450 கிமீ நடைபயணம் - 1

ஒவ்வொரு பயணமும் ஒவ்வொன்றை புதிதாக அளிக்கிறது. புதிய நிலப்பரப்பு, புதிய மனிதர்கள், புதிய சம்பவங்கள். 400 கிமீ சென்ற ஆண்டு செல்ல முடிவெடுத்த போது எங்களுக்கே பெரும் மிரட்சி இருந்தது. இது எங்களால் இயலுமா என்ற ஐயம் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளின் அனுபவமும் இதை செய்ய முடியும் என்ற உறுதியை அளிக்கத் தொடங்கியது. நாங்கள் எதிர்பாராத வகையில் உதவிகள் வரத்தொடங்கியது. முதல் இரண்டு நாட்களும் நாங்கள் வழி தவறிவிடாமல் இருக்க யாரென்றே தெரியாத முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் வண்டியில் வந்து நாங்கள் வழி தவற சாத்தியமான இடங்களில் நின்று சரியான வழியை காட்டி அழைத்துச் சென்றனர். அந்த 18 நாட்கள் தமிழகமே எங்கள் வீடாக உணர்ந்த நாட்கள். எங்கும் தங்க இயலும், எங்கும் உணவு கிடைக்கும் என்று நம்பும் பொழுது, இது நம் இடம் என்று உணரும் போது பெரும் அக விரிவு ஏற்படுகிறது. அதை அப்போது உணர்ந்தோம். உமையாள், தேனப்பன் போன்று பெயர் தெரியாமல் அறிமுகம் ஆகி பெற்றோர் போன்று மாறியவர்கள் உண்டு. 
இம்முறை 450 கிமீ நடைபயணம். அதே ஓட்டுக்கு பணம் பெறாதீர்கள் என்கிற பிரச்சாரம். அதே ஆறு பேர். ஆனால் இம்முறை இன்னும் வலுவான குரலில். தலைநகர் நோக்கி நடக்க உள்ளோம். கிருஷ்ணன் சார் சென்ற நடைபயணம் முடிந்த உடனேயே அடுத்த முறை ராஜாஜி உப்பு சத்தியாக்கிரகம் செய்ய நடந்த அதே பாதையான திருச்சி முதல் வேதாரண்யம் வரை நடக்கலாம் என்றார். அது சுமார் 150 கிமீ வரை வரும் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு அப்போதே அந்த பாதை வேண்டாம் என்று தோன்றியது. அதற்கு ஒரே காரணம் அது குறைவான தூரம் என்பது தான். 400 கிமீ நடந்த பின் அதை விட குறைவாக நடப்பதை என் மனம் ஏற்கவில்லை. சென்ற ஆண்டை விட 50 கிமீ கூடுதலாக நடக்க வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம். மேலும் சென்னையில் சென்று முடித்தால் அதிக கவனம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தோன்றியது. ஆகவே கோபி முதல் சென்னை வரை செல்லலாம் என்று முடிவெடுத்தோம். 
