450 கிமீ நடைபயணம் - 10 (B)

 

“உங்கள் எல்லையை தாண்டி நாங்கள் தங்குவதற்கு ஏதேனும் ஊரோ, இடமோ உள்ளதா?” என்று அவரிடமே கேட்டோம். குபேரமங்களம் என்னும் ஒரு ஊரை சொன்னார். அது இப்போது நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து இன்னும் 18 கிமீ தொலைவில் உள்ளது. ஏற்கனவே 11 கிமீ நடந்து விட்டோம். இன்று மெதுவாக நடந்ததால் இப்போதே மணி மாலை 3:30 ஆகி விட்டது. நாங்கள் திட்டமிட்டு உள்ள நரிப்பள்ளி இங்கிருந்து 8 கிமீ தான் இருக்கும். திடீரென 10 கிமீ கூடுதலாக நடப்பது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத ஒன்று. மீண்டும் அவரிடம் இவற்றை எல்லாம் சொன்னேன். பெண்களை வைத்துக் கொண்டு கூடுதலாக 10 கிமீ இந்த நேரத்திற்கு மேல் காட்டு வழியில் நடப்பது தான் சிரமம், ஆபத்து. நரிப்பள்ளியில் ஒரு பஞ்சாயத்து அலுவலகத்தில் தான் தங்கப் போகிறோம் என்று சொல்லி பார்த்தேன். மேலதிகாரி உத்தரவு.  என்ன ஆனாலும் நீங்கள் இந்த எல்லைக்குள் தங்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். உடனடியாக நடக்கக் தொடங்குங்கள் என்றார்.

தர்மபுரியில் இருந்து வந்த வெங்கடாசலம் நரிப்பள்ளியில் நாங்கள்  தங்குவதற்கு பஞ்சாயத்து அலுவலகத்தை ஏற்பாடு செய்து விட்டு எங்களுக்கு மதிய உணவும் வாங்கிக் கொண்டு கோட்டப்பட்டி வந்தார். யாரோ ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்குவதை பார்த்தவுடன் எங்கள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி. எப்படி எங்கள் முதுகுப் பைகளை எடுத்து வரப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு, இவருடன் வண்டியில் சென்று பேருந்தில் எடுத்து வரப் போவதாக சொன்னார். கேட்பதற்கே எனக்கு மலைப்பாக இருந்தது. அந்த பைகளை எல்லாம் ஒற்றை ஆளாக தூக்கி வந்து பேருந்தில் ஏற்றி மீண்டும் அவற்றை இறக்கி இன்று தங்கவிருக்கும் இடத்திற்கு எடுத்து சென்று வைப்பது என்பதை யோசிப்பதே சாத்தியமற்ற காரியமாக தோன்றியது. ஆனால் அவர் கிளம்பி சென்றுவிட்டார். நாங்கள் அவர் கொண்டு வந்த உணவை ஒரு கடையில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருந்தோம்.

சரி நடந்து கொண்டே யோசிப்போம் என்று நடக்கத் தொடங்கினோம். ஆனந்த குமார் சார், வைசிகா ஆகியோர் எங்களிடம் விடைபெற்று கிளம்பி விட்டனர். மீண்டும் நாங்கள் நடந்து செல்லும் வழியில் சிங்காரவேலன் என்று இன்னொரு சிறப்பு பிரிவு SI வந்து எங்களை சந்தித்தார். வழக்கமாக அனைவரும் வாங்கும் அதே தகவலை வாங்கிக் கொண்டார். அவரும் நரிப்பள்ளியில் எங்களை தங்க வேண்டாம் என்று தான் சொன்னார். “தனிப்பட்ட முறையில் உங்கள் நடைபயணம், பிரச்சாரம் ஆகியவற்றை நான் ஆதரிக்கிறேன். ஆனால் ஒரு அரசு அதிகாரியாக எனக்கு மேலிருந்து வரும் உத்தரவை நான் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. என்ன ஆனாலும் நீங்கள் நரிப்பள்ளியில் தங்க வேண்டாம் அடுத்த ஊருக்கு சென்று விடுங்கள்”  என்றார்.

