450 கிமீ நடைபயணம் - 8

காலை எழுந்ததில் இருந்து அரச்சனாவும், தீபியும் சற்று முகம் வாடியே இருந்தார்கள். தீபி பிரிந்து செல்வது அர்ச்சனாவிற்கு ஏற்க முடியாததாகவும், உடல் வற்றிப்போகும் படியும் செய்திருந்தது. இருவரும் கையை இருக கோர்த்துக் கொண்டு முன்னால் சென்று கொண்டிருந்தனர். 
மீண்டும் இரவு நடந்த அதே வற்றிய ஆற்றின் வேறு புறம் வழியாக மூன்று கிமீ நடந்தவுடன் ஒரு பிரதான சாலையில் இணைந்தோம். அங்கு ஒரு கடையில் டீ குடித்துவிட்டு தீபி பூபாலன் அவர்களுடன் பிரிந்து சென்றாள். அனைவருக்கும் வருத்தம் இருந்தது. எனக்கும் இருந்தது. ஒரு உறவு மெல்ல தேய்ந்து கரையும் நிலையை உணர்ந்தேன். ஒரு வெள்ளைச் சட்டையில் பட்ட கறை என்ன ஆனாலும் விடமாட்டேன் என்ற நிலையில் இருந்து ஒருகட்டத்தில் மெல்ல அழிந்து மறைவது போல். எந்தப் பிரிவும் வலியானதும் கூடவே கடந்து செல்லக் கூடியதும் தான். 
அபாரமான புறவெளிக்காட்சி அனைத்தையும் அழகாக்கி தன்வயப்படுத்திக் கொண்டது. மரங்கள் சாலையின் மீது கவிந்து நிழல்களால் தழுவிக் கொண்டிருந்தது. இரண்டு புறமும் மரமும் அதைக் கடந்து வயலும் அதைக் கடந்து மலைக் குன்றுகளும் அதற்கும் பின்னால் சூரியோதயம் என்று அந்த காலை எந்த பிரிவையும் வலியையும் கடந்து சுகமாக்கக் கூடியது. 
அர்ச்சனா மட்டும் எதுவும் பேசாமல் மேப் பார்த்து சென்று கொண்டிருந்தாள். ஒருகட்டத்தில் ஒரு மண் பாதைக்குள் சென்றோம். அது மெல்ல குறுகி மீண்டும் விரிந்து சென்று கொண்டிருந்தது. கருவேல மரங்கள் எங்களை மெல்ல சூழத் தொடங்கியது. மேட்டில் இருந்து பள்ளத்திற்கு இறங்கினோம். ஒரு சிறு பாலைவனத்திற்குள் நுழைவது போல் இருந்தது. 


தூரத்தில் ஒரு சத்தம் கேட்டது. நடக்க நடக்க சத்தம் வலுக்கத் தொடங்கியது. யானை பிளிரல் போன்று திரும்ப திரும்ப ஒரே சத்தம். வீடு இருப்பதற்கே அடையாளம் இல்லாத இடம் போல் இருந்தது. அந்த சத்தம் என்னவாக இருக்கும் என்று ஆளுக்கொன்றை சொல்லிக் கொண்டு இருந்தோம். எதுவும் பிடிகிடைக்கவில்லை. எந்த விலங்கு போலவும் இல்லை. பறவை போலவும் இல்லை. பிடித்தறிய முடியாத ஒன்றை தெரிந்து கொள்ளாமல் இருக்கும் அவஸ்தை சத்தம் வலுக்கும் தோறும் பெருத்தது. 

மேலும் மேலும் சென்றவுடன் கருவேல மரங்கள் குறையத் தொடங்கின. அந்த சந்தின் வழியாக ஒரு சோழக்காடு தெரிந்தது. அதன் எல்லை வேலியில் ஒரு ஸ்பீக்கர் தொங்கிக் கொண்டு இருந்தது. அதிலிருந்து தான்‌ அந்த சத்தம் வந்து கொண்டிருந்தது. அங்கிருந்த பையனிடம் எதற்கு இந்த சத்தம் என்று கேட்டேன். பறவைகள் வராமல் இருப்பதற்கு என்றான். ஒரு ஐம்பது அடி நடந்தவுடன் இதுவரை நடந்துவந்த பிரதேசம் மறைந்து ஒரு ஊர் புலங்கத் தொடங்கியது. 

