முதல் நாள் நடை
தூரத்தில் இருந்து ஒரு தினம் மெல்ல மெல்ல நம் அருகில் வருவது படிப்படியாக நம்முள் ஒருவித கிளர்ச்சியூட்டுவதை உணர்வோம். அப்படி ஒரு தினம் எங்கள் அருகில் வந்தது. ஒரு பெரும் பயணத்தின் தொடக்கம். புதிய ஆச்சரியங்களை எதிர்நோக்கி அந்த முதல் அடிக்கான கணம் அருகில் வந்தது. ஜனவரி 11 அன்று மாலை 4 மணிக்கு போத்தனூரில் உள்ள காந்தி நினைவகத்தில் அந்த முதல் அடியை எங்களுடன் வைப்பதற்கு 30 பேர் கூடியிருந்தனர். சிவராஜ் அண்ணா சொல்லி வேலவன் என்பவர் ஆலம் பள்ளியில் இருந்து 10 மாணவர்களை அழைத்து வந்திருந்தார். மூத்தவர்கள் எங்களை பார்த்து அடையும் அதே உவகையை அந்த சிறுவர்களை பார்த்து நாங்கள் அடைந்தோம். அவர்களுடன் சில நிமிடங்கள் முனை அமைப்பு குறித்து பேசினேன்.
அதன் பின்னர் காந்தி நினைவகத்திற்கு வெளியே அனைவரும் கூடினோம். எங்கள் நடைபயணம் மற்றும் அதன் நோக்கத்தை மீண்டும் ஒரு முறை சிறு அறிமுகமாக அனைவருக்கும் தெரிவித்தேன். அதன் பின்னர் கண்ணன் தண்டபாணி அவர்கள் ஒரு சிறு உரையாற்றினார். காந்தி தென்னாப்பிரிக்காவில் மேற்கொண்ட யாத்திரை, தண்டி யாத்திரை, நவகாளி யாத்திரை ஆகியவற்றை வரிசைப்படி தொகுத்து பேசினார். அதன் பின்னர் அவர் வீட்டில் வந்து தங்கிய ஒரு யாத்திரீகனுடன் 50 கி.மீ அவர் கோவை நடந்து வந்த அனுபவத்தையும், வாகன யாத்திரை என்று கன்னியாகுமரி முதல் சென்னை வரை அவர் மார்கண்டன் அவர்களுடன் பயணித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
அதன் பின் எங்கள் பயணம் தொடங்கியது. அங்கிருந்த அனைவரும் கொஞ்ச தூரம் எங்களுடன் நடந்து வந்தனர். சொல்முகம் நரேன், சுமார் நான்கு கி.மீ உடன் வந்தார். கண்ணன் தண்டபாணி அவர்களின் குடும்பத்தினர் மொத்தம் 4 பேர் எங்களுடன் சுமார் பத்து கி.மீ வரை நடந்து வந்தனர். பேருந்து வசதி இல்லாததால் வேறு வழியின்றி அதற்கு மேல் வராமல் திரும்பிவிட்டனர். இல்லையென்றால் பச்சாம்பாளையம் வரையுமே நடந்து வருவதாக தான் சொல்லி வந்தனர். நாங்கள் ஒன்றிரண்டு முறை நீங்கள் திரும்பிவிடுங்கள், நாங்கள் சென்று விடுகிறோம் என்று சொல்லியும் பார்த்தோம். ஆனால் அவர்கள் உடன் வந்தே தீர்வோம் என்று வந்தனர். அவர்களை நடக்க வைப்பது சற்று சங்கடமான ஒன்றாக தோன்றினாலும் அவர்கள் உடன் வருவது ஒரு பெரும் மகிழ்வையும் அளித்து.
