450 கிமீ நடைபயணம் - 10 (A)
மண் நிறத்தில் முற்றிலும் சூழ்ந்த சுவர்கள். ஒரு துளியும் வெளியில் இருந்து வெளிச்சம் கசியாமல் இறுக்கி மூடப்பட்ட சிமென்டால் செய்யப்பட்ட ஜன்னல்கள். நிலத்திற்குள் குழி தோண்டி உள்ளிறங்கி படுத்தது போல் முழுவதும் மூடப்பட்ட இடத்தில் தூங்கிக் கொண்டு இருந்தோம். ஆனால் அவ்வளவு தூரம் புற வெளியில் இருந்து தனித்து இருந்த போதும் குளிர் உடலை நடுங்கச் செய்து கொண்டு இருந்தது. மேலும் மேலும் போர்வைகளை எடுத்து சுருட்டி போர்த்திக் கொண்டே சென்றேன். மூன்று நான்கு போர்வைகளை கடந்தும் காற்றின் ஈரப்பதம் உள்ளே உழைந்து உடலை நனைத்துக் கொண்டு இருந்தது. வெப்பத்திற்காக உடல் ஏங்கி தகித்துக் கொண்டு இருந்தது. வேறு வழி இன்றி 7 மணி வாக்கில் படுக்கையை விட்டு எழுந்தோம்.
கால்களை நிலத்தில் வைக்கும் போது நிலத்தின் ஈரம் உச்சந்தலைக்கு ஏறியது. கையை இறுக்கி தோளுடன் இணைத்து கட்டிக் கொண்டு வெளியே வந்து தயாராகத் தொடங்கினேன். நாங்கள் அனைவரும் தயாராகி முடிப்பதற்கு சுமார் 8 மணி ஆகி விட்டது. 7:30 மணி வாக்கிலேயே அங்கு ஒரு கான்ஸ்டபிள் வந்திருந்தார். நாங்கள் சென்று கேட்கும் போது எங்களை தயாராகி வரும் படி சொல்லிவிட்டு அங்கேயே அரை மணி நேரம் காத்திருந்தார். நாங்கள் அங்கிருந்து கிளம்பியவுடன் எங்களை நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு எங்களுடனேயே வண்டியில் பின் தொடர்ந்தார். இன்று எங்கள் முதுகுப் பையை எடுத்துச் சென்று வைப்பதற்கு உதவ யாரும் இல்லை. வேறு வழி இன்றி அனைத்து எடைகளையும் நாங்களே தூக்க வேண்டியதாயிற்று. இதுவரை ஒரு நாள் கூட எடையை தூக்கிக் கொண்டு நடக்காததால் அது பெரும் சவாலாக இருந்தது. நான் என் முதுகுப்பை அல்லாமல் நோட்டீஸ்கள் வைத்திருக்கும் ஒரு கனமான கட்டப்பையையும் தூக்க வேண்டி இருந்தது. என்னுடைய அதிகபட்ச சாத்தியத்தை தொட்டு பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் இந்த ஒட்டு மொத்த எடையையும் நான் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் மற்றவர்கள் யாராலும் அதை சுமக்க முடியாததால் நண்பர்கள் சிலருக்கு அழைத்து உதவி கேட்கத் தொடங்கினோம்.
அன்று தர்மபுரியில் இருந்து எங்களை வந்து சந்திப்பதாக சொல்லி இருந்த நல்லோர் வட்டத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரிடம் உதவி கேட்டோம். அவர் உடனே ஒப்புக் கொண்டார். முதலே ஏன் சொல்லவில்லை, இனிமேல் தயங்காமல் எந்த உதவியாக இருந்தாலும் கேட்கும் படி சொல்லி வருத்தம் தெரிவித்தார்.
நாங்கள் எங்கள் உடைமைகளை சிட்டிலிங்கி மருத்துவமனையில் வைத்து விட்டு செல்வதாக சொல்லிவிட்டோம். நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து மருத்துவமனை இரண்டு கிமீ இருக்கும். அதுவரை தூக்கி வருவதற்கே அனைவரும் மிகவும் சோர்ந்து விட்டார்கள். மருத்துவமனை வந்தவுடன் எங்களை சாப்பிட அழைத்து சென்றனர். நாங்கள் அங்கு வந்து சேர்வதற்கு சுமார் 9 மணி ஆகிவிட்டது. அந்த நாள் தான் அங்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான நாள். 8 மணிக்குள் வந்தால் அறுவை சிகிச்சையை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு எங்களுக்கு அங்கு பேசுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக சொல்லி இருந்தனர். ஆனால் எங்களால் அந்நேரத்திற்கு வர இயலவில்லை.
