450 கிமீ நடைபயணம் - 2
முதல் நாள் எங்களுடன் இலக்கியா, நிர்மல், அஜய், மனோஜ், சராபத், தமீம் ஆகிய மற்ற முனை நண்பர்களும் அம்மாபாளையம் வரை நடந்து வந்தனர். இரவு 9:30 மணிக்கு இலக்கியா, சராபத், தமீம் ஆகியோர் கிளம்பி வீட்டிற்கு சென்று விட்டனர். மற்றவர்கள் இரவு எங்களுடன் தங்கி காலையில் கிளம்பினார்கள். நிர்மல் மதியம் வரை எங்களுடன் நடந்தான். ஜனவரி 12 அம்மாபாளையத்தில் இருந்து காலை 7:15 மணிக்கு நடக்கத் தொடங்கினோம். அரை கிலோமீட்டர் நடந்த பின்னர் கைரேகை பெறும் வெள்ளை துணியை எடுத்து விட்டீர்களா? என்று கேட்ட பின்னர் தான் பெண்கள் தங்கியிருந்த வீட்டிலேயே விட்டு வந்துவிட்டதை உணர்ந்தார்கள். மனோஜ் மீண்டும் திரும்ப நடந்து சென்று அந்த துணியை எடுத்துக் கொண்டு திரும்ப வண்டியில் வந்து எங்களிடம் கொடுத்தான். எங்களுடன் ஆப்பக்கூடல் வரை நடப்பதாக முதலில் அவன் திட்டம். ராகவியும் அதுவரை நடப்பதாக இருந்தாள். நேற்றே அம்மாபாளையம் வரை எங்களுடன் நடக்க வேண்டும் என்று அடம் பிடித்தாள். அவள் ஆறு மாதம் முன்பு வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து இடுப்பு எழும்பு முறிந்துவிட்டது. அதனால் அவளை நடக்க வேண்டாம் என்று சொல்லி கோபியில் இருந்து பேருந்தில் அம்மாபாளையம் அனுப்பி வைத்தோம். அழுது கொண்டே பேருந்தில் ஏறி வந்தாள். மனோஜ் தான் அவளை மிரட்டி அனுப்பி வைத்தான். அவன் தான் அவளை முழுவதும் பார்த்துக் கொள்கிறேன். இது போல் அவள் அடம் பிடிக்கும் போது மிக கடுமையாகவே நடந்து கொள்வான். அவன் சொல்வதை அவள் கேட்பதை தாண்டி வேறு எந்த வழியும் இல்லாதது போல் அவள் ஏற்றுக் கொள்வாள். பல நேரங்களில் மிக நெருங்கிய நண்பனாகவும் சில நேரங்களில் ஒரு படி மேலாக தந்தையாகவும் மனோஜ் அவளுடன் இருக்கிறான். இன்று அவன் திரும்ப சென்று வண்டியை எடுத்து வந்ததால் ஆப்பக்கூடல் வரை நடக்கவிருந்தவர்கள் பாதி வழியில் திரும்ப வேண்டியதாயிற்று. அதனால் மீண்டும் அழு முகத்துடன் அவள் திரும்பினாள். வெள்ளை துணியை தவறவிட்டதற்கு எங்களை திட்டிச் சென்றாள்.
அவர்கள் எங்களை பிரிந்தவுடன் நவநீதன் சார் வந்து எங்கள் முதுகுப்பைகளை பெற்றுக்கொண்டு சென்று இன்று இரவு நாங்கள் தங்கவிருக்கும் சௌமியா ஸ்ரீ வீட்டில் வைத்துவிட்டார். இன்றும் சுமையில்லாமல் நடந்தோம். இம்முறை மறக்காமல் மழைக் கோட்டை எடுத்து கையில் வைத்துக் கொண்டோம்.