நாங்கள் யாரும் மதியம் சாப்பிட்டிருக்கவில்லை. சிலர் காலையும் சாப்பிடவில்லை. அதனால் நடந்து செல்லும் வழியில் ஒரு பேக்கரியில் நின்றோம். அர்ச்சனா ஆர்டர் செய்த பப்ஸ் சற்று மோசமானதாக இருந்தது. கண்ணன் தண்டபாணி அவர்களின் மனைவி அந்த கடைக்காரரிடம் "இவர்கள் 400 கி.மீ நடக்கப் போகிறார்கள். அதனால் இதை மாற்றி தாருங்கள். இவர்களின் உடல்நிலை சரியாக இருப்பது அவசியம்" என்றார். அவர் அதை கேட்டு ஒரு கணம் வியந்தார். அவருக்கு எங்கள் நோட்டீஸ்களை வழங்கினோம். அவர் பெயர் வெங்கடேஷ் புதுக்கோட்டைக் காரர். கரையூர் என்ற ஊரில் இருந்து வந்து இங்கு கடை போட்டுள்ளார். அந்த ஊரிலும் நாங்கள் தங்க உள்ளோம். அவரின் ஊரை நோட்டீஸில் பார்த்துவிட்டு கடையில் வேலை செய்யும் மற்ற பணியாளர்களிடம் கொண்டு சென்று காட்டி அவரின் ஊர் இருப்பதை சொல்லி மகிழ்ந்தார். அவரின் அழைபேசி எண்ணை பெற்று வந்துள்ளோம். அந்த ஊரில் அவரின் வீட்டிலேயே தங்குவதற்கு கூட வாய்ப்புள்ளது. நாங்கள் கிளம்பும் போது ஆறு பிஸ்கட் பாக்கெட்டுகளை இலவசமாக கொடுத்தார்.
ஏற்கனவே ஏழரை கிலோமீட்டருக்கு மேல் நடந்து விட்டோம். இன்னும் நாங்கள் செல்ல வேண்டிய பஞ்சாம்பாளையம் ஊருக்கு ஐந்தரை கிலோமீட்டர் தான் கூகுள் மேப்பில் காட்டியது. அந்த வழி ஒரு சிறு பாதையில் திரும்பி வீட்டு மனைகள் நடுவே செல்லுமாறு காட்டியது. கண்ணன் தண்டபாணி அவர்கள் சிறிய சாலையில் செல்ல வேண்டாம், மெயின் ரோட்டிலேயே செல்லுங்கள் என்றார். நான் அதில் சென்றால் 600 மீட்டர் சுற்றி வருகிறது இது தான் பக்கம் என்று சொல்லி அழைத்து வந்தேன். வழி குறுகிக் கொண்டே வந்தது. அனைவரும் என்னிடம் பேசும் தொணி மாறத் தொடங்கியது. நான் மெது மெதுவாக குரலை குறைத்து பவ்யமாக வழி சொன்னேன். நாய்கள் சூழ்ந்து எங்களை வரவேற்க தொடங்கியது. நாங்கள் அவற்றிற்கு வணக்கம் சொல்லியவாறே மெதுவாக நகர்ந்தோம். ஒரு கட்டத்தில் கூகுள் மேப் காட்டும் பாதை கம்பி வேலி போட்டு அடைந்திருந்தது. நல்ல வேளையாக இருட்டாக இருந்ததால் அனைவரின் உக்கிர முகங்களையும் பார்க்காமல் தப்பித்துக் கொண்டேன். "டேய் சிபி" என்று அனுவில் கத்தல் குரல் மட்டும் காதில் விழுந்தது. ஒருவித நமிட்டு சிரிப்பை சிரித்து வைத்தேன். அப்போது அந்த கம்பி வேலி போட்டிருந்த தோட்டத்துக் காரர் வெளியே வந்தார். இந்த கதவை திறந்தால் இந்த வழியாக உள்ளே வந்து பின்புறம் அந்த வழியாக வெளியே செல்ல இயலுமா என்று கேட்டோம். உள்ளே வரலாம் வெளியே செல்ல வழியில்லை என்றார். சரி எப்படி செல்வது என்று அவரிடமே வழி கேட்டோம். அவர் செவ்வக வடிவில் ஒரு வழியை சொன்னார். பிறகு எங்கிருந்து வருகிறீர்கள் எதற்கு நடந்து வருகிறீர்கள் என்று கேட்டார். இந்த நடைபயணத்தின் நோக்கத்தை சொன்னவுடன் உடனடியாக உள்ளே விரைந்து ஒரு டார்ச் லைட்டை எடுத்து வந்து எங்களிடம் கொடுத்து வைத்துக் கொள்ளும் படி சொன்னார். புன்னகையுடன் பெற்றுக் கொண்டோம்.
