450 கிமீ நடைபயணம் - 5
நேற்றைய பதிவில் அர்ச்சனா மடிக்கணினி வாங்குவதற்கு ஊருக்கு சென்றதை மட்டுமே எழுதியிருந்தேன். அவள் மீண்டும் அன்று மதியமே திரும்பி வந்து எங்களுடன் இணைந்து கொண்டதை எழுத மறந்துவிட்டேன். அதனால் பல பேர் அவள் ஒட்டுமொத்தமாக சென்றுவிட்டதாக எண்ணி விட்டனர். ஆனால் அடித்து பிடித்து மதியத்திற்குள் நாங்கள் ஓய்வெடுக்கும் இடத்திற்கு வந்து எங்களுடன் இணைந்து கொண்டாள்.
இன்று தான் மிகவும் தாமதமாக நடக்கத் தொடங்கினோம். 6:30 மணிக்கு தான் நான் எழுந்தேன். எழுந்து தயாராகி திருச்செங்கோடு ஆசிரமத்தில் ராஜாஜி இல்லம் மட்டும் பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கினோம். இரண்டு வருடம் முன்பு இந்த இடத்தை முதன்முதலில் பார்க்கும் போதே ராஜாஜியும் காந்தியும் உள்ளறையில் இருந்து வெளியே வந்து மேலே உள்ள தாழ்வாரத்தை பிடித்து குனிந்து வெளியே வரும் காட்சி கண்ணில் உதித்தது. இன்றும் அந்த காட்சி தோன்றியது. திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் இருந்து வையப்பமலை நோக்கி 8 மணிக்கு நடக்கத் தொடங்கினோம்.
வீடுகளே இல்லாத வானம் பார்த்த பூமியாய் இருக்கும் விவசாயக் காடுகள் வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தோம். ஒரு வீட்டின் முன் நிறைய கார்கள் நின்றிருந்தன. மக்களும் கூடி ஏதோ சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அவர்களிடம் சென்று நோட்டீஸ் கொடுத்தவுடன் சாப்பாடு தீர்ந்தது தெரியாமல் சிலர் எங்களை சாப்பிட அழைத்து விட்டனர். ஒரு அரைமணி நேரம் காத்திருக்கும் படி சொன்னார்கள். ஒருவர் காலை உணவு கொண்டு வருகிறார் என்று செல்லி வேண்டாம் என்றோம். நிறைய பேர் இருப்பதால் கைரேகை வாங்கலாம் என்று துணியை விரித்து அவர்களிடம் விரும்பினால் ரேகை வைக்கும்படி சொன்னோம். கொஞ்சப் பேர் வைத்தார்கள். சிலர் மறுத்துவிட்டனர்.
ஏற்கனவே பொங்கல் காசுன்னு 3000 ரூபாய் கொடுத்துவிட்டார்கள் இனி என்ன கொடுக்கறது. நான்கு வருடம் கொடுக்காதவர்கள் ஏன் இந்த வருடம் மட்டும் கொடுக்கிறார்கள்? எல்லாம் மறைமுகமாக ஓட்டிற்கு பணம் தான் என்று கைரேகை வைத்தவரும் வைக்காதவரும் பேசிக்கொண்டனர்.
அங்கிருந்து மேலும் ஒரு கிமீ நடந்த உடன் கிருஷ்ணன் சாரும், அரசு சாரும் வந்து எங்களை சந்தித்தனர். ஈரோட்டில் இருந்து பெங்களூர் செல்பவர்கள் இந்த வழியாக வந்து எங்களை பார்த்தனர். கிருஷ்ணன் சார் நேராக புனே திரைப்பட விழாவிற்கு செல்கிறார். எங்களுடன் டீ குடித்து விட்டு கிளம்பிவிட்டனர். நாங்கள் சுமார் 9:30 மணி வாக்கில் ராயர்பாளையம் வந்து சேர்ந்தோம். அங்கு நண்பர் சத்தியராஜ் எங்களுக்கு காலை உணவு எடுத்து வந்தார்.
சாப்பிட்டுவிட்டு ஒரு கிராமச்சாலை வழி உள்ளே சென்றோம். என்னுடைய அம்மா ஊருக்கு செல்ல உள்ளார். அதற்கு முன் எங்களுடன் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும் என்று இன்று கிளம்பி வந்துவிட்டார். நாங்கள் செல்லும் வழியில் பேருந்து வசதி இல்லாததால் சத்தியராஜ் ராயர்பாளையத்தில் காத்திருந்து என் அம்மாவை அழைத்து வந்து எங்களிடம் விட்டுவிட்டு அவர் மீண்டும் சென்று அவருடைய நண்பர் கவியரசன் என்பவருடன் எங்கள் சுமைகளை எடுத்துச் சென்று இன்று நாங்கள் தங்கவிருக்கும் வையப்பமலையில் ஒரு மஹாலில் வைத்துவிட்டனர்.