அவரிடமும் எங்களுக்கு ஒரு தங்குமிடம் ஏற்பாடு செய்து தர சொல்லி கேட்டோம். அவர் மணி என்பவருக்கு அழைத்து தெத்தேரி என்கிற ஊரில் உள்ள கோவிலில் கழிவறை வசதி இருக்கிறதா என்று கேட்டுவிட்டு எனக்கு அவரின் அழைப்பு என்னை கொடுத்து மணியிடம் பேசி அங்கு தங்கிக் கொள்ள சொன்னார். நடக்க ஆரம்பித்து அந்த மணி என்பவருக்கு அழைத்து பேசினால் “கழிவறை இருக்கிறதா என்று கேட்டார், இருக்கிறது என்று சொன்னேன். தங்குவது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. நான் அந்த ஊர் அல்ல. அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அங்குள்ளவர்களிடம் என்னால் பேச இயலாது” என்று சொல்லி விட்டார். அந்த SI க்கு அழைத்து கேட்டதற்கு ஆம் அவருக்கு அதெல்லாம் தெரியாது. அந்த கோவிலுக்கு வழி காட்ட தெரியும். அங்கு போய் நீங்கள் பேசிக் கொள்ள வேண்டும் என்றார். தெத்தேரி என்கிற ஊரே நரிப்பள்ளியில் இருந்து 5 கிமீ வரும்.  கூகிள் மேப்பில் பார்க்கும் போது ஒரு பக்கம் காடு இன்னொரு பக்கம் வெட்டவெளியாக இருந்தது. பெண்களை அந்த வழியில் இருட்டிய பின் அழைத்து செல்வது சரியாக வரும் என்று எனக்கு படவில்லை. மேலும் அந்த கோவிலில் தங்க முடியுமா என்றும் தெரியவில்லை. அதை விட்டால் வேறு தங்குமிடம் கிடைக்கவும் வாய்ப்பு இல்லாதது போல் தெரிந்தது.

பல்வேறு யோசனைகள் வந்து கொண்டு இருந்தது. நரிப்பாளி வரை நடந்து சென்று அங்கிருந்து வண்டியில் சென்று ஏதேனும் ஒரு இடத்தில் தங்கி விட்டு அடுத்த நாள் அதே போல் இங்கு வந்து நடக்கத் தொடங்கிவிடலாம் என்று சிலர் சொன்னார்கள். நான் அதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் என்று வேறு யோசித்துக் கொண்டு வந்தேன். நாங்கள் செல்லும் காட்டு வழியில் இரண்டு நாட்களாக சரியாக டவர் கிடைக்கவில்லை. யாருக்கு அழைத்து பேசுவது என்றாலும் அங்கு மிகவும் சிரமமாக இருந்தது. அனு இணையத்தில் தேடி தர்மபுரி மாவட்ட DSP எண்ணிற்கு அழைத்து பேச முயன்று கொண்டு இருந்தாள்.  நான் குக்கூ சிவராஜ் அண்ணாவிடம் பேசினேன். அவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் ஸ்டாலின் அண்ணா மூலம் எங்களுக்கு உதவ முயன்று கொண்டு இருந்தார். ஸ்டாலின் அண்ணா திருவண்ணமாலை ADSP இடம் பேசினார். அவராலும் உடனடியாக எங்களுக்கு உதவ முடியவில்லை. அனு பேசியதும் சரி வரவில்லை.


இரண்டே வழி தான் என் கண்முன் தெரிந்தது. ஒன்று சாத்தியமான வரை வேகமாக நடந்து எப்படியாவது தெத்தேரி போய் விடுவது. அல்லது மெதுவாக நடந்து வேண்டுமென்றே நரிபள்ளி செல்ல தாமதப்படுத்தி இருட்டிய பின் பெண்களுடன் காட்டுப் பகுதியில் நடப்பது சிரமம் இங்கேயே தங்கிக் கொள்கிறோம் என்று பேசி காவல்துறையிடம் அனுமதி பெறுவது. இரண்டாவது திட்டம் தான் நடைமுறையில் சாத்தியம் என்பதை அறிந்து அவ்வாறே செய்தோம். வெங்கடாசலம் எங்கள் முதுகுப் பைகளை பேருந்தில் சென்று எடுத்து வந்து நரிப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து விட்டு வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். காலையில் இருந்து அவர் சாப்பிடவில்லை என்று எங்களுக்கு அப்போது தான் தெரிந்தது. இடையில் மீண்டும் ஒரு முறை சிங்காரவேலன் SI அவர்களிடம் பேசிப் பார்த்தேன். அவர் என்ன ஆனாலும் இந்த இடத்தைத் தாண்டி நடந்து சென்று விடுங்கள். இங்கு இருந்தால் ராத்திரி எத்தனை மணி ஆனாலும் வந்து தொந்தரவு செய்வார்கள். இங்கு தங்க விட மாட்டார்கள் என்று சொன்னார். நாங்கள் நரிப்பள்ளியை அடைவதற்கே இரவு 7:30 மணி ஆகிவிட்டது. அங்கேயே சாப்பிட்டு செல்லலாம் என்று ஒரு கடையில் சாப்பிட்டோம். மீண்டும் அனு இணையத்தில் எடுத்த எண்ணிற்கு அழைத்து பேசி நிலைமையை சொன்னாள். அவர்கள் அவள் சொன்னதை கேட்டுவிட்டு ஒரு எண் கொடுத்தார்கள். அவருக்கு அழைத்து பேசினால் அவர் பார்த்துக் கொள்வார், எங்களுக்கு உதவுவார் என்று சொன்னார்கள். அந்த என்னை வாங்கி பார்த்தால் அது ஏற்கனவே நாங்கள் பேசிய சிங்காரவேலன் அவர்களுடைய அழைப்பு எண் தான்.

