ஐந்தாம் நாள் - சரண்யா
காலை எழுந்தது முதலே, எப்படியாவது அன்று நூறாவது கி.மீ நடந்து விட வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு மேலோங்கி இருந்தது. ஏற்கனவே 75 கி.மீ நடந்து விட்டிருந்த நிலையில் கள்ளிமந்தையம் வரை நடந்தால், திட்டத்தின் படி நூறாவது கி.மீ நடந்ததாகிவிடும்.
இத்தனை நாட்களும் வீடு, அலுவலகம், அன்றாடம் எல்லாம் நினைவில் கூட இல்லாமல் எங்கோ தொலைவில் நிகழ்ந்தவைப் போல இருந்தன. குழுவில் எல்லோருடனும் இணக்கம் மேலும் அதிகரித்து இருந்தது. மீண்டும் பள்ளி கல்லூரி காலத்திற்கு திரும்பிய உணர்வில் இருந்தேன். இந்த செயல்பாட்டில் முழுதாக பயணிக்க முடியாமல் விடை பெற்றுக் கொள்வது எனக்கு வருத்தம் அளித்தது. இந்த மனநிலையில் 100 என்பது ஆறுதலான ஒரு முழுமை.
அருள் ஜோதி ஆசிரமத்தில் பழனி யாத்திரிகள் அதிகாலையில் இருந்தே கிளம்பத் தொடங்கி இருந்தனர். நான்கு மணி முதல் சத்தம் கேட்டபடி இருந்தது. இவற்றுக்கு அப்பால் ஆசிரமத்தின் பின்னால் அமைதியாக ஒரு தியான மண்டபம் இருந்தது. வள்ளலார் படத்துடன் ஒரு கண்ணாடி குடுவை மூடிய விளக்கு. அங்கு சென்று பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.
பழனி யாத்ரிகளிடம் எங்களைக் குறித்து சொன்னால் பொருட்படுத்திக் கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. ஒவ்வொரு அடிக்கும் வலி உடலில் வெளிப்பட நடந்து கொண்டிருந்தனர்.
அன்று தாராபுரம் சாலைகளில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஒலி பெருக்கிகளில் இளைய ராஜாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. உடன் பாடியபடி நடந்து கொண்டிருந்தோம். வழியில் அமராவதி நதியின் மேல் ஒரு பாலம். பாலத்தைக் கடக்கும் போது தான் நதியின் ஒரு கரையில் கண் குளிரும் இளம் பச்சை நிறத்தில் நெற்பயிரைக் கண்டேன். இத்தனை நாள் வேறு எங்கும் பார்த்திருக்கவில்லை.
கூகுள் ஒரு வழி சொல்ல, சாலையில் சந்தித்த ஒருவர் வேறு வழி சொல்ல, நாங்கள் ஊர் புறங்கள் வழி செல்ல முடிவு எடுத்தோம். மண் சாலையில், ஆள் அரவம் இல்லை. எங்கோ சில வீடுகள் இருந்தன. புகை இலை தோட்டங்களும், சில தொழிற்சாலைகளும் இருந்தன. நடந்த்படியே, பொங்கலுக்கான பறவை கணக்கெடுப்பை செய்து பதிவேற்றி வந்தேன். தவிட்டுக் குருவிகளும், மைனாக்களும், கொண்டைக் குருவிகளும் அதிகம் இருந்தன. மீண்டும் திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை அடைந்தோம்.
பவித்ரா அக்காவும் பிரபுவும் எங்களை சந்தித்து காலை உணவு வழங்கிவிட்டு சென்றனர்.
நெடுஞ்சாலையில் நடப்பது சலிப்பூட்டுவது. முதலில் சலிப்பை வெல்ல பேசியபடியும் பாடல்கள் கேட்டபடியுன் வந்தோம். பின்னர் அமைதியாக தனித்தனியாக நடக்கத் துவங்கினோம். சிபி, இதுவரை இருந்த நிலப் பகுதிகளுக்கும் வரும் நிலப் பகுதிக்கும் இருக்கும் வேறுபாடுகளை சொல்லியபடி வந்தான். காற்றாலைகள், குளிர்ந்த தென்னந்தோப்புகள், பிற தோட்டங்கள் மறைந்து, வெட்ட வெளி நிலத்தில் வேப்பமரம், புங்க மரங்கள் வரத் தொடங்கின. அதுவரை அதிக ஊர்ப் பெயர்களில் இருந்த பாளையம் என்ற அடை மொழி மாறி பட்டி என்ற அடைமொழி வரத் தொடங்கியது. இதுவரை காணாத வெயில். இளைப்பாற பேருந்து நிறுத்தங்கள் தவிர வேறு இருக்கவில்லை. ஊர் கிராமங்கள் வழி செல்லாததால், மாட்டு பொங்கல் விழாவையும் காண முடியவில்லை.
முந்தைய நாள் தேர்ப்பாதை ஊரைத் தாண்டி வரும்போது, அனு ஒருவரிடம் துண்டு பிரசுரத்தை அளித்து பேசிவிட்டு வந்திருக்கிறாள். இன்று அவர் சாலையில் எங்களைப் பார்த்து நின்று அனுவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அவர் ஏதோ ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர் என்பது தெரிந்தது.
