பதினேழாம் நாள்
துவரங்குறிச்சியில் பாலு என்பர் வீட்டில் தங்கி இருந்தோம். கடைசி நாள் நடக்க வேண்டிய தூரத்தை குறைத்தால் நிறைவு விழாவில் பங்கேற்பது எளிதாக இருக்கும் என்று இன்று கூடுதல் கிலோமீட்டர் நடப்பதாக திட்டம். அதனால் இயன்றவரை சீக்கிரம் கிளம்பலாம் என்று தயாராகிவிட்டோம். அப்போது ஒருவர் இங்கு ஒரு காந்தி சிலை உள்ளது அதற்கு மாலை அணிவித்து விட்டு பயணத்தை தொடங்குங்கள் என்று கேட்டுக் கொண்டார். நாங்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்து முக்கிய சாலையில் இருந்த அந்த காந்தி சிலை இருக்குமிடத்திற்கு சென்றோம். சிமின்டால் செய்யப்பட்டு மெழுகு பூசப்பட்டது போன்ற சிலை. அதில் அடிக்கப்பட்டு இருந்த பெயிண்ட் மங்கிப் போய் இருந்தது. அந்த சிலையின் முன் எங்களை நிற்க வைத்து, திடீரென ஒருவரை திறன்பேசியில் கேமராவை வைக்க சொல்லி எங்களை கூட்டி வந்தவர் பேசத்தொடங்கி விட்டார். அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். எங்களை காங்கிரஸ் கட்சி சார்பாக வரவேற்கும் படியாக இருந்தது அவரின் பேச்சு. எனக்கு இந்த அமைப்பின் மீது ஒரு கட்சி சாயல் வந்து விடுமோ என்று அச்சம் மேலெழுந்த படியே இருந்தது. அவர் பேசி முடித்த உடனே உங்கள் கட்சி சார்பாக நாங்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்ளும் படியான சித்திரம் எதுவும் வந்துவிட வேண்டாம். அந்த நோக்கில் இந்த காணொளியை எங்கும் பயன்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டார்.
பின்னர் காந்தி சிலைக்கு மாலையிடும் படி அவர்களே கையில் மாலையை கொடுத்தனர். நான் மற்ற நண்பர்கள் யாரையாவது போடும் படி கேட்டேன். என்னையே போடுமாறு அனைவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள். எனக்கு இதெல்லாம் அந்த கட்சியை ஆதரிக்கும் படி ஆகிவிடுமோ என்று உள்ளூர ஒரு அச்சம் இருந்து கொண்டே இருந்தது. அவர்கள் காந்தியை காங்கிரஸ் கட்சி அடையாளமாக நினைத்துக் கொண்டு இருந்தனர். அவ்வாறே பேசவும் செய்தனர். அதனால் தான் எனக்கந்த பயம். இவற்றையெல்லாம் முடித்துவிட்டு நடக்கத் தொடங்கினோம். வழக்கம் போல கௌதமும் சௌமியாவும் முன்னால் விரைவாக சென்று கொண்டு இருந்தனர். நான் அவர்களுக்கு பின்னால். எனக்கு பின்னால் மற்ற நண்பர்கள். ஒரு கணம் நான் என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை. திடீரென கடும் வேகமெடுக்க தொடங்கினேன். ஏற்கனவே ஒரு குறைந்தபட்ச இடைவெளி விட்டு