சென்ற முறை ஒரு அடையாள இடமாக போத்தனூர் காந்தி நினைவிடத்தில் தொடங்கினோம். இம்முறை அதே போல் கோபி லக்ஷ்மண ஐயர் விடுதியில் இந்த நடை பயணத்தை தொடங்க முடிவு செய்தோம். ஜனவரி 11, 2026 இன்று எங்கள் பயணம் திட்டமிட்டபடி தொடங்கியது. சுமார் நாற்பதில் இருந்து ஐம்பது பேர் சேலம், கோவை, காரைக்குடி, புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர், வெள்ளிமலை என்று வெவ்வேறு ஊர்களில் இருந்து இந்த தொடக்க நிகழ்விற்கு வந்து இருந்தனர். எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன், மாற்றம் நம்மில் இருந்து தொடங்குவது அவசியம் அதுவே காந்திய வழிமுறை இந்த நடைபயணம் அவ்வாறு மக்களாகிய நம்மிடம் இந்த மாற்றத்தை கோருகிறது என்று பேசி எங்கள் பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த முறை நாங்கள் "நான் ஓட்டுக்கு பணம் பெற மாட்டேன்" என்ற உறுதிமொழியை தாங்கிய ஒரு வெள்ளை துணியில் மக்களிடம் கைரேகை பெற உள்ளோம். முதல் கைரேகையை சுனீல் கிருஷ்ணன் சார் இன்று வைத்தார். பிறகு இன்று வந்தவர்கள் அனைவரும் கைரேகை வைத்தனர். நாங்கள் கடந்து செல்லும் 9 மாவட்டங்களிலும் இவ்வாறு கைரேகை வாங்க உள்ளோம். இறுதி நாளில் அந்த துணியை விரிக்கும் போது தமிழகமே எங்களுக்கு அளித்த உறுதிமொழியாக அது இருக்கும். 
லக்ஷ்மண ஐயர் விடுதியில் தொடங்கி சுமார் 4 கிமீ வரை வெளியூர் நண்பர்கள் உடன் நடந்து வந்தார்கள். நாங்கள் இன்று துண்டு பிரசுரம் அளித்து பேசிய ஒவ்வொருவரும் சென்னை வரை நடந்து செல்கிறோம் என்று சொன்னவுடன் பெரும் அதிர்ச்சியை முதலில் அடைந்தனர். சிலர் "ஏன் அவ்வளவு தூரம் போறீங்க பக்கத்துல வரைக்கும் போலாமுல்ல" என்று சொல்லி வருத்தப்பட்டனர். நான் ஒருவரேனும் எங்களுக்கு எதிர் வாதம் வைப்பார் அதை எதிர்கொண்டு பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நடந்து வந்தேன். ஆனால் ஒருவர் கூட எங்களை வாழ்த்தாமல் இல்லை. நாங்கள் சொல்வதற்கு சரி என்று சொல்வதை தவிர வேறு வழி இல்லாதது போல் ஆகி விட்டதாக தோன்றியது. அது தான் எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. 
எங்களுடைய பெற்றோர்கள் இந்த தொடக்க நிகழ்விற்கு வந்து கலந்து கொண்டனர். கொஞ்ச தூரத்தில் ஒவ்வொருவராக விடைபெற்று கிளம்பினர். கோபி பேருந்து நிலையத்தின் அருகில் என்னுடைய அம்மா விடை பெற்றார். இரு கண்ணங்களிலும் மாறி மாறி எனக்கு முத்தமிட்டார். மற்ற நண்பர்களையும் அழைத்து அனைவருக்கும் முத்தமிட்டார். கண்ணீர் ததும்ப எங்களை விட்டு சென்றார். வீட்டில் இருந்து கிளம்பும் போது, "போன முறை என்னை பிரிந்து இருக்க வேண்டும் என்று வருத்தபட்டாய், என்னை அனுப்ப மெல்லிய