அது முற்றிலும் வேறு வகையான மருத்துவமனை. அனைத்து கட்டிடங்களும் ஒரு பழங்குடி பாணியிலான அழகியலுடன் கட்டப்பட்டு, பூசாமல் மண் நிறத்தில் வண்ணம் அடிக்கப் பட்டிருந்தது. மரங்கள் குடைகள் போல் ஆங்காங்கு நிழல் சுரந்து கொண்டு இருந்தது. அபாரமான வண்ணக் கோர்வைகளில் பல்வேறு பூக்கள் பூத்துக் குழுங்கிக் கொண்டு இருந்தது. எங்கும் தூய்மை. பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருபவர்களுக்கு வைத்தியம் பார்க்க மாட்டோம் என்றே தட்டிகள் வைக்கப் பட்டு இருந்தது. முதல் முறையாக வெறுமனே இளைபாறுவதற்கே ஒரு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று தோன்றியது.
ஒரு முக்கிய நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருக்கும் அளவிற்கு மருதுவப் பிரிவுகள், உபகரணங்கள், எந்திரங்கள் அனைத்தும் இருந்தது. நாங்கள் அங்கிருந்த பிரசவப்பிரிவை கடந்து எங்களுக்கான உணவு வழங்கும் இடத்தை நோக்கி நடந்தோம். அங்கு மங்கிய நிறத்தில் உடை அணிந்த மெலிந்த மூன்று பழங்குடிப் பெண்கள் தங்கள் கைகளில் உடல் முழுவதும் சிவந்து ததும்பும் மெல்லிய சருமத்துடன் அப்போதே பிறந்த பச்சிளம் குழந்தைகளை ஏந்தி அந்த இளவெயிலில் காட்டிக் கொண்டு நின்றிருந்தனர். அந்த குழந்தைகள் கண்களை இறுக மூடி சிவந்த கைகளையும் கால்களையும் ஆட்டிக் கொண்டு இருந்தன.
ஒரு குடிசைக்கு எங்களை அழைத்துச் சென்றனர். அங்கு சில பழங்குடிப் பெண்கள் எங்களுக்கான உணவுகளை தயார் செய்து வைத்திருந்தனர். அங்குள்ள அனைவருக்கும் இந்த குடிசையில் இருந்து தான் உணவு தயாராகிறது. சாப்பிட்டு முடித்து எங்கள் உடைமைகளை ஒரு இடத்தில் வைத்து விட்டு கிளம்பும் போது ஒரு கணம் ரெஜியை பார்த்து விட்டு செல்லலாம் என்று நின்றோம். அங்கிருந்த ஒருவரிடம் ரெஜியை பார்க்க வேண்டும் என்று கேட்டோம். மேலே சென்று அவர் அறைக்கு வெளியே காத்திருக்கும் படி சொன்னார். நாங்கள் மேலே சென்று அமர்ந்திருந்தோம். அப்போது ஒருவருக்கு இருக்கை கிடைக்காமல் அருகில் ஒரு சிறிய படிக்கட்டில் சென்று அமர முற்படும் போது அது தான் ரெஜி அவர்களுடைய அறைக்கு செல்லும் வழி என்று எங்களுக்கு தெரியாது. அந்த படியில் அமரும் முன்பு ரெஜி எங்களை பார்த்து வெளியே எழுந்து வந்து எங்களுடன் சேர்ந்து கீழே அமர்ந்து கொண்டார்.
எங்களை பற்றி அனைத்தையும் ஏற்கனவே லலிதா அவரிடம் சொல்லிவிட்டார். நாங்கள் மெல்ல பேச தொடங்கும் போது உடனடியாக அவர் “எல்லாம் தெரியும் கைரேகை துணிய குடுங்க” என்றார். எங்கள் துணியில் கைரேகை வைத்தார். நான் அவரிடம் கேள்விகள் கேட்கத் தொடங்கினேன்.
கே: உங்கள் மருத்துவமனையில் செவிலியர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் இந்த ஊரை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அது எப்படி சாத்தியமானது? ஏன் இதை செய்ய முற்பட்டீர்கள்?