தனித் தனியாகத் தான் நடந்து கொண்டு இருந்தோம். ஆனால் நான் அவர்கள் கண்ணில் படாத அளவிற்கு தனியாக முன்னால் சென்று விட முடிவெடுத்தேன். முன்னால் செல்லும் இருவருமே நல்ல வேகத்தில் சென்று கொண்டு இருந்தனர். ஆனால் அந்த தருணத்தில் என் கால்கள் எதையுமே உணரவில்லை. நீண்ட நீண்ட அடிக்கலாக எடுத்து வைத்து மிக வேகமாக அனைவரையும் கடந்து வெகு தூரம் முன்னால் சென்று விட்டேன். மோகன்ராஜ் மட்டும் எனக்கு பின்னால் சில அடிகள் தொலைவில் நடந்து வந்து கொண்டு இருந்தார். மற்றவர்கள் அனைவருமே அந்த நீண்ட நேர் ரோட்டிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை. கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. அப்போது தான் நேற்று எங்களை சந்தித்த பத்திரிக்கையாளர் தென்னவன் அழைத்து, அவர் அருகில் வந்துவிட்டதாகவும் எங்களுக்கு முன்னால் ஒரு பேக்கரி இருக்கும் அங்கு காத்திருக்கும் படியும் சொன்னார். அதனால் அந்த கடையில் சென்று அமர்ந்தேன். நானும் மோகன்ராஜும் சென்று அமர்ந்து பத்து நிமிடம் கழித்து கௌதம் வந்து சேர்ந்தான். அவன் வந்து ஐந்து நிமிடம் கழித்து மற்றவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
தென்னவனும் அவர்கள் வந்து சேர்ந்த போதே வந்துவிட்டார். அங்கு ஒரு டீயை குடித்து விட்டு கொஞ்சம் முன்னால் சென்றால் ஒரு நல்ல இடம் இருக்கும் அந்த இடத்தில் காணொளி பதிவு செய்து கொள்ளலாம் என்றார். எப்படியும் அனைவரும் என்னை தான் பேச சொல்லுவார்கள் என்று எனக்கு தெரியும். அதனால் பேசுவதற்காக மனதிற்குள் ஒரு வடிவத்தை கொண்டு வர முயற்சி செய்து கொண்டு இருந்தேன். மனம் ஒன்றும் அமையவில்லை. ஏதோ குத்துமதிப்பாக கோர்த்து வைத்து இருந்தேன். ஏற்கனவே ஓரளவு பயிற்சி இருந்ததால் முனை அமைப்பு குறித்து, அதன் நோக்கம், இந்த நடை பயணம் குறித்து என்று கிட்டதட்ட 10 நிமிடம் பேசினேன். கொஞ்சம் சுருக்கி இருக்கலாம் என்றார். பெண்கள் யாராவது பேசினால் நன்றாக இருக்கும் என்ற கேட்டதால் அனு ஒப்புக் கொண்டார். இந்த பயணத்தில் அவள் சந்தித்த இன்னல்கள், பெண்கள் தரப்பில் இந்து இந்த நடைபயண அனுபவம் ஆகியவற்றை நேர்த்தியாக சொன்னாள். அது ஒரு பெண்ணால் மட்டுமே பேசக்கூடிய உரையாக இருந்தது. தென்னவன் வியந்து இருந்தார். சிறிது நேரம் கழித்து பின்னால் வந்த ஒருவரிடம் “கொஞ்சம் முன்னால் வந்திருந்தால் இவர்கள் பேசுவதை கேட்டிருப்பீர்கள், புல்லரிக்கும் படி இருந்தது” என்று சிலாகித்து சொன்னார்.
அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் சமயத்தில் ஒரு கார் வந்து நின்றது. அதில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து எங்களை பார்க்க சிலர் தண்ணீர் புட்டி, பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் வந்திருந்தனர். தென்னவன் சொல்லி தான் எங்களை பற்றி அவர்களுக்கு தெரிந்து உள்ளது. எங்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டனர். மீண்டும் கட்சி சாயல் வந்து விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு வந்து விட்டது. அவர்களிடம் ஒரு கட்சிக்கு சார்பாக இந்த நடைபயணம் செல்வது போன்ற அடையாளம் வந்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டோம். அவர் அதை மறுத்து அனைவருக்கும் கட்சி அடையாளம் உள்ளது. கட்சி அடையாளம் அற்ற யாருமே கிடையாது. இப்படி ஒரு அடையாளம் வந்தால் உங்களுக்கும் இந்த பயணத்திற்கும் நல்லது தான் என்று ஏதேதோ சம்மந்தம் இல்லாத உதாரணங்களை சொல்லிக் கொண்டு இருந்தார். நாங்கள் சுமார் பத்து நிமிடம் அவருடன் போராடி பார்த்தோம். கடைசியாக கட்சி துண்டு மட்டும் இல்லாவிட்டால் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னோம். என்னுடைய அடையாளத்தை விட்டுத் தர இயலாது என்று சொல்லி அவரே வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
அவர் கிளம்பிய உடன் முத்துப்பேட்டை ரோட்டரி சங்க தலைவர் சாகுல் ஹமீது மற்றும் தினகரன் செய்தியாளர் முகைதீன் பிச்சை இருவரும் வந்து விட்டனர். முத்துப்பேட்டையில் எங்களுக்கு மதிய உணவும், ஓய்வெடுக்க ஒரு இடமும் ஏற்பாடு செய்திருப்பதாக சொல்லிவிட்டு எங்கள் முதுகுப் பைகளை வாங்கி சென்று விட்டனர். மீண்டும் நடக்கத் தொடங்கி சில கிலோமீட்டர் சென்றதும் நான் கொஞ்சம் தொய்வடைய தொடங்கினேன். என்னை ஒவ்வொருவரும் முந்திச் சென்றனர். நான் கடைசியாக நடக்கத் தொடங்கினேன். ஒரு புதிய கலாச்சாரம் கண் எதிரே துலங்கத் தொடங்கியது. சில பேனர்கள் இதுவரை நான் பார்த்திராத வண்ணம் இருந்தது. இரண்டு நாள் முன்னர் இறந்த ஒரு பெரியவருக்கு இன்று படத்திறப்பு விழா என்று ஒரு பேனர் இருந்தது. பார்த்தால் அந்த பேனர் வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு அருகில் இருந்த வீட்டில் ஒரு விருந்து நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இது என்ன படத்திறப்பு விழா என்று புதிதாக இருக்கிறதே என்று சாலையில் சென்ற ஒருவரை நிறுத்திக் கேட்டேன். இறந்து போனவருடைய புகைபடத்தை சட்டகத்திலிட்டு அதை திறந்து வைத்து உறவினர்கள் அனைவருக்கும் விருந்து போடுவார்கள் என்று சொன்னார். இது வரை இப்படி ஒன்றை நான் கேள்விப் பட்டதே இல்லை. எங்கள் ஊர்களில் எல்லாம் கருப்பு வைக்கும் போதே இறந்து போனவர் படத்தை வைத்து கும்பிட்டு முடித்து விடுவார்கள். அந்த படத்தை திறக்க ஒரு விழாவா என்று ஆச்சரியமாக இருந்தது.
அதை தாண்டி சென்று கொண்டு இருக்கும் போது ஒரு உணவகத்தை பார்த்தேன். அது ஒரு அசைவக்கடை. மனநலம் பாதிக்கப்பட்டோர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், உழைத்து சம்பாதிக்க இயலாதவர்கள் அந்த கடையில் இலவசமாக உணவு பெற்றுக் கொள்ளலாம் என்று வாசலில் ஒரு தட்டி வைத்து இருந்தனர். தனியாக உணவளித்து தானம் செய்வது வேறு. ஆனால் ஒரு வணிகம் நடக்கக் கூடிய இடத்தில் இப்படி தட்டி வைத்திருப்பது எனக்கு கொஞ்சம் வினோதமான ஒன்று தான். அங்கிருந்து சென்ற பின் நண்பர்களிடமும் கிருஷ்ணன் சாரிடமும் சொன்னேன். அவர் கோவையில் இப்படி ஒரு கடை உள்ளது. அங்கு உண்டியல் தான். எவ்வளவு வேண்டுமானால் சாப்பிட்டுவிட்டு அதில் விரும்பிய தொகையை செலுத்திவிட்டு போகலாம். “வேண்டியை சாப்பிடுங்கள் விரும்பியதை போடுங்கள்” என்று எழுதியே வைத்திருப்பார்கள் என்று சொன்னார். அப்போது எனக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது. அந்த கடையை நான் நேரில் பார்த்த போது ஜெயமோகன் எழுதிய சோற்றுக்கணக்கு கதையை படித்திருக்கவில்லை. ஆனால் இதை இப்போது எழுதுவதற்கு முன் அந்த கதையை படித்து விட்டேன். நான் நேரில் பார்த்த அந்த கடையை பற்றி நினைக்கும் போதெல்லாம் காப்பு காய்த்து, முழிகள் பருத்த, திரண்ட கரிய மயிர்களையுடைய ஒரு அன்னையின் கரம் தான் ஒரு படிமமாக மனதில் தோன்றுகிறது.
