450 கிமீ நடைபயணம் - 4

அர்ச்சனா கல்லூரியில் மடிக்கணினி கொடுப்பதற்கு கட்டாயம் அவள் கல்லூரி வந்துவிட வேண்டும் என்று துறைத் தலைவர் திட்டியதால் ஜனவரி 14 காலை 6 மணிக்கே காடச்சநல்லூரில் இருந்து கிளம்பி திருப்பூர் சென்றுவிட்டாள். நாங்கள் 7:15 மணிக்கு நல்லோர் வட்டம் கவியரசன் வீட்டில் இருந்து நடக்கத் தொடங்கினோம். இரவு நல்லோர் வட்டத்தின் செயல்திட்டம், அணுகு முறை குறித்து அவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். இந்த அமைப்பின் பிரதானமான நோக்கம் என்பது நல்லவர்கள் அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைந்து இருப்பது தான் என்றார். 51 சதவீதம் பேசி ஒருங்கிணைந்து இருத்தல் 49 சதவீதம் செயல்பாடு தான் இதன் நோக்கம் என்றார். மொத்தம் இதில் நூறு துறைகள் உள்ளது. அதில் இவர் திடக்கழிவு மேலாண்மை மாநில பொறுப்பாளராக இருக்கிறார். இவர்கள் தங்களை தன்னார்வலர்கள், சேவை என்று சொல்லாமல் தாங்கள் செய்வது பொறுப்பு என்றும் அதை மேற்கொள்பவர்கள் அதற்கான பொருப்பாளர்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இதை பதிவு செய்யப்படாத அமைப்பாகவே வைத்துள்ளார்கள். அப்துல் கலாம் தான் இந்த அமைப்பின் ஆதர்சம். கலாம் சொன்ன "இந்தியா 2020" தான் இவர்களின் வருடக் கணக்கு. அந்த கணக்கு படி இப்போது கலாம் ஆண்டு ஆறு. சராசரியாக இதில் உள்ள உறுப்பினர் ஒரு நாளைக்கு இரண்டு கூடுகைக்கு மேல் பங்கேற்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒரு மணி நேரம். இது போன்ற அமைப்பும் அணுகு முறையும் கேட்பதற்கே கொஞ்சம் புதிதாக இருந்தது. 
அவர் வீட்டில் இருந்து கிளம்பி கொஞ்ச தூரம் நடந்தவுடன் சாலை ஓரத்தில் இருந்த ஒருவருக்கு நோட்டீஸ் அளித்து பேசினோம். அவர் உடனடியாக டீ வாங்கி தருவதாக எங்களை அழைத்தார். இப்போது தான் கிளம்பும் போது குடித்தோம் என்று பலமுறை சொல்லியும் கட்டாயப்படுத்தி அனைவருக்கும் டீயும், போண்டாவும் வாங்கிக் கொடுத்தார். 
அதை சாப்பிட்டுவிட்டு மேலும் பைப்பாஸ் சாலையின் வலது நடக்கத் தொடங்கினோம். வழியில் ஓரமாக நிறுத்தப்பட்ட காரில் அமர்ந்திருந்தவரிடம் எங்கள் பரிச்சாரத்தை சொன்னோம். அவரும் இப்போது தான் கல்லூரி முடித்தாராம். எதிர்புறம் சென்று கொண்டிருந்தவர் எங்களை பார்த்தவுடன் திருப்பி வந்ததாக சொன்னார். நாங்கள் இன்று திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் செல்வதாக சொன்னோம். அவர் உடனே "வாங்க வந்து காருல ஏறுங்க கொண்டு போய் விட்டற" என்று சொன்னார். நாங்கள் பரவாயில்லை நடந்தே‌ செல்கிறோம் என்று சொன்னோம். "சாப்பிட்டீர்களா?" என்று கேட்டார். "இல்லை இனிமேல் தான்" என்றோம். உடனே அவர் "வாங்க ஏறுங்க போய் சாப்பிடலாம்" என்றார். "இல்லை நாங்க நடந்து தான் வருவோம்" என்றோம். அவர் "அட! வாங்க சும்மா. கொண்டு போய் விடற" என்று மீண்டும் மீண்டும் சொல்லத் தொடங்கினார். "நாங்கள் வண்டியில் ஏற மாட்டோம்" என்று உறுதியாக சொன்ன பின்னர் தான் புரிந்து கொண்டார். "சரி என்னால முடிஞ்சது வச்சுக்கோங்க" என்று ஒரு இருநூறு ரூபாய் அளித்தார். 