மத்தூர் அந்த ஊரின் பெயர். ஆற்றின் கரையிலிருந்து ஆழம் நோக்கி செல்வது போல் அனைத்து ஊர்களும் உதிரியாக சிதறிக்கிடக்கும் ஊர்களின் வழியாக நகர்ந்து அடர்த்தியாக நிறைந்த அடைந்து மீண்டும் சிதறி உதிரியாகின்றன. அந்த ஊரின் மையத்தை நாங்கள் அடையும் போது நல்லோர் வட்டத்தை சேர்ந்த பால ஐயா, பாக்கியலட்சுமி உட்பட நான்கைந்து பேர் வந்திருந்தார்கள். பூபாலன் அவர்கள் தீபியை பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டு காலை உணவு எடுத்துக் கொண்டு அந்த ஊருக்கு வந்துவிட்டார். 
அனைவரும் அந்த ஊரில் சாப்பிட்டு முடித்ததும் ஒவ்வொருவரின் குடும்ப சூழல், இங்கு வந்தது, முனை பற்றி என்று ஒவ்வொருவராக பேச சொல்லி பாக்கியலட்சுமி அவர்கள் ஒலிப்பதிவு செய்து கொண்டார். அந்த ஊரில் இருந்த இளைஞர்கள் சிலர் கைரேகை வைத்தார்கள். எங்களை பார்க்க வந்தவர்களும் வைத்தார்கள். 

அங்கிருந்து நடக்கத் தொடங்கி ஒரு 300 மீட்டர் தொலைவில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் சில வயோதிக பெண்கள் தயாராகி நின்றிருந்தனர். அவர்களிடன் நோட்டீஸ் கொடுத்து பேசி கைரேகை கேட்டோம். கொஞ்ச பேர் கைரேகை வைக்க முன்வந்தார்கள். மற்றவர்கள் அவர்களை வைக்க வேண்டாம் என்றார்கள். இறுதியில் மூன்று பேர் வைத்தார்கள். இந்த கைரேகை துணி சென்ற முறையை காட்டிலும் இம்முறை மனிதர்களின் மனசாட்சியை மேலும் நெருங்கி பார்ப்பதற்கு உதவுகிறது. சௌமியாவும் கௌதமும் சாலையில் ஒரு காந்தியவாதியை பார்த்து உள்ளனர். அவர் பல்வேறு மனுக்களை தொடர்ச்சியாக அளித்து தனி நபராக  சிலவற்றை செய்துள்ளார். 

நல்லோர் வட்டத்தினர் கொஞ்ச தூரம் எங்களுடன் நடந்து வந்துவிட்டு கிளம்பி விட்டனர். மீண்டும் ஒரு ஆள் நடமாட்டம் அற்ற ஊர்ச்சாலை வழியாக நடக்கத் தொடங்கினோம். நாங்கள் அனைவரும் ஒன்றாக இன்று தான் நடந்தோம். விளையாடிக் கொண்டு, பேசிக் கொண்டு நடந்தோம். நீண்ட நாட்களுக்குப் பின் பெரும் களிப்பில் ஆழ்ந்த நாள். இத்தனை நாள் பிரச்சாரம் செய்ய வேண்டும், வேகமாக நடக்க வேண்டும், நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்று சென்றதில் அனைவரும் தனித்தனியாக நடந்து கொண்டிருந்தோம். இன்று இந்த இணைவு இனிமையை பெருக்கியது. 
அதனாலேயே மெதுவாக நடக்கவும் செய்தோம். மதிய ஓய்விற்கு 3 மணிக்கு தான் ஒதுங்கினோம். ஒருகட்டத்தில் அனைவரும் சோர்வடையத் தொடங்கினர். அர்ச்சனா பசியில் ஆழ்ந்துவிட்டாள். அவளின் உடல் அயர்ந்து எந்த விழைவும் இன்றி தனியாக நடந்து வந்து கொண்டிருந்தது. மதிய உணவு மீண்டும் பூபாலன் சொல்லி இரண்டு பேர் கொண்டு வந்து தந்துவிட்டு எங்கள் உடைமைகளை இன்று தங்க வேண்டிய இடத்தில் கொண்டு சென்று வைத்துவிட்டனர். 
இன்று மீண்டும் உமையாள் தேனப்பன் எங்களை பார்க்க வருவதாக சொல்லியிருந்தார்கள். நாங்கள் ஓய்வெடுக்க ஒதுங்கிய கோவிலுக்கு வந்துவிட்டார்கள். சாப்பிட்டுவிட்டு அந்த கோவிலில் படுத்துக் கொண்டோம். இருவரும் மாறி மாறி எங்களுக்கு கால் மிதிப்பது கால் அழுத்துவது என்று முழுமூச்சுடன் இறங்கி விட்டனர். நாங்கள் கண்களை மூடிப் படுத்து அப்படியே தூங்கிவிட்டோம். 

