450 கிமீ நடைபயணம் - 3
ஜனவரி 13 காலை 7:15 மணிக்கு சௌமியா ஸ்ரீ வீட்டில் இருந்து நடக்கத் தொடங்கினோம். மூன்று குழுக்களாக முன் பின் நடந்து சென்று கொண்டு இருந்தோம். ஒருவர், பின்னால் இருந்த குழுக்களை பார்த்து விட்டு முன்னால் சென்று கொண்டிருந்த அனுவிடம் பேசியுள்ளார். எங்கள் பிரச்சாரத்தை பற்றி அறிந்ததும் சாப்பாட்டுக்கு எல்லாம் என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளார். "உங்கள மாதிரி யாராச்சு வாங்கி குடுத்தா சாப்புடுவோம்" என்று அனு சொல்லியுள்ளாள். அவர் உடனே "சரி முன்னால் சென்று உழவர் மெஸ் அருகில் நில்லுங்கள் பேரனை விட்டுவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றார். நாங்கள் நடந்து சென்று அந்த கடையை அடையும் போது அவர் வந்துவிட்டார். காலை உணவு அவர் செலவில் சாப்பிட்டோம். அவர் பெயர் மாது. கடையில் வேலை செய்த பெண்கள் எல்லாம் "நடந்தே போறீங்களா சாமி.. வண்டி கீது வச்சுக்கலாமுல்லோ.. ஏன் சாமி இப்படி போறீங்க.. சரி நல்லா சாப்புட்டு தெம்பா நடங்கோ.." என்று மாறி மாறி சொல்லியவாறே எங்களுக்கு பரிமாறினர். அங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு பள்ளிபாளையம் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
கூடுதுறையை கடக்கும் பைப்பாஸ் சாலையில் நடந்து சென்றோம். அங்கு காவிரி ஆற்றில் பாதி மூழ்கிய பாறைகளின் முதுகு மட்டும் தெரிந்து கொண்டிருந்தது. ஒரு கணம் பல யானைகள் ஒன்றாக குளிப்பது போல் இருந்தது. இன்னொரு கணம் வானில் இருந்து உருட்டி விடப்பட்ட சோலிகள் போல் இருந்தது. அந்த பாலத்தில் நாங்கள் நடந்து கொண்டிருக்கும் போது வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் போல் தெரிந்த ஒரு பெண்ணும் ஆணும் வண்டியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தனர். அருகில் சென்றவுடன் அந்த பெண் "what is this?" என்று எங்கள் நோட்டீஸை பார்த்துக் கேட்டார். உடனே அர்ச்சனா "mam actually.." என்று தொடங்கி ஆங்கிலத்தில் எங்கள் பிரச்சாரத்தை கிட்டத்தட்ட முழுவதும் சொல்லி விட்டாள். இடையில் தடுமாறும் போது "please don't mind me.." என்று இழுத்தாள். அந்த பெண் உடனே "நீங்க தமிழ் பேசுனாலே புரியும் எனக்கு" என்றார். நாங்கள் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டோம். அர்ச்சனா ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அந்த பெண்ணையும் எங்களையும் மாறி மாறி பார்த்து பேந்த பேந்த முழித்துக் கொண்டு நின்றிருந்தாள். என்னால் சிரிப்பை நிறுத்தவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் மூச்சை இழுத்து அழுத்திப் பிடித்து, கண்களை மூடி, காற்றை விழுங்கி சிரிப்பை நிறுத்தினேன்.
அவர் கேரளத்தை சேர்ந்தவர். பெயர் மிகாயா. மதிய உணவிற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார். "உங்கள மாதிரி யாராவது கொடுத்தா சாப்புடுவோம்" என்று வழக்கமான வாக்கியத்தை சொன்னோம். அவர் உடனே சரி உங்கள் இன்றைய மதிய உணவு என்னுடையது என்று சொல்லி லைலா பானுவிற்கு 500 ரூபாய் அனுப்பினார்.