"தாராபுரத்தில் தங்கிட்டீங்களா, இவ்வளவு தூரம் நடந்துவிடுவீர்களா" என்று சந்தேகித்து கேட்டார்.
"ம்ம் நடந்துருவோம்"
"சரி கார்ல வாங்க கொண்டோய் விட்டுட்ரன்" என்றார்
"இல்ல இல்ல நாங்க நடந்தே போறோம்" என்று மறுத்தாள்.
"அதானப் பாத்தன் " என்று சொல்லி விட்டுச் சென்றார்.
லைலா மற்றும் அர்ச்சனாவுடன் நான் பின்னால் வந்தபடி இருக்க, குழு வெகு முன்னால் சென்றுவிட்டு இருந்தது.
சாலக்கடை அருகே ஒரு இளைஞர் இரண்டு சிறுவர்களுடன் இருச்சக்கர வாகனத்தில் நின்றபடி எங்களைக் குறித்து விசாரித்தார். அர்ச்சனா விளக்கிச் சொன்னதும் அவருக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.
"என்னக்கா சொல்ரீங்க, நடந்தேவா போறீங்க, பொண்ணுங்க லா போறீங்க. எப்டி உங்க வீட்லலாம் ஒத்துக்டாங்க" என்று திரும்பத்திரும்ப கேட்டபடி இருந்தார்.
உங்களுக்கு ஏதாச்சும் செய்யணும் போல இருக்கு, ஏதாச்சும் வாங்கிக்கோங்க என்று சுற்றித் தேடினார். அருகில் கடைகள் இருக்கவில்லை. பணம் அளிப்பதாக சொன்னார். சிபியை நாங்கள் 'தலைவரே' என்று அழைத்துக் கொண்டிருந்தோம். அதே வேகத்தில், "எங்கள் தலைவரின் எண் இதில் இருக்கிறது, இதில் தொடர்பு கொண்டு அனுப்புங்கள்" என்றோம்.
"ஐயோ, தலைவருக்கு அனுப்பினா அவர் பாக்கெட்டில் போட்டுக்குவாரு ... நா உங்களுக்கு குடுக்கிறேன்" என்றார்
"ஐயோ, இவர் அந்த மாறி தலைவர் இல்ல. இது இளைஞர் அமைப்பு. பெரும்பாலும் காலேஜ் ஸ்டுடென்ஸ் தான். நாங்க தேவைக்கு அதிகமா வாங்றது இல்ல. அவர் தான் கணக்கு வெச்சிருக்காரு. முன்னால போறாரு பாருங்க",என்றோம்.
அவரால் நம்ப முடியவில்லை.
"உங்க வீட்ல ஓத்துக்டாங்க சரி உங்க ஆட்கள் எப்படி ஒத்திக்டாங்க"
"ஆட்களா? சொந்தக்காரங்கல சொல்றீங்களா"
"இல்லங்க உங்க ஆட்கள்' என்று அழுத்தினார்
ஊர்மக்கள் சாதியினர் குறித்து சொல்கிறாரோ. இந்தப்பக்கம் அவர்களிடமும் ஒப்புதல் வாங்க வேண்டுமோ என்று நினைத்துவிட்டேன்
அவரே, 'உங்க லவ்வர்ஸ்' என்றார்
வெடித்து சிரித்துவிட்டோம். "அவங்களையும் தேடிட்டுத்தான் போய்ட்டு இருக்கோம்" என்று சொன்னோம்.
எங்களின் எண்களைப் பரிமாறிக்கொண்டோம். இன்ஸ்டாகிராம் யூடியூப் என்று முனை அமைப்பின் பக்கங்கள் குறித்து அவருடன் இருந்த பையன்கள் வாங்கிக் கொண்டனர். "ஆல் த பெஸ்ட் கா" என்று கத்தினர்.
பிறகு ஓடிச்சென்று எங்கள் குழுவுடன் சேர்ந்துக் கொண்டோம். கையில் தண்ணீர் கூட இல்லை. கண் எட்டும் தூரம் வரை சாலையில் கானல் நீர் தவிர ஒன்றும் தெரியவில்லை. ஒரு வழியாக லிங்கராஜ் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த சுவை பேக்ரியை அடைந்தோம். தேவையான தின்பண்டங்களைப் பெற்றுக் கொண்டோம்.
அங்கிருந்தவர்கள் 3 கி.மீ தள்ளி நெடுஞ்சாலையில் இளைப்பாற ஒரு வீட்டில் இடம் அளித்தனர். அவர்களே உணவும் கொண்டு வந்து அளித்தனர். மரங்களுக்கு கீழ் கயிற்றுக் கட்டிலில் படுத்து கைகள் கால்களுக்கு வலி நிவாரண மருந்துகளைப் போட்டுக் கொண்டோம். ஒரு நாளைக்கு ஒரு மருந்து புட்டி என்ற வேகத்தில் அவை தீர்ந்து கொண்டு இருந்தன. சபரீஷ் எங்களுடன் வழியில் இணைந்துக் கொண்டான்.