4:30 மணிக்கு எழும் போது அந்த கோவில் முழுவது இளைஞர் கூடி இருந்தனர். வழுக்குமரம் ஏறுவதற்கு அந்த மரம் முழுவதும் கிரீஸ் தடவி தூக்கி நிறுத்திக் கொண்டு இருந்தார்கள். அங்கிருந்த அனைவரும் மது போதையில் திளைத்துக் கொண்டும், உளறிக் கொண்டும், கத்திக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருந்தனர். எனக்கு சிறுவயதில் இருந்து என் அப்பாவை பார்த்து புகைப்பிடிப்பவர்கள் மீதும் குடிப்பவர்கள் மீதும் ஒரு விலக்கமும் கசப்பும் வந்துவிட்டது. ஒரு குடிகார கும்பல் கத்தி மும்மாளமிட்டுக் கொண்டு இருக்கும் இடத்தில் இருப்பற்கே அசௌகரியம் ஏற்பட்டு நான் முன்னால் நடக்கத் தொடங்கிவிட்டேன். 
என்னுடைய திறன் பேசி இன்று காலை தண்ணீரில் விழுந்து இப்போது முழுவது செயலிழந்து விட்டது. தேனப்பன் வண்டியில் வந்து என்னுடைய திறன்பேசியை பழுது பார்க்க ஏதேனும் கடையில் கொடுப்பதாக சொல்லி பெற்றுச் சென்றுவிட்டார். உமையாள் எங்களுடன் நடந்து வந்தார். தேடிப் பார்த்தவரை அருகில் எந்த கடையும் இல்லை புதிய திறன் பேசி வாங்கி விடுகிறேன் எந்த மாடல் வேண்டும் என்று கேட்டு தேனப்பன் அழைத்தார். நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்காமல் வாங்கியே தீருவேன் என்பது போலத்தான் பேசினார். இறுதியில் அனுவிடம் கொடுத்து அவள் ஏதோ சொல்லி தான் வாங்காமல் வந்தார். 
நானும் அர்ச்சனாவும் ஒன்றாக நடந்து வந்து கொண்டிருந்தோம். அவள் மனதளவில் மிகவும் சோர்ந்து விட்டதாக சொன்னாள். என் கையை பற்றிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். நான் குழந்தையாக என்னுடைய அப்பாவின் சுட்டுவிரலை கை முழுவதும் சேர்த்து பிடித்து உடன் நடந்து வந்த காட்சி கண்ணில் தெரிந்தது. 
வண்டியில் முன்னால் புல்லுக்கட்டை வைத்து நின்று கொண்டிருந்த ஒருவர் எங்களை நிறுத்தி ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்று எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் தான் எங்கள் பிரச்சாரத்தை சொன்னோம். அவர் மிகவும் பூரிப்படைந்து வண்டியை விட்டு இறங்கி தன்னுடைய ஜட்டி பாக்கெட்டில் கையை விட்டு தேடி ஒரு நூறு ரூபாயை எடுத்து எங்களிடம் கொடுத்தார். நாங்கள் வேண்டாம் பரவாயில்லை என்று சொன்னோம். அவர் "இல்ல இல்ல இந்தா வெச்சுக்கோங்க. எனக்கு இன்னிக்கு உங்கள பாத்ததுல ரொம்பொ சந்தோஷம். நானு இப்படீலா எதாச்சு பண்ணணும்னு நெனப்ப. ஆனா ஆடு மாடெல்லா பாக்கோனு இதெல்லா இல்லீனா இப்போவே உங்களோட நடந்து வந்துருவ. என்னால பண்ண முடியாதத நீங்க பண்றீங்க. உங்களோட பணில என்னோட பங்குனு கொஞ்சொ இருக்கட்டு இத வெச்சுக்கங்க" என்று சொல்லி மீண்டும் அந்த பணத்தை நீட்டினார். அதை வாங்கிக் கொண்டோம். மீண்டும் எங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். 
உமையாளும் தேனப்பனும் இரவு 7 மணிக்கு மேல் தான் கிளம்பி மதுரை சென்றார்கள். நாங்கள் நீண்டு உயர்ந்து வளர்ந்த தேக்கு மர தோட்டத்தின் வழியாக தும்பல் நோக்கி நடந்து கொண்டிருந்தோம். நாங்கள் தும்பல் வந்து அடையும் போது ஒரு கிமீ முன்னால் ஸ்கூட்டியில் வந்த பெண் ஒருவர் எதிர்புற சாலையில் எங்களுடன் பேசிக் கொண்டே மெல்ல வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார். முன்னால் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் விரைவாக முறுக்கிச் சென்றுவிட்டார். 
கொஞ்ச தூரத்தில் அவர்கள் ஒரு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். நாங்கள் இருவரும் சாலையின் எதிரெதிர் புறங்களில் நின்று பேசிக் கொண்டு இருந்தோம். டீ குடிக்க வரும் படி எங்களை அழைத்தார்கள். 