அங்கிருந்து கொஞ்சம் வேகம் பிடித்து முன்னால் சென்றவர்கள் அருகில் சென்று விட்டேன். முத்துபேட்டை பகுதிகளுக்குள் நுழைந்ததில் இருந்து முழுக்கவே இஸ்லாமிய குடியிருப்புகள் தான். அங்கு சென்றவுடன் முகைதீன் பிச்சை அவர்களுக்கு அழைத்து நாங்கள் இருக்குமிடத்தை சொன்னேன். ஏற்கனவே அவர் நான்கைந்து முறை அழைத்து இருந்தார். அழைக்கும் போதெல்லாம் அப்போது இருந்த கிலோமீட்டர் கணக்கை சொல்லிக் கொண்டு இருந்தேன். நாங்கள் இருந்த இடத்திற்கு வந்து எங்கள் அனைவரையும் அழைத்து முன்னால் கூட்டிச் சென்றார். அங்கு எங்களை வரவேற்க கிட்டத்தட்ட முப்பது பேர் கூடி இருந்தனர். அதை நாங்கள் முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. நாங்கள் துவரங்குறிச்சியில் இருந்து சீக்கிரம் வந்து விடுவோம் என்று நினைத்து ஒரு மணி நேரம் முன்னரே இவர்கள் அனைவரையும் வரச் சொல்லி விட்டனர். எங்களுக்காக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்து நின்றிருந்து உள்ளனர். எங்களுக்கு இப்படி ஒரு ஏற்பாடு இருப்பது தெரிந்திருந்தால் கொஞ்சம் வேகமாக நடந்திருக்கலாமே என்று ஒரு மெல்லிய குற்றவுணர்வு ஏற்பட்டது.
அங்கு சாலையில் வைத்தே எங்கள் அனைவருக்கும் சால்வை, போர்த்தி படம் பிடித்து, உரை நிகழ்த்தி ஒரு பாராட்டு விழாவே நடத்தி விட்டனர். என்னையும் பேச சொல்லி கேட்டதால் மீண்டும் நான் ஒரு ஐந்து நிமிடம் பேசினேன். அதன் பிறகு ஒரு செய்தி நிறுவனம் மீண்டும் என்னை பேச சொல்லி ஒரு காணொளி எடுத்தார்கள். இதை அனைத்தையும் முடித்து விட்டு ஒருவருடைய வீட்டிற்கு எங்களை அழைத்து சென்றார்கள். அங்கு தான் எங்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மதியம் ஓய்வெடுக்கவும் அதே இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த வீட்டின் உரிமையாளருடைய மனைவி வெளி ஊருக்கு சென்று இருந்தார். அவர் ஒருவர் மட்டுமே வீட்டில் இருந்தார். மாடியில் ஒரு அறையில் எங்களை ஓய்வெடுத்துக் கொள்ள சொன்னார். நாங்கள் அங்கு சென்று நன்றாக படுத்து தூங்கி விட்டோம்.