எங்கள் கையில் இருந்த துண்டு பிரசுரங்கள் எல்லாம் சரசரவென்று தீர்ந்து வந்தது. சென்ற வருடம் 1000 நோட்டீஸ் முதலில் அச்சடித்தோம். 11 நாட்கள் கடந்தும் அதில் பாதியை கூட தீர்க்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டோம். ஆனால் இம்முறை இரண்டு நாளில் கிட்டத்தட்ட 1000 நோட்டீஸ்களை தீர்த்து விட்டோம். நாளை மீண்டும் 2000 நோட்டீஸ் அச்சடிக்க உள்ளோம். அதற்கு பிரதான காரணம் சென்ற முறை நாங்கள் சென்ற வழி முழுவதுமே நகரத்திற்கு வெளியே பெரிதும் இரண்டு புறமும் வயல்களும், தென்னை தோப்புகளும், வரண்ட காடுகளும் இருந்தன. மனிதர்களை உதிரி உதிரியாகவே பார்த்து பேசினோம். ஆனால் இம்முறை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள் வழியாக பயணத்தை தொடங்கியுள்ளோம். மேலும் முதுகு சுமையும் இல்லாததால் நிறைய பேரிடம் பேசினோம். அவ்வாறு கடையில் பொருள் வாங்க வந்த ஒரு பெண்மணியிடம் கௌதம் நோட்டீஸ் கொடுத்து பேசினான். அவர் உடனடியாக "ஏன் வாங்க கூடாது?" என்று கேட்டார். கௌதம் அவருக்கு விலக்கிக் கொண்டு இருந்தான். நான் சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டு இருந்தேன். அது நம் பணம் தான் என்று அவர் வாதிட்டார். நானும் அருகில் சென்று பேசத் தொடங்கினேன். இது நம்முடைய பணம் என்று செல்ல இயலாது, ஏனெனில் ஒருவர் கொள்ளையடித்து சேர்த்த பணத்தை தான் நமக்கு அளிக்கிறார். அது களவின் பங்கு தொகை தான். நீங்களும் ஒரு திருட்டில் கூட்டாளியாக விரும்புகிறீர்களா என்று கேட்டேன். அவர் நான் பேசுவதை துளியும் கேட்கவில்லை. நான் சொல்லும் போது என்னுடன் சேர்ந்தே அவர் வாதத்தை பேசிக்கொண்டே இருந்தார். "என்னிடம் ஒரு கேள்வி கேட்டீர்கள். அதற்கு நான் பதில் சொன்னால் நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள்" என்று சொன்னேன். அதையும் அவர் கேட்கவில்லை. "நீங்க சென்னா மக்கள் வாங்காமல் இருப்பார்களா?" என்று அடுத்த கேள்வியை கேட்டார். "மாறியிருக்காங்க. இது முதல் முறை நாங்க பண்ணல. போன வருஷம் பெருந்தலையூருல.." என்று சொல்லும் போதே "நான் சீமானுக்கு தான் ஓட்டு போடுவேன். ஏனெனில் அவர் தான் பணம் தருவதில்லை" என்று மீண்டும் பேசத் தொடங்கினார். இம்முறை மிக அழுத்தமாகவே "என்கிட்ட ஒரு கேள்வி கேட்கறீங்க நான் பதிலளிப்பதற்குள் நீங்கள் வேறு பேசுகிறீர்கள். இப்படி பேசினால் யாருமே பேச முடியாது. நாங்கள் கிளம்புகிறோம்" என்று சொல்லி விட்டு திரும்பி நடக்கத் தொடங்கினேன். அவர் உடனே "இந்த மொற நான் பணமே வாங்க மாட்ட தம்பீ. எனக்காக இல்லனாலும் உனக்காக வாங்காத இருக்கற" என்றார். நான் திரும்பி புன்னகைத்து சரியென்று தலையாட்டியவாறு நடந்து சென்றுவிட்டேன்.
சென்ற முறை எங்கள் நடைபயணத்தின் இறுதி நாட்களில் சபரீஷ் ஒரு மஞ்சள் சார்ட்டில் "ஓட்டிற்கு பணம் பெறாதீர்கள்" என்று எழுதி ஒரு கை தட்டி செய்தான். முன்னரே அந்த திட்டம் இருந்தது. ஆனால் கையில் பிடித்துக் கொண்டு அவ்வளவு தூரம் நடப்பது குறித்து யோசித்து அந்த திட்டத்தை கைவிட்டிருந்தோம். ஆனால் அவன் செய்து கையில் பிடித்த போது மக்களின் கவனம் பெரிதளவில் எங்கள் பக்கம் திரும்பியது. அதனால் இம்முறை மிகவும் திட்டமிட்டு நான்கு பதாகைகளை ஈரோடு பிரபு அண்ணா செய்து கொடுத்தார். அது உண்மையில் பெரிய அளவில் பயனளித்தது. பல பேர் எங்களை திரும்பி பார்த்தனர். வண்டியில் செல்பவர்கள் பலர் வேகத்தை குறைத்து அதை படித்துச் சென்றனர். நாங்கள் நோட்டீஸ் கொடுக்கும் முன்னரே அதை படித்து பதில் சொல்ல தொடங்கிவிட்டனர். ஆனால் வண்டியில் செல்பவர்கள் பலர் குத்துமதிப்பாக ஒன்றை புரிந்து கொண்டு சம்பந்தம் இல்லாமல் கத்திச் சென்றனர். ஒருவர் எங்களை கடக்கும் போது "ஒரு குவாட்டர் மட்டும் வாங்கி குடுங்க உங்களுக்கே ஓட்டு போட்டற" என்று கத்தினார். இன்னொருவர் "TVK க்கு ஓட்டு போட்ருங்க" என்று கத்தி சென்றார்.
