மூன்றாம் நாள் நடை
ஜனவரி 13 மதியம் செஞ்சேரி புத்தூரில் நாங்கள் ஓய்வெடுப்பதற்காக பேடைக் காளி பாளையத்தை சேர்ந்த குமரேசன் என்பவர் அங்குள்ள PAP அலுவலகத்தை எங்களுக்காக ஏற்பாடு செய்து கொடுத்தார். கூடவே எங்களுக்கு எதாவது தேவை இருந்தால் செய்து தருமாறு அங்கு இருந்த பணியாளரிடம் சொல்லியிருந்தார். நாங்கள் அங்கு செல்வதற்கும் அவர் தன் வேலையை முடித்துவிட்டு அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. அவர் வந்து எங்களுக்கு மதிய உணவு அளித்துவிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அங்கிருந்து பேட்டைக் காளி பாளையம் வருவதற்கு சில குறுக்குத் தடங்களையும் சொல்லிவிட்டுச் சென்றார்.
அந்த அலுவலகத்திலேயே நாங்கள் சுமந்து வந்த ஈரத்துணிகளை காயப்போட்டுவிட்டு அசந்து தூங்கி விட்டோம். மூன்று மணி நேரம் உயிரற்று கிடப்பது போல் கிடந்தேன். அந்த நேரம் பார்த்து மழை கொட்டத் தொடங்கிவிட்டது. ஏதோ சில மகராசிகள் என் உடையையும் எடுத்து உள்ளே போட்டிருந்தார்கள். மூன்று மணிக்கு மேல் எழுந்து சாப்பிட்டுவிட்டு நடக்கத் துவங்கினோம். பெண்கள் எப்போதும் கிளம்ப தாமதப்படுத்துகிறார்கள் என்று திட்டிக்கொண்டே நானும் கௌதமும் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்து நின்றவுடன் ஒரு அரசு பேருந்து வேகமாக வந்து சேற்றை அடித்துச் சென்றது. உடல் முழுக்க சேற்றுப் புள்ளியுடன் நின்றோம்.
வட்டமாக எங்களை சுற்றி நின்று அந்த பெண்கள் குழு கெக்கரிக்கத் தொடங்கியது. நிறுத்தவே மாட்டேன் என்கிறார்கள். மீண்டும் உள்ளே சென்று தண்ணீரை தொட்டு துடைத்து ஓரளவிற்கு சமாளித்தோம்.
செஞ்சேரி புத்தூரில் இருந்து அவர் சொன்னபடி முதலில் நெறையூர் என்னும் ஊரிற்கு சென்றோம். அங்கு நாங்கள் செல்லும் வழியில் சாலையில் ஒரு நாய்க்குட்டி படுத்திருந்தது. நான் சும்மா ஜூ.. ஜூ.. என்று சொன்னேன். உடனே அது என்னிடம் ஓடிவந்து விட்டது. நான் நடந்தால் பின்னாலேயே நடந்தது. ஓடினாலும் பின்னால் வந்தது. அருகில் இருந்தவர்களிடம் கேட்டதில் இது அவர்களுடைய நாய் இல்லை என்றார்கள். அதை கண்டு கொள்ளாமல் நாங்கள் நடந்து வந்தோம். அனு கடைசியாக வந்து கொண்டிருந்தாள். அவள் அருகில் அந்த நாய் வந்து கொண்டிருந்தது.
"டேய் சிபி நீ கூப்பிட்டு இப்போ பாரு அது பின்னாலயே வருது" என்றாள் அனு.
"அட நானென்ன பண்ணுட்டு சும்மா கூப்டா அது வந்துட்டே இருக்குது. உட்டுப்போட்டு வா அது கொஞ்ச தூரோ வந்துட்டு நின்று" என்று சொன்னேன்.
"அது கீ.. கீ.. னு கத்தீட்டே வருது டா" என்றாள்.
"அதுக்கு என்ன பன்றது வேணும்னா நீயே தூக்கீட்டு வா பின்ன" என்று சொன்னேன்.
