450 கிமீ நடைபயணம் - 7
ஜனவரி 17அன்று காலை 6:30 மணிக்கு நாங்கள் கிளம்பும் முன்னரே நண்பர் கிருஷ்ணா நாமகிரிபேட்டையில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்துவிட்டார். நேற்று பார்த்த சிபிசிஐடி SI குணா இன்று காலையும் வந்து எங்கள் இன்றைய திட்டத்தை கேட்டுத் தெரிந்து கொண்டார். அங்கிருந்து மன்னார்பாளையம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டம் நோக்கி.
ஓடற்ற நீண்ட நத்தை போல் அசையாமல் கிடக்கும் நீண்ட நேர்கோட்டுச் சாலை. அதில் நாங்கள் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தோம். நாங்கள் நடப்பதை விட மெதுவாகவே இங்கு மாற்றம் நிகழும். அந்த தருணத்தில் ஒரு மலைச்சிகரத்தில் விளக்கேற்றுவது போல் வானம் புலரத் தொடங்கிறது. ஒரு சிறு தீற்றலாக தொடங்கி வானமும் நிலமும் எல்லாமும் மெல்ல மெல்ல ஒளி பெற தொடங்கியது. எதுவுமற்ற வெளிச்சம் மெல்ல உருக்கொண்டு ஆதவன் விண்ணில் எழுந்து வருவதை நாங்கள் அசைவின்றி நின்று பார்த்துக் கொண்டு இருந்தோம். ஒவ்வொரு சூரியோதயமும் புதிது, பிரிதொன்றில்லாதது. ஆனால் எல்லாமும் ஒன்றே. எப்போதும் ஒன்றே. இன்று அப்படி என்றென்னைக்கும் இருக்கும் ஒன்றின் வேறு கோணத்தை நாங்கள் பார்த்தோம்.
மீண்டும் அதே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். மாற்றுத் திறனாளி ஒருவர் வந்து வண்டியை நிறுத்தி எங்களை மறித்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொல்லி அவர் மகளுடன் சேர்ந்து நின்று எடுத்துக் கொண்டார். இந்த பயணத்தில் இது போல் பலர் சாலையில் செல்பவர்கள் திடீரென வந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். நாங்கள் ஒரு ஊருக்குள் செல்லும் முன்னரே அங்கு சிலருக்கு எங்களை பற்றி தெரிந்துள்ளது. அருகில் இருப்பவர்களிடம் இவர்கள் 400 கிமீ நடந்து செல்கிறார்கள், ஓட்டுக்கு பணம் பெறாதீர்கள் என்று சொல்கிறார்கள் என்று பேசிக்கொள்ளும் சத்தும் கேட்கிறது. சென்ற முறை நிகழாத ஒன்று இது. இந்த நடைபயணம் முழுக்கவே மக்கள் பங்களிப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது.
நேற்று வையப்பமலையில் இருந்து நடந்து வரும் போது அனு ஒருவரிடம் பேசினாள். ஓட்டிற்கு பணம் பெறாதீர்கள் என்று சொல்லும் போது அவர் அவ்வாறு பணம் பெறாமல் தவிர்த்தால் கட்சிக் காரர்கள் தங்களை அடிப்பதாக சொன்னார். அவர் பகுதியில் இவ்வாறு தான் நடக்கிறது என்றார். சென்ற நடைபயணத்தின் போது திண்டுக்கல் மாவட்டத்தில் இதே போன்று கட்சிக்காரர்கள் மிரட்டுவதாகவும் அடிப்பதாகவும் சொல்லி இருந்தார்கள். முதலில் அதை நம்புவதே சிரமமாக இருந்தது. பல்வேறு நபர்கள் வெவ்வேறு இடங்களில் அதையே சொன்னதால் அது ஒரு மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்க வாய்ப்புள்ளது என்று எடுத்துக் கொண்டோம். ஆனால் நாமக்கல் மாவட்டத்திலும் இது போல் இருப்பது இன்னும் ஆச்சரியமாக இருந்தது.
