பன்னிரண்டாம் நாள் - சிபி

 ஜனவரி 22 ஆம் தேதி காலை திருச்சியிலுள்ள துவரங்குறிச்சியில் இருந்து துண்டு பிரசுரங்களை கொடுத்தபடியே நடக்கத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே ஒருவர் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு டீ குடிக்கும் படி அழைத்தார். அவருடைய நண்பர்கள் சிலரும் வந்து பேசினர். கொஞ்ச நேரம் மிகவும் பரபரப்புடன் பேசிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்கிறோம், இறுதி நாள் விழா என்றைக்கு என்று பல கேள்விகளை கேட்டு அவசர அவசரமாக ஏற்கனவே அவை குறிப்பிட்டிருக்கும் துண்டு பிரசுத்தில் மீண்டும் எழுதினார். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போதே அவர் மீண்டும் அதை எடுத்து பார்க்கப் போவது இல்லை என்று எனக்கு தோன்றியது.


அங்கிருந்து ஒரு குறுகிய சந்து வழியாக, கண்டபடி வளைந்து வீடுகளுக்கு நடுவில் வழி சென்றது. இதுவும் வீட்டு மனை சந்துகளுக்குள் செல்வதால் முட்டுச் சந்தாக முடிந்துவிடுமோ என்று பயந்து கொண்டே தான் நடந்து வந்தேன். ஆனால் நல்ல வேளையாக சந்துகளை தாண்டி பெரிய சாலையில் வழி சென்று முடிந்தது. இம்முறை அவ்வாறு முட்டுச் சந்தாக முடிந்தாலும் நான் பயப்படத் தேவையில்லை. வழி பார்க்கும் பொறுப்பு முழுவதும் கௌதமுடையது.

திண்டுக்கல் மாவட்டம் தாண்டியவுடன் மக்கள் மனநிலை மாறத் தொடங்கியது. திண்டுக்கல்லில் எங்களுக்கு இருந்த நிராகரிப்பு இங்கு ஒரு இடத்தில் கூட இல்லை. ஒட்டுமொத்தமாக அனைவருமே ஆதரவு மட்டுமே. அனைவரும் வியக்கிறார்கள். நல்ல செயல் என்று பாராட்டுகிறார்கள். மகிழ்கிறார்கள். புதிய உற்சாகம் பிறந்தது. தாவித் தாவி அனைவரிடமும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினோம். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஒரு கடையில் இருந்து சில குளிர்பானப் புட்டிகளை அர்ச்சனாவிடம் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். அதை குடிக்க முடியாமல் கொஞ்சம் குடித்து,‌ மீதியை தூக்கி வீசிவிட்டு நடந்து சென்றோம்.


இரண்டு இளைஞர்களிடம் பேசும் போது அவர்கள் இரண்டு நாட்கள் முன்பு பழனி பாதயாத்திரை சென்று கால்கள் ரத்தம் கட்டி நடக்க முடியாமல் இருந்ததை சொன்னார்கள். 400 கிமீ நடந்து செல்கிறோம் என்று சொன்னதும் ஆச்சர்யத்தில் அவர்களுக்கு வாய் மூடவே இல்லை. அங்கிருந்து வழி ஒரு காட்டுப் பாதைக்குள் சென்றது. இரண்டு புறமும் நெரிசலான, அடர்த்தியான மரங்களின் தொகுப்பு. நேற்று மணக்காட்டூர் வரும் வழியில் இருந்த அளவு ஈரப்பதம் உள்ள வளமையான மரங்கள் போல் தெரியவில்லை. முதல் பார்வைக்கு கொஞ்சம் வறண்ட பகுதிகளில் வளரும் மரம் போல் தெரிந்தது. அவ்வளவு மரங்கள் இருந்தும் நடந்து செல்லும் வழியில் பெரிதளவு நிழல் தரவில்லை.

