450 கிமீ நடைபயணம் - 9

கடும் குளிர். காலை எழுவதற்கு மிகுந்த சிரமத்துடன் ஒருவழியாக எழுந்தோம். வனத்திற்கு அருகில் இருப்பதால் இந்த குளிர் இருக்கலாம். எழுந்து தயாராகி சிட்டிலிங் நோக்கி நடக்கத் தொடங்கினோம். இன்று மதிய உணவும் ஓய்வும் இல்லை என்பதால் காலை தும்பலில் சாப்பிட்டுவிட்டு தேவையான திண்பண்டங்களை எடுத்துக் கொண்டு நடந்தோம். வனத்தை விரைவாக கடக்க வேண்டும் என்று தும்பலில் குறைவாகவே பிரச்சாரம் செய்தோம். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட இங்கு ஆதரவு அதிகமாகவே இருந்தது. மலை அருகில் உள்ள கிராமம் என்பதால் இங்கு வாக்குக்கு பணம் பெற கூடாது என்று சொன்னால் எதிர்ப்பு அதிகமாக இருக்கும் என்று நினைத்தேன். 

கொஞ்ச நேரத்தில் வனப்பகுதிக்குள் நுழைந்து விட்டோம். இரண்டு புறமும் மரங்கள். இரண்டு எல்லைகளிலும் மலைகள். விட்டு விட்டு கிடக்கும் நிழல்களின் ஊடாக நடந்து சென்றோம். சாலை ஓரங்களில் இருக்கும் வரண்ட சேற்று மண்களில் காட்டெருமைகளின் குளம்படி அச்சுகள் இருந்தன. அதைக்காட்டி அர்ச்சனாவையும் லைலா பானுவையும் பயமுறுத்திக் கொண்டு நடந்து சென்றோம். 

குடை போல் மூங்கில் சூழ்ந்து நின்று கொண்டிருந்தது. ஒரு பிரிவின் அருகில் ஒரு நிழற்குடை இந்த குடையின் நிழலில் உள்ளடங்கி இருந்தது. அங்கு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தோம். எங்கள் உடைமைகளை இன்றும் பூபாலன் சார் சொல்லி வழக்கமான இரண்டு பேர் தும்பலில் இருந்து சிட்டிலிங் எடுத்து வந்து வைத்துவிட்டனர். 

வனத்தின் ஊடாக நடப்பது ஒரே சமயம் பெரும் பரவசத்தையும் சிறு எச்சரிக்கை உணர்வையும் அளித்தது. பல்வேறு வழித்தடங்கள் மாலையுடன் வந்து இணைந்தன. ஏதேனும் ஒன்றில் பிரிந்து உள்ளே சென்றால் எண்ணற்ற மரங்களின் வெளிக்குள் நுழைந்து நீந்தி வெளிவரலாம். அல்லது வழித்தவறி அதன் ஒரு அங்கமாக மாறிவிடலாம். மதியம் இரண்டு மணி வாக்கில் ஒரு சிற்றூரை வந்தடைந்தோம். அங்கு சில மக்களிடம் நோட்டீஸ் கொடுத்து பேசினோம். அப்போது ஒரு பாட்டி எங்களிடம் வந்து "இந்த காலு ரொப்போ வலிக்குது எதுனா மருந்திருந்தா கொடு" என்று வந்து கேட்டார். வெள்ளை உடை அணிந்திருப்பதை பார்த்து நாங்கள் ஏதோ வைத்தியம் பார்ப்பவர்கள் என்று நினைத்துக் கொண்டார். நாங்கள் எவ்வளவு சொல்லியும் இறுதி வரை எதாவது ஒரு மருந்து கொடுத்துவிட்டு செல்லும் படி தான் சொல்லிக் கொண்டே இருந்தார். 