ஒருகட்டத்தில் இரு குழுக்களாக பிரிந்தோம். அனுவும் தீபியும் ஒரு குழு. மற்றவர்கள் அனைவரும் ஒரு குழு. மேப் இரண்டு வழி காட்டியது. இரண்டும் ஒரே தொலைவு. ஆளுக்கு ஒரு வழியில் செல்ல முடிவெடுத்தோம். இரண்டும் 1 கிமீ தொலைவில் மீண்டும் ஒன்றாக இணைந்தது.
நான் சென்ற நடைபயணத்தில் செய்த தவறு என்று உணர்வது நாம் சொல்ல வருவதை மட்டுமே சொல்கிறோமோ? எப்படியாவது மக்களை இந்த வழிக்கு மாற்ற நினைக்கிறோம். ஆனால் அவர்கள் சொல்வதை முழுவதுமாக கேட்கத் தவறிவிட்டமோ? என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அவர்கள் ஒன்றை சொல்லும் போது அதை முழுவதுமாக கேட்காமல் அதற்கு மேல் நாங்கள் சொல்ல வருவதை வைத்து அழுத்தி, பணம் வாங்குவதால் அவர்களை மதிப்பு குறைவானவர்கள் என்று சொல்ல முயல்வதாக தோன்றியது. நாங்கள் ஒன்றை சரியென்று நம்பி செய்கிறோம். ஆனால் அதை சொல்லும் விதத்தில் சிக்கல் உள்ளதோ என்று தோன்றியது.
கிருஷ்ணன் சார் தான் எங்கள் அனைத்திற்கும் தொடக்கம். அவர் எங்கள் வாழ்வில் ஒரு வெடிப்பு. திடீரென ஒவ்வொருவர் பாதையும் வேறு ஒன்றாக திரும்ப அவரே காரணம். நாங்கள் ஒவ்வொருவரும் அவரை எங்கள் குருவாகவும் தந்தையாகவும் தான் உணர்கிறோம். எல்லாவற்றிற்கும் சாதக பாதகம் இருப்பது போலவே இதிலும் உண்டு. தந்தையை குழந்தை பதிலி செய்ய முயல்வது போல் நாங்கள் அனைவருமே கிருஷ்ணன் சாரை பதிலி செய்கிறோமோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. எங்கள் பேச்சில் செயலில் அனைத்திலும். குறிப்பாக என்மீது அவரின் தாக்கம் மிகப் பெரிய அளவு உள்ளது. அவர் தினமும் நான் சந்தித்து உரையாடும் நபர். கடந்த இரண்டு வருடத்தில் நான் அதிகம் பேசிய நபர் அவர் தான். அதனால் என்னுடைய அனைத்து செயல்களிலும் அவரின் துளி இருந்தே தீரும். பல பேர் என்னுடைய பேச்சு அப்படியே கிருஷ்ணன் சார் போல் உள்ளது என்று சொல்லியுள்ளனர். என்னை அறியாமல் அது எனக்குள் வருகிறது. அதை விலக்குவது சாத்தியமில்லை.
அவருக்கென்று ஒரு இயல்பு உண்டு. அவரின் பேச்சிற்கு ஒரு தொனி உண்டு. எதையும் நேரடியாக திடமாக சொல்லக் கூடிய நபர் அவர். எதையும் மனதில் ஒன்று வைத்து வெளியில் பேச அவருக்கு தெரியாது. உள்ளதை உடைத்து பேசுவதே அவரின் குணம். அதுவே அவரிடம் நான் முதலில் கண்டு வியந்தது. நான் சிறுவயதில் இருந்தே அதிகம் பேசக்கூடியவன் அல்ல. விலகி நின்று பார்ப்பதே எனது இயல்பு. எதையும் வெளிப்படையாக சொல்பவனும் அல்ல. அவரை போல் இயல்பாக பேச வேண்டும், வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் அவர் வெளிப்படுத்தும் கடினமான மொழியில் அல்ல. ஆனால் அதுவும் அவரிடம் இருந்து எனக்கு வரத்தான் செய்கிறது. எந்த மகனும் தந்தையிடம் இருந்து தனித்துவமிக்கவனாக இருக்கவே விரும்புவான். ஆனால் தவிர்க்க முடியாமல் தந்தையின் நீட்சியாகவே இருக்கிறான்.