சில இடங்களில் ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியாத சில கட்சிகள் எங்களுக்கு ஆதரவு வழங்க முன் வந்தார்கள். ஒருவர் எங்களை வழிமறித்து அவர் ஒரு தனி கட்சி வைத்திருப்பதாகவும் சொல்லி எங்களுக்கு ஆதரவு அளிக்கும் படி ஒரு பதிவு போடுவதற்கு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர் கட்சியின் பெயர் விடுதலை வேங்கைகள் என்று சொன்னார். தவெக கட்சியினர் அழைத்து நாமக்கல் மாவட்டத்தில் எங்களுடன் சேர்ந்து நடக்க இயலுமா என்று கேட்டனர். எங்கள் மேல் கட்சி அடையாளம் விழ நாங்கள் விரும்பவில்லை. ஆகவே அவ்வாறு வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன்.
சாலையில் நடக்கும் போது சௌமியா எங்கள் பதாகையை முதுகில் மாட்டிக்கொண்டு கொஞ்ச தூரம் திரும்பி பின்நோக்கி நடந்து சென்றாள். அதைப்பார்த்த சாலையில் செல்பவர் ஒருவர் திரும்பி வந்து எங்களிடம் பேசி 200 ரூபாய் டீ செலவிற்கு அளித்தார். ஆப்பக்கூடலில் பாரத் பெட்ரோலியத்தில் வேலை செய்யும் பணியாளர்களிடம் காலை உணவிற்கு உதவ முடியுமா என்று கேட்டோம். அவர்கள் உடனடியாக ஆளுக்கு கொஞ்சம் சேர்த்து 500 ரூபாய் அளித்தார்கள். அருகிலேயே வசந்தம் மெஸ் என்ற ஹோட்டலில் காலை உணவு சாப்பிட்டோம்.
நாங்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே எங்கள் அறக்கல்வி ஆசிரியர்களில் ஒருவராக வி.பி.குணசேகரன் அவர்கள் வந்துவிட்டார். அங்கிருந்து சுமார் 2 கிமீ எங்களுடன் நடந்து வந்து பிரச்சாரம் செய்தார். அவருடன் இன்னும் இரண்டு கம்யூனிஸ்ட் தோழர்களையும் அழைத்து வந்திருந்தார்.
ஆப்பக்கூடல் காவல் நிலையத்திற்கு சென்று நோட்டீஸ் வழங்கினோம். அங்கிருந்த SI கவுந்தப்பாடிக்காரர். நாங்கள் சென்ற வருடம் பெருந்தலையூரில் செய்த பணிகளை அறிந்திருந்தார். என்ன உதவி வேண்டுமானாலும் கேட்கும் படி சொன்னார். அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
மேலும் நடந்து தளவாய்ப்பேட்டை வந்து சேர்ந்தோம். அத்தாணி, பவானி சாலையில் ஒரு ஊர் அதன் பின் இருபுறமும் நீண்ட வெட்டவெளி,தோப்புகள் என்று மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு வெட்டவெளியில் திடீரென மழை தூரத் தொடங்கியது. அனைவரும் வேகமாக தங்கள் மழைக்கவசங்களை எடுத்து மாட்டத் துவங்கினர். நானும் கௌதமும் மட்டும் எதுவும் செய்யாமல் நின்று அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தோம். அனைவரும் எடுத்து மாட்டியவுடன் சுவிட்ச் போட்டது போல் மழை நின்றுவிட்டது. மீண்டும் அவற்றை கழட்டி மடித்து வைத்தனர். தளவாய்ப்பேட்டைக்கும் ஜம்பைக்கும் இடையில் ஒரு கருப்புசாமி கோவிலின் மதில் சுவரை ஒட்டி மரத்தடியில் ஓய்வெடுக்க ஒதுங்கினோம். படுத்திருக்கும் போதும் ஒரு மெல்லிய தூரல் இருந்து கொண்டே இருந்தது. பனிப்பொழிவு போன்று. மிக மிருதுவான துளிகள். அதை வாங்கிக்கொண்டே சற்று ஓய்வெடுத்தோம்.