வேலனூர் என்கிற கிராமத்தில் கபடிப் போட்டி நடந்து கொண்டு இருந்தது. ஒரு ஐம்பது பேர் அங்கு கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். நாங்களும் கொஞ்ச நேரம் அங்கு இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு வந்தோம். மாலை 4 மணிக்கே சிட்டிலிங் வந்து சேர்ந்துவிட்டோம். சிட்டிலிங் பழங்குடி மருத்துவமனையின் கிளை அமைப்பான வானவில், பொற்கை, SOFA ஆகியவை செயல்படக்கூடிய ஒரு இடத்தில் தான் நாங்கள் இன்று இரவு தங்கவுள்ளோம். பெரிய இடத்தில் நல்ல தங்குமிட வசதியுடன் இருந்தது. கட்டிடங்கள் மாற்று வடிவமைப்புடன் மிக நேர்த்தியாக அழகாக கட்டப்பட்டு இருந்தன. எங்களுக்கான மதிய உணவு ஒன்றரை கிமீ தொலைவில் உள்ள சிட்டிலிங் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்தது. 

இந்த பழங்குடி மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவரான லலிதா இங்கு தான் உள்ளார் என்று தெரிந்து அவர் இருக்கும் இடத்திற்கு சென்றோம். அங்கு அவர் ஏதோ குனிந்து பணி செய்து கொண்டு இருந்தார். நாங்கள் சென்று அவர் முன் நிற்கும் போது எங்களை ஒருவித "யார் நீங்கள்?" என்று வினவும் பார்வையுடன் பார்த்தார். நாங்கள் எங்களை பற்றியும் முனை அமைப்பு, இந்த நடைபயணம் ஆகியவற்றை பற்றியும்ஒ சொன்னோம். அவர் உடனடியாக ஆச்சரியத்துடன் எங்களை பார்த்தார். எங்களை பற்றியோ, நாங்கள் இங்கு வருவது குறித்தோ அவருக்கு எதுவும் தெரியாது. ரமேஷ் என்பவர் தான் எங்கள் மின்னஞ்சலை பார்த்து பதிலளித்து இருந்தார். 

உடனடியாக அங்கு இருப்பவர்களை எல்லாம் கூட்டி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து எங்களை பற்றியும் இந்த நடைபயணம் குறித்தும் பேச சொன்னார். நான் ஒரு 5 நிமி மொத்தமாக தொகுத்து சொன்னேன். மற்ற நண்பர்களும் கொஞ்சம் பேசினார்கள். அதன் பின் அங்கு இருந்தவர்கள் அனைவரும் உறுதிமொழி துணியில் கைரேகை வைத்தார்கள். லலிதாவும் வைத்தார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் அங்கு இருந்தார். அவரிடம் லலிதா ஹிந்தியில் இந்த பிரச்சாரம் குறித்து விளக்கினார். அந்த நபர் அங்கெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வழக்கமே இல்லை என்றார். 

எல்லாம் பேசி முடித்து கிளம்பும் போது நான் மீண்டும் லலிதாவிடம் சென்று "எங்களை பற்றி மட்டுமே சொன்னோம் உங்களை பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் இன்று ஒரு மணி நேரம் உங்களுடன் பேச இயலுமா? " என்று கேட்டோம். நீங்கள் சென்று சாப்பிட தொடங்குங்கள் நான் பின்னால் வருகிறேன் என்று சொல்லி அனுப்பினார். நாங்கள் சாப்பிட தொடங்கியவுடன் வந்துவிட்டார். நான் பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டுக் கொண்டு இருந்தேன். 

கே: நீங்கள் இந்த குறிப்பிட்ட கிராமத்தை தேர்ந்தெடுத்து வந்து பணியாற்ற வேண்டும் என்று ஏன் முடிவெடுத்தீர்கள்? 

ப: நானும் ரெஜியும் கேரளாவில் ஒன்றாக படித்தோம். வசதி குறைவான இடத்தில் சென்று பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒருமுறை எங்களுக்கு ஒரு ஃபெல்லோஷிப் மூலம் ஒரு பயணத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தியா முழுக்க சென்று வருவதற்கான வாய்ப்பு. எங்களுடைய மூத்த மகனுக்கு ஒரு வயது என்பதால் என்னால் முழுவதும் செல்ல இயலவில்லை. ரெஜி தான் தனியாக முழு பயணமும் மேற்கொண்டார். அந்த பயணத்தில் நாங்கள் அறிந்தது பழங்குடி கிராமங்கள் எப்போதும் ஏதேனும் ஒரு எல்லையில் தான் உள்ளது. அதனால் அங்கு எந்த வசதிகளும் சென்று சேர்வதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடி கிராமங்கள் மாநில எல்லைகளில் அமைந்துள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ளவையும் அவ்வாறு மாவட்ட எல்லைகளில் உள்ளது. இப்போது இந்த சிட்டிங்கி கிராமம் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் எல்லைகளில் தான் அமைந்துள்ளது. 