இந்த முறை நாங்கள் கையில் ஏந்தி இருக்கும் பதாகை பெரிதும் மக்கள் கவனத்தை ஈர்த்தது. நான் அதை ஏந்திச் செல்லும் போது சாலையில் செல்பவர்கள் என்னை கடக்கும் போது அவர்களின் கண்ணை நேருக்கு நேர் நோக்கி பார்க்கத் தொடங்கினேன். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதமாய் இருந்தது. ஒவ்வொன்றின் பாவனையும், அசைவுகளும் வித்தியாசமானது. மனித முகங்களை பார்ப்பது ஒரு பெரும் வேடிக்கை. வேகமாக வரும் வண்டி நம் அருகே வேகம் தணிந்து சத்தம் குறைந்து தாண்டியவுடன் சீறிச் செல்லும். அந்த சத்தம் ஒரு வித கிளுகிளுப்பை ஊட்டியது. 
சிலர் அருகில் வரும் போது தன் கண்ணை அசைக்காமல் அந்த தட்டியை பார்க்க முயல்வர். சிலர் வண்டி நகர்வதற்கு ஏற்ப தன் கழுத்தை அந்த பதாகையை நோக்கி அதன் கோணம் மாறுவது தெரியாத வண்ணம் திரும்பியவாறே செல்வர். சிலரது முகம் நேரே ரோட்டை நோக்கி இருக்க கண் விழிகள் மட்டும் அசைந்து திரும்பும். எதிர் புறம் செல்லும் வண்டிகளில் செல்பவர்கள் சிலர் வண்டி முன்னே சென்று கொண்டிருக்க சாத்தியமான எல்லை வரை தன்னுடைய கழுத்தை பின்னோக்கி திருப்பிப் பார்ப்பார்கள். பல பேர் அருகில் வரும் போது மெல்லியதாக சத்தம் எழுப்பாத வண்ணம் "நம் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்று வாசித்து செல்வதை பார்ப்பது விந்தையாக இருக்கும். ஒவ்வொருவரின் மனதிலும் அதன் ஒலி கேட்டிருக்கும். ஒவ்வொரு வாயும் குவிந்து விரிவதை பார்த்தவாறே சென்று கொண்டிருப்பேன். இளையோர் பலர் எங்களை கடக்கும் போது TVK என்று கத்தி செல்வார்கள். அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டு மேலும் நடக்கத் தொடங்குவோம். 
நான் கடைசியாக நடந்து கொண்டிருந்தேன். ஒருவர் சாலையை கடந்து வந்தவரிடம் சென்று நோட்டீஸ் கொடுத்தேன். அவர் வாங்கும் விதத்தில் ஒரு வித கோணல் இருந்தது. அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. "ஓட்டுக்கு பணம் வாங்காம ஓட்டு போடுங்கனு சொல்லி சென்னை வரைக்கும் நடந்து போறோம்" அப்படீன்னு அவர் கிட்ட சொன்னேன். வாய் தளதளத்த குரலில் "பஸ்ஸு வரலன்னா போராட்டம் பண்ணுவீங்களா?" என்று கேட்டார். அவர் சற்று மனம் தப்பியவர் என்று தெரிந்துவிட்டது. திடீரென குழந்தை போல் எனக்கு தெரியத் தொடங்கிவிட்டார். "ஏங்ணா பஸ்ஸு வர மாட்டீங்குதா?" என்று கேட்டேன். 

