சொக்கலிங்கம் நேர்காணல்
சொக்கலிங்கம் தற்போது சத்தியமங்கலத்தை தாண்டி உள்ள மலைத் தொடரில் தாளவாடி என்னும் ஊரில் வருவாய் துறையில் நிலஅளவராக பணிபுரிந்து வருகிறார். அவர் 2022 ஆம் ஆண்டு அரசு பணியில் சேர்ந்து அந்தியூர், கோபி போன்ற வெவ்வேறு ஊர்களில் இதற்கு முன் பணியில் இருந்து உள்ளார். இப்போது வசிப்பது பவானி அருகே குமாரபாளையம்.
சொக்கலிங்கம், சர்வேயர்
1.நேர்மையாக இருப்பவர்களின் பெரும் அகத் தடை என்பது என்ன?
நேர்மையாக
இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்குப் பெரும் அகத்தடையாக இருப்பது பிற
மனிதர்களின் செல்வாக்கு ஆகும். அன்றாடப் பணிகளில்
நாம் சந்திக்கும் நபர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நம்முடைய குணாதிசயங்களை
மாற்றும் வகையில் நம்மைத் தூண்டுகிறார்கள். குறிப்பாக, மற்றவர்கள் சட்டவிரோதமாகப்
பணம் ஈட்டுவதைக் காணும்போது, அது ஒருவரைத் தன் நேர்மையிலிருந்து பிறழச் செய்யும்
அகத்தடையாக மாற வாய்ப்புள்ளது.
2.நேர்மையாக இருப்பவர்களின் பெரும் புறத் தடை என்பது என்ன?
புறத்தடை என்று
பெரிய அளவில் ஏதுமில்லை; இருப்பினும் ஒரு பணியைச் செய்ய மறுக்கும்போது அத்துறையைச்
சார்ந்தவர்களால் நாம் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும்,
ஒரு பணியைச்
சட்டப்படி செய்ய இயலாத சூழலிலும், பொதுமக்கள் அதனைச் செய்து தருமாறு மீண்டும் மீண்டும்
வலியுறுத்தி அழுத்தம் கொடுப்பது ஒரு பெரும் புறத்தடையாகும். நாம்
அந்தப் பணியைச் செய்யாவிட்டாலும், நாம் விடுப்பில் இருக்கும்போதோ அல்லது இடமாற்றம் பெற்றுச்
செல்லும்போதோ மற்றொரு நபர் அந்தப் பணியைச் செய்யக்கூடும் என்ற யதார்த்தம் ஒருவித புற அழுத்தத்தை உருவாக்குகிறது.
3.நேர்மையாளர்கள் குடும்பத்தில், உறவினர்கள்
மத்தியில் பெறும் மதிப்பு அல்லது அவமதிப்பு?
எனது குணாதிசயங்களைப் பற்றி எனது குடும்ப உறுப்பினர்கள்
நன்கு அறிவார்கள்; அதனால் அவர்கள் என்னை மரியாதையுடன் நடத்துகிறார்கள். நான்
நேர்மையுடன் செயல்படுவதை அவர்கள் உணர்ந்துள்ளனர். நான் கல்வி பயிலும்
காலத்திலிருந்தே மரியாதையுடன் நடத்தப்பட்டேன்; தற்பொழுது பணியில் சேர்ந்து
ஊதியம் ஈட்டுவதால் அந்த மரியாதை மேலும் அதிகரித்துள்ளது.
4. நேர்மையாளர்கள் பொதுமக்கள் மத்தியில் பெறும் மதிப்பு அல்லது
அவமதிப்பு என்ன?
நேர்மையாகச்
செயல்படுபவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பொதுமக்கள்
தெளிவாக உணர்ந்து வைத்துள்ளனர். நேர்மையற்றவர்களுக்கு முகத்திற்கு நேராகப் போலி
மரியாதை காட்டப்பட்டாலும், அவர்களுக்குப் பின்னால் மக்கள் அவர்களைத் தவறாகவே
பேசுவார்கள். ஆனால், நேர்மையாளர்களுக்கு மக்கள் மனமார்ந்த மரியாதையை அளிக்கிறார்கள்.
அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் சிலர் எல்லோர் முன்னிலையில், "இந்தக்
காலத்திலும் இப்படி ஒரு நபர் இருக்கிறாரே" என்று பாராட்டுவதையும், மற்ற
ஊழியர்களைக் காட்டிலும் நேர்மையானவர்களை உயர்வாக நடத்துவதையும் நான் நடைமுறையில்
உணர்ந்துள்ளேன்.
5.உங்களுக்கு கடும் பண நெருக்கடி சூழல் இருந்து அப்போதும்
லஞ்சம் வேண்டாம் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளதா? அதை எப்படி கையாண்டீர்கள்?