பெண்கள் சிலர் சிறுநீர் கழிப்பதற்கு ஒரு வீட்டீற்கு சென்றார்கள். அந்த வீட்டில் இருந்த பெண் ஒருத்தர் எங்களுக்கு சில தட்டுகளில் சர்க்கரை பொங்கல் கொடுத்து அனுப்பினார். நடக்கத் தொடங்கும் போது தட்டை கொண்டு வந்து கொடுத்துவிடும் படியும் அவர் வீட்டில் எங்களை வைத்து ஒரு காணொளி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்வதாகவும் சொன்னார். நாங்கள் ஓய்வெடுத்து முடித்து கிளம்பும் போது திருப்பூரில் இருந்து அனந்த குமார் சாரும், எங்கள் முனை உறுப்பினர் பவித்ராவும் வந்து சேர்ந்தனர். அருகிலேயே இருந்த கம்மங்கூழ் கடையில் ஆளுக்கு கொஞ்சம் கம்மங்கூழ் குடித்தோம். அப்போது அந்த கம்மங்கூல் கடைக்காரரிடம் எங்கள் உறுதிமொழித் துணியில் கைரேகை வைக்க சம்மதம் வாங்கி அவரிடம் ரேகை பெற்றோம். கூல் குடிக்க வந்தவர்களிடம் கைரேகை வைக்கும் படி கேட்டோம். 60 வயதான பெண்மணி ஒருவர் கைரேகை வைக்கலாமா என்று யோசித்தார். அருகில் நின்ற இன்னொரு நபர் "ஹேய்! கைரேக வச்சுப்போட்டீனா அப்பறொ பணமாங்க கூடாது தெரிஞ்சுக்க" என்றார். அந்த பெண்மணி சற்று கோணலான சிரிப்புடன் எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டார். சொன்னவரிடம் கைரேகை கேட்டேன். "அட நா பண மாங்குவெ. கைரேகை வச்சுப்போட்டா மனசாட்சி கேக்காதா என்னெய" என்றார். சரி இனிமேல் வாங்காதீர்கள் என்றேன். "அதெப்படி குடுக்குற காச வேண்டாங்கறது?" என்றார். "இப்போ அவங்க திருடி சம்பாதிக்கிற பணத்த தான உங்களுக்கு கொடுக்கறாங்க, அத வாங்கீட்டா நீங்களும் திருட்டுல கூட்டாளி ஆன மாதிரி ஆகாதா" என்று கேட்டேன். அவர் உடனே பேச்சை மாற்றி சம்பந்தமே இல்லாமல் குசு குசு மொழியில் மெதுவாக "இங்க கோயிலுக்கு நெறையா வேட்டியெல்லாம் வருது, ஏதாச்சு அனாதை ஆஸ்ரமத்துக்கு வேணும்னா சொல்லுங்க குடுத்துப்போடலா. வெட்டியா கெடக்குது. யாராச்சு இருந்தா தேடி சொல்லுங்க" என்றார். நீங்க இதுவரை அப்படி தேடியுள்ளீர்களா? நீங்களே தேடி சரியான ஆளை கண்டுபிடித்து கொடுத்து விடுங்கள் ஒன்று சொல்லிவிட்டு நாங்கள் நகர்ந்து விட்டோம்.
பொங்கல் கொடுத்த பெண்மணி வீட்டிற்கு சென்று தட்டை கொடுத்துவிட்டு அவர் குடும்பத்தில் அனைவர் கைரேகையும் பெற்றுக் கொண்டோம். அவர் எங்களை வைத்து ஒரு குறுங்காணொளி பதிவு செய்தார். முனை குறித்தும் முந்தைய செயல்பாடுகள் குறித்தும் நான் ஒரு ஐந்து நிமிடம் பேசினேன்.