சென்ற முறை நடைபயணத்தில் எங்கள் அணுகு முறைக்கு இந்த பதிலி செய்தல் தான் பிரதான காரணம் என்று நினைக்கிறேன். நண்பர்களிடமும் அவ்வாறு நான் நடந்து கொள்வது உண்டு. அது சில நேரங்களில் சிக்கலை உருவாக்குவதும் உண்டு. இம்முறை மிகவும் பிரக்ஞை பூர்வமாக என்னை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால் நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் சாத்தியமான நீண்ட உரையாடலை செய்ய விரும்பினேன். அவர்கள் சொல்வது முற்றிலும் தவறாக இருந்தாலும், எனக்கு முன்பே அதற்கான பதில் இருந்தாலும் அவர்களை முழுவதும் பேச விடுகிறேன். அதனாலேயே இன்று நான் மிகவும் பின்னால் வந்து கொண்டு இருந்தேன்.
ஒரு கறிக்கடைக் காரரிடம் நோட்டீஸ் கொடுத்து எங்கள் பிரச்சாரத்தை சொன்னேன். அவர் எடுத்த உடன் "அதெல்லாம் எவனும் கேக்க மாட்டான். வாங்கறவ வாங்கீட்டே தான் இருப்பான். எவனும் திருந்த மாட்டான்" என்றார். அவர் அப்படி சொன்னவுடன் நான் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு "அப்படி மாறியவர்கள் நூறு பேரை என்னால் காட்ட முடியும். நீங்கள் மாற மாட்டீர்கள் என்று சொல்லுங்கள்" என்று திடமான குரலில் சொன்னேன். பேச பேச அவர் வேறு ஏதோ சொல்லத் தொடங்கினார். என்னை பேச விட்டால் தான் நான் சொல்ல முடியும் என்று மீண்டும் அதே குரலில் சொன்னேன். உடனடியாக நானே சுதாரித்து இல்லை என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு பேச்சை நிறுத்தினேன். அவர் "உங்கள விட நா நல்லா பேசுவெ. எவனும் கேக்க மாட்டீறா. நா காசு வாங்க மாட்டெ. அத வாங்கீட்டா நம்ம தன்மானம் போய்டும்னு மத்தவங்க கிட்டயும் சொல்லுவெ. நா அத வாங்காட்டி நீ கொடுப்பியானு கேப்பானுங்க. உனக்கென்னப்பா நல்லா சம்பாதிக்கற வாங்க மாட்டனு சொல்லுவானுங்க. நீ வாங்காட்டி போ என்ன ஏன் வாங்கக் கூடாதுனு சொல்றனு சொல்லுவானுக. எவனும் கேக்க மாட்டா. நானும் சொல்லி சொல்லி சலிச்சு போய் சொல்றதயே நிறுத்தீட்ட" என்று சொன்னார். அதற்குள் என்னுள் எழுந்து வந்த சொற்கள் எல்லாம் அழுந்தி நிதானமடைந்து விட்டேன். இயல்பாக அவரிடம் பேசத் தொடங்கி விட்டேன். இறுதியாக "நீங்க பன்றது சரி தா. எல்லாரும் மாறுனா சந்தோஷம் தா" என்று சொல்லி கை நீட்டினார். அவர் கையில் ரத்தக்கறை படிந்து உறைந்து இருந்தது. ஒரு கணம் கை கொடுக்க யோசித்தேன். அடுத்த கணம் கொடுத்துவிட்டேன். அவர் என் கையை பிடித்து அழுத்தி விட்டார். அவரை பார்த்து சிரித்துவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினேன்.
அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றவுடன் ஒரு உணவகத்தின் வாசலில் ஒரு பெண் ஒரு போசியை கழுவி எடுத்துச் சென்றார். நான் நோட்டீஸ் எடுத்து செல்வதைப் பார்த்து வந்து பெற்றுக் கொண்டார். "ஓட்டுக்கு பணம் வாங்காதீங்கனு பிரச்சாரம் பண்ணீட்டு சென்னை வரைக்கும் 450 கிமீ நாங்க நடந்து போறோம். வரப்போற தேர்தல்ல ஓட்டுக்கு பணம் வாங்காம நேர்மையா ஓட்டுப் போடுங்க" என்ற வசனத்தை மாறாமல் அப்படியே சொன்னேன். அவர் சிரித்துவிட்டு "நான் வாங்குவனே" என்றார். இனிமேல் வாங்காதீங்க அது தப்பான பணம் தான என்று சொன்னேன். அவர் உடனே நீங்க பொங்கலுக்கு 3000 ரூபாய் வாங்கி இருப்பீர்கள் தானே என்று கேட்டார். இரண்டுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. இது அரசிடம் இருந்து வெளிப்படையாக அனைவருக்கும் ரேசன் கடையில் பொதுவாக வழங்கப்படுகிறது. ஆனால் ஓட்டுக்கு பணம் யாருக்கும் தெரியாமல் திருட்டுத் தனமாக வீட்டிற்கு வந்து கொடுக்கிறார்கள். அதை புரிந்து கொண்டால் எது சரியான பணம் எது தவறான பணம் என்று புரியும் என்று சொன்னேன். "இப்போ சென்னை வரைக்கும் நடந்தே போறீங்களா?" என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னேன். "ஏன் நடந்தே போறீங்க வண்டீல போலாம்ல?" என்று கேட்டார். "நடந்து போனா தான உங்கள மாதிரி ஆட்கள் நாங்க சொல்றத கேட்டு பணம் வாங்க மாட்டீங்க அதனால தான்" என்றேன். அவர் உடனே "அப்படியா! சரி இனி நான் வாங்க மாட்டேன்" என்று சொன்னார்.
அந்த கடையை தாண்டி இன்னும் கொஞ்ச தூரத்திலேயே இன்னொரு பெண்மணியிடம் பேசினேன். அவரும் இதே போல ரேசன் கார்டு இல்லாம அந்த பணமே வாங்க முடில என்று சொன்னார். முன்னர் சந்தித்தவரிடம் சொன்ன அதையவே இவரிடமும் சொன்னேன். "அப்படியா சாமி! நீங்க சொன்னாத்தான தெரியும் எனக்கு. இல்லீனா எப்படி தெரியும்? சரி இனிமே யாராச்சு கொண்டாந்து கொடுத்தா வேண்டானு சொல்லீற" என்றார்.
கிருஷ்ணன் சார், பாரி அண்ணா இருவரும் சௌமியா ஸ்ரீ வீட்டிற்கு சென்று நாங்கள் வைத்துவிட்டு வந்த எங்கள் முதுகுப்பையை எடுத்துக் கொண்டு 1 மணி வாக்கில் எங்களிடம் வந்து சேர்ந்தனர். அர்ச்சனாவின் காலணி சிறிதாக இருந்து நடக்க முடியாமல் போனதால் அவளிற்கு புதிய காலணியும் வாங்கி வந்தனர்.
பள்ளிபாளையத்திற்கு இரண்டு கிலோ மீட்டர் முன்னர் வரை எங்களுடன் நடந்து வந்தனர். அதன் பின் ஓய்வெடுக்க ஒரு நல்ல இடத்தை ஒரு கோவிலின் அருகில் லைலா பானு கண்டறிந்து விட்டதால் அங்கு அனைவரும் சென்று ஒதுங்கினோம். கிருஷ்ணன் சாரும் பாரி அண்ணாவும் பள்ளிபாளையம் சென்று எங்களுக்கு மதிய உணவு வாங்கி வந்து அளித்து விட்டு எங்கள் உடைமைகளையும் கொண்டு சென்று நாங்கள் இன்று தங்கவிருக்கும் கவியரசன் என்பவரின் வீட்டில் வைத்து விட்டு ஈரோடு சென்றுவிட்டனர். மதியம் சாப்பிட்டுவிட்டு அனைவரும் அங்கு ஓய்வெடுத்தோம். நான் ஒரு மணி நேரம் நன்றாக உறங்கிவிட்டேன். நான்கு மணிக்கு எழுந்து நடக்கத் தொடங்கினோம்.
