மூன்றாம் நாள் நடை - சரண்யா
முதல் இரண்டு நாட்களும் வழி மாறி சென்றமையால் திட்டமிட்டதை விட 5 கி.மீ ஆவது கூடுதலாக நடந்து இருப்போம். இந்த முறை, எங்களுக்கு தங்கும் இடம் வழங்கிய செல்வராஜ் அவர்களே வழியைக் கச்சிதமாக சொல்லிவிட்டார். கூகுளும் அதையே காட்டியது.
அன்று போகிப்பண்டிகை. எங்கள் உறவினர் கிராமங்களில், காய்ந்த சருகுகள் மட்டைகள் எல்லாம் சேர்த்து ஆள் உயரத்தில் தீ மூட்டி அதை சுற்றி வந்து மேளம் கொட்டி விளையாடுவார்கள். எங்கள் வீட்டில் குறைந்த பட்சம் ஒரு கொட்டாங்குச்சி, அதற்கு மேல் உபயோகப்படுத்த முடியாத பழைய மூங்கில் பாயாவது கொலுத்துவோம். இந்த முறை கிராமங்களில் செல்வதால் என் எதிர்ப்பார்ப்பு கூடி இருந்தது. எல்லா வீடுகளும் சிமெண்ட் தரைமேல் சாணி மெழுகி பளிச்சென்று இருந்தது. போகிப் பண்டிகைக்கான எந்த தடயமும் காணவில்லை. பழைய பொருட்களைக் கொளுத்தும் வழக்கம் இவர்களுக்கு இல்லையாம். வேப்பம் கொழுந்து பூக்கள் முதலியவை சேர்த்து வீட்டில் கட்டுவார்களாம்.
இரவு பெய்த மழையில் எங்கள் துணிகள் காயாமல் ஈர ஆடைகள் மேலும் எடையைக் கூட்டின. வெயில் இல்லாத ஈரமான சாலைகள்.
அன்றும் பெரும்பகுதி தோப்புகள் வழியாகத் தான் சென்றோம். அர்ச்சனாவை முதலில் கண்டவர்கள் எல்லாம், பள்ளிக்கூடம் போகளியா என்று கேட்டனர். பலர் நாங்கள் பழனி செல்வதாக எண்ணிக் கொண்டனர்.
நாங்கள் சென்ற பாதையில் போக்குவரத்து குறைவாக இருந்ததால், சாலையைக் குறுக்கும் நெடுக்கும் அளந்தபடி சென்றோம். அன்று மக்களிடம் அதிகம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு பள்ளிக்கூடத்தைக் கடக்கும் போது, ஜன்னல் வழியே பையன்கள் கை காட்ட, அனு சென்று துண்டு பிரசுரத்தை அவர்களிடம் தந்து பேசிவிட்டு வந்தாள். "ஆல் த பெஸ்ட் கா" என்று கத்தினார்கள்.
ஒரு சாலை சந்திப்பில் புத்தாண்டுக்கான வாழ்த்தை சாலை நடுவில் எழுதி ஒரு 15 இன்ஸ்டா பக்க ஐடிக்கள் இருந்தன. Coimbatore_maapla - க்கு பொண்ணு கிடைக்கவில்லை போல. சாலையில் விளம்பரப் படுத்தி தேடிக்கொண்டு இருக்கிறார். Crazy, lonely, lover boy போன்ற அடைமொழிகள். இப்படி எழுதுவதால் இவர்களைப் பின்தொடரும் கூட்டம் அதிகரிக்கும் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா. நானும் இன்ஸ்டாகிராம் சென்று சில பெயர்களை (கோயம்பத்தூர் மாப்பிள்ளையை) தேடிப் பார்த்தேன்.
வழியில் சில வாகன ஓட்டிகள் நின்று எங்களிடம் பேசினர். இதுவரை எங்களை எதிர்கொண்ட பெரும்பாலான முகங்களில் ஆச்சரியம் தான். சிலர் நல்ல மாற்றம் என்றனர். பலருக்கு இந்த செயலின் விளைவு மேல் நம்பிக்கை இல்லை என்றாலும் இந்த தீவரத்தின் மேல் அர்ப்பணிப்பின் மேல் மதிப்பு கொண்டிருந்தனர்.
சிலர் நாங்கள் ஓட்டுக்கு காசு வாங்குவதில்லை என்றனர்
சிலர் நாங்கள் வாங்கி இருக்கிறோம் ஆனால் இனி வாங்க மாட்டோம் என்றனர்
சிலர் தங்களுக்கு பதிலாக மூன்றாம் நபரை முன்னிறுத்திப் பேசினர்.