தயக்கம் இருந்தது. இம்முறை அப்படி இல்லையா?" என்று கேட்டேன். இல்லை என்றார். "சென்ற முறை ஒரு பயம் இருந்தது. எப்படி இருக்கும். பெண்களுடன் செல்வதால் வெளி ஆட்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை இருந்தது. ஆனால் இம்முறை இது ஒரு பெருஞ்செயல் என்பதை உணர்கிறேன். இவ்வாறு தொடங்கி இந்த மாற்றம் நிகழ நீ ஒரு காரணமாக இருக்கிறாய் என்பதில் எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும் இருக்கிறது." என்றார். நான் இப்போது அம்மாவிடம் அதிகம் நேரம் செலவிடுவதில்லை. அதிகம் பேசுவதில்லை. வீட்டில் இருப்பதே மிக குறைவு. பெரும்பாலும் இருவரும் தனித்தனி உலகத்தில் உள்ளோம். எங்கேனும் வெளியூர் சென்றால் அம்மாவிற்கு அழைத்து பேசுவது கூட இல்லை. ஆனால் என்னை ஒவ்வொரு முறையும் அவள் புரிந்து கொள்கிறாள். என்னை எந்த எல்லைக்கும் சென்று எதை வேண்டுமென்றாலும் செய்ய அனுமதிக்கிறாள். ஒவ்வொரு நாளும் என்னில் இருந்து ஏதோ ஒன்றை அவள் கற்றுக் கொள்ள முயல்கிறாள். அதில் இருந்து இதுவரை அவள் வாழ்வை  வேறு கோணத்தில் பார்க்க, வேறு வகையில் அணுக முயல்கிறாள். ஐம்பத்தைந்து வயதிற்கு பின்னரும் தன்னுடைய அகத்தை குழந்தையாகவும் புதிய மாறுதல்களை ஏற்பவளாகவும் உள்ளாள். தமிழகம் எனக்கு தாயாக மாறியது. என்னுடைய தாயின் உள்ளம் ஒவ்வொரு நாளும் தமிழகம் அளவிற்கே விரிந்து விஸ்தீரனம் அடைகிறது. தாயாக, தோழியாக, காதலியாக, தெய்வென உணரும் ஒளியாக எல்லாமாகவும் இருக்கும் அம்மாவிற்கு  இந்த தருணத்தில் நன்றி சொல்ல தோன்றுகிறது. 
அனைவரும் விடைபெற்று சென்ற பின் கொஞ்ச தூரத்தில் சாலையில் ஒரு பெண்மணியிடம் நோட்டீஸ் கொடுத்து பேசினோம். அவர் சற்று மனபிறழ்வு கொண்டவர். எங்கள் உடன் கொஞ்ச தூரம் நடந்து வந்தார். எங்கள் நடையில் உள்ள பிரச்சனையை சுட்டிக் காட்டி இவ்வாறு நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். வெகு சகஜமாக, இயல்பாக எங்களுடன் இணைந்து கொண்டார். கொஞ்ச தூரம் எனக்கு இடது புறம் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது சாலை ஓரம் ஒரு பெண் தன்னுடைய குழந்தையை வைத்துக் கொண்டு நின்றிருந்தார். திடீரென அவரிடம் சென்று தன் கையில் இருந்த கைக்குட்டையால் அந்த குழந்தையின் மூக்கை துடைத்து "செல்லம் மூக்குல பாரு சளி" என்று சொல்லி சிரித்தார். அங்கிருந்து நாங்கள் விரைவாக சென்றதால் அவர் வழியில் எங்கோ நின்று விட்டார். 

கொஞ்ச தூரத்தில் ஒரு வடமாநிலத்தவர் எங்களிடம் வந்து தன்னுடைய கைப்பேசி தொலைந்து விட்டதாக சொல்லி கீழே அமர்ந்து அழத் தொடங்கிவிட்டார். மது அருந்தியிருந்தார். யாரோ அவரை தாக்கியது போலவும் இருந்தது. ஏதேதோ எங்களிடம் சொல்ல முயன்றார். மண்ணில் அமர்ந்து கண்ணை தேய்த்தவாறு புலம்பினார். என்ன செய்வதென்று தெரியாமல் நாங்கள் கடந்து வந்துவிட்டோம். இது போன்ற மனிதர்களை நாம் நடந்து செல்லும் போது அன்றி வேறு எப்போதும் கவனிக்க மாட்டோம். 
பாரியூர் கோவிலில் திருவிழா நடந்து கொண்டு இருந்தது. பெரும் கூட்டம். பல்வேறு கடைகள். நாங்கள் சிரமப்பட்டு தேடி வாங்கிய பயணத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அங்கு இருந்தன. அந்த கூட்டத்தைக் கடந்து சென்றவுடன் மெலிதாக மழை தூரத் தொடங்கியது. எங்கள் முதுகுப்பைகளை அம்மாபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் அவர்கள் வண்டியில் வாங்கி சென்றுவிட்டார். எங்களுடைய மழைக்கோட்டுகளும் அதில் தான் இருந்தது. வேறு வழியில்லாமல் தூரலில் நனைந்தவாரே நடந்து சென்றோம். அம்மாபாளையத்தை நெருங்க நெருங்க தூரல் வலுக்கத் தொடங்கியது. மின்கம்பங்களில் கட்டியிருக்கும் தட்டிகளை பீய்த்து அனு தலைக்கு மேல் பிடித்துக் கொண்டாள். அர்ச்சனா எங்கள் நோட்டீஸையே பிரித்து தலைக்கு மேல் பிடித்துக் கொண்டாள். எங்களின் பதாகைகளை சிலர் தலைக்கு மேல் பிடித்துக் கொண்டனர். ஒதுங்குவதற்கும் வழியில்லை. இரண்டு புறமும் வயல்வெளி மட்டுமே. தூரலின் ஊடாகவே நடந்து கணேசன் புதூர் வந்து சேர்ந்தோம். முழுவதும் நனைக்கும் அளவிற்கு மழை இல்லை. லேசான ஈரப்பதம் மட்டும் இருந்தது. அங்கு ஒருவரிடம் நோட்டீஸ் கொடுத்து எங்கள் பிரச்சாரத்தை சொன்னோம். அவர் தான் அந்த ஊருக்கு பணம் வழங்கும் ஏஜெண்ட். நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் சொய்தவாறு நாங்கள் சென்னை வரை நடந்து செல்கிறோம் இனிமேல் நீங்கள் கொடுக்காதீர்கள் என்று சொன்னதற்கு சம்பிரதாயமாக தலையை ஆட்டி வைத்தார். அம்மாபாளையத்தில் தான் இருப்போம் தேர்தல் நேரத்தில் வருவோம் கொடுக்காதீர்கள் என்றும் இப்போதும் அம்மாபாளையம் சென்று தங்க உள்ளோம் என்றும் சொல்லிவிட்டு கிளம்பினோம். கொஞ்ச தூரம் நடந்தவுடன் அவர் திரும்ப வந்து நடந்தே போறீங்களா என்று கேட்டார். ஆம் என்றோம். இன்னும் இரண்டு கிமீ வரும் நடப்பது சிரமம் என்றார். நாங்கள் சென்னை வரை நடந்து செல்கிறோம் என்று இணைந்த குரலில் சொன்னோம். இந்த வழியாவா? என்றார். ஆம் என்றோம். வீட்டில் இருந்து மழைக்கோட்டை எடுத்து போட்டுக் கொண்டு எங்களுடன் நடந்து வருவதாக சொன்னவர் பின்னர் வரவில்லை. இரவு 9 மணிக்கு அம்மாபாளையம் வந்து சேர்ந்தோம். அம்மாபாளையம் முன்னாள் தலைவர் ராஜசேகர் எங்களுக்கு இரவுணவு ஏற்பாடு செய்திருந்தார். 
சாப்பிட்டு விட்டு ஆண்கள் நூலகத்திலும் பெண்கள் வழக்கமாக அம்மாபாளையத்தில் பெண்கள் தங்கி பணி செய்யும் வீட்டிலும் தூங்க சென்றோம். 10 மணி வாக்கில் ஒருவர் அழைத்தார். நல்லோர் வட்டத்தில் இருந்து அழைப்பதாக சொன்னார். நடைபயணத்திற்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டார். பேராசிரியர் பழனிதுரை அவர்கள் சொல்லி நல்லோர் வட்டத்தில் இருந்து என்னை ஒரு வாரம் முன்னர் அழைத்து இந்த நடைபயணம் குறித்து கேட்டு அவர்கள் யூட்யூப் பக்கத்தில் நம்பிக்கை செய்திகள் என்ற பெயரில் வேறு சில செய்திகளுக்கு நடுவே 1 நிமிடம் இந்த நடைபயணம் குறித்து பேசி செய்தி வந்தது. அதை 150 பேர் பார்த்து இருந்தனர். அதன்பின் அந்த அமைப்பில் இருந்து ஒரு கூடுகை ஏற்பாடு செய்து எங்களைப் பற்றியும் இந்த நடைபயணம் பற்றியும் பேசி உள்ளார்கள். அதன் பின் நல்லோர் வட்டத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அழைத்து உதவி வேண்டுமா என்று கேட்கின்றனர். ஒரு தங்குமிடம் ஏற்பாடு செய்துள்ளனர். 

அதே போல் ஜெயமோகன். இன் இணைய தளத்தில் இந்த நடை பயணம் குறித்து வந்த பின் பல்வேறு நபர்கள் எங்களுக்கு உதவ முன்வந்து உள்ளனர். இப்போது வரை 100, 500 உட்பட பல்வேறு நபர்கள் எனக்கு தொகை அனுப்பிக் கொண்டே உள்ளனர். இது ஒரு பெரும் ஆதரவு. இந்த பயணம் முழுக்க இது போல் தெரியாத நபர்களிடம் இருந்து ஆதரவை பெற்று சென்னை சென்று சேர்வோம் என்று நம்புகிறேன். 

மேலும்..

சிபி.

Comments

  1. வாழ்த்துக்கள் சிபி. போன பயன்படும் உங்கள் எழுத்துக்கள் மூலமாக உடன் வந்தேன், இம்முறை கூடுதலானது வெறும் நடைபயணத்தின் தூரம் மற்றும் அல்ல உங்கள் எழுத்தின் தீவிரமும் செயல்களின் தீவிரமும் தான்.

    ReplyDelete
  2. இன்றைய கட்டுரை ஒரு உணர்ச்சிகரமான துவக்கம். நீங்களும் உங்கள் அம்மாவும் ஒருவரை ஒருவர் மேலும் அறிகிறீர்கள். இருவரும் இணைந்து இவ்வுலகை. அதற்குள்ளாக ஒரு மனம் தப்பியவர், தாக்கப் பட்ட வட மாநிலத்தவர், பணம் வழங்கும் முகவர், மழை நடை என அனுபவங்கள் அடுங்க துவங்கி விட்டது. அடுத்தது என்ன தரும் இவ்வுலகு என ஒரு சுவாரசியம் துவங்கி விட்டது. தினம் ஒரு கட்டுரை இந்த தரத்தில் இருக்கும் என்றால், ஒரு இலக்கிய வாசகனுக்கு அவை ஒரு அனுதின பரிசு.

    கிருஷ்ணன், ஈரோடு

    ReplyDelete
  3. அனுப்பிள்ள சிபி,
    நடைப்பயணத்திற்கான வாழ்த்துக்கள். நல்ல தொடக்கம். அம்மாவின் வளர்ச்சியும் உங்களின் வளர்ச்சியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. தினமும் உங்களின் எழுத்துக்களுடன் எங்கள் நாள்கள் விடியும். உங்கள் செயல்கள் பெருஞ்செயல்களாக வாழ்த்துக்கள்.
    அன்புடன் ஈஸ்வரி

    ReplyDelete
  4. மனம் நிறை அன்பு சிபி..

    ReplyDelete
  5. சிபி, இது ஒரு அருமையான ஆரம்பம்.
    இந்த நடைப்பயணம் பற்றி உங்களிடமிருந்து மட்டுமல்லாமல், உங்கள் மற்ற நண்பர்களிடமிருந்தும் மேலும் படிக்க விரும்புகிறேன். நீங்கள் சந்திக்கும் பல்வேறு மனிதர்களைப் பற்றிய உங்கள் அவதானிப்புகள் எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால், இந்தப் பதிவு உங்கள் தாயுடனான உங்கள் உரையாடல்கள் வரும்போது மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கிறது.
    இந்த நடைப்பயணத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. செல்வழி நன்று வெல்வது உறுதி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

450 கிமீ நடைபயணம் - 2

450 கிமீ நடைபயணம் - 6