ஆனால் சென்ற முறை போல் வேறு நபர்கள் யாரும் இது போல் சொல்லவில்லை. இவர் ஒருவர் மட்டுமே இவ்வாறு சொல்கிறார். ஆகவே இதை எந்த அளவு உண்மை என்று எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. அப்படி ஒருவர் பொய் சொல்லவும் வாய்ப்பு குறைவு என்றே நினைக்கிறோம். பல்வேறு பகுதிகளில் இந்த பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளது என்று இப்போது தோன்றுகிறது.
இன்று எம். ஜி. ஆர் பிறந்தநாள் என்பதால் பல இடங்களில் அதிமுக வினர் எம்.ஜி.ஆர் படத்தை வைத்து பிறந்தநாள் கொண்டாடி வந்தனர். அப்படி ஒரு கூட்டத்திற்கு சென்று எங்கள் பிரச்சாரத்தை சொன்னோம். ஓட்டிற்கு பணம் பெறாதீர்கள் என்பது எங்கள் பிரச்சாரம். பணம் கொடுக்காமலும் இருக்க வேண்டும் என்று அவர்களிடம் பேசினோம். அவ்வாறு உறுதிமொழி உங்களுக்கு நீங்களே எடுத்துக் கொள்ள விரும்பினால் நாங்கள் கொண்டு செல்லும் உறுதிமொழி துணியில் நீங்கள் கைரேகை வைக்கலாம் என்று சொன்னோம். அவர்கள் யாரும் கைரேகை வைக்க முன்வரவில்லை. அங்கிருந்து மெல்ல நகரும் போது சேலம் விஷ்ணுபுரம் நண்பர்கள் சிலர் வந்து குழுமிவிட்டனர்.
சோழராஜா, பிரகாஷ், பிரேமலதா, நாகநந்தினி மற்றும் அவரின் கணவர் ஆகியோர் ஒரு காரிலும், மூர்த்தி சார் இன்னொரு காரில் சிலருடனும் வந்திருந்தனர். அந்த பைப்பாஸ் சாலையின் கொஞ்சம் முன்னால் கிருஷ்ணாவிற்கு தெரிந்த ஒருவரின் தோட்ட வீட்டில் காலை உணவு சாப்பிட சென்றோம். சேலம் கோஷ்டியினர் உணவு எடுத்து வந்திருந்தனர். இந்த பயணத்தில் சேலம் நண்பர்களின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்று. எங்கள் பயணம் தொடங்குவதற்கு ஒருவாரம் முன்பே நாங்கள் நடந்து செல்லும் பாதையில் வண்டியில் சென்று பார்த்து, எங்களுக்கு தேவையான தங்குமிடங்கள், உணவு, எங்கள் முதுகுப்பைகளை கொண்டு சென்று வைப்பது என்று முன்னரே திட்டமிட்டு உள்ளனர். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பொருப்பாளர்களை அவர்களே பிரித்து நியமித்துக் கொண்டுள்ளனர். திருச்செங்கோடு, வையப்பமலை பகுதிக்கு சத்தியராஜ், நாமகிரிப்பேட்டைக்கு பிரகாஷ், அதன்பிறகு மன்னார்பாளையம் தாண்டி சிட்டிலிங் வரை மூர்த்தி சார் மற்றும் பூபாலன் என்று ஒரு தடகல ஓட்டப்பந்தையத்தில் குச்சியை மாற்றி ஓடுவது போல் எங்களை கைமாற்றி அவர்கள் எல்லையை கடத்தி விட்டனர். சென்ற முறை உமையாள் தேனப்பன் இருந்தது போல் இம்முறை அப்படி பலர் எங்கள் பயணத்தை அவர்கள் தமதாக்கிக் கொண்டார்கள்.