அம்மா எங்களுக்காக அவர் சிறுவயதில் வாங்கிய ரப்பர் கட்டிய மிட்டாய் வாங்கி வந்தார். அதை சுற்றி விளையாடலாம். அனைவரும் ஆளுக்கு ஒன்று எடுத்த பின் அந்த கவரை வைத்து அம்மா விளையாட தொடங்கினார். என்னுடைய அம்மா மீது எனக்கு எப்போதும் தீராத ஆச்சரிங்களில் ஒன்று எப்படி தன்னுடைய குழந்தைத் தன்மையை இவ்வளவு தூரம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது. என்னை விட என்னுடைய அம்மா குழந்தை. நான் செய்யத் தயங்கும் பல வேடிக்கைகளை, சிறுபிள்ளை தனங்களை கூச்சமின்றி செய்வார். சேட்டைக்கு பஞ்சமே இருக்காது.
அந்தக் காகிதத்தை வாயில் வைத்து ஊதி அடித்து உடைக்க வெகு நேரம் முயன்ற பின்னர் தான் அதில் ஓட்டை இருந்ததை கவனித்துள்ளார். ஆனாலும் அதை விடாமல் ஓட்டையை அடைத்துப் பிடித்து ஊதி ஊதி முயன்று கொண்டிருந்தார். காற்று அப்போதும் வெளியே வந்தாலும் விடாமல் போராடி எப்படியாவது அதை வெடிக்க வேண்டும் என்று ஊதிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அது சாத்தியமில்லை என்று தெரிந்து கையால் அந்த காகிதத்தை ஓங்கி அடித்து "டமால்" என்று கத்தினார். முன்னால் சென்றவர்கள் அம்மா கீழே விழுந்துவிட்டார் என்று பயந்து திரும்பும் போது வெடித்துச் சிரித்துக் கொண்டு இருந்தார்.
அனைவரும் மீண்டும் நெஞ்சை தடவி தங்களை சாந்தப்படுத்திக் கொண்டு முன்னோக்கி நடக்கத் தொடங்கினர். வழியில் இருந்த இரண்டு பேர் வையப்பமலைக்கு இந்த வழியாக போக முடியாது நீங்கள் வேறு வழியில் முக்கிய சாலையிலேயே சென்றிருக்கலாம் என்று பேசினர். நாங்கள் ஒரு கணம் நின்று யோசித்துவிட்டு பரவாயில்லை என்று மீண்டும் கூகுள் மேப்பை நம்பி அதே வழியில் நடக்கத் தொடங்கினோம். கொஞ்ச தூரத்தில் அந்த தார்ச்சாலை மண்சாலை பக்கம் திரும்பியது. மண்சாலை குறுகி குறுகி ஒற்றையடிப் பாதையாக மாறியது. சுற்றிலும் விவசாயக்காடுகள் சூழ்ந்த ஒரு வீட்டை தாண்டி அந்த பாதை மெலிதாக சென்று கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் அந்த பாதையும் மறைந்து வரப்பாக மாறியது. அதில் ஏறி கயிற்று மேல் நடப்பது போல் நடந்து காடுகளை தாண்டி மீண்டும் சற்று அகலமான பாதைக்கு வந்தோம். அந்த பாதை மீண்டும் சென்று தார்ச்சாலையுடன் இணைந்து விட்டது.
அந்த சாலையில் சென்று கொண்டு இருக்கும் போது இரண்டு பேர் எங்களை வழியை மறித்து விசாரித்தனர். "ஓட்டுக்கு பணம் பெறாதீர்கள் என்று பிரச்சாரம் செய்தவாறு 450 கிமீ நடந்து செல்கிறோம்" என்று சொன்னதும் ஆச்சரியத்தில் உறைந்து விட்டனர். சரி பார்த்து செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டனர். ஒரு பிரிவில் நாங்கள் இடது புறம் திரும்பி நடந்து சென்று கொண்டு இருந்தோம். சில கிலோமீட்டர்கள் கடந்தவுடன் அவர்கள் இருவரும் மீண்டும் பின்னால் வந்துவிட்டனர்.
"அட இந்தப்பக்கம் வந்துட்டீங்களா?"
"நீங்க இடப்புலி பக்கொ வருவீங்கனு அந்தப் பக்கொ பிஸ்கட் வாங்கீட்டு நின்னுட்டு இருந்தோ நாங்க. இந்தா புடிங்க"
"அய்யோ! சார் இத்தனெய தூக்கீட்டு நடக்க முடியாது சார். பிளீஸ் வேண்டாங்க சார்"
"அடக் கொண்டுவோங்க. இதென்னத்தப் போய் வெயிட்டா இருக்குது உங்களுக்கு. ஆளுக்கு ரெண்டு திண்ணா மூஞ்சுவோது இந்தாங்க"
"சேகரிக்க சார் வரோம்"
"தண்ணீ எல்லா வெச்சிருக்கீங்களா?"