ஒரு இடத்தில் சாலையில் சில ஆட்டுக் குட்டிகள் மேய்ந்து கொண்டு இருந்தது. அனு அதில் சிலவற்றை விரட்டி விளையாடினாள். உள்ளே ஒரு இருநூறு மீட்டர் தாண்டி சில பெண்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அவர்கள் அங்கிருந்து யாரு நீங்க? எங்கிருந்து வறீங்க? என்று கத்தலாக கேட்டனர். அந்த கத்தல் அனுவின் காதில் கேட்கவில்லை. சிறு குழந்தையாகவே மாறிவிட்டாள். மீண்டும் இன்னொரு குட்டியை துரத்தி விரட்டினாள். உடனே அங்கு உள்ளே அமர்ந்திருந்த ஒரு பெண் “அந்த செவலக் குட்டிய தூக்கி பையில போட்டுட்டு போ” என்று விளையாட்டாக சொன்னார். நாங்கள் சிரித்தோம். ஆனால், இப்போதும் அனுவிற்கு அவர் பேசியது கேட்கவில்லை. மீண்டும் ஒரு குட்டியிடம் ஓடினாள். நாங்கள் கத்தி அங்க பார் என்று சொன்னோம். அவர்களை திரும்பி பார்த்தவுடன் மண்ணள்ளி தின்ற குழந்தை அம்மாவை பார்த்து பம்புவது போல் பம்பினாள். சிரித்துக் கொண்டே யாரு நீங்க என்று அவர்களில் ஒருவர் மீண்டும் கத்திக் கேட்டனர்.

நாங்கல்லா காலேஜ்ஜு ஸ்டூடெண்டு” என்று இங்கிருந்து நாங்களும் கத்தினோம்.

எங்கிருந்து வறீங்க” மீண்டும் கத்தல். 

 கோயம்புத்தூருல இருந்து வறோம்.” பதில் கத்தல்.

சேரி, சேரி இங்கென்ன” 

 ஓட்டுக்கு பணம் வாங்காதீங்கனு ஊர் ஊரா சொல்லீட்டு அங்க இருந்து நடந்து வறோம்”

நடந்து வர்றீங்களா?” அரைக்கத்தலாக ஆச்சரியம் வந்தது.

எங்க போறீங்க?”

வேதாரண்யம்”

சிரிப்பொலிகள் அடங்கி ஒரு கணம் நிசப்தம் இருந்தது. அதன்பின் நாங்கள் வருகிறோம் என்று சொல்லிவிட்டு சில துண்டு பிரசுரங்களை சாலை மீது வைத்து பறக்காமல் இருப்பதற்காக ஒரு பிராந்தி பாட்டிலை வைத்து விட்டு வந்தோம்.


அந்த மரங்கள் அடர்ந்த பாதையை தாண்டி ஒரு சிறிய ஊருக்குள் வந்தோம். எங்களுக்கு முன்னால் கௌதமும் சௌமியாவும் மட்டும் எப்போதும் போல் விரைவாக சென்று ஒரு இடத்தில் காத்திருந்தனர்.  ஒரு அடர்ந்த கிளைகளுடைய புளியமரம். நீண்டு வளர்ந்த கிளைகள்.  கொத்துக் கொத்தாக புளி காய்த்து தொங்கிக் கொண்டு இருந்தது. வேர்கள் புடைத்து மேலெழுந்து மீண்டும் உள் சென்றிருந்தது. மாபெரும் இறுகிய பாம்புகள் புற்றுக்குள் நுழையும் போது அப்படியே உறைந்து விட்டது போல் இருந்தது. அதன் மேல் ஏறி கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தோம். என்னதான் நன்றாக இருந்தாலும் ஒரு வாட்டம் கிடைக்கவில்லை. கொஞ்ச நேரத்திற்கு மேல் ஒரே கிடையில் உக்கார இயலாது. எழுந்து கொஞ்ச நேரம் நின்றோம்.

இப்போதெல்லாம் எங்காவது ஓய்வென்று நின்றாலே எனக்கும் கௌதமிற்கும் விளையாட்டென்று ஆகிவிட்டது. அந்த மரத்தை தாண்டி கொஞ்சம் தள்ளி ஒரு குட்டை இருந்தது. அடர் பச்சை நிற தண்ணீரில், செடிகள் உள்ளேயும் வெளியேயும் வளர்ந்து அந்த குட்டையை சூழ்ந்திருந்தது.