மெட்டல்லா என்னும் ஊர் வரை சேலம் நண்பர்கள் அனைவரும் எங்களுடன் நடந்து வந்தார்கள். பாதை மெல்ல மெல்ல உயர்ந்து மேடான பகுதிக்கு செல்வதை உணர முடிந்தது. ஒரு கட்டத்தில் 45 டிகிரி கோணத்தில் வான் நோக்கி நடந்து செல்வது போல் இருந்தது. அர்ச்சனாவிற்கு தட்டைக்கால் என்பதால் அவள் மிகவும் சிரமப்பட்டாள். என் கையை பிடித்து கிட்டத்தட்ட தொங்கிக் கொண்டு நடந்து வந்தாள்.
யாராவது சென்று முன்னால் ஏதேனும் ஒரு திட்டில் அமர்வதை பார்த்தால் தன்னுடைய முழு ஆற்றலையும் திரட்டி அதிவேகமாக சென்று அங்கு அமரச் செல்வாள். அவள் அருகில் வந்தவுடன் வேண்டுமென்றே அனைவரும் "சரி வாங்க போலாம்" என்று சொல்லி நடக்கத் தொடங்கி விடுவார்கள். இப்படியே ஒன்றிரண்டு முறை செய்தபின் அவளே கடுப்பாகி "நீங்க முன்னாடி போங்க நா உங்காண்டு வர" என்று சொல்லி அங்கு அமர்ந்து முகத்தை சோகமாக வைத்துக் கொள்வாள். பின்னர் மீண்டும் அனைவரும் வந்து அமர்ந்து கொள்வார்கள்.
மெட்டல்லா வந்ததும் காலைக்கதிர் பத்திரிகையாளர் ஒருவர் வந்து எங்களை படம்பிடித்துச் சென்றார். பின்னர் அழைபேசியில் எங்கள் விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார். பிரகாஷ் மற்றும் சோழராஜா இருவர் மட்டும் எங்களுடன் மீண்டும் நடந்து வந்தனர். நான், தீபி, பொடுசு மூவரும் பின்னால் நடந்து வந்தோம். கொஞ்ச தூரத்தில் லைலாவும் எங்களுடன் இணைந்து கொண்டாள். இன்று தீபியின் இறுதி நாள். நாளை காலை கிளம்பிவிடுவாள். இந்த ஒரு வாரத்தில் தீபியும் பொடுசும் நெருக்கமாகி விட்டார்கள். அவள் பிரிந்து செல்வதை பொடுசால் ஏற்க முடியவில்லை. அவ்வப்போது சோக நிலைக்கு சென்று மீள்வாள்.
கௌதம், சௌமி, அனு மூவரும் மதிய ஓய்விற்கு நிற்பதாகவே தெரியவில்லை. இன்று மொத்தம் நடக்க வேண்டிய தொலைவு 25 கிமீ. கிட்டத்தட்ட 18 கிமீ கடந்தும் அவர்கள் நிற்காமல் சென்று கொண்டே இருந்தனர். மணி இரண்டை நெருங்கிக் கொண்டு இருந்தது.