திடீரென்று ஒரு குரல். கௌதம் தான் அது. “சீக்கிரம் எந்திரிங்க எல்லாரும் நம்மல இங்க படுக்க வெச்சதுக்கு சண்ட போட்டுட்டு இருக்காங்க, நாம சீக்கிரம் கெளம்பனும்” என்றான். மணியை பார்த்தால் மாலை நான்கு. “நேரமாச்சுனு சொல்லி எழுப்புனா எந்திரிக்க மாட்டோம்னு பொய்ய சொல்லிட்டு இருக்கியா டா? யாராவது வீட்டுக்கு வந்தவங்கள அப்படி சொல்லுவாங்களா? அவரு தானா நம்மள ரெஸ்ட் எடுக்க சொன்னாரு போடா கம்முணு” என்று சொல்லி மீண்டும் திரும்பி படுத்து விட்டேன். அனைவரும் எழுந்து கிளம்பி விட்டனர். அவன் மீண்டும் என்னை கிளம்ப சொல்லி பேசியதால் எழுந்து விட்டேன். அனைவரும் கீழே சென்று விட்டார்கள். நான் அந்த அறையில் தொங்க விட்டிருந்த ஒரு மணியை ஆட்டி விளையாடிக் கொண்டு இருந்தேன். அவன் மீண்டும் மேலே வந்து “டேய் அந்த அம்மா அவர கண்ட படி கெட்ட வார்த்தைலயே திட்டீட்டு இருக்காங்க சீக்கிரம் வா டா” என்று மீண்டும் திட்டினான். நான் அப்போது தான் அது உண்மையாக இருக்குமோ என்று எண்ணி கீழே சென்றேன். எங்களை தங்க வைத்தவர் முகம் எந்த உணர்ச்சியும் அற்று கிடந்தது. கீழ் வீடு பூட்டி இருந்தது. பாவம் அவர் மனைவி திடீரென சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பார் என்று அவரே எதிர் பார்த்திருக்க மாட்டார்.
அவரிடம் விடை பெற்று துளசியாப்பட்டினம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். அர்ச்சனா என்னோடு வந்து சேர்ந்து நடக்க தொடங்கினாள். நான் யாருடனும் விளையாட்டாக கேலி செய்து பேசி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். பெரும்பாலும் ஆம் இல்லை தான். வேறு ஏதாவது பேசுவதாக இருந்தாலும் முதல் முறை சந்திப்பவரிடம் பேசும் நடையில் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு அமைதியாகி விடுவேன். அவள் என்னிடம் ஏன் நீங்கள் இப்படி முகத்தை வைத்துக் கொண்டு சரியாக பேசாமல் இருக்கிறீர்கள்? இது நன்றாகவே இல்லை. எப்போதும் போல் கிண்டலடித்து பேசுங்கள் என்று கேட்டுக் கொண்டே வந்தாள். எனக்குள் அவ்வாறு பேசுவதற்கு ஒரு மாபெரும் தடை உருவாக்கி வந்திருந்தது. வாய் தவறி ஒரு வார்த்தை அப்படி ஏதாவது சொல்லி விட்டால் கூட பின்னொட்டாக மன்னித்து விடுங்கள் என்பதை சேர்த்தே பேச என்னை நானே பழக்கப்படுத்தி இருந்தேன். அனைவரிடத்தில் இருந்தும் வெகு தொலைவு நான் விலகி வந்திருந்தேன். அவள் என்னிடம் திரும்ப திரும்ப கேட்டபோதும் என்னால் அப்படி ஒரு எல்லைக்கு மேல் இயல்பாக இருக்க முடியவில்லை. ஆனால் ஒரு கட்டதிற்கு மேல் அவளிடம் எனக்கு எப்போதும் இருக்கும் இணக்கம் இருப்பதாகவே உணரத் தொடங்கி விட்டேன். என்ன இருந்தாலும் அவள் ஒரு குழந்தை தானே என்று தோன்றத் தொடங்கியது. அவளுடன் அந்த மாலை பேசிக் கொண்டு நடந்தது நான் மீண்டும் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்ப வெகுவாக உதவியது.