மீண்டும் அவருக்கு அழைத்து இங்கேயே மிகவும் தாமதம் ஆகிவிட்டது இப்போது இந்த காட்டு வழியில் நடந்து செல்வது சாத்தியமே இல்லை. நாங்கள் இங்கேயே தங்கிக் கொள்கிறோம். அரசு அலுவலகத்தில் தங்கக் கூடாது என்றால் ஏதேனும் ஹோட்டலிலோ அல்லது பொது மக்கள் வீட்டிலோ தங்கிக் கொள்கிறோம் என்று சொன்னேன். அவர் இம்முறை சரி தங்கிக் கொள்ளுங்கள் ஆனால் தங்குமிடத்தின் தகவல், புகைப்படம் வேண்டும் என்றார். சரி அனுப்புகிறோம் என்று சொல்லி வைத்தவுடன் அனைவருக்கும் பெரு மகிழ்வில் திளைத்தார்கள். அதன் பின்னர் தான் நன்றாக சாப்பிடவே தொடங்கினார்கள். நாங்கள் அங்கு சாப்பிட்டு முடித்து தங்குமிடம் தேடுவதற்காக விசாரிக்க கிளம்பும் போது சரியாக அந்த கடை வாசல் முன் இரண்டு காவல் வாகனம் வந்து நின்றது. ஒரு பெண் இன்ஸ்பெக்டர், சிங்காரவேலன் SI உட்பட  7 காவல் அதிகாரிகள் வந்து இறங்கினார்கள்.

மீண்டும் வழக்கமான அதே தகவல்களை கேட்டு குறித்துக் கொண்டனர். மீண்டும் எங்களை இங்கு தங்கக் கூடாது என்று சொன்னார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் எங்களை திட்டவோ இந்த பிரச்சாரத்தை செய்யக் கூடாது என்று தடுக்கவோ இல்லை. அதனால் எங்களாலும் குரலை உயர்த்தி பேச முடியவில்லை. மிகவும் கனிவாக எங்கள் நல்லதிற்காக சொல்வது போன்றே சொன்னார்கள். அதில் அனைவரும் பேசும் போது அமைதியாக நின்ற கான்ஸ்டபிள் ஒருவர், மற்றவர்கள் கொஞ்சம் நகர்ந்தவுடன் வந்து எங்களிடம் கொஞ்சம் ஒருமையில் பேசத் தொடங்கினார். பெண்களில் யாரேனும் ஒருவரின் பெற்றோருக்கு அதுவும் குறிப்பாக அப்பாவிற்கு அழைத்துத் தரும்படி கேட்டார். அனு தன்னுடைய அப்பாவிற்கு அழைத்து நீட்டியவுடன் வாங்காமல் தவிர்த்து விட்டார். என்னிடம் வந்து உனக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் இது போல் நடைபயணம் அனுப்புவாயா என்று கேட்டார். கண்டிப்பாக அனுப்புவேன் என்று அவர் முகத்தின் முன் சொன்னேன். அவர் சிரித்து விட்டு சும்மா சொல்றது தான என்றார்.