ப: ஆம். சுமார் 40 செவிலியர்கள் இந்த கிராமத்தில் இருந்தே உருவாக்கி உள்ளோம். முதலில் நாங்கள் இதை செய்வதற்கான காரணம் ஒரு சமூகம் மருத்துவத்தை தெரிந்து கொள்ள வேண்டும், தன் மக்களுக்கு தாங்களே மருத்துவம் பார்க்கும் ஒரு தற்சார்பு நிலை உருவாக வேண்டும் என்று நினைத்தோம். அதனால் தான் இங்குள்ளவர்களை பயிற்றுவித்து செவிலியர்கள் ஆக்கினோம். தங்களில் ஒருவர் தான் தனக்கு வைத்தியம் பார்க்கப் போகிறார் என்று இருந்தால் மக்கள் அவர்களை முழுவதுமாக நம்பி தன்னை அளிப்பார்கள். மேலும் நாம் பயிற்றுவிக்கும் ஒருவர் இங்கேயே இருந்து பணியாற்றுவார் என்பது ஒரு சொத்து. தொடர்ந்து பணியாளர்கள் மாறிக் கொண்டே இருப்பதை விட ஒருவர் நீண்ட காலம் நம்முடன் தொடர்பில் இருந்து உடன் பணியாற்றுவது மேலும் சிறப்பாக செயல்பட ஏதுவாக இருக்கும்.
ஆனால் இவர்களை பயிற்றுவிப்பது அவ்வளவு எளிதானதாக இருந்திருக்கவில்லை. இங்கு பெரும்பாலும் வயது வந்தவுடன் திருமணம் செய்து விடுகிறார்கள். ஆகவே எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் இருப்பதே மிகவும் அரிது. மேலும் இங்குள்ள ஆசிரியர்களும் முறையாக பாடம் நடத்துவது இல்லை. இங்குள்ள ஆசிரியர்களுக்கு வியாழன் அன்றே வார இறுதி தொடங்கி விடுகிறது மீண்டும் புதன் தான் முடிகிறது. ஒரு நாள் வந்து சும்மா இருந்துவிட்டு சென்று விடுவார்கள். ஆகவே எட்டாம் வகுப்பு முடித்தவருக்கும் ஒன்றும் தெரியாது.
நாங்கள் இவர்களுக்கு அடிப்படையில் இருந்து தமிழ், ஆங்கிலம் எழுத்துக்களை சொல்லிக் கொடுப்பதில் இருந்து தொடங்கினோம். மெல்ல மெல்ல அடிப்படைகளை கற்ற பின் மருந்துகளை கற்றுக் கொடுத்தோம். சிலரை செவிலியர் கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைத்தோம். அப்படி ஒவ்வொருவராக கவனம் எடுத்து கற்பித்து இன்று இந்த நிலையை அடைந்து இருக்கிறோம்.
கே: இவர்களுக்கு கற்பிப்பது கடினம் அதை நீங்கள் செய்தது புரிகிறது. ஆனால் இவர்களை முதலில் வர வைப்பதே கடினமான பணியாயிற்றே அது எப்படி சாத்தியமானது?
ப: ஆம். பலருக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர், குடும்பம் என்று உள்ளது. அவர்கள் வர விரும்பினாலும் வீட்டில் அனுமதிக்காத நிலை இருந்தது. அவர்களே வர விரும்பாத நிலையும் இருந்தது. தொடர்ந்து பேசி பேசி உரையாடல் மூலம் அவர்கள் மனதை மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிரண்டு பேரை வர வைத்தோம். அதன் பின் மெல்ல மெல்ல மற்றவர்களும் வரத் தொடங்கினர். ஒருவரை முன்னால் வர வைப்பதே மிகவும் கடினமான பணி தான்.
அடுத்தது அவர் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால் கொஞ்ச நேரத்தில் அவர் கிளம்பி விட்டார். அதன் பின் ரமேஷ் என்பவர் அங்கு பணி புரியும் பணியாளர்களை அழைத்து வந்து ஒரு கூடுகை ஏற்பாடு செய்தார். முப்பது பேர் கொண்ட கூட்டம். அவர்களிடம் முதலில் இருந்து எங்களை பற்றியும் முனை பற்றியும் சொன்னேன். அனைவரும் அதை முழுவதும் கேட்டு இறுதியாக கைரேகை வைத்தனர்.