அவள் உடனே அதை தூக்கிக் கொண்டாள். "தூக்கி தலைல வெச்சுக்கோ" என்று சொன்னேன். தலையில் வைத்துக் கொண்டாள்.
"இத தூக்கிக் கொண்டு வந்து என்ன பண்ண போற" என்று கேட்டதற்கு, "பாவோ டா இங்க தனியா இருக்கு" என்றாள்.
"அதுக்கு"
"இத கொண்டு போய் எங்காச்சு ஊருக்குள்ள விட்ரலாம்" என்றாள்.
ய
உடனே, "அய்யோ.. இது பையனா, பொண்ணானு தெரிலயே!" என்றாள். பிறகு அவளே பார்த்துவிட்டு பெண் தான் என்றாள்.
அதற்கு ஒரு பெயர் வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். அதனுடைய கண் பார்ப்பதற்கு பூனைக்கண் போல் இருந்தது. நான் பூனக்கண்ணி என்று ஒரு பெயரைச் சொன்னேன். அது நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டு லாலா, லூலூ, சிம்பா, சிம்பி என்று சில பேர்களை அவர்களே சொன்னார்கள். நான் செகப்பி, கருப்பி என்பது போல் வைக்கலாம் என்றேன். முழுக்கவே பிரௌன் நிறத்தில் இருந்தது. அதனால் செகப்பி ஓரளவிற்கு பொறுந்தும். அப்படி இப்படி பேசி கடைசியில் கண்ணை வைத்தே கண்மணி என்று அதற்கு ஒரு பெயர் வைத்தோம். நான்தான் அதன் காதில் ஓதி பெயர் வைத்தேன். கீழே விட்டால் மீண்டும் உடன் ஓடிவந்தது.
சரி கொண்டு போவோம் என்று முடிவு செய்து ஆளுக்கு கொஞ்ச நேரம் அதை சுமந்து சென்றோம். குறுக்குவழி என்று நெறையூரில் இருந்து நேராக வந்தால் மானூர் பாளையத்திற்கு ஒரு மண் சாலை போகும் அதில் வந்தால் பேட்டை காளி பாளையம் வருவதற்கு 3 கிமீ குறையும் என்று குமரேசன் சொல்லி இருந்தார். அந்த இடத்திற்கு சென்று பார்த்தால் ஒரே இடத்தில் ஐந்து மண் சாலை பிரிந்தது. குழம்பிப் போய் கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்து விட்டோம். பின்னர் அந்த வழியாக வந்தவரிடம் விசாரித்து வழியை கண்டறிந்தோம்.
அந்த மண் சாலையை கடந்ததும் எங்களுக்கு டீ, காப்பி ஏற்பாடு செய்வதற்காக குமரேசன், கார்த்திக் என்பவரை அனுப்பியிருந்தார். அவர் வண்டியில் வந்து நாங்கள் எங்கு திரும்ப வேண்டும் எப்படி வர வேண்டும் என்று வழி சொல்லி அழைத்துச் சென்றார்.
அவர் சொன்ன பேக்கரிக்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்கு டீயும் கண்மணிக்கு 50-50 பிஸ்கட்டும் வாங்கிக் கொண்டோம். நடக்க நடக்க அவளுக்கு உடைத்து ஊட்டிக் கொண்டே வந்தோம். வேதாரண்யம் வரை அவளை அழைத்துச் செல்லலாமா என்று கூட பேசினோம். கடைசி வரை கட்டுரைகளில் ஒரு கதாபாத்திரமாகவே அது வரும் என்று நானும் யோசித்தேன். நான் கையில் வைத்திருக்கும் போது கீ.. கீ.. என்று கத்தியது. சரண்யாவிடம் கொடுத்துவிட்டேன். அவரிடமும் கத்தியதால் கீழே விட்டார். சிறுநீர் கழித்தது. "அடடே பரவாயில்லையே!" என்று சொல்லிக் கொண்டோம்.