நான் காலையில் இருந்து தனியாக நடந்து வந்ததை பார்த்து மற்ற நண்பர்கள் நான் ஏதோ வருத்ததில் இருப்பதாக நினைத்துக் கொண்டனர். நான் இல்லை என்று எவ்வளவு விளக்கியும் "இல்லை உனக்கு ஏதோ பிரச்சினை " என்று என்னையே நம்ப வைக்க முயன்றனர். மதியத்திற்கு மேல் என்னை தனியாக செல்ல விடாமல் தீபிகா அனைவருக்கும் நடுவிலேயே நடக்க வைத்தாள். கொஞ்சம் விலகி சென்றால் கூட திட்டுகளும் அடிகளும் விழுவது உண்டு. நோட்டீஸும் தீர்ந்து விட்டதால் அனைவரும் ஒன்றாக ரோட்டையே பார்த்து நடந்து சென்று கொண்டிருந்தோம்.
மீண்டும் 5:30 மணிக்கு கிருஷ்ணன் சாரும் பிரபு அண்ணாவும் புதிதாக அச்சிட்ட நோட்டீஸ்களுடன் எங்களிடம் வந்து சேர்ந்தனர். மீண்டும் கிருஷ்ணன் சார் எங்களுடன் நான்கு கிமீ நடத்திருப்பார். நாங்கள் நடந்து செல்வதைப் பார்த்து ஒற்றைக் கால் கொண்ட ஒரு சாமி வந்து எங்களிடம் பேசிவிட்டு வாழ்த்திச் சென்றார். அங்கிருந்து மீண்டும் அனைவரும் முன்னர் விரைவாக செல்ல நானும் லைலா பானுவும் மட்டும் நோட்டீஸ் கொடுத்தவாறு பொறுமையாக பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு டீக்கடையில் சிலருக்கு நோட்டீஸ் கொடுத்து பேசினோம். அதில் வங்கி ஊழியர் போல் உடையணிந்த ஒருவரிடம் பேசும் போது "பணம் வாங்காத என்ன பண்றது? மொதல்ல அரசாங்கத்து கிட்ட போய் வீட்டுக்கு ஒருத்தருக்கு அரசு வேலை கொடுக்க சொல்லுங்க. எல்லாத்துக்கும் வேலை இருந்தா ஏன் போய் பணம் வாங்கறாங்க" என்றார். "நாம எப்பவுமே மத்தவங்கள கொறை சொல்லீட்டே தான் இருப்போம். நம்ம கிட்ட இருக்கற தப்ப பாக்கவே மாட்டோம். பணம் வாங்கறது தப்புன்னு உணர்ந்து நாம் வாங்காம இருந்த தான அடுத்தவங்க பண்ணலனு கேட்க முடியும்" என்று சொன்னேன். அதை சொல்லும் போது பாதியிலேயே "நீங்க நல்லா இருக்கறீங்க வாங்க மாட்டீங்க. பணம் இல்லாதவன் என்ன பண்ணுவா?" என்று கேட்டார். "உங்களை விட பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்கள் நிறைய பேர் நேர்மையாக இருக்கத்தான் செய்கிறார்கள் உங்களால் இருக்க முடியாது என்று சொல்லுங்கள்" என்றேன். "நான்லா வாங்குன உடனே டீரஸ்ட்டுக்கு கொடுத்துருவ. நான்லா ஒரு நிமிசம் கூட வெச்சுக்க மாட்டேன்" என்றார். "ஒருமுறை கையில் வாங்கீட்டீங்கனாவே நீங்க அந்த கொள்ளைல பங்காளி ஆயிட்டீங்கனு தான் அர்த்தம். உங்க சுயமரியாதைய எழந்துட்டீங்கனு தான அர்த்தம். கொடுக்கனும்னு நெனச்சா உங்க கைக்காச கொடுக்கனும் என்று சொன்னேன். இது எதையுமே அவர் என்னை முழுவதும் சொல்ல விடவில்லை. அவர் பாட்டிற்கு பேசிக்கொண்டே இருந்தார். பிச்சு பிச்சு இதை சொல்லி முடிப்பதற்கு வெகு நேரம் ஆகிவிட்டது.