நான் மிகவும் சிரமப்பட்டுப் படித்து, கீழ் நடுத்தர
வர்க்கத்திலிருந்து வந்துள்ளேன். அதனால் பணத்தின் அருமை எனக்குத் தெரியும்;
நூறு ரூபாயின்
மதிப்பு என்னவென்று எனக்குத் தெரியும். எனவே, பொதுமக்களிடமிருந்து நூறு
ரூபாயைப் பெற்றாலும், அது அவர்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணமாகும். அதனைப்
பெறுவது தவறென்று அறிவேன். பணத்தின் மதிப்பினை உணர்ந்துள்ளதால், யாரிடமும் லஞ்சமாகப் பணம் பெறக்கூடாது என்னும் உளநிலையை அடைந்துவிட்டேன்.
6.நேர்மையாளர்கள் சக ஊழியர்கள் மத்தியில் பெறும் மதிப்பு
அல்லது அவமதிப்பு?
நேர்மையாகச் செயல்படுவதால் உடன் பணிபுரிபவர்களும்
மனப்பூர்வமாக என்னை மதிக்கிறார்கள். என்னைப் பற்றி நன்கு அறிந்திருப்பதால் எவ்வித அவமரியாதையும் செய்வதில்லை. பிறரிடமிருந்து தனித்துவமாகத்
தெரிவதால் அனைவரிடத்திலும் எப்போதும் ஒரு நன்மதிப்பு கிடைக்கிறது.
7.உயர் அதிகாரிகளால் வரும் அழுத்தம் அதைக் கையாளுதல்?
நேர்மையாக இருப்பதனால் நாம் பணிபுரியும் இடத்தில் உள்ள
அனைவரும் மற்றும் உயர் அதிகாரிகளும் நம்மை மதிக்கிறார்கள்; இதனால் அனைவரிடமும்
எதனையும் துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் பேச முடிகிறது. நேர்மை நமக்கு அந்தத்
துணிவைத் தருகிறது.
8.இப்படி இருப்பது என எப்போது முடிவெடுத்தீர்கள்?
அரசுப் பணியில் சேர்ந்து, உயர்ந்த பதவியை அடைந்து,
நேர்மையாகப்
பணியாற்ற வேண்டும் என்பது பள்ளிப் பருவத்திலிருந்தே எனது மனதில் இருந்த
லட்சியமாகும். கல்வி பயிலும் காலத்திலேயே நேர்மையாக இருக்க வேண்டும் என்ற முடிவை
எடுத்தேன். தற்பொழுது அதனை நடைமுறைப்படுத்தி வருகிறேன்.
9. உங்களைப் போல பதவியில் உள்ள ஆனால் நேர்மையற்ற இன்னொருவரிடம்
இதுபோன்ற பேட்டி எடுத்தால் என்ன நியாயம் சொல்லுவார்கள்?
அவர்கள்
பொதுவாகத் தங்களுக்கு அதிகச் செலவுகள் இருப்பதாகக் கூறுவார்கள். குறிப்பாகப் பணி
நிமித்தமாகத் தூரமான இடங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் ஏற்படும் பெட்ரோல்
செலவுகள், களப்பணிக்காகச் சுற்ற வேண்டிய சூழல் மற்றும் அலுவலக ரீதியான
இதர செலவுகளை ஈடுகட்டவே தாங்கள் அவ்வாறு செய்வதாக நியாயம் கற்பிப்பார்கள்.
10. ஒருவர் நேர்மையற்ற ஊழியராக இருந்து நேர்மையாளராக மாறுவதும்,
நேர்மையாளராக
இருந்து பின்னர் நேர்மையற்றவராக மாறுவதும் எப்படி நடக்கிறது, உதாரணம் தர
முடியுமா?
ஒருவர்
நேர்மையற்ற பாதையிலிருந்து நேர்மைக்கு மாறுவதற்கு பெரும்பாலும் சுய உணர்தலே காரணமாகிறது.
உதாரணமாக, தவறான வழியில் ஈட்டிய பணம் மருத்துவச் செலவுகளுக்காகவோ
அல்லது குடும்ப உறுப்பினர்களின் உடல்நலக் குறைபாட்டிற்காகவோ இருமடங்காகச்
செலவாகும்போது, "தேவையில்லாத பணம் தேவையில்லாமல் தான் போகிறது" என்ற
எண்ணம் அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. மாறாக, ஒரு
நேர்மையாளர் வழிமாறுவதற்கு குடும்பச் சூழ்நிலை அல்லது எதிர்பாராத நிதி
நெருக்கடிகள் காரணமாகலாம். ஒருவருக்குத் தன் தகுதிக்கு மீறிய மருத்துவச் செலவுகளோ
அல்லது விபத்து போன்ற இக்கட்டான சூழலோ ஏற்படும்போது, அந்தத் தேவையைப் பூர்த்தி
செய்ய அவர் நேர்மையற்ற வழியைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.
11. அரசூழியர் அமைப்புகள் (சங்கம்) நேர்மையற்றவர்களை எவ்வாறு
அணுகுகிறது?