தானிப்பாடியில் நாங்கள் நாளை தங்கவிருக்கும் இடத்திற்கு அழைத்து பேசி அங்கு இன்றே சென்று தங்கும் படி சொன்னார்கள். எங்களை பேருந்து ஏற்றி விடுவதாக சொன்னார்கள். DSP இடம் ஒருமுறை எங்களுக்காக பேசிப் பார்க்கும் படி சொன்னோம். மூன்று முறை ஏற்கனவே பேசிவிட்டதாக சொன்னார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டு உள்ளோம். வண்டி மட்டும் ஏற வேண்டாம் என்று பார்க்கிறோம் என்று மீண்டும் மீண்டும் நாங்களும் சொன்னோம். ஹரூரில் இருந்து 30 கிமீ பயணித்து இந்நேரத்திற்கு வந்து எங்களை இங்கு தங்கவிடாமல் பேசிக் கொண்டு இருந்தனர். ஒரு கட்டதிற்கு மேல் அனு கொஞ்சம் குரலை உயர்த்தி பேசத் தொடங்கினாள். நாங்கள் ஆறு பேர் நடப்பதற்கு எந்த அனுமதியும் பெற வேண்டியது இல்லை. நாங்கள் எந்த சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடவில்லை என்றாள். பெண் ஆய்வாளர், அதெல்லாம் சரி தான் ஆனால் ஒரு அமைப்பாக திரண்டு ஒரு பிரச்சாரத்தை முன்வைத்து நடந்து வரும் போது அதற்கு அனுமதி பெற வேண்டும் என்றார்.

எங்களை இங்கு தங்கவிடாமல் தடுப்பதற்கு உங்களிடம் ஏதேனும் உத்தரவு கடிதம் இருக்கிறதா என்று மீண்டும் கேட்டாள். அவர்கள் கொஞ்சம் கோபமான குரலில் “நீ இங்க வந்து தங்கறதுக்கு ஒரு அனுமதியும் வாங்கல, எங்க கிட்ட உத்தரவு கடிதம் கேட்கரியே சரியா?” என்றார். இறுதியாக இப்போது நாங்கள் இங்கு இருந்து செல்ல மாட்டோம் என்று சொன்னால் என்ன செய்வீர்கள் என்று கேட்டோம். “எதுவும் செய்ய மாட்டோம். நீங்களும் இங்க நிக்க வேண்டியது தான் நாங்களும் நிக்க வேண்டியது தான். டியூட்டி மாறுனா எங்களுக்கு பதிலா வேற ஆளுங்க வந்து விடிய விடிய நிக்க வேண்டியது தான்.” என்றார்கள்.

“நீங்கள் செய்வது எல்லாம் பார்த்தால் எங்களுடைய பாதுகாப்பிற்கு செய்வது போல தெரியவில்லை எப்படியாவது உங்கள் எல்லையை தாண்டி சென்று விட்டால் உங்களுக்கு பிரச்சனை இல்லை என்று பார்க்கிறீர்கள்.“ என்று அனு சொன்னாள்.

“நீ என்ன மா இப்படி யோசிக்கற?” என்றார்கள்.

“சத்தியமா அப்படி தான் சார் இருக்குது. இங்க உங்களுக்கு தெரிஞ்ச ஒரு கவர்ன்மெண்ட் பில்டிங்ல நாங்க தங்குனா எங்களுக்கு சேஃப் இல்லணு சொல்றீங்க. ஆனா ராத்திரி 10 மணிக்கு ஏதோ ஊருக்கு பஸ் ஏத்தி விட்டு ஏதாவது ஒரு எடத்துல போய் எங்கள தங்கிக்க சொல்றீங்க. அப்போ எங்களோட சேஃப்டி என்னாகும்னு நீங்க யோசிக்க மாட்டீறீங்க. வேற எப்படி சார் யோசிக்க முடியும்” என்றாள் மீண்டும்.

அதற்கு அவர்கள் யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை. உடனே பேருந்துக்கு நேரம் ஆகிவிட்டது இது தான் கடைசி பேருந்து உடனடியாக கிளம்புங்கள் என்று எங்களை அவசரப்படுத்தி நடக்க வைத்து ஒரு வண்டியில் முன்னால் சென்று எங்கள் முதுகுப்பைகளை எடுத்து வந்து பேருந்தை மறித்து நாங்கள் அரை கிமீ நடந்து வந்த பின் எங்களை பேருந்து ஏற்றி விட்டு விட்டனர். அனு மிகவும் மனம் உடைந்து விட்டாள். “நாளைக்கு நா கெளம்பி வீட்டுக்கு போனாலும் போய்டுவ” என்று சொன்னாள். அனைவருமே பெரும் மௌனத்தில் பேருந்தில் எறினோம். பேருந்தின் படியில் கால் வைக்கும் போது ஒரு மாதம் விரதம் இருந்து நாக்கில் ஒரு சொட்டு நீர் விழுந்தவுடன் உடல் சிலிர்ப்பது போல் இருந்தது.

மேலும்..

சிபி

Comments

Popular posts from this blog

450 கிமீ நடைபயணம் - 2

450 கிமீ நடைபயணம் - 1

450 கிமீ நடைபயணம் - 6