"அவர் மீண்டும் அதெல்லாம் எவனும் வாங்காம இருக்க மாட்டான். நீங்க நடக்கறதே வேஸ்டு" என்று சொன்னார். அதற்கு மேல் அவரிடம் என்னால் பேச முடியவில்லை. அப்படி வாங்காதவங்க நெறைய பேரு இருக்காங்க அவங்க எல்லாரும் உங்கள் விட மேலானவங்க உங்க கண்ணுக்கு அவங்க யாரும் தெரிய மாட்டாங்க. உங்கள் மாதிரி ஆள் தான் உங்களுக்கு தெரிவாங்க என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கி விட்டோம்.
முன்னால் சென்றவர்கள் ஒரு பேக்கரியில் எங்களுக்காக காத்திருந்தனர். அங்கு சென்று அமர்ந்தேன். அருகில் அமர்ந்திருந்தவர் வெகு நேரம் அமைதியாக இருந்துவிட்டு என்ன போராட்டம் பண்றீங்க என்று கேட்டார். எங்கள் பயணத்தை சொன்னோம். முன்பு சந்தித்தவரை போலத்தான் இவரும் பேசினார். "யாரும் வாங்காமல் இருக்க மாட்டார்கள். நான் அதிமுக கட்சியில் உள்ளேன். பணம் வரவில்லை என்றால் வீட்டிற்கு வந்து கேட்கிறார்கள். இவர்கள் எங்கு மாறப் போகிறார்கள்" என்று சொன்னார். "இது எங்கள் முதல் பயணம் அல்ல. இதற்கு முன் கோவை முதல் வேதாரண்யம் வரை 400 கிமீ நடைபயணம் சென்று உள்ளோம். அப்போது பணம் வாங்கியவர்கள் பலர் கண்ணெதிரே மாறுவதை பார்த்து உள்ளோம். உங்களை போன்று பணம் கொடுப்பவர்கள் சிலரும் இனிமேல் பணம் கொடுக்க மாட்டேன் என்று மாறியுள்ளார்கள்" என்று சொன்னேன்.
"நான் கொடுக்காட்டி வேற எவனாவது கொடுப்பான்" என்றார். "குறைந்தபட்சம் நம் கையால் தவறு செய்யாமல் இருப்போம் அல்லவா" என்று கேட்டேன். அவர் "சரி பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு அவருக்கு கொடுத்த நோட்டீஸை திரும்ப என்னிடமே கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார்.
அந்த பேக்கரியில் இருந்து கிருஷ்ணன் சாரும் பிரபு அண்ணாவும் கிளம்பி விட்டனர். மேலும் இரண்டு கிமீ நடந்த பின் ஏழு மணி வாக்கில் தீபியும் சௌமியும் பழச்சாறு குடிக்க நின்றார்கள். அனு, லைலா, அர்ச்சனா மூவரும் முன்னால் கொஞ்சம் சென்று அமர இடம் பார்ப்பதாக சொல்லிட்டு நடக்கத் தொடங்கினார். ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு கௌதமை இவர்களுடன் இருக்க சொல்லிவிட்டு நானும் முன்னர் சென்றவர்களிடம் நடந்து சென்றேன். ஐம்பது மீட்டர் அருகில் இருக்கும் போது அர்ச்சனா அழைத்து ஒரு குடிகாரர் வந்து ஏதேதோ கேட்பதாக சொன்னாள். அவள் அழைப்பை வைப்பதற்கும் அவர்களிடம் நான் சென்று சேர்வதற்கும் சரியாக இருந்தது. நான் சென்றவுடன் அந்த நபர் கிளம்பிவிட்டார். இவர்களிடம் கேட்டதற்கு "ஏன் நடந்து செல்கிறீர்கள் என்னுடைய வீட்டில் இரவு தங்கிக் கொள்ளலாம்" என்று அழைத்ததாக சொன்னார்கள். அனு தேவையில்ல நீங்க போங்க சென்று சொல்லியும் திரும்ப திரும்ப கேட்டதாக சொன்னாள்.