எங்களை பச்சாம்பாளையத்தில் தங்க வைப்பதாக சொல்லியிருந்த வேல் குட்டி பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அழைத்து எங்கு வந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டார். ஒருமாதிரி தோராயமாக ஒரு இடத்தை சொல்லிக் கொண்டு இருந்தோம். பேக்கரியில் இருந்து கிளம்பும் போது மணி ஆறு. கணக்குப்படி பார்த்தால் ஏழரை மணிக்குள் நாங்கள் அந்த ஊரை அடைந்திருக்க வேண்டும். ஆனால் வழி தெரியாமல் எங்கேயோ உலாவிக் கொண்டு இருந்தோம். வேறு எங்கும் முட்டு சந்திற்கு சென்றுவிட வேண்டாம் இன்னொரு டார்ச் லைட் வைக்க இடம் இல்லை என்று கூட்டாக என்னை கேலி செய்து கொண்டு இருந்தார்கள். நான் பதிலேதும் பேசவில்லை. செல்லும் வழியில் கண்ணன் தண்டபாணியும் அவருடைய மனைவியும் இடையிடையில் நிறுத்தி வெள்ளி, வியாழன் போன்ற கோள்களை காட்டி வானியலையும், ஆந்தையை காட்டி பறவையியலையும் எங்களில் சிலருக்கு அறிமுகம் செய்தனர்.
ஒருவழியாக மெயின் ரோட்டை அடைந்துவிட்டோம். பேக்கரியில் இருந்து ஆறு கிலோமீட்டர் காட்டியது ஒரு மணிநேர அலைச்சலிற்கு பின் இப்போது இன்னும் நான்கேமுக்கால் கி.மீ காட்டுகிறது. அந்த இடத்தில் இருந்து கண்ணன் அவர்களின் குழு தனியாக பிரிந்து பேருந்து நிலையம் நோக்கி நடக்க தொடங்கி விட்டனர். அப்போது தான் தெரிந்தது நாங்கள் தங்கவுள்ள ஊர் பச்சாம்பாளையம் அல்ல பெரிய குயிலி என்று.
எங்களை தங்க வைக்க ஏற்பாடு செய்த வேல் குட்டி வண்டியை எடுத்துக் கொண்டு எங்களை தேடி பாதி தூரம் வந்துவிட்டார். பிறகு நாங்கள் வழி மாற வாய்ப்புள்ள பிரிவுகளில் எங்களுக்கு முன்னர் சென்று நின்று சரியான வழியை காட்டி ஊர் வரை அழைத்து வந்தார். எங்கள் ஆட்கள் நேர் கோட்டில் நடக்காமல் வளைந்து நடக்கத் தொடங்கியிருந்தனர். அரையடி உயரம் குறைந்திருந்தனர். 4:45 மணிக்கு தொடங்கி அதிகபட்சம் 7:45 மணிக்குள் சென்றுவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தோம். ஆனால், ஒன்பது மணிக்கு தான் ஊரை அடைந்தோம். முதல் நாள் பன்னிரண்டு கிமீ நடப்பது திட்டம் ஆனால் பதினேழாவது நடந்திருப்போம் என்று நினைக்கிறேன்.
ஊருக்குள் நுழைந்ததும் ஒரு கடையில் தண்ணீர் புட்டிகள் வாங்க சென்றோம். அவரிடமும் எங்கள் பிரச்சாரத்தை பற்றி சொல்லி நோட்டீஸ் வழங்கினோம். தண்ணீர் புட்டிகளை ஒரே அளவில் எடுக்காமல் அரை லிட்டரில் ஒன்று, ஒரு லிட்டில் மூன்று, இரண்டு லிட்டரில் ஒன்று என்று வாங்கினோம். சில நிமிடங்கள் எவ்வளவு தொகை என்று கணக்குப் போட முயற்சித்தார். பிறகு மீண்டும் எங்கள் பிரச்சாரம் குறித்து ஒரு கேள்வி கேட்டார். சொல்லி முடித்துவிட்டு எவ்வளவு தொகை என்று கேட்டேன். "வேண்டா உடுங்க போங்க. ஏதோ நம்மனால முடிஞ்சது" என்றார்.