அப்போது வரை 90 கி.மீ நடந்து விட்டு இருந்தோம். ஈரோடு கிருஷ்ணன் மற்றும் திருப்பூர் அனந்த குமார் அவர்கள் வந்து எங்களுடன் 2 கி.மீ நடப்பதாக திட்டம். அவர்களுடன் நான் ஊர் திரும்ப வேண்டும். கள்ளிமந்தையம் வரை நடந்தால் தான் 100. அவர்கள் வருவதற்குள் இன்னும் கொஞ்சம் நடந்து விடலாம் என்று இவர்களை எழுப்பினேன். ஒருவரும் அசைவதாக இல்லை. முதல் இரண்டு நாட்கள் வழி மாறி கூடுதலாக நடந்து இருந்தோம். அதையும் சேர்த்துக் கொள்ளும்படி சொன்னேன். என்ன கண்ணக்குப் போட்டாலும் 99 தான் வரும் என்று சிபி மறுத்தான்.
ஈரோடு கிருஷ்ணன் மற்றும் ஆனந்த குமார் ஆகியோர் வந்ததும் இணைந்து நடந்தோம். மீண்டும் அவர்களிடம் சொல்ல ஓயாத கதைகள் இருந்தன. அவர்கள் சிரித்த படி கேட்டுக் கொண்டு வந்தனர். நாம் திரும்பலாம் என்று அவர்கள் என்னை கூப்பிட, பையன்களை நிற்காமல் நடக்குமாறு வலியுறுத்தினேன். இதற்கு மேல் தாமதிக்க முடியாது. எல்லோரையும் அணைத்துக் கொண்டும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டும் தற்காலிகமாக விடைப்பெற்றுக் கொண்டேன்.
அதுவரை 3.2 கி.மீட்டர் நடந்து இருந்தோம். கார் இருக்கும் இடம் நோக்கி திரும்பவும் நடந்தோம். எல்லாம் சேர்த்து 100 கி.மீட்டர் நடந்து இருப்பேன். அதைத் தான் எழுத வேண்டும் என்று சிபியிடம் சொன்னேன். அவன் 99 தான் என்று விடாப்பிடியாக நின்றான்.
அரிதான நாட்கள் இவை. இது போன்ற களச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும் பயணங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டேன். தனியாகக் கூட செல்லலாம். ஓரளவுக்கு நம் சூழல் குறித்த கவனம் இருக்க வேண்டியது தான். ஆனால் அதீதமான கற்பிதம் வேண்டாம். பயம், தயக்கங்கள் என்று நான் இனி சொன்னால், அதன் பின் என்ன சாக்கை ஒளித்து வைத்திருக்கிறேன் என்றே யோசிக்க வேண்டும்.
இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில் சுனில் கிருஷ்ணன் எழுதிய "காலத்தில் மறையாத காந்தியின் சுவடுகள்" என்ற கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அதில் இவ்வாறு குறிப்பிடப் பட்டு இருந்தது.
"""
ஜனவரி 2006 இதழில் காந்தியை மதிப்பிடுவது சார்ந்த விவாதத்தில் பிரசன்னா எழுதுகிறார் ‘அவர் பெரிதும் பாராட்டப்படுவது அவர் குறையற்றவர் என்பதால் அல்ல, ஒரு சாதாரண மனிதன், ஏசுவைப் போன்றோ புத்தரைப் போன்றோ ஐன்ஸ்டைனைப் போலவோ கடவுளின் குழந்தையாகவோ பிறவி மேதாவியாகவோ பிறக்காமல், தன் முயற்சி மற்றும் ஆத்மசக்தியால் மட்டுமே உயர்ந்த நிலையடைந்தார் என்பதால்.’
பிரசன்னாவின் ‘காந்தியும் நானும்’ கட்டுரை -
“நமது தனிப்பட்ட வாழ்க்கையில் காந்தி ஏற்படுத்தும் மாற்றம் நம்முடைய ஆத்ம சத்தியால் நாளை அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியலாம். காந்தி போன்றவர்கள் ஒட்டு மொத்தச் சமுதாயத்தின் நீடித்ததவத்தின் விளைவாய்த் தோன்றுபவர்கள். ஒரு சமுதாயத்தின் சராசரித் தரத்தைத் தாண்டிய மாபெரும் பாய்ச்சலை அச்சமுதாயத்தினுள் இருக்கும் ஒருவரால் நிகழ்த்த முடியாது. காந்தி, அவர் வாழ்ந்த சமூகத்தின் கூட்டுப் பிரக்ஞையின் லட்சிய வடிவம்.”
""""
இந்த சமூகத்தின் கூட்டுப் பிரக்ஞையில் உறையும் இலட்சிய வாதத்தின் மேல் நம்பிக்கைக் கொண்டு அதை நோக்கிப் பேசும் இச்செயல்பாடுகள் வெற்றி கொள்ளும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
சரண்யா
(நிறைவு)
Comments
Post a Comment