இரண்டாம் நாள்
அந்த சிறுவர்களுடன் விளையாடியதில் எனக்கு சற்று கால் ஓய்ந்துவிட்டது. அனைவரையும் முன்னால் போகச் சொல்லிவிட்டு நானும் அனுவும் பின்னால் வந்தோம். கிட்டத்தட்ட ஒரு கிமீ அவர்களுக்கும் எங்களுக்கும் இடைவெளி ஏற்பட்டது. வண்டியில் கடப்பவர்கள் முன்னால் செல்பவர்களை பார்த்துவிட்டு அவர்களிடம் எதுவும் பேசாமல் எங்களிடமே வந்து வண்டியை நிறுத்தி கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தனர்.
விளையாடாமல் இருந்திருக்கலாமோ என்று மனம் ஒருபுறம் சிந்திக்க தொடங்கியது. ஏழரை கிலோமீட்டரை பெரும் தொலைவாக உடல் உணரத்தொடங்கியது. உடன் வந்த நண்பர்கள் சிலர் திறன் பேசியை குனிந்து பார்த்துக் கொண்டே கொஞ்ச நேரம், அதிலிருந்து யாருக்காவது அழைத்து பேசிக் கொண்டே சில நேரம் என்று பொழுதை போக்கிக் கொண்டு நடந்தனர். அது எனக்கு கடும் நமைச்சலை ஏற்படுத்தியது. பதினெட்டு நாட்கள் முடிவில் அவர்களுக்கு என்ன நினைவருக்கிறது என்று கேட்டால் சில இன்ஸ்டாகிராம் போஸ்டுகளையும், திறன்பேசியில் பேசிய சில கலந்துரையாடல்களையும் சொல்ல வாய்ப்புள்ளது என்று நினைத்துக் கொண்டேன்.
ஜனவரி 12 மாலை சுமார் ஏழரை மணிக்கு செஞ்சேரியில் தென்னந்தோப்புகளுக்கு நடுவில் இருந்த பால்காரர் செல்வராஜ் அவர்களின் வீட்டை சென்றடைந்தோம். ஃபோனில் என்னிடம் "நம்ம வீடெல்லா சின்ன வீடு தான். அட்ஜஸ்ட் பண்ணி தான் இருக்கனும் இப்பவே சொல்லீற" என்றெல்லாம் திரும்ப திரும்ப சொன்னார். ஆனால் நேரில் சென்று பார்த்தால் அது ஒரு நல்ல சௌகரியமான வீடு தான். ஒவ்வொரு முறை அவருக்கு அழைக்கும் போதும் இதை சொல்லுவார். கூடவே ஒவ்வொரு முறையும் "எத்தன டிக்கெட் வர்றீங்க" என்று தவறாமல் கேட்பார். எத்தனை முறை சொன்னாலும் கேட்பார்.
அவர் மனைவி எங்களுக்காக அரிசீம்பருப்பு சாப்பாடு செய்திருந்தார். நாங்கள் எதாவது குறை சொல்லி விடுவோமோ என்று பயந்திருந்தார் போலும். நாங்கள் சொல்லிவிடக் கூடாது என்று அவரே உப்பு பத்தல, காரம் பத்தல எப்பவுமே இப்படி ஆகாது இந்த முறை தான் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தார். பரவாயில்லை பரவாயில்லை என்று நானும் சலிக்காமல் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆனால் எனக்கு அந்த உணவு பிடித்து தான் இருந்தது. மற்றவர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்று தெரிந்து கொண்டேன்.
எதுக்கு நடக்கறீங்க என்று அப்போது தான் செல்வராஜின் மனைவி கேட்டார். ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்து கொண்டே நடந்து போகிறோம் என்று சொன்னேன்.