"ஹூக்கூம்!"

"எங்க வரமாட்டீங்குது?"

"அந்தப் பக்கம் தொக்கவாடிக்கு"

"அப்படியா! தொக்கவாடி தா உங்க ஊரா?"

"ஆமா"

"உங்க பேரு என்ன?"

"மந்திரி"

"என்ன மந்திரி?"

"நாட்டுக்கு மந்திரி"

"அப்படியா! இப்போ நீங்க எங்க இருக்கீங்க?"

"தொக்கவாடில தா"

"அப்படியா! டெல்லில இல்லியா நீங்க?"

"ஆமா ஆமா! டெல்லில தா இருப்ப இப்போ இந்த வந்துட்ட"

அவரிடம் பாதி பேசிக் கொண்டு இருக்கும் போதே "சேரி பாய்" என்று சொல்லி கிளம்பிவிட்டார். 
அனுவும் தீபியும் முன்னால் சென்று கொண்டு இருந்தார்கள். அங்கு அதே போல் ஒருவர் எதிர்புறத்தில் எக்ஸெல் சூப்பரில் சென்றவர் திரும்பி வந்து அவர்களுடன் பேசியுள்ளார். காலை சாப்பாடு அவர் வாங்கித் தருவதாக சொல்லியுள்ளார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தக் கடையும் இல்லை. நாங்கள் வந்த வழியிலேயே கொஞ்ச தூரம் திரும்பிச் சென்றால் ஒரு கடை இருக்கும் என்றார். நாங்கள் திரும்ப நடப்பது சாத்தியம் இல்லை என்று சொல்லிவிட்டோம். அவரை நாங்கள் சந்தித்த இடம் திருச்செங்கோடு ஆசிரமத்திற்கு நாங்கள் வலது புறம் திரும்ப வேண்டிய சாலை பிரியும் இடம். வலது புறம் திரும்பாமல் நேராக சென்றால் அரை கிமீ தொலைவிற்குள் ஒரு கடை இருக்கும் அங்கு செல்லலாம். வலது புறம் திரும்பினால் வெகு தூரத்திற்கு எந்த கடையும் இல்லை என்றார். எங்களை சாப்பிட வைக்காமல் செல்ல அவருக்கு முற்றிலும் மனம் இல்லை. அதற்கு மேல் நாங்கள் பேசவில்லை. அவர் சொல்லும் இடத்திற்கு சென்று விட்டோம். அங்கு நாங்கள் என்ன‌ கேட்டாலும் கொடுக்கும் படி சொல்லி பணத்தை கொடுத்து விட்டு கிளம்பி விட்டார். 
அந்த கடையில் வெகு நேரம் அமர்ந்திருந்தோம். எதை கேட்டாலும் தாமதம் ஆனது. அதை ஈடு செய்வதற்கு அங்கு இருந்த இரண்டு பையன்கள் மிக சகஜமாக நீண்ட நாள் பழகிய நண்பர்கள் போல் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரும் இரட்டையர்கள். சாப்பிட்டு முடித்து கிளம்பும் போது சாப்பிட்டவற்றை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு அதை விட அதிக விலைக்கு திண் பண்டங்களை எடுத்து எங்கள் பையில் திணித்து விட்டனர். இத்தனை எடையை தூக்கி செல்ல முடியாது என்று பலமுறை சொல்லியும் கேட்காமல் அள்ளி அள்ளி கொடுத்துவிட்டனர். 
நாங்கள் வலது புறம் திரும்பி சென்றிருக்க வேண்டிய சாலையில் சென்று இணைவதற்கு கொஞ்சம் முன்னால் ஒரு வழி இருப்பதாக கூகுள் மேப் காட்டியது. அது ஒரு கார் செல்லும் அளவிலான மண் பாதை. அதில் செல்ல செல்ல பாதை இரண்டாக பிரிந்து ஒரு சாலை ஒற்றையடி பாதையாக காட்டுவழியில் சென்றது. அதில் தான் செல்ல வேண்டும் என்று மேப் காட்டியது. சரி சென்று பார்ப்போம் என்று அதில் நடக்கத் தொடங்கிவிட்டோம். பாதை மேலும் மேலும் சுருங்கி இரண்டு புறமும் ஒட்டுபுல் சூழ்ந்த வழியாக மாறியது. சுமார் முக்கால் கிமீ சென்றபின் அந்த சாலை மீண்டும் ஒரு பைப்பாஸ் சாலையில் இணைந்தது. 
கௌதமும் சௌமியாவும் பின்னால் நடந்து வந்து கொண்டு இருந்தனர். ஒரு கார் நேராக எங்களை நோக்கி வந்து அருகில் நின்றது. என்ன பிரச்சாரம் என்று அதிலிருந்து இறங்கியவர் கேட்டார். அவருக்கு நாங்கள் விளக்கிக் கொண்டு இருக்கும் போதே கௌதம் எங்கிருந்தோ திடீரென வந்து "அண்ணா நீங்க வெட்டையெங்கெணறு தான?" என்றான். "அட ஆமாங்கண்ணு உனக்கெப்புடி தெரியூ?" என்று கேட்டார். "நானு வெட்டையெங்கெணறு தாங்ணா. உங்கள பாப்ப அங்க" என்றான். 