இரண்டு இளம் ஆண்கள் சேர்ந்தாலே போட்டிகளும் விளையாட்டு சண்டைகளும் இருக்கும். எனக்கும் அவனுக்கும் உடனடியாக ஒரு போட்டி உருவானது. யார் அதிக தூரம் கல்லை எறிகிறார் என்று பார்கலாம் என்று சொல்லி அவனை அழைத்தேன். எதாவது ஒன்றை செய்து இன்னொருவனை சீண்டாமல் இருக்க முடியாது. எப்படியும் அதில் கௌதம் தான் ஜெயிப்பான் என்று எனக்கும் முன்னரே தெரியும். நான் கிரிக்கெட் விளையாடி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவன் தொடர்ச்சியாக வார இறுதிகளில் விளையாடிக் கொண்டிருப்பவன். அவன் என்னை விட அதிக தூரம் வீசக் கூடியவன் தான். ஆனாலும் அதை நாமே எப்படி ஒத்துக் கொள்ள முடியும். "ஒன்னையெல்லா ஈஸியா தோக்கடிச்சிட்டு போயிட்டே இருப்பன் டா.. பொடி பையா தள்ளி போ" என்று சீண்டும் வசனத்தை சொல்லாமல் இருக்க முடியாது. நான் வீசுவதை விட அதிக தூரம் அவன் வீசிவிட்டால், நீ தட்டை கல்லில் வீசுகிறாய்,‌ உருண்டை கல்லில் வீசுகிறாய் என்னுடைய கல்லின் வடிவம் சரியில்லை, எடை சரியில்லை என்று எதாவது ஒன்றை சொல்லி அதை சமாளித்தே ஆக வேண்டும். அந்த தோரணையை மட்டும் இருவருமே கடைசி வரை விட்டுக் கொடுக்க மாட்டோம். நான் அதிக தூரம் வீசிவிட்டாலும் அவனும் அதே தான் செய்வான். நாங்கள் அந்த பச்சை குட்டையை தாண்டி வீசிக் கொண்டு இருந்தோம். ஒரு கட்டத்தில் அதிக தூரம் வீசுவது நமக்கு சரி வராது என்று தெரிந்து விட்டது. அதனால் அதிக உயரம் வீசும் போட்டி வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னேன். அவன் என்னமோ அத்தனை செங்குத்தாக, உயரமாக வீசுகிறான்.‌ நான் உயரமாக வீசினாலே அது தூர வாக்கிலேயே போகிறது. சரி அதுவும் வேண்டாம் குறி பார்த்து எறியும் போட்டி. ஒரு உடைந்து போன கருப்பு டப்பா குப்பை மேட்டில் குப்பர கிடந்தது. அதை அடிக்க வேண்டும். அதில் வேண்டுமானால் அவனை விட அதிக முறை நான் அடித்திருப்பேன். நான் இட்ட ஒரு கல் அந்த டப்பாவை இரண்டு புறமும் துளையிட்டு மறுகிடை போய் விழுந்தது.

சில தோழிகள் எனக்காக சிலவற்றை வேண்டிக் கொண்டார்கள். நான் மூன்று முறைகளுக்குள் அந்த டப்பாவை அடித்து விட்டால் அது நிறைவேறும் என்றார்கள்.‌ சும்மா விட்டிருந்தால் கூட தெரியாமல் எங்காவது பட்டிருக்கும். அடித்தால் நடக்கும் என்றெல்லாம் சொல்லி பதற்றத்தை கிளப்பி முதல் மூன்று கல்லுமே சம்மந்தம் இல்லாத இடங்களில் பறந்து கொண்டிருந்தது. பலமுறை முயற்சித்த பின் இது வேளைக்காகாது என்று‌ மிக அருகில் சென்று அடித்தேன். அப்பாடா நடந்துவிடும் என்று நினைத்துக் கொண்டேன்.


அங்கிருந்து மீண்டும் நடக்கத் தொடங்கி வேறு ஒரு இடத்தில் ஒரு பெரும் அரசமரத்தடியில் அமர்ந்தோம். அந்த மரத்தின் அடியில் அமர்வதற்கு ஏதுவாக சிமெண்ட் திண்ணை போட்டு வைத்திருந்தார்கள். பிரம்மாண்டமான அந்த மரத்தின் வேர்கள் முட்டி மோதி அந்த‌ காரைகளை பிளந்து மேலெழுந்து கொண்டிருந்தது. காரைத் துண்டுகள் மேலும் கீழுமாக சாய்ந்திருந்தது. அதில் எப்படியோ ஒரு மாதிரியாக சாய்ந்து அமர்ந்து கொண்டோம். மீண்டும் அந்த குறுகிய நேரத்தில் நானும் கௌதமும் பிளாஸ்டிக் பேட்டையும், பந்தையும் எடுத்துக் கொண்டு களத்தில் குதித்தோம். தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தாலும் அவனால் என்னை கிரிக்கெட் போட்டியில் மட்டும் தோற்கடிக்கவே முடிவதில்லை. அன்றும் நான் தான் அதிக ஃபோர்களை அடித்தேன். ஒரு கட்டதில் நான் அடித்த பந்து எக்கு தப்பாக பட்டு ஒரு வீட்டின் மதில் சுவரை தாண்டி சென்று விட்டது.

