விருதாளர் குருசாமி நேர்காணல்
குருசாமி நேர்காணல்
குருசாமி அத்தானியில் மின்வாரியத் துறையில் ஃபோர்மேனாக பணி புரிந்து வருகிறார். இதற்கு முன் நம்பியூர் போன்ற வெவ்வேறு பகுதிகளில் பணிபுரிந்து உள்ளார். தற்போது கோபி அருகே வெள்ளாளபாளையம் என்னும் ஊரில் வசிக்கிறார். லைன் மேனாக பணியை தொடங்கிய இவர் தொடக்க காலத்தில் அலுவலக செலவுகளுக்காக எதிர்கொண்ட நெருக்கடிகளையும் அதை சமாளிக்க நேர்ந்த சறுக்கல்களையும் இந்த பேட்டியில குறிப்பிட்டு உள்ளார்.
1.நேர்மையாக இருப்பவர்களின் பெரும் அகத் தடை என்பது என்ன?
எனக்கு கர்வமாக தான் உள்ளது. நான் அடிப்படையிலேயே நேர்மையானவன். கடந்த கால சூழலே நான் இவ்வாறு இருப்பதற்கு காரணம்.இதை நான் விரும்பி ஏற்றுக்கொண்டேன்.
2. நேர்மையாக இருப்பவர்களின் பெரும் புறத் தடை என்பது என்ன?
ஊரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நான் தனித்து நிற்பதால் சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நான் வேறு அரசு அலுவலகமோ அல்லது கடைகளுக்கோ சென்றால் என்னை வேகமாக தாட்டியுட வேண்டும் என்று நினைப்பார்கள். அதை எல்லாம் கடந்து போக வேண்டும். தவறான செயல்களை என்னை செய்ய சொல்லும்போது நான் அதை வெளிப்படையாக எதிர்த்து நிற்பேன்.அதற்காக எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன்.
3. நேர்மையாளர்கள் குடும்பத்தில், உறவினர்கள் மத்தியில் பெறும் மதிப்பு அல்லது அவமதிப்பு
நான் அரசு வேலையில் உள்ளதால் எனது உறவினர்களிடம் எனக்கு மரியாதை உண்டு. நான் நேர்மையாக இருக்கிறேன், இல்லை என்பதை அவர்கள் கருதுவதில்லை, சுக
துக்கங்களுக்கு சென்று வருவதால் எனது சுற்றங்கள் என்னை மரியாதையுடனே நடத்துகிறது.
பணத்தை யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் நேர்மையாக இருப்பவர்கள் அவர்களுக்கு உண்டான சம்பளம் என்று அந்த வட்டத்துக்குள்ளே வாழ்ந்தாக வேண்டும், நேர்மையற்று இருப்பவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் வாகனம் கூட வாங்கித் தர முடியும். ஆனால் என்னை போன்றோர் அதையெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாது. இருப்பதை வைத்து நிறைவடைய வேண்டும்.இதனால் எனது மகள்களும் என்னை பற்றி பெருமையாகவே நினைக்கின்றனர்.
4. நேர்மையாளர்கள் பொதுமக்கள் மத்தியில் பெறும் மதிப்பு அல்லது அவமதிப்பு
மக்கள் யாரையும் எடுத்த உடனே நம்புவதில்லை. வலுக்கட்டாயமாக ஒரு உதவி செய்யப் போனால் ஏதோ ஒரு காரணத்திற்காக இவன் நம்மை அணுகுகிறான் என்று எண்ணுவார்கள். நான் அவர்களுக்கு ஒரு சில வேலைகளை செய்து கொடுக்கும்போது சிலர் வேலை முடிந்தவுடன் சொல்லாமலே சென்று விடுவார்கள்.நான் பணம் கேட்டு விடுவேன் என்று. அதனால் மக்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. எனது கடமையை நான் செய்து கொண்டிருக்கிறேன்.ஆனால் இந்த விருது விழா போன்ற நிகழ்வு மூலமே மக்கள் என்னை மதிப்புடன் வைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறேன்.
5. உங்களுக்கு கடும் பண நெருக்கடி சூழல் இருந்து அப்போதும் லஞ்சம் வேண்டாம் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளதா? அதை எப்படி கையாண்டீர்கள்?
பண நெருக்கடி காலத்திற்கும் இருக்கிறது. பணத்தால்
உங்களாலயோ என்னாலயோ என்றும் நிறைவடைய முடியாது. கஷ்டத்துக்கு நண்பர்கள் மூலமும் நம்பிக்கையானவர்கள்
மூலமும் கடன் வாங்கிக் கொள்கிறேன்.