"அட நம்மூரா நீயு. எங்க வோறீங்க எல்லாரு?"

"சென்னைங்ணா"

"இப்டீயே போறாதா நீங்க சென்னைக்கு?"

"ஆமாங்ணா"

"அட ஏஞ்சாமி நீங்க? சேரி பாத்ப்போய் சேருங்க. ஊருக்க வந்தா பாரு சாமி." என்று சொல்லிவிட்டு எங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துச் சென்றுவிட்டார். 
அதன் பிறகு நடக்கத் தொடங்கினால் ஒரு மரமோ, நிழலோ, கட்டிடமோ எதுவும் இல்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்ட தார்ச் சாலை மட்டுமே. நடக்கத் தொடங்கியதில் இருந்து இதுவரை இன்று தான் கடுமையான வெயில். முகத்தை கறுக்கியது. கையில் ஏந்திய பதாகை ஒரு கட்டத்தில் முகக்கவசமாகத் தான் மாறியது. முதலில் அதை எடுப்பதற்கு நீ எடு நான் எடு என்று சொன்னவர்கள் இப்போது அதை தனக்கு வேண்டும் என்று சண்டையிட்டுக் கொள்ளத் தொடங்கினர். 
கையில் இருந்த தண்ணீரும் தீர்ந்துவிட்டது. கடைகளும் இல்லை. நா வரண்டு, உடல் உலர்ந்து, வியர்த்து கடுமையான சோர்விற்கு சென்றுவிட்டோம். ஒரு நாற்ச்சந்திப்பில் இருந்த வீட்டில் சென்று தண்ணீர் வாங்கிக் குடித்தோம். அப்போது தான் மாணிக்க சுந்தரம் என்பவர் வந்து எங்களுடன் இணைந்தார். அவர் வி.பி.ஜி சொல்லி எங்களைப் பற்றி அறிந்து கொண்டுள்ளார். நேற்றே என்னிடம் பேசி வருவதாக சொல்லி இருந்தார். 