"நாங்களா ஒரு ரூவா கூட வாங்கறதே இல்ல. இவரு தா ஊரூரா எல்லாரு ஊட்டுக்கும் கொண்டுவோய் கொடுப்பாரு, ஆனா எங்கூட்டுக்கு கொண்டுவர மாட்டாரு. நானுங்கோட அதே அத்தனைய கொண்டுவோய் கொடுக்கறீங்கோ நம்மூட்டுக்கு கொஞ்சோ கொண்டுவரலாமுலோ அப்புடினு கோட சொல்லுவே. ஆனா இவரு கேக்கறதே இல்ல. இவரு மேல அவ்வளோ நம்பிக்கை வெச்சு அத்தன பணத்த கொடுக்கறாங்கோ அத கரெக்டா கொண்டு போய் கொடுக்கோனும்பாரு" என்றார்.
நாங்கள் அத்தனை பேரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டோம். இப்போது இவர்களிடம் என்ன பேசுவது? எதாவது சொன்னா ராத்திரி தங்க விடாமல் போய்விடுவார்களோ? இப்போது இதை சாப்பிடலாமா வேண்டாமா? என்று பல கேள்விகளுடன் கையில் எடுத்த சோற்றை வாயில் போடாமல் வாயை திறந்தபடியே சில கணங்கள் இருந்தோம்.
பிறகு பேசிக் கொள்ளலாம் இப்போதைக்கு சோறு தான் முக்கியம் என்று வாயில் போட்டு விட்டோம். சரண்யா மட்டும் அவரிடம் கொடுக்கறுதும் தப்பு என்று சொல்லிவிட்டு சாப்பிட தொடங்கிவிட்டார்.
அனு பக்கத்தில் ஒரு கடைக்கு சென்று வந்தாள். செல்லும் வழியில் ஒரு வயதான பெண் ஒரு இளைய பெண்ணின் காலை அழுத்திவிட்டுக் கொண்டு இருந்ததாக என்னிடம் சொன்னாள். அம்மா மகளாக இருப்பார்கள் என்று சொன்னேன். அந்த வயதானவரை பார்த்தால் தாழ்ந்த சாதி போலும் இளையவரை பார்த்தால் உயர்சாதி போலும் தெரிகிறது என்றாள். அப்படிலாம் இருக்காது என்று சொன்னேன்.
"ஏய் அந்த பாட்டி இவங்கள ஏனுங்.. வாங்.. போங்.. என்று தான் பேசினார். நான் கடையில் கடலை இருக்குமா என்று கேட்டதற்கு அந்த இளையவர் முதியவரிடும் அந்த கடை இன்னேரத்துக்கு இருக்குமா" என்று கேட்டதற்கு
"இருக்கும்னு தானுங் நெனைக்கிறே.." என்று அந்த முதியவர் சொன்னதாக அனு சொன்னாள்.
என்னால் அதை துளி கூட நம்ப இயலவில்லை. தாழ்ந்த சாதியினரை கால் அழுத்தி விடச் சொல்வதெல்லாம் உண்மையில் இன்னும் நடக்கிறதா அதுவும் இங்கு நடக்கிறதா எனீறு ஆச்சரியமாக இருந்தது. இப்போதும் அதை நம்ப முடியவில்லை.
வலைப்பூ எழுதியதில் இரவு தூங்க தாமதம் ஆகிவிட்டது. ஒரு மணிக்கு மேல் தான் தூங்கினேன். பெண்கள் வீட்டிற்கு உள்ளேயும், நானும் கௌதமும் மட்டும் வீட்டிற்கு வெளியேயும் படுத்திருந்தோம். கொசு தொல்லை வேறு. காது அருகில் வந்து கொய்ங் கொய்ங் என்று உயிரை வாங்கிக் கொண்டு இருந்தது. மொத்தம் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தான் தூங்கி இருப்பேன். ஜனவரி 13 காலை 5:30 மணிக்கு எழுந்து விட்டேன்.