"இல்லைங்க மேம் பரவால்ல பக்கமா வந்துட்டோம். தங்கற எடத்துக்கே போயிறோம்"

"அட வாங்க பா. பாலாவது குடிங்க" என்றார். 

"வாங்க வாங்க வாங்க" என்று அந்த பொடியனும் எங்களை அழைத்தான். 

அவன் அழைத்தவுடன் என்னால் மறுக்க முடியவில்லை. மற்றவர்களை பார்த்து செல்லலாம் என்றேன். 

"வருகிறோம்" என்றோம்.

"ஐ...‌ ஜாலி ஜாலி ஜாலி....." என்று அவன் குதித்தான். 

நாங்கள் சாலையை கடந்து அங்கிருந்த கடையின் முன் படிக்கட்டுகளில் அமர்ந்தோம். அந்த பொடியனின் அம்மா எங்களுக்கு டீ, காபி கொண்டு வர மேலே சென்றார். 
"ம்மா.. நா இங்கியே இருந்து இவங்கள பாத்துக்கற. இல்லீனா இவங்க கெளம்பி போய்டுவாங்க" என்று சொல்லி எங்களுடன் இருந்து கொண்டான். 

அந்த பொடியனை பார்த்து பார்த்து உளம் மகிழ்ந்து சிரித்துக் கொண்டு இருந்தேன். நான் எப்போதும் இரு எல்லைகளில் இருக்கிறேன் என்று தோன்றுகிறது. பல்வேறு செயல்களில் அவ்வாறு செயல்படுகிறேன். குழந்தைகளும் அதில் விதிவிலக்கல்ல. ஒரு காலத்தில் குழந்தைகளை பார்ப்பது, அவர்களுடன் இருப்பது, விளையாடுவது அனைத்தும் எனக்கு பிரியமான ஒன்றாக இருந்தது. எவ்வளவு வேண்டுமானாலும் விளையாட்டு காட்டிக் கொண்டு இருப்பேன். குழந்தைகளுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். அதன்பின் ஒரு கட்டத்தில் குழந்தைகள் மேல் ஒரு விலக்கம் வரத் தொடங்கியது. பெரிதும் குழந்தைகளிடம் பேசுவதோ, வைத்திருப்பதோ, விளையாடுவதோ செய்ய மாட்டேன். அடுத்தது குழந்தை எனக்கு எரிச்சலூட்டக் கூடிய ஒன்றாக உணர்ந்துள்ளேன். இப்போது மீண்டும் குழந்தை ஆர்வமூட்டக் கூடியதாக மாறுகிறது. குழந்தைகளுடன் இருக்க விரும்புகிறேன். 
ஏதேதோ பேசினான். அவன் பள்ளி பற்றி, நண்பர்கள் பற்றி, தம்பியை பற்றி என்று. நான் அவனிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தேன். எங்களுடைய கிரிக்கெட் பேட்டை எடுத்து விளையாடினான். நாங்கள் அங்கிருந்து செல்லாமல் இருக்க அதைக் கொண்டு போய் வீட்டில் வைக்க ஓடினான். ஒரு வினாடி கூட ஒரு கிடையில் இல்லாமல் அழைந்து கொண்டே இருந்தான். ஒரு பானைக்குள் போட்டு அடைத்த ஈ போல் சுற்றி சுழன்று கொண்டு இருந்தான். 