கௌதம் அந்த வீட்டின் கதவை தாண்டி குதித்து எடுத்து வருவதாக சொல்லி முயற்சித்து மண்டையில் அடிவாங்கி திரும்பினான். அனைவரும் வெடித்துச் சிரித்துக் கொண்டு இருந்தோம். யாராலும் நிறுத்த முடியாத சிரிப்பு. அவ்வளவு தான் பந்து போனது இனிமேல் விளையாட முடியாது என்று நினைக்கும் போது சௌமியா ஸ்ரீ வந்து நான் எடுத்துக் கொடுக்கிறேன் என்று சொல்லி கதவில் தொற்றினாள். பல்லி போல் ஏறி குதித்து பந்தை எடுத்து வீசிவிட்டு படு பந்தாவாக நடந்து சென்று அமர்ந்தாள். அதன் பிறகு மீண்டும் கொஞ்ச நேரம் அங்கு விளையாடி விட்டு அங்கு இருந்து கிளம்பி விட்டோம்.

மீண்டும் கௌதம், சௌமியா முன்னால் சென்று விட்டார்கள். நாங்கள் பின்னால் நடந்து வந்து கொண்டிருக்கும் போது ஒரு காட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் பெண் எங்களை பார்த்து விசாரித்தார். பிறகு எங்களை வந்து அவர் வீட்டில் சாப்பிட்டுச் செல்லுமாறு சொன்னார். நான் இல்லை பரவாயில்லை என்று சொல்லி திரும்பினேன். பார்த்தால் அனைவரின் முகமும் சுணங்கி போய் இருந்தது. என்ன என்று கேட்டேன். முகத்தை மிக பாவமாக வைத்துக் கொண்டு பசிக்குது என்றார்கள். காலை, நேற்று இரவு உமையாள், தேனப்பன் கொண்டு வந்த மீதமான இட்லி உப்மாவை மட்டுமே சாப்பிட்டு வந்ததால் இன்று மதியம் அனைவருக்குமே சீக்கிரம் பசியாகிவிட்டது. அதன்பின் மீண்டும் அவரிடம் சென்று சாப்பாடு கிடைக்குமா என்று கேட்டோம். அவர் வீடு நாங்கள் வந்த வழி மீண்டும் ஒரு கிமீ செல்ல வேண்டும். சென்றாலும் ஆறு பேருக்கு உணவில்லை இனிமேல் தான் செய்ய வேண்டும். அது சரிவராது தாமதமாகி விடும் என்று சொல்லி முன்னால் சென்று சாப்பிட்டுக் கொள்வதாக சொல்லி கிளம்பினோம். அவருக்கு முகமே இல்லை. எங்களுக்கு சாப்பாடு போட முடியவில்லை என்று மிகவும் வருந்தினார். ஆனால் வேறு வழியும் இல்லாததால் அங்கிருந்து நகர்ந்து சென்று இரண்டு கிமீ தள்ளி இரணிபேட்டை என்னும் ஊரில் ஒரு கடையில் சாப்பிட்டோம்.

சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து நாங்கள் கொஞ்ச தூரம் நடந்ததும் ஒரு கிணறு இருந்தது. அது வாலியில் தண்ணீரை அள்ளி கயிரில் இழுத்து மேலே கொண்டு வருவது போன்ற ஒரு கிணறு. நான் இதற்கு முன் இது போல் அள்ளி இரைக்கும் கிணறுகள் சிலவற்றை பார்த்திருந்தாலும் அவை பெரும்பாலும் பயன்பாடு இல்லாமல் வற்றிப் போனவையாக இருக்கும். ஆனால் இது ஒரு கோவிலில் தொடர் பயன்பாட்டில் இருந்தது. சும்மாவே கொஞ்ச நேரம் அதில் தண்ணீரை அள்ளி மீண்டும் மீண்டும் அதே கிணற்றில் ஊற்றி விளையாடிக் கொண்டு இருந்தோம்.


