து நடந்து வரும் சொல்லி இருக்கிறார்கள். இப்போது நாங்கள் இருவரும் தனியாக வந்தவுடன் அவன் என்னிடம் சொன்னான். நான் இன்று காலை பதிவிட்ட கட்டுரையில் ஒருவரை காயப்படுத்தும் படி எழுதி இருந்திருக்கிறேன், அவரின் உள வலிமையை குறைவாக காட்டும் படி எழுதியுள்ளேன் என்று என்மீது வருத்தம் ஏற்பட்டு உள்ளது. கௌதம் என்னிடம் வந்து சொல்லும் அந்த கணம் வரை நான் அவ்வாறு யோசிக்கவில்லை. ஒரு துளி கூட அது எனக்கு உரைக்கவில்லை. அவர்கள் சொல்லும் வரை அவனுக்கும் அது அப்படிப்பட்ட வரிகளாக தோன்றவில்லை. அதன் பின் யோசித்து பார்த்தால் நான் எழுதியிருந்த தவறான வரிகள் கண் முன் புலப்பட்டது. நான் அவர்களை சீண்டும் விதமாக எழுதியது அவர்களை வெகுவாக காயப்படுத்தி இருந்தது. ஒரு பெரும் குற்றவுணர்வு என்னை வந்து ஆழ்த்தியது. எல்லோரையும் முன்னால் செல்லுமாறு சொல்லி விட்டு நான் அரைமணி நேரம் அந்த நிழற்குடையில் அமர்ந்து அந்த கட்டுரையை முழுவதுமாக திருத்தி மாற்றியமைத்த பின்னரே அங்கிருந்து புறப்பட்டேன்.
நடந்து செல்ல செல்ல அந்த குற்றவுணர்வு பெருகிக் கொண்டே சென்றது. யாருமற்ற தனிமை கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இனி எப்போதும் தனியாகவே நடக்கலாம் என்று தோன்றியது. எனக்காக ஒரு இடத்தில் அனைவரும் காத்திருந்தனர். மதிய ஓய்விற்கு ஒரு தென்னந்தோப்பை பார்த்து இருந்தனர். கடும் வெயிலுக்கு அந்த தென்னைமர நிழல் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் என்னால் அவர்களுடன் இருக்க முடியவில்லை. தனியாக இருக்க வேண்டும் போல் தோன்றியது. நான் ஓய்வெடுக்க வரவில்லை இன்று இரவு தங்குமிடம் இன்னும் ஏற்பாடு ஆகாததால் நீங்கள் ஓய்வெடுங்கள் நான் முன்னால் சென்று தங்குமிடத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினேன். கோகுல் இன்றே கிளம்பி பெங்களூரு செல்ல வேண்டி இருந்ததால் அவர் பேருந்தை பிடிப்பதற்காக என்னோடு சேர்ந்து நடந்து வந்தார்.
இன்று மொத்தம் 28 கிலோமீட்டர் அதில் 19 கிலோமீட்டரை இது வரை நடந்து விட்டோம். இன்னும் 9 கிலோமீட்டர் நடந்தால் இன்று தங்க வேண்டிய மடத்திக்காடு என்னும் ஊரை அடைந்து விடலாம். ஒரே மூச்சாக சென்று சேர்ந்து விடலாம் என்று எங்கும் நிற்காமல் நடந்து சென்று கொண்டே இருந்தோம். தஞ்சை மாவட்டத்தை நெருங்க நெருங்க நிலப்பரப்பு பேரழகாக மாறிக் கொண்டு இருந்தது. வயல்கள், ஆறு என்று அந்த மாலை வேளை பொன் ஒளியை பரவவிட்டுக் கொண்டு இருந்தது. ஓலை வீடுகள், ஓட்டு வீடுகள் எல்லாம் நான்கு புறமும் சரிந்து நான் இது வரை கண்டிராத வடிவில் பிரமாதமாக இருந்தது. ஒரு தெரு வழியாக சென்றோம். அந்த தெருவின் இரண்டு புறமும் இது போன்ற வீடுகள். கிழுவான் குச்சி நட்டிய வேலி. தண்ணீர் பெருகி வழிந்தோடும் தொட்டி. குழந்தைகள் ஆடையில்லாமல் ஓடித் திரிந்து கொண்டும் நீரில் ஆடிக்கொண்டும் இருந்தன. அந்த பொழுது என் சோகத்தை மீண்டும் மெல்ல மெல்ல சரி செய்து கொண்டு இருந்தது.
ஒரு கட்டதிற்கு மேல் எங்கள் இருவராலும் நடக்க முடியாமல் இரண்டு இடங்களில் அமர்ந்து சற்று ஓய்வெடுத்து சென்றோம். ஒரே அடியாக அதிகப்படியான கிலோமீட்டர் நடந்ததால், அமர்ந்து எழுந்தவுடன் கால்கள் பிடித்துக் கொண்டன. இறுகி வலிக்கத் தொடங்கின. கொஞ்ச நேரம் நடந்தவுடன் மீண்டும் பழையபடி சரியாகிவிட்டது. எப்படியோ ஐந்து மணி வாக்கில் மடத்திக்காடு சென்று சேர்ந்து விட்டோம். கோகுல் பேருந்தை பிடிக்க வேண்டும் என்பதால் என்னிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு மீண்டும் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து திருச்சிற்றம்பலம் சென்றார். நான் ஒவ்வொரு வீடாக இரவு தங்குமிடம் கேட்கத் தொடங்கினேன். அடுத்தடுத்த வீடு என்று நானும் திருச்சிற்றம்பலமே வந்து விட்டேன். பஞ்சாயத்து தலைவர்களுக்கு பதவி இல்லாததால் பஞ்சாயத்து அலுவலகத்தில் தங்குவதற்கும் வாய்ப்பில்லாமல் போனது.