அங்கிருந்து எங்களுடன் நடக்கத் தொடங்கினார். இப்போது அவருக்கு 70 வயது. பல வருடங்கள் பொறியாளராக இந்தியாவிற்கு வெளியே பணி செய்து கொண்டிருந்துள்ளார். இப்போது அவருடைய சென்னை வீட்டிலும் ஈரோடு வீட்டிலும் மாறி மாறி வசித்து வருகிறார். வி.பி.ஜி உடன் தாமரைக் கரை போன்ற இடங்களுக்கு சென்று சில பணிகளை செய்துள்ளார். இவரின் பிரதான பொழுது போக்கு நடப்பதும் ஓடுவதும். காலை மாலை என்று வீட்டிலிருந்து கிளம்பி ஓட்டம் செல்வது இவர் வழக்கம். ஒரு வருடத்தில் சுமார் 2000 கிமீ மொத்தமாக நடந்தும் ஓடியும் கடப்பதாக சொன்னார். 
எங்களைப் பற்றி, முனை அமைப்பு பற்றி, வாசிப்பு பற்றி, எங்கள் துறை பற்றி என்று தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிக் கொண்டும் பேசிக் கொண்டும் வந்தார். 70 வயதில் நான் பார்த்தில் ஒரு சுவாரசியமான மனிதர். திடக்கழிவு மேலாண்மையில் ஆர்வம் கொண்டவர்.

பாதி வழியில் நல்லோர் வட்டம் கவியரசன் மற்றும் சிவகுமார் என்பவர் இருவரும் எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு எங்களை வந்து சந்தித்தனர். அப்போது மாணிக்க சுந்தரம் சார் அவர்களிடம் நல்லோர் வட்டம் குறித்த கேள்விகளை கேட்கத் தொடங்கினார். பல்வேறு கேள்விகளை கேட்பதற்கும் அதற்கான பதிலை கவனிப்பதற்கும் அவர் எப்போதும் தயாராக இருந்தார். 
வெகு நேரத்திற்கு பின் ஒரு டீக்கடையில் டீ குடித்தோம். அங்கிருந்து திருச்செங்கோடு ஆசிரமம் 7.5 கிமீ தான் இருந்தது. ஆனால் யார் உடலிலும் தெம்பில்லை. அவர் பலமுறை யாரேனும் ஒருவர் வந்தால் அது வரை நடக்கலாம் நீங்கள் ஓய்வெடுக்தச் சென்றால் நான் கிளம்புகிறேன் என்று சொன்னார். என்னால் நடக்க முடியும் ஆனால் மற்றவர்களை விட்டுவிட்டு செல்ல மனமில்லை. சரியென்று‌ அவர் அங்கிருந்து பிரிந்து சென்றுவிட்டார். அந்த டீக்கடையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு கோவிலில் ஓய்வெடுத்து சுமார் 5 மணிக்கு வெயில் தணிந்த பின் நடக்கத் தொடங்கினோம். 
நானும் தீபியும் முன்னரே கிளம்பி நடக்கத் தொடங்கி மற்றவர்களுக்கு 2 கிமீ முன்னர் நடந்து கொண்டிருந்தோம். சேலம் பிரகாஷ் பேருந்தில் வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். சேலம் விஷ்ணுபுரம் கோஷ்டி தான் இந்த பக்கம் எங்களுக்கான பெரும்பாலான ஏற்பாடுகளை செய்தனர். கொஞ்ச தூரத்தில் தலையில் கதர் தொப்பியை வைத்துக் கொண்டு, சட்டையில் தேசிய கொடியை குத்திக் கொண்டு ஒருவர் வந்து எங்களிடம் பேசினார். அவர் பெயர் மணி கண்ணன்‌. சித்தோட்டுக் காரர். தேர்தல் சமயங்களில் "ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்" என்று எழுதி சைக்கிளில் எழுதி தட்டி வைத்துக் கொண்டு சித்தோடு முழுக்க சுற்றுவதாக சொன்னார். வருகிற ஜனவரி 25 முதல் 30 வரை மத நல்லினக்கத்திற்காகவும், போதைப் பொருளுக்கு எதிராகவும் சித்தோட்டில் தொடங்கி திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் வரை ஒரு நடைபயணம் வர இருக்கிறார். அது தொடர்பாக வந்தவர் தான் எங்களை பற்றி தெரிந்து தேடி வந்துள்ளார். 
சுமார் 2 கிமீ எங்களுடன் நடந்திருப்பார். ஒரு முச்சந்திப்பில் எங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டார். அந்த சந்திப்பில் தான் நாங்கள் காத்திருந்து பின்னர் வந்தவர்களுடன் இணைந்து கொண்டோம். கிருஷ்ணன் சார், ஈஸ்வர மூர்த்தி சார், பாரி அண்ணா, சாமிநாதன் சார் ஆகியோர் ஈரோட்டில் இருந்து வந்து எங்களுடன் இணைந்து ஆசிரமம் வரை நடந்தனர். 
இரவுணவு சத்தியராஜ் சார் மற்றும் அவரது நண்பர் கவியரசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். அனைவரும் சாப்பிட்டு முடித்து விடைபெற்று சென்றனர். காந்தி ஆஸ்ரமத்தில், காந்தி வந்து தங்கிய இடத்தில், அவரின் கையெழுத்து பிரதி இருக்கும் அறையின் அருகில் அன்று இரவு தூங்கினோம். மிகக் குறைவான தூரமே இன்று நடந்து இருந்தாலும் எனக்கு கடுமையான கலைப்பு. இத்தனைக்கும் இன்று மதியம் ஒருமணி‌ நேரம் தூங்கினாலும் அதற்குள் அழைப்புகள் வந்து பாதியில் எழுந்து எழுந்து படுக்க வேண்டியதாயிற்று. நேற்று இரவு அனுபவக் கட்டுரை எழுதி முடித்து தூங்குவதற்கு நள்ளிரவு 1:30 மணி ஆகிவிட்டது. காலை 5:45 க்கே எழ வேண்டியதாயிற்று. இன்று கடும் வெயில், மதியம் சாப்பிடாதது அனைத்தும் சேர்ந்து உடலை மிகவும் கலைத்துப் போக செய்துவிட்டது. எவ்வளவு முயன்றும் இன்றைய கட்டுரையை எழுத முடியாமல் இரவு 10:30 மணிக்கே கண்கள் சொருகி விட்டது.