அங்கிருந்து கீழே இறங்கி வந்ததும் இன்னொரு மருத்துவர் ரவி அவர்களை சந்திக்க சென்றோம். அவர் அங்கு மருத்துவம் பார்க்க வந்த பொதுமக்களை எல்லாம் அழைத்து மீண்டும் ஒரு கூட்டம் கூட்டினார். அங்கு மீண்டும் இதே போல் பேசினேன். நான் பேசி முடித்த பின் மருத்துவர் ரவி அவர்களும் மக்களிடம் வாக்குக்கு பணம் பெறாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார். அவர் தொடங்கி வைக்க மற்றவர்கள் சிலரும் கைரேகை வைத்தார்கள். இவை அனைத்தும் முடிந்து நாங்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வருவதற்கே 10:30 மணிக்கு மேல் ஆகி விட்டது.
நாங்கள் வெளியே வரும் போது எங்களுடன் வந்த கான்ஸ்டபிள் வெளியே காத்திருந்தார். எங்களுக்கு டீ, திண்பண்டங்களை வாங்கிக் கொடுத்தார். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் எங்களுக்காக காத்திருக்க வேண்டாம் என்று பல முறை சொல்லியும் இன்று முழுவதும் எங்களுடன் வருவது தான் அவருக்கு பணி என்று சொல்லி வண்டியில் கூடவே வந்தார். கொஞ்சம் முன்னால் சென்று வண்டியை நிறுத்திவிட்டு நாங்கள் வரும் வரை காத்திருப்பார். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. எங்களுக்கு எதற்கு இத்தனை பாதுகாப்பு? நாங்கள் இவ்வாறு எதுவும் கேட்கவில்லையே என்று யோசித்துக் கொண்டே நடந்து சென்றோம்.
மீண்டும் இரு புறமும் மரங்கள் சூழந்த காட்டிற்குள் நடந்து செல்லத் தொடங்கினோம். எங்கள் சுமைகளை வைத்து விட்டு வந்துவிட்டதால் மீண்டும் பறப்பது போன்று உணர்ந்தோம். பத்து கிமீ இதே போன்ற காட்டு பாதை. ஒரு இடத்தில் சுமார் 25 குரங்குகள் இந்த கான்ஸ்டபிள் கொடுத்த பிஸ்கட்களை பார்த்து 200 மீட்டர் தொலைவில் இருந்து துரத்தி ஓடி வந்தது. வேறு ஒருவர் அவற்றிற்கு தின்பண்டம் அளித்து திசை திருப்பியதால் நாங்கள் தப்பித்து அவற்றை தாண்டி விட்டோம். கொஞ்சம் காட்டை கடந்தவுடன் ஒரு மரத்தில் வண்டி டயரை கட்டி ஊஞ்சல் இருந்தது. அதில் பொடுசு, சௌமியா ஆகியோர் ஆடி விளையாடிக் கொண்டு இருந்தனர். இன்று நாங்கள் நடக்க வேண்டிய தொலைவு 20 கிமீ தான் என்பதால் அனைவரும் ஒன்றாக விளையாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் மிகவும் மெதுவாகவே நடந்து சென்று கொண்டு இருந்தோம்.
ஒரு இடத்தில் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் நின்று இருந்தார். நன்றாக சட்டை, பாண்ட் அணிந்து பணிக்கு செல்பவர் தோரணையில் இருந்தார். எங்களை அழைத்து என்ன ஏது என்று கேட்டார். நாங்கள் அவரிடம் விளக்கி நோட்டீஸ் வழங்கினோம். அவரை விட்டு நகரந்தவுடன் அர்ச்சனா என்னிடம் வந்து இவர் என்னமோ இந்த இடத்திற்கே சம்மந்தம் இல்லாத ஆள் போல் தெரிகிறார். ஏதோ சரி இல்லை என்று தோன்றுகிறது என்று சொன்னாள். எப்படி சொல்கிறாய் என்று கேட்டேன். தெரியவில்லை என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது என்றாள்.
“என்னோட மைண்ட் க்கு லாம் அப்படி தோனலயே” என்றேன்.
“இது மைண்ட் ல தோணாது அடி வயிறுல இருந்து ஒன்னு சொல்லும். நா அத தான் நம்புவ” என்றாள்.
அவள் சொன்னது போலவே அவர் எங்களை கடந்து போகும் போது ஒரு விதமான பார்வையில் பார்ப்பதாக தான் எனக்கும் தோன்றியது. அதன் பின் அதே சாலையில் முன்னும் பின்னும் எங்களை மூன்று நான்கு முறை கடந்து சென்றார். ஒவ்வொரு முறை அவர் எங்களை கடக்கும் போதும் அர்ச்சனா குதித்து மகிழ்ந்து “பாத்தீங்களா.. நான் சொன்னன்ல” என்பாள். நானும் ஆமாம் ஆமாம் என்று தலையாட்டி வைப்பேன்.