நல்லோர் வட்டத்தில் இருந்து கேசவன் என்பவர் எங்களுக்கு அழைத்து பேசி அவர் நண்பர்கள் இருவருடன் வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். அவர்கள் மூவருமே கல்லூரி மாணவர்கள். சென்னையில் ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார்கள். கிருஷ்ணன் சார், ஈஸ்வர மூர்த்தி சார், பாரி அண்ணா ஆகியோரும் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார்கள். ஜம்பை அருகில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இரண்டு இளம் பெண்கள் நின்றுகொண்டு இருந்தனர். அவர்களிடம் சென்று கைரேகை கேட்டோம். ஒரு பெண் வைக்க மறுத்துவிட்டார். ஒருவர் ஒப்புக் கொண்டார். வைக்க மறுத்தவர் இவரிடம் வைக்க வேண்டாம் என்பதை அவர்களுக்கே உரிய மொழியில் சொல்ல முயன்றார். ஆனால் அதற்குள் அவர்களுக்கான பேருந்து வந்துவிட்டது. அங்கிருந்தவர்கள் சிலரிடம் கைரேகை வாங்கினோம். சிலர் பதில் சொல்லாமல் முன்பு அந்த வயோதிகப் பெண் சிரித்த அதே கோணல் சிரிப்புடன் கடந்து சென்றனர். கொஞ்ச தூரத்தில் எங்கள் கையில் இருந்த நோட்டீஸ் அனைத்தும் தீர்ந்துவிட்டது. ஈரோட்டில் இருந்து வந்த வண்டியில் இருந்து மீதமிருந்த நோட்டீஸ்களை பெற்றுக் கொண்டோம்.
அனுவும் அர்ச்சனாவும் பின்னால் எங்கோ நடந்து வந்து கொண்டு இருந்தனர். அர்ச்சனா தன்னுடைய அளவை விட ஒரு அளவு சிறிய காலணியை வாங்கிவிட்டாள். அது அவளின் காலை நெருக்கி கால் வீங்கி விட்டது. கொப்புளங்கள் வந்துவிட்டது. கால் முழுவதும் பேண்டேஜ்களை ஒட்டியிருந்தாள். சிரமப்பட்டு நடந்து வந்தார்கள். அவர்கள் இருவரையும் யாராவது பார்த்தால் பள்ளி மாணவிகள் என்றே நினைத்துக் கொள்வார்கள். அப்படி சிலர் பார்த்து அவர்களிடம் பேசியுள்ளனர். அப்படி பேசியவர் ஒருவர் இவர்களுக்கு கொடுக்க பாக்கெட்டில் கைவிட்டு மொத்த பணத்தையும் எடுத்து உள்ளார். மொத்தமாகவே அதில் நாற்பது ரூபாய் இருந்து உள்ளது. அதை அப்படியே இவர்கள் கையில் கொடுத்துவிட்டார்.
கிருஷ்ணன் சார் உட்பட அனைத்து நண்பர்களும் எங்களுடன் 5 கிமீ நடந்த பின் விடைபெற்று சென்றனர். சென்ற முறை பாதி பயணத்தில் சாலையில் ஒரு பிளாஸ்டிக் கிரிக்கெட் பேட்டும் பந்தும் வாங்கி நானும் கௌதமும் கிரிக்கெட் விளையாடிச் சென்றோம். இந்த முறை முதலிலேயே வாங்கிவிட்டோம். ஒரு பந்து இளஞ்சிவப்பு நிறத்தில் மிக மிருதுவாக நல்ல தரத்தில் வாங்கி இருந்தோம். அதை என்னுடைய வீட்டில் இருந்து கிளம்பும் போது தவறவிட்டு விட்டேன். அது எங்கோ உருண்டோடி கதவு இடுக்கில் கிடந்துள்ளது. தேடிப் பார்த்துவிட்டு வந்துவிட்டேன். அம்மா நேற்று வீட்டீற்கு சென்ற பின் அதை கண்டெடுத்து விட்டார். இன்று அந்த பந்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும் படி அம்மாவிடம் கேட்டேன். பல்வேறு வேலைகள் உள்ளது வருவது சாத்தியம் இல்லை என்று ஏதேதோ சொன்னார். "இப்ப தாம்மா பாக்க முடியும். தூரமாலாம் போய்ட்டா எப்படி பாக்கறது. வாவேம்மா" என்று சில வசனங்கள் பேசி வரவைத்து பந்தை பெற்றுவிட்டேன்.