மங்களபுரம் சிபிசிஐடி SI, வாழப்பாடி சிபிசிஐடி SI ஆகியோர் தொடர்ச்சியாக என்னை அழைத்து பேசிக்கொண்டே இருந்தனர். ஒவ்வொரு ஊரை கடக்கும் போது சொல்ல சொன்னார்கள். மங்களபுரம் காவல் நிலையத்தில் நின்று கொஞ்ச நேரம் பேசினோம். அருகில் பாலத்தில் வரிசையாக வேட்டு வைத்து வெடித்துக் கொண்டு இருந்தது. சத்தம் காதை கிளித்துக் கொண்டு இருந்தது. ஆண்கள் குழுமி நின்று கத்திக் கொண்டு இருந்தனர். கையை உயர்த்தியும் தாழ்த்தியும் குதித்துக் கொண்டு இருந்தனர். ஒவ்வொருவரும் நகரும் போது சிறு சந்துகளின் வழியாக அவர்களுக்கு நடுவே பார்க்க முயன்று கொண்டு இருந்தேன். ஒரு வால் தெரிந்தது. இன்னொரு துள்ளலில் கொம்பு. அடுத்த துள்ளலில் திமில். அந்தத் திமில் ஜொலித்து மின்னிக் கொண்டு இருந்தது. அடுத்த துள்ளலில் ஒட்டுமொத்தமாக அனைவரும் விலகி அந்த காளையை பிடித்துக் கொண்டு பாலத்தின் மீது ஏறி மேலே வந்தனர். வெவ்வேறு திசையில் இருந்து பல்வேறு மாடுகள் அப்படி வந்து சாலையை கடந்து ஒரு காட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்டன. இப்போது ஜல்லிக்கட்டு நடக்கப் போகிறதா என்று காவல்துறையினரிடம் கேட்டோம். இங்கு மாடுகளை கயிறு கட்டி பிடித்துச் சென்று ஒரு இடத்தில் நிறுத்தி கும்பிட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார்களாம். அப்படி ஒரு வழக்கம் இருப்பதாக சொன்னார்.
பிரதான சாலையல் இருந்து திரும்பி ஒரு ஊர் சாலையில் செல்லத் தொடங்கினோம். ஏற்கனவே 18 கிமீ நடந்துவிட்டோம். மணி இரண்டரை ஆகப் போகிறது. மதிய ஓய்விற்கு ஒரு இடம் கிடைக்கவில்லை. இப்போது நானும் கௌதமும் முன்னால் சென்று கொண்டிருக்கிறோம். எங்களுடன் சோழராஜாவும், பிரகாஷும் உள்ளனர். பெண்கள் எங்களுக்கு பின்னால் ஒரு கிமீ தொலைவில் வருகிறார்கள். முன்னால் சென்று ஓய்விடம் தேடுகிறோம்.
300 மீட்டரில் பெருமாள் கோவில் வரும் அங்கு ஓய்வெடுக்க முடியும் என்று ஒவ்வொரு 300 மீட்டர் இடைவெளியில் வேட்பவர்களும் சொல்லி ஒருவழியாக ஒன்றரை கிலோமீட்டர் கடந்து அந்த கோவிலை கண்டடைந்தோம். மதிய உணவை மூர்த்தி சார் ஏற்பாடு செய்து இரண்டு நண்பர்கள் எடுத்து வந்திருந்தனர். எனக்கும் லைலா பானுவிற்கும் மட்டும் சைவம். மற்றவர்கள் அசைவம் சாப்பிட்டார்கள்.
அந்த கோவிலுக்கு நாங்கள் வந்து சேரும் போது அங்கு ஒரு இளைஞர் இருந்தார். ஏறத்தாழ என் வயது அல்லது என்னை விட சிறியவர். நாங்கள் நடந்து வருவதை சொன்னவுடன் "இதெல்லா ஒன்னியும் மாறாது. இந்த பணொ வாங்காத ஒருத்தனு ஓட்டு போட மாட்டா. நீங்க நடக்கறது தா வேஸ்ட்டு பேசாம போய்டுங்கோ. எங்க ஏரியாலலாம் பணம் கொடுக்கறதே நாந்தா. நீங்க நடந்தாலாம் ஒன்னுமே மாறாது." என்று சொன்னார்.