வருமானத்தை பொறுத்தே தேவைகளை அதிகமாக்கிக் கொண்டே போகிறோம். பற்றாக்குறை என்பது இருந்து கொண்டே இருக்கிறது. ஆகவே நமக்கான எல்லைகளை நாம் வரையறுத்துக் கொண்டு வாழும்போது சிக்கல் ஏற்படாது. அது மட்டுமல்ல நான் வேலையில் இருப்பதால் எங்கு சென்றாலும் எனக்கு கடன் தருவார்கள்.
6. நேர்மையாளர்கள் சக ஊழியர்கள் மத்தியில் பெறும் மதிப்பு அல்லது அவமதிப்பு
எனது சக ஊழியர்கள் என்னை மதிப்புடனே நடத்துகிறார்கள்.
7.உயர் அதிகாரிகளால் வரும் அழுத்தம் அதைக் கையாளுதல்
எந்த உயர்
அதிகாரிகளிடமும் பெரிதாக அழுத்தம் வந்ததில்லை. நான் எந்த உயர் அதிகாரிக்கும் பணம் வாங்கி
கொடுக்க மாட்டேன். வாங்கி கொடுக்க சொன்னார்கள் என்றால் நான் அதை நேரடியாகவே எதிர்த்து
விடுவேன். ஆகவே என்னை யாரும் நெருங்க மாட்டார்கள்.
புதிதாக வரும் அதிகாரிகள் கூட நான் அதற்கு ஒத்து வரமாட்டேன் என்று தெரிந்து கொண்டு
என்னிடம் அது பற்றி கேட்க மாட்டார்கள். என்னை கடந்து சென்று விடுவார்கள், என்னை எந்த தொந்தரவும் செய்ய மாட்டார்கள்.
நான் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் என்ற கட்சி சாராத சங்கத்தின் வட்ட செயலாளராக உள்ளேன். இந்த சங்கத்துக்குள் இருப்பவர்கள் எங்களுக்குள்ளே நாங்கள் உதவி செய்து கொள்வோம். இதன் மூலம் அதிகாரிகளிடமிருந்து வரும் நெருக்கடிகளை எதிர்கொள்வோம். இந்த செயலாளர் பொறுப்பில் இருப்பதனாலே நேர்மையாக இருக்க வேண்டியுள்ளது,நான் நேர்மையாக இருந்தால் தான் இது போன்ற நெருக்கடிகளை எதிர்த்து மற்றவர்களுக்காகவும் பேச முடியும்.
8. இப்படி இருப்பது என எப்போது முடிவெடுத்தீர்கள்
நான் முதன்முதலாக வேலைக்கு சேரும்போது என்னுடைய சம்பளம் 40 ரூபாய். என்னுடைய ஓனர் எந்த கட்டிடத்திற்கு வேலைக்கு சென்றாலும் அங்கு வாங்கி வைத்திருக்கும் எலக்ட்ரிக்கல் பொருட்களை எடுத்துக் கொண்டு வந்து விடுவார். இது அவருக்கு பழக்கமாகிவிட்டது. ஆனால் அவர் என்னிடம் சொன்னது "நான் இந்த பழக்கத்த 16 வயதில் ஆரம்பிச்சேன் தம்பி,என்னால இப்போ இத விட முடில ஆனா நிம்மதியாவும் இல்ல. நீ இத எந்த சூழ்நிலையிலும் பழகிராத" என்றார். நான் அரசு வேலைக்கு வருவதற்கு முன்பு எலக்ட்ரீசியனாக இருந்ததிலிருந்து நேர்மையாக இருந்தேன். இந்த அரசு வேலையில் நான் லைன்மேனாக சேரும்போது இந்த அலுவலகத்தை நடத்த பணம் தேவைப்பட்டது, போக்குவரத்து செலவு இருந்தது அதற்காக ஆரம்பத்தில் பணம் வாங்கினோம் ஆனால் நான் Foreman ஆன பிறகு எதற்கும் பணம் வாங்குவதில்லை.
9.உங்களைப் போல பதவியில் உள்ள ஆனால் நேர்மையற்ற இன்னொருவரிடம் இதுபோன்ற பேட்டி எடுத்தால் என்ன நியாயம் சொல்லுவார்கள்?
யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள், நாங்கள் பணம் வாங்குவதில்லை என்றே சொல்வார்கள். காரணம் சில இடங்களில் ஆள் பற்றாக்குறை உள்ளது, 14 பேர் செய்ய வேண்டிய வேலையை இரண்டு பேர் மூன்று பேர் செய்வார்கள். அவ்வாறு இருக்கும் போது அவர்கள் பணம் எதிர்பார்ப்பார்கள், அந்த பணமே அவர்களை வேலை செய்ய உந்தும், அந்த பணமும் இல்லை என்றால் அவர்கள் முடங்கி விடுவார்கள். இது நிர்வாகத்தால் ஏற்படும் பிரச்சனையே. எல்லா வசதியும் இருந்து நீங்கள் மிரட்டினாலும் அவர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள். கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கு சூழ்நிலை இவ்வாறு அமைகிறது. ஆகவே எந்த சூழலிலும் அவர்கள் லஞ்சம் வாங்குவதாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
10.ஒருவர் நேர்மையற்ற ஊழியராக இருந்து நேர்மையாளராக மாறுவதும், நேர்மையாளராக இருந்து பின்னர் நேர்மையற்றவராக மாறுவதும் எப்படி நடக்கிறது, உதாரணம் தர முடியுமா?