அங்கிருந்து நாங்கள் தங்க திட்டமிட்டிருந்த கோவிலுக்கு மீண்டும் வேல் குட்டி வழிகாட்டி கூட்டிச் சென்றார். அங்கு சென்று கொஞ்ச நேரம் அவருடனும் ஊர் மக்கள் சிலரிடமும் பேசிக் கொண்டு இருந்தோம். அதற்குள் எங்களுக்கு உணவு வந்துவிட்டது. வேல் குட்டி வீட்டில் செய்த தக்காளி சாப்பாடு. உண்மையிலேயே நல்ல உணவு. அதுவும் கடும்பசியில் நாக்கின் உச்ச உணர்வுகளை தொட்டு திரும்பினோம். ஊறுகாய், தயிர் பச்சடி, அப்பளம் எல்லாம் சேர்த்து சாப்பாடு உள்ளே சென்று கொண்டே இருந்தது. கடைசி வாயை எடுத்து வைப்பதற்குள் கையே ஓய்ந்து விட்டது.
அந்த கோவிலின் பின் உள்ள அறையை எங்களுக்கு அளித்தனர். எங்கு போய் படுத்தால் வலிகள் ஒருவித சுகமாக மாறுவதை மெல்ல மெல்ல உணர முடிந்தது. அந்த சுகத்தை எந்த வகைமைகள் அடுக்குவது என்று தெரியவில்லை. அனைவரும் கடும் களைப்பில் திசைக்கு ஒருவராக சுருண்டு படுத்திருந்தோம். களைப்பின் வெளிப்பாடாக குரட்டை ஒலிகள் ஒவ்வொரு திசையில் இருந்தும் வரத்தொடங்கியது. அனைவருமே குரட்டை விட்டுள்ளோம். ஒவ்வொருவர் குரட்டை விடுவதையும் இன்னொருவர் எழுந்து பார்த்துள்ளார். காலை எழுந்தவுடன்
"ஹே நீயும் குரட்டை விட்ற"
" யாரு நானா! நீ தா விட்ட" என்று ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக் கொண்டோம்.
இரவு முழுவதும் அந்த அறை மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் பெரிய அளவிலான கரும்பு மிஷின் போல் இருந்திருக்கும்.
ஜனவரி 12 காலை ஆறு மணிக்கு எழுந்து அனைவரும் கிளம்பி ஏழு மணி வாக்கில் ஊருக்குள் பிரச்சாரம் செய்யப் போனோம். இரண்டிரண்டு பேராக மூன்று குழுவாக பிரச்சாரம் செய்தோம். முக்கால் மணி நேரத்திற்கு மேல் பிரச்சாரம் செய்து துண்டு பிரசுரங்கள் வழங்கினோம்.
கிளம்பும் முன்பு வேல் குட்டி அவர்களை சந்தித்து பேசிவிட்டு ஏழேமுக்கால் வாக்கில் செஞ்சேரி நோக்கி நடக்கத் தொடங்கினோம். செல்லும் வழியில் முதலில் ஒரு டீக்கடையில் நின்று டீ குடித்தோம். இந்த பயணம் தொடங்கியதில் இருந்து இது தான் எங்கள் முதல் செலவு. அதன் பிறகு மேப்பை பார்த்து நடந்து சென்று கொண்டே இருக்கையில் ஒரு ஊரில் எங்களை வழியை மறித்து விசாரித்தனர். அப்போது விளக்கும் போது அடுத்து செஞ்சேரி செல்வதாக சொன்னோம். அப்போது அவர்கள் இந்த வழியாக செல்ல முடியாது என்றும் நாங்கள் வந்த வழியிலேயே அரை கிலோ மீட்டர் திரும்பி சென்று இடது புறம் திரும்புமாறும் சொன்னார்கள். வேறு ஒருவரிடம் விசாரித்த போதும் அதே தான் சொன்னார்கள். அவர்களிடம் விசாரித்த இடத்தில் இருந்து செஞ்சேரி 17 கி.மீ காட்டியது. அவர்கள் சொன்ன வழியில் சென்றால் ஒவ்வொரு கிலோ மீட்டராக கூட தொடங்கியது. 19 கிலோ மீட்டர் ஆன பிறகு தான் கியரை மாற்றி குறையத் தொடங்கியது.