ஒரு வீட்டில் கேட்ட போது இன்னும் கொஞ்சம் முன்னால் சென்றால் தங்கவேல் செட்டியார் மில் வரும் அவரிடம் கேளுங்கள் அவர் மண்டபத்தில் தங்க வைப்பார் என்று சொன்னார். மீண்டும் அங்கிருந்து அரைக் கிலோமீட்டர் சென்று அந்த மில் காரரிடம் கேட்டதற்கு அவர் தங்கிக் கொள்ளும்படி சொன்னார். இரவு உணவும் அவரே ஹோட்டலில் ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார். கட்டியதில் இருந்து பயன்படுத்தப்படாத பாழடைந்த மண்டபம் போல் இருந்தது. கழிவறை வசதியும் இல்லை, வெளியில் ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார். லட்சக்கணக்கான கொசுகள் என்னை சூழ்ந்து கொண்டு இருந்தது.
நாங்கள் தங்கிய மண்டபத்தின் வெளியே..
நான் 5:30 மணியில் இருந்து மற்ற நண்பர்கள் வந்து சேரும் வரை வெளியில் காத்திருந்தேன். கடுமையான கொசுக்கடி. எதுவும் செய்யாமல் தனிமையில் அமர்ந்திருக்கும் போது மீண்டும் அந்த குற்றவுணர்வு மீண்டெழுந்து என்னை துளைக்கத் தொடங்கியது. இரண்டு மணி நேரம் ஏதேதோ எண்ணங்களில் உழன்று கொண்டு இருந்தேன். அவர்கள் வந்து சேர்ந்த பின்னரும் தனியாக ஒரு இடத்தில் தான் அமர்ந்திருந்தேன்.
அந்த மண்டபத்திற்கு நேர் எதிரில் தூரத்தில் இருந்து தேர் போல ஒன்று மேலச்சத்தம், வானவேடிக்கைகளுடன் வந்து கொண்டு இருந்தது. மேலே இருப்பது சிலையா மனிதனா என்று தெரியாமல் மற்ற நண்பர்கள் விவாதித்துக் கொண்டு இருந்தனர். அது அசைகிறது, சிலையாக இருக்க வாய்ப்பு இல்லை. அது மனிதன் தான் என்று ஒருவர் சொன்னார். அந்த மண்டபத்துக்காரரிடம் கேட்டதற்கு கல்யாணத்திற்காக மாப்பிள்ளையை மண்டபத்திற்கு அழைத்து செல்கிறார்கள் என்றார். இங்கு எல்லாருமே இது போல தான் திருமணம் செய்வார்களா என்று கேட்டதற்கு இல்லை ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தான் இது போல் அழைத்து செல்வார்கள் என்றார்.
அதை மட்டும் காதை கொஞ்சம் அங்கு கொடுத்துவிட்டு மீண்டும் தனியாக அமைதியாக அமர்ந்து விட்டேன். எங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு நண்பரிடம் இன்று நடந்ததை பற்றி சொன்னேன்.
நான் இனிமேல் யாருடனும் பேசாமல் தனியாக இருந்துவிடலாம் என்று முடிவெடுத்து இருந்தேன். அதை அந்த நண்பரிடம் சொன்ன போது என்னை சமாதானப் படுத்தி அவர்களுடன் பேசுமாறு பலமுறை கேட்டுக் கொண்டார். அவர்களிடமும் நடந்தவற்றை குறித்து பேசிவிட்டு அவர்கள் சொல்வதை பார்த்தால் அவர்கள் தரப்பு தான் சரி என்று தோன்றுகிறது, ஆனால் நான் சென்று பேசி இதை சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். என்னால் இது குறித்து ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. கண்ணீர் என்னை அறியாமல் வந்து கொண்டு இருந்தது. என்னால் ஒன்றும் பேச முடியாது என்று சொல்லி அலைபேசியை அணைத்துவிட்டேன்.
நடைபயண கட்டுரை எழுத முயன்று எழுத முடியவில்லை. எந்த சொல்லை எழுதவும் பயமாக இருந்தது. மூளை அடுத்தடுத்து வேலை செய்யவில்லை. ஒவ்வொரு வரி எழுதவும் பெரும் போராட்டமாக இருந்தது. மண்டைக்குள் ஒரு மாபெரும் தணிக்கைக் குழு அமர்ந்து கொண்டது போல் இருந்தது. அனைவரும் தூங்கிவிட்டனர். சபரீஷ் மட்டும் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சார்ட்டில் எழுதி குச்சியுடன் கட்டி கையில் பிடித்து செல்லும்படியான ஒரு தட்டியை தயார் செய்து கொண்டு இருந்தான். நான் விட்டத்தை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டு படுத்திருந்தேன். இன்று ஒரு வலி மிகுந்த இரவு.
சிபி
மேலும்..
Comments
Post a Comment