எங்கள் படிப்பு முடிந்து காந்தி கிராமத்தில் உள்ள கஸ்தூர்பா ஆசிரமம் என்று கொஞ்ச நாள் பணியாற்றி உள்ளோம். அப்போது இருந்தே மருத்துவர் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று உணர்ந்திருந்தோம். மேலும் தமிழும் தமிழ்நாடும் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்ததால் இங்கு ஏதேனும் ஒரு ஊரில் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினோம். 1991 இல் இந்த இந்திய பயணம் சென்றோம். அதன் பிறகு மூன்று கிராமங்களின் பட்டியலில் இருந்து இந்த கிராமத்தை இறுதியாக தேர்வு செய்து 1993 இல் இங்கு வந்து பணி செய்ய தொடங்கினோம். 
கே: இதை தொடங்கும் போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? குடும்ப நெருக்கடி, பண நெருக்கடி, சமூக நெருக்கடி என்று ஏதேனும் எதிர் கொண்டீர்களா? 

ப: குடும்பத்தில் முதலில் புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டார்கள். எங்களுக்கும் அதை பற்றி பெரிய கவலை இருந்ததில்லை. பண நெருக்கடி அவ்வப்போது வருவது உண்டு. இங்கு பணியை தொடங்கும் போது எங்கள் சேமிப்பில் இருந்து எடுத்து தான் தொடங்கினோம். ஆனால் நாம் நேர்மையாக சரியான ஒன்றை செய்தால் அதற்கு எங்கிருந்தாவது பணம் வந்துவிடும். எங்களுக்கு வருடம் 50 ரூபாய் அளிப்பவர்களும் உண்டு மாதம் 10,000 அனுப்புபவர்களும் உண்டு. ஆகவே அது சமாளிக்கக் கூடிய நெருக்கடி தான். மக்களிடமிருந்தோ, கலாச்சார நெருக்கடியோ எங்களுக்கு எதுவும் இருந்தது இல்லை. 
கே: இப்போது வானவில், பொற்கை, SOFA என்று இங்குள்ள மக்கள் மற்றும் விவசாயிகளுடன் மருத்துவம் அல்லாமல் வேறு செயல்களிலும் ஈடுபடுகிறீர்கள். இங்கு முதன் முதலில் 1993 இல் சிறிய அளவில் குடிசை போல் மருத்துவமனை கட்டும் போதே இது போன்று திட்டங்கள் இருந்தனவா? ஒரு கிராமத்தையே மாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது? 

ப: உண்மையில் நாங்கள் கிராமத்தை எல்லாம் மாற்றவில்லை அதை முதலில் சொல்லி விடுகிறேன். கைவினை பொருட்கள் செய்வது துணி தைப்பது அவற்றை சந்தைப்படுத்துவது என்று இப்போது நீங்கள் சொன்ன அனைத்திலும் நான் ஈடுபட்டாலும் நான் என்னை மருத்துவராக மட்டுமே உணர்கிறேன். மருத்துவம் என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையையே குறிக்கிறது. வெளியில் மற்ற மருத்துவர்களுக்கு இது ஒரு தொழில். எவ்வளவிற்கு எவ்வளவு நோய் அதிகமாகிறதோ அவ்வளவு லாபம் அவர்களுக்கு. 