கீழேயே விட்டுவிட்டு நடக்கத் தொடங்கினோம். மீண்டும் துள்ளி துள்ளி பின்னால் ஓடி வந்தாள். "சேரி நடந்தே வா!" என்று சொல்லி நடந்தோம். அரையடி கூட அளவு இருந்திருக்க மாட்டாள். ஆனால், எங்களுக்கு இணையாக ஈடு கொடுத்து காலிற்கு அருகிலேயே ஓடி வந்தாள். தூக்கச் சொல்லி மீண்டும் கீ.. கீ.. என்று முனவிக் கொண்டே ஓடிவந்தது. சுமார் இரண்டு கிலோ மீட்டர் அவ்வாறு பின்னாலேயே வந்திருக்கும்.
ஊருக்குள் வந்ததும் வேறு நாய்கள் கடித்துவிடும் என்று கையில் எடுத்துக் கொண்டோம். பேட்டை காளி பாளையம் தலைவர் குமரேசன் வீட்டில் ஜேக் என்று ஒரு பொமரேனியன் நாய் இருந்தது. அதனால் இதை வெளியிலேயே விட்டுவிட்டோம். அங்கு அவர் வீட்டில் குளித்துவிட்டு எங்களை வழி சொல்லி அழைத்து வந்த கார்த்திக் அவர்களின் வீட்டில் சென்று படுத்துக் கொள்ளுமாறு சொன்னார். சரி என்றோம்.
கார்த்திக் வீட்டிற்கு சென்று படுக்கைகளை ஏற்பாடு செய்துவிட்டு வரக் கிளம்பினார். போகும் போது அந்த குட்டியை எங்கேயாவது விட்டுவிட்டு செல்லும்படி குமரேசன் சொன்னார். சரண்யா, கண்மணியை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார். எனக்கெல்லாம் ஒன்றும் இல்லை, வைத்துக் கொள்வதென்றால் வைத்துக் கொள்ளுங்கள். அனு தான் தூக்கி வந்தாள் அவளிடம் கேளுங்கள் என்றேன். அனு குளித்துக் கொண்டு இருந்தாள், அவளிடம் கேட்டதற்கு எடுத்துச் செல்ல சொல்லிவிட்டாள் போல். யாருக்கும் அதை வைத்துக் கொள்வதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. எனக்கு வைத்துக் கொள்ளலாம் என்று உள்ளூற சிறு எண்ணம் இருந்தது. ஆனால், சொன்னால் எதாவது சொல்லுவார்கள் என்று அவளை எடுத்துச் செல்ல சொல்லிவிட்டேன். அதன் பின்னர் அவளை வைத்திருந்திருக்கலாமோ என்று தோன்றியது.
அனைவரும் குளித்துவிட்டு வந்து சாப்பிடுவதற்கு இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது தான் இரவு தங்க வேண்டிய வீடு நாங்கள் நடந்து வந்த வழியிலேயே இரண்டு கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்று தெரிந்தது. காரில் அங்கு கொண்டு போய் விட்டுவிட்டு காலை எழுந்து கிளம்பியதும் இரவு முடித்த இடத்தில் மீண்டும் கொண்டு வந்து விட்டு விடுவதாக குமரேசன் சொன்னார். எங்கள் யாருக்கும் அதில் விருப்பம் இல்லை. வேதாரண்யம் வரைக்கும் ஒருமுறை கூட வண்டி ஏறிவிடக் கூடாது என்று மிக தீர்க்கமாக இருந்தோம். அவரிடம் நாங்கள் வண்டியில் ஏற மாட்டோம். மீண்டும் நடந்தே வருகிறோம் என்றேன்.
அவர் அது ஒன்றும் பிரச்சினை இல்லை நீங்கள் இதுவரை வந்த இடத்தை தாண்டி இரண்டு கிமீ சென்றால் தான் தவறு, நீங்கள் கடந்து வந்த பாதையிலேயே தானே திரும்ப வண்டியில் செல்கிறீர்கள். திரும்ப அதே இடத்தில் கொண்டு வந்து விட்டு விடுகிறோம் அதனால் நீங்கள் இன்று முடித்த இடத்தில் இருந்தே நாளை தொடங்கலாம் என்றார். மற்றவர்களிடம் கேட்டதில் அவர்களும் வண்டி ஏற ஒப்புக் கொள்ளவில்லை. அவர் பெண்கள் இருப்பதால் தான் தனியாக ஏற்பாடு செய்தேன். வண்டியில் போனால் அங்கு செல்லுங்கள் இல்லையென்றால் இங்கே படுத்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு பிரச்சினை இல்லை என்றார். அனைவரும் அவர் வீட்டிலேயே தங்க ஒப்புக் கொண்டோம். நல்ல தூக்கம். அனைவரும் காலை தாமதமாகத் தான் எழுந்தோம்.