இதற்கு குடும்ப
சூழல் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனக்குத் தெரிந்த ஒரு அரசு அலுவலர், அவர் பேருந்து
ஏறினால் அவருக்கு டிக்கெட்டிற்கு பணம் வாங்க மாட்டார்கள். அவர் மகனுடன் செல்லும் போது
மகன் கையில் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துக்கொள்ள சொல்வார்.எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக
இருந்தவர். ஆனால் ஓய்வு பெறுவதற்கு இரண்டு வருடம் உள்ள சமயத்தில் வீடு கட்ட வேண்டும்
என்று குடும்பமாக திட்டமிடுகிறார்கள். சிறியதாக
கட்ட வேண்டும் என்று முடிவு பண்ணி பின்பு பெரிதாக்கி பெரிதாக்கி, பயங்கரமான நிதி நெருக்கடியானது.
வேறு வழி இல்லாமல் அவர் லஞ்சம் வாங்கினார். இறுதியில் மாட்டிக் கொண்டு பெரும் அவமானத்திற்கு
உள்ளானார். 58 வயதில் அவர் ஓய்வு பெற்றார், 55 வயது வரை நேர்மையாக இருந்தவர் மூன்று
ஆண்டுகளில் குடும்ப சூழலுக்காக நேர்மையற்றவராக மாறினார்.
என் வீட்டிலேயே என்னை பணத்திற்காக நச்சரித்தால் என்னால் என்ன செய்ய இயலும்? கட்டுப்பாடு அதிகமாக இருந்தாலும் நெருக்கடி அதிகமாக இருந்தாலும் திருட்டுத்தனம் அதிகமாகும். பணம் வாங்கிக்கொண்டு இருந்தவர்கள் வாங்காமல் போவதற்கு காரணம் பயமாக இருக்கலாம்.எனக்கு தெரிந்த ஒரு அதிகாரி பணம் பெற்று சிக்கிக் கொண்டு அவமானத்திற்கு உள்ளாகி தலை காட்ட முடியாமல் உள்ளார். இதைப் பார்ப்பவர்கள் வாங்காமல் இருக்கலாம்.
11.அரசூழியர் அமைப்புகள் நேர்மையற்றவர்களை எவ்வாறு அணுகுகிறது?
மக்கள் அரசாங்கத்திடமிருந்து பெரும் சேவைகள் விரைவாக
நடக்க வேண்டும் என்றே எண்ணுகின்றனர். அவர்கள் வரிசையாக ஒவ்வொன்றாக செய்ய விரும்புவதில்லை,ஆகவே
யாரோ ஒருவரிடம் பணம் கொடுத்தால் வேலை சுலபமாக முடிந்துவிடுகிறது.
ஒரு அமைப்பாக நாங்கள் ஏதாவது பரிந்துரை செய்தால்(உதாரணமாக தொலைதூரத்தில் பணியமர்த்தப்பட்ட ஒரு பெண் அலுவலருக்கு transfer வாங்கி கொடுத்தல்) அந்தப் பணி முடிவதற்கு இரண்டு மாதம் ஆகிறது.
இது போன்ற வேலைகளை சுலபமாக்க மக்கள் அரசியல்வாதியையோ அல்லது அதிகாரியையும் நாடி செல்கின்றனர். பணத்தால் இரண்டு மாதம் நடக்கும் பணியை இரண்டு நாட்களில் முடிக்கின்றனர். மக்களே அரசு சார்ந்த பணிகள் பணமில்லாமல் நடக்காது என்று முடிவு செய்து கொள்கிறார்கள்.
12. நீங்கள் இவ்வாறு முடிவெடுக்க காரணமான சம்பவம், தருணம்
அவ்வாறு எந்த தருணம் இல்லை.
13. உங்கள் முன்னோடி அல்லது முன்னுதாரணம் என கருதும் நபர்கள்
எனக்கு நிறைய முன்னோடி உள்ளனர். இப்போது வேலை செய்யும் அலுவலகத்திலும் இதற்கு முன் நான் வேலை செய்த அலுவலகத்திலும் அவ்வாறு எனக்கு முன்னோடிகள் உள்ளனர். இதற்கு முன் நான் வேலை செய்த அலுவலகத்தில் எனது AE (Assistant Engineer) "முன்னால விட்டு நம்ல பின்னால பேசக்கூடாது " அது போல் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.