அங்கிருந்து நடக்கத் தொடங்கி கொஞ்ச நேரத்தில் ஈரோட்டில் இருந்து கிருஷ்ணன், பாரி. சபரீஷ் ஆகியோர் வந்தார்கள். பாரி மற்றும் கிருஷ்ணன் இருவரும் எங்களுடன் கொஞ்ச தூரம் நடப்பதாகவும், சபரீஷ் எங்களுடன் இறுதி நாள் பயணம் முடியும் வரை நடப்பதாகவும் திட்டத்துடன் வந்திருந்தனர். அவர்கள் வரும் போது ஒரு வீட்டில் நின்று நாங்கள் கொய்யாப் பழம் பறித்து சாப்பிட்டுக் கொண்டு அந்த வீட்டுக் காரர்களுக்கு நடைபயணம் குறித்து சொல்லிக் கொண்டு இருந்தோம். 

காரை ஒரு ஓரமாக போட்டுவிட்டு எங்களுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினார்கள். கூடவே பிரச்சாரமும் செய்தார்கள். இரண்டு புறமும் பள்ளமாகவும் சாலை மட்டும் உயரமாகவும் உள்ள ஒரு வழியில் சென்றோம். பள்ளம் என்றால் ஒரு அடி பள்ளம் அல்ல. ஐந்தாறு அடிக்கு இரண்டு புறமும் பள்ளம். வலது புறம் ஒரு பெரிய குளம். இடது புறம் வயல்கள். இருபுறமும் கூடாரம் போல சூழ்ந்த மரங்கள். ஒரு வனத்திற்குள் செல்வது போல இருந்தது. அந்த தார்ச் சாலை ஒரு இடத்தில் மண் சாலையாக மாறிவிட்டது.


நாங்கள் பிரச்சாரம் செய்து கடந்து வந்த ஒரு நபர் வண்டியை எடுத்துக் கொண்டு எங்களை பின்தொடர்ந்து வந்து மீண்டும் எங்களை பார்த்து பேசினார். நிறைவு விழாவில் கலந்து கொள்ளப் போவதாகவும் சொன்னார். கிருஷ்ணன் எங்கள் நடைபயண அனுபவங்கள் குறித்து கேட்டுக் கொண்டு வந்தார். அப்போது அவர் “இது போன்ற ஒரு நாள் என்பது மிக நீண்டதாக இருக்கும். பொதுவாக சராரிகளுக்கு ஒரு நாளில் எந்த நிகழ்வுமே நடக்காது. ஆனால் பயணத்தின் போது ஒருநாளில் பல நிகழ்வுகள் நடக்கும். அதனால் அது நீண்ட நாளாக தெரியும். அதே போல் இவ்வாறு நடந்து வரும் போது நேரம் மிகவும் மெதுவாக செல்வது போல் தோன்றும். சுற்றியுள்ள அனைத்தையும் இன்னும் கூடுதலாக கவனிப்போம். வண்டியில் செல்லும் போது வேகமாக கடந்து சென்றுவிடுவதை இப்போது மேலும் அடர்த்தியாக பார்க்க முடியும். இந்த மரம் நடந்து போகும் போது தான் எவ்வளவு பெரியது என்று அதன் ஆகிருதியை உணர்வோம்” என்று ஒரு பெரிய மரத்தை சுட்டிக் காட்டி சொன்னார். இப்போதும் அந்த மரம் அப்படியே நிழற்படம் போல் மனதில் உறைந்து விட்டது.