நான் பெருந்தலையூரில் ஆரம்பித்து சொல்லத் தொடங்கினேன். அதற்குள் அவர் கிளம்பி விட்டார். நாங்கள் மதியம் சாப்பிட்டுவிட்டு மாலை 5 கிமீ தான் நடக்க வேண்டும் என்று 5 மணிக்கு மேல் தான் நடக்கத் தொடங்கினோம். எங்களுக்கு அனுப்பிய லொக்கேஷனுக்கு வந்துவிட்டோம். அங்கு எந்த இடமும் இல்லை. எங்கு தங்கப் போகிறோம் என்றும் தெரியவில்லை. அலெக்ஸ் பிரபாகரன் என்பவர் தான் எங்களுக்கு அங்கு தங்குமிடம் ஏற்பாடு செய்தவர். நாங்கள் வரும் வழியில் பல பேர் மன்னார்பாளையம் இந்த வழியில் செல்லக் கூடாது, வேறு வழி உள்ளது, நீங்கள் வந்த வழியில் கொஞ்சம் திரும்பி செல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்லும் போது கூகுள் மேப் பார்த்து தான் செல்கிறோம் என்று அவர்களிடம் சொல்லிவிட்டு வந்தோம். இங்கு வந்தபின் அவர்கள் சொன்னது சரி என்று புரிகிறது. அலெக்ஸுக்கு மீண்டும் அழைத்தோம். அவர் இப்போது வேறொரு லொக்கேஷன் அனுப்பினார். நல்லவேளை பெரிய சுற்றாக இல்லை. வண்டியில் வந்த ஒரு பையன் எங்களுக்கு வழி காட்டுவதாக கூட்டிச் சென்று ஒரு கோவிலின் பின்புறம் ஆறு போன்ற இடத்தை காட்டி இதில் இறங்கி செல்ல வேண்டும் என்றான். "இதற்கு மேல் சுடுகாடு இருக்கிறது நானே மாலை நேரத்தில் இந்த பக்கம் வர மாட்டேன் பார்த்து செல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு சென்றான்.
அனைவரும் ஒரு கணம் பயந்துவிட்டனர். இருள் சூழ்ந்த ஒரு வரண்ட ஆறு. அதன் நடுவில் ஒரு ஒற்றையடிப்பாதை. இந்த பாதையின் இரண்டு புறங்களிலும் பாக்கு உரித்த கூடுகளின் குப்பை. அட்டை போல் ஊர்ந்து அந்த இடத்தை கடந்து ஊருக்குள் வந்தோம். மன்னார் பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தான் இன்று இரவு தங்கல். அதை கண்டுபிடித்து வந்தடைவதற்கு சற்று தாமதமாகிவிட்டது. மூர்த்தி சார் சொல்லி அவரின் சகோதரர், இன்னொரு சேலம் நண்பர் பூபாலன் உட்பட இன்னும் இருவரும் வந்திருந்தனர். இரவுணவு அவர்கள் தான் கொண்டு வந்தார்கள். இரவு 9:30 மணி வரை எங்களை பார்க்க பல பேர் வந்தார்கள். மகேஸ்வரன் என்பவர் வந்து எங்களுக்கு தமிழகம் முழுவதும் பஞ்சாயத்து அளவில் எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய இயலும் என்றார்.
வாழப்பாடி சிபிசிஐடி இருவர் வந்து நாங்கள் வந்து சேர்ந்த தகவலை குறித்துக் கொண்டு வழக்கமாக அனைவரும் கேட்கும் எங்கள் சுயவிபரங்களை மீண்டும் குறித்துக் கொண்டனர். தீபி நாளை கிளம்புவதால் இரவு 12 மணி வரை அவள் கொண்டு வந்த ஏடுகளில் கல்லூரி பாடங்களை எழுதிக் கொண்டு இருந்தாள். நானும் அவளுடன் அமர்ந்து நேற்றை அனுபவத்தை எழுதிக் கொண்டு இருந்தேன்.
மேலும்..
சிபி.
"தீபி நாளை கிளம்புவதால் இரவு 12 மணி வரை அவள் கொண்டு வந்த ஏடுகளில் கல்லூரி பாடங்களை எழுதிக் கொண்டு இருந்தாள்."
ReplyDeleteஉங்களில் பலர் கல்லூரி மாணவர்கள் என்பது நீங்கள் மேற்கொள்ளும் பெருஞ்செயலால் அவ்வப்பொழுது மரத்து விடுகிறது. இது ஒரு நல்ல ஆச்சரியம்.