இரவு சரியாக தூங்காததால் காலை உடல் சோர்வாக இருந்தது. ஆனாலும் நடந்துவிட்டேன். களைப்பு தெரியாமல் இருக்க சில விளையாட்டுகளை விளையாடிக் கொண்டு வந்தோம். உதாரணமாக ஒருவர் ஏதோ ஒன்றை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரே ஒரு க்ளூ கொடுக்க வேண்டும். அதை வைத்து மற்றவர்கள் அவர் என்ன நினைத்தார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு அவர்கள் சில கேள்விகளை கேட்கலாம். ஆமாம், இல்லை என்று மட்டுமே பதில் சொல்ல வேண்டும். அவ்வாறு ஒரு விளையாட்டு விளையாடினோம். அந்த கேள்விகளின் விடைகளை கோர்த்து ஒரு முடிவிற்கு வந்து அதை கண்டுபிடிக்க வேண்டும்.
பிறகு நானும் கௌதமும் மட்டும் ஒரு விளையாட்டு விளையாடினோம். முதலில் அவன் ஒரு வரி சொல்லுவான். பிறகு அதன் தொடர்ச்சியாக நான் ஒரு வரி சொல்வேன். அப்படியே மாற்றி மாற்றி ஒரு கதை எழுத வேண்டும். ஒரு அழகான பெண் ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்தாள், என்று கௌதம் முதல் வரி சொன்னான். அடுத்தடுத்த வரி சொல்லி அது ஒரு மாதிரி சுவாரஸ்யமாக இருந்தது. இறுதியில் ஒரு நல்ல கதையை எழுதி விட்டோம்.
நாங்கள் இருக்கும் ஊருக்கு அருகில் எங்களுடைய பழைய நண்பர்கள் இருவர் இருந்தனர் அவர்களிடம் பேசி காலை உணவு ஏற்பாடு செய்து கொண்டு வருமாறு சொல்லியிருந்தோம். சாப்பாடு, சுண்டல் குழம்பு, ரசம், வடை என்று சுவைமிக்க உணவுகளை அவர்கள் சமைத்து வந்து கொடுத்தார்கள். ஒரு தென்னந்தோப்பின் நடுவில் அமர்ந்து அதில் அங்கங்கு இருந்த வாழை மரத்தில் இருந்து ஒரு பெரும் இலையை அறுத்து ஒரே இலையில் ஏழு பேரும் சாப்பிட்டோம். அபாரமான சாப்பாடு. அதை சாப்பிட்டுவிட்டு ஒரு வளைந்த தென்னைமரத்தில் சாய்ந்து நான் படுத்துவிட்டேன்.
அவர்கள் வந்த உடனேயே சில நிமிடங்களில் பேட்டை காளி பாளையம் குமரேசன் அவர்கள் மதிய உணவோடு காரில் எங்களிடம் வந்துவிட்டார். அப்பறம் சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று சொன்னதால் அவர் அந்த உணவை காரிலேயே வைத்துக் கொண்டு வேறு வேலையாக வெளியே சென்றுவிட்டார். செல்வதற்கு முன்பு நாங்கள் மதியம் ஓய்வெடுப்பதற்கு அங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் செஞ்சேரி புத்தூர் என்னும் ஊரில் PAP அலுவலகத்தில் ஏற்பாடு செய்து விட்டு சென்றார். நாங்கள் காலை உணவே 11 மணி வாக்கில் தான் சாப்பிட்டோம். பிறகு அங்கிருந்து அந்த அலுவலகம் வந்து சேர்வதற்கு 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதற்குள் அவருடைய வேலையை முடித்துவிட்டு அலுவலகம் வந்துவிட்டார்.
முதுகுப்பையை சுமந்து வந்ததில் தோள்பட்டை ரத்தம் கட்டியது போல் கடும் வலி அனைவருக்கும். சற்று சாய்ந்து படுத்து உறங்கி விட்டோம். நான் முந்தைய நாள் இரவும் நன்றாக தூங்காததால் அசந்து தூங்கிவிட்டேன்.
- சிபி
இந்த பயண கட்டுரைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. வாழ்த்துக்கள். "ஓரிலைச் சோறு" என்ன ஒரு அபாரமான phrase!
ReplyDeleteநல்ல நோக்கத்தைக் கொண்ட உங்கள் நடைப்பயணம் வெல்க.
ReplyDeleteசூழலின் இடரைத் தாண்டி தக்க தருணத்தில் ஒலித்த சரண்யாவின் குரலுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete