பதினெட்டாம் நாள்

இன்றைய காலை துளசியாப்பட்டினத்தில் தொடங்கியது. இன்று தான் இந்த பயணத்தின் கடைசி நாள் என்பது தான் காலை எழுந்தவுடன் இருக்கும் முதல் எண்ணம். இரண்டு நாட்களாக இருந்த உளச்சோர்வு பெரும்பாலும் நீங்கி பெரும் நிறைவை நோக்கி நடக்கத் தொடங்கினேன். இது சமூகத்தை நோக்கி நாங்கள் இட்ட அறைகூவல். கூடவே எனக்கு நானும். தனிப்பட்ட முறையில் ஒன்றை தொடங்கி இறுதி வரை என்னால் முடித்துக் காட்ட முடியும் என்று எனக்கு நானே சொல்ல வேண்டி இருந்தது. அதை இன்று சொல்லிவிட்டேன். ஒருவர் கூட இந்த 400 கிலோமீட்டர் நடையை பொருட்படுத்தாமல் போனாலும் நான் ஒன்றை நிகழ்த்திக் காட்டிவிட்டேன் என்ற நிறைவே எனக்கு போதுமானது என்று தோன்றியது. அது எனக்குள் வேறு ஒன்றாக மாற்றிக்கொண்டு இருந்தது. என்னை நான் பெரும் களிப்புடனும் பெருமிதத்துடனும் பார்க்கத் தொடங்கி விட்டிருந்தேன். என்கூட வந்த ஒவ்வொருவரையும் அவ்வாறு பார்த்தேன். ஒரு நீள் பயணத்தின் இறுதி அடிகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தோம்.

கடற்கரை மணல் 30 கிலோமீட்டர் தாண்டி இங்கு வரை பரவி இருந்தது. வாத்தியார் மூர்த்தி அவர்களின் வீட்டை விட்டு நீங்கும் முன்னரே காவல் நிலையத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருந்தது. இந்த நடைபயணத்திற்கு அனுமதி பெற்று உள்ளீர்களா என்று கேட்டார்கள். வெவ்வேறு எண்களில் இருந்து வெவ்வேறு நபர்கள் அழைத்து ஒரே கேள்வியையே கேட்டுக் கொண்டு இருந்தனர். “எங்களுடைய ஆலோசகர் ஒரு வக்கீல். அவரிடம் நடைபயணத்திற்கு அனுமதி தேவையா என்று கேட்டோம். தேவையில்லை என்று சொன்னார். அது மட்டும் இல்லாமல் இதற்கு முன்பு பல ஊர்களில் காவல்துறையினருக்கு நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் செய்துள்ளோம். ஒரு ஊரில் காவல்துறை தான் எங்களுக்கு இரவு தங்குவதற்கான ஏற்பாடு செய்து தந்தனர். இது வரை எந்த ஊரிலும் எங்களை இது குறித்து யாரும் கேட்கவில்லை. இன்று பதினெட்டாவது நாள். முதல்முறையாக நீங்கள் தான் கேட்கிறீர்கள். அப்படி ஒரு அனுமதி தேவை என்றே நீங்கள் சொல்லிதான் தெரிகிறது. இதுவரை அப்படி ஒரு சூழலே எங்களுக்கு ஏற்படவில்லையே” என்று சொன்னேன். “எங்களோட லிமிட் குள்ள வந்து உங்களுக்கு எதாச்சு ஒண்ணுனா அதுக்கு நாங்க தான பொறுப்பு. எங்களுக்கு நீங்க வந்ததே தெரிலனா என்ன பன்றது. உங்க நல்லதுக்கு தான் சொல்றோம். அடுத்த லிமிட் குள்ள போகும் போதாவது அந்த லிமிட் காவல் நிலையத்துல இப்படி வந்துருக்கோம்னூ ஒரு பேச்சு சொல்லீருங்க” என்றார். சரி என்று சொல்லி எங்களுக்கு இங்கு உதவிகள் செய்து தரும் ரோட்டரி சங்க அகிலன் அவர்களிடம் சொன்னேன். அவர் அழைத்து காவல் நிலைத்தில் பேசி ஒருவாறு பிரச்சனையை முடித்து விட்டார்.

அதன் பின்னர் மூர்த்தி அவர்களிடம் இருந்து விடைபெற்று நடக்கத் தொடங்கினோம். நேற்று இரவே திருப்பூரில் இருந்து கிளம்பி காலை சந்தானிக்கா எங்களுடன் வந்து இணைந்திருந்தார். குக்கூ குழுவினரும் வந்து விட்டனர். ஸ்ரீவித்யா மற்றும் அவள் உறவினர் வந்திருந்தார். உமையாள் தேனப்பனும் வந்து விட்டனர். சரண்யா பெங்களூரில் இருந்து வந்திருந்தார். காலை நடக்கத் தொடங்கும் போதே குறைந்தது பதினைந்தில் இருந்து இருபது பேர் இருந்திருப்போம். வழியெங்கும் ஆறு எங்களுடன் சேர்ந்து ஓடி வந்து கொண்டே இருந்தது. எங்கும் தண்ணீர், குளுமை.


வாய்மெடு என்னும் ஊரை அடைந்தோம். அங்கு இருக்கும் காவல் நிலையத்தில் இருந்து தான் எனக்கு காலை அழைத்து இருந்தனர். முன்னால் சென்ற கௌதமையும் சௌமியாவையும் காவலர்கள் நிறுத்தி பேசிக் கொண்டிருந்ததை சற்று தூரத்தில் இருந்தே பார்த்தேன். என்னை கை நீட்டி வேறு பேசிக் கொண்டு இருந்தனர். என்ன கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று மனதிற்குள் பேசி பார்த்துக் கொண்டே அவர்களிடம் சென்று சேர்ந்தேன். என்னை பார்த்ததும் நீங்க தான் தலைவரா என்று அங்கிருந்த மூவரில் ஒருவர் கேட்டார். ஆம் என்று சொன்னதும் அழைத்து எங்களோடு சேர்ந்து அவர்களும் நின்று ஒரு புகைபடம் எடுத்துக் கொண்டு, எங்களை கிளம்ப சொல்லி விட்டனர்.

நாங்கள் செல்லும் வழியில் வலது புறம் நீண்ட தூரம் எங்களோடு சேர்ந்தே வந்து கொண்டிருந்த ஆற்றில் ஊதா நிறத்தில் ஒரு மலர்ப் படலம் நீண்டு கிடந்தது. தண்ணீர் முற்றிலும் மறைந்து, செடியும் பூவும் மட்டுமே நிரம்பிய ஆறு போல இருந்தது. அதன் நடுவில் செல்வதற்கு ஒரு கான்கிரீட் பாதை இருந்தது. அதில் எல்லோரும் நடந்து உள்ளே சென்றோம். எனக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. அங்கு நின்று நான் அலைபேசியில் பேசிக் கொண்டு நின்றிருந்தேன். மற்றவர்கள் அங்கு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்த சமயத்தில் சந்தானிக்கா தடுக்கி தண்ணீரில் விழுந்து விட்டார். என் அருகில் தான் நின்றிருந்தார். காச்சு மூச்சு என்று ஒரே சத்தம். திரும்பி பார்த்தால் என் காலிற்கு கீழே சந்தானிக்க தண்ணீரில் தவ்விக் கொண்டு இருந்தாள். முக்கியமான ஒருவர் அழைப்பில் இருந்ததால் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என்று மீண்டும் திரும்பி “அது ஒண்ணும் இல்ல சார் இங்க கொஞ்சம் சவுண்டு நீங்க சொல்லுங்க” என்று விட்ட இடத்தில் இருந்து பேசத் தொடங்கி விட்டேன். எப்படியோ ஒருவர் கையை கொடுத்து இவர் முட்டி போட்டு எழுந்து நின்றுவிட்டார். அதற்குள் நானும் அழைப்பை வைத்து விட்டேன். பெரும் சிரிப்பு பேரிறைச்சல். விழுந்து விழுந்து சிரித்து வேறு யாராவது தண்ணீரில் விழுந்து விடப் போகிறார்கள் என்று கொஞ்சம் பயம் இருந்தது. முழுக்க தொப்பறையாக நனைந்து நின்று கொண்டு சந்தானிக்கா மட்டும் அழுவது போல சிணுங்கத் தொடங்கி இருந்தார். ஸ்வெட்டரை மட்டும் உமையாள் காரில் கொடுத்து விட்டு வேறு கதியின்றி ஈரத் துணியுடன் நடக்கத் தொடங்கி விட்டாள்.


அங்கிருந்து மருதூர் என்னும் ஊரை சென்றடைந்தோம். அங்கு ஒரு இருபது பேர் கூடி இருந்தனர். ரோட்டரி சங்க உறுப்பினர்கள் தான். இங்கு ஒரு குறு நிகழ்வு ஏற்பாடு செய்து இருந்தனர். எங்களை வரிசையாக நிற்க சொல்லி, நடக்க சொல்லி, அவர்களுக்கு வரிசையாக கை கொடுக்கும் படி என்று பல புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்துக் கொண்டனர். பிறகு சிலர் எங்களை பாராட்டி உரைகள் நிகழ்த்தினர். என்னையும் பேச சொல்லிதால் வழக்கமான ஒரு உரையை அங்கேயும் பேசினேன். பிறகு எங்கள் அனைவருக்கும் சால்வை போர்த்தினர். சில நாட்களுக்கு முன்னர் குளித்து துவட்டுவதற்கு துண்டு இல்லாமல் கௌதம் துண்டை திருடி துவட்டி திட்டு வாங்கிக் கொண்டு இருந்தேன். இப்போது கிட்டத்தட்ட பத்து சால்வைகளை வைக்க இடமில்லாமல் இருக்கும் நிலை.

நெசவு துறையில் பயிலும் இன்னொரு கல்லூரி மாணவி எங்களுடன் நடப்பதாக கேட்டு அங்கேயே அறிவித்து எங்களுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டார். மேலும் ஒரு நான்கு கிலோமீட்டர் சென்றவுடன் கிருஷ்ணன் சாருடன் லோகமாதேவி, கோவை பாலு, ஆனந்த கிருஷ்ணன் என்று ஒரு குழு, எங்களுடைய பெற்றோர்கள் இரண்டு காரில், சென்னையில் இருந்து அறப்போர் இயக்கத்தினர் என்று ஒரு பெரும் திரள் கூடிவிட்டது. கூடவே காரைக்காலில் இருந்து நாராயணன், ராம், சுனில் கிருஷ்ணன் ஆகியோர் ஒரு குழு. சுமார் 50 பேருக்கு மேல் கூடி விட்டோம். அது ஒரு பேரானந்த பெருக்கு. ஒவ்வொருவர் கண்ணிலும் பெருமிதம், மகிழ்ச்சி. என்னுடைய அம்மாவை அனு பார்த்ததும் கட்டியனைத்துக் கொண்டாள். இந்த பயணத்தின் இறுதி சில மணி நேரங்கள், சில கிலோமீட்டர்கள். முடியப்போகிறது.


என்னால் காயப்பட்ட நபர் என்னுடன் சகஜமாக பேசத் தொடங்கி விட்டார். ஆனால் என்னால் அவரிடம் அவ்வாறு பேச முடியவில்லை. மீண்டும் ஏதாவது சொல்லி காயப்பட்டு விடுவார்களோ என்று என்னுள் கூடியிருந்த பெரும் பயமும், குற்றவுணர்வும் என்னை அவரிடம் இயல்பாக பேசவிடாலம் செய்து கொண்டிருந்தது. அவர் என்னிடம் வந்து பேசினாலும் நான் விலகி சென்று கொண்டு இருந்தேன்.

ரோட்டரி சங்க நண்பர் ஒருவர் வீட்டில் முகம் கழுவி தயாராகி விட்டு நிகழ்வு நடக்கும் ராஜாஜி உப்பு சத்தியாக்கிரகம் செய்ததின் நினைவு மண்டபம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். அறப்போர் ஜெயராம் எங்கள் அனுபவம் குறித்து கேட்டுக் கொண்டே வந்தார். அவர் சௌமியாவிடம் கேட்கும் போது அவள் சொன்ன பதில் நான் முற்றிலும் எதிர்பாராதது. அது அவளால் மட்டுமே சொல்ல முடிந்தது. அவளுக்கு மட்டுமே நடந்த அனுபவம் அல்லது நாங்கள் சந்தித்ததின் வேறு கோணம். அவள் அப்படி கச்சிதமாக ஒரு அனுபவத்தை குறிப்பிட்ட வடிவத்தில்  தெளிவாக எனக்கு தெரிந்து சொல்லியதே இல்லை. இந்த பயணம் அவளுக்கு கொடுத்த தெளிவாகவே அதை நான் பார்க்கிறேன்.

இருட்டிவிட்டது. வேதாரண்யம் இன்னும் ஒரு கிலோமீட்டர் தான் உள்ளது. கௌதமிடம் அதை காட்டி சொன்னேன். கொஞ்ச நேரம் கம்முணு வாடா என்றான். அவனால் இது முடியப் போவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திடீரென மேடையில் பேசும்போது, அப்படியே திரும்பி கிளம்பிய இடம் நோக்கி மீண்டும் 400 கிலோமீட்டர் நடக்கப் போகிறோம் என்று அறிவித்துவிட்டு நடந்து விடுவோமா என்று கேட்டுக் கொண்டு இருந்தான். இப்போது ரோட்டரி சங்க நண்பர்களும் எங்கள் நடையில் இணைந்து கொண்டு சுமார் 70 பேருக்கு மேல் அந்த ஊர்வலத்தில் நடந்து கொண்டு இருந்தோம். எங்களுக்கு முன்னால் ரோட்டரி சங்க பேனர்களை பிடித்துக் கொண்டு அவர்கள் சென்று கொண்டு இருந்தனர். திடீரென முன்னால் சென்றவர்களில் ஒருவர் “வாங்க மாட்டோம் வாங்க மாட்டோம்! ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்!” என்று கத்த தொடங்கி விட்டார். அனைவரையும் கூட சேந்து கோஷமிடும்படி சொன்னார்கள். நாங்களும் அவர் பின்னால் கத்தத் தொடங்கினோம். ஓட்டு மொத்த கூட்டமும் கத்தத் தொடங்கியது. சிறுவர்கள் ராமும் சுதீர் சந்திரனும் குரவலைகள் புடைக்க கத்திக் கொண்டு சென்றனர்.

நாங்கள் அறுவரும் கையை கோர்த்து ஒன்றாக ஒரே வேகத்தில் நடக்கலாம் என்று அனு சொன்னாள். அப்படியே நடந்தோம். இது வரை இருந்த பிணக்குகள் அனைத்தும் அந்த கணம் காணாமல் போய் விட்டது. பெரும் கிளர்ச்சி எங்களை நடத்திக் கூட்டி சென்றது.


நிகழ்விடத்தை அடைந்து மேடையில் அளிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தோம். எடுத்தவுடன் ஏற்புரை நான் பேசினேன். அடுத்ததாக மற்றவர் நண்பர்களையும் பேச சொன்னார்கள். நான் மட்டுமே பேசுவதாக இருந்தது. வேறு யாருக்கும் தாங்கள் பேசப் போகிறோம் என்று அந்த கணம் வரைக்கும் தெரியாது. ஆனால் மிக நன்றாகவே பேசினார்கள். மேடையில் இருந்த ஒவ்வொரு கணமும் நெகிழ்ச்சியூட்டிக் கொண்டு இருந்தது. கீழே இருந்த ஒவ்வொரு முகமும் எங்களை பார்த்த விதம் உள்ளுக்குள் ஏதோ செய்து கொண்டிருந்தது. என்னுடைய அம்மா ஒவ்வொரு கணமும் துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தாள். நான் ஏதோ ஒன்றை உருப்படியாக செய்து கொண்டிருக்கிறேன் என்ற நம்பிக்கை வலுபெற்றிருக்கும் என்று நம்புகிறேன்.

நான் கண்ணீர் ததும்ப ததும்ப அமர்ந்திருந்தேன். கண்களை எல்லா திசைகளிலும் சுழற்றிக் கொண்டு இருந்தேன். அது இதயத்தில் இருந்து பெருக்கெடுத்த நீர் போல தோன்றியது. கைகளையும் கால்களையும் இறுக்கி அழுத்தி இருந்தேன். கீழே என்னுடைய அம்மா, அக்கா, உமையாள் எல்லோருமே ஈரக் கண்களோடு தான் அமர்ந்திருந்தனர். நிறைவு விழா முடிந்து கிருஷ்ணம்மாள் பாட்டி கையெழுத்திட்ட சான்றிதல் வழங்கப்பட்டது. அதை கையில் ஏந்தி நிற்பதே அளவற்ற மகிழ்ச்சியையும் ஒரு பெரும் பொறுப்பை அளித்தது.  

எனக்கு போர்த்தப்பட்ட சால்வையை அம்மாவிற்கு அணிவித்தேன். அனு வந்து என்னுடைய அக்காவிடம் முத்தம் கொடுக்குமாறு கேட்டு பெற்றாள். சௌமியா உமையாளை கட்டியணைத்து கண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தாள். அனு உந்திக் குதித்து தன்னுடைய அப்பாவை கட்டி அணைத்து ஐந்து நிமிடம் அசையாமல் நின்றிருந்தாள். இருவரும் அழுது கொண்டு இருந்தனர். கௌதம் மட்டும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தான். விழா முடிந்து ஒரு மண்டபத்தில் இரவுணவு. அவ்வளவு பேர். ஒரு திருவிழா ஓய்ந்த உணர்வு போல இருந்தது. அப்போது தான் கௌதம் சோகமாக இருக்கிறான் என்று சௌமியா வந்து சொன்னாள். சென்று அவனுடன் கொஞ்ச நேரம் இருந்து என்னாச்சு சொல்லு என்று கேட்டுக் கொண்டு இருந்தேன். ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தான். உள்ளே செல்லலாம் என்று அழைத்தவுடன் “நீ போ நா மூஞ்சி கழுவீட்டு வர” என்று சொல்லிவிட்டு கழிவறைக்குள் சென்றவன் வெகு நேரமாகி வெளியே வரவில்லை. சிறிய காதவாக இருந்ததால் என்ன தான் செய்கிறான் என்று எட்டி பார்த்தேன். மூஞ்சியில் தண்ணீரை அடித்துக் கொண்டிருந்தான். ஒரு கணம் அசையாமல் நின்று விட்டு கதறி அழத் தொடங்கினான். பிறகு அவனை அழைத்து சமாதானம் சொல்லி அழைத்துச் சென்றேன். அந்த இரவு முழுவதும் ஒரு உணர்ச்சி பரவசத்தில் தான் எல்லோரும் திளைத்துக் கொண்டு இருந்தோம்


இன்று இந்த இடத்தில் எங்களுடைய ஆசிரியர்கள் இருந்ததில் எங்களுக்கு பெரு மகிழ்ச்சி. கிருஷ்ணன் சார் இராமாயணத்தில் இருந்து ஒரு கதையை சொல்லி எங்கள் தோள்களில் மேலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சுமையை சேர்த்தி, தோள்கள் வலுப்பெறட்டும் என்று சொல்லி சென்றார். கிருஷ்ணம்மாள் பாட்டி, நாங்கள் வந்து விட்டோம் இனி அவருடைய பணிகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று சொல்லி இன்னும் பெரிய பாரத்தை சேர்த்து வைத்துள்ளார். தோள்கள் வலுபெற்று மேலும் நிமிர்வோம் என்று நம்புகிறேன்.

சிபி

நிறைவு.  

Comments

Popular posts from this blog

400 கி.மீ நடைபயணம்

ஏழாம் நாள்

அறப்போர் ஜெயராம் நேர்காணல்