ஜனவரி 14 காலை 7:30 மணிக்கு அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு தாராபுரம் நோக்கி நடக்கத் துவங்கினோம். உப்பாறு அணையில் காலை உணவு அவரே கொண்டு வந்து தருவதாக சொன்னார். காற்றாலைகளினூடாகவே நடந்தோம். செல்லும் வழியில் ஒரு பாட்டியிடம் பேசினோம். வாக்குக்கு பணம் பெறுவது தவறு தான் பணம் பெறாமல் தான் வாக்களிக்க வேண்டும் என்றார். நீங்கள் வாக்குக்கு பணம் பெறுவதில்லையா என்று கேட்டேன்.
"வாங்கீருக்கறே.. வாங்கீட்டு வாங்கலீன்னு பொய்யெல்லா சொல்ல கூடாது வாங்கீருக்கறே.. ஆனா இனிமே வாங்க மாட்டே" என்றார்.
அவர் அதை காப்பாற்றுவாறா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அதை தவறென்று ஒருவர் உணர்ந்து தனாகவே வாங்கினேன் என்று உண்மையை சொல்வதும், வாங்க மாட்டேன் என்று சொல்வதும் மகிழ்ச்சிகரமான தருணம். ஒரு நாளை சிலிப்பின்றி கழிப்பதற்கு அது போதும்.
நாங்கள் செல்லும் வழியில் இரண்டு எருமைகள் எங்களை ஒருவித வினோத பார்வையோடு வெகு நேரம் வெறித்துக் கொண்டிருந்தன. கடைசி வரை அந்த பார்வையை துளி கூட மாற்றாமல் பார்த்தது. முழுவதும் மறையும் வரை நாங்கள் செல்வதை தலையை திருப்பி பார்த்துக் கொண்டு இருந்தது. அதை கடந்து கொஞ்ச தூரம் சென்றதுமே உப்பாறு அணையின் காட்சி புள்ளி இருந்தது. கௌதமும் சௌமியாவும் முன்னரே சென்று அங்கு அமர்ந்திருந்தனர். நானும் சில கணங்கள் அமர்ந்திருந்தேன். பின்னர் அங்கிருந்து இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் குமரேசன் அவர்கள் எங்களுக்கு காலை உணவாக பூரி மற்றும் பொங்கல் கொண்டு வந்திருந்தார். அவருடன் பசுபதி என்பவர் இருந்தார். அவர் வீடு அருகில் தான். நாங்கள் சாப்பிட்டு முடித்தவுடன் இன்னும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நாங்கள் ஓய்வெடுக்க இடம் ஏற்படாது செய்திருப்பதாக சொன்னார்.
அந்த முழு பொறுப்பையும் பசுபதி பார்த்துக் கொள்வார் என்றார். அங்கே ஒரு பேக்கிரி உள்ளது அங்கு எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் பணம் செலுத்த வேண்டாம் என்றார். வேறு பணமும் நன்கொடையாக அளிப்பதாக சொன்னார். இப்போதைக்கு தேவையில்லை என்று சொல்லி நான் வாங்கவில்லை.
பசுபதி அளித்த இடத்தில் கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடுத்தோம். அடுத்து நாங்கள் தங்க உள்ள தாராபுரத்தில் எங்களுக்கு உதவ உள்ள லிங்கராஜ் அவர்களுக்கு அழைத்தேன். அடுத்த ஊர், அடுத்த மனிதர்களை நோக்கி நடக்கத் தயாரானோம்.
சிபி
Comments
Post a Comment