ஆனால் நாங்கள் முன்வைப்பது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை தான். இவை அனைத்தும் அதன் நீட்சியே. SOFA என்பது Sittingi organic farmers association. இதில் இப்போது 700 விவசாயிகள் இருக்கறார்கள். அனைவரும் தேவையான அளவு உற்பத்தி செய்கிறார்கள். தங்களுக்குள்ளும் வாங்கி விற்றுக் கோள்கிறார்கள். இதன் மூலம் இங்குள்ள மக்களுக்கு ஒரு வாழ்வாதாரம் அமைகிறது. வெளியூரில் தொழிலிற்காக குடும்பத்தை விட்டுச் சென்று பணி செய்பவர்கள் தங்கள் ஊரிலேயே இருக்க இது வழிவகை செய்கிறது. பொற்கை என்றால் லம்பாடி மொழியில் பெருமை என்று அர்த்தம். இதில் உள்ள பெண்கள் ஆடை நைவது, கைவினை பொருட்கள் போன்றவற்றை செய்து அதற்கான நியாயமான விலையில் விற்கிறார்கள். நாங்கள் இங்கு முன்வைப்பது உயர்ந்த வாழ்க்கை தரத்தை. ஆகவே நான் அது தொடர்பாக எதை செய்தாலும் அது மருத்துவம் என்றே உணர்கிறேன். இது அனைத்தும் தொடங்கும் போது தெளிவான திட்டமெல்லாம் பெரியதாக இல்லை. ஆனால் இந்த உணர்வு நிலையை அடைந்திருந்தோம். 

இவ்வாறு தொடர்ந்து இன்னும் பல்வேறு கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு கேள்விக்கும் விரிவான தெளிந்த பதில்கள் அளித்தார். நாம் கேட்கும் கேள்விக்கு நேரடியான திட்டவட்டமான பதிலை அளிப்பவரை சந்திப்பதே அரிது. இந்த அம்சம் மட்டுமே ஒருவரை முக்கியமான ஆளுமையாக நாம் உணர போதுமான ஒன்று. 

இறுதியாக அவர்கள் பங்கேற்ற தேர்தல் அனுபவத்தை பற்றி சொன்னார். 2019 பஞ்சாயத்து தேர்தலில் பொற்கையில் பணி செய்யும் மகேஷ்வரி மஞ்சுநாத் என்பவரை இவர்கள் ஒரு வேட்பாளராக நிறுத்தியுள்ளார்கள். இது பெண்களுக்கான ஒதுக்கீடு கொண்ட பஞ்சாயத்து. கணவர் பின்னால் இருந்து இயக்காத நேர்மையான செயல்படக்கூடிய ஒருவரை நிறுத்த வேண்டும் என்று இவரை முன்னுறுத்தி உள்ளனர். மகேஷ்வரி ஒரு வேட்பாளராக பதிவு செய்தவுடன் வழக்கமாக 3 பேர் மட்டுமே போட்டியிடும் பஞ்சாயத்தில் 9 பேர்கள் வேட்பாளராக நிறுத்தி உள்ளார்கள். பினாமிகளாக, சாதி ரீதியாக ஓட்டை பிரிக்கும் விதமாக ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வேட்பாளர் என்று வெவ்வேறு வேட்பாளர்கள். 

இவர்கள் தரப்பிற்கு அங்குள்ள விவசாயிகள் பொதுமக்களே தங்கள் வேலைகளை விட்டு சொந்த செலவில் வந்து மற்ற மக்களிடம் பிரச்சாரம் செய்துள்ளனர். எழுபது கிலோமீட்டர் தொலைவில் இதே பஞ்சாயத்தை சேர்ந்த ஒரு கிராமம் உள்ளது. அது அனைத்து புறங்களிலும் வனம் சூழ்ந்து ஒரு மேட்டில் நடந்து மட்டுமே செல்லக் கூடிய வழியில் அமைந்துள்ளது. அங்கு இவர்கள் பிரச்சாரம் செய்ய செல்லும் போது அந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கிராமத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஓட்டு கேட்பதற்காக மட்டுமே வருகிறார்கள் அதன் பின் யாரும் எதற்காகவும் இங்கு வருவதில்லை. மின்சாரம் உட்பட எந்த வசதியும் இல்லை. எங்களுக்கு ஏதேனும் அளிக்க வந்தால் கொடுத்துவிட்டு செல்லுங்கள் ஓட்டு கேட்டு யாரும் உள்ளே வர அனுமதிக்க மாட்டோம் என்று இவர்களை திருப்பி அனுப்பி உள்ளனர். 