அவர்கள் பழச்சாறு குடித்துவிட்டு வந்ததும் மீண்டும் அனைவரும் ஒன்றாக நடந்து சென்று காடச்சநல்லூரை அடைந்தோம். அங்கு நல்லோர் வட்டத்தை சேர்ந்த கவியரசன் என்பவர் வீட்டில் இன்று இரவு தங்குகிறோம்.
மேலும்...
சிபி.
(பி.கு. எங்களுக்கு போதுமானதை விட கூடுதலான நிதி வந்துவிட்டது. ஆகவே இனிமேல் எங்களுக்கு நிதி அளிக்க விரும்பினால் உங்கள் ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் பெயரளவில் 100 ரூபாய் மட்டும் அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறோம். அதற்கு மேல் அனுப்ப வேண்டாம். ஒருவேளை எங்களுக்கு பின்னர் நிதி தேவைப்பட்டால் 100 ரூபாய் அளித்தவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறோம்.)
அருமையான பதிவு
ReplyDeleteஉடன் செல்வது போலவே உள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள்
“இறுதியாக "நீங்க பன்றது சரி தா. எல்லாரும் மாறுனா சந்தோஷம் தா" என்று சொல்லி கை நீட்டினார். அவர் கையில் ரத்தக்கறை படிந்து உறைந்து இருந்தது. ஒரு கணம் கை கொடுக்க யோசித்தேன். அடுத்த கணம் கொடுத்துவிட்டேன். “
ReplyDeleteஎது கறை, எது சுத்தம்…!இங்குள்ள கறை கழுவ நடக்கும் பன்னிரு கால்களின் பயண வெற்றிக்கு வாழ்த்துக்களும், அன்பும்.
கூடுதுறை விவரிப்பு ஒரு சிறு குழந்தையின் வியப்பு. ஒரே நேரம் உருட்டலுக்கு பின் ஆடி நின்ற சோழிகள் போலவும் யானைகள் போலவும் காண்பது ஒரு அழகிய கற்பனை. ஒரு வகையில் இந்த பிரசாரத்திற்கான உருவகம் இது. சிறு அளவில் சோழிகளை உருட்டி யானைகளை மல்லாற்றிப் போட முயல்கிறோம்.
ReplyDeleteபுறக்கணிப்புகள் எதிர்பாராதது அல்ல. இந்த அளவிலான ஆதரவு எதிர்பாராதது. எப்போது இந்த ஆதரவு வழக்கமானது என உணர்கிறோமோ அப்போது இந்த சமூகம் மேம்பட்டு விட்டது எனப் பொருள். நம்மை சந்திக்க வரும் ஒவ்வொரு நபரும் இந்த வெளிச்சத்தில் புன்னகைத்து விட்டு செல்கிறார், ஒரு துளி நெய் ஊற்றிவிட்டு செல்கிறார்கள். நமக்கு செவி கொடாதவர்களுக்கு நாம் செவி கொடுப்போம். காந்தியின் காதுகள் சற்று பெரிது. அடுத்த நாள் என்ன எண் விழும் என்று பார்ப்போம்.
அழகான உவமையுடன் தொடங்கி, திரு கிருஷ்ணன் அவர்களின் பாத்திரம், உங்களின் வளர்ச்சி என்று விரியும் இந்த பதிவு மிக சிறப்பாக உள்ளது. உங்களின் பணியின் தீவிரமும் கஷ்டங்களும் தெரிகிறது.
ReplyDelete