ஒரு ஊரை வந்து அடைந்தோம். அந்த ஊரின் எல்லையில் ஒரு சிறிய குடிசை போன்ற இடத்தில் சிலர் இருந்தனர். அங்கிருந்து எங்களை அழைத்தனர். அனு என்னை சென்று பார்க்க சொன்னாள். நான் தனியாக சென்றேன். அங்கு சிலர் போதையில் இருந்தனர். அவர்களிடம் நான் எங்கள் நடைபயணம் குறித்து சொல்லி ஒருவரிடம் நோட்டீஸ் கொடுத்தேன். கீழே அமர்ந்திருந்தவர் “இங்க ஒரு நோட்டீஸ் கொடு” என்று கேட்டார். அவருக்கு ஒன்று கொடுத்தேன்.
வாங்கியவுடன் அதை ஒரு கணம் கூட கண்ணெடுத்து பார்க்காமல் அப்படியே கால் பாதத்தில் வைத்து தேய்த்து அவர் காலில் வடிந்து கொண்டிருந்த ரத்தத்தை துடைத்தார். எனக்கு ஒரு கணம் கோபம் வந்தது. எதுவும் பேசாமல் நின்றேன். அதன் பிறகு தான் அவர் மீண்டும் நாங்கள் யார் என்று கேட்டார். மீண்டும் நடைபயணம் குறித்து சொன்னேன். இம்முறை அவர் அதிர்ச்சி அடைந்து விட்டார். அவரும் ஈரோடு தான் என்றார். மீண்டும் ஒரு நோட்டீஸ் கேட்டார். கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
அங்கிருந்து நடந்து நாங்கள் கோட்டப்பட்டி என்கிற இன்னொரு ஊரை அடைந்தோம். அது தான் கொஞ்சம் பெரிய ஊர். அங்கு எங்களை பார்க்க ஆனந்தகுமார் சார், வைசிகா ஆகியோர் வந்திருந்தனர். எங்களுடன் வந்த கான்ஸ்டபிள் SI எங்களிடம் பேச விரும்புகிறார் என்று காவல் நிலையம் வரும்படி அழைத்தார். நாங்கள் அனைவரும் கோட்டப்பட்டி காவல் நிலையம் சென்றோம். அங்கு வெளியே எங்கள் அனைவருக்கும் மேசை போட்டு அமர வைத்து SI எங்களிடம் பேசினார். இந்த நடைபயணத்திற்கு அனுமதி வாங்கியுள்ளீகளா? என்று கேட்டார். நாங்கள் தொடங்கிய இடத்திற்கும் முடிக்கும் இடத்திற்கும் அனுமதி வாங்கியுள்ளோம் மற்றபடி நாங்கள் நடந்து செல்லும் மாவட்டங்களின் SP, ADSP, ஆகியோருக்கு மெயில் அனுப்பியுள்ளோம் என்று சொன்னேன். அதற்கு ஏதேனும் பதில் வந்துள்ளதா என்று கேட்டார். இல்லை என்றோம். தொடங்கிய இடத்தில் வாங்கிய அனுமதிக்கு ஏதேனும் நகல் உள்ளதா என்று கேட்டார். கோபி காவல் நிலையத்தில் கடிதம் கேட்டதற்கு எங்களுக்கு வாய்மொழி அனுமதி மட்டுமே கொடுத்ததால் அதுவும் எங்களிடம் இல்லை.
“நீங்கள் வருவது காட்டு வழி. இன்று காலையில் இருந்து என்னுடைய போலீஸ் உங்களுடன் துணைக்கு வருகிறார். ஒரு மாதம் முன்னர் தான் இங்கு நகைக்காக ஒரு கொலை நடந்து உள்ளது. நீங்கள் நடப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் என்னுடைய காவல் எல்லையில் நீங்கள் தங்கக் கூடாது. DSP சொல்லிவிட்டார். இன்று நீங்கள் தங்குவதாக திட்டமிட்டு உள்ள நரிப்பள்ளி என்னுடைய எல்லைக்குள் தான் வருகிறது. அங்கு நீங்கள் தங்க நான் அனுமதி வழங்க முடியாது. அதை தாண்டி வேறு ஏதேனும் ஒரு ஊருக்கு சென்று தங்கிக் கொள்ளுங்கள்” என்றார்.
மேலும்..
சிபி.
Comments
Post a Comment