வேட்பாளர் தாக்கல் செய்வதற்கு செல்லும் போது ஒவ்வொரு பெண் வேட்பாளரை சுற்றிலும் ஆண்கள் பத்து பேர் இருந்துள்ளனர். அந்த வேட்பாளர் மட்டுமே ஒரே பெண்ணாக நின்றுள்ளனர். ஆனால் இவர்கள் முன்னிருத்தும் வேட்பாளருடன் இரண்டு பஸ் நிறைய பெண்கள் வந்து உடன் நின்றுள்ளனர். மற்றவர்கள் சாதி ரீதியாகவும் பணம் கொடுத்தும் பிரச்சாரம் செய்தும் கூட இவர்கள் நேர்மையாக மக்கள் நம்பிக்கையை பெற்று மக்கள் மூலமாகவே பிரச்சாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்று உள்ளனர். வெற்றி பெற்ற உடன் உள்ளே அனுமதிக்காத அதே கிராமத்திற்கு சென்று பணிசெய்து உள்ளனர். 

மக்களை திரட்டுவது எவ்வளவு கடினம் என்பதை அனுவப ரீதியாக நாங்கள் உணர்ந்து உள்ளோம். இவர்கள் செய்தது பெரும் செயல். மருத்துவர்கள் அசலான முன்மாதிரிகளாக சமூகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக செயலாற்றினால் என்ன செய்ய சாத்தியமாகும் என்பதை கண்கூடாக பார்த்தோம். ஒரு குடிசை மெல்ல வளர்ந்து பிரம்மாண்டமாக உருப்பெறுவதை கண் முன் உணர்ந்தேன். மீண்டும் ஒருமுறை இங்கு வந்து இவர்களிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். 

மேலும்..

சிபி.

Comments

  1. ஒவ்வொரு நாளும் நீங்கள் சந்திக்கும் ஆளுமைகள் இந்த நிலத்தின் ஒரு குறுக்குவெட்டு தோற்றமாகவே கொள்ளத்தக்க நிரை.

    மருந்து வேண்டும் என்ற ஒற்றை சிந்தையுடன் இருக்கும் பாட்டி ஒருவகையில் இந்த சமூகத்தை பிரதிபலிக்கிறார்.

    மற்றொருபக்கம் உயர்ந்த வாழ்க்கத்தரம் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்றால் அதற்காக நாம் செய்யும் அனைத்துமே மருத்துவம்தான் என்ற தரிசனத்தை உள்ளுணர்ந்த மருத்துவர் அந்த பாட்டிக்கு பதிலீடாக நிற்கிறார்.

    மருத்துவம் நுணுகி நுணுகி செல்லும் காலகட்டத்தில் மிக உயரத்தில் நின்று பார்த்தால் மட்டுமே கிடைக்கும் ஒரு உண்மையை அவர் சென்று தொட்டிருக்கிறார். விவசாயிக்கான ஆரோக்கியத்துக்கு மருந்துச்சீட்டில் நல்ல ஒரு சந்தை என எழுதுவதற்கு அவர்கள் தயங்கவில்லை. இந்த பேட்டி அபாரமானது.

    ReplyDelete
  2. உங்களின் இந்த பயணம் பலவித மனிதர்களை உங்களுக்கு அறிமுக படுத்தியுள்ளது. எந்த ஒரு சூழலிலும் நம்மால் செயல்புரிய முடியும் என்பதற்கு உதாரணமானவர்களை சந்திக்க பெற்றுள்ளீர்கள்.செயல் மட்டுமே தேவை. இது போன்ற மனிதர்களும் சமூகத்திலிருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். இவர்களின் அறிமுகம் உங்களுடன் சேர்ந்து எங்களுக்கும் கிடைக்கப்பெற்றது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

450 கிமீ நடைபயணம் - 2

450 கிமீ நடைபயணம் - 1

450 கிமீ நடைபயணம் - 6