நாங்கள் இருவரும் அனைவருக்கும் பின்னால் சென்று கொண்டு இருந்தோம். அப்போது ஒரு மளிகை கடையின் மீது இரண்டு குரங்குகள் அமர்ந்து இருந்தது. அந்த கடைக்காரர் மேலே பார்த்து அந்த குரங்குகளிடம் பேசிக் கொண்டு இருந்தார். “இப்போ தான ரெண்டு கடல மிட்டாய் குடுத்தே அதுக்குள்ள தின்னுபுட்டு மறுபடியும் வந்து கேக்கியா? அவனுக்கும் குடுத்துட்டு திங்கறது இல்லாம நீ தனியா தனியா வெச்சு திங்கற. போ இனி உனக்கு ஒண்ணு இல்ல” என்று ஒரு குரங்கிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். அது எதுவும் செய்யாமல் இவர் பேசுவதை கேட்டுக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தது. எங்கள் இருவருக்கும் அது ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு நாங்கள் பார்த்த கடைக்காரர்கள் எல்லோருமே எப்போதும் கையில் ஒரு தடியை வைத்துக் கொண்டு அருகில் வரும் குரங்குகளை அடித்து விரட்டுவதை தான் பார்த்து உள்ளோம். அவர் அவ்வாறு அந்த குரங்கிடம் பொய்கோபம் கொண்டு உள்ளே சென்றார். அதில் ஒரு குரங்கு இவர் உள்ளே சென்ற உடன் தாவி வந்து சிப்ஸ் பாக்கெட் ஒரு சரத்தையே எடுத்து சென்று விட்டது.
அவர் “டேய் டேய்..” என்றவாறு வெளியில் வந்தார். “எடுத்துட்டு
போய்ட்டான் பாடவா” என்று சொல்லி சிரித்துக் கொண்டே அதை எடுத்து சென்ற குரங்கிடம் “டேய்
அவனுக்கும் கொடுத்துட்டு தின்னு டா.. தனியாவே திங்காத. டேய் நீ போ. போய் அவன் கிட்ட
கேட்டு வாங்கி சாப்பிடு போ” என்று அந்த குரங்குகளிடம் பேசிக்கொண்டு இருந்தார், குன்றாத
சிரிப்பை அவர் முகத்தில் ஏந்தி இருந்தார். நாங்கள் சென்று அவரிடம் பேசினோம். “இப்படி
குரங்குகள் வந்து கடையில் இருப்பதை எல்லாம் எடுத்து சென்றால் உங்களுக்கு நஷ்டம் ஆகாதா
?” என்று கேட்டோம். “அது என்னத்த போய் நட்டம் ஆகுது” என்று அதே சிரிப்புடன் சொன்னார். இந்த குரங்குகள்
சென்று இன்னும் நிறைய குரங்குகளை கூட்டி வந்து விட்டால் என்று கேட்டேன். “அதெல்லா நெறையா
வரும். போன வாரம் கூட ஏழு கொரங்கு வந்து இந்த மரத்து மேலயே தா உக்காந்து இருந்துச்சு.
அப்பரோ என்ன பன்றது ரெண்டு தீனிய எடுத்து பிச்சு போட்ட” என்றார். அவரால் நான் பெரும் மகிழ்வை அடைந்திருந்தேன். புத்துணர்வு கிடைத்தது போல் இருந்தது. “நீங்கள் எங்களுடைய இந்த மாலையை மிகவும் அழகாக்கி
விட்டீர்கள்” என்று சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
அங்கிருந்து செல்ல செல்ல இருட்டாகி விட்டது. சாலைகளில் தவளைகளும் பாம்புகளும் புதிதாக செத்து கிடந்தன. ஒரு குழியில் சௌமியா தெரியாமல் காலை விட்டு கணுக்கால் மடங்கி விட்டது. நொண்டி நொண்டி நடந்து கொண்டு இருந்தாள். ஒரு இளைஞர் கூட்டம் எங்களை நிறுத்தி டீ , திண்பண்டங்கள் எல்லாம் வாங்கி கொடுத்தனர். அனைவரும் கல்லூரி மாணவர்கள் போல தான் தெரிந்தார்கள். அங்கிருந்து வழி கண்டு பிடித்து வாத்தியார் மூர்த்தி அவர்களின் வீட்டை அடைவதற்கு மணி 9 ஆகி விட்டது. இந்த பயணத்தின் எல்லையை அடைவதற்கு முன்பான இறுதி இரவு.
Comments
Post a Comment