மேலும்..

சிபி.

Comments

  1. 70 வயதில் ஆண்டுக்கு 2000 கிமீ நடை என்பது சற்று கூடுதல் தான். இவ்வாறு தான் எதிர்பாரா நபர்களை எதிர்பாரா சந்தர்பத்தில் சந்திப்போம். நமது அன்றாட வாழ்வில் மனம் தப்பிய நபரிடம் நாம் சென்று பேசுவது என்பது நடக்காது. ஆனால் இந்த பயணத்தில் நாம் அவரை ஒரு கணம் நம்மவராக அடையாளம் காண்போம். உலகு செல்லும் திசைக்கு மாற்று திசை பயணம்.

    இந்த நடை பயணத்தில் காலம் மெதுவாக நகர்கிறது, இடமும் மெதுவாக நகர்கிறது. முகங்கள் அழுத்தமாக பதிகிறது. எதிர்வரும் ஒவ்வொரு நபரும் ஒரு கதையை சுமந்து வருகிறார். இன்று என்ன கதை என பார்ப்போம்.

    ReplyDelete
  2. "சாப்பிட்டு முடித்து கிளம்பும் போது சாப்பிட்டவற்றை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு அதை விட அதிக விலைக்கு திண் பண்டங்களை எடுத்து எங்கள் பையில் திணித்து விட்டனர். இத்தனை எடையை தூக்கி செல்ல முடியாது என்று பலமுறை சொல்லியும் கேட்காமல் அள்ளி அள்ளி கொடுத்துவிட்டனர்."

    எத்தனை எத்தனை மனிதர்கள். எங்கே சென்றாலும் மனிதர்களும் மனிதமும் இன்னும் கொஞ்சமேனும் உயிர்ப்புடன் உள்ளதை பார்க்க முடிகிறது. ஒவ்வொரு சந்திப்பும், ஒவ்வொரு உணர்வுகளையும் மனிதத்தின் நம்பிக்கையையும் உங்களுடன் சேர்ந்து எங்களுக்கும் அளிக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

450 கிமீ நடைபயணம் - 2

450 கிமீ நடைபயணம் - 1

450 கிமீ நடைபயணம் - 6