பெரும்பாலானவர்கள் தாங்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவதை வெளிப்படையாக சொல்லக் கூச்சப்பட்டனர். மூன்றாம் நபர் குறித்து பேசுவது போலத் தான் பேசினர். தான் ஒருவர் மட்டும் நேர்மையின் ஒரு பக்கமும் மொத்த உலகமும் இன்னொரு பக்கம் இருப்பது போல ஒரு எண்ணம் நிலவுகிறது.
இந்நிலையில் இந்த நடைப்பயணம், நாட்ல எல்லாரும் இப்படித்தான் இருக்காங்க என்ற தேய் வழக்கை வலிமையுடன் எதிர்த்து நிற்கிறது. நாங்கள் அப்படி இல்லை என்று அறிவிக்கிறது. நம்மில் பலர் நேர்மையாக இருக்கவே விழைகிறோம் என்று எல்லோரையும் ஒன்றினைக்கிறது. இங்கு பெரும்பகுதி மக்கள், இது தவறு தான், ஆனால்... என்று சலனப்படுபவர்கள் தான். அவர்களிடம் மன்றாடும் ஒரு வலுவான குரல், அவர்களை இந்தப்பக்கம் இழுத்துவிடும். இவை மெல்ல மெல்ல நிகழும்.
இவ்வாறு எண்ணங்கள் வர வர இச்செயல்பாட்டில் முழு நம்பிக்கை வந்தது. ரொம்ப தூரம் நடந்து விட்டு இருந்தோம்.
சாலை ஓரம் அமர்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்தபடி சென்றோம்.
அன்று காலை உணவை மாணவர்களின் நண்பர்கள் கொண்டு வந்து இருந்தனர். ஒரே வாழை இலையில் பரிமாறி உண்டோம்.
அன்றிரவு எங்களுக்கு தங்கும் இடம் வழங்கிய குமரேசன் என்பவர் வந்து எங்களை சந்தித்து சென்றார். அன்று மதியம் நாங்கள் தங்க செஞ்செரி புதூர் என்னும் ஊரில் இருக்க இடம் தயார் செய்திருந்தார். மதிய உணவும் குடிநீரும் தந்துவிட்டு சென்றிருந்தார்.
தங்குமிடம் வந்து படியில் இளைப்பாறினோம். என் காலின் மேல் ஒரு பச்சைப் புழு மெல்ல ஏறிக் கொண்டிருந்தது. எப்போதும் ஒவ்வாமையால் தட்டிவிட்டு விடுவேன். இந்த முறை அதை ஒரு இலையில் ஏற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்கு பிடிக்கவில்லை போல. அந்த இலையை அதன் உடலின் ஒரு சிறிய பகுதி பற்றிக் கொள்ள மொத்த உடலையும் தூக்கி சுழற்றி என்னை தாக்குவது போல வளைந்து நின்றது. என் முன் ஒரு மீச்சிறு கேள்விக் குறி. உற்று நோக்க நோக்க பெரிதாகியது.
அதன் முன் பெரிய உருவம் இருப்பதை அறிந்து தான் எழுந்து நின்றதா. காற்றில் அது கீழே விழ, பூ போல தரை அதை தாங்கிக் கொண்டது. விழுந்த வேகத்தில் மீண்டும் இருந்த இடம் நோக்கி கொக்கி உடலை வளைத்து நகர்ந்தது. என்னை நோக்கி வரவும், நான் நகர்ந்து கொண்டேன்.
எத்தனை கி.மீ நடந்தாலும் பையில் ஒரு இளஞ்சிவப்பு நிற பஞ்சு தலையணையைத் தூக்கி வருவது எவ்வளவு அழகான விஷயம். இவர்கள் ஒவ்வொருவரும் அப்படி ஏதாவது ஒன்றை அவர்களுக்கு என்று வைத்திருந்தனர். அதை கேலி செய்தபடி நானும் ரசித்துக்கொண்டு இருந்தேன். பெரிய பெரிய செயல்களில் ஈடுபடும்போது சிறிய இன்பங்களில் கவனம் கொள்ளாமல் இருப்பதும் அவற்றை விட்டுக்கொடுப்பதும் உயர்ந்த பண்பாக சொல்லப்படும். அன்றாட விஷயங்களில் இருக்கும் இன்பங்களை புறக்கணிக்கும் லட்சியவாதம் நீண்ட நாளைக்கு தாக்குப்பிடிப்பது கடினம். இவர்கள் தங்களுக்கு பிடித்தவற்றை சரி என்று படுபவற்றை எளிதில் கை விடுபவர்கள் அல்ல. மீறி செய்தால், அது இன்றியமையாத மேலான விஷயத்திற்காகத் தான் இருக்கும்.
இந்த பயணத்தில் எனக்கு ரொம்ப பிடித்து இருந்ததே, பெரிய விஷயத்தை விளையாட்டாக உற்சாகமாக செய்து வந்தது தான். குழுவில் யாரும் தனியாக உணரக்கூடாது என்று கவனம் கொண்டிருந்தனர்.
சிறிய ஓய்வுக்குப்பின் நடக்க ஆரம்பித்தோம். யாராவது கையில் இருக்கும் குப்பையை, காலி தண்ணீர் புட்டிகளைத் தவறி குப்பைத்தொட்டி அல்லாத இடத்தில் கீழே போட்டால் அனு கண்டபடி திட்டினாள். பைக்குள் வைத்துக்கொள்வோம்.
மாலை பேட்டைகாளிப்பாளையம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். காலையில் சிபியும் கௌதமும் கதை சொல்லும் ஒரு விளையாட்டு விளையாடி ஒரு நல்ல கதை உருவாகி விட்டிருந்தது. ஆசைப்பட்டு, நானும் சிபியும் விளையாடிய போது கதை நகரவே இல்லை. பழைய விளையாட்டை ஆடியபடி சென்றோம்.
சாலை நடுவே ஒரு நாய்க்குட்டி அமர்ந்திருந்தது. குரல் குடுத்ததும் பின்னால் ஓடி வந்தது. நாங்கள் அதை மாறி மாறி துக்கிய படி விளையாடினோம். அங்கு இருந்தவர்களுக்கு அது எப்படி வந்தது என்று தெரியவில்லை. அனு அதை அவள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாள். ஏதாவது ஊருக்குள் விட்டுவிடலாம் என்று தான் முதலில் நினைத்தோம். அதற்கு பெயர் வைக்க முடிவு எடுத்தோம். ஆணா பெண்ணா என்ற சந்தேகம் தீர்ந்து பெண் தான் என்று தெரிந்த பின், பெயர் பட்டியல் இட்டோம். எப்போதும் போல் சிம்பா சிம்பி வேண்டாம். சிம்பா படத்தில் வரும் பெண் சிங்கம் லாலா. அதை வைத்தால் லைலா கோபித்து கொள்வாள் என்று யோசித்தோம். அதன் கண்கள் அழகாக இருந்ததால் கண்மணி என்று வைத்தோம்.
எங்களுடன் பேட்டைகாளிப்பாளையம் வரை கொண்டு வந்து விட்டோம். வழியில் அதற்கு பிஸ்கட் தண்ணி எல்லாம் கொடுத்தோம். சற்று முனகியதும் இறக்கி விட்டோம். ஓரமாக சென்று சிறுநீர் கழித்தது. பின்னர் தூக்கும் படி முனகியது. கொஞ்ச தூரம் நடந்து வந்தது.
நாங்கள் தங்க இருந்த வீட்டில் ஏற்கனவே 'Jack' என்ற நாய் இருந்ததால், கண்மணியை வெளியில் ஒரு கூடையில் விட்டோம். அங்கிருந்தவர் அதை கொண்டு சென்று ஊருக்குள் விட்டு விடுவதாக சொன்னார். எனக்கு மனம் இல்லை. எங்கள் ஊர் அருகில் உள்ள மலைகளில் ஏறும்போது எப்போதும் ஒரு நாய் வந்து சேர்ந்துவிடும். வீடு திரும்பும் வரை உடன் இருக்கும். அதை "பைரவன் வந்துட்டான் பாரு" என்பார்கள். கண்மணியை அவ்வாறே நினைத்தேன். அது வேதாரண்யம் வரை உடன் வரும் என்று கனவுகள் கண்டுவிட்டேன். நான் இவர்களுடன் முழுப்பயணமும் செல்ல முடியாது. கண்மணி இருந்தால் பாதியில் இவர்களுக்கு சிரமம் ஏற்படக்கூடும் என்று யோசித்தேன். லைலா, "அது அங்கேயே இருந்திருக்கும் அத தூக்கிட்டு வந்து இருக்க கூடாது" என்றாள். அனுவும் கண்மணியை அனுப்ப ஒப்புக் கொண்டாள். வேறு வழி இல்லை. எடுத்துச் சென்றுவிட்டார்.
கௌதம் சௌமியா
தவிர எல்லோரும் குளித்து முடித்து சாப்பிட்டு விட்டோம்.
அண்ணன் குளித்துவிட்டு வந்தார். துணிகளைத் துவைக்கச் சென்றார். ஒரு சட்டையை எடுத்து மெல்ல கல்லுக்கும் சட்டைக்கும் வலிக்காமல் அடித்து ப்ரஷ் போட்டு துவைத்து இரண்டுமுறை அலசி காயப்போட்டுவிட்டு, அடுத்த சட்டைக்கு மேற்கூறிய சடங்கை திரும்ப செய்தார். அடுத்தது...
- சரண்யா
- சரண்யா
Comments
Post a Comment