அரசு ஊழியர்
சங்கங்கள் பொதுவாகப் பணியாளர்களுக்குத் தேவையான அலுவல் ரீதியான ஆதரவை மட்டுமே
வழங்கும். ஒரு ஊழியர் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கினால், சங்கம்
அவருக்கு குறைந்தபட்ச நிதி உதவியை வேண்டுமானால் செய்யலாமே தவிர, அவர் செய்த
தவறுக்கு ஒருபோதும் துணை போகாது. ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுவிட்டால், சங்கத்தைச் சார்ந்தவர்கள் அவரோடு தொடர்பில் இருக்க
மாட்டார்கள். விபத்து அல்லது மருத்துவத் தேவைகளுக்காக மட்டுமே சங்கம் மனிதாபிமான
அடிப்படையில் உதவிகளை மேற்கொள்ளும்.
12. நீங்கள் இவ்வாறு (நேர்மையாக) முடிவெடுக்க காரணமான சம்பவம்,
தருணம் என்ன?
நேர்மையாக
இருப்பதற்கான உந்துதல் திரைப்படங்கள் மற்றும் நிஜ வாழ்க்கையின் வறுமைச் சூழலில்
இருந்து கிடைக்கிறது. நாம் உழைத்து ஈட்டும் ஒரு நூறு ரூபாயின் மதிப்பையும்,
அதன்
பின்னணியில் உள்ள சிரமத்தையும் உணரும்போது, மற்றவர்களிடமிருந்து
பணத்தைச் சும்மா வாங்கக் கூடாது என்ற எண்ணம் எழுகிறது. ஒரு நபர் கஷ்டப்பட்டுச்
சம்பாதித்த பணத்தை நாம் எந்தத் தகுதியும் இன்றிப் பெறுவது நம் உள்ளுணர்விற்கு எதிரானது என்ற
தெளிவு பணத்தின் உண்மையான மதிப்பை உணரச் செய்கிறது. மேலும் 'ரமணா' போன்ற நேர்மையை
வலியுறுத்தும் திரைப்படங்களும் ஒருவிதப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
13. உங்கள்
முன்னோடி அல்லது முன்னுதாரணம் என கருதும் நபர்கள் யார்?
தனிப்பட்ட
முறையில் குறிப்பிட்ட நபர்களை முன்னோடியாகக் கருதவில்லை; ஆனால், பிறருக்குப்
பயப்படுகிறோமோ இல்லையோ நம்முடைய மனச்சாட்சிக்குப் பயப்பட வேண்டும் என்பதில்
உறுதியாக உள்ளேன். நாம் செய்யும் தவறு வெளியில் தெரியாவிட்டாலும் நம் மனதிற்குத்
தெரியும். எனவே, எவ்விதத் தவறும் செய்யாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற
எண்ணமே எனக்கு அடிப்படை
14.முதல் முறை லஞ்சம் வேண்டாம் என்று சொல்லும் போது உங்கள்
உளநிலை எவ்வாறு இருந்தது?
முதல் முறையாக லஞ்சத்தை மறுக்கும்போது ஒருவித பதற்றம்
இருந்தது; இருப்பினும், பள்ளிப் பருவத்திலிருந்தே நான் கொண்ட நேர்மை
என்னும் கொள்கையில் உறுதியாக இருந்து அதனை எதிர்கொண்டேன். தற்பொழுது அதனை அன்றாட
வாழ்வில் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன்.
15.நேர்மையாக இருப்பதால் நீங்கள் அடைந்தது என்ன?
நேர்மையாக இருப்பதனால் மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது.
நாம் பணிபுரியும் இடத்தில் ஒரு நன்மதிப்பும், உயர் அதிகாரிகளிடம் கூட
எதனையும் துணிச்சலாகப் பேசும் ஆற்றலும் கிடைக்கிறது.
16. கையூட்டு கொடுக்காமல் ஒருவரால் இருக்க இயலுமா? நீங்கள்
கையூட்டு கொடுக்க வேண்டிய தருணம் வந்ததா? என்ன செய்தீர்கள்?
கையூட்டு
கொடுக்காமல் இருக்க இயலும்; நான் அதைத்
தவிர்த்து வந்துள்ளேன். அலுவலக நடைமுறையில் சில சூழல்கள் ஏற்படும்போது, ஊழியர்கள் சேர்ந்து பங்களிப்பு செய்யும்
வகையில் சிறு தொகைகளைப் பகிர்ந்து கொடுக்கிறோம். இது எந்தவொரு கையூட்டும் அல்ல,
மாறாக அலுவலக செயல்பாடுகளை மேம்படுத்தும்
ஊழியர்களின் ஒத்துழைப்பாகும்.
17.லஞ்சம் பெறக் கூடிய அதிகாரிகளுக்கு சில நேரங்களில் மரியாதை
கிடைக்கும் போது உங்கள் உளநிலை எவ்வாறு இருக்கும்?
ஊழல் அதிகாரிகளுக்கு மரியாதை கிடைப்பதைக் காணும்போது
மனதளவில் சிறிய கோபம் எழத்தான் செய்கிறது. இருப்பினும், அதனைப்
பொருட்படுத்திக்கொண்டிருந்தால் நமது பணியைச் செய்ய இயலாது. எனவே, நமது பணியைச்
சிறப்பாகச் செய்துவிட்டு அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக
இருக்கிறேன்.
பேட்டி கண்டவர் : லைலா பானு, முனை இளைஞர் சங்கம்.
Comments
Post a Comment