14. முதல் முறை லஞ்சம் வேண்டாம் என்று சொல்லும் போது உங்கள் உளநிலை எவ்வாறு இருந்தது?
நான் இதற்கு முன் வேலை செய்த அலுவலகத்தில் அலுவலக தேவைக்காக ₹100 ₹200 கொடுத்தால் வாங்கிக் கொள்வோம்.நான் அலுவலகம் மாறி வந்தவுடன் முன்பே எல்லோரிடமும் நான் பணம் பெற மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.
15.நேர்மையாக இருப்பதால் நீங்கள் அடைந்தது என்ன?
எங்கு போனாலும் மரியாதை கிடைக்கிறது. எல்லாம் விட ஆத்ம திருப்தியாக உள்ளது. நிறைய வரும் பணத்தை வேண்டாம் என்று சொல்வதே ஒரு கெத்து. அதை அனுபவித்தால் மட்டுமே புரியும்.ஏனெனில் நான் ஆரம்பத்தில் இருந்து பூஜ்ஜியத்தில் இருந்து வந்தவன். நான் பத்தாவது பயிலும் போது எனது பள்ளி சீருடையையே கல்யாண காட்சிகளுக்கும் ஊருக்கும் போட்டுச் செல்வேன். அந்த நிலைமையில் இருந்த எனக்கு நேர்மையாக இருப்பது பெரிய கஷ்டமாக இல்லை.
16.கையூட்டு கொடுக்காமல் ஒருவரால் இருக்க இயலுமா ? நீங்கள் கையூட்டு கொடுக்க வேண்டிய தருணம் வந்ததா ? என்ன செய்தீர்கள் ?
சமீப காலத்தில் என் வீட்டிற்கு நான் பட்டா செய்ய வேண்டி இருந்தது. வீட்டை அளந்து அனைத்து தரவுகளையும் பெற்றுக் கொண்டு சென்றனர். சில நாட்கள் கழித்து நில அளவையர் எனக்கு தொலைபேசியில் அழைத்து வீட்டு சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார். நான் நீங்கள் ஏற்கனவே அனைத்து தரவுகளையும் பெற்றுக் கொண்டு சென்று விட்டீர்கள் பிறகும் நான் எதற்கு வரவேண்டும் என்றேன். முடிந்தால் வரேன் என்று சொன்னேன். பத்து நாட்கள் கழித்து மீண்டும் அவர் அழைத்தார். அவர் எதையோ எதிர்பார்க்கிறார் என்று தோன்றியது. நான் சற்று கடினமாக பேசி அழைப்பை துண்டித்து விட்டேன்.
நான் எனது வாட்ஸ்ஆப் முகப்பு புகைப்படமாக பிரபாகரன் அவர்களது படத்தை வைத்துள்ளேன். ஒரு இனத்தை காக்க தன்னையே அழித்துக் கொண்டவர். நான் தலைவராக மதிப்பவர்கள் அவரும் காமராஜரும் மட்டுமே. அதைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ வில்லங்கம் பிடித்தவன் என்று நினைத்து விலகி விடுவார்கள்.
17. லஞ்சம் பெறக் கூடிய அதிகாரிகளுக்கு சில நேரங்களில் மரியாதை கிடைக்கும் போது உங்கள் உளநிலை எவ்வாறு இருக்கும்?
அதையெல்லாம் சிரித்துக் கொண்டே கடந்து விடுவேன். ஒரு
சராசரி மனிதனாக அதைத்தான செய்ய இயலும். எங்களது துறையில் ஒருவர் சிறந்த பணியாளர் என்ற
விருதை தலைமையகத்தில் இருந்து பெற்று வந்தார், அதை கௌரவமாக புகைப்படம் போட்டு அலுவலகத்தில்
வைத்தார்கள். ஆனால் அவர் மிகவும் மோசமானவர்,பேச்சுவார்த்தையிலும் சரி பண விஷயங்களிலும்
சரி. அதையெல்லாம் சிரித்துக்கொண்டே கடந்துதான் ஆக வேண்டும்.
என்னை நீங்கள் கௌரவபடுத்துதல்
என்பதை பார்க்கும் போது, ஒழுக்கம் என்பது அனைவருக்குமானது ஆனால் தற்போது அதை பாராட்டும் நிலை வந்துவிட்டது என்று தான் எண்ணுவேன். நீங்கள்
வெளியூராக இருந்திருந்தால் இதை ஏற்றுக் கொள்வேன் என்பது சந்தேகமே. நீங்கள் மாணவர்களாக
இருப்பதாலும் தொடர்ந்து கேட்டுக் கொண்டதாளுமே ஒப்புக் கொண்டேன்.
பேட்டி கண்டவர்:
ஸ்ரீவித்யா, முனை இளைஞர் சங்கம்.


Comments
Post a Comment