"நீங்க ஏன் நடந்து வர்றீங்க? வண்டீல வர்லாம்ல?" என்று கேட்டான்.

"ஓட்டுக்கு பணம் வாங்க கூடாதுனு சொல்லீட்டு நாங்க நடந்து வர்றோம்"

"ஏன் வாங்கக் கூடாது?"

"ஏனா அப்படி வாங்கறது தப்பு"

"அப்படியா!? அப்போ பெட்ரோல் பங்குல பணம் குடுக்கலாமா?"

"குடுக்கலாம். ஓட்டுக்கு தா காசு வாங்க கூடாது. வாங்கீட்டா நம்ம ஓட்ட விக்கற மாதிரி ஆயிடும்ல. ஓட்டெல்லாம் விக்க கூடாது"

"ஓ.. சேரி சேரி. நான்லா வாங்க மாட்டே"

அந்த பொடியனின் பெயர் யாத்விக். அவன் அம்மாவின் பெயர் பியூலா. அருகில் ஒரு பெட்ரோல் பங்க் வைத்து உள்ளார்கள். இன்று இரவுணவிற்கு அவர் தான் எங்களுக்கு 500 ரூபாய் அளித்தார்.‌ இருட்டில் நாங்கள் நடந்து வருவதை பார்த்து இப்படி ஒருவர் அழைத்து பேசி உணவளிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. யாத்விக்கிடம் "யாரு உனக்கு பிடிச்சிருக்கோ அவங்களிடம் இந்த காசை கொடு " என்று அவன் அம்மா சொன்னார். அவன் என்னிடம் கொடுத்தான். 
இன்று மொத்தம் 27 கிமீ நடந்தோம். தும்பலில் வாசவி மஹாலில் இரவு தங்கினோம். கடுமையான குளிர். இரண்டு போர்வை போர்த்தியும் குளிர் அடங்கவில்லை. குறுகிப் படுத்து தூங்கிப் போனோம். 

மேலும்... 

சிபி

Comments

  1. ஸ்பீக்கரில் ஒலித்த பறவை விரட்டும் ஒலி, திடீர் என சந்தித்து இணைந்த சிறுவன் என ஒரு பயணத்துக்கே உரித்தான வினோதத் தன்மை கொண்டுள்ளது உங்கள் நாட்கள். ஒரு புது உறவு பழைய பிரிவை ஈடுகட்டி விடுகிறது என்பது ஒரு வாழ்க்கை தரிசனம் அது சிறுவன் மூலம் விளையாட்டாக சொல்லித் தரப் படுகிறது. ரேகை பதிக்க தயங்குதல் பணம் வழங்கும் முகவரான இளைஞர், குடிகார கோயில் குழு என்பதும் ஒரு துண்டு நிதர்சனம் தான். இதைப் படிக்கும் போது நமது நடை பயணம் ஒரு வழுக்கு மரம் ஏற்றம் போலத்தான் என எண்ணினேன், இதுவரை பிடி தளரவில்லை.

    கடைசி நபர் வந்து ஓய்ந்து அமர முற்படும் போது கிளம்பி செல்லுதல் எனும் குழு விளையாட்டு எங்கள் குழுவிலும் உண்டு. இந்த வேடிக்கைகள் தான் பயணங்களை இனிதாக ஆக்குகிறது. மலை மேல் விளக்காக சூரியோதயம் சாலையில் முயங்கும் நிழல்கள் என விவரிப்பும் சிறப்பு. குழந்தைகளுடன் விளையாடும் இயல்பு என்பது உங்கள் அக நிலை சீசா விளையாட்டு போல ஏறி இறங்குவது இதை அடையாளம் காண்பது இவ்வாறு முழுவதும் நம்முடன் நாம் என பொழுதுகள் அமைந்தால் மட்டுமே சாத்தியம். இந்த பகுதிகள் தான் இந்த கட்டுரைகளை ஆவணப் படுத்துதல் என்பதில் இருந்து படைத்தல் என உயர்த்துகிறது. அடுத்து என்ன நிகழ்கிறது என்கிற எதிர்பார்ப்புக்கு இணையாகவே அதை எப்படி எழுதப் போகிறீர்கள் என்கிற எதிர்பார்ப்பு போட்டியிடுகிறது.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

450 கிமீ நடைபயணம் - 2

450 கிமீ நடைபயணம் - 1

450 கிமீ நடைபயணம் - 6