அது அந்திக்கு முந்தைய பொழுது. வானம் இருள் சூழ்ந்து லேசான மழை பொழியத் தொடங்கியது. பாதி வழியில் பாரி அண்ணா திரும்பி சென்று வண்டியை எடுத்து வந்து எங்களுக்கு முன் நிறுத்தி இருந்தார். வண்டியில் தான் எங்களுடைய பை இருந்தது. அதில் இருந்து மழைக் கோட்டை மட்டும்  எடுத்து மாட்டிக் கொண்டு, தற்காப்பிற்காக வாங்கி வைத்திருந்த செருப்புகளை எடுத்து மாட்டிக் கொண்டு ஷூவை கழற்றி வண்டியில் போட்டுவிட்டு நடக்கத் தொடங்கினோம். கிருஷ்ணன் மற்றும் பாரி இருவரும் எங்கள் பைகளை கொண்டு சென்று நாங்கள் இரவு தங்கவிருக்கும் காரையூரில் சிலம்பரசன் என்பவரின் வீட்டில் வைத்து விட்டு சென்று விட்டனர். அனைத்து திட்டமிடலும் முடிந்த உடன் மழை நின்று விட்டது. ஷூ போட்டு நடந்து பழகி விட்டதால் செருப்பு போட்டு எங்கள் யாராலுமே நடக்க முடியவில்லை. இன்னும் ஏழு கிமீ நடக்க வேண்டும். ஒவ்வொரு அடியும் பெரும் வலியாக இருந்தது. செருப்பை தூக்கி வைப்பதற்கே ஒரு பெரும் சக்தியை செலவழிக்க வேண்டி இருந்தது. பாதத்தில் பல்லாயிரம் ஊசிகளால் குத்துவது போல் இருந்தது. தட்டை கால் கொண்ட அர்ச்சனாவிற்கு இன்னும் சிரமம். இந்த ஏழு கிமீ எப்போது தான் முடியும் என்று எண்ணிக் கொண்டே நடந்தோம். வண்டியில் சென்றவர்களை திரும்ப வரச் சொல்லலாமா என்றெல்லாம் யோசித்து பார்த்து எப்படியும் வர மாட்டார்கள்  என்று அந்த எண்ணத்தை கைவிட்டோம்.

தத்தி தத்தி, காலை தேய்த்து தேய்த்து ஒரு வழியாக சிலம்பரசன் அனுப்பி இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். அங்கு ஒரு வீடு இருந்தது. யாரோ ஒருவர் வந்து யார் நீங்கள்? எங்க போகணும்? என்று கேட்டார். முன்னால் உள்ள வீட்டை கை காட்டி அந்த வீட்டுல தங்க போறோம் என்று சொன்னோம். அவர் உடனே “ஓஹோ அப்படியா! சேரி சேரி அது என்னோட வீடு தான் யாரு நீங்க என்னோட வீட்டுல தங்கறனு சொல்றீங்க?” என்றார். சிலம்பரசன் வீடு இது இல்லையா என்று கேட்டோம். அப்படியெல்லாம் இங்க யாருமே இல்லை என்றார். மீண்டும் சிலம்பரசனுக்கு அழைத்து கேட்டால் அவர் வாசலிலேயே தான் நிற்கிறேன் என்கிறார். மீண்டும் லொகேசன் அனுப்புங்கள் என்று சொன்னோம். அவர் இப்போது அனுப்பியது வேறு இடம் காட்டியது. அது இன்னும் ஒன்றரை கிமீ காட்டியது. ஒருமித்த குரலில் அய்யோ என்ற சத்தம் கேட்டது. மீண்டும் நடக்க வேண்டுமா..

ஒருவழியாக அவர் வீட்டை சென்று சேர்ந்து விட்டோம். தவளை குஞ்சுகள் வீடு முழுக்க ஆங்காங்கு சுவரில் ஒட்டிக் கொண்டு இருந்தது. 

எங்களுக்காக கோழிக் குழம்பு, பொறித்த மீன் எல்லாம் தயாராகிக் கொண்டு இருந்தது. சிலம்பரசனின் தாயார் அனைத்தையும் அள்ளி இலையில் வைத்துக் கொண்டே இருந்தார். வேண்டாம் என்ற சொல் அவர் காதில் விழவே விழாது என்று நினைக்கிறேன். இலையின் மீது கையை நீட்டி மறைத்தால் கையின் மீதே எடுத்து வைத்து விடுகிறார். ஒரு கட்டத்தில் ஒன்றும் வேண்டாம் வைத்து விடாதீர்கள் என்று இலையின் மீது படுத்தேவிட்டோம். வயிறு வெடித்துவிடும் அளவுக்கு தின்று விட்டு கால் வலி தாங்காமல் படுத்து எல்லா திசைகளிலும் உருண்டு கொண்டிருந்தோம்.


சிபி 

மேலும்.. 

Comments

Popular posts from this blog

400 கி.மீ நடைபயணம்

ஏழாம் நாள்

அறப்போர் ஜெயராம் நேர்காணல்