"இருக்குங்க சார்"
"சேரி இருக்கறத குடிச்சுப்போட்டு குடுங்க நா போய் ஃபில்டர் தண்ணீ புடிச்சிட்டு வர"
என்று எங்களிடம் இருந்து இரண்டு பாட்டில்களை பெற்று சென்று ஒன்றில் தண்ணீரும் ஒன்றில் எலுமிச்சை ஜூஸும் கொண்டு வந்தார்.
"ரொம்ப நன்றிங்க சார். நாங்க வரோம்."
"என்னோட நம்பர் நோட் பண்ணிக்கோங்க. 10 கிலோமீட்டருக்குள்ள எதாச்சு கெல்ப் வேணும்னா கூப்புடுங்க. எனக்கு ஒரு ரிங் வுட்றுங்க"
என்று சொல்லி அவர் அழைப்பு எண்ணை கொடுத்துவிட்டு கிளம்பினார்கள். கொஞ்ச தூரம் சென்றவுடன் அவர் மீண்டும் அழைத்து தர்பூசணி பழம் கொண்டு வருவதாக சொன்னார். ஒரு கோவிலில் ஓய்வெடுக்க ஒதுங்கினோம். அங்கு ஒரு சாக்கு முழுக்க தர்பூசணி பழங்களை கொண்டு வந்து எங்களுக்கு அவற்றை ஒவ்வொரு கீத்தாக வெட்டிக் கொடுத்தனர். தர்பூசணி சாப்பிட்டே எங்கள் அனைவரின் வயிறும் ரொம்பிவிட்டது. மதிய சாப்பாடு இன்றும் சாப்பிடவில்லை. அந்த வழியாக சென்ற அவர்களுக்கு தெரிந்த ஒருவரை எங்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் வாங்கி வரும்படி சொன்னார்.
கோவிலுக்கு எதிரில் இருந்த ஒரு வீட்டில் இருந்து தான் சாவி வாங்கி வந்தோம். அவர்கள் அங்கு செல்லும் போதெல்லாம் வாழைப்பழம், இன்ன பிற தின்பண்டங்கள் என்று ஏராளமானவற்றை அளித்தனர். இவ்வளவு ஆதரவு கொடுத்தால் நாங்கள் எடை தாங்க மாட்டோம் என்று தான் சொல்லிக் கொண்டோம்.
என் அம்மா ஊருக்கு செல்வதற்கு நாங்கள் ஓய்வெடுத்த ஊரில் பேருந்து வசதி எதுவும் இல்லாததால் இன்று எங்களுடனேயே தங்க முடிவெடுத்து விட்டார். அவர்கள் கொடுப்பதை எல்லாம் நாங்கள் வேண்டாம் என்று சொல்லும் போது "அட வாங்கு அட வாங்கு" என்று சொல்லி வாங்க வைத்தது அம்மா தான்.
மதிய ஓய்விற்கு பின் எழுந்து நடக்கத் தொடங்கி திருச்செங்கோடு ராசிபுரம் பிரதான சாலையை அடைந்தோம். எதிரில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் பெரும் படையென திரண்டு வந்து கொண்டு இருந்தனர். கையில் இருந்த நோட்டீஸ் அனைத்தையும் சௌமியா பறந்து பறந்து கொடுத்து தீர்த்து விட்டாள். ஒவ்வொரு கோஷ்டிக்கு பின்னாலும் ஒரு வண்டி வந்து கொண்டு இருந்தது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதத்தில் முருகர் இருந்தார். அழகிய அலங்காரத்துடன், வள்ளி தெய்வானையுடன், சிவன் மடியில், கூலிங் கிளாஸ் உடன் கூட முருகர் வண்டியில் ஏறி சென்று கொண்டு இருந்தார். ஒவ்வொரு முருகனை பார்க்கும் போதும் எனக்கு கொஞ்சம் பாவமாகவே இருக்கும். எப்படி அந்த சத்தத்தில் செல்கிறீர்கள்? என்று கேட்கத் தோன்றும். உச்சபட்ச ஒலி வரிசையில் ஒரு வரி பாடல் கூட கேட்காத வண்ணம் முற்றிலும் இரைச்சலே நிரம்பிய ஒலிக் குமிழுக்குள் செல்ல வேண்டும். இந்தியர்களுக்கு காது இருக்கிறதா என்று எனக்கு வெகு நாட்களாக சந்தேகம் உண்டு. வீடுகளில், உடற்பயிற்சி கூடங்களில், பேருந்துகளில், பயணங்களில், சாலையில், கோவில் திருவிழாக்களில், அருகில் உள்ள நண்பரின் திறன் பேசியில் என்று எங்கு பார்த்தாலும் இரைச்சல் மட்டுமே. அதை மட்டுமே விரும்பி கேட்கின்றனர். எனக்கு இந்த சத்தம் பைத்தியம் பிடிக்க வைக்கிறது. ஸ்பீக்கரை உடைக்க வேண்டும் போலும், அதை வைத்தவனை அடிக்க வேண்டும் போலும் உச்சபட்ச கோபத்தின் எல்லை வரை சென்று என்னை நானே சமாதானம் செய்து நிதானமடைவேன். அப்படி ஒரு மாபெரும் இரைச்சல் வெளியில் தான் இங்கு அத்தனை கடவுள்களும் உள்ளது.