சௌமியா வீட்டை நாங்கள் வந்தடையும் போது மணி கிட்டத்தட்ட இரவு 8 ஆகிவிட்டது. சுடுதண்ணி தயாராக இருந்தது. அனைவரும் குளித்து முடித்தபின் இரவுணவு. அனைவரும் கோழிக்கறி குழம்பும் இட்லியும் சாப்பிட்டார்கள். நான் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டதால் எனக்கு தனியாக தக்காளி தொக்கும், தேங்காய் சட்னியும் செய்திருந்தார்கள். அபாரமாக இருந்தது. சைவப் பிரியர்கள் தான் உண்மையில் உணவின் ருசியை அனுபவிக்கிறார்கள் என்று நான் அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போதே ஒரு எண்ணம் இருந்தது. ராஜகோபாலன் சார் உணவை ரசித்து மெச்சி சாப்பிடும் போது நமக்கே இது உண்மையில் இவ்வளவு ருசியாக இருக்கிறதா என்ற சந்தேகம் தோன்றும். மிக மெல்லிய சுவை மாறுபாடுகளை அவர் அடையாளம் கண்டு சொல்வார். உணவில் எந்த பொருள் அதிகம், எது குறைவு என்று கண்டுபிடித்து விடுவார். எனக்கு அது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. எனக்கு குழம்பென்றால் குழம்பு தான். எதையோ போட்டு செய்து இறுதியாக ஒன்று வந்து விட்டது. மொத்தத்தில் வாயில் வைக்க முடிகிறதா இல்லையா அவ்வளவு தான் நான் பார்ப்பது. ஆனால் நான் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய பின் உண்மையாகவே உணவு மேலும் சுவையாக தெரிவதாக உணர்கிறேன். அனைவருக்கும் கடும் களைப்பு, கால் வலி. ஆனால் எனக்கு பெரிய சிரமம் இல்லாமல் சாதாரணமாக இருப்பது போலவே இருக்கிறது. ஆனால் 12 மணிக்கு தூங்கி காலை 5:45 க்கு அலாரம் அடித்து எழுந்து கொள்ளும் வரை ஒரு நொடி போல தோன்றுகிறது. கண்ணை மூடியதும் விழித்ததும் ஒரு நொடியில் நிகழ்ந்தது போல் உள்ளது. இப்போது காடச்ச நல்லூர் நோக்கி நடக்கத் தொடங்குகிறோம்.
மேலும்...
சிபி
(பி.கு: எங்களுக்கு போதுமானதை விட கூடுதலான நிதி வந்துவிட்டது. ஆகவே இனிமேல் எங்களுக்கு நிதி அளிக்க விரும்பினால் உங்கள் ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் பெயரளவில் 100 ரூபாய் மட்டும் அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறோம். அதற்கு மேல் அனுப்ப வேண்டாம். ஒருவேளை எங்களுக்கு பின்னர் நிதி தேவைப்பட்டால் 100 ரூபாய் அளித்தவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறோம்.)
This comment has been removed by the author.
ReplyDeleteசத்தியம் பணியச் செய்கிறது, திகைக்க வைக்கிறது, தயக்கம் கொள்ள செய்கிறது சீண்டுகிறது, குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது, அச்சுறுத்துகிறது இறுதியில் தாய் போல அணைத்துக் கொள்கிறது. இது நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முகத்திலும் தெரிகிறது அதை உங்கள் மொழியில் நான் காண்கிறேன். நடக்கும் ஒருவரால் மட்டுமே, நடையில் செயலாற்றும் ஒருவரால் மட்டுமே சேகரிக்கத் தக்க அனுபவங்கள் இவை. ஒருநாள் மற்றொரு நாளை ஏமாற்றுவதில்லை. இந்நாள் போல் என்றும் வேறாகுக.
ReplyDeleteகிருஷ்ணன், ஈரோடு
"ஹேய்! கைரேக வச்சுப்போட்டீனா அப்பறொ பணமாங்க கூடாது தெரிஞ்சுக்க" என்றார். அந்த பெண்மணி சற்று கோணலான சிரிப்புடன் எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டார். சொன்னவரிடம் கைரேகை கேட்டேன். "அட நா பண மாங்குவெ. கைரேகை வச்சுப்போட்டா மனசாட்சி கேக்காதா என்னெய" என்றார்.
ReplyDeleteமனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் அவர்களின் மனசாட்சியில் உரைகிறுது இறுதியில். நடை பயணத்தின் அனுபவங்கள் பல்வேறுபட்ட மனித முகங்களை அறிமுகம் செய்யும் உங்களுக்கு. மேலும் ஒரு சிறப்பான அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்
மற்றும் ஒரு அற்புதமான பதிவு. ஓராண்டில் உங்கள் எழுதும் வளர்ச்சி தெரிகிறது. நீங்கள் சந்தித்த மனிதர்களை நானும் சந்தித்தது போல இருந்தது.
ReplyDelete