செல்லும் இடமெல்லாம் வெட்டவெளி. நடுவே போக்குவரத்தற்ற ஒற்றைச் சாலை. இருபுறமும் காற்றாலை. கீரைகள் பயிரிடல். அவ்வப்போது தென்னந்தோப்புகள். இருபுறுமும் தலையை திருப்பிக் கொண்டே நடந்து விடலாம்.
பனப்பட்டி சென்றால் உணவு கிடைக்கும் என்றார்கள். நாங்கள் அந்த ஊரை அடையும் போது காலை 10 மணி ஆகியிருந்தது. ஆனால் தொடங்கிய இடத்தில் இருந்து நான்கரை கிலோமீட்டர் தூரம் தான் வந்திருந்தோம். ஒருநாள் இரவு கூகுள் மேப்பை நம்பி சென்றதால் சுற்றித் திரிந்தோம். அடுத்த நாள் காலை ஊர் மக்களை நம்பியதால் சுற்றி வந்துள்ளோம். அடுத்து எதை நம்புவது என்று தெரியவில்லை. 400 கி.மீ நடைபயணம் 500 கி.மீ கூட ஆக வாய்ப்புள்ளது என்றே படுகிறது.
பனப்பட்டி வந்து சில பேரிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்து பார்த்தோம். ஒரு சீப்பு வாழைப்பழம் தான் கிடைத்தது. அதுவும் சரியாக ஆளுக்கு ஒன்று வந்தது. வேறு வழியின்றி ஹோட்டல் கடையிலேயே பூந்துவிட்டோம். சாப்பிட்டு விட்டு ஒரு அரைமணி நேரம் அமர்ந்திருப்போம். அதன்பிறகு இவ்வளவு நேரம் நடந்து நான்கரை கி.மீ தான் கடந்துள்ளோம். மீண்டும் இங்கிருந்தே 14 கி.மீ காட்டுகிறது மாலை அவ்வளவு தூரம் நடப்பது சிரமம். இன்றிரவும் தாமதமாகிவிடும் என்று நினைத்து இப்போது இன்னும் பாதி தூரம் நடந்துவிட திட்டமிட்டோம். மீண்டும் 11 மணிக்கு நடக்க தொடங்கி வடவள்ளி வரை நடந்துவிட திட்டமிட்டோம். தண்ணீர் புட்டிகளை வாங்கி வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கிய சில அடி தூரத்தில் ஒருவர் எங்களை நிறுத்தி விசாரித்து விட்டு அவர் தண்ணீர் வாங்கித் தருவதாக ஒற்றை காலில் நின்றார். வாங்கிவிட்டோம் வேண்டாம் இதற்கு மேல் செமக்க முடியாது என்று சொல்லி அவரிடம் இருந்து நகர்ந்தோம்.
அங்கிருந்து ஒரே மூச்சாக நடந்து மதியம் 1 மணிக்கு வடவள்ளி வந்து சேர்ந்தோம். அங்கு ஒரு டீக்கடை பாட்டி எங்களை பார்த்து
"இதே! எங்க போறீங்கோ எல்லா ஒரே மாரியே" என்றார்.
"400 கிலோமீட்டர் நடைபயணம் போரோ" என்றோம்.
"அக்காம் போ 400 கிலோமீட்டர் போராங்கலாமா இவியோ" என்றார்.