அம்மாவிற்கு ஏற்கனவே கால் வலி உண்டு. நான் எவ்வளவு சொல்லியும் முக்கிய சாலை வந்தும் பேருந்து ஏறாமல் எங்களுடன் நடந்தே தீருவேன் என்று நடந்து வந்தது. சுமார் 15 கிமீ க்கு மேல் எங்களுடன் நடந்துவிட்டார். நாங்கள் ஓய்வெடுக்க அமரும் போதெல்லாம் ஒரு நல்ல இடம் பார்த்து படுத்து பழைய பாடல்களை கேட்டுக் கொண்டிருப்பார். அந்த முக்கிய சாலையில் இரண்டு மூன்று குழுக்களாக பிரிந்து நாங்கள் சென்று கொண்டு இருந்தோம். முதல் குழுவில் கௌதம், அர்ச்சனா, தீபிகா சென்று கொண்டு இருந்தனர். ஒரு குடிகாரர் வெகு வேகமாக வந்து அவர்கள் முன் வண்டியை நிறுத்தி எதுவுமே கேட்காமல் பாக்கெட்டில் கையை விட்டு 100 ரூபாய் எடுத்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். நாங்கள் ஏன் எதற்கு நடக்கிறோம் என்று எதுவும் தெரியாமல் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு கிளம்பி விட்டாராம்.
சென்ற நடைபயணத்திலும் பல குடிகாரர்கள் எங்களுக்கு உதவியுள்ளனர். ஆனால் என்ன ஏதென்று தெரியாமல் யாருமே உதவியதில்லை. நாங்கள் வையப்பமலை சென்று சேர்வதற்கு சுமார் 8:30 மணி ஆகிவிட்டது. அங்கு ஒரு ஹோட்டலில் சத்தியராஜும் கவியரசன் அவர்களும் நாங்கள் சாப்பிட்டுக் கொள்ளும்படி ஏற்கனவே கடையில் பணம் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். அந்தக் கடையில் சாப்பிட்டுவிட்டு அன்று இரவு தங்க வேண்டிய வெற்றி மஹாலை வந்து சேர்ந்தோம்.
மேலும்..
சிபி.
இந்த பயணத் தொடர் கட்டுரைகளின் முக்கிய அம்சம் என்பது அணுகி அணுகி சிறியவற்றை பார்ப்பது அங்கிருந்து பெரிதுக்குக்கு சென்று சேர்வது. இது ஒரு அபாரமான உத்தி. சிறிதே அழகு, நுண் அலகு அரசியல் என்கிற அரசியல் பார்வையின் இலக்கிய வடிவம் இது. குறிப்பாக அம்மாவின் விளையாட்டு. உங்களை உங்கள் அம்மா அறிந்ததை விட கூடுதலாக நீங்கள் அவரை அறிந்துள்ளீர்கள். குளிர் கண்ணாடி முருகன் அங்கிருந்து இரைச்சலில் நெரியும் தமிழகம் என சென்றது உங்களை ஒரு காலூன்றிய எழுத்தாளர் என ஆக்கி விட்டது.
ReplyDeleteதர்பூசணி தந்தவர், மது அருந்திய நல்லவர் என எதிர்கொள்ளும் ஒவ்வொரு நபரும் தனது சிறந்து பகுதியை வெளிப் படுத்துகின்றனர். அப்படி எவ்வளவு முகங்களை இன்று பார்க்க இருக்கிறோம் என ஒரு எதிர்பார்ப்பில் புன்னகைத்தேன்.
குழந்தை பிறந்தவுடன் மங்கை அன்னை என்றாகிறாள். குழந்தை வளர்ந்த உடன், தன்னுள் உறைந்துள்ள சிறுமியை எடுத்து கொள்கிறாள். உங்கள் அம்மாவை நீங்கள் ரசிப்பது மிகவும் அருமை. அந்த எழுத்துக்களில் தங்களின் உளமகிழ்வை காண முடிகிறது. ஒவ்வொரு நாளும் உங்கள் நடை பயண தொலைவுடன் சேர்ந்து உங்கள் எழுத்தும் சேர்ந்து வளர்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDelete