நான்காம் நாள் நடை - சரண்யா


பேட்டைக்காளிப் பாளையத்தில் இருந்து நாங்கள் காலையில் தாமதித்து தாராபுரம் நோக்கி கிளம்பினோம். வழியில் சில கிராமங்களில் மக்களுடன் பேசியபடி வந்தோம். சில வார்த்தைகளுக்கு மேல் நான் எதுவும் பேச முடியாமல் திணறினேன். பசி, ஒரு நாள் கூலி என்று சொன்னார்கள். சிபி மேற்கொண்டு பேசினான். பாவக்காசு உங்களுக்கு நிம்மதி அளிக்குமா, அதை வாங்கும் ஒருவரையும் வாங்காத ஒருவரையும் நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள் என்ற கேள்விகளுக்கு அவர்கள் அமைதி காத்தனர். அதன் பின்னர், என்னென்ன மாதிரியான எதிர்வினைகள் பொதுவாக வரும் என்று சிபி எனக்கு விளக்கிக் கொண்டு வந்தான். 
 
நேரம் செல்லசெல்ல வழியில் இரு பக்கம் இருந்த தென்னந்தத் தோப்புகள் குறைந்து மஞ்சள் பூக்கள் கொண்ட புதர்ச்செடிகளும் முட் செடிகளும் வரத் தொடங்கின. உப்பாறு அணையின் கரையை அடைந்தோம். நீர் நிரம்பி இருந்தது. மடையான்கள், வெள்ளை கொக்குகள் அதிகம் இருந்தன. நாங்கள் வெயில் தாங்காமல் கரையில் இருந்து சீக்கிரமே இறங்கிவிட்டோம்.

அணைக்கு செல்லும் வழியில் இரண்டு எருமைகள் எங்கள் ப்ளூ டூத் ஒலிப் பெருக்கிக்கு மிரண்டு எழுந்து வயலுக்குள் நின்றன. இந்த எருமைகள் நல்ல கம்பீரமான தோற்றமும் முருகிய கொம்புகளும் உற்று நோக்கும் கரிய விழிகளும் கொண்டிருந்தன. விழிகள் அசையாமல் நாங்கள் சாலையின் வளைவில் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தன. என்ன நடந்தாலும் நடக்கட்டும் நிதானமா போகலாம் என்று அசைந்துக் கொடுக்காமல் செல்லும் எருமைகளைத் தான் பார்த்திருக்கிறேன். இந்த எருமைகள் சிறிய சத்தத்திற்கு எழுந்து தள்ளி நின்று கண்கள் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தன. எதிரில் ஒரு ஆள் நின்று விழி கொட்டாமல் நம்மை அளப்பது போல் இருந்தது இவற்றின் பார்வை. மற்றவர்களும் இது போன்ற எருமைகளைப் பார்த்தது இல்லை என்றனர். அடுத்த வயலில் இருந்த சில பசு மாடுகள் அரை நொடி நிமிர்ந்துப் பார்த்துவிட்டு மீண்டும் மேயத் தொடங்கி விட்டன. 
அன்று காலை உணவை பேட்டைக்காளிப்பாளையம் குமரேசன் அவர்களே வந்து தந்தார். பூரியையும் பொங்கலையும் பார்த்தப்பின் தான் அன்று பொங்கல் பண்டிகை என்ற நினைப்பே வந்தது. வந்த வழியில் பெரிய அளவில் கிராமங்கள் இல்லை. எந்த ஊரிலும் பண்டிகை ஜோர் இல்லை. புத்தாடை அணிந்த ஒருவரையும் காணவில்லை. வாசலில் பொங்கல் பானை கோலங்கள் கூட இருந்திருக்கவில்லை. அவரவர் அன்றாட வேலைகளை செய்து கொண்டு இருந்தனர். தைப் பொங்கலை விட மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படும் என்று நண்பர்கள் சொன்னார்கள். நாளைக்கு பார்ப்போம் என்று எண்ணிக் கொண்டேன்.

எங்களுக்கு மதியம் ஓய்வெடுக்க தேர்ப்பாதை என்னும் ஊரில் மீண்டும் குமரேசன் அவர்களே இடம் ஏற்பாடு செய்தளித்து இருந்தார். அங்கு பொங்கலுக்கு அறிகுறியாக, கரும்பு விற்றுக் கொண்டு இருந்தனர். அதை பார்த்ததும் எனக்கு ஒரு குஷி. ஒரு கரும்பை வாங்கி வெட்டி பையில் வைத்துக் கொண்டோம். 
மதிய உணவை லிங்கராஜ் அவர்கள் கொண்டு வந்து இருந்தார். எங்களில் சிலரின் பைகளையும் அவர் வாங்கிக் கொண்டு சென்றார். 
ஓய்வுக்குப்பின் மாலையில் தாராபுரம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். குழு வெகு முன்னால் செல்ல நானும் அர்ச்சனாவும் கடைசியில் நடந்தபடி இருந்தோம். ஒரு தேநீர்க் கடையில் ஒரு கணவன் மனைவி எங்களைக் கூப்பிட்டு விசாரித்தனர். அவர்கள் எப்போதும் பா.ஜ.க வுக்கு வாக்களிப்பவர்கள் என்றும், அந்த கட்சி காசு வழங்குவதில்லை என்றும் கூறினர். இது போல் முந்தைய நாள் வேறொரு ஊரில் இன்னொருவரும் சொன்னார். திராவிடக் கட்சிகள் தான் காசு வழங்குவதாகவும், தமிழகத்தில் இவை அதிகம் என்றும், இங்கிருந்து பிற மாநிலங்களில் பரவுவதாகவும் கூறினார். இது அவரவர் அனுமானங்களா, அவர்கள் ஆதரிக்கும் கட்சியை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார்களா, இல்லை உண்மையா என்று தெரியவில்லை. இவற்றைக் கொண்டு தீர்மானமாக எதையும் சொல்லிவிட முடியாது. இப்படி ஒரு பேச்சு இருப்பது கவனத்திற்குரியது.

வழியில் சில ஊர்களில் பாட்டுப் போட்டிகள் போன்றவை வைத்து ஒலிப் பெருக்கியில் பெயர்களைக் கூவி, பரிசுப் பொருட்களை அறிவித்துக் கொண்டு இருந்தனர். ஆனால், விழாவை பார்க்க முடியவில்லை. பொங்கல் பண்டிகைக்கு இன்னொரு அறிகுறியாக இருந்தது. 
என் நடை வேகம் மேலும் குறைந்து கடைசியில் வந்து கொண்டு இருந்தேன். கரும்பு தின்றபடி வந்ததும் தோள்பட்டை வலியும் காரணம். உடலின் மற்ற பகுதிகளில் எனக்கு அதிக வலி தெரியவில்லை. ஆனால், அர்ச்சனா தன் தட்டைக்கால்களுடன் எப்படி நடக்கிறாள் என்று தோன்றும். முதல் முறை அவளுடைய கால்களைப் பார்த்த போது முக்குளிப்பானின் நினைவு வந்தது. அவை நடப்பதற்குறிய கால்களே அல்ல. அவளின் மொத்த எடையும் பாதங்களில் பதியாமல் கால் மணிக்கட்டில் பதிந்து அது தரையில் உராய்வது போல இருந்தது. முதல் நாளில் இவளைப் பார்த்தபோது 400 கி. மீ எப்படி நடக்க போகிறாள் என்றும் முழு பயணத்தை இவள் முடித்தால் அது ஒரு சாதனை என்றும் நினைத்தேன். இரண்டு மூன்று நாட்களில், கால் வலியை எப்போதும் உடனிருக்கும் உடலுறுப்பு போல கையாளப் பழகி இருந்தாள். முதுகில் பையுடன் உடல் கூன் போட்டு, அசைந்து அசைந்து நடக்கும் போதும், "பொண்ணுங்க ஜங்கு ஜங்கு" என்று அவளுக்குள் எதையோ பாடியபடி நடந்து வருவாள். அது அவளின் ஊக்க மருந்து. வரும் வழியில் உள்ள செடி கொடிகளின் மருத்துவ குணங்கள் பற்றி பேசுவதில் இவளுக்கு ஆர்வம் உண்டு. அக்கா இந்தச் செடியை துவையல் செஞ்சி சாப்டுரீங்களா என்று ஆசையுடன் கேட்டு அரளியையும் கள்ளிச் செடியையும் காட்டுவாள். என்னுடைய தொண்டை வலிக்கு சர்வலோக நிவாரணியாக பால்டாயிலில் பெப்பர் போட்டு குடிக்க சொல்வால். இந்தக் குட்டி வாத்து விரைவிலேயே குழுவின் செல்லப் பிள்ளையாகிவிட்டிருந்தாள். அவளை தேவதை என்றும் கடவுள் வானவில்லில் சறுக்கி இறக்கிவிட்டார் என்றும் உண்மையைப் போலவே சொல்லுவாள். அதை நம்பலாம்.
அன்று மாலை ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் எங்களுடன் வந்து இணைந்து தாராபுரம் வரை நடக்கத் தொடங்கினார். மேலும் உற்சாகம் கொண்டு சிரித்து பேசியபடி நடந்தோம். நான்கு நாட்களைப் பற்றி அவரிடம் சொல்ல ஏராளமான கதைகள் இருந்தன. எங்கள் பைகளை அவர் வந்த வாகனத்தில் வைத்து அனுப்பிவிட்டதால், தோள் வலி குறைந்தது. அது வரை கவனத்திற்கு வராத இடுப்பு எலும்புகள் வலித்தன. அதை விட பெரிய வலி இருக்கும் வரை அது தெரியவே இல்லை. வலி என்பது நாம் கவனத்தில் கொள்வதால் தான் வலிக்கிறதா. கவனத்தில் கொள்ளாவடிவில் மறைந்துவிடுமா. பெரிய அளவில் ஒரு விஷயம் கவனத்தை இழுத்துக் கொண்டால், மற்றவை பொருட்படுத்துபவை அல்லாததாகிறது.

அன்று இரவு தாராபுரம் அருள் ஜோதி ஆசிரமத்தில் தங்கினோம். எங்களுக்கு மாணவர்களுக்கான தனி அறை ஒதுக்கி இருந்தனர். மறுநாள் நான் பெங்களூரு கிளம்ப வேண்டி இருந்ததால், எப்படி எல்லாம் மேலும் விடுப்பு எடுக்கலாம் என்று நான் யோசிக்க மற்றவர்கள் எனக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டு இருந்தனர்.

- சரண்யா

Comments

Popular posts from this blog

400 கி.மீ நடைபயணம்

ஏழாம் நாள்

அறப்போர் ஜெயராம் நேர்காணல்