"நெசமாத்தாங்க போத்தனூருல இருந்து நடந்து வரோ"
"ஆ... வருவீங்கோ வருவீங்கோ.. போத்தனூருல இருந்து நடந்து வராங்கலாமா" என்று சொல்லி சிரித்தார்.
"அட நெசமாத்தாங்க இத பாருங்க" என்று நோட்டீஸ் ஒன்றை கையில் கொடுத்தோம்.
"நெசமாலுமா.. அத்தந்தூரோ நடந்து போறீயிவா" என்று ஒரு பெரும் வியப்போடு கேட்டார்.
"ஆமா. ஓட்டுக்கு பணொ வாங்காதீங்கனு சொல்லி பிரச்சாரம் பண்ணீட்டே கிராமோ கிராமமா நடந்து போரோ" என்று சொல்லிவிட்டு முன்னால் சென்று ஓய்வெடுக்க அமர்ந்துள்ள அனு மற்றும் சௌமியாவிடம் சென்று அமர வேண்டும் என்பதற்காக அவரிடம் இருந்து விடைபெற நினைத்தோம்.
ஆனால் அவர் உடனே "அடே! இருங்கோ டீ குடிச்சிட்டு போங்கோ" என்று கடைக்குள் போய்விட்டார். நாங்களும் அதை ஏற்றுக் கொண்டு கடைக்குள் நுழைந்தோம். முன்னால் அமர்ந்துள்ள இருவரையும் அழைத்துவர கௌதம் சென்றான். போண்டாக்களை எடுத்து எங்கள் முன் வைத்து "ஆளுக்கு ரெண்ரெண்டு போண்டா எடுத்துக்குங்க" என்றார். டீயை குடித்துவிட்டு அந்த கடையில் இருந்த அத்தனை போண்டாக்களையும் காலி செய்து விட்டு கிளம்பிவிட்டோம். அந்த கடையில் இருந்து 50 அடி தூரத்தில் ஒரு இடத்தில் அமர்ந்தோம். அப்போது அருகில் இருந்தவர்கள் வந்து விசாரித்து விட்டு எதிரில் உள்ள கோவிலில் அறை உள்ளது அங்கு சென்று ஓய்வெடுக்குமாறு சொன்னார்கள். அங்கு அந்த அறைக்கு வெளியிலேயே அந்த கோவிலில் நல்ல இடமாக இருந்தது. அங்கு சென்று போர்வையை விரித்து கொஞ்ச நேரம் படுத்திருந்தோம். ஒன்றரை மணி நேர ஓய்விற்கு பிறகு சிறுவர்கள் ஒரு மூன்று பேர் அந்த கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாட வந்தார்கள். கௌதம் என்னிடம் விளையாடலாமா என்று கேட்டான். நான் முதலில் அரைமனதோடு இருந்தாலும் பிறகு எழுந்து சென்றுவிட்டேன். சௌமியா மற்றும் சரண்யாவையும் அழைத்தோம். அவர்கள் ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். எங்களை சேர்த்து கொள்ளுமாறு கேட்டவுடன் சேர்த்துக் கொண்டார்கள். அந்த சிறுவர்கள் மூவரும் ஒரு அணி. நாங்கள் நால்வரும் ஒரு அணியாக இருந்து கொள்ளும்படி அவர்களே சொன்னார்கள். புதிது புதிதாக ஏதேதோ ஒரு நான்கு விதிகளை சொன்னார்கள். அனைத்திற்கும் ஒப்புக்கொண்டோம்.
அவர்கள் முதலில் பேட்டிங் ஆடினார்கள். பந்தை தடுக்க சொன்னால் பந்து அருகில் வந்தால் சௌமியா பயந்து தள்ளி நகர்ந்து கொண்டு இருந்தாள். மூன்று ஓவர்களில் 44 ரன்கள் அடித்தார்கள். நாங்கள் தட்டுத் தடுமாறி ஒரு பத்து பதினைந்து ரன்கள் சேர்த்து தோற்று விட்டோம். முதல் ஆட்டம் முடிந்ததும் எங்கள் அணியினர் நடக்கத் தொடங்கலாம் என்றார்கள். அதெப்படி ஆறாங்கிளாஸ் பசங்க நம்மள தோக்கடிச்சா அப்படியே போவது. ஜெயித்துவிட்டு தான் கிளம்ப வேண்டும் என்று உள்ளிருந்து ஒரு ஆணவம் சொன்னது. அவர்களை நிறுத்தி இன்னொரு ஆட்டம் என்று சொல்லி நான்கு ஓவர்கள் வைத்து ஆடினோம்.
நாங்கள் இம்முறை முதலில் பேட்டிங் செய்வதாக கேட்டோம். "நோவ் அதெல்லா முடியாது வின்னிங் ஃப்ஸ்ட்டு" என்றான் ஒரு பொடுயன்.
"டேய் அதெல்லா மேட்ச் ஆரம்பிக்கரத்துக்கு முன்னாடி சொல்லனு இப்போ வந்து சொன்னாலாம் ஒத்துக முடியாது" என்று சொன்னேன்.
"நோவ் அதெல்லா எல்லாத்துக்குமே தெரிஞ்சது தானா.. குடு நா பேட்ட" என்றான்.
"டேய் டேய் தம்பி ஒரு மேட்ச் குட்ரா ஆடிக்கரோ டா" என்று கெஞ்சிக் கேட்டபின் "சரி ஆடுங்க போங்க" என்றான்.
அவர்கள் ஒவ்வொரு பந்திற்கும் புதிதாக ஒரு விதியை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் விதிகள். "எத்தன ரூல்ஸ் டா மாத்துவீங்க" என்று கேட்டும் விட்டேன். அதெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. முதலில் நான்கு விதி சொன்னார்கள் இறுதியாக மொத்தம் பதினைந்து விதிகளை புதிதாக சேர்த்தி இருந்தார்கள்.
இரண்டாம் ஆட்டம் மீண்டும் 17 ரன்களே சேர்த்தோம். ஒருவன் முரட்டுதனமாக லெக் ஸ்பின் வீசினான். எங்கோ குத்தி எங்கோ திரும்பியது. அந்த 17 ரன்களில் 12 ரன் நான் அடித்து, 4 ரன் சரண்யா அடித்தார், ஒரு ரன் வைடில் வந்தது. நாங்கள் பந்து வீசினோம். நான் முதல் மேட்ச் சின்ன பயல்கள் என்று பொறுமையாக வீசினேன். இம்முறை நானும் ஆஃப் ஸ்பின் போட்டேன். என்னுடைய ஓவரில் பெரிதாக ரன் வரவில்லை. அதிகமாக ஸ்பின் ஆனதில் இரண்டு வைடு மட்டுமே வந்தது. ஆனால் கௌதமின் ஓவரை பிரித்துவிட்டார்கள். எளிதில் இரண்டாம் ஆட்டமும் வென்று விட்டார்கள்.
இறுதி ஆட்டம் என்று மூன்றாவதாக ஒரு ஆட்டத்தை போட்டேன். முதல் ஓவர் நான் வீசினேன். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் எடுத்துவிட்டேன். ஆனால் அப்படியும் கௌதமின் ஓவரில் அடித்து விட்டார்கள். மூன்றாம் ஆட்டத்தில் 28 ரன்கள் எங்களுக்கு இலக்கு. சௌமியா ஒரு ரன் அடித்தாள். நான் ஒன்றோ இரண்டோ ஃபோர்கள் அடித்தேன். கௌதம் ஒரு ஃபோர் அடித்திருப்பான். அந்த ஆட்டமும் தோற்றுவிட்டோம். வேறு வழியின்றி தோல்வி முகத்துடன் திரும்பினோம். அங்கிருந்து மாலை 4:30 மணிக்கு மீண்டும் 7 கிலோ மீட்டரில் நாங்கள் இரவு தங்க இருக்கும் செஞ்சேரி நோக்கி தலையை தொங்கப் போட்டுக் கொண்டு நடக்கத் துவங்கினோம்
- சிபி
Very well written & it requires a unique mind to look at the world with humour after walking for several kilometres and running around in circles. This has the potential to become literature. All the very best to you & your team in this endeavour!
ReplyDelete